Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனிமொழி முதல் விஜயபாஸ்கர் வரை... ஆள்பவர்களுக்கு வந்த சிக்கலும் ஆண்டவன் தரிசனமும்!

Featured Replies

கனிமொழி முதல் விஜயபாஸ்கர் வரை... ஆள்பவர்களுக்கு வந்த சிக்கலும் ஆண்டவன் தரிசனமும்!

 
 

ஓ.பி.எஸ்

நாட்டு மக்களின் வழக்குகளை தீர்த்துவைக்கவேண்டியவர்கள் அரசியல்வாதிகள். ஆனால் அவர்களே வழக்குகளுக்கு ஆளாகி கோவில் கோவிலாக ஏறி இறங்கவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது தமிழகத்தில் கடந்த பல வருடங்களாக.

அரசியல்வாதிகள் தங்களின் பிரச்னைகளுக்கென பிரத்யேக கோவில்களில் வழிபாடு செய்வதுண்டு. மறைந்த ஜெயலலிதாவுக்கு ராசியாக கோட்டூர்புரம் வரசித்தி விநாயகர் கோவில், சைதாப்பேட்டை குறுங்காலீஸ்வரர் என பல கோவில்கள் சொல்லப்பட்டாலும் தலைமைச் செயலகத்தின் வெளியே உள்ள கோட்டை நாகாத்தம்மன் அவரது நம்பிக்கைக்குரிய கோவில். அலுவலகத்தை விட்டு வெளியேறும்போது அவரது வாகனம் சில நிமிடங்கள் கோவில் வாசலில் நிற்கும். அர்ச்சகர் சிறப்பு பூஜை செய்து ஆரத்தி தட்டு அவர் இருக்கும் இடத்திற்கே போகும். வண்டியிலிருந்தபடியே அதைத் தொட்டு வணங்குவார். பின்னர் கார் புறப்படும். அரிதான சில சந்தரப்பங்களில்தான் அவர் இறங்கிவந்து வணங்கியிருக்கிறார். சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பதவியிழப்புக்கு முன் இறுதியாக தலைமைச்செயலகம் வந்து திரும்பியபோது வழக்கமாக வாகனத்திலிருந்தபடியே கும்பிடும் ஜெயலலிதா, முதன்முறையாக அன்றுதான் தன் ஷூவை கழற்றிவிட்டு வணங்கினார்.

கடந்த 2011 ம் ஆண்டு ஜெயலலிதாவால் போயஸ்கார்டனில் இருந்து சசிகலா வெளியேற்றப்பட்டபோது தி.நகர் சிவன் விஷ்ணு கோவிலின் அருகே உள்ள அகஸ்தியர் கோவிலுக்கு பூஜை செய்தார். ஆச்சர்யமாக அடுத்த சில நாட்களில் அவர் போயஸ் கார்டனுக்கு அழைக்கப்பட்டார். 

சசிகலா

அரசியல் அரங்கில் விஜயகாந்த் இறங்குமுகம் கண்ட நேரத்தில் அவர் சென்றது, நெல்லை மாவட்டம் விஜயாபதிக்கு அருகிலுள்ள விஸ்வாமித்திரர் கோவிலுக்கு. கோபத்தை குறைக்கும் சக்தி மிக்கதாக சொல்லப்படும் அந்த கோவிலுக்கு மனைவி பிரேமலதாவுடன் வந்து சுமார் 1 மணிநேரத்திற்கு மேலாக சிறப்பு வழிபாடு நடத்திச் சென்றார்

ஆன்மிக நகரான காஞ்சியில் கால்வைத்தாலே புண்ணியம் என்பார்கள். திரும்பிய திசையெல்லாம் கோவிகள் நிறைந்த காஞ்சிபுரத்தில் பாவ விமோசனம், ஆயுள் நீட்டிப்பு, ஆரோக்கியம், தொழில் வளர்ச்சி என ஒவ்வொரு வேண்டுதல்களுக்கும் தனித்தனிக் கோவில்கள் உள்ளன.  இத்தனை கோவில்கள் இருந்தாலும் அரசியல்வாதிகள் அதிகமாக வருவது காஞ்சிபுரம் காந்தி வீதியில் உள்ள வழக்கறுத்தீஸ்வரர் கோவிலுக்குத்தான். அதிமுக, திமுக, பாஜக காங்கிரஸ் என கட்சிமாச்சர்யமின்றி அத்தனை பேரும் இந்தக் கோவிலுக்கு படையெடுக்கக் காரணம், இங்கு பூஜை செய்தால் வழக்குகளில் இருந்து விடுபடலாம் என்ற ஐதீகம்தான்.

விஜயபாஸ்கர்இதனால் பல்வேறு அரசியல் பிரபலங்களும் சத்தமின்றி வந்து செல்லும் இந்தகோவிலுக்கு சமீபத்தில் வந்தவர் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். முனிவர்களுக்கும், தேவர்களுக்கும் இடையே ஒருமுறை வேதம் தொடர்பாக கருத்து வேறுபாடு எழுந்தது. இது தொடர்பான உண்மைத் தன்மையை அறிய, இருதரப்பும் காஞ்சிபுரத்தில் விசேஷமாக சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். அவர்களுடைய வழிபாட்டில் மகிழ்ந்த இறைவன், அவர்கள் முன் தோன்றி, அவர்கள் பிரச்னையை கேட்டு இருவரும் ஏற்றுக்கொள்ளும்படியான ஒரு தீர்வை சொல்லிப் பிரச்னையை தீர்த்து வைத்தாராம். இறைவனே நேரில் வந்து வழக்கை தீர்த்து வைத்ததால், இக்கோவிலில் உள்ள இறைவன், 'வழக்கறுத்தீஸ்வரர்' என அழைக்கப்படுகிறார்.

அக்காலத்தில் கொடுக்கல் வாங்கலில் பிரச்னை எழுந்தால் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்தரப்பை இங்கு அழைத்துவந்து சத்தியம் செய்யச் சொல்வார்கள். பொய் சத்தியம் செய்தால் செய்தவர் குடும்பம் அழிந்துவிடும் என்பதால் ஏமாற்றியவர் உண்மையை ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். இதனால் எந்த வழக்கும் இந்த கோவிலுக்குள் வந்தால் தீர்ந்துவிடும் என்பது பெரும் நம்பிக்கை. இதனாலேயே இக்கோவிலில் வழக்குகளில் சிக்கி நிம்மதி இழந்தவர்கள் வழக்குகளிலிருந்து விடுபட  சிறப்பு பூஜை செய்வார்கள்.

பல வருடங்களாக இந்த கோவில் மக்களால் வணங்கப்பட்டுவந்தாலும் வெகு பிரபலமடைந்தது 2000 ஆம் ஆண்டு இறுதியில்தான். ஜெயலலிதா மற்றும் சசிகலா மீதான டான்சி வழக்கின் தீர்ப்பு வெளியாக இருந்த சமயம் அதிலிருந்து விடுபட ஜெயலலிதா சார்பாக சசிகலா இங்கு வந்துபோனார். அதன்பிறகு 2014 ம் ஆண்டு ஜெயலலிதா மற்றும், சசிகலா மீதான சொத்துக்குவிப்பு இறுதிகட்டத்தை எட்டியநிலையில் காஞ்சிபுரம் வந்த சசிகலா சொந்தக் கட்சியினருக்கும் கூட தெரியாமல் பூஜை செய்துவிட்டுச் சென்றார். 

பெங்களூரில் இதே வழக்கு சூடுபிடித்த சமயம் விடிந்தும் விடியாத ஒரு காலை நேரத்தில் நேரத்தில் வந்திறங்கிய ஓ.பிஎஸ் மற்றும் செங்கோட்டையன் ஜெயலலிதா பெயரில் அபிஷேகம் மற்றும் பூஜை செய்த பின் அவருக்கு சிறப்பு பிரசாதம் மற்றும் ஒரு மாலையையும் பெற்றுச் சென்றார்கள். 

வழக்கறுத்தீஸ்வரர்

அதன்பின் ஒருமுறை ஜெயலலிதாவின் சார்பாக சசிகலாவே நேரடியாக வந்து சென்றிருக்கிறார் இந்த கோவிலுக்கு. இதன்பின்னர்தான் 'சரித்திரம் முக்கியத்துவம் வாய்ந்த' குமாரசாமி தீர்ப்பு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு அதிமுக சார்பில் வழக்கின் ஒவ்வொரு கட்டத்திலும் ஜெயலலிதா சார்பில் யாராவது இங்கு வருவது சகஜமானது. 

கடந்த 2011 ம் ஆண்டு 2ஜி வழக்கில் திஹாரில் அடைக்கப்பட்டார்  திமுக எம்.பி கனிமொழி. அவர் ஜாமீனில் வருவதற்காக இக்கோவில் பற்றி கேள்விப்பட்ட ராஜாத்தியம்மாள் வசந்தி ஸ்டான்லி எம்.பி யை ரகசியமாக இங்கு அனுப்பி பூஜை செய்யவைத்தார். அடுத்த சில வாரங்களில் கனிமொழிக்கு ஐாமீன் கிடைக்க, பூஜையின் பலனால்தான் கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்ததாக தகவல் பரவியது. இதனால் கனிமொழி தரப்பில் நன்றி பூஜையும் நடத்தப்பட்டது அடுத்தவாரம்.

கனிமொழிகடந்த 2015 டிசம்பர் மாதம் பீப் பாடல் சர்ச்சையால் பிரச்னைக்குள்ளான நடிகர் சிம்பு மீது காவல்துறை வழக்கு போடவிருப்பதாக தகவல் பரவியபோது பதறியடித்து இந்த கோவிலுக்கு ஓடி வந்தார் அவரது தந்தை டி.ராஜேந்தர். 

கடந்த தேர்தலுக்கு முந்தைய தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டு  எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்ற தேமுதிக விஜயகாந்த், கொஞ்சநாளில் ஜெயலலிதாவுடன் கோபப் பார்வைக்கு ஆளானார். இதனால் தங்கள் மீதும் தங்கள் தலைவர் மீதும் வழக்கு பாய்ந்துவிடக்கூடாது  என்ற பீதியில் வழக்கறுத்தீஸ்வரரைத்தான் வணங்கிச் சென்றனர் அவரது நிர்வாகிகள்.

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ப.சிதம்பரத்துக்கும், தலைமைக்கும் கொஞ்சம் முரண்பாடு எழுந்து அவரிடமிருந்து உள்துறை பிடுங்கப்பட்டபோது தலைமைக்கும் அவருக்குமான பிணக்குத் தீர அவரது மகன் கார்த்திக் சிதம்பரம் வழக்கறுத்தீஸ்வரர் கோவிலுக்கு குடும்பத்துடன் வந்துசென்றார்.

இப்படி அரசியல்வாதிகளால் அதகளப்படும் வழக்கறுத்தீஸ்வரர் கோவிலுக்கு நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு  சத்தமின்றி அமைச்சர் விஜயபாஸ்கர் வந்துசென்றதாக சொல்கிறார்கள். அதிகம் வெளியே தெரியாதபடி ரகசியம் காக்கப்பட்ட இந்த பயணம் பற்றி உள்ளுர்ப் பிரமுகர்கள் ஒருசிலருக்குதான் தெரியும் என்கிறார்கள்.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் பணப் பட்டுவாடா செய்தது குறித்த புகாரில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தியது, பணப் பட்டுவாடா குறித்து மற்ற அமைச்சர்களின் பெயர்களை வெளிப்படையாக எழுதிவைத்ததால் கட்சிக்குள்ளும் எழுந்த பிரச்னை இப்படி சமீபகாலமாக மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கும் அமைச்சர் விஜயபாஸ்கர் பிரச்னைகளில் இருந்து விடுபட கோவிலுக்கு வந்ததாக சொல்கிறார்கள். 
விஜயபாஸ்கரின் வருகை இப்போது இப்போது பிரச்னைக்குள்ளாகியிருக்கிறது. ஆகம விதிப்படி கோவிலின் கருவறை பூட்டப்பட்டபின் அது மறுதினம் உரிய நேரத்தில்தான் திறக்கப்படவேண்டும். ஆனால் அன்றைய தினம் கோவிலின் கருவறை பூட்டப்பட்டபின் தாமதமாக வந்த அமைச்சர் தரப்பு, பூஜை முடிந்து வீட்டுக்கே சென்றுவிட்ட அர்ச்சகரை திரும்ப வரவழைத்து கோவிலை திறந்து பூஜை செய்ததாக சொல்லப்படுகிறது. இது ஆன்மிகவாதிகளிடையே கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

டி.ராஜேந்தர்

அமைச்சரின் கோவில் விசிட் பற்றி அறிந்த ஒருவர், “கட்சிக்குள்ளும் தனிப்பட்ட தனது அரசியல் வாழ்க்கையிலும் பல நெருக்கடிக்குள்ளாகியிருக்கிறார் அமைச்சர் விஜயபாஸ்கர். இதனால் மனநிம்மதி தேடி வந்தார். தான் வரும் தகவலை வெகு ரகசியமாக வைத்திருந்தவர் தனக்கு நம்பகமான ஓரிருவருக்கு மட்டுமே தகவல் சொல்லி பூஜைக்கு ஏற்பாடு செய்யச் சொன்னார். அன்றைய தினம் 6 மணிக்கு இறுதி பூஜை நடந்தபோது அது முடியும் தருவாயில் அவர் வந்தார். பூஜை முடிந்ததும் கிளம்பிச் சென்றார். நீங்கள் சொல்வதுபோல் பூட்டப்பட்ட கருவறையை திறக்கச் சொல்லி பூஜை செய்தார் என்பது அபத்தம். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது சசிகலாவே ஒரு முறை தாமதமாக வந்ததால் 4 மணிநேரம் அவர் காத்திருக்கநேர்ந்தது. யாருக்காகவும் ஆகம விதிகளை மீறமாட்டார்கள் அர்ச்சகர்கள். அங்கிருந்த பக்தர்களோடு பக்தராகத்தான் அமைச்சர் அமர்ந்து பூஜையில் கலந்துகொண்டார்” என மறுத்தார்.

ஜெயலலிதா

 

தமிழக பிரபலங்களால் பிரபலமடைந்த வழக்கறுத்தீஸ்வரருக்கு உள்ளூர் தாண்டியும் 'பக்தர்கள்' உண்டு. மும்பையில் அடுக்கு மாடி குடியிருப்பு கட்டடம் கட்டுவதில் நடந்த ஆதர்ஷ் ஊழல் வழக்கில் சிக்கி, பதவியை இழந்த மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் அசோக் சவான், வழக்கறுத்தீஸ்வரர் கோவிலுக்கு வந்திருக்கிறார்.

மக்களுக்காக பாடுபடுவதாகக் கூறி அதிகாரப் பதவிகளுக்கு வருபவர்கள், மக்கள் நலனை மறந்து  தங்கள் நலனை பார்க்க ஆரம்பித்துவிடுகிறார்கள். மக்கள் பணத்தை சுரண்டும் அந்த அதிகார வர்க்கமும் பாதிக்கப்பட்ட மக்களும் நீதி கேட்டு தனக்கு முன் ஒரே வரிசையில் பழத் தட்டுடன் நிற்பதைப் பார்க்கும்போது நீதிமான் வழக்கறுத்தீஸ்வரருக்கு நீதி வழங்குவதில் கொஞ்சம் தடுமாற்றம் இருக்கவே செய்யும்! 

http://www.vikatan.com/news/tamilnadu/88008-from-kanimozhi-to-vijayabaskar-favourite-temple.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.