Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சினிமா விமர்சனம்: பிருந்தாவனம்

Featured Replies

சினிமா விமர்சனம்: பிருந்தாவனம்

சிவகுமார் உலகநாதன்பிபிசி தமிழ்
 
 
 
திரைப்படம் பிருந்தாவனம்
   
நடிகர்கள் அருள்நிதி , விவேக், தான்யா, தலைவாசல் விஜய் , எம். எஸ். பாஸ்கர், மற்றும் பலர்
   
இசை விஷால் சந்திரசேகர்
 
இயக்கம் ராதா மோகன்

வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத் திறனாளியாக படத்தில் தோன்றும் அருள்நிதி, அறிமுக காட்சியில் மெக்கானிக் ஷாப் விலாசம் கேட்டு வந்த ஒருவரிடம் தனது முக பாவனைகள், கைஜாடைகள் மூலம் வழி சொல்லும் 'அழகு' படம் முழுவதும் தொடர்கிறது.

பிருந்தாவனம்படத்தின் காப்புரிமைTWITTER/ORANGE CREATIONS/SHAN SUDHARSAN Image captionபிருந்தாவனம்

தான் பணிபுரியும் சலூனில் நடிகர் விவேக்கின் நகைச்சுவை காட்சிகள் மட்டும்தான் தொலைக்காட்சியில் ஓட வேண்டும் என்றளவுக்கு நடிகர் விவேக்கின் தீவிர ரசிகராக அருள்நிதி தோன்றுகிறார்.

பெரும்பாலும் வசனங்கள் பேச முடியாது, முக பாவனைகள் மற்றும் பாடி லாங்வேஜ்தான் பேச வேண்டும் என்ற சவாலை ஏற்று தன்னால் முடிந்தளவு அருள்நிதி சிறப்பாக செய்திருக்கிறார்.

படம் முழுக்க நடிகராகவே வலம் வருகிறார் விவேக். ஊட்டிக்கு தனது சொந்த பணியின் முன்னிட்டு வந்த அவர், தற்செயலாக அருள்நிதியை சந்திக்கிறார். அருள்நிதி தனது ரசிகர் என்பதும், அவர் ஒரு வாய் பேச முடியாத மற்றும் காது கேளாத மாற்றுத் திறனாளி என்றறிந்து அவரது நண்பராகி விடுகிறார்.

அருள்நிதிக்கும், மற்றவர்களுக்கும் திரையில் விட்டுக்கொடுத்து இயல்பாக ஒரு சீனியர் ஆர்ட்டிஸ்ட் என்ற வகையில் விவேக்கின் பங்கு சிறப்பாக இருந்தது.

அருள்நிதி மற்றும் விவேக்கின் பங்களிப்பை விவரித்து விட்டு, தான்யாவின் அழகையும், நடிப்பையும் சொல்லாமல் விட்டால் எப்படி? தான்யாவின் அழகு நிச்சயம் ரசிகர்களை ஈர்க்கும். ஓரிரு காட்சிகளை தவிர்த்து, படம் முழுக்க மாடர்ன் டிரஸ்ஸில் பளிச்சென்ற புன்னகையுடன் படத்தில் வலம் வருகிறார் தான்யா.

அருள்நிதி, விவேக் என சகல கதாப்பாத்திரங்களையும் தனது அதிகார தொனியில் அவர் மிரட்டுவதும் அழகு.

பிருந்தாவனம்படத்தின் காப்புரிமைTWITTER/BRINDAVANAM

படத்தின் வசனம் பல இடங்களில் ரசிக்கும்படியாக இருந்தது. விவேக் என்றில்லாமல், அனைத்து கதாப்பாத்திரங்களும் தங்களால் முடிந்த அளவு நகைச்சுவையாக நடித்திருக்கிறார்கள்.

''அவர் எவ்வளவு குண்டா இருந்தான் தெரியுமா? இரண்டு நாள் ஆச்சு, அவன் படம் டவுன்லோட் ஆக''

போனற நகைச்சுவைகள் இயல்பாகவும், சிரிக்கும்படியாகவும் அமைந்துள்ளன.

அழுத்தமான கதாபாத்திரமாக பிரமாதப்படுத்தியுள்ளார், எம்.எஸ். பாஸ்கர். தனது குடும்பத்தை இழந்து வாழும் நிலையை விவரிக்கும் காட்சியிலும், அருள்நிதிக்காக மற்றவர்களிடம் வாதாடும் போதும் எம்.எஸ். பாஸ்கரின் நடிப்பு இயல்பு.

விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை ரசிக்கும்படி இருக்கிறது. பாடல்கள் மனதில் பதியாவிட்டாலும், ஓகே ரகம். விவேகானந்தனின் கேமரா ஊட்டியின் அழகை நன்றாக படம்பிடித்துள்ளது.

பிருந்தாவனம்படத்தின் காப்புரிமைVANSAN MOVIES/ORANGE CREATIONS

அருள்நிதி, தான் பணிபுரியும் சலூனில் விடுப்பு எடுத்து விவேக்கின் கார் டிரைவராகி விட, விவேக், அருள்நிதி மற்றும் அவர் நண்பர் ஆகிய மூவரும் ஊட்டியை சுற்றுகின்றனர். ஒரு கட்டத்தில் தான்யாவும் இவர்களின் நட்பு வட்டத்தில் இணைய தான்யாவுக்கு அருள்நிதியின் மேல் உள்ள ஈர்ப்பை அறிந்து இருவரையும் சேர்த்து வைக்க தன்னாலான முயற்சிகளை விவேக் மேற்கொள்கிறார்.

ராதாமோகனின் 'மொழி' திரைப்படத்தில் காதலை முதல்முறையாக உணரும் நாயகன் மற்றும் நாயகிக்கு பல்பு எரியும், மணியடிக்கும். இதே போல், இத்திரைப்படத்தில் தான்யா மற்றும் அருள்நிதி இருவரும் முதல்முறையாக காதலை உணரும் போது வானில் ஏரளமான பறவைகள் சிறகடித்து பறக்கின்றன. இதுதான் ராதா மோகன் முத்திரை போலும்.

படம் முழுவதும் வசனமே பேசாமல், தனது ரியாக்‌ஷன்கள் மூலம் புரிய வைக்கும் அருள்நிதி, தான்யாவின் காதலை தான் ஏற்க மறுக்கும் காரணத்தை முதல் முறையாக வாய் பேசும் போது விளக்குகிறார்.

திரைப்பட விமர்சனம் : பிருந்தாவனம்படத்தின் காப்புரிமைVANSAN MOVIES/ORANGE CREATIONS Image captionதிரைப்பட விமர்சனம் : பிருந்தாவனம்

தான்யாவின் காதலை அருள்நிதி ஏற்றாரா, தான்யாவின் தந்தையான தலைவாசல் விஜய், தனது மகளுக்காக விட்டுக்கொடுத்தாரா என்பதை யூகிப்பது தமிழ் ரசிகனுக்கும், ராதா மோகன் திரைப்படங்களை பார்த்தவர்களுக்கும் சிரமமில்லை.

விவேக் ஊட்டியில் தங்கியிருப்பதற்கு, ஒரு காரணம் சொல்ல வேண்டும் என்பதற்காக வலுக்கட்டாயமாக அவர் நண்பர் டிராக்கை திணித்திருப்பதாக தோன்றுவதை தவிர்த்திருக்கலாம். மேலும், தனக்கு கிடைக்க வேண்டிய அனுதாபம் கிடைக்காமல் போய் விடும் என்பதற்காக தனக்கு வாய் பேச வரும் என்ற உண்மையை பல ஆண்டுகளாக அருள்நிதி மறைத்துவிட்டார் என்பது கொஞ்சமும் ஒட்டாத லாஜிக்.

வழக்கமான ராதாமோகன் படம்தான். சேஸிங் இல்லை, குத்தாட்டம் இல்லை, இரட்டை அர்த்த வசனங்கள் இல்லை, வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகள், துன்பங்கள் வரும். ஆனால், அவை எல்லாம் நாளடைவில் சரியாகி, வாழ்க்கை பூத்துக் குலுங்கும் பிருந்தவனமாகி விடும் என்று சொல்கிறது ராதா மோகனின் பிருந்தவனம்.

http://www.bbc.com/tamil/arts-and-culture-40063890

  • தொடங்கியவர்

’மொழி’ ஜோதிகா Vs ’பிருந்தாவனம்’ அருள்நிதி..! யாருக்கு ஸ்கோர் அதிகம்? - ‘பிருந்தாவனம்’ விமர்சனம்

 
 

'மொழி' தமிழில் பேசப்பட்ட படம். காது கேளாத, வாய் பேசாத பெண்ணின் மன உணர்வுகளைக் கவித்துவமாய்ச் சொன்ன படம். 'பிருந்தாவனம்' படத்தில் நாயகன் காது கேளாத, வாய் பேசாத இளைஞர். 'மொழி'யில் இருந்த அதே நேர்த்தி 'பிருந்தாவனத்தி'லும் இருக்கிறதா?

பிருந்தாவனம்

 

ஊட்டியில் ஒரு சலூனில் வேலை பார்க்கும் அருள்நிதி காது கேளாத, வாய் பேசாத இளைஞர். சிறுவயதில் ஆதரவற்றுத் திரிந்தவரை ஹோமில் சேர்த்தவர் எம்.எஸ்.பாஸ்கர். ஒருகட்டத்தில் வேலை பார்த்த சலூனே அருள்நிதிக்கு சொந்தமாகும் சூழல் வருகிறது. டிபார்ட்மென்டல் ஸ்டோர் வைத்திருக்கும் 'தலைவாசல்' விஜயின் மகள் தான்யா. சிறுவயதிலிருந்தே நண்பனான அருள்நிதியுடன் அவ்வப்போது வம்பு வளர்த்துத் திரிகிறார். ஹீரோயின் என்றால் அதோடு நிறுத்திக்கொள்ளக்கூடாதே, ஹீரோவைக் காதலிக்கவும் வேண்டுமே! யெஸ். அருள்நிதியைக் காதலிக்கிறார். இதற்கிடையில் சொந்த வேலையாக ஊட்டிக்கு வரும் நடிகர் விவேக்குடன் நண்பராகிறார் அருள்நிதி. தயங்கித் தயங்கி தான்யா காதல் சொல்ல, ஆத்திரத்துடன் மறுக்கிறார் நாயகன். ஏன் அருள்நிதி காதலை மறுக்கிறார், கடைசியில் காதல் கைகூடியதா இல்லையா என்பதே 'பிருந்தாவனம்'.


காமெடி ஒன்லைனர்கள், நெகிழ்ச்சியும் உணர்ச்சியும் கலந்த சம்பவங்கள், மிகைப்படுத்தப்பட்ட சற்றே நாடகத்தனம் கலந்த காட்சிகள் இவைதான் ராதாமோகன் படத்தின் ஃபார்முலா. இதில் நெகிழ்ச்சியும் நாடகத்தனமும் கொஞ்சம் தூக்கலாகிவிட்டதுதான் பிரச்னை. அருள்நிதிக்கு ஒரு ஃப்ளாஷ்பேக், விவேக்கின் நண்பருக்கு ஒரு ஃப்ளாஷ்பேக், எம்.எஸ்.பாஸ்கருக்கு ஒரு ஃப்ளாஷ்பேக், தான்யாவின் தந்தையான 'தலைவாசல்' விஜய்க்கும் ஒரு ஃப்ளாஷ்பேக் என்று எல்லோருக்கும் சொல்வதற்கு ஏராளமான முன்கதைகள். ஊட்டி மலைப்பாதையில் உள்ள திருப்பங்களைவிட படத்தில் ஃப்ளாஷ்பேக்குகள் ஏராளம்.

பிருந்தாவனம் விமர்சனம்


 அரைமணிக்கு ஒரு நெகிழ்ச்சிக்கதை வந்து ஆளாளுக்கு கண்ணீரால் நனைகிறார்கள். ஒரு காட்சியில் 'நெஞ்சை நக்காதேடா' என்று விவேக்கே சொன்னாலும் படம் பார்க்கும் நம் நெஞ்சில் ஏகப்பட்ட ஈரம், காரணம் ஊட்டி பனி அல்ல.
சைகை மொழியில் பேசும் பாத்திரத்தில் நிறைவாகவே செய்திருக்கிறார் அருள்நிதி. தான்யா காதலைச் சொல்லும் இடத்தில் எல்லாம் ஆத்திரப்படும்போது இயல்பான உணர்ச்சிகளைக் கொண்டுவந்திருக்கிறார். ஆனால் அவர் சொல்லும் ஃப்ளாஷ்பேக்கும் அவர் மறைக்கும் ஒரு முக்கியமான ரகசியத்துக்கான பின்னணியிலும் ஏகப்பட்ட சினிமாத்தனம். ''எனக்கு அன்பைவிட அனுதாபம்தான் வேண்டும்" என்று அவர் சொல்லும் டயலாக்கில் எதுகை மோனை இருக்கிறதே தவிர, எதார்த்தமில்லை.

ஹீரோயின் தான்யா செம க்யூட். அழகாக நடிக்கவும் செய்கிறார். கடைசிக் காட்சியில் காதலைக் கண்களில் தேக்கிப் பரிதவிக்கும் காட்சியில் அசத்தல் தான்யா. நடிகர் விவேக், நடிகர் விவேக்காகவே வருகிறார். 'ஜேம்ஸ் கேமரூனின் அவதார் பார்த்திருக்கீங்களா?', 'அவர் அவுத்தாருன்னா நான் ஏன் பார்க்கணும்?', 'வாழ்க்கைங்கிறது வாழைக்காய் மாதிரி, நீளமா சீவினா பஜ்ஜி; குறுக்கே சீவினா சிப்ஸ்" என்று காமெடி ஒன்லைனர்களில் கலகலப்பு தூவுவதாய்  இருக்கட்டும், நண்பனின் கடைசி ஆசையை நிறைவேற்றிவிட்டுக் கண்கலங்குவதாய் இருக்கட்டும், கச்சிதம் விவேக்.

Brindavanam Movie Review

 


 'டாடி எனக்கு ஒரு டவுட்டு' செந்திலும் 'தலைவாசல்' விஜயும் சில காட்சிகள் வந்தாலும் நிறைவாகச் செய்திருக்கிறார்கள். 'எம்.எஸ்.பாஸ்கரை இன்னும் பயன்படுத்தியிருக்கலாமே' என்று தோன்றுகிறது.விஷால் சந்திரசேகரின் இசையில் பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை. ஊட்டியின் அழகை சில்லென்று கொண்டுவந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் எம்.எஸ்.விவேகானந்த்.
நாடகத்தன்மையைக் குறைத்து, மன உணர்வுகளை அழுத்தமாய்ச் சொல்லும் காட்சிகளை அதிகரித்திருந்தால் பிருந்தாவனத்தில் இன்னும் நறுமணம் தூக்கலாக இருந்திருக்கும்.
 
அட... வழக்கமான ’டாய் டூய்’ ஹீரோயிஸ சினிமா இல்லாம, குடும்பத்தோட பார்க்கிற மாதிரியான படமா சொல்லுங்க’ என்று கேட்பவர்கள், இந்த பிருந்தாவனத்துக்கு ஒரு விசிட் அடிக்கலாம்!

http://www.vikatan.com/cinema/movie-review/90498-brindavanam-movie-review.html

  • தொடங்கியவர்

திரை விமர்சனம்: பிருந்தாவனம்

 

 
brindhareview_3169015f.jpg
 
 
 

குளிரும் இயற்கையும் குடியிருக் கும் ஊட்டிக்கு ஓய்வெடுக்க வருகிறார் பிரபல நகைச்சுவை நடிகரான விவேக். அங்கே காது கேளாத, வாய் பேசவியலாத கண்ணன் (அருள்நிதி) என்ற இளைஞனைச் சந்திக்கிறார். அவன் தனது தீவிர ரசிகன் என்பதை அறிந்து நெகிழும் அவர், அவனை நண்பனாக்கிக்கொள்கிறார்.

சிறு வயது முதல் கண்ணனின் தோழி யாக இருக்கும் சந்தியா (தான்யா ரவிச் சந்திரன்), அவனைச் சுற்றிச் சுற்றி வரு கிறாள். ஒரு கட்டத்தில் அவனிடம் காதலை வெளிப்படுத்துகிறாள். ஆனால் மூர்க்கமாக அவளது காதலை நிராகரிக் கிறான் கண்ணன். இதை அறியும் விவேக், கண்ணனையும் சந்தியாவையும் சேர்த்து வைக்க முயற்சி எடுக்கிறார். கண்ணன் காதலை நிராகரிக்கக் காரணம் என்ன? விவேக்கின் முயற்சிக்கு வெற்றி கிடைத்ததா என்கிற கேள்விகளுக்கு விடை சொல்கிறது படம்.

மென்மையும் அன்பும் கூடிய கதா பாத்திரங்களின் பின்னால் ஒளிந்திருக் கும் பின்கதையை அழுத்தமாக வரை வது, சம்பவங்களைச் சரியான வரிசை யில் தொடுத்துச் சீரான வேகத்தில் திரைக் கதையை நகர்த்துவது, வாசலில் நீர் தெளிப்பதுபோலத் திரைக்கதை முழு வதும் நகைச்சுவையைத் தெளிப்பது, அதன் மேல் நல்லுணர்வுகளை வைத் துக் கோலம் போடுவது ஆகியவை இயக் குநர் ராதாமோகனின் முத்திரைகள். ‘பிருந்தாவன’த்திலும் இவை அனைத் தும் இருக்கின்றன. ஒரு நடிகருக்கும் ரசி கருக்கும் இடையிலான அபிமானமும் பிணைப்பும் அவர்கள் எதிர்பாராமல் சந்திக்க நேரும்போது வெளிப்படும் விதம், அவர்களுக்கிடையில் மலரும் நட்பு ஆகியவற்றைக் காட்சிகளாக்கி யிருக்கும் விதம் உணர்வுபூர்வமான அழகைக் கொண்டிருக்கிறது.

கதையின் மையத்தைச் சுற்றிப் பின்னப்படும் சம்பவங்கள் பலவும் ஒரே மாதிரி இருப்பதுதான் படத்தின் சிக்கல். அருள்நிதியின் கோபம், தான்யாவின் ஏக்கம், விவேக்கின் முயற்சி ஆகியவை திரும்பத் திரும்ப ஒரே மாதிரி நிகழ் கின்றன. படத்தின் முக்கியமான சஸ் பென்ஸ் உடைந்த பிறகும் படம் நீண்டுகொண்டே போகிறது. ஊட்டி மலைப் பாதைகளில் சுற்றிச் சுற்றி வரும் விவேக்கின் காரைப் போலவே கதையும் பல இடங்களைச் சுற்றிவிட்டு, பிறகு அனைவருக்கும் தெரிந்த இடத்தில் வந்து முடிகிறது. வாழ்க்கையின் மீது நம்பிக்கை ஏற்படுத்த விழையும் திரைக்கதை, வாழ்வின் சிக்கல்கள், வெவ்வேறு சாயைகள் ஆகியவற்றிடம் பாராமுகமாக இருக்கிறது. எனவே, திரைக்கதையின் மொழி தட்டையாக உள்ளது. இது படத்தின் தாக்கத்தைக் குறைக்கிறது.

நடிகர் விவேக், விவேக்காகவே படம் முழுவதும் வருகிறார். ஒரு நடிகர் ஒரு ஊருக்கு வந்து அங்குள்ள மனிதர்களு டன் இயல்பாகக் கலந்து பழகுவதாகத் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள விதம் நன்றாக உள்ளது. ஆனால், நிஜ விவேக் கின் பாத்திரம், திரையில் நாம் காணும் நகைச்சுவை விவேக்கைப் போலவே இருக்கிறது. வசனம், உடல் மொழி, நாயகி அல்லது நாயகனின் காதலுக்கு உதவுவது, நாயக, நாயகியர் அவரைத் தங்கள் இஷ்டத்துக்கும் வளைப்பது என எல்லாவற்றிலும் திரை விவேக்கே தெரிகிறார்.

காது கேளாத, வாய் பேச முடியாத கண்ணன் கதாபாத்திரத்தில் அருள்நிதி யின் நடிப்பும் அவர் உடல்மொழியும் முக பாவனைகளும் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் இருக்கின்றன. காதலை நிரா கரிக்கும்போது ஏற்படும் கோபத்தை யும் அன்பைக் காட்ட முடியாத வேத னையையும் நன்றாக வெளிப்படுத்தி யிருக்கிறார்.

தான்யா ரவிச்சந்திரன், கலைக் குடும்ப வாரிசு என்னும் பெயரைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார். துடுக்கான கதா பாத்திரத்தில், ஈர்க்கும் எளிய அழகுடன் அவர் வரும் காட்சிகள் புத்துணர்வுடன் இருக்கின்றன.

எம்.எஸ்.பாஸ்கர், தலைவாசல் விஜய் ஆகியோர் தங்களது முத்திரைகளைப் பதிக்கிறார்கள். அருள்நிதியின் நண்ப னாக வரும் செந்தில் கவனிக்க வைக்கிறார்.

பொன். பார்த்திபன் எழுதியிருக்கும் ஈர்ப்பும் மென்நகைச்சுவையும் கூடிய வசனங்கள், கதாபாத்திரங்களுடன் ஒன்றவைக்கின்றன. கதை நிகழும் களம் ஊட்டியாக இருந்தபோதும் கதையைத் தாண்டித் தனது கேமராவின் கண் களை அலையவிடாமல் தன் பிடியிலேயே வைத்திருந்த ஒளிப் பதிவாளர் எம்.எஸ். விவேக்கானந் தின் ஆர்ப்பாட்டமில்லாத படப்பிடிப்பு படத்துக்கு முதுகெலும்பு. விஷால் சந்திரசேகரின் இசையில் பாடல்கள், பின்னணி இசை இரண்டிலுமே இளமைத் துள்ளல்.

மனித உறவுகளின் மேன்மை, மனித நல்லியல்புகள் மீதான நம்பிக்கை, வாழ் வின் மீதான பிடிப்பு ஆகியவற்றை அடித் தளமாகக் கொண்ட ராதா மோகனின் அணுகுமுறைதான் இந்தப் படத்தின் பலம். இனிப்பாகவே இருந்தாலும் அளவு மீறினால் திகட்டும். அது இந்தப் படத்தின் சிறு பலவீனம்.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/திரை-விமர்சனம்-பிருந்தாவனம்/article9714307.ece?homepage=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.