Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெயலலிதா சிகிச்சைபெறும் வீடியோ! - தினகரன் தரப்பு வெளியிட்டது

Featured Replies

ஜெயலலிதா சிகிச்சைபெறும் வீடியோ! - தினகரன் தரப்பு வெளியிட்டது

 
 

hospital_10215.jpg

ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோவை டி.டி.வி.தினகரன்தரப்பு வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெற்றிவேல் வெளியிட்டுள்ள வீடியோவில், ஜெயலலிதா பழச்சாறு அருந்திக்கொண்டே டி.வி பார்க்கிறார். தற்போது இந்த வீடியோவை தனியார் தொலைக்காட்சிகள் வெளியிட்டுவருகின்றன. 

 

hospital_1_10459.jpg

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது. ஜெயலலிதா மரணம்குறித்து விசாரிக்க ஓய்வுப்பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு, விசாரணையும் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. மற்றொருபுறம் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகரில் நாளை இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இந்தச் சூழலில் டி.டி.வி.தினகரன் ஆதரவாளரும் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-வுமான வெற்றிவேல், ஜெயலலிதா அப்போலோவில் சிகிச்சைபெறும்போது எடுத்த வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

தன் மொபைலில் இருந்த வீடியோவை வெளியிட்ட பின்னர் பேட்டியளித்த வெற்றிவேல், “ ஜெயலலிதாவை தினம் தினம் அரசும், ஆள்பவர்களும் கொச்சைப்படுத்திவருகின்றனர். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள்குறித்த பல ஆதாரங்கள் உள்ளன. பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர், கொச்சைப்படுத்தும்வகையில் கருத்து கூறுகின்றனர். விசாரணை ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆஜராக ஏன் அழைப்பு விடுக்கவில்லை” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

https://www.vikatan.com/news/tamilnadu/111303-jayalalithaas-hospital-video-released-by-dinakaran.html

 

  • தொடங்கியவர்

அப்பல்லோவில் ஜெயலலிதா சிகிச்சையின்போது எடுக்கப்பட்ட வீடியோ: தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ., வெற்றிவேல் வெளியிட்டார்

 

 
jayalalithajpg

சிகிச்சையின்போது ஜெயலலிதா | வீடியோவில் இருந்து எடுக்கப்பட்ட ஸ்க்ரீன்ஷாட்

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சையின்போது எடுக்கப்பட்ட வீடியோவை டிடிவி தினகரன் ஆதரவாளர் எம்.எல்.ஏ., வெற்றிவேல் வெளியிட்டார்.  20 விநாடிகள் ஓடும் அந்த வீடியோவில் ஜெயலலிதா நைட்டி அணிந்தபடி பழச்சாறு அருந்துவது போல் காட்சிகள் உள்ளன.

வீடியோவை வெளியிட்ட வெற்றிவேலிடம் செய்தியாளர்கள் சரமாரி கேள்விகளை எழுப்பினர்.

அப்போது அவர், "ஜெயலலிதா மரணத்தைக் குறித்து பல்வேறு சந்தேகங்களை தொடர்ந்து எழுப்பி வருகின்றனர்.  அவர் உயிருடன் இருந்தபோது அவர் முன்னால் நிற்கவே பயந்தவர்கள் இப்போது பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றனர். ஜெயலலிதாவுக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதாகக் கூறி அவதூறு பரப்பிவருகின்றனர்.

அம்மா இப்படி ஒரு சூழலில் இருந்தபோது எடுத்த வீடியோவை வெளியிட எங்களுக்கு விருப்பமில்லைதான். ஆனால், தொடர்ந்து பரப்பப்படும் அவதூறுகளை எங்களால் பொறுக்க முடியாமல்தான் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளோம். அம்மாவின் தோழி வி.கே.சசிகலாதான் இந்த வீடியோவை எடுத்தார்.

இந்த வீடியோவை இப்போது வெளியிட தேர்தல் அரசியல் காரணம் அல்ல. விசாரணை ஆணையம் எங்களை விசாரணைக்கு அழைத்தால் ஒத்துழைப்பு தருவோம் என ஏற்கெனவே கூறியிருந்தோம். எங்களை அழைக்கவில்லை .அதனால் நாங்கள் அங்கே எதையும் ஒப்படைக்க வாய்ப்பில்லை.

ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தபோது நான் ஒருநாள்கூட உள்ளே சென்றதில்லை. ஆனால், எடப்பாடி பழனிசாமி, உதயகுமார், ஜெயகுமார், ஓபிஎஸ், விஜயபாஸ்கர் ஆகியோர் உள்ளே சென்றனர். அவர்கள் நடத்திய ஆலோசனை வீடியோகூட இருக்கிறது. இன்னும் பல வீடியோக்கள் உள்ளன, தேவைப்பட்டால் வெளியிடுவோம்" என்றார்.

நீளும் சர்ச்சைகள்:

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்று தொடங்கிய சர்ச்சை இன்னும் முடியவில்லை.

vetri1jpg

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதே ஆபத்தான நிலையில்தான் அனுமதிக்கப்பட்டார் என இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் அப்பல்லோ மருத்துவமனையின் நிர்வாகக் குழு இயக்குநர் டாக்டர் பிரதாப் ரெட்டி கூறியிருந்தார். இந்நிலையில்,  இன்று டிடிவி தினகரன் ஆதரவாளர் இந்த வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.

முன்பே சொன்ன தினகரன்..

ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ஓபிஎஸ் தரப்பினர் கூறியபோதெல்லாம் டிடிவி தினகரன், "எங்களிடம் வீடியோ ஆதாரங்கள் இருக்கின்றன. ஜெயலலிதாவுக்கு சிறப்பான மருத்துவ சிகிச்சையே அளிக்கப்பட்டது. அவர் அந்த வீடியோக்களில் நைட்டியில் இருக்கிறார். ஒரு முதல்வராக இருந்தவரை அந்த கோலத்தில் பார்க்க யாரும் விரும்பமாட்டார்கள் என்பதாலேயே அதை வெளியிடவில்லை. இருப்பினும், தேவைப்பட்டால் அந்த வீடியோவை வெளியிடுவோம்" எனக் கூறிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாளை தேர்தல்.. இன்று பரபரப்பு வீடியோ..

நாளை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் இன்று (புதன்கிழமை) டிடிவி தினகரன் தரப்பு இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது.

இந்த வீடியோவை இப்போது அவர்கள் வெளியிடக் காரணம் ஆர்.கே.நகர் தேர்தலில் ஏதாவது ஆதாயம் தேட முடியுமா என்பதற்காகவே என சில அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

இன்னும் சிலர், இந்த வீடியோவை இப்போது வெளியிட்டு ஜெயலலிதாவுக்கான சிகிச்சையை சசிகலா தரப்பினர் ரகசியமாக வைத்திருந்தது ஏன் என்ற கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்து டிடிவி தினகரன் , சசிகலா தரப்பின் மீதான களங்கத்தைப் போக்கிக்கொள்ளும் முயற்சி, மக்கள் ஆதரவைப் பெறுவதற்கான முயற்சி எனக் கூறுகின்றனர்.

http://tamil.thehindu.com/tamilnadu/article21997360.ece?homepage=true

  • தொடங்கியவர்

'ஜெயலலிதா அம்மாவை இந்தக் கோலத்தில் காட்டி ஜெயிக்க வேண்டுமா?!' - தினகரன் தரப்பிடம் வெடித்த விவேக் #Jayalalithaa #VikatanExclusive

 

ஜெயலலிதா சிகிச்சை வீடியோ

ப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா பழச்சாறு அருந்தும் காட்சிகளை வெளியிட்டிருக்கிறார் தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல். ' விவேக்கிடம் சசிகலா ஒப்படைத்த வீடியோக்கள் எப்படிக் கசிந்தன எனக் குடும்ப உறவுகள் கொதிக்கின்றனர். இந்த வீடியோ காட்சிகளை ஜெயா டி.வியில் ஒளிபரப்பப்படவில்லை. வெளிமாநிலத்தில் இருக்கும் விவேக், வீடியோ வெளியானதைப் பார்த்து கொதித்துப் போய்க் கிடக்கிறார்' என்கின்றனர் ஜெயா டி.வி நிர்வாகிகள். 

 
 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக, முன்னாள் நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தை அமைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இந்த விசாரணை ஆணையத்தில் அரசு மருத்துவர்கள், அதிகாரிகள், முன்னாள் அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் உள்பட பலரும் ஆஜராகி வருகின்றனர். நாளை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடக்கவிருக்கும் சூழலில் இப்படியொரு வீடியோ வெளியாகியிருப்பதை அதிர்ச்சியோடு கவனிக்கின்றனர் எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர். ஆனால், இந்த வீடியோ காட்சிகளால் சசிகலா குடும்பத்துக்குள் பெரும் பூகம்பமே வெடித்துக்கொண்டிருக்கிறது. இன்று காலை இந்த வீடியோவை வெற்றிவேல் வெளியிட்ட நேரத்தில் வெளிமாநிலத்தில் இருந்தார் விவேக். உடனே தினகரன் தரப்பைத் தொடர்பு கொண்டவர், ' யாரைக் கேட்டு இந்த வீடியோவை வெளியிட்டீர்கள்? மிக ரகசியமாக இந்த வீடியோக்களைக் கொடுத்துவிட்டுச் சென்றார் சின்னம்மா. அவருடைய அனுமதியில்லாமல் இந்த வீடியோவை வெளியிட்டுவிட்டீர்கள். ஒரு சாதாரண தேர்தல் வெற்றிக்காக, இப்படியொரு கோலத்தில் அம்மா இருக்கும் காட்சிகளை வெளியிடலாமா? இத்தனை மாதங்களாகப் பாதுகாத்து வைத்த ரகசியத்தை எப்படி வெளியிடலாம். வெற்றிவேல் மீது மட்டுமல்ல, தினகரன் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப் போகிறார் சின்னம்மா. இப்படி வெளியிட்டு நாம் நல்லபெயரை வாங்க வேண்டிய அவசியம் இல்லை' எனக் கதறி அழுதபடியே கொதிப்பைக் காட்டியிருக்கிறார். 

விவேக் ஜெயராமன்" வீடியோ காட்சிகளைப் பார்த்து விவேக் கதறியழுததற்கும் ஒரு காரணம் இருக்கிறது. சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்குச் சென்றபோது, இந்த வீடியோ காட்சிகளை தினகரனிடம் கொடுக்காமல் விவேக்கிடம் கொடுத்தார். அப்போது, ' இந்த வீடியோக்களைப் பத்திரமா பார்த்துக்கப்பா. எந்தச் சூழலிலும் இந்தக் காட்சிகள் வெளியாகக் கூடாது' எனக் கண்டிப்பான குரலில் உத்தரவிட்டே சிறைக்குச் சென்றார். இதன்பிறகு சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிப்பில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார் ம.நடராசன். கணவரைப் பார்ப்பதற்காக சசிகலாவுக்குப் பரோல் கொடுத்தது பரப்பன அக்ரஹாரா சிறை நிர்வாகம். தி.நகரில் உள்ள கிருஷ்ணபிரியா வீட்டில் தங்கியிருந்தபடியே உறவுகளைச் சந்தித்து வந்தார். அப்போது அவரிடம் பேசிய மன்னார்குடி உறவினர் ஒருவர், ' அம்மா மரணத்தில் நமது குடும்பத்தின் மீதுதான் அவதூறு பரப்புகிறார்கள். சிகிச்சை வீடியோவில் எதாவது ஒன்றை வெளியிடுங்கள்' எனக் கூற,

தினகரன்இதற்கு மறுப்பு தெரிவித்துப் பேசிய சசிகலா, ' அதிகபட்சம் என்னைக் கொலைகாரி என்பார்கள். சொல்லிவிட்டுப் போகட்டும். இப்படியொரு கோலத்தில் அம்மா இருக்கும் காட்சியை வெளியிட நான் சம்மதிக்க மாட்டேன்' எனக் கூறியிருக்கிறார். இதன்பிறகும் அந்த உறவினர், ' நம் மீதுள்ள சந்தேகங்களைப் போக்குவதற்கும் நம்மைப் பற்றி புரிய வைப்பதற்கும் ஒரு வாய்ப்பாக அமையும். தயவு செய்து வீடியோவைக் கொடுங்கள்' எனக் கூற, ' இனி இதைப் பற்றி நீங்கள் பேசினால், எழுந்து வெளியே போகலாம்' எனக் கண்டிப்புடன் கூறிவிட்டார். இவ்வளவு உறுதியாக சசிகலா இருக்கும்போது, இந்தக் காட்சிகள் வெளியாக அவர் சம்மதிக்க வாய்ப்பே இல்லை. ஆர்.கே.நகர் தேர்தல் வெற்றிக்காக இந்தக் காட்சிகளை வெளியிட்டிருக்கிறார் தினகரன் எனக் கொதிப்பில் இருக்கிறார் விவேக்" என விவரித்த மன்னார்குடி உறவினர் ஒருவர், 

" சசிகலா குடும்பத்திலிருந்து தான் மட்டுமே கோலோச்ச வேண்டும் என்ற மனநிலையில் இருக்கிறார் தினகரன். போயஸ் கார்டனுக்குள் வருமான வரித்துறை அதிகாரிகள் வந்தபோது, பத்திரிகையாளர்களிடம் பேசினார் விவேக். இதனை தினகரன் ரசிக்கவில்லை. இதைப் பற்றி சசிகலாவிடம் பேசும்போது, ' ஆளாளுக்கு பேட்டி கொடுக்கிறார்கள். இதனால் தேவையற்ற குழப்பம் ஏற்படும். நிதிப் பிரச்னை அதிகமாக இருக்கிறது. ஒவ்வொரு விஷயத்துக்கும் விவேக்கிடம் சென்று கேட்க வேண்டியிருக்கிறது. தயவு செய்து நிதியைக் கையாளும் பொறுப்பை என்னிடம் கொடுங்கள்' எனக் கேட்டார். இதற்கு சசிகலா எந்தப் பதிலையும் சொல்லவில்லை.

 

சசிகலா உத்தரவுகளை மீறித்தான் தினகரன் செயல்பட்டு வருகிறார் என்பதற்கு இந்த வீடியோ காட்சிகள் உதாரணம். நேற்று மாலை விவேக்கிடமிருந்து மீடியாக்களுக்கு அறிக்கை ஒன்று சென்றது. அதில், ஜெயலலிதா புகழுக்குக் களங்கம் விளைவிக்க நினைப்பவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்' எனக் கொந்தளித்திருந்தார். இந்த நிலையில், இப்படியொரு வீடியோ வெளியானதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தன்னுடைய பாதுகாப்பில் இருந்த வீடியோ எப்படி வெளியானது என அதிர்ச்சியில் இருக்கிறார். வீடியோ வெளியான தகவலை பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்குத் தெரியப்படுத்தியிருக்கிறார் விவேக். இதன் எதிரொலியாக தினகரன் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் ஆச்சர்யமில்லை" என்கிறார் போயஸ் கார்டன் நிர்வாகி ஒருவர். 

https://www.vikatan.com/news/tamilnadu/111312-is-this-a-right-way-to-portray-amma-vivek-is-totally-annoyed-with-dinakaran.html

  • தொடங்கியவர்

ஜெயலலிதா சிகிச்சை வீடியோவில் 10 சந்தேகங்கள்! - விவரிக்கும் சைபர் சேஃப்டி நிறுவன இயக்குநர்

 
 

jaya_13176.jpg

சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிசிக்சைபெற்ற ஜெயலலிதா, டிசம்பர் 5-ம் தேதி இறந்தார். அவரது மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முதல் பலர் குற்றம் சாட்டினர். இதையடுத்து, ஜெயலலிதா மரணத்தை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. விசாரணை கமிஷனின் விசாரணை நடந்துவரும் நேரத்தில், ஆர்.கே.நகர் பிரசாரம் நிறைவுற்ற நேரத்தில், தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல் எம்.எல்.ஏ., ஜெயலலிதா சிகிச்சைபெறும் வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அந்த வீடியோவில் சந்தேகங்கள் இருப்பதாக, நேஷனல் சைபர் சேஃப்டி அண்டு செக்யூரிட்டி ஸ்டாண்டர்டு என்ற தனியார் நிறுவனத்தின் கூடுதல் பொது இயக்குநர் அமர்பிரசாத் ரெட்டி தெரிவித்துள்ளார். 
"முதல்வராக இருந்த ஜெயலலிதா, சிகிச்சைபெறும் வீடியோவை வெற்றிவேல் எம்.எல்.ஏ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவைப் பார்க்கும்போது சில சந்தேங்கள் எழுகின்றன. 
 1.  ஜெயலலிதா, பெட்டில் படுத்தவாறே இடது கையால் ஜூஸ் குடிக்கிறார். முதல்வராக இருந்த ஜெயலலிதாவை வீடியோ எடுத்தவர்கள் ஏன் அவரது உடையைச் சரிசெய்யவில்லை? 
 2. இந்த வீடியோ, ஜெயலலிதாவுக்குத் தெரிந்து எடுக்கப்பட்டதா அல்லது தெரியாமல் எடுக்கப்பட்டதா என்பதை வீடியோ எடுத்தவர்கள்AMAR_13008.jpg முதலில் தெரிவிக்க வேண்டும். ஆனால், வீடியோவைப் பார்க்கும்போது ஜெயலலிதாவுக்குத் தெரியாமல்  எடுத்திருக்க வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. 
3. எந்த கேமரா மூலம் வீடியோ எடுக்கப்பட்டது? ரகசிய கேமரா மூலம் அந்த வீடியோ எடுத்ததற்கான வாய்ப்புகள் குறைவு. செல்போன் கேமரா மூலம்தான் அந்த வீடியோ எடுக்கப்பட்டிருக்க வேண்டும். மேலும், அந்த வீடியோ ஜூம் செய்து எடுக்கப்பட்டுள்ளது. அதை, தடய அறிவியல் துறையினர்  ஆய்வுசெய்தால், வீடியோவின் உண்மைத்தன்மையைக் கண்டறிந்துவிடலாம். 

 
 

4. வீடியோவில் ஜெயலலிதா எதையோ (டி.வி பார்த்திருக்க வாய்ப்பு உள்ளது) பார்த்தபடி ஜூஸ் குடிக்கிறார். இதனால், அவர் வீடியோ எடுத்தவர்களைக் கண்டுகொள்ளாமல் இருந்திருக்கலாம். இருப்பினும் வீடியோவில் அவரது கை அசைவு, உதடுகள் அசைவு ஆகியவற்றை உற்றுநோக்கினால் சில வித்தியாசங்களைப் பார்க்க முடிகிறது. 
5. ஜெயலலிதாவின் இடதுகையில் சில மாற்றங்கள் இருக்கின்றன. வீடியோவை ஆய்வுசெய்தால் அதைக் கண்டறியலாம். 

6. வீடியோ எடுக்கப்பட்ட கேமரா அல்லது செல்போனை தடய அறிவியல் துறையினரிடம் சம்பந்தப்பட்டவர்கள் ஒப்படைக்க வேண்டும். அப்போதுதான் வீடியோவின் உண்மைத் தன்மையை எளிதில் கண்டறிய முடியும். 
 7. ஜெயலலிதாவின் வீடியோ எந்தத் தேதியில், எந்த நேரத்தில், எவ்வளவு நேரம் எடுக்கப்பட்டது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் தெரிவிக்க வேண்டும். 
8. ஒரிஜினல் வீடியோவை சமர்ப்பிக்கப்பட்டால், அதை ஆய்வுசெய்து வீடியோகுறித்த சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம். 
9. இந்த வீடியோவை அருகிலிருந்து எடுத்திருக்க அதிக வாய்ப்புள்ளது. ஏனெனில், வீடியோவில் ஜெயலலிதாவின் உருவம் வழக்கத்தைவிட பெரிதாகத் தெரிகிறது. 
10. வெற்றிவேல் வெளியிட்ட வீடியோ எடிட் செய்யப்பட்டுள்ளது. வீடியோவை நன்றாகக் கவனித்தால், ஒரு சினிமா பாடலின் ஹம்மிங் சத்தம் கேட்கிறது. இந்தச் சத்தம், டி.வி-யிலிருந்து வந்திருக்க வாய்ப்புள்ளது. வீடியோவின் தொடக்கத்தில் கேட்கும் பாடல், அதன்பிறகு கேட்கவில்லை. எனவே, தற்போது வெளியான வீடியோ எடிட் செய்யப்பட்டுள்ளதை உறுதியாகச் சொல்ல முடியும்.  

https://www.vikatan.com/news/tamilnadu/111325-10-doubts-about-jayalalithaa-video-footage.html

 

  • தொடங்கியவர்

`ஜெ. வீடியோவை தினகரனிடம் சசிகலா ஏன் கொடுத்தார்?' கிருஷ்ணப்ரியா பரபரத் தகவல்

 
 
Chennai: 

ஜெயலலிதா வீடியோ விவகாரத்தில் தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டதாகச் சசிகலாவின் உறவினர் கிருஷ்ணப்ரியா குற்றம்சாட்டியுள்ளார். 

Krishnapriya_15515.jpg

 
 

ஜெயலலிதா மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வந்த நிலையில், அவர் சிகிச்சை பெறுவது போன்ற வீடியோ ஒன்றை வெற்றிவேல் இன்று வெளியிட்டார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான வீடியோ வெளியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்தநிலையில், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா வெற்றிவேலின் செயலுக்குக் கண்டனம் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், ‘ஜெயலலிதாவுடன் 33 ஆண்டுகள் ஒன்றாக இருந்த சசிகலாவை, கொலைகாரி என்று கூறியபோதுகூட, தற்காப்புக்காக நாங்கள் வீடியோவை வெளியிடவில்லை. ஜெயலலிதாவின் புகழுக்குக் களங்கம் விளைவிக்கக் கூடாது என்பதாலேயே இந்த வீடியோவை வெளியிடவில்லை. தினகரன் வெற்றிக்காகச் சசிகலாவே இந்த வீடியோவை வெளியிடச் சொன்னதாக சிலர் கூறுகிறார்கள். தன்மீது கொலைப்பழி விழுந்தபோது அதை வெளியிடாமல் இருந்த சசிகலா, விசாரணை கமிஷனெல்லாம் அமைக்கப்பட்ட பின் வீடியோவை வெளியிட சம்மதித்திருப்பாரா. இதை மக்கள் சிந்திக்க வேண்டும். 

 

அந்த வீடியோ சசிகலாவால் எடுக்கப்பட்டதுதான். அவரது அனுமதியுடன் நாங்கள்தான் அந்த வீடியோவை டி.டி.வி.தினகரனிடம் கொடுத்தோம். ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்திடம் அதை அளிக்க வேண்டும் என்று சசிகலா கூறியதால், அவரது ஒப்புதலோடு அந்த வீடியோவை தினகரனிடம் கொடுத்தோம். ஆனால், அந்த வீடியோவை வெற்றிவேல் தற்போது வெளியிட்டுள்ளார். எனக்கு ஒரு கேள்வி இருக்கிறது. விசாரணை ஆணையத்திடம் கொடுப்பதற்காகத் தினகரனிடம் கொடுக்கப்பட்ட வீடியோ, வெற்றிவேலிடம் எதற்காக, எப்படிச் சென்றது. இதுதொடர்பாகத் தினகரனிடம் நான் பேசவில்லை, விரைவில் விளக்கம் கேட்போம். வெற்றிவேல் நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஜெயலலிதா வீடியோவை வெளியிடுவதாக இருந்தால் சசிகலா வெளியிட்டிருப்பார். சசிகலாவின் அனுமதி இல்லாமலேயே வெற்றிவேல் இந்த வீடியோவை வெளியிட்டுவிட்டார்’ என்றார். 
 

https://www.vikatan.com/news/tamilnadu/111340-jaya-video-sasikalas-kin-krishnapriya-condemns-vetrivel-for-releasing-the-video.html

  • தொடங்கியவர்

ஜெ. சிகிச்சை வீடியோ: அரசியல் தலைவர்கள் சரமாரி கேள்வி

 

 
jaya-21jpg

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சையின்போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியிடப்பட்டுள்ள நிலையில், பல்வேறு அரசியல் தலைவர்களும் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ளனர்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சையின்போது எடுக்கப்பட்ட வீடியோவை டிடிவி தினகரன் ஆதரவாளர் எம்.எல்.ஏ., வெற்றிவேல் வெளியிட்டார். 20 விநாடிகள் ஓடும் அந்த வீடியோவில் ஜெயலலிதா நைட்டி அணிந்தபடி பழச்சாறு அருந்துவது போல் காட்சிகள் உள்ளன.

'வீடியோவின் டைமிங் முக்கியம்..!- தமிழிசை'

ஆர்.கே. நகர் இடைத் தேர்தல் நடைபெறும் நிலையில் ஜெயலலிதா, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சையின்போது எடுக்கப்பட்ட வீடியோவை வெளியிட்டது ஏன்? என பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

‘‘இந்த வீடியோ காட்சியை ஒரு மருத்துவர் என்ற முறையிலும், அரசியல் கட்சித் தலைவர் என்ற முறையிலும் கவனிக்கிறேன். ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து பல்வேறு வதந்திகள் உலா வந்தன. அப்போதெல்லாம் இதனை வெளியிடவில்லை. இவ்வளவு நாள் கழித்து இதனை ஏன் வெளியிடுகிறார்கள் என்ற சந்தேகம் எழுகிறது.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் இது, பாதிப்பை ஏற்படுத்துமா? என்பது முக்கியமல்ல. அதேசமயம் தேர்தல் சமயத்தில் இதை வெளியிடுவது ஏன் என்பதுதான் கேள்வி’’ எனக்கூறியுள்ளார்.

வீடியோவின் உறுதித்தன்மை என்ன?- தொல் திருமாவளவன்

"இந்த வீடியோவை பார்க்கும் போது, ஜெயலலிதா சிகிச்சையின் போது, ஒரளவு உடல்நலத்துடன் இருந்துள்ளார் என்பது தெரிகிறது. இது எப்போது எடுக்கப்பட்டது, அதன் உறுதித்தன்மையை பற்றி தெரியவில்லை. ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டபோதே மிகவும் உடல்நலம் குன்றிய நிலையில் வந்தார் என, அந்த மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் சில நாட்களுக்கு முன் கூறப்பட்டது. எனவே இதையும் பொருத்திப் பார்க்க வேண்டியுள்ளது.

எனினும் தேர்தல் சமயத்தில் இதை வெளியிடுவது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. ஜெயலலிதாவுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட வில்லை என, ஓபிஎஸ் - இபிஎஸ் அணியினர் கூறி வரும் நிலையில், அதை மறுப்பதற்காக இதை வெளியிட்டுள்ளனர். தேர்தல் சமயத்தில் இதை வெளியிடுவது மக்கள் மனநிலையில் தாக்கத்தை ஏற்படுத்தும்" என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.

இது தேர்தலுக்காக..

இதுபற்றி அதிமுக முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி, "ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து நாங்கள் எழுப்பியது இரண்டு கேள்வி தான். அப்பல்லோ மருத்துவமனைக்கு அவர் எந்தநிலையில் கொண்டு வரப்பட்டார். அவருக்கு உயர்ந்த சிகிச்சை கொடுத்து அவரை காப்பாற்றி இருக்கலாம் என்ற இரண்டு தான் எங்கள் கேள்வி. அதற்கு இந்த வீடியோவில் எந்த பதிலும் இல்லை. தேர்தலுக்காக இதை அவர்கள் வெளியிட்டுள்ளனர்" எனக்கூறினார்.

http://tamil.thehindu.com/tamilnadu/article22000758.ece?homepage=true

  • தொடங்கியவர்

“வீடியோ வெளியிட்டதில் விதிகள் மீறப்பட்டுள்ளதா?” என்ன சொல்கிறார் சட்டவல்லுநர் #Jayalalithaa

 
 

சிகிச்சை பெறும் ஜெயலலிதா

றைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க... ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் கமிஷன் அமைத்து உத்தரவிட்டது தமிழக அரசு. அந்தக் கமிஷனும் தற்போது விசாரணையைத் தொடங்கித் தீவிரமாக நடத்திவருகிறது. இதுவரை அந்தக் கமிஷனில் 26-க்கும் மேற்பட்டோர் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளனர். இந்த நிலையில், டி.டி.வி.தினகரன் ஆதரவாளரும், தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-வுமான வெற்றிவேல், இன்று காலை ஜெயலலிதா அப்போலோவில் தங்கி சிகிச்சை பெற்றுவந்த வீடியோவை வெளியிட்டு தமிழக அரசியல் களத்தை அதிரவைத்துள்ளார். 20 விநாடிகள் கொண்ட அந்த வீடியோவில் ஜெயலலிதா பழச்சாறு குடிப்பது போன்ற காட்சியும், தொலைக்காட்சி பார்ப்பது போன்ற காட்சியும் வெளியாகியுள்ளது.

 
 

அரசியல் களத்தில் புயலைக் கிளப்பியுள்ள அந்த வீடியோ, அரசின் விதிமுறைகளை மீறி வெளியிடப்பட்டுள்ளது என  தற்போது விவாதம் எழுந்துள்ளது. அதாவது, தமிழகத்தின் முதல்வராக இருந்தவர்; அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டவர். அப்படிப்பட்டவர் தங்கி சிகிச்சைபெற்ற  வீடியோவைத் தனிநபர் ஒருவர் வெளியிட முடியுமா... அதற்கு அரசின் விதிகளில் வழிவகை இருக்கிறதா என அந்த விவாதத்தில் கேள்விகள் பல எழுகின்றன. ஏற்கெனவே ஜெயலலிதா மரணம் குறித்து பலரும் சந்தேகத்தை எழுப்பிய நிலையில், அது சம்பந்தமான அறிக்கை ஒன்றைத் தமிழகச் சுகாதாரத் துறை வெளியிட்டது. அப்படியிருக்கும்போது, ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோ தற்போது வெளியாகி இருப்பது பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியுள்ளது.

“விசாரணை நடத்த அதிகாரம் உள்ளது!”

மேலும், ஆறுமுகசாமி கமிஷன் விசாரணை நடத்திவரும் நிலையில், அந்தக் கமிஷனிடம் வீடியோவை ஒப்படைக்காமல் வழக்கறிஞர் விஜயன்வெளியிடப்பட்டதில் விதிமீறல் நடந்துள்ளதா என்பது போன்ற கேள்விகளுடன் சட்ட வல்லுநர்களையும், சமூக ஆர்வலர்களையும் தொடர்புகொண்டு பேசினோம். அதில் மூத்த வழக்கறிஞர் விஜயனிடம் பேசியபோது, “ஜெயலலிதா மரணத்தை விசாரிக்கக் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் கமிஷனிடம் வீடியோவை ஒப்படைத்திருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் வீடியோவை வெளியிட்டது தவறானது. அதன்படி, அந்த வீடியோ விவகாரம் தொடர்பாக ஆறுமுகசாமி கமிஷன் விசாரணை நடத்த அதிகாரம் உள்ளது. அதனால், கமிஷன் சம்மன் அனுப்பவும்  வாய்ப்புள்ளது. இது தொடர்பாக விசாரணையும் நடைபெறும்” என்றார். 

தேர்தலுக்காகவே வீடியோ வெளியீடு! 

இதுதொடர்பாக அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் நக்கீரன் புகழேந்தியிடம் பேசியபோது, “ஆர்.கே.நகர் தேர்தலை மையமாகவைத்தே இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. ஆறுமுகசாமி கமிஷனிடம் அந்த வீடியோவை ஒப்படைக்காமல் அதனை வெளியிட்டதன் உண்மையான நோக்கம் ஆர்.கே.நகர் தேர்தலுக்காகத்தான் என்பது மிகவும் தெளிவாகிறது. ஒட்டுமொத்த ஆர்.கே.நகர் மக்களின் வாக்குவங்கியைப் பெறுவதற்காக இந்த வீடியோ வெளியிடப்பட்டிருக்கிறது. அப்படியே இந்த வீடியோ விவகாரம் குறித்து நக்கீரன் புகழேந்திஆறுமுகசாமி விசாரணைக் கமிஷன்  விசாரணையை நடத்தினாலும் எப்படியும் 15 நாள்களுக்கு மேல் ஆகும். அதற்குள் தேர்தல் முடிந்து முடிவே வந்துவிடும். அவற்றையெல்லாம்  திட்டமிட்டே இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

இதுபோன்ற அரசியல் காய் நகர்த்தல்களைத் தடுக்க வேண்டும் என்றால், தேர்தல் ஆணையம் தனது விதிகளில் மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும். குறிப்பாக ஒரு மாநிலத்தில் ஒரு தொகுதிக்குத் தேர்தல் நடந்தாலும் மாநிலம் முழுவதும் தேர்தல் விதிமுறைகளை நடைமுறைப்படுத்தவேண்டும். ஏனெனில், தற்போது எங்கே என்ன நடந்தாலும் அதனை வெளியிடக்கூடிய தொழில்நுட்ப வசதிகள் பெருகியுள்ளன. அதனால் தேர்தல் ஆணையமும் அதற்கேற்றவாறு தனது விதிகளை மேம்படுத்த வேண்டும்” என்றார்.  

முதலில், ஜெயலலிதா வீடியோ வெளியிடப்பட்டது குறித்து ராஜேஷ் லக்கானியிடம் பத்திரிகையாளர்கள் கருத்து கேட்டபோது, “அது தேர்தல் விதிகளுக்குள் வராது” என்று தெரிவித்திருந்தார். பின்னர், “126 பிரிவின்படி அந்த வீடியோவை வெளியிட்ட வெற்றிவேல் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்” என ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி பிரவின் நாயருக்கு ராஜேஷ் லக்கானி உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

ஆர்.கே.நகர் தேர்தல், ஜெயலலிதா சிகிச்சை வீடியோ வெளியீடு எனத் தமிழக அரசியல் களம், அனல் வீசத் தொடங்கியுள்ளது.

https://www.vikatan.com/news/coverstory/111336-have-dinakarans-side-gone-against-the-constitution-by-releasing-video-of-jayalalithaa-during-rk-nagar-election-hours-jayalalithaa.html

  • தொடங்கியவர்
 ஜெ., சிகிச்சை,'வீடியோ'வை, வெளியிட்டு, சசி கும்பல்... தகிடுதத்தம்!

 

  • gallerye_230012878_1922867.jpg

 

ஜெ., சிகிச்சை, 'வீடியோ'வை வெளியிட்டு, சசி கும்பல் தகிடுதத்தம் செய்துள்ளது. ஜெ., மரண மர்மம் குறித்து, நீதி விசாரணை நடந்து வரும் வேளையில், அதில் தொடர்பில்லை என்பதை காட்ட, இந்த திடீர் நாடகம் நடத்தப்பட்டுள்ளது. 'இது, ஆர்.கே.நகர் தேர்தலில், அரசியல் ஆதாயம் தேடும் முயற்சி' என, கட்சிகள் புகார் தெரிவித்துள்ளன. இதற்கிடையில், வீடியோ பதிவில் உள்ள காட்சிகளின் உண்மை தன்மையில், ஏராளமான சந்தேகங்கள் எழுந்துள்ளன.

 

 ஜெ., சிகிச்சை,'வீடியோ'வை, வெளியிட்டு, சசி கும்பல்... தகிடுதத்தம்!


ஜெ., மருத்துவமனையில் இருந்த போது, அவரை பார்க்க யாரையும், சசி குடும்பத்தினர்
அனுமதிக்கவில்லை. அவர் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக, புகார் எழுந்தது.இது குறித்து விசாரிக்க, விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது.


ஜெ., மறைந்து ஓராண்டாகியும், அவர் மருத்துவமனையில் இருந்தது தொடர்பான படங்களோ, வீடியோ காட்சிகளோ வெளியிடப்படவில்லை.இந்த சூழ்நிலையில், சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், தினகரன், சுயேச்சையாக களம் இறங்கினார்.

 

சிக்கல்



இன்று ஓட்டுப்பதிவு நடைபெற உள்ள நிலையில், ஜெ., மரணத்தில் தங்களுக்கு தொடர்பில்லை என்பதை காட்ட, சசிகலா தரப்பினர், ஜெ., தொடர்பான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.மருத்துவமனை படுக்கையில் அமர்ந்து, ஜெயலலிதா, 'ஜூஸ்' குடிப்பது போன்ற காட்சி, வீடியோவில் பதிவாகி உள்ளது.


இதை தினகரன் வெளியிட்டால், அவருக்கு

சிக்கல் ஏற்படும் என்பதால், ஆதரவாளர் வெற்றிவேல் மூலமாக, வெளியிட்டு தகிடுதத்தம் செய்துள்ளனர். ஓராண்டாக வெளியிடப்படாத வீடியோவை, ஆர்.கே.நகர் தேர்தல் ஆதாயத்திற்காக, சசிகலா குடும்பத்தினர் வெளியிட்டு உள்ளதாக, அ.தி.மு.க., - தி.மு.க., - பா.ஜ., - வி.சி., உட்பட, பல்வேறு அரசியல் கட்சிகள் புகார் தெரிவித்துள்ளன.

இதற்கிடையில், அந்த வீடியோ காட்சிகள் குறித்து, பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன. வீடியோ, எந்த தேதியில் எடுக்கப்பட்டது என்ற விபரத்தை, வெற்றிவேல் கூறவில்லை.


ஜெ., பல முறை சிகிச்சைக்காக, மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது கூட எடுத்து இருக்கலாம். ஜெ., வீட்டில், மருத்துவமனையிலிருக்கும் அனைத்து வசதிகளும் உண்டு. வீட்டில் கூட,இந்த வீடியோ எடுக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும், ஜெ.,க்கு தெரியாமல், வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.


அவருக்கு தெரிந்திருந்தால், கேமராவை பார்த்திருப்பார் என, கூறப்படுகிறது. வீடியோவில், 'முதல் மரியாதை' படத்தில் வரும் பாடல் இசை ஒலிக்கிறது. வீடியோ, 'மார்பிங்' செய்யப்பட்டுள்ளதா என்ற, சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.

 

சந்திக்கவில்லை



ஜெ., மரணம் குறித்து விசாரிக்கும், நீதிபதி, ஆறுமுகசாமி தலைமையிலான கமிஷனில்,
ஜெ., சிகிச்சையை கண்காணிப்பதற்காக அமைக்கப்பட்ட குழுவில் இருந்த, அரசு மருத்துவர்கள் ஆஜராகினர். அவர்கள், 'ஜெ.,வை மருத்துவமனையில் சந்திக்கவே இல்லை' என, திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.


ஜெ., மருத்துவமனையில் நன்றாக இருந்தார் என்றால், அரசு மருத்துவர்கள், அவரை சந்திக்க, ஏன் அனுமதிக்கப்படவில்லை என்பது உட்பட, பல்வேறு சந்தேங்கள் எழுகின்றன. சசிகலா தரப்பில் வெளியிடப்பட்ட வீடியோ, சந்தேகங்களுக்கு பதில் அளிப்பதற்கு பதிலாக,

 

ஜெ., மரணம் தொடர்பான சந்தேகங்களை அதிகப்படுத்தி உள்ளது.


சசிகலா எடுத்த வீடியோ இது! : ''ஜெ.,வை கொச்சைப்படுத்தியதால், வீடியோவை வெளியிட்டேன்,'' என, தினகரன் ஆதரவாளர், வெற்றிவேல் கூறினார்.

 

அவர் அளித்த பேட்டி:



மருத்துவமனையில் ஜெ., எப்படி இருந்தார் என்பது, முதல்வர் , துணை முதல்வருக்கு தெரியும். தற்போது, பன்னீர்செல்வம் துாண்டுதலில், ஜெ.,க்கு குழந்தை உள்ளதாக பிரசாரம் நடக்கிறது. அவர் எதிரில் நிற்கவே பயப்பட்ட கூஜாக்கள், அவர் மரணம் குறித்து, சந்தேகம் எழுப்புகின்றனர். எனவே, வேறு வழியில்லாமல், இந்த வீடியோவை வெளியிட்டேன்.


அமைச்சர்கள், 'ஜெ.,வை அடுத்த சிகிச்சைக்கு, எங்கு அழைத்து செல்லலாம்' என ஆலோசித்த, வீடியோவும் உள்ளது. அவரால் பலன் அடைந்தவர்கள், ஜெ.,வை தொடர்ந்து கொச்சைப்படுத்தி வருகின்றனர். கொச்சைப்படுத்த யார் முயற்சித்தாலும், நடவடிக்கை எடுப்போம்.


மருத்துவமனையில், 'டிவி' பார்த்தபடி, ஜெ., 'ஜூஸ்' குடித்தபோது, இந்த வீடியோ எடுக்கப்பட்டது. ஆர்.கே.நகர் தேர்தலுக்கும், இந்த வீடியோவிற்கும் சம்பந்தம் கிடையாது. மருத்துவமனையில், அவர் நன்றாக இருந்தபோது எடுக்கப்பட்ட வீடியோவை வெளியிட்டுஉள்ளேன். குறுகிய எண்ணம் இருந்திருந்தால், போன தேர்தலிலேயே வெளியிட்டிருப்பேன்.


தேவை என்றால், விசாரணை கமிஷனிடம் அளிப்போம். முதல்வராக இருந்த பன்னீர்செல்வமும், தற்போதைய முதல்வர், பழனிசாமியும், விசாரணை கமிஷன் சென்று, தகவல் தெரிவித்து இருக்க வேண்டும்; அவர்கள் செய்யவில்லை.ஏராளமானோர், வீடியோ எப்படி எடுக்கப்பட்டது என, கேட்டனர். ஐ.சி.யு., என்ற, அவசர சிகிச்சை பிரிவில் இருந்து, ஜெ., வெளியே வந்த பின், இந்த வீடியோ எடுக்கப்பட்டது.


இதை, தினகரனிடம் வாங்கி வைத்திருந்தேன். முதல்வர் மற்றும் துணை முதல்வர், ஜெ., மரணத்தை கொச்சைப்படுத்துவதால் வெளியிட்டேன். சசிகலா மற்றும் தினகரனுக்கு, நான் வீடியோ வெளியிட்டது தெரியாது. சசிகலா தான், இந்த வீடியோவை எடுத்தார்.இவ்வாறு அவர் கூறினார்.

 

ஒளிபரப்ப தடை!



'தினகரன் ஆதரவாளர், வெற்றிவேல் வெளி யிட்ட வீடியோவை, 'டிவி'க்களில் ஒளிபரப்பக் கூடாது' என, ஆர்.கே.நகர் தேர்தல் அலுவலர், பிரவீன் நாயர், அனைத்து, 'டிவி' நிறுவனங் களுக்கும், 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1922867

  • தொடங்கியவர்

கைகளில் நரம்பு கிடைக்காததால் ஜெயலலிதாவின் கழுத்து ரத்தக்குழாயில் டியூப் பொருத்தப்பட்டிருக்கலாம்: வீடியோ காட்சிகள் பற்றி டாக்டர்கள் தகவல்

 

jayalalithajpg

கைகளில் நரம்பு கிடைக்காததால் ஜெயலலிதாவின் கழுத்து ரத்தக்குழாயில் டியூப் பொருத்தப்பட்டிருக்கலாம் என்று டாக்டர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் டிரக்யாஸ்டமி கருவி பொருத்தப்பட்டிருந்தாலும் திரவ உணவு உட்கொள்ளலாம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

சென்னை அப்போலோ மருத்துவமனையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வருவது போன்ற வீடியோ நேற்று வெளியானது. இந்த வீடியோ அப்போலோ மருத்துவமனையில் எடுக்கப்பட்டது. ஆனால் மருத்துவமனையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் எடுக்கப்பட்டது இல்லை. இந்த வீடியோவில் ஜெயலலிதா சிகிச்சைப் பெறும் வார்டில் இடம் பெற்றுள்ள மருத்துவ உபகரணங்கள் குறித்து டாக்டர்கள் கூறியதாவது:

 

செயற்கை சுவாச கருவி

செயற்கை சுவாசத்துக்காக தொண்டைப் பகுதியில் டிரக்யாஸ்டமி கருவி பொருத்தப்பட்டுள்ள நிலையில் ஜெயலலிதா ஜூஸ் அருந்துகிறார். டிரக்யாஸ்டமி கருவி என்பது சுவாசக் குழாயில் பொருத்தப்படுகிறது. உணவு உட்கொண்டால், அது உணவுக்குழாய் மூலமாக செல்லும். அதனால் அந்த கருவிக்கும் உணவுக் குழாய்க்கும் சம்பந்தமில்லை. அதனால் திரவ உணவுகளை உட்கொள்ளலாம். கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ம் இரவு 10.30 மணிக்கு ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அக்டோபர் 5-ம் தேதிதான் அவருக்கு அந்த கருவி பொருத்தப்பட்டது. அந்த வீடியோ அக்டோபர் மாதத்தில் எடுக்கப்பட்டதாக இருக்கலாம்.

 

ரத்த அழுத்தக் கருவி

ரத்த அழுத்தம் மற்றும் நாடித் துடிப்பை அளவிடுவதற்கு ஜெயலலிதாவின் வலது கையில் பட்டை கட்டப்பட்டுள்ளது. மேலும் உடலில் ஆக்ஸிஜன் அளவை அளவிடுவதற்காக அதே கையின் ஆள்காட்டி விரலில் சிறிய கருவி பொருத்தப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் கழுத்துப் பகுதியில் ஒரு டியூப் பொருத்தப்பட்டுள்ளது. டயாலிசிஸ் (ரத்த சுத்திகரிப்பு) செய்யவும், குளுக்கோஸ் ஏற்றவும் கைகளில் நரம்பு கிடைக்கவில்லை என்றால் கழுத்தில் இருந்து இதயத்துக்கு செல்லும் ரத்தக்குழாயில் டியூப் பொருத்தப்படும். ஆனால், இந்த இரண்டில் எதற்காக அந்த டியூப் என்பது தெரியவில்லை.

சிகிச்சைப் பெறும் வார்டில் நோயாளியுடன் ஒருவர் தங்குவதற்கான படுக்கை உள்ளது. அதனால் அது சாதாரண வார்டாக இருக்கலாம். மேலும் வார்டில் ஆக்ஸிஜனுக்கான குழாய், திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டால் சிகிச்சை அளிப்பதற்கான கருவி உள்ளிட்ட தீவிர சிகிச்சை கருவிகள் வைக்கப்பட்டுள்ளன.

http://tamil.thehindu.com/tamilnadu/article22121445.ece?homepage=true

  • தொடங்கியவர்

ஜெ. வீடியோ விவகாரம்; வெற்றிவேல் மீது நடவடிக்கை எடுக்க முடியாது: தினகரன்

 

 
download%208

வெற்றிவேல், தினகரன், ஜெயலலிதா வீடியோ காட்சி   -  கோப்புப் படம்

ஜெயலலிதா வீடியோ விவகாரத்தில் வெற்றிவேல் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்று டிடிவி தினகரன் விரிவாக விளக்கம் அளித்தார்.

இது தொடர்பாக இன்று தண்டையார் பேட்டையில் டிடிவி தினகரன் அளித்த பேட்டி:

இந்த தேர்தல் மாபெரும் வெற்றியை எங்களுக்கு கொடுக்கப் போகிறது.  எனக்காக பணியாற்றிய கட்சியினருக்கும், 56 மாவட்டங்களில் வந்திருக்கின்ற மாவட்டச்செயலாளர்கள், 56 மாவட்ட கட்சித் தொண்டர்களுக்கும் நன்றி. ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் உருவாக்க சசிகலா தலைமைதான் சரியானது என்று இந்தத் தேர்தல் முடிவு நிரூபிக்கும்.

ஜெயலலிதா வீடியோ விவகாரத்தில் வேட்பாளராக இருந்த காரணத்தால் நான் வாக்குப்பதிவு முடியும் வரை பதிலளிக்கவில்லை, ஆனால் இதற்கு முன்னர் பல தொலைக்காட்சி விவாதங்களில் இந்த வீடியோ பற்றி கேட்டபோது தேவைப்பட்டால் ஆணையத்தின் முன் சமர்ப்பிப்பேன் என்றேன். அந்த வீடியோ நவம்பர் மாதத்தில் எடுக்கப்பட்டது, அது ஒரு பிரைவேட் வீடியோ.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பழியை சசிகலா தலையில் போட்டு அவர்கள் பெயரை கெடுக்கும் விதமாக ஜெயலலிதாவை சசிகலா கொன்று விட்டார்கள் என்று பொய்ப்பிரச்சாரம் செய்தார்கள். அப்போது அமைச்சர்கள் மற்றும் இப்போதைய ஆர்.கே.நகர் வேட்பாளர் மதுசூதனன் உட்பட பலரும் இதுபோன்று பொய்பிரச்சாரம் செய்கிறார்களே, அந்த வீடியோவை வெளியிடுங்கள் என்று சசிகலாவிடம் கேட்டுக்கொண்டார்கள். ஆனாலும் வீடியோவை வெளியிட சசிகலா மறுத்துவிட்டார்.

பின்னர் தீர்ப்புக்குப் பின்னர் பெங்களூர் செல்ல வேண்டிய நேரத்தில், நான் தான் வேண்டும், நம் கையில் இருக்கட்டும் என்று வீடியோ காட்சிகளை தேவைப்படும் என்று வாங்கி வைத்துக்கொண்டேன்.

பலரும் என்னிடம் இருந்த வீடியோவை பலமுறை வெளியிட கேட்டுக்கொண்ட போதும் நான் வெளியிடவில்லை. அந்த வீடியோவை கைப்பற்ற ஐடி ரெய்டு என்பதெல்லாம் சும்மா பேச்சுக்கு சொல்வது. நான் என் செல்போனிலேயே அதை வைத்திருந்தேன்.

பிப்ரவரி மாத கடைசியில் என்னிடம் வந்த வீடியோவை மார்ச் மாதம் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அமைச்சர்கள் மாஃபா பாண்டியராஜன், விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலரும் கேட்டபோதும் நான் வெளியிடவில்லை. காரணம் பொதுச்செயலாளர் விரும்பவில்லை.

அதன் பிறகு ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அரசு அமைத்தது. செப்டம்பர் மாதம் அது நடைமுறைக்கு வந்தபோது விசாரணைக்கு தேவைப்பட்டால் கொடுப்பேன் வெளியில் விடக்கூடாது என்று தெரிவிப்பேன் என்றேன். காரணம் அதை வெளியிட நான் விரும்பவில்லை. நினைத்திருந்தால் ஆர்.கே.நகர் தேர்தலின் போதே அதை வெளியிட்டிருப்பேன்.

நேற்றே வெற்றிவேல் பேட்டியில் தெளிவாகச் சொல்லிவிட்டார். அந்த வீடியோ வெளியிடுவது பற்றி எனக்கோ, சசிகலாவுக்கோ தெரியாது என்று சொல்லிவிட்டார். ஜெயலலிதா மறைந்தபோது வெற்றிவேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். வெற்றிவேல் மீது தொகுதி பொறுப்பாளர் என்ற முறையில் ஜெயலலிதாவுக்கு தனி அபிமானம் உண்டு.

அவருக்கும் சசிகலா, ஜெயலலிதா மீது தனி அபிமானம் உண்டு. ஜெயலலிதா மரணமடைந்த நேரத்தில் இல்லாததால் அந்த வீடியோ என்னிடமிருப்பதை அறிந்து பிப்ரவரி, மார்ச் மாதத்தில் அவர் என்னிடம் வீடியோவை கேட்டு வாங்கினார். அவரால் சசிகலாவைப் பற்றி அவதூறாக பிரச்சாரம் செய்யப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அவர் நேற்று முன் தினம் ஜெயலலிதா மரணத்திற்கு காரணமான சசிகலா என்று நோட்டீஸ் விநியோகிப்பட்டிருந்த விவகாரத்தில் மனம் பாதிக்கப்பட்டிருந்தார். நேற்று காலை அவர் திடீரென வீடியோ வெளியிட்டதாக எனக்கு தகவல் வெளியானதும் தொலைக்காட்சியில் அதைப் பார்த்தேன்.

அதன் பிறகு அவரைக் கூப்பிட்டு ஏன் இப்படி செய்தீர்கள் என்று கேட்டேன். உங்களை நான் தூண்டிவிட்டது போல் சொல்வார்களே என்று கேட்டேன். இதைச் செய்வதாக இருந்தால் தேர்தல் பிரச்சாரத்தின் போது நானே வெளியிட்டிருப்பேன் என்று சொன்னேன். நீங்கள் வெளியிட வேண்டும் என்றால் ஆணையத்தில் நேரடியாக அளித்திருக்கலாமே என்று கேட்டேன்.

கிருஷ்ணப்ரியா எதிர்க்கிறார் என்று கேட்காதீர்கள், பொதுச்செயலாளர் எங்களுக்கு உறவினர். ஆனால் வெற்றிவேல் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏக்கள் பதவியே போனாலும் பரவாயில்லை என்று கட்சியின் பக்கம் நிற்கிறார்களே அதை சாதாரணமாக பார்க்க முடியுமா? அவர் மன்னிப்பு கேட்கிறார். அவர் பொதுச்செயலாளரிடம் நான் சொல்லிக்கொள்கிறேன் என்று சொல்லும் போது அவர் கட்சிக்காக பாடுபட்டு வருபவர். வெற்றிவேலின் செயலில் உள்நோக்கம் கற்பிக்க முடியுமா?

அவர் சசிகலா மீது பரப்பப்பட்ட களங்கத்தை துடைக்க விரும்புகிறேன் என்று சொல்லும் போது அவரை நீங்கள் தவறாக சொல்ல முடியுமா? இப்போதுதான் எனக்கு மனது நிம்மதியாக இருக்கிறது. எத்தனை வழக்கு வேண்டுமானாலும் போடுங்கள் என்று கூறினார்.

மனது பொறுக்க முடியவில்லை கண்டபடி சசிகலா பற்றி அவதூறாக பேசுகிறார்கள் என்று வருத்தப்படுகிறார்.

மு.க.ஸ்டாலின் பிரச்சாரத்தில் மூன்று குழல் துப்பாக்கி என்று விமர்சனம் செய்கிறார். எனக்கு மன உளைச்சலாக உள்ளது, ஸ்டாலின் மூன்று குழல் துப்பாக்கி என்று பேசுகிறார். சசிகலா பதில் சொல்ல முடியாத இடத்தில் இருக்கிறார். இதையெல்லாம் துடைக்கும் விதத்தில் வீடியோவை வெளியிட்டேன் என்று சொன்னார்.

சில நாட்களுக்கு முன்னர் பிரச்சாரத்தில் ஸ்டாலின் மூன்று குழல் துப்பாக்கி என்று பேசினார். நேற்று வீடியோ வெளியிட்டதை கீழ்த்தரமான செயல் என்கிறார். பின்னர் அவரே தினகரன் ஏன் வீடியோவை வெளியிடத் தயங்குகிறார் என்று கேட்கிறார். இவர் யார், என்ன செய்தார், 40 ஆண்டு அரசியலில் இருந்தவர் என்கிறார், துணை முதல்வராக இருந்தவர் என்கிறார். அவர் கேட்கிறார் தினகரன் இந்த வீடியோவை ஏன் விட தயங்குகிறார் என்று கேட்கிறார். நாங்கள் தான் வெளியிட மாட்டோம் என்கிற முடிவில் இருக்கிறோமே அப்புறம் எப்படி வெளியிடுவோம்.

விசாரணை ஆணையம் தனி அமைப்பு. ஆனால் அதன் செயலாளர் போய் அதை மார்பிங் என்று போலீஸில் புகார் கொடுக்கிறார். அவர்கள் சம்மன் கொடுத்து வெற்றிவேலை வரச்சொல்லி வீடியோவை கொடுக்கச்சொல்லி அது மார்பிங் என்று தெரிந்தால் வழக்கு போடலாம். தானாகவே அவர்கள் இப்படி புகார் அளிக்கலாமா?

கனிமொழி, ராசா விடுதலை பற்றி நான் வாழ்த்து சொன்னது மனிதாபிமானத்தில் அதை போய் அர்த்தம் கண்டுபிடித்தால் நான் என்ன செய்ய முடியும். தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சி என்று சொன்னால் கூட்டணி என்று சொல்வதா? அது மாதிரி அரசியல் எனக்குத் தெரியாது. அது நாங்கள் போட்ட வழக்கும் அல்ல அது டெல்லியில் போட்ட வழக்கு.

இவ்வாறு டிடிவி தினகரன் பேட்டி அளித்தார்.

http://tamil.thehindu.com/tamilnadu/article22152701.ece?homepage=true

  • தொடங்கியவர்

`வீடியோ கொடுத்தது நாங்கள்தான்!’ - தினகரனுக்கு கிருஷ்ணபிரியா பதிலடி #VikatanExclusive

 
 

தினகரன் மீது உச்சகட்ட கொந்தளிப்பில் இருக்கிறது இளவரசி குடும்பம். ' கிருஷ்ணபிரியாவிடம் இருந்து இந்த வீடியோவை நான் பெறவில்லை' என தினகரன் கூற, ’வீடியோவைக் கொடுத்தது நாங்கள்தான்’  எனக் கொந்தளிக்கிறார் கிருஷ்ணபிரியா.

கிருஷ்ணப்பிரியா
 

 
 

அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சைபெற்ற வீடியோ காட்சி ஒன்றை நேற்று முன்தினம் வெளியிட்டார், தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல். இந்த வீடியோவால் தினகரனுக்கும் இளவரசி குடும்பத்துக்கும் இடையில் மோதல் மூண்டது. ஜெயலலிதா சிகிச்சை வீடியோ வெளியான சிறிது நேரத்திலேயே, ' டி.டி.வியுடன் இருக்கும் வெற்றிவேலின் கீழ்த்தரமான செயல்' என்று ஃபேஸ்புக்கில் பதிவிட்டார் இளவரசியின் மூத்த மகள் கிருஷ்ணபிரியா.  இதையடுத்து, பத்திரிகையாளர்களை சந்தித்தும் தினகரன் மீதான கோபத்தை வெளிப்படுத்தினார். 

தினகரன் பதில் குறித்து ஒரே ஒரு கேள்வியை கிருஷ்ணபிரியா முன்வைத்தோம். 

"உங்களிடமிருந்து ஜெயலலிதா சம்பந்தப்பட்ட வீடியோவை வாங்கவில்லை என்கிறாரே தினகரன்?"

"நான் மிகுந்த மனவேதனையுடனே ஊடகங்களைச் சந்தித்தேன். அப்போதும் வீடியோவை கொடுத்தது, 'நாங்கள்' என்றுதான் கூறினேனே தவிர 'நான்' என்று கூறவில்லை. பெங்களூரு சிறைக்குச் சின்னம்மா(சசிகலா) சென்றவுடன், ' அம்மாவின் (ஜெயலலிதாவின்) மரணத்துக்கு விசாரணை கமிஷனோ, சி.பி.ஐ விசாரணையோ அமைக்க வேண்டும்' என்று ஓ.பன்னீர்செல்வம் பேசிக்கொண்டிருந்த நேரத்தில், சின்னம்மாவை(சசிகலாவை) நான், எனது இளைய சகோதரி ஷகிலா, எனது இளைய சகோதரர் விவேக் ஆகிய மூவரும் சந்தித்தோம்.

அப்போது, ' அம்மாவின் (ஜெயலலிதா) மரணம் சம்பந்தமாக விசாரணை கமிஷனோ, வேறு எவ்விதமான விசாரணையோ அமைக்க வேண்டும் என்று பேசிவருகிறார்கள், அதனால் வீடியோவை ஒரு காப்பி எடுத்து தினகரனிடம் கொடுத்துவிடுங்கள். உரிய நேரத்தில் தேவைப்பட்டாலும் படலாம்' என்று சின்னம்மா எங்களிடம் கூறினார். எனவே, விவேக் அந்த வீடியோவை ஒரு காப்பி எடுத்து தினகரனிடம் கொடுத்தார். இதனால்தான், 'நாங்கள்' என்று நான் கூறியிருந்தேன். என் கையிலிருந்து வாங்கினார் என்று நான் கூறவேயில்லை. வேண்டுமானால் ஊடகத்தில் பதிவு செய்ததை மீண்டும் பார்த்துக்கொள்ளலாம்" என்றதோடு முடித்துக் கொண்டார் கிருஷ்ணபிரியா.

https://www.vikatan.com/news/tamilnadu/111497-krishnapriya-reveals-about-jayalalithaa-hospital-footage.html

  • தொடங்கியவர்

இடது கையில் ஜூஸ் குடிக்கும் ஜெயலலிதா - ஃபோட்டோ ஆதாரம் சொல்லும் உண்மை!

 
 

ஜெயலலிதா

ஜெயலலிதா சிகிச்சை வீடியோவின் புலன் விசாரணை இன்னும் முடிக்கவில்லை நெட்டிசன்கள். தென்னை மரம் தொடங்கி முதல் மரியாதை பாடல் வரிகள் வரையில் வகை தொகை இல்லாமல் பிரித்து மேய்ந்து வருகிறார்கள்.

 
 

அப்போலோவில் ஜெயலலிதா ஜூஸ் குடிக்கும் வீடியோவில் இடது கையைதான் அவர் பயன்படுத்துகிறார். வலது கையில் பிரஷர் செக் செய்யும் கருவி பொருத்தப்பட்டிருக்கிறது. அந்த நிலையில் இடது கையில் ஜெயலலிதா ஜூஸ் பருகுகிறார். ஆனால், எப்போதுமே இடது கையில்தான் குடிநீர், தேனீர், பழரங்கள் ஆகியவற்றை ஜெயலலிதா பருகி வருகிறார்.    

கடந்த சட்டசபைத் தேர்தலில் ஜெயலலிதாவின் பிரசாரம் சில இடங்களில் மட்டுமே நடைபெற்றது. அதற்கு காரணம் அவரின் உடல்நிலை. தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே ஜெயலலிதாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது. சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 2016 பிப்ரவரியில் கட்சிப் பிரமுகர்கள் இல்லத் திருமணத்தை ஜெயலலிதா நடத்திவைத்தார். அன்றைய அமைச்சர்கள் வைத்திலிங்கம், காமராஜ், எஸ்.பி.சண்முகநாதன், முக்கூர் என்.சுப்பிரமணியன் உள்பட அ.தி.மு.க நிர்வாகிகள் 14 பேர்களின் இல்லத் திருமணங்களைத் தலைமை தாங்கி நடத்திவைத்தார் ஜெயலலிதா. மாநாடு ரேஞ்சுக்கு திருமண நிகழ்ச்சி நடந்தது. அரங்கம் முழுவதும் ஏஸி வசதி செய்திருந்தார்கள். மேடையும் பிரமிப்பாக வடிவமைக்கப்பட்டு இருந்தது.

ஜெயலலிதா

நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வரும் ஜெயலலிதா, மேடையில் ஏறுவதற்காக நீண்ட தூரத்தில் இருந்து சரிவு பாதை போடுவார்கள். 2015-ம் ஆண்டு இறுதி கட்டத்தில் மேடையில் ஜெயலலிதா ஏறுவதற்காக மொபைல் லிப்ட்டை ஏற்பாடு செய்தார்கள். இந்த திருமணத்தில் கலந்து கொள்வதற்காக லிப்ட் எதையும் போடவில்லை. ஜெயலலிதாவின் கார் மேடைக்கே வரும் வகையில் ஏற்பாடுகள் செய்திருந்தார்கள். மேடையில் ஜெயலலிதா உட்கார்ந்திருந்த இருக்கைக்கும் கார் நின்ற இடத்துக்கும் ஒருசில அடி தூரம்தான் இருக்கும். 14 திருமணங்களை நடத்திவைத்தபோது ஒவ்வொரு திருமணத்துக்குப் பிறகும் சில நிமிடங்கள் ஓய்வு எடுத்துக்கொண்டார். ஒவ்வொரு ஜோடியாக மேடைக்கு அழைக்கப்பட்டபோது இருக்கையில் அமர்ந்துவிட்டு பிறகு எழுந்து திருமணத்தை நடத்திவைத்தார். ஜெயலலிதாவின் இருக்கைக்கு பக்கத்திலேயே மைக் போடியத்தைத் தூக்கி வந்து வைத்தார்கள். இந்தக் காட்சிகளை எல்லாம் பார்க்கும்போது ஜெயலலிதாவால் சில அடி தூரம்கூட நடக்கச் சிரமப்பட்டார்.

ஜெயலலிதா

அந்த திருமண விழாவில்தான் இதுவரை நடக்காத ஒரு விஷயம் நடந்தது. பொதுவாக நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது ஜெயலலிதா எதுவும் சாப்பிடமாட்டார். அருந்தமாட்டார். சட்டசபையில் மட்டும் பிளாஸ்க்கில் வைத்து பழரசம் சாப்பிடுவார். ஆனால், அந்த திருமண நிகழ்ச்சியில் ஜெயலலிதா பங்கேற்றபோது இரண்டு பிளாஸ்க்கில் ஹெல்த் ட்ரிங்ஸ் கொண்டு வரப்பட்டன. அதை டீபாயில் வைத்திருந்தார்கள். அதை ஸ்ட்ரா வைத்துக் குடித்தார். அவர் பொதுவெளியில் இப்படி அருந்தியதை ஆச்சர்யத்தோடு பார்த்தார்கள் நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள். ஹெல்த் டிரிங்ஸ் ஜெயலலிதாவின் புடவையில் சிந்தி தரையிலும் விழுந்தது. கர்சிப்பால் புடவையைத் துடைத்துக் கொண்டார். தரையில் கொட்டியதை உதவியாளர்கள் உடனே சுத்தம் செய்தார்கள். அந்த ஹெல்த் டிரிங்ஸை இடது கையில் பிடித்துதான் குடித்தார். அப்போதும் ஸ்ட்ரா போட்டுதான் குடித்தார். ஹெல்த் ட்ரிங்ஸ் முதலில் ஜெயலலிதாவின் வலது பக்க டீபாயில்தான் வைக்கப்பட்டிருந்தது. பிறகு அதை இடது பக்கமாக மாற்றி வைத்தார்கள். இந்தக் காட்சிகளை அன்றைக்கு ஜூனியர் விகடன் பதிவு செய்திருக்கிறது. அந்த போட்டோவையும் இன்றைய வீடியோவையும் மேட்ஜ் செய்தால் அது ஜெயலலிதாதான் என உறுதியாக சொல்கிறார்கள் கார்டன் வட்டாரத்தினர்.

https://www.vikatan.com/news/coverstory/111510-is-jayalalithaa-a-left-hander-a-photo-of-her-reveals-the-secret.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.