Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகளிர் மட்டும் திரை விமர்சனம்

Featured Replies

 
card-bg-img

தமிழ் சினிமாவில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் மிக குறைவு. அந்த வகையில் தற்போது நயன்தாரா, அனுஷ்கா, த்ரிஷா போன்ற முன்னணி நடிகைகள் பெண்களுக்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே நடிக்கின்றனர். அந்த வரிசையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிக்க வந்த ஜோதிகா கூட பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டும் தான் தேர்ந்தெடுத்து நடிக்கின்றார். அப்படி அவர் நடிப்பில் குற்றம் கடிதல் என்ற தரமான படத்தை இயக்கிய பிரம்மா இயக்கத்தில் இன்று வெளிவந்துள்ள படம் தான் மகளிர் மட்டும், இதிலும் ஜோதிகா ஜெயித்தாரா? பார்ப்போம்.

கதைக்களம்

புரட்சி, முற்போக்கு கொள்கையுடன் 21st சென்ஜுரி மார்டன் பெண்ணாக ஜோதிகா. இன்னும் சில நாட்களில் திருமணம் ஆக போகும் நிலையில் டாக்குமெண்ட்ரீ எடுத்து தன் பொழுதை கழிக்கின்றார்.

அப்போது தன் வருங்கால மாமியார் ஊர்வசி தனியாக இருப்பதால் அவருக்கு துணையாக ஜோதிகா அவர் வீட்டிற்கு செல்ல, அங்கு ஊர்வசி தன் பள்ளிக்காலங்களில் பானுப்பிரியா, சரண்யா பொன்வண்ணனுடன் இருந்த தன் நட்பை பற்றி ஜோதிகாவிடம் சொல்கின்றார்.

பள்ளியில் நாங்கள் செய்த ஒரு சில தவறுகளால் தான் பிரிந்தோம் என ஊர்வசி சொல்ல, ஜோதிகா நீங்கள் எல்லோரும் மறுபடியும் சந்தித்தால் எப்படியிருக்கும், இல்லை சந்திக்கிறீர்கள் என மூவரையும் அழைத்து ஒரு டிரிப் அடிக்க, அதன் பின் பெண்களின் வாழ்க்கை என்ன என்பதை மிகவும் யதார்த்தமாகவும் எமோஷ்னலாகவும் பிரம்மா ஒரு அருமையான படைப்பை கொடுத்துள்ளார்.

படத்தை பற்றிய அலசல்

என்ன தான் ஜோதிகாவை முன்நிறுத்தி இந்த படத்தை ப்ரோமோஷன் செய்தாலும், படம் முழுவதும் சிக்ஸர் அடித்து தாங்கி செல்வது ஊர்வசி, பானுப்பிரியா, சரண்யா தான். அதிலும் பள்ளிக்காலங்களில் இவர்களை காட்டும் போது மூன்று இளம் பெண்கள் வருகின்றனர், அப்படியே இவர்களை போலவே உள்ளனர்.

ஊர்வசி தயவு செய்து இவரை தமிழ் சினிமா தவறவிடக்கூடாது என்பதே எல்லோரின் விருப்பமும். ஒவ்வொரு காட்சியிலும் தான் பேசும் வசனங்களிலேயே சிரிக்க வைக்கின்றார், அதேநேரம் பிரிந்த தன் தோழிகளிடம் போனில் பேசும் போது அழுத குரலோடு கொஞ்சி பேசுவது சூப்பர் மேம்.

ஊர்வசியை அடுத்து படத்தில் செம்ம ஸ்கோர் செய்வது சரண்யா தான், குடிக்கார கணவன் லிவிங்ஸ்டனை மிரட்டுவது, என்ன தான் தன்னை திட்டினாலும் படுத்த படுக்கையாக இருக்கும் மாமியாரின் கழிவை சுத்தம் செய்வது வரை நடுத்தர பெண்களை அப்படியே கண்முன் நிறுத்துகின்றார். அதிலும் போனில் தன் தோழிகளிடம் சந்தோஷமாக பேசி போனை கட் செய்த அடுத்த நொடி கணவனிடம் கோபமாக முகத்தை காட்டுவது என க்ளாப்ஸ் அள்ளுகின்றார்.

லிவிங்ஸ்டன் ஒன்று இரண்டு காட்சியில் வந்தாலும் போதையில் அவர் பாடும் பன்னீரைத் தூவும் மழை பாடல் படம் முடிந்தும் நம்மை முனுமுனுக்க வைக்கின்றது. பானுப்பிரியா வட இந்தியாவில் பெண்களையே மதிக்காத கணவன், மகனிடம் விதியே என வாழ்கின்றார். அதிலும் ஊர்வசியின் மகனாக வரும் ‘மெட்ராஸ்’ புகழ் பாவேல் முதலில் கோபமான தன் அம்மாவை மதிக்காத முரட்டு இளைஞனாக வர, பிறகு கிளைமேக்ஸில் கண்கலங்கும் இடம், நல்ல எதிர்காலம் வெயிட்டிங் சார்.

படத்தில் ஊர்வசி, பானுப்பிரியா, சரண்யா தன் முதல் காதலை கூறும் போது அதை படமாக்கிய விதம், ஆணவக்கொலை, பெண்களை ஏமாற்றுபவன், பயந்து ஓடும் இளைஞன் என மூன்று காதல்களையும் பாடல்களாக மட்டுமின்றி ஒரு குறும்படம் போல் காட்டியவிதம் ரசிக்க வைக்கின்றது. அதேபோல் ஒரு இடத்தில் சரண்யா, பானுப்பிரியா குடித்துவிட்டு தங்கள் கவலைகளை சொல்லி கணவர்களை திட்டும் இடம் சிரிக்கவும் வைத்து ஆண் வர்க்கத்தையே சிந்திக்க வைக்கின்றது.

என்ன படத்தில் ஜோதிகா பற்றி ஒன்றும் சொல்லவே இல்லையே என்று கேட்காதீர்கள், இப்படி ஒரு படத்தில் இவ்வளவு பெரிய ஹீரோயினாக இருந்தும் சீனியர்களுக்கு இடம் கொடுத்து நடித்ததற்காகவே பாராட்டுக்கள். மணிகண்டனின் ஒளிப்பதிவு வட இந்தியாவின் பல பகுதிகளை அத்தனை அழகாக கண்முன் காட்டுகின்றது, நாமே டூர் சென்ற அனுபவம். ஜிப்ரான் தான் இசையா? ஒரு நிமிடம் ரகுமானா? என ஆச்சரியப்பட வைக்கின்றது.

க்ளாப்ஸ்

நடிகர், நடிககைகளின் பங்களிப்பு, எல்லோருமே சீனியர் என்பதால் செம்ம ஸ்கோர் செய்துள்ளனர், இளம் வயதில் வரும் ஊர்வசி, பானுப்பிரியா, சரண்யா கதாபாத்திரங்கள் கூட மனதை கவர்கின்றன.

ஏதோ நாட்டிற்கு மெசெஜ் சொல்கின்றேன் என கருத்துக்களை வலுக்கட்டாயமாக திணிக்காமல் கதையோடு சொன்ன விதம்.

இசை, ஒளிப்பதிவு டெக்னிக்கல் விஷயங்கள்.

‘நீ தாஜ்மஹால மும்தாஜுக்காக கட்டினதா பாக்குற, ஆனா 14 குழந்தை பெத்து இறந்த மனைவிக்கு கட்டிய கல்லறை தான் இந்த தாஜ்மஹால்’ போன்ற வசனங்கள் கவர்கின்றது.

பல்ப்ஸ்

பானுப்பிரியாவை பேஸ்புக்கில் கண்டுப்பிடிப்பது போல் காட்டுகிறார்கள். ஆனால், அவர் இருக்கும் நிலையில் மொபைல் கூட ஆன் செய்ய முடியாது, அப்படியிருக்க அந்த இடத்தில் மட்டும் தான் கொஞ்சம் லாஜிக் மீறல் போல் இருந்தது.

மொத்தத்தில் மகளிர் மட்டும் இல்லை ஆண்களும் பார்த்து பெண்களை கொண்டாடப்பட வேண்டிய படம்.

 

 

http://www.cineulagam.com/films/05/100862?ref=review_section

  • தொடங்கியவர்

ஹாய்... இது ஆண்களுக்கு அவசியம்! - மகளிர் மட்டும் விமர்சனம்

 
 
 

`பெண்களை, தெய்வங்களாகக் கொண்டாட வேண்டாம்; மனுஷிகளாக மதியுங்கள்' என அழுத்தமாகச் சொல்லியிருக்கிறது `மகளிர் மட்டும்'. 

கோமாதா (ஊர்வசி), ராணி அமிர்தகுமாரி (பானுப்ரியா), சுப்புலட்சுமி (சரண்யா) என மூன்று தோழிகள். 1978-ம் ஆண்டு தீபாவளியன்று பள்ளி விடுதியிலிருந்து சினிமாவுக்குப் போன காரணத்தால், பள்ளி நிர்வாகம் அவர்களை நீக்கிவிடுகிறது. அதற்குப் பிறகு, 30 ஆண்டுகாலம் அவர்களுக்குள் எந்தத் தொடர்புமில்லை. கோமாதாவின் மகனைக் காதலிக்கும் பிரபா (ஜோதிகா), ஓர் ஆவணப்பட இயக்குநர். பெரியார், அம்பேத்கர் சிந்தனைகளில் ஆர்வம்கொண்ட முற்போக்காளர். 

 

மகளிர் மட்டும்

பிரிந்த மூன்று தோழிகளையும் சந்திக்கவைத்து, ஒரு பயணத்துக்கும் ஏற்பாடு செய்கிறார் பிரபா. மீண்டும் சந்திக்கும் மூன்று தோழிகளின் கொண்டாட்டங்களும், பழைய நினைவுகளை மீட்டெடுத்தலும், வாழ்வில் நிகழும் மாற்றங்களுமாக நீள்கிறது இந்த ‘மகளிர் மட்டும்’ பயணம். 

அலுத்துப்போன ஆணாதிக்க நச்சுக் கருத்துகளால் மூச்சு முட்டும் தமிழ் சினிமாவில், பெண்களின் சுயம் குறித்தத் தேடலாகக் கதையை உருவாக்கியதற்கும், சமகாலக் கொடூரச் சம்பவத்தின் பின்னணியில் சாதியம் குறித்த விமர்சனத்தை வைத்ததற்கும் வாழ்த்துகள் இயக்குநர் பிரம்மா!

“கல்யாணம்கிறது ஒரு மாயாஜால ஜெயில். எட்டி உதைக்கணும். உதைக்கிற உதையில ஒண்ணு திறக்கணும்; இல்லை ஜெயில் கதவு உடையணும்”, “யார் கேட்டாலும் சும்மா வீட்டுல இருக்கானு சொல்றியே... நாங்க வீட்டைக் கவனிச்சுக்கிறதுக்கு நீ என்ன சம்பளமா குடுக்கிற?”, “நடுராத்திரி ரோட்ல தனியா பாதுகாப்பா போறதில்லை சுதந்திரம். மனசுக்குப் பிடிச்சதைச் செய்யணும். பிடிச்சவனோட மட்டும்தான் வாழணும். இதுதான் சுதந்திரம்” என்ற அடர்த்தியான வசனங்கள், ஆணாதிக்கத்தின் வேர்களை ஆழமாகவும் அகலமாகவும் அலசுகின்றன.

மகளிர் மட்டும்

ஊர்வசி, பானுப்ரியா, சரண்யா, ஜோதிகா ஆகியோரைச் சுற்றியே நகரும் கதைக்கு, நால்வரும் சரியான நியாயம் செய்திருக்கிறார்கள். மகன் செல்லும் விமானம் டேக் ஆஃப் ஆகையில் டாட்டா காட்டிவிட்டு கண் கலங்குவது, ட்யூஷன் மாணவர்களைச் சமாளிப்பது, ஜோதிகாவின் திடீர் திட்டங்களுக்கெல்லாம் கொடுக்கும் முகபாவங்கள் என வழக்கம்போல் அசத்தல் ஊர்வசி. சில இடங்களில் மிகையான நடிப்பு வெளிப்பட்டாலும், தோழிகள் பற்றி பேசும் ஒவ்வொரு காட்சியிலும் முகத்தில் கொண்டுவரும் குழந்தையின் பூரிப்பு அட்டகாசம். கணவருக்குப் பயந்து நடுங்கும் பானுப்ரியா, குடித்துவிட்டு வரும் கணவரையும், திட்டித்தீர்க்கும் மாமியாரையும் இறுக்கமான முகத்துடன் எதிர்கொண்டு சிரித்த முகத்துடன் அழகுக் குறிப்பு நிகழ்ச்சிக்கு நிற்கும் சரண்யா என வெவ்வேறு வகையான குடும்பப் பெண்களை கண்முன் நிறுத்துகிறார்கள்.

இவர்களுக்கு அப்படியே நேர்மாறாக, எந்தக் குழப்பமும் இல்லாத சுதந்திரமான பெண்ணாக ஜோதிகா. தோழிகளைச் சந்திக்கவைக்க அவர் போடும் திட்டங்கள், ஒவ்வொருவரை கையாளும்விதம், குழப்பத்தில் இருக்கும் மூவருக்கு வழங்கும் ஆலோசனைகளுமாக அவரின் கதாபாத்திர வடிவமைப்பு அழகு. ‘மொழி’, ‘36 வயதினிலே' வரிசையில் ஜோதிகாவுக்கு மிகவும் முக்கியமான படம் ‘மகளிர் மட்டும்’.

மகளிர் மட்டும்

முக்கியக் கதாபாத்திரங்கள் தவிர, துணை கதாபாத்திரமாக நடித்திருக்கும் லிவிங்ஸ்டன் நடிப்பில் அத்தனை இயல்பு. ஜாம் பாட்டிலில் இருக்கும் மதுவைக் குடித்துவிட்டு கிட்டார் வாசித்துக்கொண்டு `மீனம்மா மீனம்மா...' எனப் பாடுவது ரணகள ரகளை. முரட்டுத்தனமான ஆளாக வரும் பாவேல் கதாபாத்திரத்தின் நடிப்பும் உடல்மொழியும் கவனிக்கவைக்கிறது. பள்ளி வயது பானுப்ரியாவாகவும் பானுப்ரியாவின் மகளாகவும் நடித்திருக்கும் ஷோபனா நல்ல அறிமுகம். ஃப்ளாஷ்பேக்கில் பெரிய கண்களை இன்னும் பெரிதாக்கி மிரட்டுவதும், நிகழ்காலத்தில் பயந்து நடுங்கும் மகளாகவும் நன்றாக நடித்திருக்கிறார். இதற்கு முந்தைய `மகளிர் மட்டும்' படத்தில் முதன்மைக் கதாபாத்திரமாக மிரட்டியிருந்த நாசருக்கு, இந்தப் படத்தில் அவ்வளவு வேலையில்லை.

நான்கு பெண்களும் செல்லும் பயணம், பன்ச் பேக்கை வைத்து தங்களின் கோபங்களை வெளிக்காட்டும் இடம், மூவரின் காதல் கதையையும் குட்டிக் குட்டி பாடல்களாகக் காட்டியது எனப் படத்தில் நிறைய சுவாரஸ்யத் தருணங்கள். சிறப்புத் தோற்றத்தில் வரும் ‘அந்த’ நடிகர் வந்ததும் படத்தின் ஃப்ளேவர் இன்னும் சிறப்பாக மாறுவதும், மூவரையும் சந்திக்கவைத்ததற்கான காரணத்தைச் சொல்லும் இடமும் சிறப்பு.

மகளிர் மட்டும்

ஜிப்ரான் இசையில் பின்னணி இசையும் பாடல்களும் மிக அழகு. காந்தாரி யாரோ, மூவரின் காதல் ஃப்ளாஷ்பேக்குக்கு வரும் பாடலும் படத்துக்கு அத்தனை கச்சிதமாகப் பொருந்துகிறது. வெல்டன் ஜிப்ரான். ஃபீல் குட் படத்துக்குத் தகுந்த ஒளிப்பதிவைக் கொடுத்திருக்கிறார் மணிகண்டன். ஃப்ளாஷ்பேக்கில் 1970-களின் உணர்வைக் கொடுப்பதற்குத் தந்திருக்கும் நிறமும், நிகழ்காலத்துக்கு ஏற்ற மாதிரி கலர் ஃபுல்லான காட்சியமைப்புகளும் என நிறைவாக உழைத்திருக்கிறார். 

படத்தின் தலைப்புபோலவே படத்தில் நிறைய `மகளிர் மட்டும்' வகை வசனங்கள் உண்டு. சில நேரம் அது காட்சியோடு ஒன்றியிருக்கிறது. பல நேரங்களில் கதைக்கு வெளியே இருப்பதால் உறுத்தலாக இருக்கிறது. குறிப்பாக, மலைவாழ் மக்களின் திருமணக் காட்சியும், அதைத் தொடர்ந்து வரும் சில வசனங்களும் படத்துடன் சேராமல் தனித்து நிற்கின்றன. குறிப்பிட்ட ஒரு காட்சியில் சில மாற்றங்கள் நடப்பது பார்க்க நெகிழ்ச்சியாக இருந்தாலும், அது எப்படி ஸ்விட்ச் போட்டது மாதிரி சடசடவென இது நடக்கிறது என்ற எண்ணம் வருகிறது. அதிலும் க்ளைமாக்ஸ் காட்சியில் ஆண்கள் சடசடவெனத் திருந்துவதில் நாடகத்தனம் கொஞ்சம் அதிகம்.

மகளிர் மட்டும்

 

இப்படி சின்னச் சின்னக் குறைகள் இருந்தாலும், பெண்களுக்கான உணர்வுகளை அரசியல் தெளிவோடு பேசியிருப்பதும் ஆணவக்கொலைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்த வகையில் ‘மகளிர் மட்டும்’ படத்தை மனம்திறந்து பாராட்டலாம்.

http://cinema.vikatan.com/movie-review/102325-magalir-mattum-film-review.html

  • தொடங்கியவர்

சினிமா விமர்சனம்: மகளிர் மட்டும்ஜோதிகா

   
திரைப்படம் மகளிர் மட்டும்
   
நடிகர்கள் ஜோதிகா, பானுப்ரியா, ஊர்வசி, சரண்யா, லிவிங்ஸ்டன், நாசர், மாதவன்
   
இசை ஜிப்ரான்
   
இயக்கம் பிரம்மா
   
   

'குற்றம் கடிதல்' மூலம் கவனத்தை ஈர்த்த இயக்குநர் பிரம்மாவின் அடுத்த படம் என்பதாலும் '36 வயதினிலே'வுக்குப் பிறகு ஜோதிகா நடித்திருக்கிறார் என்பதாலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த திரைப்படம் இது.

மகளிர் மட்டும்

பள்ளிக்காலத்தில் ஒரே விடுதியில் தங்கியிருந்து, அட்டகாசம் செய்யும் மூன்று தோழிகள் - கோமாதா (ஊர்வசி), ராணி (பானுப்ரியா), சுப்புலட்சுமி (சரண்யா). படிக்கும் காலத்திலேயே ஒரு சிறு பிரச்சனையால் பிரிந்துவிடுகிறார்கள். பல ஆண்டுகள் கழித்து கோமாதாவின் வருங்கால மருமகள், பிரபாவதி (ஜோதிகா) இவர்கள் மூவரையும் ஒன்றாக இணைக்கிறார்.

ஒவ்வொருவரும் தங்கள் தினசரிக் கடமைகளில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்க, அவர்களை மூன்று நாட்கள் அதிலிருந்து விடுவித்து ஒரு பயணத்திற்கு அழைத்துச் செல்கிறார். இந்தப் பயணத்தின் முடிவில் எதிர்பாராத திருப்பங்கள் நடக்கின்றன.

மகளிர் மட்டும்

குடும்பத்தை நன்றாகக் கவனித்துக்கொள்ளும் பெண்கள், பெரும்பாலும் குடும்பத்தினரால் புறக்கணிக்கப்படுகிறார்கள். அவர்கள் கவனிக்கப்பட வேண்டும், அவர்களது குரல்கள் கேட்கப்பட வேண்டும் என்பதுதான் படத்தின் மையமான கரு.

இதைச் சொல்ல, வெவ்வேறு பின்னணியைச் சேர்ந்த மூன்று பெண்களை இணைத்து அவர்களது பிரச்சனைகளைச் சொல்கிறார் இயக்குநர்.

ஆனால், இந்தப் பிரச்சனைகளும் அதற்கான தீர்வுகளும் எங்கேயுமே அழுத்தமாக வெளிப்படவில்லை.

பெரும்பாலான காட்சிகள் மிக மெதுவாக, எவ்வித சுவாரஸ்யமுமின்றி நகர்கின்றன.

நகைச்சுவையை ஏற்படுத்த முயலும் சில குறும்புத்தனமான காட்சிகளும், எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை.

அதனால், படம் துவங்கி சிறிது நேரத்திலேயே சலிப்பை ஏற்படுத்த ஆரம்பிக்கிறது.

மகளிர் மட்டும்

ஏதோ ஒரு பிரச்சனை, அதன் முடிவை நோக்கிய உச்சகட்டக் காட்சிகள் என்று எதுவும் இல்லாததால், க்ளைமாக்ஸில் எதிர்பார்க்க படத்தில் எதுவுமே இல்லை.

ராணிக்கு ஏற்படும் பிரச்சனையும் படத்தின் பிற்பகுதியிலேயே தீர்க்கப்பட்டுவிடுகிறது.

ஆக, படத்தில் சீக்கிரமே ஒரு தொலைக்காட்சித் தொடருக்கான தன்மை ஏற்பட்டுவிடுகிறது.

 

பிரபாவதியின் பாத்திரப்படைப்பு படு செயற்கையாக இருக்கிறது.

இந்தப் படத்தில் வரும் ஒரு காதல் ஜோடிக்கு சங்கர் - கவுசல்யா என்று பெயர் வைத்திருக்கிறார்கள். உடுமலைப்பேட்டை சங்கரைப் போலவே இந்த சங்கரும் வெட்டப்படுகிறார்.

ஆனால், எதற்காக வெட்டப்படுகிறார் என்பதைச் சொல்லாமல் மேலோட்டமாக கடந்துபோகிறார்கள். இந்தப் படத்தில் பேசப்படும் பெண்ணியமும் அப்படித்தான், மேலோட்டமாக கடந்துசெல்கிறது.

மகளிர் மட்டும்

பானுப்ரியா, சரண்யா, ஊர்வசி ஆகியோர் ஏற்கனவே தேர்ந்த நடிகைகள். குறிப்பாக அம்மா பாத்திரங்களில் வெளுத்துக்கட்டியவர்கள் என்பதால் இந்தப் படத்தில் பெரிய ஆச்சரியமெதையும் அவர்கள் ஏற்படுத்தவில்லை.

ஆனால், சின்னச் சின்ன பாத்திரங்களில் வரும் லிவிங்ஸ்டன், மாதவன், நாசர் போன்றவர்கள் ஆசுவாசமேற்படுத்துகிறார்கள். அதேபோல, ராணியின் மகனாக நடித்திருக்கும் பாவல் நவகீதனும் பாராட்ட வைக்கிறார்.

பயணக் காட்சிகளை அதிகம் கொண்டிருக்கும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவு ரசிக்கவைக்கிறது. இசையும் ஓகே. படத்தில் வரும் சில 'பெண்ணிய' வசனங்களுக்கு திரையரங்குகளில் பெரும் கைதட்டல் கிடைக்கிறது.

மகளிர் மட்டும்

வீட்டில் புறக்கணிக்கப்படும் பெண்களைப் பற்றி பேச விரும்பிய இயக்குநர், சற்று வலுவான காட்சிகளை யோசித்திருக்கலாம். மிக மெதுவான பல காட்சிகளையும் நீக்கியிருக்கலாம்.

http://www.bbc.com/tamil/arts-and-culture-41283799

  • தொடங்கியவர்

''இந்தப் படம், பெண் சங்கடங்களின் டிஜிட்டல் ப்ரின்ட்!"  - மகளிர் பார்வையில் 'மகளிர் மட்டும்'#MagalirMattum

டிரெய்லர் பார்த்துவிட்டு, 'பல வருசங்களுக்கு அப்புறமா  சந்திக்கிற பள்ளித் தோழிகள், ஒரு பயணம் போறாங்க. அதுல கொஞ்சம் ஜாலி, சோகம், நாலு பாட்டு இருக்கும். இதுதானே..?' என நினைத்து தியேட்டருக்குப் போய் அமர்ந்தால்... படம் தொடங்கியதும் ஒவ்வொரு காட்சியிலும் 'ஸ்வீட் ஷாக்' கொடுக்கிறார் இயக்குநர் பிரம்மா. 'இது வெறும் ட்ரைலர் தான் கண்ணா, மெயின் பிக்சர் இன்னும் பாக்கலையே?' என்பதுபோல,  டிரெய்லர் பார்த்து நாம் யூகித்த கதையிலிருந்து மாறுபட்ட கதையாக விரிகிறது 'மகளிர் மட்டும்'. 

தமிழ் சினிமா வழக்கப்படி, 40, 50 வயதைக் கடந்த கதாநாயகர்களுடன் டீன் ஏஜ் நாயகிகள் டூயட் பாடுவார்கள். அந்தக் கதாநாயகர்களுடன் ஒரு காலத்தில் ஜோடியாக நடித்த நடிகைகள், அந்தப் படத்தில் அவர்களுக்கு அக்காவாகவோ, அம்மாவாகவோ நடிக்கும் கேலிக்கூத்தை இன்றும் கோடம்பாக்கம் உடைக்கவே இல்லை. ஆனால், இந்தப் படத்தில் ஜோவின் கம் பேக்குக்கு, 100% நியாயம் செய்திருக்கிறார் இயக்குநர். 36 வயதினிலே ஜோதிகாவை 20களில் கொண்டுவந்து, கதைக்களத்தையும் அவருக்கு ஏற்றார் போல் உருவாக்கி, கதையை அதற்குள் திறமையாக நகர்த்தி, கமர்ஷியல் எலிமென்ட்களை சரியான அளவில் உப்பு-புளி- காரம் சேர்த்து, நேர்த்தியாக பல குறியீடுகளையும் கோத்திருக்கிறார் இயக்குநர்.

மகளிர் மட்டும்


நாம் அன்றாட வாழ்க்கையில் பார்க்கும் நிகழ்வுகளை படத்தில் அடுக்கி இருப்பதால், படம் சலிப்புத் தட்டாமல் செல்கிறது. பேரன், பேத்தி எடுத்த பானுப்பிரியா, கணவரை இழந்து, திருமண வயதுக்கு வளர்ந்துவிட்ட மகனோடு இருக்கும்  ஊர்வசி, திருமணமாகி குழந்தை இல்லாத சரண்யா... இவர்களுக்கு மத்தியில் நவீன காலத்து மருமகள் ஜோ. இப்படி நம் கண் முன்னே பார்க்கும், கேட்கும், நாமே அனுபவிக்கும் கதாபாத்திரங்களால், கதைக்களத்தால் காட்சிகள் கண் முன்னே விரிகின்றன. ஊர்வசியின் ட்யூஷன், பானுப்பிரியாவின் சமையலறை, சரண்யாவின் வீடு இவையெல்லாம் நம் உலகில் நாம் அறிந்த பல முகங்களை நமக்கு நினைவுபடுத்துகின்றன. 

அது 1978 ஃபிளேஷ்பேக். மிகவும் கண்டிப்பான பள்ளி விடுதியில் கூண்டுகளை வெறுக்கும், கூண்டைத் தாண்டும் பறவைகளாக இருக்கிறார்கள் தோழிகள் ஊர்வசி, சரண்யா மற்றும் பானுப்ரியா. பள்ளிக் காலங்களில் அசாத்திய துணிவு கொண்டிருந்த பானுப்பிரியா, குக்கர் விசிலுக்கு முன்பு எழுந்து, கடைசி விசிலுக்கு பின்னுறங்குபவராக காலப்போக்கில் மாறிப்போகிறார். இவர்களுடைய பள்ளிக்கால ரகளை, வாழ்வின் வசந்த காலத்தை மீண்டும் கொண்டு வந்து கண்முன்னே நிறுத்துகிறது. படத்தில் நாம் கேட்கும் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என பல மொழிகள்; திண்டுக்கல் தொடங்கி சத்திஸ்கர் வரை என படத்தில் நாம் பார்க்கக் கிடைக்கும் பல நிலங்கள், படம் முடிவதற்குள் நிறைய 'பண்'பாடு’களை நமக்குக் காட்டிவிடுகின்றன. அதிலும், பச்சை உடம்புக்காரியாக இருக்கும் தன் மனைவியை, கார்த்திக் அவரின் தந்தை காலில் விழக் கட்டாயப்படுத்தும் காட்சி, ஆணாதிக்கத் திமிரையும் அதன் அறிவுகெட்டதனத்தையும் நெற்றிப் பொட்டில் அடித்தது போல் ஒரே ஃபிரேமில் காட்சிப்படுத்திக் காட்டுகிறது.

மகளிர் மட்டும்


21ம் நூற்றாண்டிலும் அரசியல் தளத்தில் பெண்களின் பங்களிப்பு சொல்லிக்கொள்ளும் அளவில் கிடையாது. சமூகக்கட்டமைப்பு அப்படி. ஆனால் திரைப்படத்தில், ஆவணப்பட இயக்குநராக, சமுகச் செயற்பாட்டாளராக வரும் ஜோ ‘கருப்புச்சட்டை’ போட்டுக்கொண்டு ஒரு ஜோடிக்கு சுயமரியாதைத் திருமணம் செய்து வைக்கிறார்; மேடையில் பேசுகிறார். பறையிசையோடு பெரியாரும் அம்பேத்கரும் ஆங்காங்கே வந்துபோகிறார்கள். ஜோதிகாவின் கதாப்பாத்திரத்தை பார்த்து பார்த்துச் செதுக்கியிருக்கிறார் பிரம்மா. போகிற போக்கில் 'ஸ்வச் பாரத்'தை கலாய்க்கிறார். தண்ணீர் பஞ்சம், மதுக்கடை என்று அடுத்தடுத்த ஃபிரேம்களில் ரொம்ப ஸ்ட்ரெஸ் பண்ணாமல் காட்டுகிறார். ‘நினைவேந்தல்’ நடத்தியது, துண்டுப்பிரசுரம் கொடுத்தது போன்ற மாபெரும் குற்றங்களுக்காக குண்டர் சட்டம் பாயும் இந்த நெருக்கடியான சூழலில், பாலச்சந்திரன் புகைப்படத்துடன் நினைவேந்தல் காட்சியை வைத்திருக்கிறார் இயக்குநர் பிரம்மா. இதற்கு விளக்கம் கேட்டு, பிரம்மாவிற்கு எந்தச் சம்மனும் அனுப்பப்படாது என நம்புவோமாக.

பட்டப்பகலில், நடுரோட்டில் வைத்து நிகழ்த்தப்பட்ட சங்கர்-கௌசல்யா மீதான ஜாதியத் தாக்குதலும், அந்த தாக்குதலில் வெட்டப்பட்டுச் சரிந்த சங்கரின் மரணமும் தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தின. பெரும் துயரத்தோடு முடிந்துபோன சங்கர்-கௌசல்யாவின் வாழ்வை படத்தில் கதையாகச் சேர்த்திருக்கும் இயக்குநர், அவர்களை இதில் 'வாழவைத்து’ இருக்கிறார். உண்மைச் சம்பவத்தை நிஜத்தில் வேடிக்கை பார்த்தவர்கள், படத்தில் காப்பாற்றுவதாக காட்சியமைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், நிஜத்தில் வேடிக்கை பார்த்த நம் அனைவரின் கையாலாகாத்தனத்தைச் சுட்டிக்காட்டவும், நம்மை குற்றஉணர்ச்சியில் ஆழ்த்தவும் படத்தில் அடிக்கடி ஒலிக்கச் செய்யப்படும் சங்கர்-கெளசல்யா என்ற பெயர்களே போதுமானதாக இருக்கின்றன. 

பானுப்பிரியா இருளர் சமூகத்தைச் சேர்ந்தவரைக் காதலிக்கிறார். அவர் காதலன் திடீரென மர்மமான முறையில் இறந்து பிணமாகக் கிடக்கிறார். அது தற்கொலையா, கொலையா என்று கண்டுபிடிக்க முடியாத நிலையில்  ‘முகத்தில் காயங்கள்’ இருக்கின்றன. அது தற்கொலையா, கொலையா என்று பானுப்பிரியாவிடம் கேட்கப்படும் கேள்விக்கு, பானுப்பிரியாவின் கண்கள் வெறுமையைப் பதிலாகக் காட்டுகின்றன. அந்த வெறுமையான பார்வையில் ஆயிரமாயிரம் வார்த்தைகள் புதைந்து கிடக்கின்றன.

மகளிர் மட்டும்


தேர்தல்களில் பெண்களுக்கான தனித்தொகுதிகளின் எண்ணிக்கை அதிகமாக வேண்டும் என்று குரல் கொடுக்கும் நேரத்தில், உள்ளாட்சித் தேர்தல்களில் கொடுக்கப்பட்ட தனித்தொகுதிகளில், கணவன் திருகும் பொம்மைகளாக இருக்கும் பெண் கவுன்சிலர்களின் நிலையை ‘நச்’ என்று பதிய வைத்திருப்பது அருமை. படத்தில் இரண்டு வெவ்வேறு தலைமுறையைச் சேர்ந்த பெண்கள், சந்தோஷமாக இருப்பதைப் பற்றியும், சுதந்திரமாக இருப்பதைப் பற்றியும் பேசுகிறார்கள். “உன் வீட்டுக்காரர் உன்ன நல்லா வச்சிக்கலையா?” என்ற ஊர்வசியின் கேள்வியை எதிர்கொள்ளும் பானுப்பிரியா “எது டீ சந்தோஷம்?” என்று மறு கேள்வியை கேட்கிறார். “என்னைக்கு இந்த நாட்டுல ஒரு பெண் உடல் முழுக்க நகை போட்டுட்டு, நடுராத்திரி தனியா...” போன்ற மொன்னை வரையறைகளை, “புடிச்சவன் கூட இருக்கிறதுதான் சுதந்திரம்” என்ற வசனத்தின் மூலம் அடித்து நொறுக்குகிறார் ஜோ.

குக்கர் விளையாட்டில் மூன்று பெண்களையும் அவர்களுக்குள்ளாக இருக்கும் வெம்மல்களையும், இதுவரை அடக்கி வைத்திருந்த அத்தனை கோபங்களையும் அடித்துத் தீர்த்துவிடுகிறார்கள். அதிலும் சரண்யா, “நீ தானே முதல் புள்ள பொம்பளப்புள்ளன்னு சொல்லி கலைக்க வச்ச? மறுபடியும் குழந்த பிறந்துச்சா?” என்ற இடத்தில் உடைத்துவிடுகிறார்.


மகளிர் மட்டும்



சரண்யா, ஊர்வசி, பானுப்பிரியா மூவரும் அவர்களுடைய நடிப்பில் பின்னி எடுத்திருக்கிறார்கள். அதிலும் ஊர்வசியின் குழந்தைத்தனமான சிரிப்பு அவ்வளவு அழகு. “இந்த வீட்டுக்கு இன்னொரு வேலக்காரி வச்சிக்க வேண்டியதுதான?” என்ற ஊர்வசியின் கேள்விக்கு, பானுப்பிரியாவின் பார்வையும், புன்னகையுமே அடுத்து வர வேண்டிய வசனத்திற்கு வேலை இல்லாமல் செய்கின்றன. மூவரின் இளைய வெர்ஷன்களும் நல்ல நடிப்பைத் தந்திருக்கிறார்கள். குறிப்பாக சின்ன வயது பானுப்பிரியாவாகவும், பானுப்பிரியாவின் மகளாகவும் நடித்தவரின் நடிப்பு செம்ம. பிரம்மாவின் படங்களில் இடம்பெறும் சிறு சிறு உள் கதைகளை அவரைச் சுற்றி இருப்பவர்களிடம் இருந்து எடுப்பதாக, 'குற்றம் கடிதல்' திரைப்பட விமர்சனக்கூட்டத்தில் தெரிவித்திருந்தார். இந்தப் படத்திலும், ஒவ்வொரு நாளும் பெண்கள் எதிர்கொள்ளும் ‘முடி’ பிரச்னையையும் விடாமல் அட்ரஸ் செய்திருப்பது பிரமாதம். ட்ரைலரில் எதிர்பார்த்த தோசை சீன் படத்தில் மிஸ்ஸிங். 

பழங்குடி மக்களிடையே இருக்கும் ஆண்-பெண் சமத்துவம், பழங்குடிகளின் நாகரிகம் பலர் அறியாதது. ஆனால், அந்தக்காட்சியை இன்னும் இயல்புபடுத்தி இருக்கலாமோ என்ற நெருடல் இருக்கிறது. நடுவில் ஆங்காங்கே வரும் பன்ச் வசனங்கள் ரசிக்க வைத்தாலும், சில இடங்களில் வலிந்து திணித்ததுபோல துருத்திக் கொண்டிருக்கின்றன. படத்தின் தன்மையை தக்கவைக்க, கடைசிக் காட்சிகளை விரைவுபடுத்தியதையும் புரிந்துகொள்ள முடிகிறது.  மொத்தத்தில், 'மகளிர் மட்டும்' அதன் பாணியில் தனித்து நிற்கிறது.

 

ஆனால், 'ஒவ்வொரு ஷோவுக்கும் குலுக்கல் முறையில் ஒரு பட்டுப்புடவை பரிசு!' என்று யோசித்திருக்கும் படக்குழுவினரின் மார்கெட்டிங் மைண்ட்... கொடுமை.  'மகளிர் மட்டும்' என்று முழங்கிவிட்டு, 'பொம்பளைங்களுக்கு ஒரு புடவை கொடுக்கிறதா சொன்னா தியேட்டருக்கு வந்துடுவாங்க' என்ற அவர்களின் நினைப்புக்கு உங்களின் பதில் என்ன மக்களே..? 
 

http://cinema.vikatan.com/tamil-cinema/102419--this-film-is-the-digital-print-of-women---magalir-mattum.html

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.