Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திராவிட ஆட்சி 50 ஆண்டுகள் - காங்கிரஸ் தலையில் தேய்க்கப்பட்ட எலுமிச்சைப்பழம்!

Featured Replies

திராவிட ஆட்சி 50 ஆண்டுகள் - காங்கிரஸ் தலையில் தேய்க்கப்பட்ட எலுமிச்சைப்பழம்!

ப.திருமாவேலன்

 

p24ee.jpg

p24f.jpg

* தமிழகம் பெற்றதும் மற்றவர்கள் கற்றதும்!
* தேசியக் கட்சிகள் இங்கு செல்வாக்கு இழந்தது ஏன்?
* தமிழ் மண் அடைந்த மாற்றங்களும் ஏற்றங்களும் எவை?
* தமிழக அரசியல் களத்தின் எதிர்காலம் எப்படி?

சிறப்புக் கட்டுரைகள் உள்ளே

சும்மா இருந்த சி.என்.அண்ணாதுரையை சி.சுப்பிரமணியம் தூண்டியதன் விளைவுதான், காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் அதல பாதாளத்தில் தள்ளப்பட்டது. ‘‘முச்சந்தியில் நின்று முழங்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழகத்தவர்க்கு சட்டசபைக்குள் வருவதற்கு தைரியம் உண்டா?” என்று கேட்டார் சி.சுப்பிரமணியம். அதற்காகவே காத்திருந்த அண்ணா, அடுத்து நடந்த திருச்சி தி.மு.க மாநாட்டில், இரண்டு பெட்டிகளை வைத்து, ‘தி.மு.க. தேர்தலில் போட்டியிடலாமா? வேண்டாமா?’ என்று வாக்கெடுப்பு நடத்தினார். பத்து மடங்கு பெரும்பான்மையினர் ‘தி.மு.க, தேர்தலில் போட்டியிடலாம்’ என்று p24b.jpgவாக்களித்தார்கள். 1957 சட்டமன்றத் தேர்தலில் வென்று உள்ளே வந்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்த முதல்நாளே அண்ணா, ‘‘இன்று நீங்கள் அந்தப் பக்கம் உட்கார்ந்து இருக்கிறீர்கள். நாங்கள் இந்தப் பக்கம் உட்கார்ந்து இருக்கிறோம். காலம் மாறும். வல்லூறுகளை சிட்டுக்குருவிகள் வீழ்த்தும் காலம் வரும். நாங்கள் அந்தப் பக்கம் இருப்போம். நீங்கள் இந்தப் பக்கம் இருப்பீர்கள்” என்றார். மூக்கில் பொடி ஒழுக, நாக்கில் நம்பிக்கை வடிய அண்ணா பேசிய பத்தே ஆண்டுகளில் காலம் மட்டுமல்ல, காட்சியும் மாறியது; ஆட்சியும் மாறியது. அதுதான் 1967.

‘‘படுத்துக்கொண்டே ஜெயிப்பேன்” என்றார் காமராசர். அவருக்கு அவ்வளவு நம்பிக்கை. ‘‘படுப்பது நிச்சயம், ஜெயிப்பது கஷ்டம்” என்றார் ராஜாஜி. அவருக்கு அதீதமான நம்பிக்கை. ராஜாஜி நினைத்தது நடந்தது. எந்தக் காங்கிரஸை வளர்க்க தெருத்தெருவாய் அலைந்தாரோ, அந்தக் காங்கிரஸை வீழ்த்துவதற்காக துடித்துக் கொண்டு இருந்த ராஜாஜிக்குக் கிடைத்த துடுப்புதான் அண்ணா. தனது அன்பான எதிரியான பெரியாரிடம் இருந்து பிரிந்து வந்து, பெரியாரால் மிகக் கடுமையாக விமர்சிக்கப்படும் மனிதராக அப்போது அண்ணா இருந்தது ராஜாஜிக்கு இனித்தது. காங்கிரஸ் கசப்பை மறைக்க, தி.மு.க இனிப்பை ராஜாஜி எடுத்தார். அண்ணாவுக்கு 100 கொள்கைகள் என்றால், அதில் 99 ராஜாஜிக்கு உடன்பாடு இல்லாதவை. காங்கிரஸ் எதிர்ப்பு ஒன்று மட்டுமே ராஜாஜிக்கு உடன்பாடு ஆனது. தி.மு.க இல்லாமல் காமராசரை வீழ்த்தமுடியாது என்பது ராஜாஜிக்குத் தெரியும். அதனால்தான், ‘‘பிராமணர்களே! பூணூலைப் பிடித்துக் கொள்ளுங்கள். கண்ணை மூடிக்கொள்ளுங்கள். உதயசூரியனுக்கு முத்திரைக் குத்துங்கள்’’ என்று சொல்லிக் கொண்டார் ராஜாஜி. அண்ணாவும், ராஜாஜியுடன் மற்ற கருத்துகளில் உடன்பட மாட்டார். ஆனால், ‘காங்கிரஸை வீழ்த்த வேண்டுமானால், காங்கிரஸ் எதிர்ப்பு வாக்குகள் ஒன்றுகூட சிதறிவிடக்கூடாது’ என்பதில் தெளிவாக இருந்தார். காங்கிரஸ் நீங்கலாக அனைத்துக் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தினார்.

p24c.jpg

ராஜாஜியின் சுதந்திரா கட்சி, ம.பொ.சி-யின் தமிழரசுக் கழகம், காயிதே மில்லத்தின் முஸ்லிம் லீக், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஃபார்வர்டு பிளாக் (முன்னேற்றக் கட்சி), பிரஜா சோஷலிஸ்ட், சம்யுக்த சோஷலிஸ்ட், சி.பா.ஆதித்தனாரின் நாம் தமிழர் கட்சி எனக் கொடியுள்ள கட்சிகள் அனைத்தையும் கூட்டணியில் சேர்த்தார் அண்ணா. இதைக் கூட்டணி என்று சொல்லாமல், ‘கூட்டுறவு’ என்றார். இந்த ஒவ்வொரு கட்சியுடனும் தி.மு.க தனித்தனியாக கூட்டணி வைத்திருப்பதாகச் சொன்னார். ‘‘முடிந்தவரை கரும்புச் சாறு சிந்தாமல் பிழிந்துவிட்டேன். அதற்கு மேலும் சாறு இருந்தால் ஈக்களுக்கு உணவாகட்டும் என்று விட்டுவிட்டேன்’’ என்றார் அண்ணா. ‘இவர்களுக்கு மிகப் பெரிய செல்வாக்கு இருக்கிறதா, இல்லையா’ என்று பார்க்கவில்லை. காங்கிரஸ் எதிர்ப்பு வாக்குகள் தனியாக இருக்கக் கூடாது என்பதே நோக்கம். தேர்தல் வெற்றிக்குப் பிறகு ‘ஆனந்த விகடன்’ எழுதிய தலையங்கத்தில், ‘தனியாகவே நின்றிருந்தால்கூட இதே வெற்றியை தி.மு.க பெற்றிருக்கும்’ என்று சொல்லி இருக்கிறது என்றால், அந்தளவுக்கு, ‘தி.மு.க ஆட்சிதான் அடுத்து’ என்ற சூழ்நிலையில் தன்னோடு பல கட்சிகளை இணைத்துக் கொண்டார் அண்ணா. ‘தான் நல்லவன் என்று சொல்ல யாராவது ஆள் வேண்டும்’ என்பது அண்ணாவின் தீர்க்க தரிசனம்.

திராவிட தேசியம் பேசிய அண்ணா, ‘கம்யூனிஸ்ட்டுகளே எனது முதல் எதிரி’ என்ற ராஜாஜி, ‘இந்தியாவை கம்யூனிஸ்ட் நாடாக்க வேண்டும்’ என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இஸ்லாமிய மார்க்கத்துக்கு அடித்தளம் அமைத்த காயிதே மில்லத், சோஷலிசம் பேசிய பிரஜா மற்றும் சம்யுக்த, தமிழ்த் தேசியத்தின் பிதாமகர் களான ம.பொ.சி-யும் சி.பா.ஆதித்தனாரும் என ‘வேறு வேறு கொள்கைகளில் விடாப்பிடிவாதம் கொண்ட மனிதர்கள் இணைந்து அமைத்த கூட்டணிக்குக் கொள்கையே இல்லை’ என்று காங்கிரஸ் கட்சி பிரசாரம் செய்தது. ‘ஒன்றுபட்ட கொள்கை உண்டு, அதுதான் எதேச்சதிகார காங்கிரஸை வீழ்த்துவது’ என்றார் அண்ணா. இந்தத் தலைவர்கள் அனைவரும் கோட்டைக்கு கழுதையில் ஊர்வலம் செல்வதாக ‘ஆனந்த விகடன்’ போட்ட கருத்துப்படம், அன்றைய காங்கிரஸுக்கு தெம்பூட்டியது. காங்கிரஸ் தனது தேர்தல் பிரசார சுவரொட்டியாக இந்தப் படத்தைப் பயன்படுத்தியது. ‘‘காங்கிரஸ் ஆளும் கோட்டையைப் பிடிக்க கழுதையே போதும்” என்றார் ராஜாஜி.

தி.மு.க-வுக்கு அந்தக் கழுதைகூடத் தேவைப்பட வில்லை. காங்கிரஸ் அப்போது ஆளும்கட்சி. எல்லா மட்டத்திலும் கெட்ட பெயரை வாங்கி வைத்து இருந்தது அந்தக் கட்சி. சாமான்ய மக்களுக்கு சாப்பிட சோறு கிடைக்கவில்லை. அரிசிப் பஞ்சம் தலைவிரித்தாடியது. ‘யாரும் அரிசியைப் பதுக்கக் கூடாது’ என்று அன்றைய முதலமைச்சர் பக்தவத்சலம் உத்தரவு போட்டார். உணவுப் பொருள் விற்பனையாளர்கள் குடோன்களில் தொடர்ந்து ரெய்டு நடந்தது. அதில் பெரும்பாலானவர்கள் காங்கிரஸ்காரர்கள். விருதுநகரில் போட்டியிட்ட காமராசரை ஆதரித்துப் பேச கண்ணதாசன் போனபோது அந்த ஊரைச் சேர்ந்த எம்.எஸ்.பி.ராஜா, ‘‘அரிசி வைத்திருப்பவர்கள், காங்கிரஸ்காரர்களைப் பார்த்தாலே மூட்டைகளைச் சேலையைப் போட்டு மூடுகிறார்கள். இதை பக்தவத்சலத்துக்குச் சொல்லுங்கள்” என்றார். முதல்வரிடம் கண்ண தாசன் சொல்ல, அவர் சிரித்தார். ‘ஆனால், தனது தொகுதிக்கு மட்டும் அரிசி சப்ளை ஒழுங்காக இருப்பது மாதிரி பார்த்துக் கொண்டார்’ என்று கண்ணதாசன் பிற்காலத்தில் எழுதி இருக்கிறார். ஆட்சி அதிகாரத்தை மிகத் தவறாகக் கையாண்டதன் விளைவு... நடுத்தர, அடிமட்ட மக்கள் மத்தியில் காங்கிரஸ் மீது வெறுப்பு வேரூன்றியது. ‘பக்தவத்சலம் அண்ணாச்சி... பருப்பு விலை என்னாச்சு?’, ‘காமராசர் அண்ணாச்சி... கடுகு விலை என்னாச்சு?’ என்ற முழக்கமாக தி.மு.க எழுப்பியது. இதற்கு காங்கிரஸ் தலைவர்களால் பதில் சொல்ல முடியவில்லை.

p24a.jpg

மாணவர்கள், இளைஞர்கள் நடத்திய இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது தமிழகத்தின் 40 இடங்களில் துப்பாக்கிச்சூடு நடந்தது. தமிழ்நாட்டுக்குள் முதன்முதலாக சட்டம் - ஒழுங்கை கவனிக்க ராணுவம் அழைக்கப்பட்டது. காங்கிரஸ் ஆட்சியின் அப்பட்டமான தோல்வியாக இது பார்க்கப்பட்டது. தமிழுக்காக தீக்குளித்தவர்களை, ‘சொந்தப் பிரச்னைக்காக தற்கொலை செய்துகொண்டவர்கள்’ என்று கொச்சைப்படுத்தினார் பக்தவத்சலம். ‘‘தமிழ்ப் பற்று, இனப்பற்று இல்லாதவர்களிடம் இருந்து ஆட்சி பறிக்கப்பட வேண்டும்” என்று ம.பொ.சி பிரசாரம் செய்தார்.

‘காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் யார் முதலமைச்சர்’ என்ற குழப்பம் அந்தக் கட்சியினரி டமும் பொதுமக்களிடமும் ஏற்பட்டது. அப்போது முதலமைச்சர் பக்தவத்சலம். அகில இந்திய அரசியலுக்குப் போய்விட்டார் காமராசர். அவர் திடீரென விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டார். ‘காங்கிரஸ் வென்றால் காமராசர் முதலமைச்சர் ஆகிவிடுவாரோ’ என்று பயந்தார் பக்தவத்சலம். சாத்தூரில் பிரசாரம் செய்த காமராசர், ‘‘உங்களுக்குப் புதிய முதலமைச்சர் கிடைக்கப் போகிறார்’’ என்று பொடி வைத்தார். இது பக்தவத்சலம் ஆதரவாளர் களையும், காமராசர் எதிர்ப்பாளர்களையும் கொதிக்க வைத்தது. ‘காமராசரை தோற்கடிக்க காங்கிரஸ்காரர்களே முயற்சித்தார்கள்’ என்று பிற்காலத்தில் கண்ணதாசன் எழுதும் அளவுக்கு உட்கட்சி மோதல் தீவிரமாக இருந்தது. தி.மு.க-வினர் வைத்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் காங்கிரஸ் ஆட்சி மீதான குற்றச்சாட்டாகப் பார்க்காமல், தனிப்பட்ட பக்தவத்சலம் மீதான குற்றச்சாட்டாக காங்கிரஸ்காரர்கள் பார்த்தார்கள். அந்தக் கட்சிக்கும் ஆட்சிக்கும் வினையே இதனால்தான் வந்தது. இந்த மனநோயில் இருந்து காங்கிரஸ் கட்சி இன்று வரை மீளவில்லை.

‘காங்கிரஸ் வென்றுவிடும்’ என்ற மெத்தனம் காமராசர் உள்பட அனைவருக்கும் இருந்தது. அதனால்தான் அனைத்துத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டது காங்கிரஸ். அகில இந்திய அளவில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் காங்கிரஸுக்கும் உறவு இருந்தாலும், தமிழகத்தில் கூட்டணியில் சேர்த்துக்கொள்ளவில்லை. 33 இடங்களில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தனித்துப் போட்டியிட்டது. அவர்களிடம் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, நான்கு ஆண்டுகளுக்கு முன்புதான் பிரிந்து என்பதால், இரு கட்சியினருக்கும் தி.மு.க கூட்டணியில் இணைவதில் தயக்கம் இருந்திருக்கலாம்.

தி.மு.க 173 தொகுதியில் போட்டியிட்டது. ‘எப்படியாவது வென்றாக வேண்டும்’ என்ற துடிப்பு,  அக்கட்சியின் ஒவ்வொரு தொண்டனுக்கும் இருந்தது. கர்நாடக மழைக்காலத்து மேட்டூர் நீர்மட்டம் மாதிரி, அந்தக் கட்சியின் செல்வாக்கு படிப்படியாக தமிழ்நாடு சட்டசபையில் அதிகமாகி வந்தது.

1957 தேர்தலில் 15 தொகுதிகளையும், 1962 தேர்தலில் 50 இடங்களையும் பெற்ற தி.மு.க, ‘அடுத்த தேர்தலில் ஆட்சியை நிச்சயம் பிடிக்கும்’ என்பது அண்ணாவின் ஆசை மட்டுமல்ல, நம்பிக்கையாகவும் இருந்தது. காங்கிரஸை அடுத்த பெரிய கட்சியாக தி.மு.க-தான் இருந்தது. ‘காங்கிரஸுக்கு வாக்களிக்காதவர்கள் தி.மு.க-வுக்குத்தான் வாக்களிப்பார்கள்’ என்றும் நினைத்தார் அவர். ‘‘மேல் மாடியில் இருந்து விழும் பொருள், அதற்குக் கீழே இருக்கும் மாடிக்குத்தான் முதலில் வரும்’’ என்று அவர் சொன்ன லாஜிக், அறிவியல் அடிப்படையில் மட்டுமல்ல... அரசியல் அடிப்படையிலும் உண்மை ஆனது.

பிப்ரவரி 23-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்ட போது, வெற்றித் தகவல்கள் வந்துகொண்டே இருந்தன. அண்ணாவால் அதனை நம்ப முடியவில்லை. ‘அந்தத் தொகுதியை தி.மு.க கைப்பற்றியது’, ‘இந்தத் தொகுதியை தி.மு.க கைப்பற்றியது’ என்று அகில இந்திய வானொலி சொல்லிக்கொண்டே இருந்தது. எந்தத் தொகுதியைக் கைப்பற்றுவதற்கு முன்னாலும், அகில இந்திய வானொலி நிலையத்தை தி.மு.க கைப்பற்றியது போல இருந்தது அந்த அறிவிப்புகள். தி.மு.க சார்பில் நின்ற சிறு மொட்டுகள் கூட மலர்ந்தன; காங்கிரஸ் சார்பில் நின்ற மலைகள் அடித்து நொறுக்கப்பட்டன. அண்ணாவால் இந்த வெற்றியை உள்வாங்கிக்கொள்ளவே முடியவில்லை. தலையணையை மடியில் வைத்து, ரேடியோவை அதன்மேல் வைத்து, செய்திகளைக் கேட்டுக்கொண்டே இருந்தார். வெற்றிச் செய்தியோடு வந்த ஒருவரைப் பார்த்ததும், ‘‘ஆட்சி வந்திருச்சு... இனி கட்சி போச்சு’’ என்று சொன்னார். இதுதான் அண்ணா இந்த நாட்டுக்கு வழங்கிய வெற்றிச் செய்தி.

p24.jpg

‘‘நாம் இன்னும் கொஞ்ச காலம் கழித்து ஆட்சிக்கு வந்திருக்க வேண்டும். ரொம்ப முன்கூட்டியே ஆட்சிக்கு வந்துவிட்டோம்” என்று அண்ணா சொன்னதாக க.ராசாராம் எழுதி இருக்கிறார். அதனால்தான் சட்டமன்றத்துக்குப் போட்டியிடாமல் நாடாளுமன்றத்துக்கு அண்ணா போட்டியிட்டாரோ என்னவோ?

கூட்டணி வைத்துக்கொண்டு தேர்தலில் போட்டியிட்டாலும், ஆட்சி அமைக்க கூட்டணி தயவு தேவைப்படாத அளவுக்கு 137 இடங்களில் தி.மு.க-வும், கூட்டணிக் கட்சிகள் 40 இடங்களிலும் வென்றன. ‘இனி சொந்தக் காலில் நிற்கலாம்’ என்று சொல்லிக்கொண்டார் அண்ணா. அவரையே சட்டமன்றக் கட்சித் தலைவராக தம்பிமார்கள் தேர்வு செய்தார்கள். தேர்தல் முடிவுகள் வந்து ஒரு வாரம் கழித்து, ஆட்சி அமைக்க உரிமை கோரினார் அண்ணா. அன்றைய ஆளுநர் உஜ்ஜல்சிங்கை சந்திப்பதற்காக அண்ணா, நெடுஞ்செழியன், கருணாநிதி ஆகிய மூவரும் காரில் செல்கிறார்கள். இன்றைய மறைமலையடிகள் பாலத்துக்குப் பக்கத்தில் போகும்போதுதான், ‘ஆளுநரை சந்திக்கச் செல்கிறோம். கையில் எதுவும் எடுத்துச் செல்லவில்லையே?’ என்று இவர்களுக்கு உறைக்கிறது. உடனே வாகனத்தை நிறுத்தி, அருகில் இருந்த கடையில் ஒரு எலுமிச்சைப் பழத்தை வாங்கினார்கள். அது காய்ந்து போய் இருந்தது. அதைக் கையில் வைத்து மூடிக்கொண்டார் அண்ணா. ஆளுநரைப் பார்த்ததும் படக்கென்று அதை அவர் கையில் கொடுத்தார். உஜ்ஜல்சிங் அதைக் கவனித்தாரா எனத் தெரியவில்லை. கருணாநிதி அதைக் கவனித்து, தனது ‘நெஞ்சுக்கு நீதி’யில் எழுதி இருக்கிறார். காங்கிரஸ் அடைந்த தோல்விக்கு அதன் உச்சந்தலையில் தேய்க்கப்பட்ட எலுமிச்சைப்பழ உதாரணமாக அது மாறிப் போனது. ‘தட்டிக் கேட்பாரற்ற ஒரு அரசியல் சக்தி மறைந்துவிட்டது’ என்று காங்கிரஸின் தோல்வியை ‘லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ்’ எழுதியது.

1967 மார்ச் 6-ம் தேதி முதல்வராகப் பதவியேற்ற அண்ணா, இதை உணர்ந்தவராக இருந்தார். வெற்றிவிழாக் கூட்டத்தில் இதைச் சொன்னார், ‘‘அதிகாரமும் பாரம்பர்யமும் பலமும் பொருந்திய காங்கிரஸ் கட்சியையே அதல பாதாளத்துக்கு மக்கள் தள்ளுகிறார்கள் என்றால், நாம் எல்லாம் எம்மாத்திரம்? மிக எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்” என்று அண்ணா பேசினார். அதனால்தான் யாரை எதிர்த்து ஆட்சியைப் பிடித்தாரோ, அந்த காமராசரை, பக்தவத்சலத்தைப் போய் பார்த்தார். எந்தப் பெரியாரை எதிர்த்து புதுக்கட்சி தொடங்கினாரோ, அந்த பெரியாரையே போய்ப் பார்த்தார். ‘மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு’ என்று அவர் நினைத்தார்.

அந்த உணர்வு அவரது தம்பிமார்களுக்கு இல்லாமல் போனதன் விளைவைத்தான், கடந்த ஐம்பது ஆண்டுகளாகப் பார்க்கிறோம். சொந்தக் கட்சிகளுக்குள் கத்தி சொருகுவதே இவர்களது அரசியல் ஆகிப் போனது.

‘ஆட்சி வந்துவிட்டது, கட்சி போச்சு’ என்றார் அண்ணா. அந்த ஒற்றைக் கனவை நித்தமும் நிறைவேற்றிவருகிறார்கள் தம்பிகள். இவர்கள் அண்ணாவின் தம்பிகள் அல்ல!

http://www.vikatan.com/juniorvikatan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.