Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்நாட்டின் மிஸ் பண்ணக்கூடாத அருவிகள்

Featured Replies

தமிழ்நாட்டின் மிஸ் பண்ணக்கூடாத அருவிகள்: பாகம் - 1.

 

மிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நேரத்தில், தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்து வருகிறது. மழையினால்  அருவிகளில் தண்ணீர் கொட்ட ஆரம்பித்துள்ளது. இந்த நேரத்தில் சுற்றுலா மேற்கொள்ள வசதியாக உள்ள தமிழ்நாட்டின் மிஸ்பண்ணக்கூடாத அருவிகளின் தொகுப்பையும், விபரங்களையும் விரிவாக பார்க்கலாம்.

1. ஒகேனக்கல் அருவி:
  இந்தியாவின் சிறந்த நீர்வீழ்ச்சிகளில் ஒக்கேனக்கல் அருவி முக்கியமான ஒன்று. தமிழ்நாட்டில் தர்மபுரி மாவட்டத்தில் இருக்கிறது. தர்மபுரி இருந்து 47 கி.மீ., ஓசூரில் இருந்து 88 கி.மீ., சேலத்தில் இருந்து 85 கி.மீ., பெங்களூரில் இருந்து 146 கி.மீ., சென்னையிலிருந்து 345 கி.மீ., மைசூரில் இருந்து 180 கி.மீ., கோயம்புத்தூரிலிருந்து 217 கி.மீ, தூரத்தில் ஒகேனக்கல் அருவி அமைந்துள்ளது. இந்த ஒக்கேனக்கல் அருவிதான் 'இந்தியாவின் நயாகரா' என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு அருவியாக இல்லாமல், பல அருவிகளின் தொகுப்பாக அமைந்துள்ளது. அருவிகள் கொட்டுவதை பார்க்கும்போது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். ஜூலை முதல் அக்டோபர் மாதம் வரை சுற்றுலா செல்ல சிறந்த இடமாக விளங்குகிறது. அடிக்கடி விபத்து நடக்கும் பகுதி என்பதால் மிகுந்த கவனம் தேவை. தமிழ்சினிமாவின் சில படங்களும் இங்கு படமாக்கப்பட்டுள்ளன. சுற்றுலாப்பயணிகளின் சொர்க்க புரியாகவும் இந்த ஒக்கேனக்கல் அருவி அமைந்துள்ளது. இப்போது தண்ணீர் வரத்து அதிகமாக இருக்கிறது. காலை 8 மணியிலிருந்து மாலை 5 மணிவரை சுற்றுலாப்பயணிகளுக்கு குளிக்க அனுமதியுண்டு.

                                      1%20ohanical-palse.JPG

2. கொடிவேரி அணைக்கட்டு:
 பவானிசாகர் அணையிலிருந்து வரும் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணைதான் கொடிவேரி அணைக்கட்டு. அணைக்கட்டு தன்னைதானே தூர் வாரிக்கொள்ளும் தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் இருந்து 75 கி.மீ, ஈரோட்டில் இருந்து 70 கி.மீ தொலைவில் சத்தியமங்கலம் அருகே அமைந்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் (பண்ணாரி மாரியம்மன் கோவில் இருந்து 20 கி.மீ.) உள்ள அற்புதமான சுற்றுலாத்தளங்களில் இதுவும் ஒன்று. இந்த அணையானது 25,000 ஹெக்டேர் நிலப்பரப்பிற்கு தண்ணீரை பாசனத்திற்காக வழங்குகிறது. கொடிவேரி அணைக்கட்டில் குளித்துவிட்டு சாப்பிட அங்கு பிடித்த மீனை உணவு சமைத்துத் தருகிறார்கள், அந்தமீனுக்கென தனி கூட்டமே உண்டு. பல தமிழ் திரைப்படங்கள் படமாக்கப்பட்டுள்ளன. வெள்ளிவிழா திரைப்படமான சின்னத் தம்பியின் சில காட்சிகள் படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதை சுற்றிலும் எமரால்டு விருந்தினர் விடுதி, பவள மலை கோவில் என சுற்றுலாத்தளங்கள் அமைந்துள்ளன. காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணிவரை சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதி உண்டு. இப்போது தண்ணீர் வரத்து நன்றாக இருக்கிறது.

                                    2%20erode%20kodiveri%20dam.JPG
 3. குரங்கு நீர்வீழ்ச்சி:
          கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை மலைப்பகுதியில் பொள்ளாச்சிக்கும், வால்பாறைக்கும் இடையில் ஆழியார் அணைக்கு அருகில் குரங்கு நீர்வீழ்ச்சி (monkey falls) அமைந்துள்ளது. குரங்கு அருவி பொள்ளாச்சியிலிருந்து 18 கி.மீ தூரத்தில் இருக்கிறது. இந்த நீர்வீழ்ச்சியில் குளிப்பதே அதிக சுகமாக இருக்கும். அருவியிலிருந்து மேலே சென்றால் வால்பாறை, டாப்ஹில்ஸ் கீழே சென்றால் ஆழியார் டேம் என ஒரு நாள் முழுவதும் சுற்றி வரலாம். பாரஸ்ட் செக் போஸ்ட் கடந்து சென்றவுடன் 'சிறிய குரங்கு நீர்வீழ்ச்சி' இருக்கிறது. எல்லோரும் இதை பார்த்தவுடன் இங்கேயே சென்று விடுகின்றனர். ஆனால் மேலே சிறிது தூரம் சென்றால் இன்னொரு 'பெரிய குரங்கு நீர்வீழ்ச்சி' உள்ளது. அருவிக்கு செல்ல ஒரு நபருக்கு 15 ரூபாய் கட்டணமாக வசூலிக்கபடுகிறது. அனுமதிக்கப்படும் நேரம் காலை 9:௦௦ மணி முதல் மாலை 6:௦௦ மணி வரை. குரங்குகள் அதிகம் இருக்கும், கவனமாக இருக்கவும். மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை பெய்யும் காலங்களில் குளிக்க தடை விதிக்கப்படும். குரங்கு நீர்வீழ்ச்சிக்கு செல்ல ஏற்ற மாதங்கள் அக்டோபர் மற்றும் மார்ச் மாதங்கள் ஆகும்.

                                  3%20Monkey%20Falls.jpg
4. சிறுவாணி அருவி மற்றும் அணை:
 உலகின் இரண்டாவது மிக சுவையான நீர், சிறுவாணி நீர். காவிரியாற்றின் துணை நதியான பவானி ஆற்றின் ஒரு கிளை நதிதான் சிறுவாணி ஆறு. இது பாலக்காடு வழியாக தமிழ்நாட்டுக்குள் பாய்கிறது. இந்த சிறுவாணி ஆற்றின் குறுக்கே தான் 'சிறுவாணி அணை' கட்டப்பட்டுள்ளது. இந்த சிறுவாணி நீர் உற்பத்தியாகும் இடங்களில் உள்ள பாறைகள் மற்றும் அங்குள்ள மண்ணின் தன்மை காரணமாகவே சிறுவாணி நீர் சுவையாக இருப்பதாக சொல்கிறார்கள். சிறுவாணி ஆற்றின் குறுக்கே தான் சிறுவாணி அருவியும் அமைந்திருக்கிறது. கோயம்புத்தூரின் மிக முக்கிய சுற்றுலாத்தலமாகவும், கண்களுக்கு இனிமையான இயற்கை காட்சிகளை விருந்தளிப்பதாகவும் இருக்கிறது. இந்த சிறுவாணி அணை 'கோவை குற்றாலம்' எனவும் அழைக்கப்படுகிறது. கோவை சுற்றுவட்டாரப்பகுதிகளில் இந்த ஒரு அருவி மட்டுமே உள்ளதால் இங்கு எப்பொதும் மக்கள் வந்துகொண்டே இருக்கின்றனர். கோயம்புத்தூர் நகரில் இருந்து 35 கி.மீ தொலைவில் சிறுவாணி அருவி அமைந்துள்ளது. சிறுவாணி அருவிக்கு காலை முதல் மாலை வரை போக்குவரத்து வசதி உள்ளது. அருவியை அடைய சிறிது தூரம் நடந்து செல்ல வேண்டும். மாலை 5 மணிக்கு மேல் அனுமதி இல்லை. யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ளதால் சிறிது எச்சரிக்கையாக குளிக்க வேண்டும். அருவிக்கு தாண்டி மலையின் மீது அமைந்திருக்கும் சிறுவாணி அணையை பார்வையிட வனத்துறையினரிடம் சிறப்பு அனுமதி பெற வேண்டும். சிறிது தூரத்தில் வெள்ளியங்கிரி மலையும், வன பத்ரகாளியம்மன் கோவிலும், தென் திருப்பதி கோவிலும் அமைந்துள்ளது.

                                    4%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81
5. பைக்காரா நீர்வீழ்ச்சி:
 ஊட்டியிலிருந்து 23 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. ஊட்டியிலிருந்து மைசூர் செல்லும் சாலையில் பைக்காரா அணையின் அருகில் பைக்காரா நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. ஊட்டியில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சிகளில் முக்கியமானதாக பைக்காரா நீர்வீழ்ச்சி விளங்குகிறது. பைக்காரா நீர்வீழ்ச்சியில் தண்ணீர் விழும் காட்சி மனதை மயக்குவதாகவும், கம்பீர தோரணையுடனும் இருக்கும். நீர்வீழ்ச்சியின் கீழ்ப்பகுதி மோசமாக இருப்பதால் பெரும்பாலும் விபத்துகளை தவிர்க்க பருவ காலத்தில் மூடப்பட்டு இருக்கும். நீச்சல் அடிக்க ஏதுவாக இருக்கும். ஆனால் கீழே பாறைகள் கூராகவும், ஆழம் குறைவாகவும் இருக்கும். எனவே நீந்துவோர் ஜாக்கிரதையாக குளிப்பது நல்லது. இந்த சுற்றுலாத்தலமும் மிக பிரபலமானது. பைக்காரா நீர்வீழ்ச்சியின் நுழைவுபகுதியில் வாகனங்களை நிறுத்தும் இடம் இருக்கும். காலை 8 மணிமுதல் மாலை 5.30 மணிவரை திறந்திருக்கும். தற்போது தண்ணீர் வரத்து காணப்படுகிறது.

                                     5%20PYKARA%20%20%20FALLS.JPG
6. கும்பக்கரை அருவி:
 தேனி மாவட்டத்தின் 'சின்னக்குற்றாலம்' என அழைக்கப்படுவது கும்பக்கரை அருவி. பெரியகுளத்தில் இருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மேற்குமலைத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கும்பக்கரை அருவி ஒரு இயற்கையான அருவி. மூலையார் பகுதியில் தோன்றி பல இடங்களைக் கடந்து கும்பக்கரை அருவியாக வருகிறது. இந்த அருவியில் பாண்டிய மன்னர்களின் தலவிருட்சமான மருதமரங்கள் அதிகமாக உள்ளது. மருதமரங்களின் வேர்களின் இடையே இந்த அருவியில் குளித்தால் வாதநோய் உண்டாகாது என்பது மக்களின் நம்பிக்கை. இந்த அருவியின் அருகே வனதெய்வக் கோயில்கள் உள்ளன. பூம்பறையாண்டி வைரன், கிண்டன், கிடாயன் உள்ளிட்ட வனதெய்வங்கள் இந்த அருவியில் இரவு நேரங்களில் நடமாடுவதாக நம்பப்படுகிறது. இந்த அருவியில் வேறு எங்கும் இல்லாத அளவிற்கு கஜம் என அழைக்கப்படும் இடங்கள் அதிக உள்ளன. அந்த கஜங்கள் அதனுடைய வடிவமைப்பிற்கு ஏற்றவாறு உள்ளது. அண்டா கஜம், யானை கஜம், குதிரை கஜம் என பல கஜங்கள் உள்ளன. இதில் யானை கஜம் பகுதி மிகவும் ஆபத்தான பகுதியாகும். ஆண்டுதோறும் நீர் வற்றாமல் இந்த அருவியில் தண்ணீர் வருவது சிறப்பான ஒன்றாகும். வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த அருவியில் குளிக்க காலை 9.00 மணிக்குமேல் மாலை 5.00 மணிவரை சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் இங்கு தங்கும் விடுதிகளோ, உணவகங்களோ இல்லை. சுற்றுலா செல்லும் பயணிகள் தங்களுக்குத் தேவையான பொருட்களை பெரியகுளத்தில் இருந்து வாங்கிச் செல்வது நல்லது. பேருந்து வசதி, ஆட்டோ வசதியும் உள்ளது.

                                  6%20kumbakarai%20falls-theni.JPG
7. சுருளி அருவி:
      தேனி மாவட்டம், கம்பத்திலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் சுருளி அருவி அமைந்துள்ளது. 18-ம் நூற்றாண்டின் பாறைக்குடைவு சிற்பக்கலையை பிரதிபலித்துக் கொண்டிருக்கும் 18 குகைகளையுடைய மிகவும் புகழ் பெற்ற இடம் சுருளி நீர்வீழ்ச்சியாகும். 150 அடி உயரத்திலிருந்து இரண்டு அடுக்குகளாக இந்த அருவி விழுந்து கொண்டிருக்கிறது. மேகமலையில் ஊற்றெடுக்கும் சுருளி நீர்வீழ்ச்சி முதலில் ஒரு குட்டையில் தேங்கி அதனை நிரப்பி விட்டு, அதன் பின்னர் சுமார் 40 அடி நீளத்திற்கு விழுகிறது. இந்த அருவிக்கு அருகில் உள்ள இடம் மூலிகைகளின் இருப்பிடமாகும். சுருளி நீர்வீழ்சியிலிருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் சுருளி வேலப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு சுற்றுலாத் துறையினரால் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. தேனிக்கு வருபவர்கள் காண வேண்டிய முதன்மையான சுற்றுலாத்தலம் இந்த நீர்வீழ்ச்சிதான். மழைக்காலங்களில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் இந்த நீர்வீழ்ச்சிக்கு வருகிறார்கள். தேனி மாவட்டத்தின் வனத்துறைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சியில் ஆண்களும் பெண்களும் தனித்தனியாகப் பாதுகாப்பாய் குளிப்பதற்கு தகுந்த வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன. பெண்கள் குளித்து முடித்த பிறகு உடை மாற்றிக் கொள்வதற்கு நீர்வீழ்ச்சிக்கருகிலேயே தனித்தனி அறைகள் உள்ளன. தற்போதைய நிலவரப்படி தண்ணீர் வரத்து மிதமாகவே வருகிறது.

                               7%20suruli%20falls-theni.JPG

தொடரும்...

http://www.vikatan.com/news/miscellaneous/68723-list-of-beautiful-waterfalls-in-tamil-nadu.art?artfrm=related_article

  • தொடங்கியவர்

தமிழ்நாட்டின் மிஸ்பண்ணக்கூடாத அருவிகள்: பாகம் 2

தமிழ்நாட்டின் மிஸ்பண்ணக்கூடாத அருவிகள்: பாகம் 1

1. குற்றாலம் அருவி:

11.jpg 

'பேரருவி' பொதுவாக 'குற்றால அருவி' என அழைக்கப்படுகிறது. தென்காசி ரயில் நிலையம் இங்கிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அங்கிருந்து குற்றாலத்திற்கு பேருந்து வசதி உண்டு. மதுரையிலிருந்து நிறைய பேருந்துகள் குற்றாலம் வரை செல்கிறது. தென்னகத்தின் "ஸ்பா" என அழைக்கப்படுகிறது. குற்றால அருவி நீர் பல்வேறு மூலிகைகளில் கலந்து வரும் தண்ணீர், ஆதலால் இதில் நீராடுவது உடலுக்கு ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது. ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவக்காலம் ஆரம்பித்தவுடன் குற்றால அருவியில் நீர் ஆர்ப்பரித்து விழும். இவ்வாறு சுற்றுலா மக்களைக் கவரும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள்தான் "குற்றால சீசன்". வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் இரண்டு நாட்கள் தங்கி செல்வதை விரும்பும் வகையில் பிரசித்தி பெற்று விளங்குகிறது. கேரளாவில் பிரபலமான நேந்திரங்காய் சிப்ஸ் தமிழ்நாட்டில் அதிகம் கிடைப்பதும் இங்கேதான். சில ஆண்டுகளில் இயற்கை மாற்றங்களினால் மே மாத பாதியிலேயே சீசன் ஆரம்பித்துவிடுகிறது. குற்றாலத்தில் பேரூராட்சி மற்றும் தனியாருக்கு சொந்தமான விடுதிகள் உள்ளன. முக்கிய அருவி எனப்படும் பேரருவியில் பெண்கள் குளிப்பதற்கு தனியான இடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அருவியில் இருந்து கிளம்பும் சாரல் வெகு தொலைவு வரை தென்படும். அனைத்து அருவியிலும் சோப்பு, ஷாம்பு, எண்ணெய் தேய்த்து குளிக்க ஐகோர்ட் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

2.ஐந்தருவி:

21.jpg

 குற்றாலத்தில் இருந்து சுமார் 5 கி.மீ., தூரத்தில் உள்ளது. திரிகூடமலையின் உச்சியில் இருந்து 40 அடி உயரத்திலிருந்து உருவாகி சிற்றாற்றின் வழியாக ஓடிவந்து 5 கிளைகளாக பிரிந்து விழுகிறது. இதில் பெண்கள் குளிக்க இரு கிளை அருவிகளும், ஆண்கள் குழந்தைகளுக்கு 3 கிளைகளும் உள்ளன. இங்கு சபரிமலை சாஸ்தா கோயிலும், முருகன் கோயிலும் உள்ளது. குற்றால சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகளை ஐந்தருவி அருகே அமைந்துள்ள 'சுற்றுச்சூழல் பூங்கா' கவர்ந்திழுக்கிறது. இங்கு கொட்டிக் கிடக்கும் இயற்கை அழகை பார்த்து ரசிக்க ஏராளமானோர் குடும்பத்துடன் படையெடுக்கின்றனர். இங்கு நீரோடை பாலம், நீரூற்று, சிறுவர் விளையாட்டு திடல், தாமரை குளம் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன. இதே போல கொன்றை மலர்கள், இட்லிப்பூக்கள் என பல்வேறு வகையான மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. நீரோடை பாலத்தின் ஓரம் அமைக்கப்பட்டுள்ள பார்வையாளர் மாடத்தில் இருந்து சல சலவென்ற சத்தத்துடன் பாய்ந்து செல்லும் பழத்தோட்ட அருவியின் அழகை ரசிக்கலாம்.

தொடர்ந்து பல மாதங்களுக்கு மழை பெய்யாவிட்டாலும் குற்றாலம் ஐந்தருவியில் மட்டும் தண்ணீர் கொஞ்சமாவது விழுந்துக்கொண்டிருக்கும் ரகசியம் என்ன தெரியுமா... வேறு ஒன்றுமில்லை. மெயின் அருவியின் நீரோடையில் மனித ஆக்கிரமிப்புகள் அதிகம். ஐந்தருவியின் நீரோடையில் மனித ஆக்கிரமிப்பு குறைவு. நேரம் கிடைக்கும் போது வனத்துறை அலுவலகத்தில் அனுமதிப் பெற்று, மெயின் அருவியின் நீரோடையை பின்தொடர்ந்து சுற்றிப்பாருங்கள். அதன்வழியே மலைத்தோட்டப் பயிர்கள் பயிரிடப்பட்ட விவசாய நிலங்கள், குட்டி குட்டி இந்து மத வழிபாட்டு ஸ்தலங்கள் நிறைந்திருப்பதை காணலாம்.

 

3. பழைய குற்றாலம் அருவி:

31.jpg

குற்றாலம்-கடையம் செல்லும் பாதையில் 8 கி.மீ. தூரத்தில் உள்ளது, பழைய குற்றால அருவி. குற்றாலத்தில் இருந்து கிழக்கு பகுதியில் சுமார் 16 கி.மீ., தொலைவில் அழகனாற்று நதியில் அமைந்துள்ளது. சுமார் 600 அடி உயரத்திலிருந்து இந்த அருவி விழுகிறது. இங்கும் ஆண், பெண் இருபாலரும் தனித்தனியே குளிக்க வசதி உள்ளது. பெண்கள் காசு கொடுத்து, துணி மாற்றும் அறைகளைப் பயன்படுத்துவது நல்லது. அருவியில் குளித்து முடித்த உடன் குளிர்ந்த உடம்புக்கு இதமான மிளகாய் பஜ்ஜி, வடை, டீ, காபி என ஏகப்பட்ட உணவுவகைகள் உண்டு. மலைப் பழ வகைளை குவியல், குவியலாக வைத்து விற்பார்கள். விவரத்துடன் கேட்டு வாங்க வேண்டும். குற்றாலத்தில் அருவி மட்டும்தான் என எண்ணிவிடாதீர்கள். குற்றாலநாதர் திருக்கோவில், சித்திரசபை, படகுக் குழாம், பாம்புப் பண்ணை, சிறுவர் பூங்கா ஆகியவையும் உண்டு. குற்றாலத்தில் உள்ள குரங்குகள் வினோதமானவை. கையில் வைத்திருக்கும் பொருளை தைரியமாக வந்து பறித்துச் செல்லும். குற்றாலம், திருநெல்வேலியில் இருந்து 59 கி.மீ. தூரத்தில் இருக்கிறது, பேருந்திலும் செல்லலாம். ரயிலில் தென்காசி வரை சென்று அங்கிருந்து நகர்ப் பேருந்து மூலம் குற்றாலம் செல்லலாம். பிரதான அருவியில் இருந்து ஐந்தருவி, பழைய குற்றாலம் ஆகியவற்றுக்கு நகர்ப் பேருந்து வசதி உண்டு. குற்றாலத்தில் தங்கும் வசதிகள் உள்ளன. இரண்டு படுக்கை கொண்ட அறைகள் வாடகைக்குக் கிடைக்கும். தனியான குடில்களும் உண்டு. வசதிக்கு ஏற்ப கட்டணமும், உணவு விடுதிகளும் உள்ளன.

 

4. திற்பரப்பு நீர்வீழ்ச்சி:

51.jpg

திற்பரப்பு நீர்வீழ்ச்சி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குலசேகரம் பகுதியிலிருந்து 5 கி.மீ தொலைவில் திற்பரப்பு என்ற ஊரில் உள்ளது. இது குமரிக் குற்றாலம் என்றும் அழைக்கப்படுகிறது. கோதை ஆறு விழுகின்ற இவ்விடத்தில் ஒரு சிவன் கோவிலும் உள்ளது. இக்கோவிலில் பாண்டியர்கள் குறித்த ஒன்பதாம் நூற்றாண்டுக் கல்வெட்டு உள்ளது. தக்கனின் வேள்வியை கலைத்தபிறகு வீரபத்ர மூர்த்தியாக சிவன் இங்கு அமைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. கீழ்பகுதி வட்டமாகவும், மேல்புறம் கூம்பு வடிவிலும் இக்கோவில் அமைந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக இவ்விடம் திகழ்கிறது. திற்பரப்பு அருவியிலிருந்து 5 கி.மீ தொலைவில் வரலாற்றுச் சிறப்புமிக்க திருநந்திக்கரை குகைக்கோவில்கள் அமைந்துள்ளன. இந்த அருவியில் குளிப்பதற்கு ஆண்களுக்கு ஆழமான பகுதியும், பெண்களுக்கு ஆழமற்ற பகுதியும் தனித்தனியாக இருக்கிறது. உடை மாற்றும் பகுதியும் தனியாக இருக்கிறது. இந்த அருவி தமிழ்நாடு சுற்றுலா துறையினால் பராமரிக்கப்படுகிறது. இந்த ஆறு காடுகளின் வழியாக பாய்ந்து வருவதால் பல மூலிகைகளின் குணம் தண்ணீரில் சேர்கிறது. கால்களில் உள்ள பித்தவெடிப்பு ,மற்ற தோல் நோயிகளையும் குணப்படுத்தும் தன்மை இருப்பதாக சொல்கிறார்கள். அதனால் மக்களும் குறைந்தது ஒரு மணி நேரமாவது குளிக்கிறார்கள். குழந்தைகளுக்கு என்று தனியாக நீச்சல்குளம் உள்ளது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் முதல், உள்நாட்டு மக்களும் வந்து செல்கிறார்கள். காலை முதல் மாலை வரை எல்லா நாட்களிலும் அனுமதி உண்டு. பேருந்து வசதி ஒரு குறை. சொந்தமாக வாகனம் வைத்து இருந்தால் நன்றாக இருக்கும். நேரம் கிடைத்தால் ஒரு முறை குடும்பத்துடன் சென்று வாருங்கள்.

 

5. ஆகாய கங்கை அருவி:

4.jpg

 கொல்லிமலையில் அறப்பளீஸ்வரர் கோயிலுக்கு அருகில் ஆகாய கங்கை அருவி அய்யாறு ஆற்றின் மீது உள்ளது. 600 அடி உயரமுடைய இந்த அருவியில் குளித்தால் செய்த பாவங்கள் நீங்கும் என்று நம்பிக்கை இருக்கிறது. தமிழகத்தின் சிறப்பு வாய்ந்த குற்றாலம் அருவியில் கூட, சீசன் காலங்களில் மட்டுமே தண்ணீர் கொட்டும். ஆனால் இந்த அருவியில் மழைக்காலங்களில் அதிக அளவிலும், கோடைகாலங்களில் குறைந்த அளவிலுமாக ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டிக்கொண்டே இருக்கும். இந்த அருவிக்கு அறப்பளீஸ்வரர் கோவிலில் இருந்து செங்குத்தான 1000 படிகளில் இறங்கி செல்ல வேண்டும். முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் செல்ல முடியாது என்பதால், மாவட்ட நிர்வாகம் சார்பில் அறப்பளீஸ்வரர் கோவில் அருகே உள்ள சிற்றருவியில் இவர்கள் குளிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இங்கு நீராடும் சுற்றுலா பயணிகள், அரப்பளீஸ்வரரை தரிசித்து விட்டு, ஓய்வு எடுப்பதற்கு வசதியாக கோவில் முன்பு மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறிய பூங்கா ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும் பகுதியாக வாடலூர்பட்டியில் உள்ள படகு இல்லம் திகழ்கிறது. இந்த படகு இல்லத்தில் ஏற்கனவே 4 படகுகள் இருந்தன. தற்போது ரூ.2 லட்சம் செலவில் மேலும் 3 புதிய படகுகள் வாங்கி, சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டுக்கு விடப்பட்டு உள்ளது. கொல்லிமலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் இங்கு வந்து படகு சவாரி செய்யாமல் திரும்புவது இல்லை. மகளிர் சுயஉதவி குழு மூலம் இப்படகு இல்லம் பராமரிக்கப்படுவதால், மிக குறைவான கட்டணத்திலேயே சவாரி செய்ய முடிகிறது. அத்துடன் படகு இல்லத்தின் அருகே சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பூங்காவும் நிறுவப்பட்டு உள்ளது.

 

6. கேத்ரின் நீர்வீழ்ச்சி:

6.jpg

பசுமையான தேயிலை தோட்டங்கள், அழகிய மலை முகடுகளின் வழியே வழிந்து, பாறைகளை நனைத்து, பார்வையாளர்களின் மனதையும் நனைக்கிறது கேத்ரீன் நீர்வீழ்ச்சி. கோத்தகிரி- மேட்டுப்பாளையம் சாலையில் அரவேணுவில் இருந்து 2.5.கி.மீ., தொலைவில் உள்ளது. காட்சி கோபுரத்தில் இருந்து சற்று தொலைவில் உள்ள நீர் வீழ்ச்சிக்கு செல்பவர்கள், தண்ணீரில் விளையாடும் போது கவனமாக இருக்க வேண்டும். சற்று கவனம் சிதறினாலும் பாசி படிந்திருக்கும் பாறைகள், காலை வாரி விடும். காட்சிக் கோபுரம் அருகே அமைக்கப்பட்டுள்ள தடுப்பை தாண்டினாலும், விபத்து ஏற்படும். நீர் வீழ்ச்சியை ரசிக்க செல்பவர்கள் இதை கடைபிடித்தால், இனிமையான சுற்றுலாவாக இருக்கும். அழகான புகைப்படம் எடுக்க சிறந்த இடம். குன்னூரிலிருந்து 20 கி.மீ, கோத்தகிரி, ஊட்டியிலிருந்து 30 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. நீலகிரி மலைப்பகுதியின் இரண்டாவது மிகப்பெரிய அருவி கேத்ரின் நீர்வீழ்ச்சியாகும். இது ஒரு நல்ல மலையேற்ற தலமாகவும் விளங்குகிறது. கோத்தகிரியிலிருந்து தனியார் வாகங்களின் மூலம் இந்த நீர்வீழ்ச்சிக்கு செல்லலாம்.

 

7. உலக்கை அருவி:

7.jpg

கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள இயற்கை எழில் வாய்ந்த அருவியாகும். இது ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. கன்னியாகுமரியில் இருந்து ஏறத்தாழ 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. தோவாளை தாலுக்காவிலுள்ள அழகியபாண்டிபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ள இந்த அருவியில் எல்லா மாதமும் நீர் வந்து கொண்டு இருக்கும். காடுகள் வழியாகச் செல்லும் ஒதுக்கப்பட்ட பாதைகள் மூலமே இந்த அருவியை அடைய முடியும். அருவியில் குளிப்பதற்கும் இயற்கை அழகை ரசிப்பதற்குமாகவே பல சுற்றுலாப் பயணிகள் இங்கே அதிகம் வருகின்றனர். அருவியை சுற்றிப் பசுமையான காடுகள் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தெரியும். கண்ணுக்கெட்டிய தூரம் வரையிலும் பசுமை மாறா காடுகளும், மலைகளும் வற்றாத ஓடைகளும் காணப்படுகின்றன. இந்நீர்வீழ்ச்சி மலை அடிவாரத்திலிருந்து 1000 அடி உயரத்தில் அமைந்துள்ளது, எனவே உலக்கை அருவிக்கு செல்வது சிறந்த மலையேற்ற பயிற்சி செய்வது போன்றதாகும். பூதப்பாண்டியையொட்டியுள்ள மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் இந்த அருவி அமைந்துள்ளது. அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் உள்ள இந்த அருவி, மலை உச்சியில், சுமார் 2 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து செங்குத்தாக பாய்கிறது. சற்று தொலைவில் இருந்து இதனைப் பார்க்கும்போது ஒரு பெரிய உலக்கைபோல் காட்சிதருகிறது. இதனைக் கண்டுகளிக்கவும், ஏராளமான மூலிகைகளுடன் கலந்துவரும் தண்ணீரில் குளித்து மகிழவும் சுற்றுலாப் பயணிகள் இங்கு அதிக அளவில் வருகை தருகின்றனர். அங்கேயே உணவு சமைத்து சாப்பிட்டும், அருவியில் நீராடியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.

 

8. வெள்ளி நீர்வீழ்ச்சி:

8.jpg

கொடைக்கானல் நகருக்கு வருகின்ற சுற்றுலாப் பயணிகளை பன்னீர் தெளித்து வரவேற்பது போல இயற்கையாகவே அமைந்துள்ளது வெள்ளி நீர்வீழ்ச்சி. கொடைக்கானல் ஏரி மற்றும் பல இடங்களிலிருந்து மலைப் பாதை வழியாக வந்து 180அடி உயரத்திலிருந்து தண்ணீர் கொட்டும் இடம்தான் வெள்ளி நீர்வீழ்ச்சி. பார்ப்பதற்கு மிக ரம்மியமாக இருக்கும். கொடைக்கானலில் இருந்து 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த அருவியில் குளிக்க முடியாது. கொடைக்கானல் செல்லும் . சுற்றுலாப்பயணிகள் அதிகம் விரும்பி காணும் இடமாகவும் வெள்ளி நீர்வீழ்ச்சி இருக்கிறது. திண்டுக்கல்லில் இருந்து வத்தலக்குண்டு வழியாக கொடைக்கானல் போகும் வழியில் சாலையின் அருகில் அமைந்துள்ளது. அதிக அளவில் சுற்றுலாப்பயணிகள் அருவியுடன் சேர்த்து தனது புகைப்படத்தை எடுத்துக் கொள்கின்றனர். வெள்ளி நீர்வீழ்ச்சியில் குரங்கு தொல்லை அதிகமாக இருக்கும். வெள்ளிநீர்வீழ்ச்சியை காலை 6 மணியிலிருந்து இரவு 6 மணிவரை அருகில் சென்று பார்க்கலாம்.

http://www.vikatan.com/news/tamilnadu/68759-do-not-miss-these-water-falls-in-tamil-nadu.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.