Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்து சமுத்திர பிராந்தியத்தில் சிரியா இல்லை

Featured Replies

கடந்த சில வாரங்களாக இப்பத்திரிகையில், ரவி சுந்தரலிங்கம் என்பவரால் தொடராக எழுதப்பட்ட 'இஸ்ரேலிய லெபனான் சர்ச்சைகள், போர்கள், உத்தேசங்கள், விளைவுகள் எமக்கான படிப்பினைகள்" என்கின்ற கட்டுரையை படிக்கும் வாய்ப்புக் கிட்டியது.

அவலை நினைத்து உரலை எப்படி இடிப்பது என்பதன் அர்த்தம் தெளிவாகப் புரிந்தது.

நானும் ஒரு பத்தி எழுத்தாளன் என்ற முறையில் சில கருத்துக்களை ஆரோக்கியமான விமர்சனத் தளத்திலிருந்து முன்வைக்க விரும்புகிறேன்.

விடுதலைப் புலிகளையும், ஹிஸ்புல்லாவையும் ஒன்றென தளமும் தரமுமற்ற ஒப்பீடுகளால் ஓலமிடுவதைத் தவிர்க்கும்படி இக்கட்டுரையாளர் தமது பத்தி எழுத்தை நிறைவு செய்கிறார். அதுமட்டுமின்றி மக்கள் பலமற்ற திடமில்லாத வெறும் போரொன்றை புலிகள் மேற்கொள்வதாகவும் சலிப்புறுகிறார்.

எவ்வாறு லெபனான் எனும் அரசுக்குள் இன்னுமொரு அரசை ஹிஸ்புல்லா நடத்துகிறதோ, அதுபோலவே எமது மக்கள் போரில் புலிகளது அரசு, ஸ்ரீலங்கா என்ற அரசினுள் நடத்துகிறது என்கிறார் கட்டுரையாளர்.

இவர் குறிப்பிடும் ஹிஸ்புல்லாவின் போராட்ட நிலைப்பாடும், அரசியல்சார் தகைமைகளும் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்ட பண்புகளிலிருந்து மிகவும் வேறுபட்டுள்ளதென்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

போரியல் பரிமாணத்தில் தரமற்ற ஒப்பிடுகையை ஹிஸ்புல்லாவுடன் இசைவுற முனைபவர்கள் எவரென்று தெரியவில்லை. அதேவேளை புலிகளின் போராட்ட அரசியல் பரிமாணத்தை குறைத்து மதிப்பீடு செய்வதற்கு ஹிஸ்புல்லா தான் இவற்றிற்கு அனுகூலமான ஒப்பீட்டு உருவமாக அமைந்திருப்பது போல் தெரிகிறது.

ஹிஸ்புல்லாவின் போராட்டப் பின்புலமும், வரலாற்றுப் பின்னணியும் பலஸ்தீன விடுதலையை மையமாகக் கொண்ட மத்திய கிழக்குப் பிராந்தியத்தின் விரிதளப் பரிமாணங்களுடன் பின்னிப் பிணைந்துள்ளது.

இஸ்ரேலிய லெபனான் சர்ச்சைகள் குறித்து மேல் போக்கான தரவுகளையும், நிகழ்வுகளையும் கோடிட்டுக் காட்டிய கட்டுரையாளர், இறுதியில் ஹிஸ்புல்லாவையும் புலிகளையும் தர நிர்ணய ஒப்பீட்டாய்வு செய்வதன் ஊடாக மொட்டைத் தலைக்கும் முழங்காலிற்கும் முடிச்சுப் போட முயல்கிறார்.

ஹிஸ்புல்லா புலிகளை ஒப்பிடும் மிதப்புக் கருத்துக்கள் தென்படுவதாகக் கற்பிதம் கொண்டவாறே, அதற்கெதிரான கருத்தியல் போரினை செயற்கையாக உருவாக்க இக்கட்டுரையாளர் முனைகிறார். ஆய்வு செய்வதற்கு கற்பனைத் தளங்களை சிருஷ்டிக்கக் கூடாது.

100 கோடி இந்தியர்களும், 2 கோடி சிங்களவர்களும் என்கிற இயங்கியல் நியதிகளுக்குள்ளே செயற்படுபவர்கள் என்ற யதார்த்த நிலைப்பாட்டினை நாமும் புரிந்துகொண்ட எமைப் போன்ற சிறிய மக்கள் கூட்டமொன்று தம்மை உலகரங்கில் முன் நிறுத்திடும்போது வலுக்கட்டாயமாகவே நாமும் அவர்களும் ஒன்றென தளமும் தரமுற்ற ஒப்பீடுகளால் ஓலமிடுவதைத் தவிர்க்கும்படி புத்திமதி வழங்குகிறார் கட்டுரையாளர்.

சிறிய மக்கள் கூட்டமொன்றின் விடுதலைப் போராட்டத்திற்கான எல்லைகளை வரையறை செய்ய, மக்கள் தொகையினை இயங்கியல் நியதிக்குள் உள்ளடக்கும் திரிபுவாதம் போக்கொன்றும் இக்கட்டுரையின் செருகப்பட்டுள்ளது.

அதாவது சிறுபான்மை இனத்தின் விடுதலைக்கு வெளிநாட்டுச் சக்திகளின் உதவிகளும் ஆதரவும் தேவையென்பதை வலியுறுத்தும் கூற்றுக்கள், ஊறுகாய் உதாரணங்களை முன்வைப்பதன் ஊடாக இந்திய பிராந்திய நலனிற்கேற்ப போராட்ட வழிமுறைகளை மாற்ற வேண்டுமென்பதை சொல்ல விழைவதாக ஊகிக்கலாம்.

ஹிஸ்புல்லாவின் அனுபவங்களையோ அல்லது பலஸ்தீன விடுதலைப் போராட்ட அனுபவங்களையோ அப்படியே உள்வாங்கியபடி தமிழீழத் தேசியப் போராட்டம் முன்னெடுக்கப்படுமாயின் ஆயுதத்தைக் கைவிட்டு கல்லெறியும் நிலைக்கே பின் தள்ளப்படும்.

பிராந்திய மக்கள் கூட்ட இனக் குழுமம் என்ற பொதுத்தன்மையில் ஹிஸ்புல்லாவிற்கான ஆயுத உதவிகளை சிரியா, ஈரான் போன்ற நாடுகள் வழங்கலாம்.

அதிலும் தமது பிராந்திய அரபு ஒருமைப்பாட்டிற்கும் நலன்களிற்கு அச்சுறுத்தலாகவிருக்கும் இஸ்ரேலிற்கு எதிரான சக்திகளிற்கு இந்நாடுகள் ஆதரவு வழங்குவது பரஸ்பர நலனடிப்படையில் என்பதை புரிந்து கொள்ளல் வேண்டும்.

இஸ்ரேலுடனான யுத்தத்தில் கோலான் மலைப்பிரதேசங்களை இழந்த சிரியா, ஈரான் போன்றவை இஸ்ரேலுடன் முரண்டு பிடித்தாலும் எகிப்து, ஜோர்டான் போன்ற நாடுகள் சமரச சன்மார்க்க வழியில் செல்வதையும் குறிப்பிட வேண்டும்.

வெளித்தோற்றத்தில் தோல்வியாகும் இப்போரின் பின்னணியில் இஸ்ரேலியரும் தமது பிராந்தியம் குறித்த புதிய கருத்துக்களுக்கு இடங் கொடுக்கத் தொடங்கியுள்ளனர் என்று தமது கருத்தொன்றை முன்மொழிகிறார் கட்டுரையாளர்.

என்னதான் அணுசக்தி கொண்ட பலவானாக இருந்தாலும் தானும் அணுசக்தி கொண்ட நாடுகளால் சூழப்படுவேன் என்ற யதார்த்த நிலைப்பாட்டினை இஸ்ரேலியர் உணர்வதாகக் குறிப்பிடும் ரவி சுந்தரலிங்கம், இக்கருத்தினை புலிகளோடு எவ்வகையாகப் பொருத்திப் பார்க்க முனைகிறாரென்று தெரிகிறது.

விடுதலைப் புலிகளையும் இஸ்ரேலையும் ஒரு கோட்டில் நிறுத்தி இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் பிற்போக்கில் சக்தியாக புலிகளை உருவகிக்க இவர் கடும் பிரயத்தனம் மேற்கொள்கிறார்.

இவரின் கற்பனைக் கருத்து நிலையில் உருவாகப்பட்டுள்ள இஸ்ரேலியரின் மனமாற்றம் போன்று ஈழத் தமிழர்களும் புலிகள் குறித்த தமது பார்வையை மாற்றியமைக்க வேண்டுமென எதிர்பார்க்கிறார்.

கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக மக்கள் பலமற்ற திடமில்லாத வெறும் போரொன்றை புலிகள் நடத்துகிறார்களென்ற இவர் கருத்தினைக் காழ்ப்புணர்வின் வெளிப்பாடாகவோ அல்லது கள யதார்த்தம் பற்றிய புரிதலற்ற நுனிப்புல் மேய்தலாகவும் கொள்ளலாம்.

வெளிநாடுகளிலிருந்து பெறப்படும் பணத்திலிருந்து மருத்துவமனைகள், பாடசாலைகளைக் கட்டி பராமரிப்பதாகக் கூறும் இவர், ஹிஸ்புல்லா மக்களிடம் வரி அறிவிடுவதில்லையென்கிற விடயத்தையும் முன்வைக்கிறார்.

மக்களிடம் வரி அறவிடும் விடுதலைப் புலிகள், தமது நிர்வாகக் கட்டமைப்பினை இயக்குவற்கு சிரியாவிடமிருந்தா பணத்தைப் பெற முடியும்? ஒரு அரசிற்குரிய உட்கட்டமைப்புக்களையும், நிர்வாக அலகுகளையும் தமது ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களில் புலிகள் உருவாக்கவில்லையென்கிற தோற்றப்பாட்டை உருவாக்க இவர் முயற்சிக்கிறார்.

பொருண்;மியத்துறை, நீதி நிர்வாகத்துறை மனிதவள மேம்பாட்டுத்துறை, கல்விக் கழகம், ஊடகத்துறை, நிதித்துறை, கட்டப் பிரிவு, அரசியல்துறை, கலை பண்பாட்டுக்கழகம் போன்ற இன்னும் பல பிரிவுகளுடன் தற்போது மனித உரிமைகள் அமைப்பொன்றும் விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பரப்பில் அணி சேர்க்கப்பட்டுள்ளது.

அத்துடன் இக்கட்டமைப்புக்களையும் பிரதேசங்களையும் பாதுகாக்கக்கூடிய வலுவான இராணுவ கட்டமைப்பொன்று விடுதலைப் புலிகளிடம் உள்ளது. புலிகளின் இராணுவப் பலத்தினை சிலாக்கிக்கும் இவர், ஏனைய உட்கட்டமைப்புக்கள் குறித்தான தனது பார்வை வேண்டுமென்றே தவிர்த்து விடுகிறார்.

சுயபலத்தில் தங்கி இருத்தலை, பலவீனமாகக் கருதும் ஏகாதிபத்தியங்களின் சிந்தனைக் கருத்தியலின் பிரதிபலிப்பாக இவரின் ஆய்வினைக் கருத இடமுண்டு.

பிராந்திய சர்வதேச வல்லரசுகளின் தந்திரோபாய வலைப் பின்னல்களை இன்னமும் இக்கட்டுரையாளர் புரிந்து கொள்ளாமை சோகத்துடன் எதிர்கொள்ளப்படுகிறது.

இந்தியா - இலங்கை ஒப்பந்தத்தில் கூறப்பட்ட வட கிழக்கு தற்காலிக இணைப்பை நிரந்தரமாக பிரித்துள்ள ஸ்ரீலங்காவின் மேலாதிக்க இனச் சட்டத்தினை எவ்வாறு எதிர்கொள்ள முடியுமென்பதை இவர் தெளிவுபடுத்த வேண்டும்.

ஸ்ரீலங்காவிற்கான இந்திய விட்டுக் கொடுப்புக்களினால் அதிகம் பாதிப்படைந்தது தமிழ் மக்களே.

இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை செம்மையாகச் செயற்படுத்தியிருந்தால் இந்நிலை உருவாகி இருக்காதெனவும் அதைப் புலிகளே செயலிழக்கச் செய்தார்களென்கிற குற்றச்சாட்டினை இவ்வகையான ஆய்வாளர்கள் எழுத்து மூலமாக கூறத் தொடங்கிவிட்டார்கள்.

அன்று எல்லாவற்றிற்கும் புலிகள் தலையாட்டி இருந்தால் இன்று வடக்கு - கிழக்கு மூன்றாகப் பிரிக்கப்படும்போது புலிகள் மீதே இவர்கள் சகல பழிகளையும் சுமத்துவார்கள்.

ஸ்ரீலங்காவின் அரசியல் வரலாற்றினை இன்னமும் சரிவர இவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லையா? இல்லையேல் புரியாதது போல் பாசாங்கு செய்து புலி எதிர்ப்புப் பிரசாரத்தை முன்னெடுக்க தளம் தேடுகிறார்களோவென்று புரியவில்லை.

மாற்றமைப்பினர் மக்கள் பிரதிநிதிகளா என்பதை மக்களே தீர்மானிப்பர். சிலவேளைகளில் முதலாளித்துவ நாடாளுமன்றத்தினுடாகவும் யார் தமது தலைமையென்பதை தெரிவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். புரிந்தால் சரி.

நன்றி: வீரகேசரி வார வெளியீடு (04.03.07)

http://www.tamilnaatham.com/articles/2007/...chandran/06.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.