Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டொய்ச்செ பான்க் ( Deutsche Bank ) நெருக்கடி: பிணையெடுப்பது யார்?

Featured Replies

டொய்ச்செ பான்க்  ( Deutsche Bank ) நெருக்கடி: பிணையெடுப்பது யார்?
 
 

 

article_1476333773-bn.jpgதெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ 

எல்லா உண்மைகளையும் பொய்களால் மறைக்கவியலாது. எத்தனை முறை திருப்பிச் சொன்னாலும் பொய்கள் உண்மையாகா; காலம் உண்மையை மீளமீள நினைவுபடுத்தும்; உண்மையின் வலிமை அது. பொதுக் கருத்துக்கள் கட்டமைக்கப்படுகின்ற இக்காலத்தில் உண்மைகளும் கட்டமைக்கப்படுகின்றன. இதனால் உண்மை எது? உண்மைபோல் தெரிவது எது? என்ற மயக்கம் இயல்பாகவே வருகிறது. இம்மயக்கங்களைத் தாண்டி உண்மையை அறிவது கொஞ்சம் கடினம். ஆனால் உண்மையை அறியும் அவா அதைக் கண்டுணர உதவலாம். 

ஜேர்மனியின் மிகப்பெரிய வங்கியான டொய்ச்செ பான்க் பாரிய நெருக்கடியில் உள்ளது. இந்நெருக்கடியை வெறுமனே ஒரு வங்கியின் நெருக்கடியாக மட்டும் நோக்கவியலாது. இதன் பரிமாணங்கள் பல; நெருக்கடியின் காரணங்களும் பல. ஒருபுறம் 2008 இல் ஏற்பட்ட உலகப் பொருளாதார நெருக்கடி முடிந்துவிட்டதாக எமக்கு விடாது சொல்லப்பட்டாலும் எட்டு ஆண்டுகள் கடந்தும் அந்நெருக்கடி தனது வடிவத்தையும் போக்கையும் மாற்றியுள்ளதேயன்றி, இன்னும் முடியவில்லை என்பதை, இந்த ஜேர்மன் வங்கியின் நெருக்கடி மீண்டும் பறைசாற்றியுள்ளது. 

ஜேர்மன் டொய்ச்செ பான்க் கடந்த சில ஆண்டுகளாக நெருக்கடியிலுள்ளது. அந்நெருக்கடியின் உச்சமாகக் கடந்த வாரம் அமெரிக்க நீதித் துறை, 2008 ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடிக்கு இட்டுச்சென்ற குறைந்த-பிணை அடைமானச் சந்தை (sub-prime mortgage market) தொடர்பில் இடம்பெற்ற மோசடி விசாரணை முடிவில் டொய்ச்செ பாங்க் மோசடியில் ஈடுபட்டமை காணப்பட்டுள்ளதாகவும் அதற்காக அந்த ஜேர்மன் வங்கிக்கு 14 பில்லியன் டொலர்களை அபராதம் விதிக்கவுள்ளதாகவும் கசிந்த தகவலையடுத்து டொய்ச்செ பாங்கின் பங்குகள் மேலும் சரிந்ததோடு, அவ்வங்கியின் நிலைப்புப் பற்றி மக்களின் நம்பிக்கை வீழ்ந்தது. இது டொய்ச்செ பாங்கை நெருக்கடிக்குள்ளாக்கியது.  

இன்னொரு உலகளாவிய வங்கிமுறை நெருக்கடியை உருவாக்குவதனூடு மேலுமொரு பொருளாதார அதிர்ச்சியைத் தருமளவுக்கு டொய்ச்செ பாங்க் உறுதியின்றி இருப்பதாக டொய்ச்செ பான்க்கின் நிதிநிலைமை பற்றிய சர்வதேச நாணய நிதியத்தின் கடந்த ஜுன் மாதக் கூற்று சுட்டிக் காட்டியது. இருப்பினும் இப்போதைய நெருக்கடியில் சர்வதேச அரசியலின் வகிபாகம் பெரிது.  

1870 ஆம் ஆண்டு ஜேர்மனியின் தலைநகரான பெர்லினில் சர்வதேச வர்த்தகத்தை வசதிப்படுத்தவும் சர்வதேச வர்த்தகத்தில் தேர்ச்சி பெற்ற ஒரு வங்கிக்கான தேவையை நிரப்பவும் டொய்ச்செ பான்க் நிறுவப்பட்டது. டொய்ச்செ பான்க் என்பதன் பொருள் ‘ஜேர்மன் வங்கி’ என்பதாகும். 1990 களின் நடுப்பகுதி தொட்டு, உலகின் முக்கிய வங்கிகளில் ஒன்றாகத் தன்னை உயர்த்திய டொய்ச்செ பான்க் 2001 ஆம் ஆண்டு அமெரிக்கப் பங்குச் சந்தையில் நுழைந்தது. 2004 ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவில் தோன்றிய கடன் வழங்கல் பாதுகாப்பற்றதும் வீட்டுக்கடன் குமிழி என அறியப்பட்டதுமான வீட்டுக் கடன் நடைமுறை அதிகரிப்பில் டொய்ச்செ பான்க் முக்கிய பாத்திரம் வகித்தது. அவ்வகையில், 2008 ஆம் ஆண்டு ஏற்பட்ட உலக நிதி நெருக்கடியை உருவாக்கியதில் தட்டிக்கழிக்கவிலாத பங்கு டொய்ச்செ பான்க்கிற்கு உண்டு. இப்போது இவ்வங்கி 70 க்கும் அதிகமான நாடுகளில் இயங்குகிறது. ஓர் இலட்சத்துக்கும் அதிகமானோர் அதில் பணியாற்றுகிறார்கள். அதன் சரிவு உலகளாவிய வங்கிமுறைக்கு மிகப்பெரிய சவாலாக அமையும்.

சில வாரங்களுக்கு முன் ஐரோப்பிய ஆணையகம் அமெரிக்காவின் பிரதானமானதொரு தொழில்-வர்த்தக நிறுவனமும் உலகின் அதிபெரிய பல்தேசியக் கம்பெனிகளில் ஒன்றுமான அப்பிள் நிறுவனம் வரி ஏய்ப்புக்காக 14.5 பில்லியன் அமெரிக்க டொலர் அபராதம் செலுத்த வேண்டும் என்று தீர்ப்பளித்தது. இத் தீர்ப்பையடுத்து அமெரிக்கத் திறைசேரி வெளியிட்ட அறிக்கையில் ‘ஐரோப்பிய ஆணையகம் தேசம் கடந்த வரிவிதிப்பு அதிகாரமாகச்’ செயற்படுவதை ஏற்க முடியாதென்றதோடு, ஐரோப்பிய ஆணையகம் அமெரிக்க நிறுவனங்களைத் திட்டமிட்டுக் குறிவைப்பதாகவும் அதை நிறுத்த வேண்டும் என்றும் எச்சரித்தது. 

இதையொட்டியே, ஜேர்மன் வங்கியின் மீதான அபராதம் பற்றிய செய்தி வெளியானது. இதில் கவனிக்க வேண்டிய விடயங்கள் சில: 2008 ஆம் ஆண்டுப் பொருளாதார நெருக்கடியை விசாரித்ததன் விளைவாகவே டொய்ச்செ பான்க்கிற்கு இவ்வபராதத்தை விதித்ததாகச் சொல்லப்படுகிறது. உலகப் பொருளாதார நெருக்கடியின் காரணங்களை அனைவரும் அறிவர். எட்டு ஆண்டுகள் கழித்து அதற்காக அபராதம் விதிப்பதில் அரசியல் நோக்கம் உண்டு. மேலும், இவ்வாறான ஓர் அபராதம் விதிப்பது பற்றி அமெரிக்காவுக்கும் டொய்ச்செ பான்க்கிற்கும், வழமையாகத், திரைமறைவில் நடக்கும் கருத்துப் பரிமாற்றம் நிகழவில்லை. மாறாக, இத்தகவல் அமெரிக்கப் பங்குச் சந்தைக்கு நெருக்கமான இதழான ‘வால்ஸ்ரீட் ஜேர்னலுக்கு’க் கசிய விடப்பட்டது. அமெரிக்கா இம் முரண்பாட்டை பொது வெளிக்குக் கொண்டுவர விரும்பியே தகவல் கசிய விடப்பட்டது. இந்நிகழ்வுகள் அமெரிக்க - ஐரோப்பிய ஒன்றியப் பொருளாதார உறவில் முறுகல் என்றொரு படிநிலையையும் இன்னமும் முடியாத உலகப் பொருளாதார நெருக்கடியின் அதிர்வலைகளையும் உணர்த்துகின்றன.  

நெருக்கடியில் உள்ள அமெரிக்க - ஐரோப்பிய பொருளாதாரப் போட்டியின் வரலாறு நீண்டது. அமெரிக்காவின் உலக ஆதிக்க நோக்கம், முதலாம் உலகப் போர்க் காலத்திலேயே உருவாகிவிட்டது. அப்போரால் பெரும் பொருள் இழப்பையும் உழைப்பாற்றல் உடையோரின் இழப்பையும் சந்தித்த ஐரோப்பிய நாடுகளை மீறிய வலிய பொருளாதார வல்லரசாக அமெரிக்கா வளர்ந்தது. 

இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கா உலக மக்களின் நலன் காக்கப் பங்குபற்றவில்லை. பாஸிஸத்துக்கு எதிரான அப்போரில் அதிபெரிய தியாகங்களைச் செய்த நாடு சோவியத் ஒன்றியமாகும். அந்த உண்மை இப்போது திட்டமிட்டு மறைக்கப்படுகிறது. மிகக் குறைவான உயிர்ச் சேதத்தையும் உடைமைச் சேதத்தையும் அனுபவித்த அமெரிக்கா, அப்போரின் விளைவாக உலகின் மிக வலிய பொருளாதார, ஆயுத வல்லரசாகத் தன்னை நிறுவியது. இரண்டாம் உலகப் போரின் பின் கொலனிய வல்லரசுகளான பிரித்தானியாவும் பிரான்ஸும் வலுவிழந்த சூழலில், கொலனிகளில் விடுதலைப் போராட்டங்கள் வேகம் பெற்றன. ஆனால், அங்கெல்லாம் ஏற்பட்ட ஆட்சி மாற்றங்கள் (வட வியட்நாம் நீங்கலாக) கொலனியத்துடன் இணக்கமான தலைமைகளையே ஆட்சிக்குக் கொண்டு வந்தன.  இப்பின்புலத்தில் ஐரோப்பாவைப் பின்தள்ளிப் பொருளாதார ரீதியாகத் தலையாய இடத்தை அமெரிக்கா பெற இவை வழிவகுத்தன.  

முழுமையாக அமெரிக்கா மேலாதிக்கம் செலுத்தும் உலகம், மூலதனத்தினதும் பேரரசுகளினதும் வரலாற்றில் புதியதொரு கட்டமாகும். சென்ற நூற்றாண்டின் பிற் கூற்றில் அமெரிக்காவுக்கு ஒப்பாக பிரித்தானியாவினுடையதும் பிரான்சினுடையதும் சக்திவாய்ந்த ஒரு தொழிற்றுறை நாடாக ஜேர்மனி உருவாகியது. ஜேர்மனி முதல் உலக யுத்தத்தில் தோற்றுப், பின்னர் நாஸிகள் உலகைக் கைப்பற்றும் அளவிற்கு எழுச்சி பெற்றும், இரண்டாம் உலக யுத்தத்தில் மீண்டும் தோற்றது. ஜேர்மனியின் தோல்வி, தடுமாறிக் கொண்டிருந்த பிரித்தானிய, பிரான்ஸ் பேரரசுகளின் இடத்தை அமெரிக்கா கைப்பற்றுவதை உறுதிப்படுத்தியது. உலகின் ஒப்புயர்வற்ற அந்த நிலையை யாருக்கும் விட்டுக் கொடுக்கும் நிலை இதுவரை அமெரிக்காவிற்கு உருவாகவில்லை. ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்தின் தோற்றத்துடன் துரிதமாக வளர்ந்த மேற்கு ஜேர்மன் பொருளாதாரம் காலப்போக்கில் இரண்டாம் உலக யுத்தத்தினால் பிரிந்த கிழக்கு ஜேர்மனியுடன் மீளிணைந்ததையடுத்த வளர்ச்சி ஐரோப்பாவின் முதன்மை நாடாக ஜேர்மனியை மீண்டும் தரமுயர்த்தியது.  

அமெரிக்கா, பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகும் ஒவ்வொரு முறையும் பல்வேறு வழிகளில் தன்னைத் தற்காக்க முயன்றுள்ளது. இப்போதைய செயற்பாடுகளையும் அவ்வாறே நோக்கலாம். 1970 களில் அமெரிக்கா ஒரு பாரிய நெருக்கடியை எதிர்நோக்கிய போது, தங்கத்தின் விலைக்கு நிகராக டொலரின் பெறுமானத்தைப் பேணிய முறையை அமெரிக்கா கைவிட்டது. அமெரிக்க அரசாங்கம் தனது கையிருப்பிலிருந்த தங்கத்தின் கணிசமான பகுதியை உலகச் சந்தைக்குக்குக் கொண்டு வந்தபோதும் உலகப் பொருளாதாரம் தனது சிக்கலிலிருந்து முற்றாக விடுபடவில்லை; நெருக்கடிகள் தொடர்ந்தன. மூலதனம் செயற்படும் முறை மாறத் தொடங்கிய பின், பெரிய கொம்பனிகள் யாவும் பங்குச் சந்தையில் வாங்கி விற்கக்கூடிய பங்குகளின் வடிவிலேயே இன்று தமது உடைமைகளைக் கொண்டுள்ளன. 

வாடிக்கையாளர்களுக்கு நீண்ட கால முதலீட்டுக்குக் கூடிய வட்டி வழங்குவதன் மூலம் வங்கிகள் அவர்களைக் கவர்ந்தன. தங்களிடம் திரண்ட நிதியின் கணிசமான பகுதியைப் பங்குச் சந்தையில் முதலிட்டன. இவ்வாறான மூலதன வளர்ச்சி தன்னுள் மிக ஆபத்தானப் பண்புகளைக் கொண்டிருந்தது. ஒரு சில பெரிய கம்பனிகளிலோ அதிபெரிய கம்பனி ஒன்றிலோ நிதி நெருக்கடி ஏற்படும் 

போது, முழுப் பங்குச்சந்தையும் அதிர்ச்சிதரும் சரிவுகளைக் காண்கிறது. 

இத்தகைய நிகழ்வுகளை நாம் அண்மையில் பல நாடுகளில் கண்டுள்ளோம். ஏகபோக மூலதனமாகியுள்ள மூலதனம் தன் தேச எல்லைகளைத் தாண்டிப் பிற நாடுகளின் உற்பத்தியையும் வணிகத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயல்கிறது. உலகச் சந்தை மீது ஏகபோக முதலாளிய ஆதிக்கம் மூன்றாம் உலகின் மூலப் பொருட்கள் முதல் அடிப்படை உற்பத்திப்பொருட்கள் வரை விலைகளைத் தாழ்த்தியும் தனது நேரடிக் கட்டுப்பாட்டிலுள்ள உற்பத்திகளின் விலைகளை உயர்த்தியும் மூன்றாம் உலகப் பொருளாதாரங்களைத் தாழ்நிலையில் வைத்துள்ளது. அவ்வாறு நாடுகளைக் கட்டுப்படுத்தித் தன் ஆணைப்படி வழிநடத்த அதற்கு இயலுகிறது. அதை விடக் கடன் என்கிற பெயரிலும் உதவி என்கிற பெயரிலும் ஏழைநாடுகளின் பொருளாதாரம் ஏகபோக மூலதனத்தின் தேவைகட்கமைய வழிநடத்தப்படுகிறது. எனவே, தேசியப் பொருளாதாரம் என ஒன்றை உருவாக்க அவற்றுக்கு இயல்வதில்லை. ஏற்றுமதியை மையமாகக் கொண்ட நுகர்வுப் பொருளாதாரம் ஒவ்வொரு நாட்டின் மீதும் சுமத்தப்பட்டுள்ளது. இதை அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் செய்யத் தலைப்பட்டுள்ளன. இதன் விளைவாக உருவான வர்த்தகப் போட்டிக்கு 2008 இல் உருவான நிதி நெருக்கடி கொம்பு சீவிவிட்டது.  

2008 இல் ஏற்பட்ட நிதி நெருக்கடியில் வங்கிகளின் பங்கு பெரிது. நுகர்வைப் பெருக்கக் கடன் வழங்குவதும் முதலீடுகளுக்கான நிதி வளத்தைப் பெருக்கக் கவர்ச்சியான வட்டி வீதங்களில் பண முதலீட்டை வரவேற்பதுமாக இயங்கிய வங்கிகளும் பிற நிதி நிறுவனங்களும் அமெரிக்கப் பொருளாதார மந்தத்தால் பெரும் நெருக்கடியை எதிர்நோக்கின. கடன்பெற்றோர், வாங்கினோர் உரிய வட்டியையோ கடனை மீட்கும் தவணைத் தொகையையோ கொடுக்க இயலாதுபோனதால், வங்கிகள் நெருக்கடிக்குள்ளாகின. இவை நிலைமையை மோசமாக்கி அமெரிக்காவின் பொருளாதாரத்தை மேலும் மோசமாக்கி நெருக்கடிக்கு வித்திட்டன.  

அமெரிக்கா தனது வங்கிகளைப் பிணையெடுத்துக் காத்தபோதும் பொருளாதார நெருக்கடி முடியவில்லை. மாறாக மற்றவனை அழித்தாவது தன்னைத் தகவமைத்துக் கொள்ளல் என்ற முதலாளித்துவப் பொருளாதார விதிப்படி பொருளாதாரப் போட்டி உலக அலுவல்களில் நெருங்கிய கூட்டாளிகளுக்கிடையே முடிவற்ற சண்டைக்கு வழிவகுத்தது. குறைந்த வளர்ச்சி மட்டங்களும் வீழும் வர்த்தகமும் குறையும் முதலீடும் உற்பத்தித்திறன் வீழ்ச்சியும் குறிக்கும் உலகப் பொருளாதாரத் தேக்கம் இந்நெருக்கடியை முன்தள்ளுகிறது. குறிப்பாக முதலாளியப் பொருளாதாரத்தின் இதயமாயிருக்கிற வங்கித் துறை மீதானதாக்குதல் பொருளாதாரத்தின் மீதான நேரடிக் குறிவைப்பை அறிவிக்கிறது. ஒருபுறம் அமெரிக்க வங்கிகளைப் பிணையெடுக்கும் அமெரிக்க அரசாங்கம் ஐரோப்பாவின் பலமான வங்கிகளைச் சரிப்பதன் மூலம் அமெரிக்க வங்கிகளை உறுதிப்படுத்துவதோடு ஐரோப்பியப் பொருளாதாரத்தைக் மறைமுமாகக் கட்டுப்படுத்த முனைகிறது.  

டொய்ச்செ பான்க்கிற்கு எதிரான நடவடிக்கை ஒரு தொடக்கம் மட்டுமே என்றும், அது ஐரோப்பாவின் பிரதான வங்கிகளின் மீது எதிர்காலத்தில் பாயலாம் என எதிர்வு கூறப்படுகிறது. சர்வதேச நாணய நிதியம் கடந்த வாரம் வெளியிட்ட உலகப் பொருளாதார பார்வை அறிக்கை, முன்னேறிய பொருளாதாரங்கள் இவ்வாண்டு 1.6 சதவீதத்தாலேயே வளரும் எனவும் இது கடந்தாண்டுத் தரவான 2.1 சதவீதத்தை விடக்  குறைவானது எனவும் அடுத்தாண்டும் பொருளாதார அபிவிருத்தி குறைவாகவே இருக்கும் எனவும் எதிர்வுகூறியுள்ளது. இவை உலகப் பொருளாதார நெருக்கடி முடிவுக்கு வரவில்லை என்பதையும் அதன் ஆபத்தான திசைவழிகளில் ஒன்றாக அமெரிக்க - ஐரோப்பிய பொருளாதாரப் போட்டியையும் காட்டுகின்றன.  டொய்ச்செ பான்க்குக்கு அமெரிக்கா விதித்த அபாராதம் பற்றிக் கருத்துத் தெரிவித்த ஐரோப்பிய ஆணையத் துணைத்தலைவர் “அமெரிக்க விரும்புமாறான வங்கியியல் திருத்தங்களை உருவாக்க முடியாது” எனவும் “நாம் ஐரோப்பாவுக்காகச் செயற்படும் ஒரு தீர்வை வேண்டுகிறோம். எமது உலகப் போட்டியாளர்கட்குச் சார்பாக எமது வங்கிகளைச் சாதகமற்ற நிலையில் வைக்க நாம் விரும்பவில்லை” எனவும் தெரிவித்தது கவனிப்புக்குரியது. மறுபுறம் ஜேர்மன் அதிபர் அங்கெலா மேக்கல், டொய்ச்செ பான்க் கவிழுமாயின் எக்காரணம் கொண்டும் ஜேர்மன் அரசாங்கம் அதைப் பிணையெடுக்காது எனவும் அறிவித்துள்ளார். இது டொய்ச்செ பான்க்கின் நெருக்கடிக்கு மேலுமொரு அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இவை யாவும், இம்முறை பிணையெடுப்பவர் யார் என்ற கேள்வியை எழுப்பியுள்ளன.  

வங்கிகள் உலகப் பொருளாதார ஒழுங்கின் முக்கிய கண்ணிகள். மூலதனத்தின் அடிப்படைகளை மட்டுமன்றி அதன் இயங்கியலையும் தீர்மானிப்பவை. ஆனால் மூலதனத்தின் பிரச்சினை, ஏனென்றால் அது வளர்ந்து கொண்டே போக வேண்டும் என்பதுதான். ஆனால் அவ்வளர்ச்சியின் தன்மையை அதனால் தீர்மானிக்க இயலாது. மூலதனம் வளர்ந்த விதமும் பங்குச் சந்தை முதலீட்டு முறைகளின் மாற்றங்களும் பங்குச் சந்தையில் கட்டுப்பாடற்ற வணிக நடவடிக்கைகளுக்கு வழிசெய்தது. பங்குச் சந்தை, ஊகவணிகத்தின் பிறப்பிடமாகும். அவ்வகையில் ஊக வணிகம் நிதிச்சந்தைச் சூதாட்டம் போன்றது. எந்தச் சூதாட்டத்திலும் எல்லோரும் வெல்ல முடியாது. சூதாட்ட விதிகளை மீறுவதிலிருந்து சூதாடிகளைத் தடுக்கவும் முடியாது. இப்போது இதுவே நடைபெறுகிறது. 

வங்கிகள் வங்குரோத்தானால் நிலைமை என்ன? அதற்கு யார் காரணம்? விதிகளின் படி சூதாடாதவர்களா, சூதாட்டமா, ஊக வணிகமா, பங்குச் சந்தையா? இது சிக்கலான கேள்வி.  

ஆனால் இங்கு சொல்லக்கூடிய பதிலொன்றுண்டு. வங்கிகள் ஓட்டாண்டியானால் அரசு பிணையெடுக்கலாம். ஆனால் மக்களை அரசு என்றும் பிணையெடுக்காது. 

http://www.tamilmirror.lk/183843/ட-ய-ச-ச-ப-ன-க-ந-ர-க-கட-ப-ண-ய-ட-ப-பத-ய-ர-

  • தொடங்கியவர்

வீழ்ச்சியின் விளிம்பில் டாயிஷ் வங்கி?

 

 
deutsche_3040474f.jpg
 

பங்குச் சந்தையை தொடர்ந்து கவனித்து வருபவர்களுக்கு இந்த தலைப்பு கொஞ்சம் அதிர்ச்சி அளிக்க கூடியதாகத்தான் இருக்கும். இது நடப்பதற்காக வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும் கூட, அதற்கு வாய்ப்புகளே இல்லை என்று மறுக்கமுடியாத சூழல் இருக்கிறது.

2008-ம் ஆண்டு அமெரிக்காவில் நடந்த சப் பிரைம் கிரைசிஸ் நிகழ்வின்போது அமெரிக்காவில் பல வங்கிகள் திவாலாயின. அதில் முக்கிய வங்கி லேமன் பிரதர்ஸ். இந்த வங்கி திவாலான சமயத்தில் சர்வதேச அளவில் முக்கிய பங்குச் சந்தைகள் கடுமையாக சரிந்தன. அந்த சமயத்தில் ஜெர்மனியைச் சேர்ந்த டாயிஷ் வங்கி முறைகேடான நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக அமெரிக்கா நீதிமன்றம் (டிஓஜே) 1,400 கோடி டாலர் வரை அபராதம் விதிக்க வாய்ப்புள்ளது என்று அறிவித்தது. இந்த அபராதத்தை குறைப்பதற்கான பேச்சு வார்த்தையில் அந்த வங்கி ஈடுபட்டிருந்தாலும் இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை.

சர்வதேச அளவில் குறைவான வட்டி விகிதம், மந்தமான வளர்ச்சி உள்ளிட்டவைகளின் காரணமாக இந்த வங்கியின் சந்தை மதிப்பு கடந்த இரு வருடங்களில் அதிகமாக சரிந்திருக்கிறது. இதன் பங்குகள் 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் ஒரு பங்கு 30 யூரோவாக வர்த்தகமானது. ஆனால் இப்போது 12 யூரோ என்ற அளவில் வர்த்தகமாகி வரு கிறது. இந்த நிலையில் இப்படி ஒரு அபராதத்தை இந்த வங்கியால் தாங்க முடியுமா என்பது குறித்த விவாதம் வலுக்கத் தொடங்கி இருக்கிறது.

அரசாங்க உதவி கிடைக்குமா?

இது பொருளாதாரம் சம்பந்தப்பட்ட பிரச்சினை யாக இருந்தாலும் அரசியலும் இதில் கலந்திருக்கிறது. இந்த வங்கிக்கு பிரச்சினை ஏற்பட்டால் அரசாங்க உதவி கிடைக்காது என ஜெர்மனியின் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் தெரிவித்திருக்கிறார். ஏற்கெனவே அரசியல் ரீதியாக மெர்கலுக்கு இப்போது சாதகமான சூழல் இல்லை. பிரெக்ஸிட் விவகாரம் இருக்கிறது; சிரியா அகதிகளுக்கு ஜெர்மனியில் அடைக்கலம் கொடுத்திருப்பதும் சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது. இந்த நிலையில் அடுத்த வருடம் செப்டம்பரில் அங்கு தேர்தல்கள் நடக்க இருக்கின்றன என்பதால் டாயிஷ் வங்கிக்கு ஜெர்மனி அரசின் உதவி கிடைப்பது கடினம் என்றே தோன்றுகிறது.

ஆனால் இன்னொரு சிக்கல் என்னவென்றால் ஜெர்மனியின் மொத்த ஜிடிபியில் 50 சதவீத அளவுக்கு டாயிஷ் வங்கியின் நிதிநிலை இருக்கிறது. ஒரு லட்சம் பணியாளர்கள் இருக்கிறார்கள். வங்கிக்கு நிதி உதவியும் கொடுக்க முடியாது. ஒரு வேளை 1,400 கோடி டாலர் அபராதம் விதிக்கப்பட்டு வங்கிக்கு நிதி உதவி செய்ய முடியவில்லை என்றால் இதைவிடவும், பிரச்சினையும் பெரிதாக உருவாகக் கூடிய சூழல் இருக்கிறது.

ஐரோப்பிய யூனியனில் ஒரளவுக்கு பலமான நாடு என்றால் அது ஜெர்மனிதான். ஜெர்மனியில் பிரச்சினை, அதுவும் ஒரு வங்கிக்கு கடும் நிதி நெருக்கடி என்னும் போது ஒட்டு மொத்த ஐரோப்பிய யூனியனையும் பாதிக்கும். ஏஞ்சலா மெர்கலுக்கு மட்டுமல்லாமல் ஐரோப்பிய யூனியன் வங்கியின் தலைவர் மரியோ டிராகி-க்கும் இது நெருக்கடியான காலம்தான்.

சிஇஓ சொல்வதென்ன?

ஆனால் இந்த வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி ஜான் கிரியான் தனது பணியாளர்களுக்கு எழுதிய கடிதத்தில் இது ஒரு பிரச்சினையே இல்லை. பல வருடங்களாக செயல்பட்டு வரும் இந்த வங்கி இந்த பிரச்சினையை எளிதாக சமாளித்துவிடும். இந்த செய்திகளால் வங்கி பங்குகளில் ஊக வர்த்தகம் நடந்துவருகிறது. இந்த நெருக்கடியை வங்கி எளிதாக சமாளிக்கும் என்பது போல தனது பணியாளர்களுக்கு கடிதம் எழுதி இருக்கிறார். தவிர இந்த பிரச்சினையை வங்கியே சமாளித்துக்கொள்ளும் ஜெர்மனி அரசாங்கத்தின் உதவி தேவையில்லை என்று கூறியுள்ளார்.

அபராதம் குறைப்பா?

இந்த நிலையில் நீதித்துறையிடம் பேச்சு வார்த்தை நடத்தி அபராதத்தை 540 கோடி டாலராக குறைக்கப்பட்டதாக செய்திகள் வெளியாயின. அதனைத் தொடர்ந்து, சரிந்த டாயிஷ் வங்கி பங்குகள் 15 சதவீதம் அளவுக்கு உயர்ந்தன. ஆனால் அபராதம் குறைப்பு பற்றி முழுமையான அறிவிப்பு வெளியாகவில்லை. ஆனால் இதுபோல பல வங்கிகள் நீதித்துறையிடம் பேச்சு வார்த்தை நடத்தி அபராதத்தை குறைத்த வரலாறுகள் உள்ளன. பேங்க் ஆப் மெரில் லிஞ்ச் அனலிஸ்ட் ஒருவர் கூறும்போது, பொதுவாக அமெரிக்க நீதித்துறை மிக அதிகமாக அபராதம் விதிப்பதாக கூறும், பேச்சு வார்த்தைக்கு பிறகு அபராதம் குறைவதற்கான சாத்தியம் அதிகம். டாயிஷ் வங்கி பிரச்சினையிலும் இது சாத்தியமே என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜேபி மார்கன் தனது அறிக்கையில் கூறும்போது அபராதத்தின் அளவு 400 கோடி டாலர் வரை இருக்கும் பட்சத்தில் பிரச்சினை ஏதும் இல்லை. அந்த வங்கியே சமாளித்துக்கொள்ளும் என தெரிவித்துள்ளது.

கத்தார் முதலீட்டாளர்கள்

கத்தாரை சேர்ந்த முதலீட்டாளர்கள் சிலர் டாயிஷ் வங்கியில் 10 சதவீத பங்குகளை வைத்திருக்கிறார்கள். தற்போது பங்குகள் மிகவும் குறைந்த விலையில் வர்த்தகமாகி வருகிறது. முதலீடு செய்வதற்கு ஏற்ப மதிப்பீடுகள் இருப்பதால் மேலும் முதலீடு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் காரணமாக அந்த பங்குகள் சிறிதளவு உயர்ந்தன. இந்த வங்கியில் 25 சதவீதம் அளவுக்கு பங்குகளை வாங்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

இந்திய வங்கிகளுக்கு பாதிப்பா?

உலகம் சுருங்கி வரும் சூழ்நிலையில் பிரச்சினை ஒரு இடத்தில் இருந்தாலும் அதன் பாதிப்புகள் பல இடங்களுக்கு விரிவடைந்து வருகின்றன. இந்த பிரச்சினையால் இந்திய வங்கிகள் பாதிப்படையுமா என்பது குறித்து பங்குச்சந்தை வல்லுநர் ஏ.கே.பிரபாகரிடம் கேட்டபோது, டாயிஷ் வங்கி திவால் ஆவதற்கான வாய்ப்புகள் குறைவு. ஒருவேளை அப்படி ஒரு அசம்பாவிதம் நடந்தாலும் இந்திய வங்கிகளுக்கு பெரிய பாதிப்பு ஏற்படாது. இதற்கு ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளும் காரணம். இந்திய வங்கிகள் டெபாசிட் வாங்கி, கடன் கொடுக்கின்றன, ஆனால் வெளிநாட்டு வங்கிகள் சிக்கலான டெரிவேட்டிவ் உள்ளிட்ட புராடக்ட்களில் கவனம் செலுத்துகின்றன. இதன் காரணமாகவே அந்த வங்கிகளுக்கு நெருக்கடி ஏற்படுகிறது. மேலும் இந்திய வங்கிகள் வெளிநாடுகளில் பெரிய அளவில் விரிவாக்கம் செய்யவில்லை.

இந்திய வங்கிகளுக்கு பிரச்சினை இல்லை என்றாலும், ஒரு வேளை அசம்பாவிதம் ஏற்பட்டால் இந்தியாவில் கரன்ஸி சந்தையில் ஏற்ற இறக்கமான சூழல் உருவாகும். இந்தியாவில் இருந்து அந்நிய முதலீடுகள் வெளியேறும். அதன் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் சரிவதற்காக வாய்ப்புகள் உருவாகும். இந்திய பங்குச்சந்தையின் மதிப்பீடுகள் அதிகமாக இருக்கும் சூழ்நிலையில் ஒரு சிறு கெட்ட செய்தி கூட சரிவுக்கு காரணமாக இருக்கலாம் என்றார்.

டாயிஷ் வங்கிக்கு அமெரிக்கா அபராதத்தை குறைவாக கூட விதிக்கலாம். இந்த இடத்தில் சர்வதேச செலாவணி நிதியம் கூறியிருப்பது முக்கியமானது. வட்டி விகிதம் குறைவாக இருக்கும் சூழலில் வங்கிகள் தங்களுடைய பிஸினஸ் மாடலை மாற்றி அமைத்து முதலீட்டாளர்களின் நம்பிக்கை பெறவேண்டும் என கூறி இருக்கிறது.

பிஸினஸ் மாடலை மாற்றாவிட்டால் எட்டு வருடங்களுக்கு ஒரு முறை இது போல நெருக் கடியை சர்வதேச வங்கிகள் சந்திக்க நேரிடலாம். 2008-ல் லேமன் பிரதர்ஸ் சிக்கலில் சிதறுண்டது. இப்போது 8 ஆண்டுகளாகிறது.

இந்த முறை டாயிஷ் வங்கி சிக்குமா? தப்பிக்குமா? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

http://tamil.thehindu.com/business/business-supplement/வீழ்ச்சியின்-விளிம்பில்-டாயிஷ்-வங்கி/article9206658.ece?widget-art=four-all

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.