Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'சர்வதேச மகளிர் தினம் - பெண்ணியம் - கற்பு - தமிழ்ப்பெண்" - சில கருத்துக்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

'சர்வதேச மகளிர் தினம் - பெண்ணியம் - கற்பு - தமிழ்ப்பெண்"

- சில கருத்துக்கள்!

-சபேசன் (அவுஸ்திரேலியா)-

சர்வதேச மகளிர் தினம் (International Women's Day) மார்ச் மாதம் 8 ஆம் திகதியன்று உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகின்றது. நாடுகளினால், அரசுகளினால், மொழிகளினால், மதங்களினால், பண்பாடுகளினால், அரசியலால், பொருளாதாரத்தால் உலகெங்கும் வேறுபட்டிருக்கும் பெண்ணினம், தம்முடைய கடந்த கால உரிமைப் போராட்ட வரலாற்றை எண்ணிப் பார்த்து ஒன்றிணையும் தினம் மார்ச் மாதம் எட்டாம் திகதியாகும்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பெண்ணினத்தின் மீது இழைக்கப்பட்டு வந்துள்ள அநீதிக்கு எதிரான போராட்டம் கடந்த தொண்ணூறு ஆண்டுகளாக கூர்மையடைந்து பல வெற்றிகளை அடைந்தது எனலாம். எனினும் பெண் விடுதலைக்கான போராட்டம் இன்னும் முழுமையான வெற்றியை பெறவில்லை. அது தொடர்;ந்தும் நடைபெற்று வருகின்றது.

~சாதாரணப் பெண்கள்| என்று கருதப்படுபவர்கள் சாதனை படைத்த வரலாற்றைச் சுட்டிக்காட்டுவதுதான் சர்வதேச மகளிர் தினத்தின் சிறப்பாகும். உலகின் பல்வேறு திசைகளில் வாழ்கின்ற பெண்கள் பல்வேறு காலப்பகுதிகளில் தமது உரிமைக்காகவும், சமத்துவத்துக்காகவும், நீதிக்காகவும், சமாதானத்திற்காகவும் தொடர்ந்து போராடி வந்துள்ளார்கள். அமெரிக்கா உட்பட ஒஸ்ரியா, டென்மார்க், ஜேர்மனி, சுவிட்சலாந்து போன்ற பல தேசங்களில் பெண்கள் சம உரிமைக்காக, சம ஊதியத்துக்காக போராடியுள்ளார்கள். 1917 ஆம் ஆண்டு கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் ரஸ்ய இராணுவத்தினர் கொல்லப்பட்டிருந்த நிலையில் ரஸ்;யப் பெண்கள் கிளர்ந்தெழுந்து நடாத்திய போராட்டம் ரஸ்ய ஜார்ஜ் மன்னரைப் பதவி துறக்க வைத்ததையும், ரஸ்;யப் பெண்களுக்கு வாக்கு அளிக்கும் உரிமையையும் பெற்றுத் தந்ததையும் உதாரணமாகக் காட்டலாம். இப்படியாகத் தொடர்ந்து நடைபெற்று பெண்கள் போராட்டம் 1945 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தில் பெண்களுக்கு சம உரிமையையும் அடிப்படை மனித உரிமைகளையும் இடம்பெறச்செய்வதற்கும் வழி வகுத்தது.

அவுஸ்திரேலியாவைப் பொறுத்த வரையில் முதல் முறையாக 1928 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25 ஆம் திகதியன்று MWM என்று அழைக்கப்பட்ட Women's Movement என்ற இயக்கத்தால் பேரணி ஒன்று நடத்தப்பட்டது. அப்பேரணியில் பெண்களுக்கும் ஆண்களைப் போல் சம ஊதியம், எட்டு மணி நேர வேலை மற்றும் வேலைத்தள வசதிகள் என்ற பல கோரிக்கைள் வற்புறுத்தப்பட்டன.

சர்வதேச மகளிர் தினத்தின் ஊடாகப் பெண்ணியம், பெண் விடுதலை, பெண்ணுரிமை போன்ற கருத்தாக்கங்கள் வலுவாக முன் வைக்கப்பட்டன. இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பெண்ணியம், பெண் விடுதலை, பெண்ணுரிமை போன்ற கருத்துருவாக்கங்கள் குறித்துச் சற்று ஆழமாகப் பார்ப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும். அதுமட்டுமல்லாது இக்கருத்துருவாக்கங்களைப் பன் முகப்பார்வைகளினூடாகவும் கண்டு தர்க்கிக்க விழைகின்றோம். ஆழமானதும், கடினமானதுமான இந்த விடயங்களை இயன்ற வரை எளிமைப்படுத்திச் சொல்ல முயல்கின்றோம்.

முதலில் பெண்ணியத்தின் பல அம்சங்களை கவனிப்போம்.

ஆண்கள் பெற்றிருக்கின்ற சட்டபூர்வமான உரிமைகள் யாவும் சமமாகப் பெண்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்கின்ற நோக்கோடு எழுந்த முதலாளியப் பெண்ணியம்; குடும்பம், உற்பத்தி ஆகியவற்றின் பின்னணியில் உள்ள பெண்ணடிமைத் தனத்தின் தோற்றத்தைக் கண்டுணர்ந்த மார்க்சியப் பெண்ணியம்; தந்தை வழிச்சமூக மதிப்பீடுகளுக்கு எதிராக பெண்மையின் தனித்துவத்தை உயர்த்திப் பிடித்த தீவிரப் பெண்ணியம்- இவை யாவும் பெண் என்பதற்கு ஒரு சாராம்சமான அடையாளத்தை ஏற்றுக் கொண்டுள்ளன. இதன்படி உடற்கூற்றை அடித்தளமாக- அதாவது Biological Foundationஅடித்தளமாகக் கொண்டு பெண்ணுறுப்புக்களைக் கொண்ட அனைத்து மனித உயிரிகளைப் பெண் என இந்தப் பெண்ணியக் கருத்தாக்கங்கள் அடையாளம் கண்டன.

இனிச் சற்று சிக்கலான விடயத்திற்கு வருவோம்.!

பெண் என்றால் யார்? பெண் என்ற சொல்லின் பொருள் என்ன?

எந்த ஒரு சொல்லுக்கும், பொருள் என்பது ஒரு தனித்துவமான பண்பைக் காட்டுவதல்ல! சொல் என்பது 'ஒரு தனித்துவமான பொருளுடன் தீர்மானமான உறவைக் கொண்டுள்ளது" என்று சொல்வதைக் காட்டிலும் சிக்கலான பல பண்புகளின் வலைப்பின்னலாக அது விரிவு பெறுகின்றது என்பதே சரியானதாகும். இதன் அடிப்படையில்தான் நாம் பெண் என்ற சொல்லின் கருத்தை அணுகுவதற்கு பெண்ணியம் (Feminism) என்பது பெண்ணை ஓர் ஆய்வுப் பொருளாக்கிப் பார்க்;கின்ற கோட்பாடாகும். FEMINISM என்கின்ற ஆங்கிலச்சொல் கிபி 19 ஆம் நூற்றாண்டில்தான் முதன் முதலாகப் பயன்படுத்தப்பட்டது. 18 ஆம் நூற்றாண்டிலேயே ஆங்காங்கு பெண் விடுதலைச் சிந்தனை எழுச்சி பெற்றிருந்தது என்பது உண்மைதான் என்றாலும் பெண்ணியம் ஒரு தனிக்கோட்பாடாக வலுப்பெற்றது. 19 ஆம் நூற்றாண்டில்தான்! இந்தக் கோட்பாட்டின் தோற்றம் குறித்தும் இரண்டு வேறு கருத்துக்கள் நிலவி வருகி;ன்றன.

முதலாளித்துவதற்;கு எதிராக எழுந்த மார்க்கசிய வர்க்கப் போராட்டத்தில் ஆதிக்க வெறியர்ளை எதிர்க்கும் நோக்கில் அதன் ஒரு பகுதியாக ஆணாதிக்கத்திற்கு எதிராகவும், பெண் ஒடுக்குமுறைக்கு எதிராகவும் குரல் எழுப்பப்பட்டது. இதுதான் பெண்ணியத்தின் வேர் என்றும் இதிலிருந்துதான் பின்னர் பெண்ணியம் ஒரு தனிக்கோட்பாடாக உருவாகியது என்றும் மார்க்கசியப் பெண்ணியவாதிகள் கூறுகின்றார்கள்.

ஆனால் Pரசந குநஅinளைவள என்று சொல்லக் கூடிய தூய பெண்ணியவாதிகள் இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்வதில்லை. இவர்கள் பெண்ணியம் என்பது 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மேலை நாடுகளில் பகுத்தறிவின் அடிப்படையில் ஆண்களுக்குச் சமமான உரிமைகளை வேண்டி பெண்கள் எழுப்பிய குரலின் ஊடாகத் தோற்றம் பெற்றது என்று வாதிடுகின்றார்கள். தோற்றம் குறித்துக் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பெண்கள் தங்கள் மீது ஏவி விட்டிருந்த அடக்குமுறைகளுக்கு எதிராக தீர்க்கமாக எழுப்பி வந்த குரலே பெண்ணியத்துக்கு எழுச்சியூட்டியது என்ற கருத்தில் வேறுபாடில்லை.

பெண்ணியம் குறித்து இன்னும் சற்று ஆழமான பார்வைகளைக் கவனிப்போம்.

பெண்ணிய ஆய்வாளரான கேட் மில்லட் என்ற பெண்மணி பெண்ணடிமை குறித்துச் சற்று ஆழமான கருத்துக்களை முன்வைத்துள்ளார். உலகம் முழுவதும் பால்வகை என்பது ஆண் என்பவன் பெண் என்பவளை அதிகாரம் செய்யக்கூடிய பான்மையில்தான் அமைந்துள்ளது. ஏனென்றால் ஆணாதிக்கச் சமூகம் வகுத்ததுதான் இந்தப் பால்வகைப் பிரிவு என்பதாகும். ஆண் என்பவன் தனக்குரிய சமூகக் களமாக இராணுவம் தொழிற்சாலை, அரசியல், நீதி, தொழில் நுட்பம், கல்வி போன்றவற்றை முன்னரே தெரிந்தெடுத்துக் கொண்டு தன்னை முதன்மைப்படுத்திக் கொண்டான்.

பெண்ணுக்கு இல்லம் என்பதை உரிமையாக்கி அதற்குள் அவளது இயக்கத்தை இவன் கட்டுப்படுத்தினான். ஆதனால் சமூகத்தில் பெண்ணின் இயகக்ம் குறைந்தது. குடும்ப அமைப்பில் அடங்கிக் கிடக்கும் பெண் என்பவள் தனது சமூகத்தை அணுகுவதற்கு அவளுக்குக் கணவன் என்ற துணை தேவைப்பட்டது. அவள் அவ்வாறு கணவனைச் சார்ந்து நிற்கும்போது அவளை சுயசிந்தனை இல்லாதவளாக ஆண் மகனின் கைப்பாவையாக உருவாக்குவதற்கு துணை போயிற்று. இரண்டு பால் இனங்கள் இடையேயான அதிகார உறவுகள் வளர்ந்து பெருகுவதற்கு குடும்பம் என்ற அமைப்பும் காரணமாக அமைந்தது.

பாலியல் அடிப்படையிலான பெண் அடிமைத்தனமானது, கருத்துருவம் (IDEOLOGY), உயிரியல் (BIOLOGY), சமூகவியல் (SOCIOLOGICAL), வர்க்கம் (CLASS), பொருளாதாரமும் கல்வியும் (ECONOMICS AND EDUCATION), சக்தி (FORCE), மானுடவியல் (ANTHOROPOLOGY) , உளவியல் (PHYCHOLOGY)என்று பல நிலைகளில் பல்கிப் பெருகியுள்ளதாக கேட் மில்லட் மேலும் குறிப்பிடுகிறார்.

இதுவரை நேரமும் சர்வதேச மகளிர் தினம் குறித்தும் பெண், மற்றும் பெண்ணியம் என்பவை குறித்தும் மேலைத்தேய ஆய்வு முறைகள் ஊடாகச் சில கருத்துக்களைத் தெரிவித்திருந்தோம். இனி இவை குறித்து எமது தமிழ் சமுதாயக் கட்டமைப்பின் ஊடாகச் சில தர்க்கங்களை முன்வைக்க விழைகின்றோம்.

தமிழ் நூல்களில் மிகப் பழமை வாய்ந்ததாகக் கருதப்படுகின்ற தொல்காப்பியத்தின் நூற்பாக்கள் கூட பெண்ணடிமைக் கருத்துருவாக்கங்களைத்தான் காட்டி நிற்கின்றன. தொல்காப்பியம் ஆரியர் ஊடுருவலையும் காட்டி நிற்பது உண்மைதான் என்றாலும் தொல்காப்பியரின் வரைமுறைகள் ஆணாதிக்கத்தையும், பெண் அடிமைத்தனத்தையும் ஏற்றுக்கொண்டிருப்பதாகவே எண்ணத் தோன்றுகின்றது. மேலைத்தேய ஆய்வுக்குச் சார்பாக மேலைத்தேய நாகரிக வாழ்விற்கும் முந்தைய கீழைத்தேய நாகரிகமும் பெண் அடிமைத்தனத்தை சான்று பகருகின்றது.

உதாரணமாக தொல்காப்பியர் ஆண் மகனின் இயல்பைப் பற்றிக் கூறும்போது,

~பெருமையும் ஊரனும் ஆடுஉ மேன|

(தொல்காப்பியம்-பொருள்-களவு-7)

-என்று உயர்த்திக் கூறுவதை நாம் காணலாம். ஆனால் அதே தொல்காப்பியர் பெண்ணுக்குரிய இயல்பைப் பற்றிக் கூறும்போது,

~அச்சமும் நாணமும் மடமும் முந்துறல்

நிச்சமும் பெண்பாற் குரிய|

- என்ற கோடு கீறி வரையறை செய்கின்றார். தமிழில் பழமை வாய்ந்ததாகக் கருதப்படும் தொல்காப்பியத்தின் படி ஆண் மகன் உரமுடையவனாகவும் பெருமைக்குரியவனாகவும் காட்டப்படுகின்றான். ஆனால் பெண்ணோ அச்சம், மடம், நாணம் என்ற இயல்புகளைக் கொண்டு அழகுடையவளாக (The Fair Sex), இரக்கம் உடையவளாக (The Gentle sex)> , மெல்லியவளாக (the softer sex), உணர்ச்சியை அடக்கும் ஆற்றல் அற்றவளாக, செயல்திறன் அற்றவளாக(The weaker sex) உருவகிக்கப்படுகின்றாள்.

சரி இல்லத்தலைவி குறித்து தொல்காப்பியர் என்ன கூறுகின்றார்?

கற்பும் காமமும் நற்பால் ஒழுக்கமும்

மெல்லியற் பொறையும் நிறையும்

வல்லிதின் விருந்து புறந்தருதலும்

சுற்றம் ஓம்பலும்

(தொல்காப்பிம்-பொருள்-கற்பு-11)

-என்று இல்லத்தலைவியை தொல்காப்பியர் வரையறுக்கின்றார்.

அதாவது, ~இல்லறத்தில் பெண் ஒரு பதிவிரதையாகவும், நல்ல ஒழுக்கம் உள்ளவளாகவும், பெண்மையும், பொறுமையும், மனக்கட்டுப்பாடு உடையவளாகவும், விருந்து உபசரித்துச், சுற்றம் ஓம்புகின்றவளாகவும் இருக்கவேண்டும் என்று தொல்காப்பியர் கூறுகின்றார். இவை மட்டுமல்ல நேயர்களே, கணவன் என்பவன் மனக்கட்டுப்பாடு இல்லாமல் பரத்தையர்களிடம்- விலை மாதர்களிடம்- சென்று வரும்போதும் அவனது மனைவியானவள் சிரித்த முகத்துடன் கணவனை வரவேற்பவளாகத் தன்னை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றும் தொல்காப்பியர் தெரிவித்துள்ளார். பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் இயற்றப்பட்ட சிலப்பதிகாரத்திலும் இத்தகைய கருத்துக்கள் தொனிப்பதை பின்னர் கவனிப்போம்.

சரி, தொல்காப்பியத்தைத் தவிர பிற தமிழ் இலக்கிய நூல்கள் என்ன சொல்கின்றன? உதாரணத்திற்குப் புறநானூறில் ஒரு பாடலைப் பார்ப்போம். பூதபாண்டியன் என்ற அரசன் இறந்து விடுகின்றான். அப்போது அவனது மனைவியும் நாட்டின் அரசியுமான அவனது மனைவி பெருங்கோப்பெண்டு என்பவள் இந்தப் பாடலைப் பாடுகின்றாள். இதுவரை காலமும் வந்த ஆய்வுகள் பலவும் கணவன் மீது மனைவி கொண்ட உயரிய அன்பினை இந்தப்பாடல் காட்டுவதாகவே சொல்லி வந்துள்ளன. ஆனால் இந்தப்பாடலை ஒரு பெண்ணியப் பார்வையூடாகப் பார்க்கும்போதுதான் அக்காலத்துச் சமுதாயக் கொடுமைகள் தெளிவாகப் புலப்படுகின்றன.

~அனல்வரிக் கொடுங்காய் வாள் போழ்ந்திட்ட,

காழ் போனல்விளர் நறு நெய் தீண்டாது,

அடையிடைக் கிடந்த கழிப்பிழி பிண்டம்,

வெள்ளாய் சாந்தோடு புளிப்பெய்து,

அட்டவேளை வெந்தை வல்சியாக,

நீ பரற்பெய் பள்ளிப்பாய் இன்று வதியும்|- (புறநானூறு 246)

இந்தப்பாடலின் கருத்தென்ன?

வெள்ளரி விதை போன்ற நெய்யற்ற நீர்ச்சோறு, எள்ளுத்துவை, புளியைக் கூட்டி சமைத்த வேளை இலை ஆகியவற்றை உண்டும், பாயில்லாமல் பருக்கைக் கற்கள் மேல் படுத்தும் கைம்மை நோற்க விரும்பும் பெண்ணல்ல நான்! எனக்கு ஈமத்தீயில் பாய்ந்து இறப்பதே மேலானதாகும்.!

:-என்பது இப்பாடலின் கருத்தாகும். கணவனை இழந்த பின்பு பெண்கள் வாழுகின்ற விதவை வழ்வு எவ்வளவு கொடுமையானது, கடுமையானது என்பதை இப்பாடலின் உட்கருத்துச் சொல்கின்றது அல்லவா! தவிரவும் இப்பாடலில் கணவன்-மனைவியின் அன்பு நிலை குறித்து ஒரு வரியிலும் சொல்லப்பட வில்லை.

பெண்கள் இவ்வாறு இறப்பதற்குப் பழைய விதிமுறைகளும் தூண்டி விடுகின்றன. வட நாட்டு ~காசி காண்டம்| என்கின்ற நூல் கீழ்வருமாறு கூறுகின்றது.

கணவனோடு சதி இறங்கி உயிர் நீக்கும் பெண், தனது உடம்பில் உள்ள உரோமங்கள் ஒவ்வொன்றிற்கும் ஆயிரம் கோடிக்காலம் இன்பம் அடையும் பேற்றைப் பெறுவாள்| - இவ்வாறு பல மூடநம்பிக்கைகள் சமுதாயத்தில் பரப்பப்பட்டன.

இதேபோலவே சிலப்பதிகாரத்தைப் பெண்ணிய நோக்கில் ஆய்வு செய்யும்போது பல சமுதாயக் கொடுமைகள் புலனாகின்றன. தனது கணவனான கோவலன் மாதவியிடம் சென்றபோது அவனது நடத்தை தவறு என்று கண்ணகி சுட்டிக் காட்டவில்லை. அவன் தனது செல்வம் யாவற்றையும் இழந்தபோதும் கண்;ணகி அவனைத் தடுக்கவில்லை. அவன் மாதவியை வெறுத்துத் திரும்பியபோது கண்ணகி தனது சிலம்பைக் கோவலனிடம் கொடுத்தானது அவனது கெட்ட நடத்தையை நியாயப்படுத்துவதாக உள்ளது. அதாவது கற்புக்கரசி என்பவள் தனது கணவன் எந்தத் தவறு செய்தாலும் சுட்டிக் காட்டக ;கூடாது. பெண்ணிய நோக்கில் பார்க்கும்போது கண்ணகி தன்னை அடிமையாக ஆட்படுத்திக் கொண்டாள் என்றும் ஆணினுடைய மேலாண்மைக்குத் துணை நின்றாள் என்றும் குற்;றம் சாட்டத் தூண்டுகின்றது.

இதேபோல கண்ணகி தனது கணவன் அநியாயமாகக் கொலை செய்யப்பட்டான் என்பதை அறிந்தவுடன் வீறுகொண்டு எழுந்து அரசனிடம் சென்று வாதிட்டு நீதியை நிலைநாட்டும் போது இங்கே இவளைப் பெண் விழிப்புணர்ச்சிக்கு வித்திடுபவளாகவும் காணமுடிகின்றது. இருவேறுபட்ட நிலைகளை இங்கே காண்கின்றோம்.

இப்படியாக கற்பு என்ற சொல்லை வைத்து பெண்ணை இன்னமும் அடிமையாக்குகின்றது. எமது இனம் கற்பின் பெயரால் கடும் மூடநம்பிக்கைகளை மதம் சார்ந்த சடங்கு நெறிகளை பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்துக்களை இலக்கிய நூல்களும் புராண நூல்களும் பரப்பின.

கற்பு என்பதற்குப் பலவிதமான பொருள்கள் சொல்லப்பட்டன. கன்னிமையைக் காத்தல், பதிவிரதா தர்மத்தைப் பேணுதல் என்ற கருத்தாக்கங்கள் பரவலாக்கப்பட்டுள்ளன. சங்கக் காலம் எனக் கருதப்படும் காலத்தில் கற்பு என்பது கணவனுக்கு உண்மையாக நடப்பதாகும். பின்னர் வந்த புராண காலத்தில் கணவனின் அடிமை மனைவியாவாள் என்ற கருத்தாக்கம் கற்பு என்பதன் பெயரால் உருப்பெற்றது. கற்பு என்ற கருத்தாக்கம் பெண்ணை அடக்கி அடிமைப்படுத்தி உடமைப் பொருளாக்கி இருட்டுலகில் தள்ளி விட்டது என்ற நவீனப் பெண்ணியவாதிகள் கடுமையாகச் சாடி வருகின்றார்கள்.

~ஆண்-பெண் இருபாலாரும் சரி சமமமான சுதந்திரத்துடன் வாழவேண்டும் என்ற நிலைமை ஏற்பட வேண்டுமென்றால் கற்பு என்பதன் அடிப்படை இலட்சியமும் கொள்கையும் மாற்றப்பட்டு ஆண்-பெண் அனைவருக்கும் ஒரே நீதி ஏற்பட வேண்டும்| என்ற பெரியாரின் கருத்து பெண்ணியத்திற்கு ஏற்ற ஒன்றாகவே காணப்படுகின்றது.

இன்று உலக நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது தமிழீழத்தில் பெண் விடுதலை என்பது முழுமையான விடுதலையை நோக்கிச் செல்வதைப் பெருமையுடன் காணக்கூடியதாக உள்ளது. தமிழீழச் சுதந்திரப் போராட்டம் இதற்கு அடித்தளமாக அமைந்துள்ளது என்பது முக்கியமான காரணமாகும். இன்று தமிழீழப் பெண்ணானவள் தன் மீதான அடிமைத்தனத்திற்கு எதிராகவும் தனது இனத்தின் மீதான அடிமைத் தனத்திற்கு எதிராகவும் போராடுகின்றாள். இவளது விடுதலைப் போராட்டம் விரிந்து பரந்து இருப்பதையும் நாம் அவதானிக்கின்றோம்.

பெண் விடுதலை குறித்து பல ஆண்டுகளுக்கு முன்பு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் தெரிவித்த கருத்து ஈண்டு கவனிக்க தக்கதாகும். உலகின் உயரிய சிந்தனாவாதிகளின் சிந்தனைக்கு இணையாக இச்சிந்தனையும் உள்ளதாகவே நாமும் எண்ணுகின்றோம். எமது தேசியத் தலைவர் சிந்தனையாளராக மட்டுமிராது அவற்றை செயற்படுத்தக் கூடிய செயல் வீரனாகவும் திகழ்வது அவரது இச்சிந்தனைக்கு மேலும் அர்த்தமூட்டுவதாகவே அமைகின்றது. பல ஆண்டுகளுக்கு முன்பு சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி தமிழீழத் தேசியத் தலைவர் விடுத்த அறிக்கையிலிருந்து ஒரு கருத்தை இங்கே தருவதில் மகிழ்சி கொள்கின்றோம். பெண்ணின் சமஉரிமையை வலியுறுத்துகின்ற அதேவேளை அதற்குரிய கௌரவத்தையும் தேசியத் தலைவர் குறிப்பிடுகின்றார்.

பெண்ணிடமும் மனிதம் இருக்கின்றது!

பாலியல் வேறுபாட்டிற்குப் புறம்பாக,

ஆண்மைக்கும் பெண்மைக்கும் அப்பாலாக,

இந்த மனிதத்தை இனம் கண்டு கௌரவிக்குமாறு,

பெண்ணினம் ஆணினத்திடம் அன்புக்கரம் நீட்டுகின்றது.

ஆழமான புரிந்துணர்வுடன் ஆணினம் இந்த அன்புக்கரத்தைப் பற்றிக் கொள்ளும்போதுதான் ஆண்-பெண் சமத்துவம் சாத்தியமாகும்.

இக்கட்டுரைக்கு கலாச்சாரத்தின் வன்முறை, பெண்ணியம்- அணுகுமுறைகள், கற்பு -கலாச்சாரம், காலம் தோறும் பெண், புறநானூறு, தொல்காப்பியம், வெள்pச்சம், எரிமலை போன்ற நூல்களும் சஞ்சிகைகளும் பயன்பட்டன. பல இடங்களில் சொல்லாடல்கள் அப்படியே எடுத்தாளப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்டவர்களுக்கு எனது பணிவான நன்றிகள்.

இவ் ஆய்வு அவுஸ்திரேலியா மெல்பேர்ன் ~தமிழ்க்குரல்| வானொலியில் 05.03.07 ஒலிபரப்பாகிய ஆய்வின் எழுத்து வடிவமாகும்.

http://www.tamilnaatham.com/articles/2007/mar/sabesan/07.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.