Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐந்தாவது முறையாக சிறந்த கால்பந்து வீரர் விருதைவென்ற கிறிஸ்டியானோ ரொனால்டோ!

Featured Replies

ஐந்தாவது முறையாக சிறந்த கால்பந்து வீரர் விருதைவென்ற கிறிஸ்டியானோ ரொனால்டோ!

 
 

உலகின் தலைசிறந்த கால்பந்து வீரருக்கு வழங்கப்படும் Ballon d’Or விருதை போர்ச்சுகலைச் சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ ஐந்தாவது முறையாக வென்றிருக்கிறார். 

Ronaldo_08013.jpg

 
 

Photo Credit: Twitter/Cristiano

 


கால்பந்து அரங்கில் மிகவும் மதிக்கப்படும் விருதுகளில் இந்த விருது முக்கியமானது. 32 வயதான ரொனால்டோ ஏற்கெனவே, இந்த விருதை 2008, 2013, 2014 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் வென்றிருந்தார். கடந்த ஆண்டைப் போலவே இந்தாண்டும் அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸியை முந்தி சிறந்த கால்பந்து வீரர் விருதை வென்றிருக்கிறார் ரொனால்டோ. இதன்மூலம், அதிக முறை (5) இந்த விருதை வென்ற மெஸ்ஸியின் சாதனையையும் அவர் சமன் செய்திருக்கிறார். பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்ற விழாவில் ரொனால்டோவுக்கு இந்த விருது அளிக்கப்பட்டது. விருதைப் பெற்ற ரொனால்டோ, 'நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஒவ்வொரு ஆண்டும் நான் எதிர்பார்த்துக் காத்திருப்பது இந்த தருணத்தைத்தான். கடந்தாண்டு வென்ற கோப்பைகள் எனக்கு இந்த விருதைப் பெற்றுத் தந்துள்ளது. ரியல் மேட்ரிட் அணியின் சகவீரர்களுக்கும், இந்த விருதைப் பெற உதவிய மற்ற அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார். பிரான்ஸின் கால்பந்து இதழ் ஆண்டுதோறும் அளிக்கும் இந்த விருதுக்கு பத்திரிகையாளர்களின் வாக்குகள் அடிப்படையில் வீரர்கள் தேர்வுசெய்யப்படுகின்றனர். இந்தாண்டு விருதுக்கான 30 வீரர்கள் கொண்ட பட்டியலில் அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸி இரண்டாம் இடமும், பிரேசில் வீரர் நெய்மர், மூன்றாம் இடமும் பிடித்தனர்.

https://www.vikatan.com/news/sports/110137-cristiano-ronaldo-wins-fifth-ballon-dor-of-his-career.html

  • தொடங்கியவர்

சிறந்த கால்பந்து வீரராக மெஸ்சியின் சாதனையை சமன் செய்த ரொனால்டோ

ronaldo-wife-696x463.jpg
 

போர்த்துக்கல் மற்றும் ரியல் மெட்ரிட் அணிகளின் நட்சத்திர கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, 2017ஆம் ஆண்டுக்கானபெலான் டி ஓர்” விருதுக்கு பாத்திரமானார். இதன்படி, தங்கப்பந்து என்று அழைக்கப்படும்பெலான் டிஓர்விருதை ஐந்தாவது முறையாக வென்று லியொனல் மெஸ்சியின் சாதனையை ரொனால்டோ சமன் செய்தார்.

 

சிறப்பாக விளையாடும் கால்பந்து வீரருக்கு, பிரான்ஸ் கால்பந்து சஞ்சிகை சார்பில் ஆண்டுதோறும் பிபா தங்கப்பந்து என்றழைக்கப்படும்பெலான் டிஓர்விருது வழங்கப்படும். இந்த விருதுக்கான வீரர், பத்திரிகையாளர்கள் குழுவால் தேர்வு செய்யப்படுவர். இந்த ஆண்டிற்கான 30 பேர் கொண்ட பரிந்துரைப் பட்டியலில் லியொனல் மெஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோ, நெய்மர் உள்ளிட்ட 30 வீரர்கள் இடம்பெற்றிருந்தனர்.

ronaldo-messi-300x200.jpgமெஸ்ஸி ஐந்து முறை இந்த விருதை பெற்றுள்ளார். கிறிஸ்டியானோ ரொனால்டோ நான்கு முறை இந்த விருதை பெற்றிருந்தார். ரியல் மெட்ரிட் அணி இந்த ஆண்டு லா லிகா, சம்பியன் லீக் ஆகிய கிண்ணங்களை வென்றுள்ளது. இதற்கு கிறிஸ்டியானோ ரொனால்டோ முக்கிய காரணமாக இருந்ததுடன், அவ்வணிக்காக 42 கோல்களையும் பெற்றுக்கொடுத்தார். அத்துடன் போர்த்துக்கல் அணிக்கு ஐரோப்பிய கால்பந்து கிண்ணத்தையும் முதற்தடவையாக அவர் பெற்றுக்கொடுத்தார். இதனால் ரொனால்டோ இந்த ஆண்டிற்கான விருதை பெற்று மெஸ்சியின் சாதனையை சமன் செய்வார் என ஊடகங்கள் வாயிலாக பரவலாக பேசப்பட்டு வந்தன.

இந்நிலையில், கால்பந்து ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே இந்த விருது வழங்கும் விழா பிரான்ஸ் தலைநகரான பரிஸின் ஈபிள் கோபுரத்துக்கு முன்னால் விமர்சையாக நேற்று(07) நடைபெற்றது.

ronaldo-david-300x200.jpgஇதில் போர்த்துக்கலின் நட்சத்திர வீரரான ரொனால்டோவுக்கும், ஆர்ஜன்டீனாவின் மெஸ்சிக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவியது.

இதன்படி, உலக நாடுகளைச் சேர்ந்த 173 விளையாட்டு ஊடகவியலாயர்களின் அதிகப்படியான வாக்குகளைப் பெற்றுக்கொண்ட கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு (946 புள்ளிகள்) ஆண்டின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருது பிரான்ஸ் நாட்டின் முன்னாள் கால்பந்து வீரரான டேவிட் கினோலாவினால் வழங்கப்பட்டது.

இதன்மூலம் ஐந்தாவது முறையாக இந்த விருதை வென்ற ரொனால்டோ மெஸ்சியின் சாதனையை சமன் செய்தார். இதற்கு முன்னதாக அவர், 2008, 2013, 2014 மற்றும் 2016ஆம் ஆண்டுகளுக்கான 4 விருதைகளையும் பெற்றுக்கொண்டார்.

 

ronaldo-overall-300x226.jpg5ஆவது முறையாகவும் இந்த விருதை வெல்லவேண்டும் என்ற கனவு நனவாகியுள்ளதாக தெரிவித்த ரொனால்டோ, இதற்கு உதவியாக இருந்த போர்த்துக்கல் மற்றும் ரியல்மெட்ரிட் அணிகளுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாகவும் தெரிவித்தார். அத்துடன், எதிர்வரும் காலங்களிலும் தொடர்ச்சியாக இவ்விருதைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், குறித்த விருதுவழங்கும் விழாவில் ரொனால்டோவுக்கு கிறிஸ்மஸ் பரிசாக என்ன வேண்டும் என கேட்கப்பட்டது. அதன்போது இன்னுமொரு குழந்தை வேண்டுமா என அவருடைய காதலி ஜோர்ஜினா ரொட்ரிகஸ்ஸை கேலி செய்யும் விதமாக நிகழ்ச்சியின் தொகுப்பாளரினால் தெரிவிக்கப்பட்டது.

ronaldo-wife-300x200.jpgஇதற்கு பதிலளித்த ரொனால்டோ, தற்போது நாங்கள் 4 குழந்தைகளுடன் மகிழ்ச்சியைக் கொண்டாடவுள்ளோம். எனினும், எனக்கு 7 பெலான் டி ஓர் விருதுகளும், அதேபோல 7 குழந்தைகளும் வேண்டும் என சிரித்தவாறு பதிலளித்தார்.

முன்னதாக கடந்த ஒக்டோபர் மாதம் லண்டனில் நடைபெற்ற உலக கால்பந்து கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட விருது வழங்கும் விழாவிலும் 32 வயதான ரொனால்டோ, வருடத்தின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை தட்டிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

 

குறித்த வீரர்கள் பட்டியலில் அடுத்த இடத்தை லியோனல் மெஸ்ஸியும்(670 புள்ளிகள்), மூன்றாவது இடத்தை நெய்மரும்(670 புள்ளிகள்) பிடித்தனர்.

1956ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகின்ற பெலான் டிஓர் விருதானது 2010 முதல் 2015 வரை சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் அனுசரணையுடன் வழங்கப்பட்டு வந்தது. இதில் கடந்த 2008ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து 10 ஆண்டுகளாக வழங்கப்பட்ட பெலான் டிஓர் விருதை மெஸ்ஸியும், ரொனால்டோவும் மாறி மாறி வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ronaldo-achievments.jpg

http://www.thepapare.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

மெஸ்ஸி, ரொனால்டோவை விட்டா வேற ஆளே இல்லையா? #BallondOr2017

 
 
Chennai: 

ஐந்தாவது 'பாலன் டி ஓர் 'விருது வாங்கிவிட்டார் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவ்விருதை அதிகமுறை வாங்கியவர்கள் பட்டியலில் மெஸ்ஸியோடு இணைந்துகொண்டார். போர்ச்சுகல், ரியல் மாட்ரிட் ரசிகர்கள் வெரி ஹேப்பி. கடந்த 10 ஆண்டுகளாக இந்த இருவரும்தான் மாறிமாறி இந்த விருதை வென்றுவருகிறார்கள்? ரசிகர்கள்தான் மெஸ்ஸி - ரொனால்டோ மோகத்துக்குள் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள் என்றால், மொத்தக் கால்பந்து உலகமுமா? அவர்களை வீழ்த்த இன்னும் ஒருவன் கிடைக்கவில்லையா என்ன? இல்லை யாருக்கும் அந்த அங்கீகாரம் கொடுக்கப்படவில்லையா? ஓர் அலசல்...

ரொனால்டோ

 

பாலன் டி ஓர்...?

ஃபிரான்ஸ் கால்பந்துக் கூட்டமைப்பு ஆண்டுதோறும் சிறந்த கால்பந்து வீரரைத் தேர்ந்தெடுத்து விருது கொடுக்கும். ஐரோப்பிய க்ளப்களில் விளையாடும் வீரர்களுக்கு மட்டும், 1956-ம் ஆண்டுமுதல் இந்த விருது கொடுக்கப்படுகிறது. அதனால், கால்பந்தின் கடவுள் பீலேவுக்குக் கூட இவ்விருது கொடுக்கப்படவில்லை. 2010 முதல் 2015 வரை FIFA, பாலன் டி ஓர் அமைப்பு இரண்டும் சேர்ந்து, இவ்விருதினை வழங்கின. அப்போது உலகின் அனைத்து க்ளப் வீரர்களும் கணக்கில் கொள்ளப்பட்டன. 2016-ல் இருந்து, பாலன் டி ஓர் மீண்டும் ஃப்ரான்ஸ் கால்பந்துக் கூட்டமைப்பின் கட்டுப்பாட்டுக்கே சென்றுவிட்டது. 

தலைசிறந்த பத்திரிகையாளர்கள் இதில் ஓட்டுப்போட்டு சிறந்த வீரரைத் தேர்ந்தெடுப்பர். FIFA உடன் இணைந்து வழங்கப்பட்ட 6 ஆண்டுகளில்  தேசிய அணியின் கேப்டன்கள், பயிற்சியாளர்கள் ஆகியோரும் இந்தத் தேர்வில் பங்கேற்றனர். First pick, Second pick, Third pick என ஒவ்வொருவரும் 3 வீரர்களைத் தேர்வு செய்யவேண்டும். முதல் ஆப்ஷனாக அவர்கள் தேர்வு செய்யும் வீரருக்கு 5 புள்ளிகள் கிடைக்கும். இரண்டாவது ஆப்ஷனுக்கு 3 புள்ளிகளும், மூன்றாவது ஆப்ஷனுக்கு 1 புள்ளியும் கிடைக்கும். முடிவில் அதிக புள்ளிகள் பெறுபவரே, ஆண்டின் சிறந்த வீரர்.

messi and ronaldo

ரொனால்டோ - மெஸ்ஸி ஆதிக்கம்

2007-ம் ஆண்டு இந்த விருதினை பிரேசில் வீரர் ககா வென்றிருந்தார். அதன்பிறகு ரொனால்டோ, மெஸ்ஸியைத் தவிர, வேறு எந்த வீரரும் இதை வெல்லவில்லை. சொல்லப்போனால், இரண்டாம் இடம் கூட வேறு யாரும் பெறவில்லை. ரொனால்டோ வென்றால், மெஸ்ஸி இரண்டாமிடம். மெஸ்ஸி வென்றால், ரொனால்டோ முதலிடம். விதிவிலக்காக 2010-ம் ஆண்டு மட்டும்! இருவரும் வளர்ந்துகொண்டிருந்த காலத்தில் ரொனால்டோ, ரொனால்டினியோ, பெக்கம், தியரி ஹென்றி, ஜிடேன் போன்றவர்கள்தான் கால்பந்தை ஆண்டுகொண்டிருந்தவர்கள். 

 ஏதோ ஒரு வகையில், அவர்கள் ஒரே அணியில் விளையாடியவர்களாக இருந்ததால், தனிப்பட்ட போட்டி எந்த இரு வீரர்களுக்குள்ளும் எழவில்லை. ஜிடேன், பெக்கம், ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணிக்காக ஆடியவர்கள். அதனால், அவர்களுக்குள் நல்ல உறவு இருந்தது. அப்போது மிகச்சிறந்த ஃபார்வேர்டு ரொனால்டோதான். அவர்களின் வைரி பார்சிலோனாவில் அப்போது கலக்கிக்கொண்டிருந்தவர் ரொனால்டினியோ. இருவரும் பிரேசில் நாட்டவர். எனவே, பீலே - மரடோனா போன்றதொரு பகைமை ஒப்பீடு பெரிய அளவில் எழாமல் இருந்தது.

messi

ஆனால், இவர்கள் எழுச்சி விஸ்வரூபமாக இருந்தது. திறமையானவர்கள் பலர் இருந்தும், இவர்களின் உயரத்தைத் தொடமுடியவில்லை. அதனாலேயே, அனைவரின் கவனமும் இவர்கள் மீது விழுந்தது. போதாக்குறைக்கு, எதிரெதிர் துருவங்களான பார்சிலோனாவுக்கும், மாட்ரிட்டுக்கும் இவர்கள் ஆட, பற்றிக்கொண்டது பகைமைத் தீ. கால்பந்து உலகம் மெல்ல மெல்ல இவர்களைச் சுற்றி இயங்கத் தொடங்கிவிட்டது. அதன் வெளிப்பாடுதான் இந்த விருது. 10 ஆண்டுகளும் இவர்கள் இருவரும்தான் வென்று கொண்டிருக்கிறார்கள். இவர்களின் செயல்பாடு உலகத்தரம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், ஒருவர் கூடவா இவர்களை நெருங்கவில்லை?

கோல் அடித்தால்தான் விருதா?

இந்த விருது பரிந்துரைகளும், வெற்றிகளும் ஒரு வீரர் எத்தனை கோல் அடித்தார் என்பதைப் பொறுத்துத்தான் தரப்படுகின்றன. டிஃபண்டர்கள், கோல்கீப்பர்களுக்கான அங்கீகாரம் தரப்படுவதில்லை. கடைசியாக 2006-ம் ஆண்டு இத்தாலி கேப்டன் ஃபேபியோ கன்னவாரோ, இவ்விருதினை வென்றார். அதன்பிறகு எந்தத் தடுப்பாட்டக்காரரும் டாப்-3-யில் கூட வரவில்லை. ஒரே ஒருமுறை ஜெர்மனி கோல்கீப்பர் மானுவேல் நூயர் அந்தப் பட்டியலில் இடம்பிடித்தார். வெற்றிக்காக எவ்வளவு உழைத்தாலும், கோல் அடிப்பவர்களுக்குத்தான் இந்த அங்கீகாரம் போய்ச்சேருகிறது. இந்த சில ஆண்டுகளாக், மெஸ்ஸி, ரொனால்டோ இருவரும் உச்சம் அடைந்த பிறகுதான் இந்தப் பிரச்னை.

ronaldo

கடந்த ஆண்டு ரொனால்டோவைவிட, மெஸ்ஸியே அதிக கோல்கள் அடித்திருந்தார். ஆனால், ரொனால்டோ தன் மாட்ரிட் அணிக்காக சாம்பியன்ஸ் லீக் கோப்பையையும், போர்ச்சுகலுக்காக யூரோ கோப்பையையும் வென்றுதர, விருது அவருக்குக் கொடுக்கப்பட்டது. சில சமயங்களில் ஒரு வீரர், முக்கியமான தொடர்களில் தன் அணியின் வெற்றிக்கு மிகச்சிறந்த பங்களிப்பைத் தருவதும் கணக்கில் கொள்ளப்படுகிறது. 2006-ம் ஆண்டு கன்னவோராவோக்கு இவ்விருது கொடுக்கப்பட்டது அதனால்தான். அந்த ஆண்டு, இரண்டாம் இடம் பிடித்தவர் கியான்லூயி பஃபன்...கோல்கீப்பர். இந்த 10 ஆண்டுகளில் இதற்கும் மதிப்பில்லாமல் போனது.

2008-ம் ஆண்டு ரொனால்டோ - மெஸ்ஸி சகாப்தத்தின் தொடக்கம். 2007-08 சீசனில் 42 கோல்கள் அடித்து மான்செஸ்டர் யுனைடட் அணி சாம்பியன்ஸ் லீக் மற்றும் பிரீமியர் லீக் வெல்லக் காரணமாக இருந்தார் ரொனால்டோ (446 புள்ளிகள்). அவருக்கு அந்த விருது கொடுக்கப்பட்டதில் மறுப்பில்லை. அந்த லிஸ்டில் அடுத்தடுத்த இடங்களில் வந்தவர்கள் மெஸ்ஸி (281 புள்ளிகள்), ஃபெர்னாண்டோ டாரஸ் (179), இகர் கசியஸ் (133). 33 கோல்கள் அடித்த டாரஸ் மூன்றாமிடமும், 16 கோல்களே அடித்த மெஸ்ஸி இரண்டாம் இடமும் பெற்றனர். எப்படி?

casillas

இதைவிடக் கொடுமை கசியஸின் நிலை...லா லிகா தொடரை மாட்ரிட் வெல்லவும், யூரோ கோப்பையை ஸ்பெய்ன் வெல்லவும் முக்கியக் காரணமாக இருந்தவர். லா லிகாவில் 36 போட்டிகளில் வெறும் 32 கோல்களே விட்டார். யூரோ கோப்பையில் இவர் விட்டது வெறும் 3 கோல்கள். இரண்டு கோப்பைகள் வெல்லக் காரணமாக இருந்தவர் 133 புள்ளிகளும், எந்தக் கோப்பையும் வெல்லாத, அந்த சீசனில் வெறும் 16 கோல்கள் மட்டுமே அடித்த மெஸ்ஸி இரண்டாம் இடமும் பிடித்தனர். ஒரு மேட்ச் வின்னருக்கு இதுவே மிகப்பெரிய அவமானம்.

தொடரும் சோகம்...

அதே நிலைதான் கடந்த 10 ஆண்டுகளாகத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. 2010 - விருதை வென்றவர் மெஸ்ஸி. அவர் பெற்றது 22.65 சதவிகித ஓட்டுகள். அவர் வென்றிருந்தத முக்கியத் தொடர் லாலிகா  மட்டுமே. உலகக்கோப்பையை வென்றது ஸ்பெய்ன். சாம்பியன்ஸ் லீக் வென்றது இன்டர் மிலன். ஆனால், விருது மெஸ்ஸிக்கு. உலகக்கோப்பையை வென்றதால் ஜாவி, இனியஸ்டா, கசியஸ், புயோல் போன்ற பல ஸ்பெய்ன் வீரர்கள் அந்தப் பட்டியலில் இடம் பெற்றிருந்தனர். ஆனால், அந்த ஆண்டு அவ்விருதினை வெல்ல அனைத்துத் தகுதிகளோடும் இருந்தார் ஸ்னெய்டர். யாரும் எதிர்பாராத வகையில் சாம்பியன்ஸ் லீக் தொடரை வென்ற இன்டர் மிலன் அணியில் இருந்தவர். உலகக்கோப்பை இறுதிப் போட்டிவரை முன்னேறிய நெதர்லாந்து அணியின் உயிர்நாடி. சொல்லப்போனால், 5 கோல்கள் அடித்து அந்த உலகக்கோப்பையின் டாப் ஸ்கோரராகவும் இருந்தார். ஆனால், இவருக்குக் கிடைத்ததோ 14.48 சதவிகித ஓட்டுகள்தான்.

sneijder

சில ஆண்டுகளாக நடுகள வீரர்களுக்கும் அங்கீகாரம் கொடுக்கப்படுவதில்லை. ஜாவி, இனியஸ்டா இருவரும்தான் பார்சிலோனா அணியின் இதயமாக இருந்தவர்கள். மெஸ்ஸியின் வளர்ச்சியில் இவர்களுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. அசிஸ்ட் செய்வதில் வல்லவர்கள். ஆனால், இப்போதெல்லாம் இவை கண்டுகொள்ளப்படுவதேயில்லை. கோல்களும், கோப்பைகளும்தான். 2012-ல் மீண்டும் யூரோ கோப்பையைக் கைப்பற்றியது ஸ்பெய்ன். இனியஸ்டாதான் அந்தத் தொடரின் சிறந்த வீரர் விருதை வென்றவர். 10.91 சதவிகித ஓட்டுகளுடன் அவர் பெற்றது மூன்றாம் இடமே. 41.60 சதவிகித ஓட்டுகள் பெற்று முதலிடம் பெற்றார் மெஸ்ஸி. எவ்வளவு வித்தியாசம்.

இந்த சர்ச்சையை 2014-ம் ஆண்டு அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றது. சாம்பியன்ஸ் லீக் வென்றுதந்ததாலும், அந்த சீசனில் அதிக கோல்கள் அடித்திருந்ததாலும் 37.66 சதவிகித ஓட்டுகளுடன் முதலிடம் பெற்று, விருதினை வென்றார் ரொனால்டோ. அவர் வென்றது அந்த ஒரு கோப்பைதான். ஆனால், பண்டஸ்லிகா, DFB போகல் போன்ற க்ளப் தொடர்களையும், FIFA உலகக்கோப்பையும் வென்றிருந்தார் ஜெர்மனியைச் சேர்ந்த கோல் கீப்பர் நூயர். அந்த உலகக்கோப்பையில் 4 கோல்கள் மட்டுமே விட்டிருந்தார். தனது அசாத்திய (ஸ்வீப்பர் கீப்பர்) செயல்பாட்டால் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார். ஆனால், விருது இல்லை. அதைவிடக் கொடுமை என்னவெனில், பட்டியலில் மூன்றாம் இடமே கிடைத்தது.

ஆம், நியாயப்படி ரொனால்டோ வென்றால், மெஸ்ஸி தானே இரண்டாம் இடம் பிடிக்கவேண்டும். பின்னர், இவருக்கு எப்படி அந்த கௌரவம் கிடைக்கும்? உலகக்கோப்பையின் தலைசிறந்த வீரருக்கு வழங்கப்படும் 'கோல்டன் பால்' நாமினிகள் பட்டியலில் கூட இவரது பெயர் இல்லை. அதுவும் மெஸ்ஸிக்குத்தானே தரப்பட்டது! விருது எனில் அது மெஸ்ஸிக்கும், ரொனால்டோவுக்கும் மட்டும் எனக் கால்பந்து உலகம் முடிவு செய்துவிட்டது. 

buffon

 

இந்த ஆண்டு ரொனால்டோ வென்றதில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், 40 வயதிலும் சிறப்பாக செயல்பட்ட யுவன்டஸ் கீப்பர் பஃபன் பெற்றிருக்கும் நான்காம் இடம்தான் தர்மசங்கடம். ரொனால்டோ, மெஸ்ஸி ஆகியோருக்குப் பிறகு நெய்மார்தான் என்பது அனைவரும் ஏற்றுக்கொண்டதே. அதற்காகவே, இந்தப் பட்டியலில் அவர் மூன்றாம் இடம் பிடித்துள்ளதுதான், இந்த விளையாட்டுக்கும், அதில் விளையாடும் திறமைசாலிகளுக்கும் அவமானம். 

https://www.vikatan.com/news/sports/110278-messi-and-ronaldoare-they-the-only-two-great-footballers.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.