Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்த வரலாற்றுச் சம்பவங்களுக்கெல்லாம் மெரினா சாட்சியாக இருந்திருக்கிறது! #Marina #2MinRead

Featured Replies

இந்த வரலாற்றுச் சம்பவங்களுக்கெல்லாம் மெரினா சாட்சியாக இருந்திருக்கிறது! #Marina #2MinRead

உலகின் மிக நீளமான கடற்கரைகளில் ஒன்றாக விளங்கும் மெரினாக் கடற்கரைக்கு நீண்ட நெடிய வரலாற்றுச் சிறப்புகள் உண்டு. சுதந்திரப் போராட்டம் முதல் ஓ.பன்னீர்செல்வத்தின் தியானம் வரைக்கும் ஏராளமான சம்பவங்கள் இந்தக் கடற்கரை மணலில் பதிவாகியிருக்கின்றன. அப்படியான சில பதிவுகளைப் பற்றியதே இந்தக் கட்டுரை!

மெரினா போராட்டம்

முதலில் மெரினாவைப் பற்றி ஒரு ஸ்கேனிங்: 
உலகின் மிக நீளமான கடற்கரைகளில் ஒன்றாகவும் இந்தியாவின் மிக நீளமான நகர்ப்புற கடற்கரையாகவும் உள்ள மெரினா, 12 கி.மீ நீளமுடையது. தலைமைச் செயலகம், காவல்துறை தலைமை அலுவலகம் என தமிழகத்தின் பிரதான அரசு அலுவலகங்களும், சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களும் இதையொட்டியே அமைந்திருக்கின்றன. தொடக்கத்தில் களிமண் பரப்பாக இருந்த இந்தக் கடற்கரைப் பகுதியை 1880ம் ஆண்டு, ஆங்கிலேய அதிகாரி மவுண்ட் ஸ்டூவர்ட் எல்பின் ஸ்டோன் அழகுபடுத்தினார். இப்போது சுதந்திரப் போராளிகள், படைப்பாளிகளின் சிலைகள், புகழ்பெற்ற உழைப்பாளர் சிலை என கலையும் அழகும் தவழும் இடமாக விளங்குகிறது மெரினா. 

சரி... இங்கு நடந்த சில சரித்திர நிகழ்வுகளைப் பார்க்கலாம்!

சுதந்திரப் போராட்டம்!
சுதந்திரப் போராட்ட அனலை தேசம் முழுவதும் கொண்டு செல்ல மெரினாக் கடற்கரை மிகப் பெரிய பங்களித்திருக்கிறது. ஏராளமான தேசிய தலைவர்கள் இந்த கடற்கரை மணலில் நின்று விடுதலை வேட்கையை ஊட்டியிருக்கிறார்கள். மகாத்மா காந்தி, நேதாஜி, அம்பேத்கர், திலகர், நேரு உள்ளிட்ட பல தலைவர்கள் இங்கு நடந்த கூட்டங்களில் பேசியிருக்கிறார்கள். பாரதியார் பல வீரமிக்க உரைகளை இந்த கடற்கரை மணலில் நின்று ஆற்றியிருக்கிறார். பல்லாயிரம் மக்கள் கூட, உப்பு சத்தியாகிரக நிகழ்ச்சியும் இங்கு நிகழ்ந்திருக்கிறது. திலகர் பேசிய இடம் "திலகர் திடல்" என்று இப்போதும் அழைக்கப்படுகிறது.  

இந்தி எதிர்ப்புப் போராட்டம்!
இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் அழுத்தமாகப் பதிவாகியிருக்கிறது மெரினா. தமிழ்நாட்டில் இந்தி மொழி திணிப்பதை எதிர்த்து, பட்டுக்கோட்டை அழகிரி தஞ்சை தொடங்கி சென்னை வரை நடை பயணப் பிரசாரம் மேற்கொண்டார். 1938, செப்டம்பர் 11ம் தேதி சென்னை மெரினாக் கடற்கரையில் அந்தப் பயணம் நிறைவுற்றது. 50 ஆயிரம் பேருக்கு மேல் திரண்ட அந்த நிறைவு நிகழ்வில் தந்தை பெரியார், சோமசுந்தரபாரதி, மறைமலை அடிகள் உள்ளிட்ட பல தலைவர்களும் கரம்கோத்து நின்றார்கள். “இங்கே தேசியத்தின் பிரதிநிதியாக சோமசுந்தரபாரதி இருக்கிறார்; சைவத்தின் பிரதிநிதியாக மறைமலை அடிகளார் இருக்கிறார்; சுயமரியாதை இயக்கத்தின் பிரதிநிதியாக நான் இருக்கிறேன். நாங்கள் அனைவரும் இணைந்து அறிவிக்கிறோம், `தமிழ்நாடு தமிழருக்கே'..." என்று முழங்கினார் தந்தை பெரியார். அந்த வகையில், "தமிழ்நாடு தமிழருக்கே" என்ற குரல் முதன்முதலில் எழுந்தது, இந்த மெரினாவில் தான்.. 

தேசிய முன்னணி!

இந்தியாவில் ஒரு கட்சி ஆட்சிமுறைக்கு முடிவு கட்டியதிலும் மெரினாவுக்கு பங்குண்டு. ராஜிவ் காந்தியோடு கருத்து முரண்பட்டு காங்கிரஸில் இருந்து வெளியேறிய வி.பி.சிங், லோக் தளம் என்ற கட்சியைத் தொடங்கினார். பிறகு இக்கட்சி ஜனதா கட்சியோடு இணைந்து ஜனதா தளம் ஆனது. 1989 பாராளுமன்றத் தேர்தலில் இக்கட்சி தேசிய அளவில் பல்வேறு மாநிலக் கட்சிகளை இணைத்துக் கொண்டு, தேசிய முன்னணி என்ற பெயரில் தேர்தலை எதிர்கொண்டது. தெலுங்கு தேசம், அசாம் கண பரிஷத், திராவிட முன்னேற்றக் கழகம் போன்ற கட்சிகள் இதில் முக்கியப் பங்கு வகித்தன. என்.டி.ராமராவ் கூட்டணிக்குத் தலைமை வகித்தார். தேசிய முன்னணி பற்றிய அறிவிப்புக் கூட்டம் முதன்முதலில் சென்னை மெரினாக் கடற்கரையில் தான் நடந்தது. போபர்ஸ் ஊழலை முன்வைத்து தேர்தலை எதிர்கொண்ட தேசிய முன்னணி, தேர்தலில் அதிக இடங்களைக் கைப்பற்றியது. பாரதிய ஜனதா கட்சியும் இடதுசாரிகளும் வெளியில் இருந்து தேசிய முன்னணியை ஆதரித்தனர். என்.டி.ராமராவ் பிரதமராக விரும்பாததால் வி.பி.சிங் பிரதமரானார்.

எம்ஜிஆரின் உண்ணாவிரதம்-1!
மத்தியில் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. தமிழகத்தில் எம்ஜிஆர் ஆட்சி. சில அரசியல் காரணங்களால், தமிழகத்துக்குக் கொடுத்து வந்த அரிசியை மத்திய அரசு திடீரென்று நிறுத்தியது. இதைக் கண்டித்து 7 மணி நேர அடையாள உண்ணாவிரதத்தை அறிவித்தார் எம்ஜிஆர். 1983, பிப்ரவரி 9ம் தேதி, காலை 10 மணிக்கு மெரினாவில் உண்ணாவிரதம் தொடங்கியது. சில மணி நேரங்களிலேயே மத்திய அரசு, "வழக்கம்போல தமிழகத்துக்கு அரிசி வழங்கப்படும்" என்று அறிவித்தது. . 

துப்பாக்கிச் சூடு!

1983ல் தான் இதுவும் நடந்தது. உலக வங்கி நிதியுதவியோடு மெரினா கடற்கரையை அழகுபடுத்தும் திட்டம் ஒன்றை கொண்டு வந்தார் முதல்வராக இருந்த எம்ஜிஆர். அதற்காக மீனவர் குப்பங்களை காலி செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், மீனவர்கள் இடத்தை விட்டுக் கொடுக்கத் தயாரில்லை. இதையடுத்து, காவல்துறை அதிகாரிகள் தேவாரம் - மோகன்தாஸ் ஆகியோரின் தலைமையில் நள்ளிரவில் மீனவர்களின் வீடுகளுக்குள் காவல்துறை புகுந்து மீனவர்களை துவம்சம் செய்தது. துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டது. இறந்தவர்கள் பற்றிய கணக்குகள் கூட இல்லை. மெரினா சந்தித்த மோசமான வரலாற்று நிகழ்வு இது.  
 

2011-01-27_%281%29_0142_15125.jpg

எம்.ஜி.ஆர் உண்ணாவிரதம்-2!

1985... தனி ஈழம் கோரி இலங்கையில் ஈழத்தமிழர்கள் நடத்தியப் போராட்டம் கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. இலங்கை அரசு, தமிழர்களை கொடூரமாக ஒடுக்கத் தொடங்கியது. ஏராளமானோர் படுகொலை செய்யப்பட்டார்கள். பலர் சிறைகளில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார்கள். ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக, தமிழகத்தில் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், கதவடைப்பு என போராட்டங்கள் தீவிரமாகின. அப்போது ஆட்சியில் இருந்த எம்ஜிஆர், அனைத்துக் கட்சி சார்பில் உண்ணாவிரதத்துக்கு அழைப்பு விடுத்தார். அந்தப் போராட்டம் மெரினா கடற்கரையில் அண்ணா சமாதிக்கு அருகில்தான் நடந்தது. அதே நாளில் காந்தி சிலை அருகே நடிகர் சிவாஜி கணேசனும் உண்ணாவிரதம் இருந்தார். 
 

சீரணி அரங்கம், மெரினா

வரலாற்றுச் சின்னம் இடிக்கப்பட்டது!

தமிழகத்தின் வரலாற்றுச் சின்னங்களில் ஒன்றாக விளங்கிய சீரணி அரங்கம் 2003ல் இடிக்கப்பட்டது. மெரினா கடற்கரையில், கூட்டங்கள் நடத்தவும், மத நிகழ்ச்சிகள் நடத்தவும் பெரும் பங்காற்றிய இந்த அரங்கம், 1970களில் திமுக அரசால் கட்டப்பட்டது. அண்ணா உருவாக்கிய "சீரணி படை" என்ற அமைப்பே இந்த அரங்கத்தை கட்டியது. கடற்கரையை ஒழுங்குபடுத்துவதற்காக அரங்கத்தை இடிப்பதாக அப்போதைய அதிமுக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 2002ல் கடற்கரையில் இருந்த கண்ணகி சிலையையும் அகற்றியது அதிமுக அரசு. ராணி மேரி கல்லூரியையும் இடிப்பதற்கான ஏற்பாடுகள் நடந்தன. ஆனால், எதிர்கட்சிகள், மாணவர்கள் மட்டுமின்றி, பொதுமக்களும் வீதிக்கு வந்து போராடியதால் அது காப்பாற்றப்பட்டது. முதல்வர் ஜெயலலிதாவின் வாஸ்து நம்பிக்கை காரணமாகவே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்று அப்போது பேசப்பட்டது.
 

ஜெயலலிதா உண்ணாவிரதம்!

தமிழகம்-கர்நாடகம் இடையிலான காவிரி நீர் பங்கீடு விவகாரத்தை விசாரிக்க அமைக்கப்பட்ட நடுவர் மன்றம், 1991, ஜுன் 25 ந்தேதி இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. ஆண்டுதோறும் தமிழ்நாட்டிற்கு 205 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் திறந்து விடவேண்டும் என்பது அந்த உத்தரவு. சுப்ரீம் கோர்ட்டும் இந்தத் தீர்ப்பை உறுதிசெய்தது. ஆனால், கர்நாடகம் தண்ணீரைத் திறந்து விடவில்லை. 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் காவிரி நடுவர் மன்ற இடைக்கால தீர்ப்பு நிறைவேற்றப்படாமல் இருந்தது. "உடனடியாக, பிரதமர் நரசிம்மராவ் தலையிட்டு தமிழ்நாட்டுக்கு தண்ணீர் பெற்றுத்தர வேண்டும்" என்று வற்புறுத்தி, 18.7.1993 அன்று திடீரென்று உண்ணாவிரதம் மேற்கொண்டார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா. அவர் உண்ணாவிரதம் இருக்கத் தேர்வு செய்தது மெரினாவைத் தான். 4 நாட்கள் உண்ணாவிரதம் நீடித்தது. அதன்பிறகு மத்திய நீர்வள துறை மந்திரி வி.சி.சுக்லா ஜெயலலிதாவுடன் பேச்சு நடத்தினார். காவிரி நீர் தொடர்பாக 2 கமிட்டிகள் அமைத்து, தண்ணீரின் அளவு கண்காணிக்கப்படும் என்று உறுதி அளித்ததைத் தொடர்ந்து உண்ணாவிரதத்தைக் கைவிட்டார்.
 

கருணாநிதி உண்ணாவிரதம்!
2009. இலங்கையில் போர் உச்சம் தொட்டிருந்த காலக்கட்டம். உடனடியாக போரை நிறுத்தக்கோரி ஏப்ரல் 27ம் தேதி அப்போதைய முதல்வர் கருணாநிதி உண்ணாவிரதம் தொடங்கினார். முன்னறிவிப்பு இல்லாமல் தொடங்கிய அந்த உண்ணாவிரதமும் மெரினாவில் தான் நடந்தது. "பெரும் ஆயுதங்களைக் கொண்டு மக்கள் செறிந்திருக்கும் பகுதிகளில் தாக்குதல் நடத்த மாட்டோம்" என்று இலங்கை அரசு அறிவித்ததாக தகவல் வந்த நிலையில் அன்று மாலையே உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார் கருணாநிதி

மெரினாவில் கருணாநிதி உண்ணாவிரதம்

ஜெயலலிதா!

2012-ம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு எம்.ஜி.ஆர். நினைவகத்தின் முன் பகுதியில் பல்வேறு பணிகளை மேற்கொண்டது. அப்போது இரு கை கூப்பி வணங்குவது போல இருந்த பழைய வடிவத்தை மாற்றி ஒரு பறக்கும் குதிரையும், பிரமாண்டமான இரட்டை இலைச் சின்னத்தை நிறுவினார்கள். இது பலத்த சர்ச்சையைக் கிளப்பியது. திமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. ஆனால், நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்து விட்டது. 
மெரினா கடற்கரை கடலோர ஒழுங்குமுறை பகுதிக்குள் வருகிறது. அங்கு புதிதாக எந்த நினைவுச்சின்னமும் அமைக்கக்கூடாது என்று விதி இருக்கிறது. இச்சூழலில் முதல்வர் ஜெயலலிதா இறந்தபோது, எம்.ஜி.ஆரின் நினைவிடத்துக்கு உள்ளேயே ஜெயலலிதாவின் உடலும் அடக்கம் செய்யப்பட்டது. இது சூழலியலாளர்கள் மத்தியில் விவாதத்தைக் கிளப்பியது.
 

ஜல்லிக்கட்டு!

இந்தியாவை, ஏன் உலகத்தையே திரும்பிப் பார்க்கவைத்த ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அறவழியில் நடந்த போராட்டமும் மெரினாவில்தான் நடந்தது. அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு மீதான தடையை விலக்கக்கோரி மாணவர்கள் நடத்திய போராட்டத்தைத் தடி கொண்டு காவல்துறை முடக்க, தமிழகமெங்கும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான உணர்ச்சி பற்றியெறியத் தொடங்கியது. மாணவர்கள் சிறுகச்சிறுக மெரினாவில் திரண்டார்கள். நூறு ஆயிரமானது. ஆயிரம் லட்சங்களானது. மெரினாவில் மணல் தெரியாத அளவுக்கு தலைகள் நிறைந்தன. இளைஞர்களின் எழுச்சியைக் கண்டு திகைத்த அரசு, உடனடியாக ஒரு அவசர சட்டத்தை உருவாக்கியது. ஆனால், இளைஞர்கள் நிரந்தர தீர்வு கேட்டு ஆறுநாட்கள் கடந்தும் போராட்டத்தை தொடர்ந்தார்கள். அதுவரை மிகவும் இணக்கமாக இருந்த காவல்துறை, ஏழாம் நாள் தன் சுயரூபத்தைக் காட்டியது. கண்ணில் படுபவர்களையெல்லாம் அடித்து நொறுக்கினார்கள். பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. மீனவர் குடியிருப்புகள் தாக்கப்பட்டன. வாகனங்களுக்கு காவலர்களே தீ மூட்டிய காட்சிகள் எல்லாம் வெளிவந்தன. வரலாற்றில் இளைஞர்களின் மாபெரும் எழுச்சியாகவும், காவல்துறையின் அப்பட்டமான மனித உரிமை மீறலாகவும் பதிவானது இந்த சம்பவம்.

தியானம்!
இதுவரை இல்லாத அளவுக்கு தமிழகத்தை மட்டுமின்றி இந்தியாவையே பரபரக்க வைத்திருக்கிறது, முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மெரினாவில் ஜெயலலிதா நினைவிடத்தில் மேற்கொண்ட தியானம். எந்த நெருக்கடியிலும் பொறுமையாகவும், நிதானமாகவும், பணிவு மாறாமலும் செயல்படும் பன்னீர்செல்வம் முதல்முறையாக தலைநிமிர்ந்து கம்பீரக் குரலில் பத்திரிகையாளர்களை சந்தித்தது மெரினாவில் தான். யாருமே எதிர்பாராத சூழலில், தன் பாதுகாவலர்களோடு மெரினாவுக்கு வந்த பன்னீர்செல்வம், ஜெயலலிதா நினைவிடத்தில் முக்கால் மணி நேரம் கண்மூடி அமர்ந்திருந்தார். அதற்குள் காவல்துறையும், பொதுமக்களும், கட்சியினரும், ஊடகங்களும் குவிந்து விட, மெரினாவில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. கண்ணீர் தளும்ப தியானத்தை முடித்த பன்னீர் செல்வம், மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஊடகங்களைச் சந்தித்து, இதுநாள் வரை மனதுக்குள் சுமந்த விஷயங்களை வெளிக்கொட்டினார். மௌனித்துக் கிடந்த அரசியல் களத்தில் தீப்பற்றிக் கொண்டது. தமிழகம் தூக்கத்தைத் தொலைத்தது. மெரினா வரலாற்றில் ஒரு முக்கியப் பதிவாக மாறியது ஓபிஎஸ்-சின் தியானம். 

http://www.vikatan.com/news/coverstory/80157-marina-is-an-evidence-for-these-historical-events.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.