Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சட்டமும் அரசும் சிங்களவர்களுக்கே! - பரராசா முதல் கஜன் - சுலக்சன் வரை - தயாளன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சட்டமும் அரசும் சிங்களவர்களுக்கே! - பரராசா முதல் கஜன் - சுலக்சன் வரை - தயாளன்

சட்டமும் அரசும் சிங்களவர்களுக்கே! - பரராசா முதல் கஜன் - சுலக்சன் வரை
 

 

எதைச் செய்தாலும் எங்களைக் காப்பாற்ற அரசு இருக்கிறது. சிங்கள மக்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை சிறிலங்கா பொலிஸ் மற்றும் முப்படையினருக்கும் இருக்கிறது. இதனை மீண்டுமொரு முறை நிரூபித்துள்ளது யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கஜன் மற்றும் சுலக்சனின் படுகொலைச் சம்பவம். சட்டமும் அரசும் சிங்களவர்களுக்கே தவிர ஏனையோருக்கல்ல என்பது 1970 களில் நிகழ்ந்த பரராசாவின் படுகொலை முதற்கொண்டு தெளிவாகிறது. நாவற்குழியைச் சேர்ந்த பரராசா என்ற இளைஞன் கடமை முடிந்து யாழ்.செம்மணி வீதி வழியாக வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். செம்மணிச் சுடலையருகே சைக்கிளில் வந்து கொண்டிருந்த அவரை சும்மா ஜாலியாகச் சுட்டுப் பார்த்தனர் பொலிஸார். எந்தவிதமான ஆத்திரமூட்டும் சம்பவமோ வேறெந்த அசம்பாவிதமோ இல்லாமல் தமது குறிபார்க்கும் திறனைப் பரிசோதிப்பதற்காகவே சுட்டனர் அவர்கள். பரராசாவின் ஆயுள் முடிந்தது.

யாழ்.நீதிமன்றில் இப்படுகொலை தொடர்பான வழக்கு நடந்து கொண்டிருந்தது. அக்காலத்தில் தொலைநகல் போன்ற வசதிகள் இருக்கவில்லை. ஒரு தமிழனின் உயிருக்காக தனது பொலிஸார் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுவதை அப்போதைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா விரும்பவில்லை. அதனால் சட்டமா அதிபர் திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவரை விமான மூலம் பலாலி விமான நிலையத்துக்கு அனுப்பி வைத்தார். வழக்கு நடந்து கொண்டிருக்கும் வேளை சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவுறுத்தல் நீதிபதியிடம் கையளிக்கப்பட்டது. இந்த வழக்கை கைவிடுமாறு அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்கமைய நடந்து கொண்டார் நீதிபதி. கொலைகாரப் பொலிஸ் விடுதலையானார். அவரை அவரது சகாக்கள் தமது தோளில் சுமந்துகொண்டு நீதிமன்ற வளாகத்தைச் சுற்றிவர கோஷமிட்டவாறு ஊர்வலமாகச் சென்றனர். சிங்களவர் தொடர்பான விடயங்களில் நீதியை எதிர்பார்த்து இங்கே வராதீர் என்று உணர்த்தியது சிறிலங்கா சட்டமா அதிபர் திணைக்களம். அன்று நீதி சரியாக நிலைநாட்டப்பட்டிருந்தால் இன்று தமிழர் என்ற காரணத்தால் கண்டபடி சுடலாம் என்ற நம்பிக்கை வந்திருக்காது.

1974 தமிழராய்ச்சி மாநாட்டில் 9 தமிழர்களின் படுகொலைக்கு காரணமான உதவிப் பொலிஸ் அத்தியட்சர் S.A.சந்திரசேகராவுக்கு பொலிஸ் அத்தியட்சர் என்ற பதவி உயர்வு கிடைத்தது. இதுவும் சிறிமா காட்டிய வழிதான். இந்த ஊக்குவிப்புகள் தான் எதிர்க்கட்சித் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தைக் கைநீட்டி அடிக்கும் தைரியத்தை பண்டார எனும் பொலிஸ் கான்ஸ்ரபிளுக்குக் கொடுத்தது. ஒரு சிங்களவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தால் அவருக்கு கைநீட்டும் துணிச்சல் எந்தக் கான்ஸ்டபிளுக்கும் வந்திருக்குமா?

அண்மையில் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி குசல சரோஜினி வீரவர்த்தனா ஒரு தீர்ப்பை வழங்கியிருந்தார். புலிச் சந்தேகநபர் ஒருவரைச் சுட்டுக் கொன்றதாக ஒரு வழக்கு. இராணுவ மேஜர் விக்கிரமகே குற்றவாளியாக இனங்காணப்பட்டிருந்தார். கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தினருக்கு 20 லட்ச ரூபா நஷ்டஈடு வழங்க வேண்டும். 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரு ஆண்டுகள் சிறைத்தண்டனை. 10 ஆயிரம் ரூபாய் அபராதம், இதுவே தீர்ப்பு. இந்த 20 இலட்ச ரூபாவையும் மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான எதிரணியினர் இனப்பற்றுமிக்க தூய சிங்களவரிடம் திரட்டினர். உயிரிழந்தவரின் தந்தைக்கும் மனைவிக்கும் தலா 10 இலட்சம் வழங்கப்பட்டது. இன்று மேஜர் சுதந்திர மனிதர். நாங்கள் இருக்கிறோம் நீங்கள் பயப்படாமல் எதையும் செய்யுங்கள் என்று பொலிஸ் மற்றும் முப்படையினருக்கு சிங்களவர் சார்பில் கூட்டு எதிரணி சொல்லிய அழுத்தமான செய்தி இது.

மைலந்தனை என்பது மட்டக்களப்பின் எல்லைக் கிராமம். இங்கே புகுந்த சிறிலங்கா இராணுவத்தினர் பல தமிழர்களைச் சுட்டுக்கொன்றனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தான் சாட்சிகள். தர்மப்படி பாதிக்கப்பட்டவர்கள் எங்கே இருக்கிறார்களோ அங்கே தான் வழக்கு. அடையாள அணிவகுப்பு நடத்தப்பட வேண்டும். ஆனால் எதிரிகளின் பாதுகாப்பைக் கருதி வழக்கு கொழும்புக்கு மாற்றப்பட்டது. சாட்சிகள் அடையாள அணிவகுப்புக்கும் விசாரணைக்குமென கொழும்புக்கு அலைக்கழிக்கப்பட்டனர். சுமார் ஒரு தசாப்த காலம் நடந்த இந்த வழக்கில் சுத்தமான சூசைப்பிள்ளைகள் எதிரிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் கொழும்பு பார்த்தது தான் கண்ட பலன்.

பண்டாரவளையில் உள்ள பிந்துனுவெல என்னுமிடத்தில் புனர்வாழ்வு முகாம் என்ற பெயரில் தமிழ் இளைஞர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் அங்கிருப்பதை கிராமவாசிகள் விரும்பவில்லையாம். அதனால் முகாமிற்குள் புகுந்து வெட்டியும் எரித்தும் கொன்றனராம். காவலுக்கிருந்த பொலிஸார் அந்த நேரம் பிரித் ஓதிக் கொண்டிருந்தனர் போல இருக்கிறது. இன்று தமிழ் மாணவர்களைக் கொல்லத் துடித்த துப்பாக்கிகள் அன்று எதிரே இருப்பவர்கள் சிங்களவர்கள் என்பதால் மௌனித்துப் போயிருந்தன. பல வருடங்கள் வழக்கு தீர்ப்பு என்று வந்து இறுதியில் மேல் முறையீட்டில் அந்தக் கொலைகாரர்கள் விடுவிக்கப்பட்டனர்.

சிறுப்பிட்டியில் இரு இளைஞர்கள் படையினரால் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் செய்யப்பட்டனர். பின்னர் இவர்களது உடல் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இச் சம்பவம் தொடர்பாக 16 இராணுவத்தினர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் நீதவான் நீதிமன்றில் பிணையில் விடுவிக்கப்பட்டனர். கொலைச் சம்பவம் தொடர்பாக கைதானோருக்கு பிணை வழங்கும் அதிகாரம் நீதவான் நீதிமன்றிற்கே இல்லாத போதும் 1998 பெப்ரவரியில் இவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர். படையினர் தொடர்பான வழக்குகளை சட்டம் எந்த வரம்பையும் மீறி செயற்படும் என்பதற்கு இச் சம்பவம் உதாரணமாகும்.

கிளிநொச்சி ரயில் நிலையத்தில் ஒரு சிப்பாய் கண்டபடி சுட்டதில் பல தமிழர் கொல்லப்பட்டனர். மனநிலை குழம்பிய ஒரு படைவீரர் இதனைச் செய்ததாக 'லங்கா புவத்' தெரிவித்தது. நீதியும் இல்லை, விசாரணையும் இல்லை. அநுராதபுரம் இராணுவ முகாமுக்கு பாதுகாப்புத் தேடி ஓடிய தமிழர்கள் ஒரு சிப்பாயால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் அரச ஊழியர்கள். வழக்கும் இல்லை விசாரணையும் இல்லை. இப்படியே சம்பவங்களை பட்டியலிட்டு எண்ணத் தொடங்கினால் பலரிடம் விரல்களை இரவலாகப் பெற வேண்டியிருக்கும்.

சட்டமும் அரசும் சிங்களவர்களுக்கே! - பரராசா முதல் கஜன் - சுலக்சன் வரை

இன்று நாட்டைக் காத்த படைவீரர்களுக்கு கௌரவ குறைச்சலை ஏற்படுத்தும் செயல் என பல்கலைக்கழக மாணவர் கொலையில் சம்பந்தப்பட்ட பொலிஸாரை கைது செய்ததை கண்டிக்கிறார் முன்னாள் அடாவடி அமைச்சர் மேர்வின் சில்வா.

பல்கலைக்கழக மாணவர்களின் கொலைக்காக பொலிஸார் தண்டிக்கப்பட வேண்டியவர்களல்ல என முன்னாள் அடாவடி அமைச்சர் மேர்வின் சில்வா கூறுகிறார். சமுர்த்தி உத்தியோகத்தரான முஸ்லிம் ஒருவர் தன்னைத் தானே மரத்துடன் சேர்த்துக் கட்டிக் கொண்டார் என்று விளக்கமளித்தவரல்லவா இவர். கோழிகள் ஆடுகள் கொல்லப்பட வேண்டியவையல்ல என்று முன்னேஸ்வரத்திலுள்ள காளி கோயிலுள் புகுந்து வேள்விக்காக வைக்கப்பட்டிருந்த மிருகங்களை காப்பாற்றிக் கொண்டு சென்றவர்கள், அவற்றை பொலிஸ் நிலையத்திலோ வேறெங்குமோ ஒப்படைக்கவில்லை. கொல்லாமல் மேர்வின் சில்வாவினதும் அவரது அடியாட்களின் வயிற்றுக்குள்ளும் அவை எப்படிப் போயின என்பது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். ஒரு பௌத்த விகாரைக்குள் சென்று அங்கு பிக்குகளாக சிறுவர்களை இணைத்து வைத்திருப்பது மிகப்பெரிய சிறுவர் துஷ்பிரயோகம் என்று எவராலும் மீட்டுச் செல்ல முடியுமா? பிக்குகளாக்கப்பட்ட சிறுவர்களை மீட்க முடியாத உலகம் சிறுவர் துஷ்பிரயோகம் எனப் பல தரப்பினரையும் குற்றஞ்சாட்டியது விநோதம் தான்.

மகிந்த ராஜபக்ஷ, பாதுகாப்பு செயலர் கருணாசேன ஹெட்டியாராய்ச்சி போன்றோர் இது சாதாரண விடயம் என நியாயப்படுத்துகின்றனர். மாணவர்களின் படுகொலைகளை இரவு நேரத்தில் மழைக் கவசத்துடன் நிற்பவரை யார் என்று இனம் காணுவது சிரமமானது என்ற விடயம் இவர்களுக்குப் புரியாததல்லவா. நிற்காமல் சென்றால் சுடுவோம் என்றால் பொலிஸாருக்கு வாகனங்கள் ஏன், துவிச்சக்கரவண்டியிலேயே செல்லலாமே. மேலும் வானத்தை நோக்கியே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக அமைச்சர் சாகல ரத்னநாயக்க விளக்கம் அளிக்கிறார். அப்படியானால் வானத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்தும் வல்லமை யாழ்.பல்கலைகக்கழக மாணவர்களுக்கு உண்டு என சொல்கிறாரா.

புத்திர சோகத்தையோ குடும்பத்தில் ஒருவரை அநியாயமாக இழந்ததையோ அனுபவித்தறியாத இவர்களுக்கு இதெல்லாம் சாதாரண விடயங்களே. பக்கச் சார்பற்ற விசாரணை என்று ஜனாதிபதியும் புனர்வாழ்வு அமைச்சரும் கூறுகின்றனர். அப்படியானால் இலங்கையில் பக்கச்சார்பான விசாரணையும் நடக்கிறது தான் என்று ஒப்புக் கொள்கிறார்களா? படையினர் இறுதி யுத்தத்தில் குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை எனக் காட்டவே பன்னாட்டு விசாரணையையோ கலப்பு நீதிமன்றத்தையோ நிராகரிக்கும் இவர்களிடமிருந்து பெரிதாக என்ன நீதி கிடைத்துவிடப்போகிறது.

உள்நாட்டில் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் சிறிலங்காவின் நீதி பிரசித்தமானது. சேபால எக்கநாயக்கா என்ற சிங்களவர் இத்தாலிய பெண்ணொருவருடன் வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகன் இருந்தார். சேபாலாவின் போக்குப் பிடிக்காத அவரது மனைவி பிரிந்து இத்தாலியில் வாழ்ந்து வந்தார். ஒரு நாள் இலங்கைக்கு வந்து கொண்டிருந்த விமானமொன்றில் பயணம் செய்து கொண்டிருந்தார் சேபால. திடீரென தனது சட்டையின் சில பகுதிகளைப் பிரித்துக் காட்டினார் அவர். சில வயர்கள் தொங்கிக் கொண்டிருந்தன. தான் விமானத்தை வெடிவைத்துத் தகர்க்கப் போவதாகவும் இந்த அசம்பாவிதத்தைத் தவிர்க்க வேண்டுமாயின் இத்தாலியில் உள்ள தனது மனைவியையும் மகனையும் தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டுமெனவும் பணயத் தொகையாக ஒரு குறிப்பிட்ட தொகையையும் அறிவித்தார். விமானத்தை கட்டுநாயக்காவில் இறக்க வேண்டுமெனவும் தனது நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறின் எவரையும் விமானத்தை விட்டு இறங்க அனுமதிக்கப் போவதில்லை எனவும் குறிப்பிட்டார். இந்த செய்தி உலகெங்கும் பரவியது. அசம்பாவிதத்தைத் தவிர்க்க சேபாலாவின் மனைவியும் மகனும் வரவழைக்கப்பட்டனர். அவரது கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.

இதேவேளை கட்டுநாயக்காவில் திரண்ட தூய சிங்களவர்கள் 'ஜெயவேவா' என்று முழங்கி அவரை வரவேற்றனர். பணயத் தொகையாக சேபால பெற்ற பணத்தைப் பாதுகாக்க பொலிஸார் நியமிக்கப்பட்டனர். இச்சம்பவம் உலகத்திலுள்ள விமானிகள் எல்லோருக்கும் சினத்தை வரவழைத்தது. அவர்கள் தமது கண்டனத்தை வெளியிட்டனர். இந்நிலையில் ஒப்புக்காக அவரைச் சிறையில் அடைத்தது அரசு. மனைவி இத்தாலி திரும்பிவிட்டார். இந்த சேபால தான் 1983 ஜீலையில் வெலிக்கடைச் சிறையில் கொல்லப்பட்ட குட்டிமணியின் கண்களைத் தோண்டியவர். இந்தக் கண்களால் தானே தமிழீழத்தைப் பார்க்க வேண்டுமெனக் கூறினாய் என்று வினாவியபடி கண்களை வெலிக்கடை மண்ணில் புரட்டியவர். (இந்த சேபாலவின் மகன் சில வருடங்களுக்கு முன் தனது தந்தையைப் பார்த்துவிட்டுச் சென்றார்)

இந்திய-இலங்கை உடன்பாட்டைச் செய்ய நிர்ப்பந்தித்தமைக்காக கடற்படைச் சிப்பாயான அஜித் விஜேமுனி தனது துப்பாக்கியின் அடிப் பாகத்தால் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியை அடித்தார். அவரையும் ஒரு கட்சித் தலைவராக ஏற்றுக் கொண்டுள்ளனர் சிங்களவர்கள்.

வரலாறு எமக்கு பல பாடங்களைப் படிப்பித்துள்ளது. இன்னமும் நல்லாட்சி அரசின் செயற்பாடுகள் குறித்து தமிழ்த் தலைமைகள் போதுமான எதிர்ப்பை வெளியிடவில்லை. யார் என்ன சொன்னாலும் அவர்கள் காதில் விழப்போவதில்லை. அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக சந்திக்கச் சென்றவர்களிடம் 'திறப்பு என்னிடமில்லை' என்று பதில் சொன்ன தலைமைகள் தமிழர்களுக்கு எதைக் கொண்டு வரப்போகின்றன? அடுத்த தேர்தலிலும் உங்கள் வாக்கு என்னும் திறப்பைத் தந்து எம்மைப் பாராளுமன்றம் அனுப்புங்கள். 30 வருடமாகப் போராடி எதையும் கிழிக்காதவர்கள் அரசியல் கைதிகளாக இருந்துவிட்டுப் போகட்டுமே. நாங்கள் மேலும் கிழிக்க இன்னுமொரு சந்தர்ப்பம் தாருங்கள் என்று உணர்வுபூர்வமான போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவார்கள். நாமும் தமிழ்த் தேசியத்தின் பெயரால் அவர்களுக்கு வாக்களிப்போம்.

 

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=2&contentid=3dc13fb1-3798-4686-9587-6dbc3b6c2d45

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.