Jump to content

'போட்டு வாறம்'


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
பதியப்பட்டது

அவனுக்குக் குழப்பமா இருந்தது, ஒருவகை பயம் கலந்த ,எண்ணங்கள் மாறி மாறி வந்தன.கிராமத்தின் புதிய சூழல், முதல் முதலாக தனியாக ஒரு வீட்டுக்குள், எவரது கண்காணிக்கும் பார்வைகள் அற்ற நிலையில்.அவனுக்கு, எழும் உணர்வுகளை அதன் சூழலை அலசுவது அதன் பின்னரே நிதானமாக செயற்படுவது என வயசுக்கு மீறிய சிந்தனைகள் அந்த விடலைப் பருவத்திலும்.விடலைப் பருவத்திற்கே உரிய உணர்வுகள் எழுந்த போதெல்லாம் அதே அலசல் அதே நிதானம்.ஆனால் இப்போ அந்த நிதானத்தை ,இவள் விழுங்கி விடுவாளோ என்று மனசு படபடத்தது.

அவள் பக்கத்து வளவுக்குள் இருந்து பனை ஓலையினால் வேயப்பட்ட கதியால் வேலிக்குள்ளால் மறைந்திருந்து இவன் என்ன செய்கிறான் என்று நோட்டம் விடுவது.ஒவ்வோரு நாள் காலையிலும் இவன் பக்கத்து வீட்டு அண்ணையிடம் இருந்து அன்றைய பேப்பரை வாங்கச் செல்லும் தருணங்களில் எல்லாம் கவனமாப் பேப்பரை ஒழித்து வைத்து, பின்னர் தேடுவது போல் தேடி இவனிடம் கொடுக்கும் போது பார்க்கும் பார்வை, இவை எல்லாமே அவனை நிலை தளம்பச் செய்தது.அவள் கண்கள் கதை பேசின.இமைகளைச் சிமிட்டாமல் அந்த கரு விழிகள் தூண்டிய உணர்வுகள் மீண்டும் மீண்டும் வந்து இரவு பகலெனப் பாராது இவனது மனதைக் குழப்பியது.இவன் இங்கே தனியா வந்திருப்பதோ பரீட்சைக்குப் படிக்க.டவுனில ஆமிப்பிரச்சினயால இவனை இங்க தனியா நிம்மதியா இருந்து படிக்கட்டும் என்று அனுப்பிய பெற்றொரின் நம்பிக்கையை இழக்க இவன் தாயாரில்லை.

ஆனால் இவள், எல்லாவற்றையும் குழப்பி விடுவாள் போல் இருந்தது.'இதை அண்ணையிட்ட குடுத்துப்போட்டு வா பிள்ளை' என்று சொன்ன பக்கத்து வீட்டு மாமியின் குரல் வளவுக்குள்ளால கேட்டு முடிக்கும் முன்னமே, அன்றைய சாப்பாட்டுக் கோப்பையுடன் இவள் , குனிந்த தலையுடன் முன்னால். ' படிச்சு முடின்ச்சா? ', ம் எங்க படிக்கிறது என்று மனசுக்குள் நினைத்துக் கொண்டே, 'ம் இல்ல இன்னும் இருக்கு' இவன்.'என்ன படிக்கப் போறியள்?' ம் இவளிட்ட இண்டைக்குத் தப்பிப்பது கடினம் போல.'ஏன் உமக்கு அது எண்டு கேக்கலாமென்று நினைவு, ஆனா அது இவனை ,மேலும் அவளிடம் இழுத்துக்கொண்டு விடும் என்று மனசு நிற்பாட்டியது.'ம் இன்னும் யோசிக்கேல்ல' என்று சமாளித்தான்.ஒரு பக்கம் இனி என்ன கேக்கப்போகிறாள் என்று மனசு படபடத்து, இன்னொரு பக்கம் இவளிடம் எழும் விடலைப் பருவ உணர்வுகளை வெளிக்காட்டி , இந்த அலைபாயும் உணர்வுகளுக்கு தீனி போடுவதா இல்லை, அரைகுறையாப் பதில் சொல்லி , அவளைத் தூர நகர்த்துவதா என்று ஒவ்வொரு கேள்வியையும் படபடப்புடன் எதிர் நோக்கியபடி இவன்.அவளோ கிடைத்த சந்தர்ப்பத்தை விடுவதாக இல்லை.' படிச்சுப் போட்டு என்ன செய்யப் போறியள்?' ,ம் '

வேற என்ன செய்யிறது எல்லாரையும் போல வேலை செய்து,கலியாணம் கட்டி ,பிள்ளை பெற்று,ஒரு நாள் சாகபோறன், எண்டு சொல்லுறதா, இல்லை 'படிச்சுப் போட்டு போராடப் போகப் போறன் எண்டு சொல்லுறதா, இல்லை எனக்கே இன்னும் என்ன செய்யப்போறன் எண்டு தெரியேல்ல எண்டு உண்மையச் சொல்லுறதா?.ம் 'பசிக்குது, இண்டைக்கு என்ன சாப்பாடு? .'ஓ மறந்திட்டன் இந்தாங்கோ பிடியுங்கோ ,புட்டும் ,மீன் குழம்பும்' என்று மூடிய கோப்பையை நீட்டினாள்.வழக்கம் போலவே கோப்பையை பிடிக்க வழி இல்லாது முழுக் கோப்பையையும் கைகளால் விரித்துப் பிடித்திருந்தாள்.வழக்கம் போலவே எப்படி கைபடமால் வாங்குவது எண்டு இவன்.இல்லை பறுவாயில்லை என்று இன்னொரு உணர்வு அலை பாய்ந்தது. மீண்டும் மீண்டும் நினைவுகளில் வந்து போகும் அந்த உரசும் தருணம் இதோ இவன் முன்னால்,அவளுக்குத் தெரியும் இவன் ஏன் யோசிக்கிறன் என்று.எதுவும் தெரியாதவள் போல், ஒரு நமட்டுச் சிரிப்புடன் அவள்,கோப்பையை நீட்டிய படி.தயங்கித் தயங்கி இவன் கைகளை நீட்டிக் கோப்பையை வாங்குகிறான்.அவள் விரல்கள் இவன் விரல்களை லேசாக வருடியது போல் இருந்தது.ஆனால் அவள் எதுவுமே நடாக்காதது போல் தலையைக் குனிந்த படி.சில நிமிடங்கள் ,உலகமே உறைந்து விட்டது போல், அவளும்,அவனும் மட்டுமே அங்கே நின்றிருந்தார்கள்.'பிள்ளை ...பிள்ளை ..' பக்கத்து வீட்டு மாமியின் குரல் ,'ஓம் வாறன் அம்மா', ' போய்ட்டு வாறன்' என்று இவள், பதிலுக்குக் காத்திருக்காமல் வந்த வேலை முடிந்த திருப்தியில் சிரிச்சுக் கொண்டே, கெந்திக்கெந்தி பாவாடை அலைபாய ஓடினாள்.இவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

இது வெறும் விடலைப் பருவ உணர்வு தான், காதலெண்டால் அது பேசிக் கதச்சு கன நாள் பழகி, புரிந்திணர்வு எற்பட்டு வர வேணும் ,இது வெறும் வயசுக்கோளாறு தான், மனசு மீண்டும் நிதானத்துடன் சிந்திக்கத் தொடங்கியது.அதோட படிக்க வேணும்,எதாவது சாதிக்க வேணும்,போராட வேணும், எல்லாரையும் போல காதல் செய்து கலியாணம் கட்டி சாகிறைதை விட எதாவது செய்ய வேணு மெண்டு பல யோசனை.இந்த வயசில என்ன காதல் வேண்டிக் கிடக்கு.ஆனா இவள் ஏன் அடிக்கடி மனசில வாறாள்.அந்த நமட்டுச் சிரிப்பும்,வருடிய விரலும், இமைக்காத விழிகளும் ஏன் மீண்டும் மீண்டும் வருகுது?புத்தகதைத் திறந்தா வருகுது, நித்திரை கொள்ளப்போனா வருகுது.ம் இதுக்கு ஒருமுடிவு கட்ட வேணும்.இல்லாட்டி எல்லாமே குழம்பிப் போயிடும்.

பின்னேரம், வீட்டுக்கு முன்னால் இருக்கும் வெளியில கிரிக்கட் விளயாடேக்க, அவள் எங்கோ வெளியால அன்ணையிடன் சென்று விட்டு வருகிறாள்.மட்டையைப் பிடித்த படி இவன்.பந்து போட்டவன் அவளைக் கவனித்துவிட்டான்.'அண்ணை என்ன இந்த விசிக்கு விசுக்குறியள் ,கவனம் போறவை வாறவியில் பட்டிடும்'.என்ன இவனுக்கும் இது தெரின்ச்சு போச்சா? எப்படித் தெரியும்?ம் இல்லை நான் தான் சும்மா யோசிக்கறனோ?இல்லை இல்லை இதுக்கு இப்பவே முடிவு கட்ட வேணும்.இல்லாடிச் சொல்ல ஏலாது,இது எங்க போய் முடியும் எண்டு.

இரவு இவனால் எதுவுமே படிக்க முடியவில்லை. நாளைக்கு அவளிடம் நேரடியாகவே சொல்லி விட வேணும்.ம் என்ன சொல்லுறது என்னண்டு சொல்லுறது.இது எனக்குப் பிடிக்கேல்ல எண்டா? அப்படி ஏண்டா அது எது எண்டு கேட்டால் என்ன சொல்லுறது.அப்படி ஒண்டும் இல்லை அண்ணை எண்டு சொன்னாள், என்ன செய்யிறது.இல்லை இல்லை அப்படி இருக்காது.அப்ப ஏன் அந்தப் பார்வை ஏன் அந்த வருடல்? ஒண்டும் இல்லை எண்டால் ஏன் அந்தச் சிரிப்பு?ம் சரி அப்படி ஒண்டு இருக்கு எண்டால் ஏன் அதை நான் முறிக்க வேணும்.அவள் வடிவாத் தானே இருகிறாள்.இது ஏன் காதலா இருக்கக் கூடாது? என் அவள் என்னை விரும்பக் கூடாது? இல்ல இல்லை இந்த வயசில வாறது எல்லாம் பாலியற் கோளாறு எண்டு எங்கோ படிச்ச நாபகம்.அப்ப இது சும்மா வயசுக் கோளாறு தான்.ம் இப்ப இது ஒண்டும் வேண்டாம்.படிக்க வேணும், அம்மா அப்பாவை ஏமாத்தக்கூடாது.ம் ஆனா அந்தக் கள்ளச் சிரிப்பு,அந்தப் பார்வை ,அந்த வருடல்,ம் விடுபட முடியேல்லையே?

அடுத்த நாள் காலையில் இதுக்கு எப்படியாவது ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று யோசித்தபடி நித்திரை கொண்டு விட்டான்.அடுத்த நாள் காலை கதவு தட்டும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழும்பியவனை, 'என்னடா தம்பி இன்னும் நித்திரையோ ' என்று கேட்டபடி அம்மா.' ஓம் இரவு நேரம் போய்ட்டுது படுக்க, அது தான் எண்டு இழுத்தான்.'என்ன திடீரெண்டு?'.'இல்லையப்பு, இனி இங்க இருக்கேலாது போல, இங்காலையும் பிரச்சினை வரும் போல,அதுதான் கொப்பர் உன்னைக் கெதியாக் கூட்டிக்கொண்டு வரச்சொன்னவர்.'அப்ப பரீட்ச்சை?'.ஓம்'அத எழுதிப்போட்டு எல்லாரும் இந்தியா போகலாம் எண்டு அப்பா சொல்லுறார்'.ம் மீண்டும் ஒரு இடம் பெயர்வு.மீண்டும் மொரு திருப்பம்.

அவசர அவசரமாக எல்லா உடுப்புக்களையும், புத்தகங்களையும் அடுக்கிய படி இவன். அம்மாவுடன் வீட்டுக் கதவைப் பூட்டிய பின், பக்கத்து வீட்டில் சாவியைக் குடுத்து விட்டு. அம்மா, 'நாங்கள் இனி இங்கால எப்ப வாறமோ தெரியாது வீட்டை நீங்கள் தான் பாத்துக்கொள்ள வேணும்.அவள் கவலை தோய்ந்த முகத்துடன் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்தாள். ' நாங்கள் போய்ட்டு வாறம்' அம்மா.'இனி இங்கால வரமாட்டியளோ அன்ரி? அவள்.'தெரியேல்லப் பிள்ளை, நாட்டு நடப்புக்கள் எப்படியோ யாரு கண்டது?.

'ஓம் ஓம் இங்காலையும் பிரச்சினை வரப்போகுதாம் எண்டு தான் சனம் கதைக்குது' மாமி.

'அப்ப எங்களை எல்லாம் மறக்க மாட்டியளே?',அவள் யாரைப் பாத்துக் கேட்டாள் என்று தெரிந்திருந்தும்,மவுனமாக அவன்.'இல்லை இல்லை யாரு சொன்னது அப்படி, எங்க போனாலும் எப்படி எங்கட ஊரை மறக்கிறது?என்றாள் அம்மா.'அப்ப நாங்க போட்டு வாறம்,மாமி' என்றான் இவன்.

எத்தனை மாற்றங்கள் நிகழ்ந்து விட்டது.புது உறவுகள் புதுச் சூழல்,விடை தெரியாத கேள்விகளுக்கும், குழப்பங்களுக்கும் இடம் பெயர்வு பதில் சொல்லியது. ஆனால் இன்னும் நினிவுகளில் ஊரும், அவளும், பேசிய விழிகளும், வருடிய விரல்களுமாக , 'எங்களை மறக்க மாட்டியளே' என்பதே இன்னும், இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. 'நாங்கள் போட்டு வாறம் ' என்பது மட்டுமே இன்னும் அவளின் கேள்விக்குப் பதிலாக இருக்கிறது. ம் நாங்கள் எப்ப போகப் போறம்?

Posted by அற்புதன் at 03:02

http://aatputhan.blogspot.com/2007/02/blog-post.html

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கதை அழகு.

இது உங்கள் கதையா அம்மணி

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.