Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ்மொழி மீதான உரிமையை இழந்து வரும் வடக்கின் தமிழர்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்மொழி மீதான உரிமையை இழந்து வரும் வடக்கின் தமிழர்கள்!

சிங்கள எழுத்தாளரும், ஊடகவியலாளரும், லக்பிம நியூஸ் பேப்பர்ஸ் லிமிட்டெட் (Lakbima Newspapers ) நிறுவனத்தில் பணிபுரிபவரும் , கொழும்புப் பல்கலைக்கழக விஞ்ஞானபீடப் பட்டதாரியுமான கத்யானா அமரசிங்ஹ  (Kathyana Amarasinghe) தனது யாழ்ப்பாண விஜயத்தின்போது அங்குள்ள மக்கள் மொழி காரணமாக எதிர்கொள்ளும் பிரச்சினைகளை வெளிப்படுத்தி கட்டுரையொன்றினை எழுதியுள்ளார். மிகவும் பயனுள்ள கட்டுரை. இது போன்ற கட்டுரைகள் சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் மக்கள் அன்றாடம் அனுபவிக்கும் பிரச்சினைகளை வெளிப்படுத்துவதால், புரிந்துணர்வுக்கு வழி வகுப்பதுடன் , பிரச்சினைகளின் பக்கம் அரசியல்வாதிகளின் கவனத்தையும் திருப்பும் சாத்தியமுண்டென்பதால் வரவேற்கத்தக்கவை. கட்டுரையினைப் பெற்று 'பதிவுகள்' இணைய இதழுக்கு அனுப்பிய நண்பர் ஜெயக்குமாரனுக்கு (ஜெயன்) நன்றி.  -


யாழ்ப்பாணத்துக்குச் சென்று, அங்கு ஒரு டாக்ஸி வாகனத்தில் ஏறியதும், அதன் சாரதி அப்போதுவரை ஒலித்துக் கொண்டிருந்த தமிழ்ப் பாடல் இறுவட்டை நீக்கிவிட்டு, சிங்களப் பாடல்களடங்கிய இறுவட்டை இட்டு ஒலிக்கவிட்டார். கேட்டதுமே தலைவலியை உண்டாக்கும் விதமாக மோசமான அர்த்தங்களையுடைய சிங்களப் பாடலொன்று அதிலிருந்து ஒலிக்கத் தொடங்கியது. அது அருமையான சிங்களப் பாடலொன்று என்றும், அதனை ஒலிக்க விடுவதன் மூலம் இலங்கையின் தென்பாகத்திலிருந்து வந்திருக்கும் எம்மை மகிழ்விக்க முடியும் எனவும் சிங்கள மொழியை அறியாத அந்த அப்பாவி சாரதி எண்ணியிருக்கக் கூடும். இறுதியில் அப் பாடலை ரசிக்கவே முடியாதவிடத்து தமிழ்ப் பாடல்களையே ஒலிக்க விடச் சொல்லி பாடல் இறுவட்டை தமிழுக்கு மாற்றச் செய்தேன். பின்புறம் திரும்பிப் பார்த்த சாரதி தமிழ்ப் பாடல்களை ரசிக்கும் எம்மை வியப்புடன் பார்த்து புன்னகைத்தார். 

‘தமிழனுக்கு தமிழனாக இருப்பதால் முகம் கொடுக்க நேரும் சிக்கல்கள் எவை?’ 

எனக்கு அக் கணத்தில், முகநூல் சமூக வலைத்தள விவாதத்துக்குக் காரணமான அக் கேள்வி நினைவுக்கு வந்தது. எனது இனவாத நண்பர்கள் அதில் மாறி மாறிச் சொன்ன விடயம் என்னவென்றால், ‘தமிழனுக்கு தமிழனாக இருப்பதால் முகம்கொடுக்க நேரும் பிரச்சினைகள் எவையும் இலங்கையில் இல்லை’ என்பதாகும். அவ்வாறானதொரு நண்பன் முகநூலில் கிண்டலாக எழுதியிருந்த விதத்தில் (அவர் புரிந்து கொண்டிருக்கும் விதத்தில்) தமிழனுக்கு தமிழனாக இருப்பதால் முகம் கொடுக்க நேரும் சிக்கல்கள் என்பவை ஈழத்துக்கென தனியானதொரு தேசியக் கொடி, தேசிய கீதம் இல்லாமலிருத்தல், தனியான காவல்துறை இல்லாதிருத்தல் போன்ற சில ஆகும்.

“தமிழனாக இருப்பதால் முகம்கொடுக்க நேரும் சிக்கல்கள் பற்றிக் கேட்கிறீர்கள். கேள்வியிலேயே பதிலும் இருக்கிறது. வேறெதற்காகவும் இல்லை. நாங்கள் தமிழர்களாக இருப்பதுவே சிக்கலுக்குரியதாகத்தான் இருக்கிறது.”

நான் யாழ்ப்பாணத்தில் சந்தித்த தமிழர்கள் அநேகரது பதிலும் இவ்வாறுதான் இருந்தது. எனது தேசப்பற்று மிக்க தோழன் எண்ணிக் கொண்டிருக்கும் விதத்தில் தனியான தேசியக் கொடி, தனியான தேசிய கீதம் போன்ற சில்லறைக் காரணங்களை விடவும், தமிழர்களுக்கு – விஷேசமாக யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு தாம் முகம் கொடுக்க நேரும் சிக்கல்கள் பல இருக்கின்றன. அதில் பிரதானமானது மொழிப் பிரச்சினையாகும். பொதுவாக தமிழர்கள் எனும்போது தெற்கில் வாழும் சிங்களம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளையும் அறிந்திருக்கும் தமிழர்களை மாத்திரம் நினைவில் கொள்பவர்கள், மூன்று தசாப்த காலமாக சிங்கள சமூகத்திலிருந்தும் முற்றுமுழுதாகத் தூரமாகி வாழ நேர்ந்திருக்கும் யாழ்ப்பாணத் தமிழர்களைக் குறித்து எண்ணிப் பார்க்க மறந்துவிடுகிறார்கள்.

“ஓய்வூதியம், அரச பாடசாலைகளுக்கான நியமனம், ஊதியக் கொடுப்பனவுகள், பதவியுயர்வு போன்ற கொழும்பு அரச அலுவலகங்களுக்குச் சம்பந்தமான அனைத்துக் கடிதங்களுமே யாழ்ப்பாணத்தவர்களுக்கு இப்போதும் கூட அனுப்பி வைக்கப்படுவது முற்றுமுழுதாக சிங்கள மொழியில்தான். சிங்களத்தில் ஓரிரு வாக்கியங்களைப் பேச இங்குள்ள சிலரால் முடியுமென்ற போதும், சிங்கள மொழியில் வரும் கடிதமொன்றை வாசித்துப் புரிந்து கொள்ள முடிந்தவர்கள் எவரும் இங்கு இல்லையென்றே கூறலாம். எனவே இதைத் தாண்டிய பிரதான சிக்கல் வேறேது?” எனக் கேட்கிறார் நான் சந்தித்த அருட்தந்தை திரு.ஐ.டீ.டிக்ஸன் அவர்கள். யாழ்ப்பாணத்தில் நாங்கள் சந்தித்தவர்களிடையே சிங்கள மொழியைப் பேசவும், வாசிக்கவும், எழுதவும் தெரிந்த ஒரே ஒரு நபர் அவர்தான். தற்போது யாழ்ப்பாண தேசிய கல்வியியல் கல்லூரியில்  தமிழாசிரியர்களுக்கு சிங்கள மொழியைக் கற்பித்து வரும் ஒரேயொரு பேராசிரியரும் அவர்தான். 

மேலதிகமாக அவரால் செய்யப்படும் மிகப் பெரிய சேவையானது, யாழ்ப்பாணத்தவர்களுக்கு கொழும்பிலிருந்து சிங்கள மொழியில் வரும் அரசாங்கக் கடிதங்களை மொழிபெயர்த்துக் கொடுத்து உதவுவதாகும். ஆகவே மொழிச் சிக்கல் காரணமாக அம் மக்கள் படும் அல்லல்களை நன்கறிந்தவர்கள் அவரைப் போன்றவர்கள்தான்.

யாழ்ப்பாணத்தில் நான் சந்தித்த தமிழர்கள் கூறும் விதத்தில், பாரிய சிக்கல்களை அவர்கள் எதிர்கொள்ள நேர்வது காவல்துறையினரை நாடிச் செல்லும்போதுதான். வடக்கின் காவல்நிலையங்களில் அதிகளவில் சிங்களவர்கள்தான் பணி புரிகிறார்கள். தமிழ் மொழியை அறிந்த அதிகாரியொருவர் ஒவ்வொரு காவல்நிலையத்தில் பணியில் அமர்த்தப்பட்டிருக்கிறார் எனச் சொல்லப்பட்ட போதிலும், அது மாத்திரம் போதுமானதாகும் சந்தர்ப்பங்கள் குறைவு.

“ஒரு நாள் நான் ஒரு முறைப்பாட்டினைப் பதிவு செய்வதற்காக போலிஸுக்குச் சென்றிருந்தேன். நான் கூறியவற்றை அங்கிருந்த அதிகாரி சிங்களத்தில் எழுதிக் கொண்டார். எனக்கு சிங்களத்தில் ஒரு அட்சரம் கூடத் தெரியாது. அந்த அதிகாரி நான் கூறியவற்றைத்தான் மொழிபெயர்த்து எழுதியிருக்கிறார் என என்னால் எப்படி உறுதிப்படுத்த முடியும்? பிறகு நான் காவல்நிலைய பொறுப்பதிகாரியை சந்தித்து நான் கூற வந்ததை ஆங்கில மொழியில் கடிதம் மூலமாக கையளித்தேன். நான் அவ்வாறு செய்தபோதும், ஆங்கில மொழியையும் அறியாத சாதாரண பொதுமக்கள் அதைச் செய்வது எவ்விதம்?”

இவ்வாறு அம் மக்கள் வாழ்நாள் முழுவதும் அனுபவிக்க நேர்ந்திருக்கும் சிக்கல்களின் ஒரு சந்தர்ப்பத்தை மாத்திரம், ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்ட அமைப்பில் செயற்திட்ட ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றிய திரு.பரமநாதன், என்னிடம் தெரிவித்தார். காவல்நிலையமொன்றில் தமிழ் மொழி தெரிந்த அதிகாரியொருவர் இல்லாதவிடத்தில், தமிழ் மொழிபெயர்ப்பாளர் ஒருவரது உதவியைப் பெற்றுக் கொள்ள விண்ணப்பிக்க முடியுமாயினும் கூட, சிக்கலாக இருப்பது அவ்வாறானதொரு மொழிபெயர்ப்பாளர் யாழ்ப்பாணத்தில் கிடைப்பது அபூர்வமாக இருப்பதுதான். அருட்தந்தை டிக்ஸன் அவர்களின் வார்த்தைகளில் கூறுவதாயின் “ஒரு வருடத்துக்குள் செய்து முடிக்க முடியுமான காரியமானது, அவ்வாறு காத்துக் கொண்டிருந்தால் ஐந்து வருடங்களாவது இழுத்தடிக்கப்படும்.”

தமது தாய்மொழியில் காரியங்களைத் தொடர்ந்து செய்ய எந்தவொரு குடிமகனுக்கும் இருக்கும் உரிமையைக் குறித்தும், இங்கு தமிழர்கள் சிங்கள தலைமைத்துவ சமூகத்தின் கீழ் முகம் கொடுக்க நேர்ந்திருக்கும் அநீதங்கள் குறித்தும் பேசப்பட வேண்டியிருப்பதோடு, யுத்தத்தின் பின்னர் இன ஒற்றுமையைக் கட்டியெழுப்பும்போது சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மும் மொழிகளையும் அனைத்து இலங்கையரும் கற்றறிந்து வைத்திருப்பதன் முக்கியத்துவத்தையும் இங்கு மறந்து விட முடியாது. 

“தெற்கில் சிங்களவர்கள் பலரும் தற்போது தமிழ்மொழியைக் கற்கிறார்கள் அல்லவா? ஏன் அவ்வாறு வடக்கிலிருப்பவர்களால் சிங்கள மொழியைக் கற்றுக் கொள்ள முடியாது?” என தெற்கிலிருக்கும் சிலர் கேட்கிறார்கள். எனினும் தெற்கிலிருப்பவர்களுக்கு தமிழ் மொழியைக் கற்றுக் கொள்வதற்காக இருக்கும் வசதி வாய்ப்புக்கள் எவையும், வடக்கிலிருப்பவர்களுக்கு சிங்கள மொழியைக் கற்றுக் கொள்வதற்காக இல்லை என்பதைக் குறித்து, அவ்வாறு குற்றம் கூறுபவர்கள் சிந்திப்பதில்லை. சுற்றுலாப் பயணிகளாக யாழ்ப்பாணத்தின் பிரசித்தமான சுற்றுலாத் தலங்களுக்கு மாத்திரம் சென்றுவிட்டு மீண்டும் கொழும்புக்குத் திரும்பி வரும் அநேகமான சிங்களவர்கள், தாம் தங்கிய ஹோட்டல்களிலும், விடுதிகளிலும், சிற்றுண்டிச் சாலைகளிலும், கடைகளிலும் தாம் சந்தித்த தமிழர்கள் சிலர் சிங்களத்தில் சில வார்த்தைகள் கதைப்பதையும், சிங்கள மொழியைப் புரிந்து கொள்வதையும் வைத்து யாழ்ப்பாணத்தில் மொழிச் சிக்கல் எதுவுமில்லை என்றே எண்ணியிருக்கின்றனர். எனினும் யதார்த்த நிலையானது அதை விடவும் வேறுபட்டது. அவ்வாறாவது தெற்கிலிருந்து வரும் சிங்களவர்களை நேரில் சந்திக்கக் கூட எவ்வித சந்தர்ப்பமும் கிடைக்காத யாழ்ப்பாண மக்களுக்கு இப்போதும் கூட சிங்கள மொழியானது புதியதொரு மொழிதான்.

அருட்தந்தை திரு.டிக்ஸன் அவர்கள் கூறுவதற்கொப்ப வடக்கின் பிரதான பாடசாலைகள் தவிர ஏனைய பாடசாலைகள் பலவற்றில் சிங்கள மொழியைக் கற்பிக்கவென ஆசிரியர்கள் எவருமில்லை. மாணவர்களை விடுவோம். ஆசிரிய கலாசாலை பயிற்சிக்கென வரும் தமிழ் ஆசிரியர்களுக்கு சிங்கள மொழியைக் கற்பிப்பது கூட சவாலாகத்தான் இருக்கிறது. சிங்கள மொழிச் சொல்லொன்றையேனும் செவிமடுக்காத சூழலொன்றில் வாழ்ந்து வந்த அவர்களுக்கு சடுதியாக புதிய மொழியொன்றைக் கற்றுக் கொள்வது சிரமமாக இருக்கும் என்பதை புதிதாக விவரிக்க வேண்டியதில்லை. ‘சிங்கள மொழி அரிச்சுவடியிலுள்ள எழுத்துக்களை எனது மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்க மாத்திரம் ஆறு மாதங்கள் வரை காலம் எடுத்தது’ எனக் கூறும் அவர் அம் முயற்சியைக் கை விடத் தயாரில்லை.

“யாழ்ப்பாணத் தமிழ் மக்களுக்கு தமது தாய்மொழியில் கடமைகளைச் செய்துகொள்ளத் தேவையான வசதிகளைச் செய்து தர வேண்டும் என்பதே எமது வேண்டுகோளாக இருக்கிறது. முக்கியமாக காவல் நிலையங்களில் சிங்களம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளையும் நன்கு தெரிந்த அதிகாரிகள் அதிகமாக சேவையில் ஈடுபடுத்தப்பட வேண்டும். இங்குள்ள மக்களுக்கு கொழும்பிலிருந்து அனுப்பப்படும் கடிதங்கள் தமிழ் மொழியிலேயே அனுப்பப்படுமானால் அது இம் மக்களுக்கு மிகவும் உபயோகமானதாக இருக்கும். இவற்றோடு நாம் எமது வருங்கால சந்ததிகள் குறித்தும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மும் மொழிகளையும் சிறு பராயம் தொட்டே குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதே எனது கருத்து. மொழிச் சிக்கலுக்கு சிறந்த தீர்வு இதுதான்” எனக் கூறும் அருட்தந்தை திரு.டிக்ஸன் அவர்களிடம் இதற்கான சிறந்த திட்டமொன்று இருக்கிறது. 

தற்போது மூடப்பட்டிருக்கும் யாழ்ப்பாண சிங்களப் பாடசாலை திரும்பவும் திறக்கப்பட்டு அதனை மும்மொழிப் பாடசாலையாக இயங்கச் செய்வதே அதுவாகும். யாழ்ப்பாணத்தின் சர்வ மதத் தலைவர்களும் கைகோர்த்து இயங்கும் ‘யாழ் சர்வ மத சங்க’த்தின் செயலாளராகவும் கடமையாற்றும் அருட்தந்தை திரு.டிக்ஸன் அவர்கள் தமது குழுவினர் இந்த வேண்டுகோளை அரசின் கவனத்துக்கு ஏற்கெனவே கொண்டு சென்றிருப்பதாகவும் தெரிவிக்கிறார். 

“யாழ்ப்பாணத்தில் இவ்வாறானதொரு பாடசாலை ஆரம்பிக்கப்பட்டால் இங்கு வசிக்கும் பிள்ளைகளுக்கு மும்மொழிகளையும் கற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும். அது இன ஒற்றுமையையும் மேம்படுத்தும். முக்கியமாக யாழ்ப்பாணத்துக்கு உத்தியோகத்துக்காக சமூகமளிக்கும் அரச அதிகாரிகளின் பிள்ளைகளை அனுப்பவும் இவ்வாறான பாடசாலை உதவியாக அமையும். 2009 ஆம் ஆண்டிலிருந்து நாம் இந்த யோசனையை முன்வைத்து வருகிறோம். நெடுங்காலமாக இதைக் குறித்து நாம் அமைச்சர்களிடம் முன் வைத்த கடிதங்களின் பிரதிகள் எம்மிடமிருக்கின்றன. இந்த அரசாங்கம் பொறுப்பேற்ற பின்னரும் கூட நாம் இதைக் குறித்து தெரிவித்திருக்கிறோம்” என்கிறார் அருட்தந்தை திரு.டிக்ஸன் அவர்கள்.

எனினும் யாழ்ப்பாணத்தின் ஏனைய சிக்கல்களைப் போலவே மேற்குறிப்பிட்ட யோசனை நிஜமாகுவது என்பது இன்னும் கனவாகவே இருந்து கொண்டிருக்கிறது. ஒரு மொழியை வெற்றிகரமாகக் கற்றுக் கொள்ள முடிவது சிறு பராயத்திலிருந்தே அதற்கான அத்திவாரம் இடப்பட்டால்தான் என மொழியியலாளர்கள் கூட ஏற்றுக் கொண்டிருப்பதால் அவரது இந்த யோசனையானது, மிக முக்கியமானதாகிறது. 

“மொழிப் பயிற்சிப் புத்தகங்களை வாங்கி வைத்துக் கொண்டு சிங்கள மொழியைக் கற்றுக் கொள்ள பெரிதும் முயற்சித்தேன். எனினும் அம் மொழியை விரைவாக மறந்து விடுகிறேன். ஞாபகம் வைத்துக் கொள்வது மிகவும் சிரமமாக இருக்கிறது” என வயதான பின்னர் சிங்கள மொழியைக் கற்றுக் கொள்ள முயற்சித்து தோல்வி கண்ட யாழ்ப்பாணத் தமிழ் நண்பர் ஒருவர் கூறியது அதனால்தான். தமிழ் மொழியைக் கற்க நான் எடுத்த முயற்சிகளும் அவ்வாறே தோல்வியைச் சந்தித்ததனால் அவரது கருத்தோடு என்னால் ஒத்துப் போக முடிகிறது. இக் கால பாடசாலை மாணவர்களைப் போல சிங்கள மொழியையோ, தமிழ் மொழியையோ இரண்டாம் மொழியாக பாடசாலைக் காலத்திலேயே கற்றுக் கொள்ளும் வாய்ப்பு அவரைப் போலவே எனக்கும் கிடைக்கவில்லை.
எனினும் அவரை விடவும் நான் அதிர்ஷ்டசாலி. காரணம் இலங்கையின் தென்பகுதியைச் சேர்ந்தவள் என்பதுவும், சிங்கள மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவள் என்பதுவும், எங்கே சென்றாலும் எனது தாய்மொழியான சிங்களத்தைக் கொண்டு காரியங்களைச் செய்து முடிக்க முடியுமாக இருப்பதன் காரணத்திலுமாகும். எனினும் ஆயிரக் கணக்கான வருடங்களாகக் கட்டியெழுப்பப்பட்டிருக்கும் இலங்கை தமிழ் கலாசாரத்துக்கு உரியவரான எனது நண்பரைப் போன்ற வடக்கின் தமிழ் மக்களுக்கு, தமது தாய்மொழியானது அரச மொழியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட யுகத்திலும் கூட இன்னும் மொழி காரணமாக முகம் கொடுக்க நேரும் சிக்கல்கள் குறித்துப் பேசவோ அதை ஏற்றுக் கொள்ளவோ தெற்கின் பெரும்பான்மை சமூகத்தில் ஒருவரேனும் இருக்கிறாரா? ‘தமிழனுக்கு தமிழனாக இருப்பதால் முகம் கொடுக்க நேரும் சிக்கல்கள் எவை?’ எனக் கேட்கும் இலங்கையின் தென்பகுதி பெரும்பான்மை சமூகத்தினர், வடக்கின் தமிழ் மக்களிடத்தில் தம்மை முன்னிறுத்தி அச் சிக்கலைக் குறித்து சிந்திக்கத் தொடங்குவது எப்போது?

 

Kathyana Amarasinghe: kathaish@gmail.com

 

http://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=4340:2018-01-03-19-48-07&catid=3:2011-02-25-17-28-12&Itemid=46

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.