Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறந்த மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்

Featured Replies

திருடன் – ஜினிசிரோ தனிஜகியின் ஜப்பானிய சிறுகதை

 

ஜப்பானியச் சிறுகதை

மூலம் : ஜினிசிரோ தனிஜகி

ஆங்கிலம்: ஹோவர்ட் ஹிப்பெட்

தமிழில் : தி. இரா. மீனா  

 

220px-Tanizaki_Junichiro.jpg

ஜப்பானிய எழுத்தாளர் ஜினிசிரோ தனிஜகி [ 1886 –  1965 ] நவீன எழுத்தாளர் வரிசையில் அடங்குபவர். சிறுகதை, கட்டுரை, நாடகம், நாவல் என்று பல்வடிவ படைப்பாளி வரிசையில் ஒருவர். புகழ் பெற்ற ஜப்பானிய நாவலாசிரியர் சோசகிக்குப் பின் அம்மொழியின் சிறந்த நாவலாசிரியர் என்ற போற்றுதலுக்கு உரியவர். 20-ம் நூற்றாண்டில் மாறிவரும் ஜப்பானிய சமூகவாழ்வின் போக்கைத் தன் படைப்புகளில் வெளிப்படுத்தியவர். சிறந்த சமகால எழுத்தாளர் என்று பாராட்டப்படும் இவர் ஜப்பானிய அரசின் ’அஸகி’ விருது பெற்றவர்.

 

திருடன் 

பல வருடங்களுக்கு முன்னால், டோக்யோ இம்பீரியல் பலகலைக்கழகத்தில் சேருவதற்காக நான் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த பள்ளி அது.

நானும் அறைக்கூட்டாளிகளும் ‘மெழுகுவர்த்தி படிப்பு’ என்கிற பெயரில் அதிக நேரம் செலவழிப்போம் (அதில் படிப்பது மிகக்குறைவாகத்தான் இருக்கும்). ஒரு நாள் இரவு, விளக்குகள் அணைந்து வெகு நேரத்திற்குப் பிறகும் நாங்கள் நால்வரும் மெழுவர்த்தியைச் சுற்றி உட்கார்ந்து கொண்டு பேசியபடி இருந்தோம்.

அந்த நாட்களில் மிகவும் குழப்பத்திற்கு உரியதாக இருந்த காதலைப் பற்றி நாங்கள் வெகு தீவிரமாக பேசிக் கொண்டிருந்தோம் என்று நினைக்கிறேன். சிறிது நேரத்திற்குப் பிறகு அது குற்றம் பற்றிய உரையாடலாக மாறி விட்டது. ஏமாற்றுதல், திருட்டு, கொலை என்று பேச்சு வேறு திசையில் திரும்பியது.

“கொலைக் குற்றத்தைத்தான் நாம் மற்ற  குற்றங்களைவிட அதிகமாகச் செய்கிறோம்,” என்று ஹிகுச்சி சொன்னான். அவன் ஒரு  பேராசிரியரின் மகன். ”நான் ஒரு காலத்திலும் திருட மாட்டேன். என்னால் அதைச் செய்ய முடியாது. யாரிடம் வேண்டுமானாலும் என்னால் நண்பனாகப் பழக முடியும். ஆனால் திருடன் என்பது வித்தியாசமான ஓர் இனம்,” சொல்லும்போது அவனுடைய அழகான முகத்தில் ஒருவிதக் கருமை படர்ந்தது. அவனுடைய முகத்தின் சுருக்கம் வெறுப்பைக் காட்டியது.

“இப்போதைய நாட்களில் நம் அறைகளில் திருட்டு அதிகம் நடப்பதாக நான் கேள்விப்படுகிறேன். அப்படியா?” என்று ஹிராட்டா எங்களுடைய அறைக் கூட்டாளியான நகுமாராவிடம் கேட்டான்.

“ஆமாம். அதைச் செய்வது மாணவர்களில் ஒருவன்தான் என்று சொல்கிறார்கள்”

“எப்படி அவர்களுக்குத் தெரியும்?” நான் கேட்டேன்.

“உம்… அது பற்றி எனக்கு எல்லா விவரமும் தெரியாது — அடிக்கடி நடப்பதால் உள் வேலையாகத்தான் இருக்க வேண்டும்,” நகுமாரா ரகசிய குரலில் சொல்லி நிறுத்தினான்.

“அது மட்டுமில்லை. வடக்கு அறைப் பகுதியில் ஒரு மாணவன் தன் அறைக்குள் போனபோது உள்ளிருந்து யாரோ அறையின் கதவைத் தள்ளிக் கொண்டு வெளியே வந்தார்களாம். மாணவனை  அறைந்து விட்டு  கீழே ஓடி விட்டானாம். அவனை விரட்டிக்கொண்டு ஓடியபோது இருட்டில் அவன் ஓடிய இடம் தெரியவில்லையாம். அவன் தன் அறைக்குத் திரும்பியபோது அவனுடைய பெட்டி திறந்து கிடந்ததாம். புத்தக அலமாரி குலைந்து இருந்ததாம். இது திருடன் வந்து போனதைக் காட்டுகிறது,” என்று ஹிகுச்சி விளக்கினான்.

“அவன் முகத்தைப் பார்க்க முடிந்ததா?”

“இல்லை. இவை எல்லாம் மிக வேகமாக நடந்து விட்டன. ஆனால் அவன் உடை அணிந்து இருந்த விதம் நம்மில் ஒருவர் போல இருந்ததாம். அவன் ஓடியபோது கோட்டை வைத்து தலையை மறைத்துக் கொண்டு ஓடி விட்டானாம். ஒரு விஷயம் நிச்சயமாகத் தெரிந்தது. அவன் கோட்டில் விஸ்திரியா பூக்கொண்டை இருந்ததாம்.”

“விஸ்திரியா பூவின் கொண்டையா? அதை வைத்துக் கொண்டு  எதையும் உறுதியாக நிரூபிக்க  முடியாது,” ஹிராட்டா சொன்னான். அவன் ஒரு நிமிடம் என்னைச் சந்தேகத்தோடு பார்த்ததாக நினைத்தேன். அது என்னுடைய கற்பனையாகத்தான் இருக்க வேண்டும். என் குடும்ப உடையின் அடையாளம் விஸ்திரியா பூக்கொண்டை என்பதால் என் முகம் அந்த நேரத்தில் வறட்சியானதாக உணர்ந்தேன். ஏனோ அந்த இரவில் நான் அந்த கோட் அணிந்திருக்கவில்லை.

“அவன் நம்மில் ஒருவனாக இருந்தால் கண்டுபிடிப்பது சுலபம் இல்லை. நம்மிடையே ஒரு திருடன் இருக்கிறான் என்பதை யாரும் நம்ப மாட்டார்கள்,” அந்த நேரத்தில் நான் பலவீனமாக உணர்ந்ததால் எனது சங்கடத்தை மறைத்துக் கொள்ள முயன்றேன்.

“இல்லை. அவனை இன்னும் ஓரிரு நாட்களில் கண்டுபிடித்து விடுவார்கள்” ஹிகுச்சி திடமாகச் சொன்னான். அவன் கண்கள் மின்னின. ”நான் சொல்வது ரகசியமாக இருக்கட்டும். டிரஸ்ஸிங் அறையில்தான் அவன் பெரும்பாலும் திருடுகிறான் என்று சோதனை செய்த காவல் குழுவினர் சொல்கின்றனர். ஒரு ஓட்டை வழியாக அவர்கள் நடப்பதை எல்லாம் கண்காணிக்கின்றனர்.”

“ஓ? யார் இதை உனக்குச் சொன்னது?” நகுமாரா கேட்டான். “குழுவில்  உள்ள ஒருவர்தான். ஆனால் யாரிடமும் இதைச் சொல்லி விடாதீர்கள்”

“உனக்கே இவ்வளவு தெரியும் என்றால், அந்தத் திருடனுக்கும் கண்டிப்பாக அதிகமாகவே தெரிந்திருக்கும்,” ஹிராட்டா வெறுப்பாகப் பார்த்தான்.

ஹிராட்டாவும், நானும் நல்ல உறவு நிலையில் இல்லை என்பதை நான் இங்கு சொல்லியாக வேண்டும். இன்னும் சொல்லப்போனால் நாங்கள் பேருக்குத்தான் ஒன்றாக இருக்கிறோம். எப்போதுமே எங்களை நான் ’நாங்கள் ’  என்றுதான்  சொல்வேன். ஆனால் ஹிராட்டாவுக்கு என்னைப் பிடிக்காது. நான் எல்லோரும் நினைப்பது போல இல்லையாம். என்னை அவனுக்கு நன்றாகத் தெரியும் என்று வெறுப்பாக என்  நண்பன் ஒருவரிடம் அவன் சொன்னானாம். ”எனக்கு அவனைப் பார்க்கவே பிடிக்கவில்லை. அவன் எப்போதும் எனக்கு நண்பனாக முடியாது. அவனுடன் நான் பழகுவது எல்லாம் இரக்கப்பட்டுத்தான்,” என்றும் சொன்னானாம்.

அவன் இதையெல்லாம் பேசியது என் முகத்துக்குப் பின்னால்தான். என்னிடம் எதையும் அவன் நேரடியாகச் சொல்லவில்லை. அவன் என்னை வெறுக்கிறான் என்பது மிக வெளிப்படையானது .எதற்கும் விளக்கம் கேட்பது எனக்கு பழக்கம் அல்ல. ”என்னிடம் குறை இருந்தால் அவன் அதைச் சொல்லி விட வேண்டும். என் குறை என்ன என்பதை அவன் எனக்கு சொல்லவில்லை என்பதோ அல்லது நான் அதற்குத் தகுதியானவன் இல்லை என்றோ அவன் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. அவனை நான் நண்பன் என்று சொல்லிக் கொள்ள மாட்டேன். அவ்வளவுதான்,” என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன். அவன் என்னைப் பற்றிச் சொன்னது என்னைத் தனிமைப்படுத்தினாலும் அதற்காக நான் பெரிதாகக் கவலைப்படவில்லை.

ஹிராட்டா கட்டுமஸ்தான தேகம் உடையவன். அவன் அழகை பள்ளியே பெருமையாக நினைக்கும். நான் மிக ஒல்லியானவன். அடிப்படையாகவே எங்களுக்குள் வேறுபாடுகள் உண்டு. நாங்கள் வெவ்வேறு உலகத்தில் இருப்பவர்கள் என்பதை நான் ஒப்புக் கொள்ள வேண்டும். தவிர ஹிராட்டா ஒரு ஜூடோ கலைஞனும்கூட. ”ஜாக்கிரதை. நொறுக்கி விடுவேன்,” என்று அவன் தசைகளே சொல்வது போல இருக்கும். அவனைப் பற்றி நான் இப்படிச் சொல்வது என் கோழைத்தனம். அவனுடைய கட்டுமஸ்தான தேகம் கண்டு எனக்கு பயம். ஆனால் அதிர்ஷ்டவசமாக எனக்கு அற்பமான பெருமையோ, போலி கௌரவமோ கிடையாது. ”என் மீது எனக்கு நம்பிக்கை இருக்கும்வரை மற்றவனைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. அவனைக் கண்டு வெறுக்கும் அவசியமும் எனக்கு இல்லை,” இந்த மாதிரியான மனநிலைக்கு என்னைத் தயார்ப்படுத்திக் கொண்டதால் ஹிராட்டாவின் கர்வத்தை என்னால் சமாளிக்க முடிந்தது. அதனால்தான், “ஹிராட்டா என்னைப் புரிந்து கொள்ளாவிட்டாலும் எனக்கு வருத்தமில்லை. ஆனால் நான் அவனுடைய நல்ல கருத்துக்களை மதிக்கிறேன்,” என்று அந்தப் பையனிடம் சொல்ல முடிந்தது. நான் அதை நம்பினேன். என்னை பயந்தாங்கொள்ளியாக  நான் நினைத்தது இல்லை. ஹிராட்டாவைப் பாராட்டும் அளவுக்கு எனக்கு நல்ல மனம் இருப்பதாக எனக்கு கர்வமும் ஏற்பட்டது.

“விஸ்திரியா கொண்டை?” என்று கேட்டுவிட்டு அன்று இரவு ஹிராட்டா என்னைப் பார்த்த பார்வை நரம்பைச் சுண்ட வைத்தது. அந்தப் பார்வைக்கு என்ன அர்த்தம்? என் குடும்பத்தின் அடையாளம் விஸ்திரியா என்று அவனுக்குத் தெரியுமா? அல்லது என்னுடைய சிந்தனை அப்படி எல்லாம் என்னை யோசிக்க வைக்கிறதா? ஹிராட்டா என்னைச் சந்தேகப்பட்டால் நான் அந்தச் சூழ்நிலையை எப்படி எதிர்கொள்வேன்? ”அந்தக் கொண்டை   எனக்கும் இருப்பதால்  நான் சந்தேகக் கோட்டிற்குள் வருகிறேன்,” என்று நகைச்சுவை போல இயல்பாக சிரித்துக் கொண்டு சொல்லலாம். மற்றவர்கள் என்னுடன் சேர்ந்து சிரித்தால் சரி. ஆனால் அவர்களில் ஒருவன் ஹிராட்டா என்று வைத்துக் கொள்ளலாம். இன்னும் தீவிரமாகச் சந்தேகப்படத் தொடங்கிவிட்டால்… அப்புறம்? அந்தக் காட்சியை நினைத்துப் பார்த்தால்… ஐயோ! நான் யோசிக்காமல் உணர்ச்சி வசப்பட்டு பேசிவிடக் கூடாது.

இந்த விஷயத்திற்காக இப்படி யோசிப்பது முட்டாள்தனம் என்று தோன்றினாலும் அந்தக் குறுகிய நேரத்தில் மனதில் இப்படித்தான்  சிந்தனைகள்  ஓடின.  ”இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு அப்பாவி   மனிதனுக்கும், உண்மையான திருடனுக்கும் இடையில் இருக்கும் வேறுபாடு என்ன? ”இதையடுத்து ஒரு குற்றவாளியின் கவலையையும் தனிமையையும் நான் அனுபவித்தேன். ஒரு நிமிடம் முன்னால் வரை நான் அவர்களின் நண்பர்களில் ஒருவனாகவும், பள்ளியின் சிறந்த மாணவர்களில் ஒருவனாகவும் இருந்தேன். ஆனால்,இப்போது எனக்குள்ளேயே நான் ஒதுக்கப்பட்டவனாக இருக்கிறேன். இது அபத்தமானது, ஆனாலும் அவர்களை நம்பவைக்க முடியாதது      என் இயலாமையாக இருந்தது. ஹிராட்டாவின் மனநிலை காரணமாக நான் குழம்பி இருந்தேன், அவனுக்குச்  சமமானவனாக  இருந்த போதிலும்.

“திருடன் என்பவன் வேறு இனத்தைச் சேர்ந்தவன்தான்,”என்று ஹிகுச்சி பொதுவாகச் சொல்லி இருக்கலாம். ஆனால் அந்த வார்த்தைகள் என் மனதில் எதிரொலித்து பயமுறுத்தின.

“திருடன் என்பவன் வேறு இனத்தைச் சேர்ந்தவன் …” திருடன் ! எவ்வளவு வெறுக்கத்தக்க ஒரு பெயர்! என்னைப் பொறுத்தவரை இந்தச் சூழ்நிலையில்   ஒரு அப்பாவி மனிதனுக்கும், உண்மையான திருடனுக்கும் இடையில் இருக்கும் வேறுபாடு என்பது  தன் குற்றத்தை எல்லா வகையிலும் மறைக்க முயற்சி செய்வதும், அந்த எண்ணத்தை மனதில் இருந்து வெளியேற்றப் பாடுபடுவதும், யாரிடமும் அதைச் ஒப்புக் கொள்ள முடியாது என்பதும்தான். இப்போது நான் இந்த இருட்டால் மூடப்பட்டிருக்கிறேன். நான் சந்தேகத்திற்கு உரியவன் என்பதை நம்ப மறுத்தேன்; என் நெருங்கிய நண்பர்களிடம்கூட இதை என்னால்  ஒப்புக் கொள்ள முடியாதது குறிந்து வருந்தினேன். ஹிகுச்சி என்னை நம்பியதும், காவலர் குழு சொன்னதை என்னிடம் பகிர்ந்து கொண்டதும்தான் இந்த எண்ணத்திற்குக் காரணம். ”யாரிடமும் போய் இதைச் சொல்லாதே,” என்று அவன் சொன்னபோது சந்தோஷப்பட்டேன். ஆனால் நான் ஏன் சந்தோஷப்பட வேண்டும் என்று நினைத்தேன்? ஹிகுச்சி என்னைச் சந்தேகப்படவேயில்லை என்றாலும் எங்களிடம் அவன் சொன்னதற்காக காரணத்தைப் பற்றி யோசித்தேன்.

ஒழுக்கமான மனிதர்களுக்கும்கூட இந்த குற்ற எண்ணங்கள் வரலாம் என்று எனக்குத் தோன்றியது. ஒரு திருடன் என்ற கற்பனை எனக்கு மட்டும் வந்திருக்க முடியாது என்று நினைத்தேன். மற்றவர்களும் இது போல சங்கடத்தை அனுபவித்து இருக்கலாம். காவலர் ஹிகுச்சியிடம் மட்டும் ரகசியத்தைச் சொன்னதால் அவன் பெருமைக்கு உரியவனாக இருக்கலாம். எங்கள் நான்கு பேரில் அவன் அதிகமாக நம்பப்பட்டவன். ’மற்ற இனங்கள்’ வரிசையில் சேர்க்கப்படாதவன். அவன் நம்பப்படுவதற்குக் காரணம் அவன் பணக்காரக் குடும்பத்தில் இருந்து வந்தவன். புகழ் பெற்ற பேராசிரியரின் மகன். எனவே அவனைப் பார்த்து நான் பொறாமைப்படுவதில் அர்த்தமில்லை. அவனுடைய சமுதாய அந்தஸ்து போலவே அவனுடைய நேர்மையான குணமும் காரணமாக இருக்கலாம். எனது பின்னணி—நான் உதவித் தொகை பெற்றுப் படிக்கும் புத்திசாலி மாணவன், ஒரு ஏழை விவசாயியின் மகன் கலப்படமானவன்.  நான் திருடனாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவன் முன்னால் ஒரு வித பயபக்தியோடு இருந்தாக வேண்டும். நாங்கள் வேறு இனத்தைச் சேர்ந்தவர்கள். அவனுடைய வெளிப்படையான பேச்சு, என் மீது வைத்துள்ள ஆழமான நம்பிக்கை ஆகியவை எங்களிடையே உள்ள இடைவெளியின் ஆழத்தை அதிகப்படுத்தியது. சிரிப்பது, வம்பு பேசுவது,  நகைச்சுவையாகப் பேசுவது என்று எல்லாம் இருப்பதாக நாங்கள் காட்டிக் கொண்டாலும் எங்களிடையே இடைவெளி அதிகமானது. இதற்கு என்னால் எதுவும் செய்ய முடியவில்லை.

அதற்குப் பிறகு ’விஸ்திரிய” கொண்டை உடைய கோட்டை அணிவதா, வேண்டாமா என்ற குழப்பமும் கவலையும் எனக்குள் அதிகரித்தன. நான் அதை அணிந்து கொண்டால் யாரும் கவனிக்காமல் போகலாம். ஆனால் ஒரு வேளை அவர்கள் என்னைப் பார்த்துவிட்டு, ”ஓ !அவன் அதை அணிந்து இருக்கிறான்! ” என்று சொல்லலாம். சிலர் சந்தேகப்படலாம், அல்லது என் மீது உள்ள சந்தேகத்தை மறைத்துக் கொள்ளலாம், அல்லது என்னை பார்த்து பரிதாபப்படலாம். நான் கோட்டை அணியாமல் ஒதுக்கி விட்டால் அது பெரிய தவறாகிவிடும். ஹிராட்டா மற்றும் ஹிகுச்சி மட்டும் இல்லாமல் மற்ற நண்பர்கள் மத்தியிலும் சங்கடத்திற்கு ஆளாவேன். என்னைச் சந்தேகப்படுவது எனக்கு பெரிதாகத் தெரியவில்லை. ஆனால் மற்றவர்களுக்கும் அது துன்பத்தைத் தரும் என்பது கவலை அளித்தது. என்னுடைய நண்பர்களாக இருக்கிறவர்களின் மனதில் சந்தேகத்தை ஏற்படுத்துவது இடைவெளியை அதிகப்படுத்தும். திருட்டு கூட அசிங்கமானதில்லை. ஆனால் அது ஏற்படுத்தும் சந்தேகம் அசிங்கமானது. யாரும் என்னைத் திருடன் என்று நினைக்க மாட்டார்கள்; அது ஊர்ஜிதம் செய்யப்படாத வரை. என்னுடன் எப்போதும் போல பழையபடி பழகி, நெருக்கமாக இருப்பார்கள். என்னை நம்பக் கட்டாயப்படுத்திக் கொள்வார்கள். இல்லாவிட்டால் நட்புக்கு என்ன அர்த்தம்?

திருடனாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் அந்தப் பாவச் செயல்  நண்பனிடம் இருந்து திருடுவதைவிட மோசமானது; நட்பை அழிப்பது; சந்தேக விதையை விதைப்பது; இது திருடுவதைவிடக் கொடுமையானது. மற்றவர்களைப் பற்றி சிறிதும் கவலைப்படாத திருடனாக நான்  இருந்திருந்தால் நட்பு மங்காமல் பார்த்துக் கொண்டிருப்பேன். ரகசியமாக திருடும்போதுகூட வெட்கப்படாமல் இருந்திருப்பேன். ஒரு திருடனின் அபிப்ராயத்தில் இருந்து பார்த்தால் இதுதான் அவன் மனப்போக்கு. ”நான் திருடுவேன் என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை நான் நண்பர்களை மதிப்பேன் என்பதும்,” இதுதான் உண்மைத் திருடனின் மனநிலை. ’அதுதான் வேறு இனத்தவனாகக்’ காட்டுகிறது. இந்த வகையில் நான் யோசிக்கும்போது எனக்கும் என் நண்பர்களுக்கும் இடையிலான வேறுபாடு அதிகமாவதை உணர முடிந்தது. இது எனக்குத் தெரிவதற்கு முன்னாலே நான் முழுத் திருடன் ஆகி விட்டேன்.

ஒரு நாள் என் தைரியத்தைத் திரட்டிக் கொண்டு அந்த கோட்டை அணிந்து கொண்டு பள்ளி மைதானத்துக்குப் போனேன். நகுமாராவைப் பார்த்தேன். பேசிக் கொண்டே நடந்தோம்.

“இன்னும் அந்தத் திருடனைக் கண்டுபிடிக்கவில்லை என்று கேள்விப்பட்டேன்,” என்றேன்.

“ஆமாம்,” அவன் வேறு எங்கோ பார்த்துக்கொண்டு சொன்னான்.

“ஏன்? அவனைக் குளியல் அறையிலேயே அவர்களால் பிடிக்க முடியவில்லையா?”

“அவன் அதற்குப் பிறகு அங்கு வருவதில்லையாம். மற்ற இடங்களில் நிறைய பொருட்கள் காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன. ஹிகுச்சியை கூப்பிட்டு காவலர் கோபித்துக் கொண்டாராம். அவர்களின் திட்டத்தை அவன் வெளிப்படுத்திவிட்டதாக திட்டினார்களாம்”

“ஹிகுச்சி?” என் முகம் வெளிறுவதை என்னால் உணர முடிந்தது.

“ஆமாம்…” அவன் வருத்தமாகச் சொன்னான். கண்ணில் இருந்து ஒரு துளி கண்ணீர் கன்னத்தில் வழிந்தது. ”நீ என்னை மன்னிக்க வேண்டும். நான் உன்னிடம் சொல்லாமல் இதுவரை மறைத்து விட்டேன். ஆனால் நீ இப்போது தெரிந்து கொள்ள வேண்டும். நீ இதை விரும்ப மாட்டாய். காவலர் உன்னைச் சந்தேகிக்கிறார். எனக்கு அதைப் பற்றிப் பேசவே வெட்கமாக இருக்கிறது. நான் ஒரு நிமிடம்கூட உன்னை சந்தேகப்பட்டதில்லை. நான் உன்னை நம்புகிறேன். நான் உன்னை நம்புவதால்தான்  உன்னிடம் சொல்கிறேன். நீ என்னைத் தப்பாக நினைக்க மாட்டாய் என்று நம்புகிறேன்.”

“என்னிடம் சொன்னதற்கு நன்றி. நான் உனக்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்,” கண்ணீரை அடக்கிக் கொண்டேன். ’கடைசியாக வந்தே விட்டது!’ நான் பயந்த மாதிரியே… இந்த நாளைத்தான் நான் எதிர்பார்த்திருந்தேன்.

“உன்னிடம் சொல்லிவிட்டபிறகு சுமை இறங்கியது போல இருக்கிறது. நாம் இதைப் பற்றிப் பேசுவதை இத்தோடு நிறுத்தி விடலாம்,” என்னைச் சமாதானப்படுத்துவது போல நகுமாரா சொன்னான்.

“இதைப் பற்றிப் பேச நமக்குப் பிடிக்கவில்லை என்பதால் நம் மனதில் இருந்து இதை அழித்து விடமுடியாது. என் மீது நீ வைத்திருக்கும் அன்புக்கு நன்றி. இதில் நான் மட்டும் அவமானப்படவில்லை. என் சினேகிதனான உனக்கும் அவமானம். நான் சந்தேகத்திற்கு உரியவனாக இருப்பதே நட்பிற்கு அவமானம்தான். என் மதிப்பை இழந்து விட்டேன் பார். இல்லையா? நீயும் என்னை வெறுத்து விடுவாய்”.

“சத்தியமாக நான் உன்னை வெறுக்க மாட்டேன். எந்த அவமானத்தையும் நீ எனக்குத் தரவில்லை. ஹிகுச்சிக்கும்தான்… காவலர் குழுவிடம் அவன்  உனக்கு ஆதரவாகவே          பேசியதாகச் சொன்னார்கள். உன்னைச் சந்தேகிப்பதற்கு முன்னால் அவன் தன்னையே சந்தேகித்துக் கொள்வேன்  என்றும் சொன்னானாம்,” சிறிது  விழிப்பு அடைந்தவனாக  நகுமாரா பேசினான்.

“ஆனால் அவர்கள் இன்னமும் என்னை சந்தேகிக்கின்றனர். இல்லையா? என் உணர்வுகளை பகிர்ந்து கொள்ள முயற்சி செய்வதில் பலனில்லை. உனக்கு என்னவெல்லாம் தெரியுமோ அதை என்னிடம் சொல்.நான் அப்படியாவது தெரிந்து கொள்கிறேன்”

“காவலருக்கு எல்லாவிதமான குறிப்புகளும் தெரியும். ஹிகுச்சி அன்று இரவு எல்லாவற்றையும் சொல்லிவிட்ட பிறகு எந்தத் திருட்டும் குளியல் அறையில் இல்லையாம். அதனால்    அவர்கள் உன்னைச் சந்தேகப்படுகிறார்கள்.” தயக்கத்தோடு நகுமாரா விளக்கினான்.

“ஆனால் என் ஒருவனிடம் மட்டும் அவன்  அதைச் சொல்லவில்லையே!” நான் இதைச் சொல்லாவிட்டாலும் மனதில் இது உடனடியாக ஓடியது. இது என்னைத் தனிமையானவனாகவும், இழிவானவனாகவும் காட்டியது.

“ஹிகுச்சி நம்மிடம் சொன்னது அவர்களுக்கு எப்படித் தெரியும்? அந்த இரவில் நாம் நால்வரும்தான் இருந்தோம். வேறு யாருக்கும் தெரியாது. நீயும், ஹிகுச்சியும் என்னை நம்பினால்..”

“நீதான் இது பற்றி யோசிக்க வேண்டும். உனக்கு யாரென்று தெரியும். அவன் உன்னைத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறான். ஆனால் அவனைப் பற்றி விமர்சனம் செய்ய நான் விரும்பவில்லை,” நகுமாரா சொல்லி விட்டு இரக்கமாகப் பார்த்தான்.

திடீரென்று எனக்குள் ஒரு நடுக்கம் ஏற்பட்டது. ஹிராட்டாவின் கண்கள் என்னை ஊடுருவது போல உணர்ந்தேன்.

“நீ அவனிடம் என்னைப் பற்றிப் பேசினாயா?”

“ஆமாம்… அது சுலபமானதில்லை என்று உனக்கும் தெரியும். நான் உங்கள் இருவருக்கும் நண்பன். நானும் ஹிகுச்சியும் நேற்று இரவு அவனுடன் நீண்ட நேரம் விவாதித்தோம். அவன் அந்த அறையைக் காலி செய்வதாகச் சொன்னான். ஒரு நண்பனுக்காக இன்னொரு நண்பனை நான் இழக்க வேண்டியதுதான்.”

நான் நகுமாராவின் கையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டேன். ”நீயும், ஹிகுச்சியும் என்னுடைய நண்பர்களாக இருப்பதில் எனக்குப் பெருமை. நான் உங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்,” என் கண்களில் இருந்து நீர் வழிந்தது. நகுமாராவும் அழுதான். வாழ்க்கையில் முதல் முறையாக நான் மனிதர்களின் பரிவு உணர்வை அனுபவித்தேன். தனிமையான நிலையில்  தவித்தபோது நான் தேடியது இதைத்தான். நான் எப்படிப்பட்ட கெட்ட திருடனாக இருந்தாலும் நகுமாராவிடம் இருந்து என்னால் எதையும் திருட முடியாது.

“உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் நான் உனக்கு மிகவும் தொந்தரவு கொடுக்கிறேன். என்னால் உங்கள் இருவருக்கும் இடையே இருக்கும் நட்பு அழிந்து போவதை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அவன்    என்னை நம்பாவிட்டாலும் நான் அவனை மதிக்கிறேன். அவன் என்னை விட எவ்வளவோ உயர்ந்தவன். மற்றவர்களைவிட அவன் நல்ல குணங்களை நான் அறிவேன். வெளியேற வேண்டும் என்றால் ஏன் நான் போகக் கூடாது? தயவு செய்து என்னைப் போக விடுங்கள். நீங்கள் மூன்று பேரும் சேர்ந்து இருங்கள். நான் தனியாக இருந்தாலும் கஷ்டப்பட மாட்டேன்,” என்றேன்.

“நீ போக வேண்டிய அவசியமில்லை. அவனுடைய கருத்து எனக்குப் புரிகிறது. ஆனால் இப்போது நீதான் கஷ்டத்தில் இருப்பவன். அவன் அநியாயமாக  இருக்கும்போது அவனுடன் நான் சேர மாட்டேன். நீ போனால் நாங்களும் போய் விடுவோம். அவன் எவ்வளவு பிடிவாதக்காரன் என்று உனக்குத் தெரியும். ஒரு முறை அவன் முடிவு செய்து விட்டால் அதிலிருந்து மாற மாட்டான். அவன் விருப்பப்படி செய்யட்டும். அவனுக்கு புத்தி வந்து மன்னிப்புக் கேட்கும்வரை நாம் காத்திருப்போம். அதற்கு நீண்ட காலம் ஆகாது.”

“அவன் கண்டிப்பாக வந்து மன்னிப்புக் கேட்க மாட்டான். அவன் என்னை நிரந்தரமாக வெறுத்து விடுவான்”.

.”நான் அப்படி நினைக்கவில்லை. அவன் தன் பேச்சிலிருந்து மாற மாட்டான். அவன் பலமும்,பலவீனமும் அதுதான். தன் எண்ணம் தவறு என்று தெரிந்தால் அவன் மன்னிப்புக் கேட்டு நம்மோடு சேர்ந்து விடுவான். அது அவனிடம் எனக்குப் பிடித்த குணம்”. நான் ஹிராட்டாவிடம் கோபப்படுவதாக நினைத்து நகுமாரா சொன்னான்.

“அப்படி அவன் வந்தால் நல்லது…” நான் பதில் சொன்னேன். ”அவன் உங்களிடம் வரலாம். ஆனால் திரும்பவும் என்னுடன் நட்பு வைத்துக் கொள்வான் என்று நான் நம்பவில்லை… ஆனால் நீ சொல்வது சரி. அவன் அன்புக்கு உரியவன். அவனுக்கு என்னையும் பிடித்திருந்தால்…”

நகுமாரா என் தோள் மீது கை போட்டான். நாங்கள் புல்வெளியில் நடந்து கொண்டிருந்தோம். அது மாலை நேரம். லேசாகப் பள்ளி மைதானத்தில் பனி படர்ந்திருந்த்து. முடிவில்லாத கடலால் சூழப்பட்ட தீவில் இருப்பது போல உணர்ந்தோம். இங்கும் அங்குமாகப் போய்க் கொண்டு இருந்த மாணவர்கள் என்னை ஓரக்கண்ணால் பார்த்தபடி நடந்தனர். அவர்களுக்கும் தெரியும். அதனால் என்னை ஒதுக்குகின்றனர் என்று நினைத்தேன். மிகத் தனியாக உணர்ந்தேன்.

அந்த இரவில் ஹிராட்டா தன் மனநிலையை மாற்றிக் கொண்டான் போலும். அறையைக்          காலி செய்யவில்லை. ஆனால் ஹிகுச்சி, நகுமாராவிடம் கூட அவன் பேசவில்லை. இந்த மாதிரி நேரத்தில் அங்கிருந்து வெளியேறுவது எனக்கு சரியாகத் தெரியவில்லை. என் நண்பர்களின் அன்புக்கு மதிப்பு தர வேண்டும். நான் போனால் அது என்னை இன்னும் அதிக குற்றவாளியாகக் காட்டும். இன்னும் சிறிது காலம் நான் காத்திருக்க வேண்டும்.

“கவலைப்படாதே, திருடனைப் பிடித்து விட்டால் எல்லாம் சரியாகி விடும்,” இரண்டு நண்பர்களும் அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தனர். மேலும் ஒரு வாரம் ஆனது. திருட்டு வழக்கம் போல நடந்து கொண்டிருந்தது. கடைசியில் நகுமாரா, ஹிகுச்சியின்  பணம், சில புத்தகங்கள் ஆகியவையும் திருடு போயின.

“ஓ.. உங்களுடையதும் திருட்டு போயிற்றா?ஆனால் இனி எதுவும் காணாமல் போகாது என்று நான் நினைக்கிறேன்,” என்று ஹிராட்டா கேலியாகச் சொன்னது எனக்கு நினைவில் இருக்கிறது.

இரவு உணவுக்குப் பிறகு எப்போதும் நகுமாராவும், ஹிகுச்சியும் நூலகத்திற்குப் போவார்கள். நானும் ஹிராட்டாவும் மட்டும் அறையில் இருப்போம். எனக்கு இது சங்கடமாக இருக்கும். அதனால் நான் மாலை நேரங்களில் நூலகத்திற்கோ அல்லது நடைப் பயிற்சி செய்யவோ போய் விடுவதுண்டு. ஒரு நாள் இரவு ஒன்பதரை மணி அளவில் நான் எங்கள் அறைக்கு வந்தேன். அதிசயமாக ஹிராட்டா அங்கு இல்லை. மற்றவர்களும் இல்லை. எங்களுடைய படுக்கை அறைக்குப் போய்ப் பார்த்தேன். ஹிராட்டாவின் மேஜை அருகே போனேன். மேஜையைத் திறந்து தேடினேன். சில நாட்களுக்கு முன்னால் அவன் வீட்டில் இருந்து வந்த கவரில் பத்து –யென் மணியார்டர் இருந்தது. அதில் ஒன்றை எடுத்து என் சட்டைப் பையில் போட்டுக் கொண்டு மேஜையை மூடினேன்.  ஹாலுக்கு வந்தேன். டென்னிஸ் மைதானத்தின் குறுக்கே போய் முற்றத்தை அடைந்தேன். வெறுமையாக இருந்த இருட்டுப் பகுதிக்குப் போனேன். நான் திருடும் பொருட்களைப் பத்திரமாகப் புதைத்து வைப்பது அங்குதான். அந்த நேரத்தில் யாரோ ’திருடன்’ என்று கத்தினார்கள். பின்னால் இருந்து பாய்ந்து என்னைக் கீழே தள்ளி தலையில் அடித்தார்கள். அது ஹிராட்டா.

“எல்லோரும் வாருங்கள் ..வாருங்கள் உன் சட்டைப் பையில் என்ன இருக்கிறது, காட்டு!”

“சரி. சரி. நீ கூச்சல் போட வேண்டாம். நான் உன் மணியார்டரைத் திருடி விட்டேன் என்று ஒப்புக் கொள்கிறேன். நீ அதைக் கேட்டால் திருப்பிக் கொடுத்து விடுகிறேன். நீ எங்கு கூட்டிக் கொண்டு போனாலும் வருகிறேன். நாம் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு விட்டோம். இல்லையா? உனக்கு இதைவிட வேறு என்ன வேண்டும்?” நான் அமைதியாக அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டே சொன்னேன்.

ஹிராட்டா ஒரு நிமிடம் தயங்கினான். அடுத்த நிமிடம் என் முகத்தில் தொடர்ந்து          குத்தினான். ஏனோ எனக்கு வலிக்கவில்லை. இவ்வளவு நாட்களாக எனக்குள் இருந்த பாரம் குறைந்தது போல இருந்தது.

“நீ எனக்குப் போட்ட வலையில் நான் சிக்கிக் கொண்ட பிறகு என்னை நீ அடிப்பதால் எந்தப் பலனும் இல்லை. நீ என்னைப் பற்றிய கருத்தில் உறுதியாக இருந்ததால்தான் நான் இந்த தவறைச் செய்தேன். ஏன் இவனிடம் இருந்து திருடக் கூடாது என்று நினைத்தேன். நீ என்னைக் கண்டுபிடித்து விட்டாய். அவ்வளவுதான். பின்னொரு நாள் நாம் இதைப் பற்றி நினைத்து சேர்ந்து சிரிக்கலாம்”

நான் ஹிராட்டாவின் கையை இயல்பாகக் குலுக்கினேன். ஆனால் அவன் என் சட்டைக் காலரைப் பிடித்து எங்கள் அறைக்கு இழுத்துக் கொண்டு போனான். அந்தச் சமயத்தில் மட்டும்தான் அவன் என் கண்களுக்கு கீழானவனாகத் தெரிந்தான்.

“நான் திருடனைப் பிடித்துவிட்டேன். அவன் என்னைப் பிடித்தான் என்று நீங்கள் சொல்ல முடியாது,” என்னை நகுமாரா, ஹிகுச்சியின் முன்னால் கீழே தள்ளினான். இந்த குழப்பத்தைப் பார்த்து அங்கு உள்ள மாணவர்கள் கூடி விட்டனர்.

“ஹிராட்டா சொல்வது சரிதான்,” நான் தரையில் இருந்து எழுந்து நண்பர்களைப் பார்த்துச் சொன்னேன். ”நான் திருடன்தான்,” எப்போதும்  பேசுவது போல பேச முயற்சி செய்தேன். ஆனால் என் முகம் வெளிறி விட்டது.

“நீங்கள் என்னை வெறுக்கலாம். அல்லது என்னைப் பார்த்து வெட்கப்படலாம்… நீங்கள் உண்மையானவர்கள். ஆனால் எளிதில் ஏமாறக் கூடியவர்கள். நான் திரும்பத் திரும்ப உங்களிடம் உண்மையைச் சொன்னேனே? நான் நீங்கள் நினைப்பது போல இல்லை, ஹிராட்டாதான் உண்மையானவன் என்றுகூடச் சொன்னேன். ஆனால் நீங்கள் புரிந்து கொள்ளவில்லை. நீங்கள் ஹிராட்டாவுடன் திரும்ப நட்பு வைத்துக் கொண்டாலும் அவன் என்னோடு பேச மாட்டான் என்றுகூடச் சொன்னேன். ஹிராட்டா எவ்வளவு நல்லவன் என்று மற்றவர்களைவிட எனக்குத் தெரியும் என்றும் சொன்னேன். நான் உங்களிடம் பொய் சொன்னதில்லை அல்லவா? நான் ஏன் உங்களிடம் வந்து இந்த உண்மையைச் சொல்லவில்லை என்று நீங்கள் கேட்கலாம். நான் உங்களை ஏமாற்றியதாக நினைக்கலாம். ஆனால் என்னுடைய நிலையில் இருந்து பாருங்கள். திருடுவதை மட்டும் என்னால் கட்டுப்படுத்த முடியாது. என்னால் உங்களை ஏமாற்ற முடியாது. மன்னியுங்கள், அதனால்தான்  மறைமுகமாகச் சொன்னேன். இதைவிட என்னால் உண்மையாக இருந்திருக்க முடியாது. என் குறிப்புகளைப் புரிந்து கொள்ள முடியாமல் போனது உங்கள் தவறுதான். நான் வக்கிரமானவன் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் நான் உங்களிடம் உண்மையாகவே இருந்திருக்கிறேன். நான் உண்மையானவன் என்றால் ஏன் திருட்டை விட்டு விடக்கூடாது என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் அது சரியான கேள்வியில்லை. நான் திருடனாகவே பிறந்தவன். சில சந்தர்ப்பங்களில் நான் உங்களிடம் என்னால்  முடிந்தவரை உண்மையானவனாக இருந்திருக்கிறேன். அதைத் தவிர வேறு எதுவும் என்னால் செய்ய முடியாது.ம னசாட்சி என்னை வருத்தியதால் ஹிராட்டா அறையை விட்டு வெளியேற வேண்டாம், நான் போகிறேன் என்று உங்களிடம் சொல்லவில்லையா? நான் உங்களை முட்டாளாக்கவில்லை. எல்லாவற்றையும் நான் உங்கள் நலத்திற்காகத்தான் செய்ய விரும்பினேன். நான் உங்களிடம் இருந்து திருடியது உண்மைதான், ஆனால் நான் உங்கள் சினேகிதன் என்பதும் உண்மைதான். எனக்கு உங்கள் நட்பு வேண்டும். திருடனுக்கும் உணர்வு உண்டு என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.”

நகுமாராவும் ஹிகுச்சியும் அமைதியாக நின்றனர். ஆச்சர்யமாகப் பார்த்தனர்.
“என்ன தைரியம் இவனுக்கு என்று நீங்கள் நினைக்கலாம். உங்களுக்கு என்னைப் புரியாது. நீங்கள் வேறு இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் புரியாது,” நான் என் கசப்பை அடக்கிக் கொள்ளப் பார்த்தேன். ”நான் உங்கள் சினேகிதன் என்பதால் எச்சரிக்கவும் செய்கிறேன். கடைசி முறையாக இப்படி நடக்கிறது என்று நினைக்காதீர்கள். நீங்கள்தான் உங்களுக்குப் பாதுகாப்பு. இருவரும் சுலபமாக ஏமாறக்கூடிய குணத்தால் ஒரு திருடனோடு சினேகிதம் கொண்டீர்கள். படிப்பில் உங்களுக்கு அதிக மார்க்குகள்  கிடைக்கலாம். வளர்ந்து பெரியவர்களாகி வாழ்க்கைக்குள் போகும்போது உங்களுக்குப் பிரச்னைகள் வரலாம்… ஆனால் ஹிராட்டா உங்களைவிட கெட்டிக்காரன். அவனை முட்டாளாக்க முடியாது!”

நான் ஹிராட்டாவைப் புகழ்ந்தபோது அவன் முகம் இறுக்கமாக  இருந்தது. வேறு எங்கோ பார்த்தபடி இருந்தான்.

அதற்குப் பிறகு பல வருடங்கள் கழிந்து விட்டன. நான் முழுத் திருடனாகி விட்டேன். பல தடவைகள் சிறைக்குப் போயிருக்கிறேன். இன்னமும் என்னால் அந்த நினைவுகளை மறக்க முடியவில்லை. குறிப்பாக ஹிராட்டா… ஒவ்வொரு முறை நான் திருடும்போதும் அவன் முகம் கண்ணுக்கு முன்னால் வரும். ’நான் சந்தேகப் பட்டது போல,’ என்று இகழ்ச்சியாகப் பார்த்தபடி, சொல்வது போல. அவன் மன உறுதி உடைய உண்மையான மனிதன். ஆனால் இந்த உலகம் புதிரானது. மிகவும் எளியவனான ஹிகுச்சி சிக்கலில் சுலபமாக மாட்டிக் கொள்வான் என்று நான் சொன்ன அந்த ஜோசியம் பொய்த்து விட்டது. அவன் தன் தந்தையின் செல்வாக்கால் பல நாடுகளுக்குப் பயணம் செய்தான். டாக்ட்ரேட் பட்டம் வாங்கி       விட்டான். ஹிராட்டா என்ன ஆனான் என்று யாருக்கும் தெரியாது. வாழ்க்கை யாராலும் கணிக்க முடியாதது என்று சொல்வது உண்மைதான்.

நான் வாசகர்களுக்கு இங்கு சொல்லி இருப்பதெல்லாம் உண்மைதான். ஒரு வார்த்தைகூட இங்கு பொய்யில்லை. நகுமாரா, ஹிகுச்சி ஆகியவர்களின் மனசாட்சி என் போன்ற திருடனின் மனதில் கண்டிப்பாக நிற்கும்.

நீங்கள் என்னை நம்பாமலும் போகலாம். நீங்கள் என் வகையைச் சேர்ந்தவராக இருந்தால்…

https://padhaakai.com/2016/07/10/the-thief/

  • தொடங்கியவர்

யுத்தத்தின் நிழலில் ( பென் ஓக்ரி ) தமிழில் – கார்த்திகைப் பாண்டியன்

 

ben-okri-writer-006

பென் ஓக்ரி (1959)

 

நைஜீரிய எழுத்தாளர் மற்றும் கவிஞர். தன்னுடைய தேசத்தில் நிலவிய சமூக மற்றும் அரசியல் சிக்கல்களைப் பேச மாய-யதார்த்தத்தைப் பயன்படுத்தி எழுதியவர். மூன்று சிறுகதைத் தொகுதிகள் இதுவரை வெளியாகியுள்ளன. இவருடைய சிறுகதைகள் பெரும்பாலும் நைஜீரிய கலாச்சாரத்தில் நிலவும் பௌதீக உலகத்துக்கும் ஆன்மாக்களின் உலகதுக்கும் இடையேயான உறவினை விரிவாகப் பேசுகின்றன. 1991-ஆம் வருடம் ஓக்ரி எழுதிய நாவலான “The Famished Road” புக்கர் பரிசினை வென்றது. முழுக்கவும் அரசியல் தளத்தில் இயங்காத நிலையிலும், ஆப்பிரிக்க நாடுகள் தங்களுடைய தேசிய அடையாளங்களை மீட்டெடுப்பதன் அவசியத்தை ஓக்ரியின் படைப்புகள் தொடர்ச்சியாக முன்வைத்து உரையாடுகின்றன.

•••

அந்த மதியநேரத்தில் மூன்று படைவீரர்கள் கிராமத்துக்கு வந்தார்கள். வெள்ளாடுகளையும் கோழிக்குஞ்சுகளையும் சிதறியோடச் செய்தார்கள். பனையோலைத் தொகுதிகளால் வேய்ந்த மதுக்கூடத்துக்குச் சென்று ஒரு சுரைக்குடுக்கை நிறைய பனங்கள்ளைக் கொண்டு வரும்படி ஏவினார்கள். பூச்சிகளின் மத்தியில் அமர்ந்து குடித்தார்கள்.

தன் தந்தை வெளியே செல்வதற்காகக் காத்திருந்த வேளையில் ஒமோவோ அவர்களை ஜன்னலின் வழியாகப் பார்த்தான். அவர்களிருவரும் வானொலியை கேட்டுக் கொண்டிருந்தார்கள். யுத்தம் தொடங்கியபோது நகரத்தை விட்டுத் தப்பியோடிய ஒரு குடும்பத்திடமிருந்து அவன் தந்தை அந்தப் பழைய க்ரண்டிக்கை1 மிகவும் சல்லிசான விலைக்கு வாங்கியிருந்தார். வெள்ளைத்துணியால் வானொலியை மூடி, வீட்டில் பயன்படுத்தப்படும் போலியானதொரு வழிபாட்டுப்பொருளைப் போல, அவர் அதனைத் தோன்றச் செய்திருந்தார். தேசத்தின் உட்பகுதிகளில் நிகழும் வான்வெளித் தாக்குதல்கள் மற்றும் குண்டுவீச்சுகள் பற்றிய செய்திகளை அவர்கள் கேட்டார்கள். கவனமாக வகிடெடுத்து சீவி தலையை வாரிய பிறகு, அவன் தந்தை, சவரம் செய்த பின் தடவும் தொற்றுநீக்கும் நீர்மத்தை எடுத்து சவரம் செய்திராத தனது முகத்தில் தடவிக்கொண்டார். பிறகு, வெகுகாலம் முன்பே தன்னைக் காட்டிலும் அளவில் சிறியதாகிப் போயிருந்த அலங்கோலமான மேலங்கிக்குள் சிரமப்பட்டு நுழைந்தார்.

தந்தையின் மீது எரிச்சலடைந்தவனாக ஒமோவோ ஜன்னலுக்கு வெளியே உற்றுப் பார்த்தான். அந்த நேரத்தில், கடந்த ஏழு நாட்களாக, தலைக்கு மேலே கறுப்புநிற முக்காடணிந்த வினோதமான பெண்ணொருத்தி அவர்களுடைய வீட்டைக் கடந்து சென்றாள். கிராமச்சாலைகளில் நடந்து சென்று, நெடுஞ்சாலையைக் கடந்து காட்டுக்குள் மறைந்தாள். அவள் தோன்றுவதற்காக ஒமோவோ காத்திருந்தான்.

முக்கியச் செய்திகள் முடிவடைந்தன. அன்றிரவு சந்திர கிரகணம் நிகழக்கூடுமென்று எதிர்பார்ப்பதாக வானொலி அறிவிப்பாளர் சொன்னார். ஒமோவோவின் தந்தை தனது முகத்திலிருந்த வியர்வையை உள்ளங்கையால் துடைத்து விட்டுச் சொன்னார், சிறிது கசப்போடு:

“ஏதோ கிரகணம் வந்து இந்தப் போரை நிறுத்தி விடும் என்பதைப் போல..”

“கிரகணம் என்றால் என்ன?” என ஒமோவோ கேட்டான்.

“அப்போதுதான் உலகம் மொத்தமும் இருண்டு வினோதமான சம்பவங்கள் நிகழும்.”

“எதைப் போல?”

அவன் தந்தை ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தார்.

“இறந்தவர்கள் எழுந்து நடமாடவும் பாடவும் ஆரம்பிப்பார்கள். எனவே வெகு நேரம் வெளியே சுற்றிக் கொண்டிருக்காதே, சரியா..”

ஒமோவோ தலையசைத்தான்.

“கிரகணத்துக்கு குழந்தைகளைப் பிடிக்காது. அவர்களைச் சாப்பிட்டு விடும்.”

ஒமோவோ அவரை நம்பவில்லை. அவன் தந்தை புன்னகைத்தார், ஒமோவோவுக்கு அவனுடைய தினப்படியான பத்து கோபோவைக்2 கொடுத்த பிறகு சொன்னார்:

“வானொலியை அணைத்து விடு. போர் பற்றிய செய்திகளைக் கேட்பது ஒரு குழந்தைக்கு நல்லதல்ல.”

ஒமோவோ அதனை அணைத்தான். வீட்டின் வாசலுக்குச் சென்று புனிதநீரை ஊற்றிய அவன் தந்தை பிறகு தன்னுடைய மூதாதையர்களை நோக்கி பிரார்த்தித்தார். சடங்குகளை முடித்தபிறகு தனது பெட்டியை எடுத்துக்கொண்டு கம்பீரம் கலந்ததொரு உற்சாகத்தோடு வெளியேறினார். முக்கியவீதியிலுள்ள பேருந்து நிலையத்துக்குச் செல்லும் பாதையில் அவர் நடந்து போவதை ஒமோவோ பார்த்தபடியிருந்தான். ஒரு டான்போ3 பேருந்து வந்து தந்தை அதில் ஏறிச் சென்ற பிறகு, ஒமோவோ மீண்டும் வானொலியை ஒலிக்கச் செய்தான். ஜன்னலின் நிலைப்படியிலமர்ந்து அந்தப் பெண்ணுக்காகக் காத்திருந்தான். கடைசிமுறை அவன் அவளைப் பார்த்தபோது, தனது மஞ்சள்நிற ஆடையின் கிளர்ச்சியூட்டும் அதிர்வுகளோடு அவனைக் கடந்து சென்றிருந்தாள். தாங்கள் செய்து கொண்டிருந்த எல்லாவற்றையும் நிறுத்தி குழந்தைகள் அவளை வெறித்துப் பார்த்தார்கள். அவளுக்கு நிழலில்லை என்று அவர்கள் சொல்லியிருந்தார்கள். அவளுடைய பாதங்கள் எப்போதும் தரையைத் தொடுவதில்லை என்றும் அவர்கள் சொல்லியிருந்தார்கள். கடந்து செல்லும்போது, குழந்தைகள் அவள் மீது பொருட்களை வீசத் தொடங்கினார்கள். அவள் பின்வாங்கவில்லை, வேகத்தை அதிகப்படுத்தவில்லை, மேலும் பின்னால் திரும்பிப் பார்க்கவுமில்லை.

வெப்பம் உணர்வுகளை மழுங்கடிப்பதாக இருந்தது. கூச்சல்கள் மங்கி தங்களது கூர்மையை இழந்தன. தூக்கத்தில் நடப்பவர்களைப் போல கிராமத்து மக்கள் தங்களுடைய பல்வேறு வகையான வேலைகளுக்குள் தடுமாறி வீழ்ந்தார்கள். பனங்கள்ளைக் குடித்த மூன்று வீரர்களும் சூரியனுடைய கொடுமையான வெம்மையின் கீழ் டிராட் விளையாடினார்கள். ஒமோவோ கவனித்தான், குழந்தைகள் மதுக்கூடத்தைக் கடந்து செல்லும் போதெல்லாம் வீரர்கள் அவர்களை அழைத்தார்கள், அவர்களிடம் பேசினார்கள், கொஞ்சம் பணமும் தந்தார்கள். படிகளில் இறங்கி ஓடிய ஒமோவோ மெல்ல மதுக்கூடத்தைக் கடந்து நடந்தான். வீரர்கள் அவனை உற்றுப் பார்த்தார்கள். திரும்பி வரும் வழியில் வீரர்களில் ஒருவன் அவனை அழைத்தான்.

“உன்னுடைய பெயர் என்ன” என்று கேட்டான்.

ஒமோவோ தயங்கினான், குறும்புடன் புன்னகைத்து பிறகு சொன்னான்:

“கிரகணம்”

வீரன் சிரித்தான், அவனுடைய எச்சில் ஒமோவோவின் முகத்தில் தெறித்தது. நரம்புகளின் கூட்டங்கள் முண்டியடிக்கும் முகம் அவனுக்கு. உடன் வந்திருந்தவர்கள் ஆர்வமில்லாதவர்களாகத் தென்பட்டார்கள். பூச்சிகளை உதறி விட்டு விளையாட்டில் கவனம் செலுத்தினார்கள். அவர்களுடைய துப்பாக்கிகள் மேசையின் மேல் கிடந்தன. அவற்றில் எண்கள் எழுதப்பட்டிருப்பதை ஒமோவோ கவனித்தான். அந்த மனிதன் கேட்டான்:

“உன்னுடைய உதடுகள் பெரிதாயிருப்பதால் உன் தந்தை உனக்கிந்த பெயரை வைத்தாரா?”

அவனுடைய நண்பர்கள் ஒமோவோவைப் பார்த்து சிரித்தார்கள். ஒமோவோ தலையசைத்தான்.

“நீ ரொம்ப நல்ல பையன்” என்றான் அந்த மனிதன். சற்று தாமதித்தான். பிறகு அவன் கேட்டான், ஒரு வித்தியாசமான குரலில்:

“தன்னுடைய முகத்தை கறுப்புத்துணியால் மூடியிருக்கும் பெண்ணை நீ பார்த்திருக்கிறாயா?”

“இல்லை”

அந்த மனிதன் ஒமோவோவிடம் பத்து கோபோவைக் கொடுத்து சொன்னான்:

“அவளொரு உளவாளி. நம்முடைய எதிரிகளுக்கு அவள் உதவுகிறாள். அவளைப் பார்த்தால் உடனடியாக எங்களிடம் வந்து சொல்ல வேண்டும், புரிகிறதா?”

பணத்தை வேண்டாமென்று மறுத்து ஒமோவோ மீண்டும் படிகளில் ஏறி மாடிக்குத் திரும்பினான். ஜன்னலின் நிலைப்படியில் மீண்டும் தன்னை இருத்திக் கொண்டான். வீரர்கள் அவ்வப்போது அவனைப் பார்த்தார்கள். வெப்பம் அவனை ஆக்கிரமிக்க வெகு சீக்கிரம் உட்கார்ந்த நிலையிலேயே அவன் தூங்கிப் போனான். உற்சாகமின்றி கூவிய சேவல்கள் அவனை உறக்கத்திலிருந்து எழுப்பின. மதியநேரம் அமைதியாக மாலைக்குள் நுழைவதை அவனால் உணர முடிந்தது. வீரர்கள் மதுக்கூடத்துக்குள் கண்ணயர்ந்திருந்தார்கள். வழக்கத்தைப் போலவே செய்திகள் ஒலிக்க ஆரம்பித்தன. எந்தவித புரிதலுமின்றி அன்றைய தினத்தின் இழப்புகள் குறித்து ஒமோவோ கேட்டுக்கொண்டான். உறக்க மயக்கத்திடம் அறிவிப்பாளர் சரணடைந்தார், கொட்டாவி விட்டு பின் மன்னிப்பு கேட்டார், பிறகு சண்டை பற்றிய மற்ற தகவல்களை சொல்லத் தொடங்கினார்.

நிமிர்ந்தபோது ஒமோவோ அந்தப்பெண் ஏற்கனவே தன்னை கடந்து சென்றிருப்பதைக் கண்டான். வீரர்களும் மதுக்கூடத்தை விட்டுக் கிளம்பியிருந்தார்கள். வெப்பமூட்டத்தினூடாகத் தடுமாறியபடி, கூரை வேய்ந்த வீடுகளினுடைய தாழ்வாரங்களின் வழியே அவர்கள் பதுங்கி பதுங்கிச் செல்வதை அவன் பார்த்தான். அந்தப்பெண் பாதையில் வெகுதூரம் முன்னால் போய்க் கொண்டிருந்தாள். படிகளில் இறங்கி ஓடிய ஒமோவோ வீரர்களைப் பின்தொடர்ந்தான். அவர்களில் ஒருவன் தனது சீருடையின் மேலாடையைக் கழற்றி விட்டிருந்தான். பின்னால் இருந்த படைவீரனின் பிட்டங்கள் மிகவும் பெரிதாயிருந்ததால் அவனுடைய காற்சட்டைகள் நடுவில் விரிசல் விடத் தொடங்கியிருந்தன. நெடுஞ்சாலையைக் கடந்தும் ஒமோவோ அவர்களைப் பின்தொடர்ந்தான். காட்டுக்குள் நுழைந்தபிறகு அந்தப்பெண்ணைத் தொடர்வதை நிறுத்தி வீரர்கள் வேறொரு பாதையைத் தேர்ந்தெடுத்தார்கள். தாங்கள் என்ன செய்கிறோமென்பதை அவர்கள் அறிந்திருந்ததாகவே தோன்றியது. அவளைத் தன் பார்வையின் எல்லைக்குள் வைத்திருப்பதற்காக ஒமோவோ வேகமாக நடந்தான்.

அடர்த்தியான மரங்களினடுவே அவன் அவளைத் தொடர்ந்தான். சாயம்போனதொரு மேலங்கியையும் பழுப்புநிற சால்வையும் அவள் அணிந்திருந்தாள், கறுப்புநிற முக்காடு அவள் முகத்தை மூடியிருந்தது. தன்னுடைய தலையின் மீது சிவப்புநிற கூடையொன்றை சுமந்து சென்றாள். அவளுக்கு நிழல் இருந்ததா, அல்லது, அவளுடைய பாதங்கள் தரையைத் தொட்டனவா என்று தீர்மானிப்பதை, அவன் முற்றிலுமாக மறந்திருந்தான்.

கட்டி முடிக்கப்படாத மாளிகைகளை – அவற்றின் உடைந்து தொங்கும் ஆடம்பரமான பெயர்ப்பலகைகளை இடிந்த வேலிகளை – அவன் கடந்து சென்றான். காலியாகக் கிடந்த சிமிட்டி தொழிற்சாலையையும் கடந்து நடந்தான்: அச்சுகள் குவியலாக நொறுங்கிக் கிடக்க வேலையாட்களின் கூடாரங்கள் ஆளரவமற்று இருந்தன. ஒரு ஆனைப்புளியமரத்தைக் கடந்தான், அதன் கீழே முழுதாய் கெட்டுப்போகாத பெரிய மிருகமொன்றின் எலும்புக்கூடு கிடந்தது. ஒரு நாகம் கிளையிலிருந்து நழுவி கீழே விழுந்து அடியிலிருந்த புதர்களுக்குள் சறுக்கிச் சென்று மறைந்தது. தொலைவில், மலையுச்சியில், உரத்து ஒலிக்கும் இசையையும், கூச்சல்களைத் தாண்டி மனிதர்கள் பாடும் யுத்தகானங்களையும், அவன் கேட்டான்.

மலைக்குக் கீழேயிருந்த சமவெளியில், கிட்டத்தட்ட முகாமைப் போலிருந்ததொரு இடத்தை அவர்கள் வந்தடையும்வரை, அவன் அவளைப் பின்தொடர்ந்தான். குகையின் பாதி-வெளிச்சத்தில் நிழலுருவங்கள் நகர்ந்தபடி இருந்தன. அந்தப்பெண் அவர்களிடம் சென்றாள். உருவங்கள் அவளைச் சூழ்ந்தன, அவளைத் தொட்டு குகையினுள்ளே அழைத்துச் சென்றன. அவர்களுடைய களைப்புற்ற குரல்கள் அவளுக்கு நன்றி சொல்வதை அவன் கேட்டான். அந்தப்பெண் மீண்டும் தோன்றியபோது அவளிடம் அந்தக் கூடை இருக்கவில்லை. சவலைநோயால் ஒட்டிய வயிறுகளைக் கொண்ட குழந்தைகளும் கந்தல்துணிகளை அணிந்திருந்த பெண்களும் அவளை மலையின் பாதிவழி வரை அழைத்துச் சென்றார்கள். பிறகு, தயக்கத்தோடு, மீண்டும் அவர்கள் அவளைப் பார்க்க முடியாமல் போகலாமென்பதைப்போல அவளைத் தொட்டு, அவர்கள் திரும்பிச் சென்றார்கள்.

சேறுநிறைந்த நதியொன்றை வந்தடையும்வரை அவன் அவளைத் தொடர்ந்தான். கண்ணுக்குப் புலப்படாத ஏதோவொரு சக்தி தன்னை தாக்க முற்படுவதைப்போல அவள் விரைவாக நகர்ந்தாள். அடர்த்தியான நீர்வழியில், கவிழ்ந்து கிடந்த தோணிகளையும், சேற்றில் சிக்கி காற்றில் படபடக்கும் துணிகளையும் அவன் கண்டான். பலிக்கான பொருட்கள் மிதப்பதையும் பார்த்தான்: ஈகநார்ப்பைகளில் சுற்றப்பட்ட ரொட்டித்துண்டுகள், உணவுகள் அடைக்கப்பட்ட சுரைக்குடுவைகள், கோகோ-கோலா குவளைகள். அவன் தோணிகளை மறுபடியும் பார்த்தபோது அவை நதியினால் விழுங்கப்பட்டு இறந்துபோன மிருகங்களின் வடிவங்களுக்குத் தங்களை மாற்றிக் கொண்டிருந்தன. நதிக்கரையில் செல்லாத நாணயங்கள் சில கிடப்பதையும் அவன் பார்த்தான். மிக மோசமான நாற்றம் காற்றில் கலந்திருப்பதை கவனித்தான். பின்னர், ஆழமாக மூச்சு விடும் ஒலியைத் தனக்குப் பின்னாலிருந்து அவன் கேட்டான், யாரோ இருமுவதையும் காறித்துப்புவதையும் கூட. மற்றவர்களை வேகமாக நகரச் சொல்லி வற்புறுத்திய வீரர்களில் ஒருவனுடைய குரலை அவன் அடையாளம் கண்டுகொண்டான். ஒரு மரத்தின் நிழலில் ஒமோவோ பதுங்கினான். படைவீரர்கள் கடந்து சென்றார்கள். சிறிது நேரத்திற்குள்ளாகவே அவனொரு அலறலைக் கேட்டான். வீரர்கள் அந்தப்பெண்ணைப் பிடித்திருந்தார்கள். அவளைச் சுற்றி வளைத்தார்கள்.

“மற்றவர்கள் எங்கே?” அவர்களில் ஒருவன் கத்தினான்.

அந்தப்பெண் மௌனமாயிருந்தாள்.

“சூனியக்காரி! சாக விரும்புகிறாயா, என்ன? எங்கே அவர்கள்?”

அவள் அமைதியாக நின்றாள். தலை குனிந்திருந்தது. வீரர்கள் ஒருவன் இருமி பின் நதியை நோக்கி காறித்துப்பினான்.

“பேசு! பேசு!” என்றபடியே அவளை அறைந்தான்.

குண்டாயிருந்த வீரன் அவளுடைய முக்காடைக் கிழித்து தரையில் எறிந்தான். கீழே குனிந்து அதை எடுக்க முற்படுகையில் மண்டியிடுவதைப் போல அவள் நின்றாள், தலை இப்போதும் நிமிரவில்லை. அவளுடைய தலை மழிக்கப்பட்டு, ஆழமான மடிப்புகளோடு உருக்குலைந்து கிடந்தது. அவளது முகத்தின் பக்கவாட்டுப் பகுதியில் ஆழமான வெட்டொன்றும் கன்றிப்போயிருந்தது. வெற்று-மார்போடிருந்த வீரன் அவளைத் தள்ளினான். முகம் தரையில் பட விழுந்தாலும் அவள் அப்படியே கிடந்தாள். காட்டின் வெளிச்சம் மெல்ல மாறியது, நதியில் இறந்து கிடந்த மிருகங்களென்பது உண்மையில் வளர்ந்த மனிதர்களின் பிணங்கள்தான் என்பதை முதல்முறையாக ஒமோவோ கண்டான். நதியின் புதர்ச்செடிகளில் அவர்களுடைய உடல்கள் சிக்கிக்கிடந்தன, மேலும் அவர்களது கண்கள் உப்பியிருந்தன. ஏதும் எதிர்வினையாற்றும் முன்பு, மற்றொரு அலறலை அவன் கேட்டான். தனது கையில் முக்காடோடு அந்தப்பெண் எழுந்து கொண்டிருந்தாள். குண்டாயிருந்த வீரனிடம் திரும்பி, தனது உயரதுக்கு முழுதாய் நிமிர்ந்து நின்று, அவனுடைய முகத்தில் காறியுமிழ்ந்தாள். காற்றில் அந்த முக்காடை அசைத்தபடி, பைத்தியம் பிடித்தவளைப் போல ஊளையிட ஆரம்பித்தாள். மற்ற இரண்டு வீரர்களும் பின்வாங்கினார்கள். குண்டாயிருந்த வீரன் தன்னுடைய முகத்தை துடைத்துக்கொண்டு துப்பாக்கியை அவளது வயிற்றின் மட்டத்துக்கு உயர்த்தினான். ஒமோவோ துப்பாக்கியின் ஒலியைக் கேட்ட தருணத்துக்கு ஒரு கணம் முன்னதாக அவனுக்கு மேலே கிளம்பிய சிறகசைப்புகளின் பயங்கரமான ஒலி அவனை அச்சுறுத்தி மறைவிடத்திலிருந்து வெளியேறி ஓடச்செய்தது. அலறியபடியே அவன் காட்டுக்குள் ஓடினான். பலத்த காலடியோசைகளோடு வீரர்கள் அவனுக்குப் பின்னால் ஓடினார்கள். பாறைகளிலிருந்து கிளம்பியதாகத் தோன்றிய பனிமூட்டத்தின் நடுவே அவன் ஓடினான். அப்படி ஓடிக்கொண்டிருந்தபோது இலைகளாலான மேடையின் மீதமர்ந்து ஓர் ஆந்தை தன்னை வெறிப்பதை அவன் கண்டான். ஒரு மரத்தின் வேர்களில் தடுக்கி விழுந்து அவனுடைய தலை தரையில் மோதியபோது மயங்கிப் போனான்.

அவன் விழித்தபோது இருட்டாயிருந்தது. தன்னுடைய விரல்களை முகத்தின் முன்னால் அசைத்தபோதும் அவனால் எதையும் பார்க்க முடியவில்லை. இருட்டை குருடாகி விட்டோம் என்று தவறாகப் புரிந்து கொண்டு அவன் அலறினான், பதறியடித்து சுற்றுமுற்றும் ஓடி, ஒரு கதவில் மோதி விழுந்தான். தனது அதிர்ச்சியிலிருந்து அவன் மீண்டபோது வெளியே குரல்கள் ஒலிப்பதைக் கேட்டான், வானொலி போரைப் பற்றி சிணுங்கிக் கொண்டிருந்தது. தன்னுடைய பார்வை தனக்குத் திரும்பக் கிடைத்த ஆச்சரியத்தோடு மேல்மாடத்துக்கு வந்து சேர்ந்தான். ஆனால் அவன் அங்கே வந்தபோது, குழிவான மூங்கிலிருக்கையில் அமர்ந்து தன்னுடைய தந்தை, அந்த மூன்று வீரர்களோடு சேர்ந்து பனங்கள்ளைக் குடித்து கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ந்தான். ஒமோவோ தன் தந்தையிடம் ஓடிப்போய் மூன்று மனிதர்களையும் சுட்டிக்காட்டி வெறிபிடித்தாற்போல கத்தினான்.

“நீ அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.” என்றார் அவனுடைய தந்தை. “அவர்கள்தான் உன்னைக் காட்டிலிருந்து திரும்பவும் கொண்டும் வந்தார்கள்.”

சித்தபிரம்மை பிடித்ததவனைப் போல, ஒமோவோ, தான் பார்த்ததை தந்தையிடம் சொல்லத் தொடங்கினான். ஆனால் அவன் தந்தை, மன்னிப்பு கேட்பதைப் போல அந்த வீரர்களிடம் சிரித்தபடி, தன்னுடைய மகனைத் தூக்கிக்கொண்டு அவனுடைய படுக்கையை நோக்கி நடந்தார்.

••

குறிப்புகள்

1. க்ரண்டிக் (Grundig) – மின்னணு சாதனங்களைத் தயாரிக்கும் ஜெர்மானிய நிறுவனம்.

2. கோபோ (Kobo) – நைஜீரிய நாணயம்.

3. டான்போ (Danfo) – இங்கிலாந்தைச் சேர்ந்த, சிறிய வகை பேருந்துகளைத் தயாரிக்கும் நிறுவனம்.

•••

http://malaigal.com/?cat=1

  • தொடங்கியவர்

கருப்பு ஆடு

 

  • தொடங்கியவர்

தையல் பிரிந்த கதைகள் / இந்தியில் –/ அம்ரிதா ப்ரீதம் / தமிழில் – நாணற்காடன்

எனது சிரிப்பு அவளது சிரிப்போடு முடிச்சு போட்டுக்கொண்டாலும் கூட, நானும், கேதகியும் ஒருவரையொருவர் அறிந்துகொண்டதில்லை. எனது வீட்டுக்கு முன்னாலிருக்கும் வேப்பமரத்தையும், வேல மரத்தையும் சூழ்ந்துகொண்டு ஒரு அணை இருக்கிறது. அணைக்கு ஒரு பக்கம் பசுமை நிறைந்தும், கடலை வயல்களும் இருக்கின்றன. இந்த வயல்களின் இடது பக்கம் ஒரு அரசுக் கல்லூரியின் பெரிய தோட்டம் இருக்கிறது. அந்தத் தோட்டத்தின் ஒரு மூலையில் கேதகியின் குடிசை இருக்கிறது. தோட்டத்திற்கு நீர்ப்பாய்ச்சுவதற்காக அங்கங்கே நீர் நிரம்பிய வாய்க்கால்கள் இருக்கின்றன. ஒரு வாய்க்கால் கேதகியின் குடிசைக்கு முன்னால் இருக்கிறது. அதன் கரையில் உட்கார்ந்திருக்கும் கேதகியைத் தான் நான் தினமும் பார்த்து வந்தேன். சட்டியையோ, தாம்பாளத்தையோ கழுவிக்கொண்டிருப்பாள் அல்லது உள்ளங்கையில் நீரள்ளி வெள்ளிக் கைவளையல்கள் அணிந்திருக்கும் கைகளைக் கழுவிக்கொண்டிருப்பாள். வெள்ளி கைவளையல்கள் போல வயது அவளது உடலில் மொத்த மொத்தமான சுருக்கங்களை வழங்கியிருக்கிறது. ஆனால், கருத்த நிறத்திலிருந்தாலும் கூட அத்துணை அழகாயிருந்தாள். அவளது பெரிய பெரிய சுருக்கங்களைப் பார்க்கும்போது வயது அவளுக்குக் கொடுத்த அழகு இது என்று தோன்றியது எனக்கு. அதனால்த் தானோ என்னவோ அவளது உதட்டில் ஒட்டியிருக்கும் சிரிப்பு விசித்திரமான பூரணத்துவத்தைப் பெற்றிருக்கிறது. இன்றைய மக்கள் அனைவரின் முகத்திலிருந்தும் தொலைந்துபோன விசித்திர புன்னகை அது. தினமும் அவளைப் பார்ப்பேன். பார்க்கும்போதெல்லாம் தன் தடித்த, கருத்த உதடுகளில் எப்படி இப்படியொரு பூரணத்துவத்தைத் தேக்கிவைத்திருக்கிறாள் என யோசிப்பேன். நான் அவளைப் பார்த்துச் சிரிப்பேன். அவள் என்னைப் பார்த்துச் சிரிப்பாள். அவளது முகம் தோட்டத்திலிருக்கும் நூற்றுக்கணக்கான பூக்களில் ஒரு பூப்போல் எனக்குத் தெரியும். எனக்குப் பல பூக்களின் பெயர் தெரியாது. ஆனால், அவள் பெயரை நான் தசையாலான பூ என்று வைத்திருந்தேன். தசைப்பூ.

ஒரு முறை முழுமையாக மூன்று நாட்கள் அவளது தோட்டத்துப் பக்கம் போக முடியாமலாகிவிட்டது எனக்கு. நான்காவது நாள் நான் போன போது, மூன்று நாட்களில்லை, மூன்று வருடங்கள் பிரிந்திருந்தவளைப்போல என்னைப் பார்த்தாள்.

“என்னாச்சு பொண்ணு. இவ்வளவு நாளா ஏன் வரல?” என்றாள்.

”குளிர் ரொம்பவும் அதிகமா இருந்தது அம்மா. படுக்கைய விட்டு எழுந்திருக்கவே இல்லை.”

“உண்மையாவே குளிர் ரொம்ப அதிகம்தான் உங்க ஊர்ல.”

“உங்க ஊர் எது அம்மா?”

“இப்போதைக்கு இந்தக் குடிசை இருக்கிற இந்த ஊர் தான் என் ஊர்.”

“அது சரிதான் அம்மா. ஆனாலும், சொந்த ஊர்னு ஒன்னு இருக்குமே?”

“இப்ப அந்த மண்ணோட உறவு எதுவும் இல்ல பொண்ணு. இப்போதைக்கு இதோ இந்த கார்த்திக் தான் என் ஊரோட மண்ணு, என் ஊரோட வானம்.”

“இந்த கார்த்திக் தான்” என்றவாறு குடிசையருகே அமர்ந்திருந்த தன் கணவனைப் பார்த்தாள். முதுமையின் காரணமாக கூன் விழுந்த ஒரு மனிதர் தரையிலமர்ந்து குச்சிகளையும், கயிறுகளையும் பரப்பிவைத்து பாய் நெய்துகொண்டிருந்தார். அந்தப் பக்கமிருந்த பூஞ்சாடிகளில் மலர்கிற பூக்களை பனியிலிருந்து காக்க இந்தப் பாய்களைப் போர்த்த வேண்டும் போல.

கேதகி சின்ன வாக்கியத்தில் பெரிய விசயத்தைப் பேசிவிட்டாள். மிகப் பெரிய உண்மைகளுக்கு அதிக விஸ்தீரணம் தேவையில்லை போல. ஒரு பெண்ணுக்காக ஒரு பூமியையும், ஒரு வானத்தையும் செய்து கொடுத்த அந்த மனிதரை வியப்போடு பார்க்கத் தொடங்கினேன்.

” என்ன பார்க்கற பொண்ணு? இது என்னோட நிறமற்ற கடிதம்.”

“ தபால் தலை ஒட்டாத கடிதம்.”

“ தபால் தலை ஒட்டாவிட்டால் அது நிறமற்ற கடிதம் ஆகிவிடுகிறது”

“ ஆமாம் அம்மா. தபால் தலை ஒட்டப்படாத கடிதம்.”

“ அதை வாங்குபவர்கள் இரண்டு மடங்கு விலை தர வேண்டும்.”

“ ஆமாம் அம்மா. தபால் தலை ஒட்டாத கடிதத்தை வாங்கும்போது இரண்டு மடங்கு விலை தர வேண்டியிருக்கும்”

” இந்தக் கடித்தத்தை நான் இரண்டு மடங்கு விலை கொடுத்து வாங்கினேன். உடலை ஒரு விலையாகவும், மனத்தை ஒரு விலையாகவும் கொடுத்து இருக்கிறேன். ”

நான் கேதகியின் முகத்தைப் பார்த்தேன். கேதகியின் எளிய, கருத்த முகத்தில் ஆழ்ந்த வாழ்க்கைத் தத்துவம் புகைந்து கொண்டிருந்தது.

” கடிதம் எழுதப்படும்போது எங்கள் ஊரின் பெரியவர்களும், வயதானவர்களும் அதன் மேல் முத்திரை குத்திவிடுகிறார்கள்.”

“ உங்களுடைய இந்தக் கடிதத்தின் மீது முத்திரை குத்திவிட்டார்களா என்ன?”

“ குத்தினாலென்ன.. குத்தாவிட்டாலென்ன? என்னுடைய கடிதம் இது. எடுத்துக்கொண்டேன். இந்த கார்த்தி என்ற கடிதத்தின் மீது கேதகி என்று என் பெயர் தான் எழுதப்பட்டிருந்தது. “

” உங்க பெயர் கேதகியா? எவ்வளவு அழகான பெயர்.. அம்மா.. நீங்க பெரிய துணிச்சல்காரி தான்.”

“ நான் சிங்க வம்சத்தைச் சேர்ந்தவள்.”

“ எந்த சிங்க வம்சம் அம்மா?”

“ காடுகளில் சிங்கங்கள் இருக்கிறதல்லவா, அவையெல்லாம் எனக்கு சொந்தபந்தம். இப்பவும் கூட காட்டில் எதாச்சும் சிங்கம் செத்துவிட்டால் நாங்கள் பதிமூன்று நாட்கள் துக்கம் அனுஷ்டிப்போம். எங்க வம்சத்து ஆண்கள் மொட்டையடித்துக்கொள்வார்கள். மண்சட்டி உடைத்து செத்துப்போன சிங்கத்தின் பேரில் அரிசி பருப்பு படையிலிடுவோம். ”

“ அட… அப்படியா அம்மா?”

“ நான் ச்சக்மக் பகுதியைச் சேர்ந்தவள். அதன் காலடியில் கபில் நதி ஓடுகிறது”

“ கபில் நதியா?”

“ கங்கை நதியின் பெயரைக் கேள்விப்பட்டு இருக்கிறாயில்லயா?”

“ கங்கை நதியா?”

“ புனித கங்கை நதி. தெரியும் தானே?”

“ ம்.. தெரியும்.”

” ஆனால், கபில் கங்கையை விட புனிதமான நதி. ஆண்டுக்கு ஒருமுறை கங்கை நதி கருப்பு பசுவாக மாறி கபில் நதியில் வந்து குளித்துவிட்டுப் போகும் என்று சொல்வார்கள்.”

“ ச்சக்மக் பகுதி எங்க இருக்கு அம்மா?”

“ கரஞ்சியாவுக்கு பக்கத்தில்”

“ எந்த கரஞ்சியா?”

“ நீ நர்மதை நதி பற்றி கேள்விப்பட்டிருக்கிறாயா?”

“ ஆமாம். தெரியும்.”

“ நர்மதையும், சோன் நதியும் கூட அருகில் இருக்கின்றன.”

“ அந்த நதிகளும் புனித நதிகள் தானே?”

“ கபில் நதி போல் புனிதமானவையில்லை. ஒரு முறை இந்த பூமியின் வயல்களெல்லாம் காய்ந்து போய்விட்டன. வேறு வழியின்றி மக்களும் அழியத்தொடங்கினர். அவர்களின் துக்கத்தைப் பார்த்த பிரம்மன் அழுதார். அவரின் இரண்டு கண்ணீர்த் துளிகள் பூமியில் விழுந்தன. அந்தக் கண்ணீர்த் துளிகள் விழுந்த இடத்திலிருந்து இந்த நர்மதை நதியும், சோன் நதியும் ஓடத் தொடங்கின. இப்போது அவற்றிலிருந்து தான் வயல்களுக்குத் தண்ணீர் கிடைக்கிறது.

” கபில் நதியிலிருந்து?”

“அதிலிருந்து மனிதனின் ஆன்மாவுக்குத் தண்ணீர் கிடைக்கிறது. நான் கபில் நதி நீரில் குளித்துவிட்டு, கார்த்திக்கை என் கணவனாக ஏற்றுக்கொண்டேன்.”

” அப்போது உங்களுக்கு என்ன வயசு இருக்கும் அம்மா?”

“ பதினாறு வயசு இருக்கும்.”

“ உங்க அப்பா அம்மா கார்த்திக்கை உங்களுடைய கணவராக ஏன் ஏற்றுக்கொள்ளல?”

“ ஏன்னா, கார்த்திக்குக்கு ஏற்கெனவே முதல்லயே கல்யாணம் ஆகியிருந்தது. அவருடைய மனைவி என்னுடைய தோழி. ரொம்பவும் நல்ல பெண். அவங்களுக்கு ச்சுந்தரு-முந்தரு என இரண்டு மகன்கள் பிறந்தனர். ரெண்டு பேரும் ஒரே நாளில் பிறந்தனர். எங்க ஊர் நாட்டாமையோ ”இந்தப் பெண் நல்லவளில்லை” என சொல்லத் தொடங்கிவிட்டார். இவள் ஒரே நாளில் தன் கணவனோடும், காதலனோடும் உறவுகொண்டிருக்கிறாள். அதனால்த்தான் ஒரே நாளில் இரண்டு குழந்தைகள் பிறந்திருக்கின்றன.”

“ அந்த அபலை மீது இவ்வளவு பெரிய குற்றம் சுமத்தப்பட்டதா?”

“ ஆனால், நாட்டாமையின் பேச்சை யார் தட்டுவார்கள்? கிராமத் தலைவனோ ரோபி பிராயச்சித்தம் செய்ய வேண்டும் என்றான். அவள் பெயர் ரோபி. வேறு வழி தெரியாத ரோபி அழுதழுது பாதியாக உருகிப்போனாள். “

“ அப்பறம் ? “

“ அதன்பிறகு ரோபியின் ஒரு மகன் செத்துப் போனான். நாட்டாமையோ, ‘பாவத்துக்குப் பிறந்த குழந்தை செத்துவிட்டது’ என்று சொன்னான்.

“ அப்புறம்? “

“ ரோபி ஒரு நாள் இன்னொரு குழந்தையைத் தொட்டிலில் போட்டு விட்டு, கொஞ்ச தூரம் தள்ளிப்போய் சிறுகூடையில் இலுப்பைப் பூ பறித்து சேகரித்துக்கொண்டிருந்தாள். பக்கத்துப் புதரிலிருந்து ஒரு மான் ஓடி வந்தது. மானுக்குப் பின்னால் வேட்டை நாய் ஓடிவந்தது. வேட்டை நாய் தொட்டிலுக்கு அருகே போனதும் மானை விட்டுவிட்டு தொட்டிலில் கிடந்த குழந்தையைக் கடித்துவிட்டது.”

“ அடப்பாவமே…ரோபி…”

“ அப்போது அந்த நாட்டாமை என்ன சொன்னான் தெரியுமா? ‘பாவத்துக்குப் பிறந்த குழந்தை மானின் வயிற்றுக்குப் போய்விட்டது. இப்போது மான் இன்னொரு குழந்தையையும் தின்பதற்கு தொட்டிலருகே ஓடிவந்துவிட்டது’ என்றான்.

” ஆனால், குழந்தையை மான் எதுவும் செய்யவில்லையே. அந்த வேட்டை நாய் தானே கொன்றது?”

“ நாட்டாமையின் பேச்சை யாரும் புரிந்துகொள்ள முடியாது பொண்ணு. அவன்.’ முதலில் பாவ ஆன்மா மானுக்குள் இருந்தது. இப்போது அது வேட்டை நாயிடம் வந்து விட்டது.’ நாட்டாமைகள் பேசிப்பேசியே சாகடிப்பார்கள். அங்கே வசித்துவந்த நந்தா என்பவன் ஒருமுறை வேட்டைக்குப் போயிருந்தான். அவனது அம்பு மான்களைத் தீண்டவில்லை. நாட்டாமையோ, ‘ நந்தா போன பிறகு அவன் மனைவி வேறொடு மோசமான ஆணுடன் தூங்கியிருப்பாள். அதனால்த்தான் அவனது அம்பு குறி தப்பிப்போனது’ என்றான். நந்தா வீட்டுக்கு வந்ததும் தன் மனைவியை அம்பால் குத்திக் கொன்றுவிட்டான். “

“ ஐயோ “

“ கார்த்திக்கும் தன் மனைவியை கொன்றுவிட வேண்டும் கொல்லாவிட்டால் அந்தப் பாவ ஆன்மா அவள் வயிற்றில் மீண்டும் பிறக்கும். அதன் முகத்தைப் பார்த்தால் கிராமத்தின் வயல்களெல்லாம் கருகிப்போய்விடும்” என நாட்டாமை சொன்னான்.

“ அப்புறம் “

“ கார்த்திக் தன் மனைவியைக் கொல்ல ஒப்புக்கொள்ளவில்லை. அதனால், நாட்டாமையும், ஊர் மக்களும் கோபம் கொண்டனர்.”

“ கிராம மக்கள் கோபம் கொண்டு என்ன செய்தனர்?”

“ மக்கள் நாட்டாமையிடம் மிகவும் பயந்தனர். நாட்டாமை ஏதாச்சும் சூனியம் செய்துவிட்டால் ஊரிலிருக்கும் எல்லா விலங்குகளும் செத்துவிடுமே என்று யோசித்தனர். அதனால் அவர்கள் கார்த்திக்கு ஹுக்கா, தண்ணீர் கொடுப்பதை நிறுத்திவிட்டனர். ”

” தன் மனைவியைக் கொன்றுவிட்டு அவன் எப்படி தப்ப முடியும் என்று யாருமே யோசிக்கவில்லையா?”

“ ஏன், அவனுக்கு என்ன ஆகிவிடும்”

“ அவனை போலீஸ் பிடிக்காதா?”

“ போலீசால் பிடிக்க முடியாது. கிராமத்துக்காரர்கள் சாட்சி சொன்னால் தானே போலீசால் பிடிக்க முடியும்? யாரையாவது கொல்வது சரியென்று நினைத்துவிட்டால் போலீசிடம் சொல்ல மாட்டார்கள் அந்த கிராமத்துக்காரர்கள்”

“ அப்புறம் என்ன ஆச்சு ?”

“ வேறு வழி தெரியாமல் துக்கத்திலிருந்த ரோபி இலுப்பை மரத்தில் தூக்கு மாட்டி செத்துவிட்டாள்.”

“ ஐயோ… ரோபி.”

“ எல்லாம் முடிந்துவிட்டது என நினைத்தார்கள் கிராமத்துக்காரர்கள். ஆனால், எதுவும் முடியவில்லை என எனக்குத் தோன்றியது. ஏனெனில், கார்த்திக் அந்த நாட்டாமையைக் கொன்றுவிட வேண்டுமென மனத்தில் முடிவெடுத்திருந்தார்,. அந்த நாட்டாமை செத்துவிட்டால் செத்தபிறகு ராக்‌ஷசனாக ஆகிவிடுவான் என எனக்குத் தெரியும்.”

“ அவன் வாழும்போதே ராக்‌ஷசன் தானே?”

“ ராக்‌ஷசர்கள் என்ன ஆவார்கள் தெரியுமா?”

“ என்ன ஆவார்கள்?”

“ உலகில் யாரிடமும் அன்பு செலுத்தாத மனிதர்கள் செத்தபிறகு தன் ஊரின் மரங்களில் ராக்‌ஷசர்களாக வசிக்க ஆரம்பித்துவிடுவார்கள். அவர்கள் கருப்பு உருவம் கொண்டவராக மாறிவிடுவர். இரவுகளில் அவர்களது நெஞ்சிலிருந்து நெருப்பு வரும். இரவெல்லாம் ஊர்ப்பெண்களை பயமுறுத்துவார்கள். “

“அப்புறம்?”

“ நான் அவன் செத்துப்போவதை விரும்பவில்லை. ஒருவேளை கார்த்திக் அவனைக் கொன்றுவிட்டால் ஊர்மக்கள் கார்த்திக்கை அம்புகளால் குத்திக் கொன்றுவிடுவார்கள் என்பது எனக்குத் தெரியும். “

“ அப்புறம்?”

“ நான் கார்த்திக்கை கபில் நதியில் நிற்க வைத்து நான் உன் மனைவியாகப் போகிறேன் என சத்தியம் செய்தேன். நாம் இந்த ஊரை விட்டு ஓடிப் போய்விடலாம். அங்கேயேயிருந்தால் கார்த்திக் என்றாவது ஒருநாள் அவனைக் கொன்றுவிடுவார் என்று எனக்குத் தெரியும். அவனைக் கொன்றுவிட்டால் மக்கள் கார்த்திக்கைக் கொன்றுவிடுவார்கள்”

“ கார்த்திக்கைக் காப்பாற்றுவதற்காக உங்கள் ஊரைவிட்டுவிட்டு வந்துவிட்டீர்கள். அப்படித்தானே?”

” இலுப்பை முளைக்காத மண் நரகமாகிவிடும் என்பது எனக்குத் தெரியும். ஆனால், என்ன செய்தேன் தெரியுமா? அந்த ஊரை விட்டு வராமலிருந்திருந்தால் கார்த்திக் உயிரோடு இருந்திருக்க மாட்டார். கார்த்திக் செத்திருந்தால் அந்த மண் எனக்கு நரகத்துக்குச் சமம்தான். ஊர் ஊராக அவரோடு சுற்றி வந்தேன். எங்களின் ரோபியும் எங்களிடம் திரும்பி வந்தாள்.”

“ ரோபி திரும்பி வந்தாளா? எப்படி?”

“ நாங்கள் எங்கள் மகளுக்கு ரோபி என்று தான் பெயர் வைத்தோம். கபில் நதியில் சத்தியம் செய்தபோது என் மனத்தில் ஒன்று தோன்றியது. என் வயிற்றில் பெண் குழந்தை பிறந்தால் அவளுக்கு ரோபி என்று தான் பெயர் வைக்க வேண்டுமென தோன்றியது. ரோபி மீது எந்தக் குற்றமும் இல்லை என்பது எனக்குத் தெரியும். எங்கள் மகளுக்கு ரோபி என பெயர் வைத்தபோது கார்த்திக் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.”

“ இப்ப ரோபி ரொம்பவே பெரியவள் ஆகியிருப்பாளே?”

“ அட பொண்ணே… இப்ப ரோபியோட ரெண்டு பசங்களுமே வளர்ந்து விட்டார்கள். பெரியவனுக்கு எட்டு வயசு. சின்னவனுக்கு ஆறு வயசு. இங்க ஒரு தோட்டக்காரனுக்கு திருமணம் செய்து கொடுத்திருக்கிறோம். நாங்கள் அந்த ரெண்டு பசங்களுக்கும் ச்சுந்துரு-முந்துரு என பெயர் வைத்திருக்கிறோம்.”

” அட…….ரோபியோட குழந்தைங்க பெயர் தானே…”

“ ஆமா…. அதே பெயர் தான். அவர்கள் பாவத்திற்குப் பிறந்த குழந்தைகள் இல்லை என்பது எனக்குத் தெரியும்”

“ நான் வெகு நேரம் கேதகியின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு நாட்டாமை தன் கருணையற்ற கைகளால் தையலைப் பிரித்த கதை தான் கார்த்திக்கின் கதை. கேதகி தன் மனத்தின் பட்டு நூலால் தையல் பிரிந்த கார்த்திக்கின் கதையை மறுபடி தைத்துவிட்டாள். இது ஒரு கதைக்கான விசயம் தான். ஆனால், எனக்கும் தெரியாமல், உங்களுக்கும் தெரியாமல் உலகம் முழுக்கவும் நாட்டாமைகளால் தினம் தினம் தையல் பிரிக்கப்படுகிற கதைகள் எத்தனையெத்தனையோ?”

•••

http://malaigal.com/?cat=15

  • 4 weeks later...
  • தொடங்கியவர்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.