Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திவாகரன் - தினகரன் - விவேக்: முற்றுகிறது முக்கோண மோதல்!

Featured Replies

மிஸ்டர் கழுகு: திவாகரன் - தினகரன் - விவேக்: முற்றுகிறது முக்கோண மோதல்!

 

 

p44b_1515501579.jpg

திகாலையிலேயே மப்ளர் சுற்றிக்கொண்டு வந்திறங்கினார் கழுகார். சூடாக லெமன் டீ கொடுத்து உற்சாகப்படுத்தினோம். ‘‘சென்னைக் குளிரைவிட பெங்களூரில் குளிர் மிக அதிகம்’’ என்றார்.

‘‘பரப்பன அக்ரஹாரா சிறைப்பக்கம் போயிருந்தீரா?’’ என்றோம்.

‘‘ஆமாம். சசிகலா குடும்பத்துக்குள் முக்கோண மோதல் முற்றியிருக்கிறது. அதன் சுவடுகள் எதுவும் தெரியாதபடி அமைதியாக இருக்கிறது அந்தச் சிறைச்சாலை.’’

‘‘யார் யாருக்குள் மோதல்?’’

‘‘தினகரன், விவேக், திவாகரன்... மூன்று பேருக்கும்தான் மோதல். சசிகலா சிறைக்குப் போன நாளிலிருந்தே, ‘குடும்பத்துக்குள் அதிகாரத்தை யார் வசப்படுத்துவது’ என்பதில் மோதல் நடந்துவருகிறது. அரசியலைத் தினகரன் கையிலும், நிதி நிர்வாகத்தை விவேக் கையிலும் கொடுத்துவிட்டுப் போனார் சசிகலா. கோபத்தில் திவாகரன் ஒதுங்கியிருந்தார். என்னதான் அரசியலை அநாயாசமாக டீல் செய்தாலும், நிதி விவகாரத்துக்கு விவேக்கை எதிர்பார்த்திருப்பது தினகரனுக்கு உறுத்தலாகவே இருக்கிறது.   ஆர்.கே. நகர் வெற்றியைக் காரணம் காட்டி, ஒட்டுமொத்தமாக எல்லா நிர்வாகத்தையும் தன் கைக்குள் கொண்டுவர நினைக்கிறார் தினகரன். இப்போது நடக்கும் மோதலுக்கு இதுதான் காரணம்.’’

‘‘என்ன நடந்தது?’’

‘‘ஆர்.கே. நகரில் வென்றதும் சசிகலாவைப் பார்க்க தினகரன் போனார் அல்லவா? அப்போது சசிகலா மௌன விரதம் இருந்ததாகச் சொல்வது உண்மை இல்லையாம். ஜெயலலிதா மறைந்தபோது, ‘ஒரு வருடத்துக்கு அசைவம் சாப்பிடுவதில்லை’ என சசிகலா விரதம் எடுத்தாராம். அது மட்டும்தான் சிறையில் அவர் கடைப்பிடித்த ஒரே விரதம். ஜெயலலிதா வீடியோவைத் தினகரன் வெளியிட்ட கோபத்தில், தினகரனுடன் பேசப் பிடிக்காமல்தான், ‘மௌன விரதம்’ என்று எழுதிக் காட்டியிருக்கிறார். வெற்றி வீரனாக தான் போனபோது சசிகலா வாழ்த்தவில்லையே என்ற வருத்தம் இருந்தாலும், பேசியே அவர் கோபத்தைக் கரைத்துவிட்டார் தினகரன். அவர் சார்பில் சென்ற சில வழக்கறிஞர் களும் சேர்ந்து இந்தக் காரியத்தைச் செய்தார்கள்.’’

p44a_1515501600.jpg

‘‘என்ன பேசினார்களாம்?’’

‘‘அந்த வீடியோவை வெளியிட்டதால்தான் சசிகலா மீதிருந்த பழி துடைக்கப்பட்டது என்று சொல்லியிருக்கிறார் தினகரன். ‘சில விசுவாசிகளின் ஒத்துழைப்பு தவிர, வேறெந்த உதவியும் இல்லாமல்தான் ஆர்.கே. நகரில் ஜெயித்தேன். குடும்பத்தில்கூட யாரும் உதவி செய்யவில்லை. விவேக்கிடம் பணம் கேட்டுப் பலமுறை ஆள் அனுப்பினேன். ஆனால், அவர் பணமே தரவில்லை. ஜெயித்தபிறகும் விவேக் குடும்பத்திலோ, திவாகரன் குடும்பத்திலோ யாரும் வாழ்த்துகூட சொல்லவில்லை. எல்லோரும் என்னைக் கைவிட்ட நிலையிலும் ஜெயித்துக் காட்டியிருக்கிறேன்’ என உருக்கமாகச் சொன்னாராம் தினகரன். அடுத்து அவர் சொன்ன விஷயம்தான் சசிகலாவை நெகிழ வைத்துவிட்டது.’’

‘‘என்ன அது?’’

‘‘தனது அரசியல் போராட்டம் முழுக்க சசிகலாவுக்காகத்தான் என்பதை ஆணித்தரமாகச் சொல்லியிருக்கிறார் தினகரன். ‘இப்போதே 70-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-க்கள் என்னுடன் தொடர்பில் இருக்கிறார்கள். 10 அமைச்சர்கள் வரை நம் பக்கம் வந்துவிடத் தயார். அமைச்சர்கள் இந்தப் பக்கம் சாய்ந்ததும் எடப்பாடி ஒன்றுமில்லாமல் ஆகிவிடுவார். அப்புறம் நாம் ஆட்சி அமைப்பதில் எந்தத் தடையும் இருக்காது. உங்கள் கட்டளைப்படி இந்த ஆட்சி நடக்கும். அது மட்டுமல்ல, உங்களை வெளியில் கொண்டுவருவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் நான் செய்துகொண்டிருக்கிறேன். உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு போடுவதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. மார்ச் மாதம் நீங்கள் சுதந்திரப் பறவையாக இருப்பீர்கள்’ என்றாராம் தினகரன். உடனே சசிகலா கனவு காணத் தொடங்கிவிட்டார்.’’

‘‘அப்புறம்?’’

‘‘அந்த நேரத்தில்தான் விவேக்குக்கு எதிராக சில விஷயங்களைச் சொன்னாராம் தினகரன். ‘நான் போன் செய்தாலும் எடுப்பதில்லை. சின்னப்பையன் அவன். குருவித்தலையில் பனங்காய் வைப்பதுபோல நீங்கள் கொடுத்த பொறுப்புகளைச் செய்ய முடியாமல் திணறுகிறான். ஜெயா டி.வி-யில் பல விஷயங்கள் இதனால் தப்புத்தப்பாக நடக்கின்றன. அதில் சில மாற்றங்களைச் செய்தால், நான் நினைக்கும் ஆட்சி மாற்றங்களுக்கு உதவியாக இருக்கும்’ என்றாராம்.’’

p44c_1515501659.jpg

‘‘அதற்கு என்ன ரியாக்‌ஷன்?’’

‘‘சசிகலா, தினகரனிடம் எதுவும் சொல்ல வில்லை. ஆனால், ஜனவரி 3-ம் தேதி சசிகலாவைச் சந்திக்க விவேக் போனபோது, ஓர் உணர்ச்சிப் போராட்டமே நடைபெற்றது. தினகரன் சொன்ன எல்லா விஷயங்களையும் விவேக்கிடம் பகிர்ந்து கொண்ட சசிகலா, ‘நீ ஏன் தினகரனை மதிப்ப தில்லை?’ என்று கேட்டாராம். விவேக் உடனே பொங்கித் தீர்த்துவிட்டாராம். ‘நீங்கள் சொல்வதை மட்டும்தான் நான் செய்துகொண்டிருக்கிறேன். நீங்கள்தான் அவருக்குப் பணம் தர வேண்டாம் என்று சொன்னீர்கள். அதனால் நான் தரவில்லை. அவராக எப்போதும் பணம் கேட்டதில்லை. யார் யாரையோ அனுப்புவார். எனக்கு அத்தான் (தினகரன்) தகவலே சொல்ல மாட்டார். அவர் சொல்லித்தான் கேட்கிறார்கள் என எப்படி நம்பித் தருவது? நான் லண்டன் போயிருந்தபோது, அவர் போன் செய்திருக்கிறார். நான் வெளிநாடு போனதைத் தெரிந்து கொண்டே, அந்த நேரத்தில் போன் செய்துவிட்டு, நான் எடுக்கவில்லை எனப் புகார் சொல்கிறார். உண்மையில் ஆட்சி மாற்றத்துக்கான எந்த நிலைமையும் தமிழ்நாட்டில் இல்லை. ‘ஆட்சியைக் கவிழ்த்துவிடுவேன்’ என்றே இவர் பேசிக்கொண்டிருப்பதால், ‘பதவி போய் விடும்’ என்ற பயத்தில் எம்.எல்.ஏ-க்கள் வரத் தயங்குகிறார்கள். இதுதான் யதார்த்தம். அதோடு, டெல்லியில் உங்கள் வழக்குத் தொடர்பாக எந்த ஏற்பாடும் நடக்கவில்லை. எனக்கு நன்றாகத் தெரியும்’ என்றாராம்.’’

‘‘அதற்கு, சசிகலா என்ன சொன்னாராம்?’’

‘‘பதில் எதுவும் சொல்லாமல் அமைதியாகக் கேட்டுக்கொண்டாராம். அதன்பிறகு, ‘ஜெயா டி.வி-யில் தினகரன் சில மாற்றங்களைச் செய்ய வேண்டுமாம். அதுதொடர்பாக அவருடன் பேசு’ என்று சசிகலா சொல்லவும், விவேக் வேதனையுடன் மீண்டும் புலம்பினாராம்.’’

‘‘என்ன சொன்னார்?’’

‘‘தேர்தல் வெற்றி குறித்து ஜெயலலிதா பேசுகிறபோதெல்லாம் மறக்காமல் ஜெயா  டி.வி-க்கு நன்றி தெரிவிப்பார். ஆர்.கே. நகர் வெற்றிக்குப் பிறகு ஜெயா டி.வி-யினருக்குத் தினகரன் நன்றி சொல்லவில்லை. இதைக் குறிப்பிட்ட விவேக், ‘ஆளும்கட்சியின் பணப் பட்டுவாடாவை வீடியோ எடுத்ததால் தாக்கப்பட்ட ஜெயா டி.வி-யினரை மருத்துவமனையில் தினகரன் வந்து பார்க்க வில்லை. ஆனால், அந்த டி.வி அவருக்கு வேண்டுமா? அவர்தான் ரொம்ப நல்லவர். நீங்கள் அவரை மட்டுமே நம்புங்கள். ஜெயா டி.வி என்ன, எல்லா நிர்வாகத்தையுமே அவர் பார்த்துக்கொள்ளட்டும். நான் மொத்தமாக விலகிவிடுகிறேன்’ எனக் கோபமாகச் சொல்லிவிட்டு விவேக் வெளியில் வந்தாராம்.’’

‘‘எதற்கு ஜெயா டி.வி-க்கு இவ்வளவு மோதல்?’’

‘‘ஜெயா டி.வி நிர்வாகம் என்பது, வெறுமனே அந்த டி.வி-யைப் பார்த்துக்கொள்வது மட்டுமல்ல. அந்த நிர்வாகம் ஒரு ‘மாஸ்டர் சாவி’ போன்றது. அந்தப் பொறுப்பில் இருப்பவர்கள்தான், வெளியில் தெரிந்த, தெரியாத எல்லா நிதி விவகாரங்களையும் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது எழுதப்படாத உத்தரவு. இதை நிர்வகிப் பவரின் கட்டளைப்படியே ஆங்காங்கே பரிமாற்றங்கள் நிகழும். அதனால்தான் இத்தனை போட்டி.’’

‘‘சரி, இந்த மோதலில் திவாகரன் எங்கே வருகிறார்?’’

‘‘விவேக்கை வீழ்த்த தனக்கு திவாகரனின் துணை தேவை என்று தினகரன் நினைக்கிறார். ‘தனக்கு வாழ்த்துகூட சொல்லாத திவாகரனுடன் வலியப் போய் இப்போது நெருக்கம் காட்டுகிறார் தினகரன். விவேக்குக்கு அரசியல் ஆசை வந்து விட்டது. அவர்தான் திவாகரனின் மகன் ஜெயானந்துக்குக் கட்சியில் பதவி எதுவும் தர விடாமல் தடுக்கிறார் என்பதுபோல திவாகரனிடம் பேசியிருக்கிறார் தினகரன். இதனால், விவேக்குக்கு எதிராக இருவரும் தற்காலிகமாக இணைந்துள்ளார்கள். ஆனாலும், தினகரன்மீதான கோபம் திவாகரனுக்குக் குறையவில்லை’ என்கிறார்கள் திவாகரன் ஆதரவாளர்கள்.’’

‘‘திமு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் திடீரென்று நடத்தப்பட்டுள்ளதே?’’

‘‘ஆர்.கே. நகர் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து நிர்வாகிகளை முடுக்கி விடுவதற்காக பல காரியங்களை ஸ்டாலின் செய்ய ஆரம்பித்துள்ளார். உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டம் முதலில் நடந்தது. அதன்பிறகு மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டினார். முதன்மைச் செயலாளர் துரைமுருகன்தான் கூட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசினார். ‘தலைவர் எதிரில் நிறைகுறைகளை எப்படி வெளிப்படையாகப் பேசினீர்களோ, அதுபோலவே இப்போதும் பேசலாம்’ என்றார் அவர். ஆர்.கே. நகர் தோல்வி, ரஜினி அரசியல், உள்கட்சி விவகாரங்கள் எனப் பல விஷயங்கள் பேசப்பட்டதாம். ஆனால், தலைமையை யாரும் குறைசொல்லவில்லை. திருவாரூர் மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணனைத்தவிர!’’

‘‘அவர் என்ன சொன்னாராம்?’’

‘‘பூண்டி கலைவாணன், ‘தலைவர் அடிக்கடி நகைச்சுவையாகப் பேசுவார். ரயில் ஓடுவதற்குப் பயன்படும் நிலக்கரியில் கொஞ்சம் திருடியவன் மாட்டிக் கொள்வான். அவனுக்குத் தண்டனையும் கடுமையாக இருக்கும். ஆனால், ரயில் இன்ஜினைத் திருடியவன் மாட்டமாட்டான். அவனுக்குத் தண்டனையும் பெரிதாக இருக்காது என்பார். அதுபோலத்தான், இப்போது நம் கட்சியிலும் நிலை உள்ளது’ என்று பூடகமாகப் பேசினாராம். அவரது பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியது. ‘என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதைத் தெளிவாகச் சொல்லுங்கள்’ என்று பலரும் கேட்டுள்ளனர். ஆனால், ‘தலைவர் அடிக்கடி குறிப்பிடுவார். அதைத்தான் நானும் குறிப்பிட்டேன்’ என்று மட்டும் சொல்லியிருக்கிறார் கலைவாணன்.’’

‘‘அந்தப் பேச்சு பற்றி தி.மு.க-வினர் என்ன சொல்கிறார்கள்?’’

‘‘ஆர்.கே. நகர் தேர்தல் தோல்விக்குப் பெரிய ஆட்கள்மீது ஒப்புக்குக்கூட எந்த நடவடிக்கையும் எடுக்காமல், வட்டச் செயலாளர்களையும், கடைக்கோடி நிர்வாகிகளையும் பதவிநீக்கம் செய்தார்கள். பொதுவாக, அமைச்சர்களாக இருந்தவர்கள், மாவட்டச் செயலாளர்கள் செய்யும் தவறுகள் கண்டுகொள்ளப்படுவதே இல்லை. கடைநிலைப் பொறுப்பில் இருப்பவர்கள் தவறு செய்தால் உடனே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ‘ஆர்.கே. நகர் தேர்தலில் வேட்பாளர் தேர்வு முதல் தேர்தல் வேலைகள் வரை அனைத்தையும் பார்த்தது மாவட்டச் செயலாளர். ஆனால், வட்டச் செயலாளர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பலரும் மௌனமாகப் புகைந்து வருகிறார்கள்’ என்பதை முன்பே சொல்லி இருந்தேன் அல்லவா? பூண்டி கலைவாணன் இதைத்தான் குறிப்பிட்டிருப்பார் என்று தி.மு.க-வில் மற்றவர்கள் பேசிக் கொள்கிறார்கள்.’’

‘‘வேறு யார் பேசினார்களாம்?’’

‘‘எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ‘ரஜினி மாயை தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. அவர் ஆட்சியைப் பிடித்துவிடுவார்; முதலமைச்சராகி விடுவார் என நம் கட்சிக்குள்ளேயே சிலர் பேசுகிறார்கள். விஜயகாந்த் வந்தபோதும், இப்படித்தான் பலர் சொன்னார்கள். ஆனால், அப்படியா நடந்தது? அதுபோல, ரஜினியை நினைத்து நாம் பயப்படத் தேவையில்லை. ஆனாலும், கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்’ என்றார். சென்னையைச் சேர்ந்தவர்கள், ‘நாம் தேர்தல் வேலைகளில் கொஞ்சம் மாற்றம் செய்ய வேண்டும். இதுவரை பகுதிச் செயலாளர்களிடம் பணம் கொடுத்துத்தான் பூத் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இனிமேல், பூத் வேலை பார்ப்பவர்களைத் தனியாக ஒருங்கிணைக்க வேண்டும். அதுபோல, மற்றவர்கள் ஓட்டுக்குப் பணம் கொடுத்தபோது, நாம் கொஞ்சமாவது செலவு செய்திருக்கலாம்’ என்றனர். அதற்குக் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்த மற்றவர்கள், ‘ஆர்.கே. நகர் தேர்தலில் பணம் கொடுக்க வேண்டாம் என்று ஸ்டாலின் எடுத்த முடிவு சரிதான். நம்மீதான களங்கம் துடைக்கப்பட்டுள்ளது’ என்றனர். இறுதியாகப் பேசிய மு.க.ஸ்டாலின், ‘ஆர்.கே. நகர் தேர்தலில் பணம் கொடுக்காமல் போனது நமக்குத் தோல்வியைத் தந்திருந்தாலும், நம்மீதான கடந்தகால களங்கத்தைத் துடைத்துள்ளது’ என்றார்.’’

p44d_1515501636.jpg

‘‘மாலையில் தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கூட்டமும் நடந்துள்ளதே?”

‘‘சட்டசபையில் கவர்னர் உரையைப் புறக்கணிப்பதுதான் அதில் ஹைலைட். அது ஏற்கெனவே கணிக்கப்பட்டதுதானே. அதேநேரத்தில், ‘அடிக்கடி வெளிநடப்பு செய்யக்கூடாது. மக்கள் பிரச்னைகளைப் பேசி சட்டமன்றத்தில் பதிவுசெய்ய வேண்டும்’ என்று ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.’’

‘‘கவர்னர் பன்வாரிலால் புரோஹித் சட்டசபையில் தனது முதல் உரையை ஆற்றிவிட்டாரே?’’

‘‘கவர்னர் உரை என்றாலே, அரசு தயார்செய்து கொடுத்த அறிக்கையை வாசிப்பதுதானே வழக்கம்! ஆனால், அவர் தனது உரையில் தமிழக அரசு மேற்கொள்ளப் போகும் திட்டங்களைப் பற்றி மட்டுமே பேசினார். வழக்கமாக கவர்னர் உரையில் ஆட்சியையும், ஆட்சி செய்பவர்களைப் பற்றியும் புகழ்பாடல்கள் அதிகமாக இருக்கும். இதில் ‘இந்த அரசு’ என்று எளிமையான அறிமுகம் மட்டுமே இருந்தது. அதனால் ஜால்ரா சத்தமும், மேஜையைத் தட்டும் சத்தமும் குறைந்துவிட்டது.’’

‘‘தினகரனின் சட்டசபை வரவை எப்படிப் பார்க்கிறது ஆளும் தரப்பு?’’

‘‘தினகரன் சட்டசபைக்கு வருவதற்கு முன்பாக, அவரின் ஆதரவாளர்கள் பலரும் வந்திருந்தனர். கோட்டைக்குள் தினகரன் கார் வரும்போதே, ‘மக்கள் முதல்வர்’ என்று கோஷமிட்டு வரவேற்றார்கள். தினகரனுக்கு சட்டசபையில் எதிர்க்கட்சி வரிசையில் 148-வது எண் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. சட்டசபை நிகழ்ச்சிகள் துவங்கும்முன்பே, தனது இருக்கைக்குச் சென்று அமர்ந்தார் தினகரன். அவர் இருக்கைக்கே வந்து எம்.எல்.ஏ-க்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன் இருவரும் வணக்கம் தெரிவித்தனர். தினகரனும்  பதிலுக்கு வணக்கம் தெரிவித்தார். பிற அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் யாருமே தினகரனைக் கண்டுகொள்ளவில்லை. கூட்டம் துவங்கியதுமே, தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் வெளிநடப்பு செய்தபிறகு அந்த வரிசையில் தினகரன் மட்டுமே தனிமையில் அமர்ந்திருந்தார்’’ என்றபடி கழுகார் பறந்தார்.

அட்டை ஓவியம்: கார்த்திகேயன் மேடி
படம்: கே.ஜெரோம்


p44_1515501516.jpg

dot_1515501537.jpg தமிழக அரசு எவ்வளவு செயலற்றுப்போயிருக்கிறது என்பதற்கு உதாரணம் இது... தலைமைச் செயலகத்தில் 6,000  ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். அவர்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் புது அடையாள அட்டை, ஆறு மாதங்களாகியும் இன்னும் வழங்கப்படவில்லையாம். 31.7.17 தேதியுடன் தற்போது உள்ள கார்டு காலவதியாகிவிட்டதாம். அலுவல் நிமித்தமாக வெளியிடங்களுக்குப் போகும் ஊழியர்களை நம்பாமல் கண்டபடி கேள்வி கேட்கிறார்களாம். இதனால் தவிக்கிறார்கள் பலரும்.

dot_1515501537.jpgபிரதமர் மோடியைக் குளிர்விக்க, எடப்பாடி லேட்டஸ்ட்டாக செய்தது என்ன தெரியுமா? தமிழக அரசு சார்பில் அச்சடிக்கப் பட்ட காலண்டரில் மோடியுடன் முதல்வர் எடப்பாடி இருக்கிற மாதிரியான புகைப்படம் இடம்பெற்றுள்ளது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது இப்படியெல்லாம் செய்ததில்லை. எந்தப் படம் இடம்பெற வேண்டும் என்பதை எடப்பாடியே செலக்ட் செய்து கொடுத்தாராம்.

dot_1515501537.jpg சட்டசபையில் கவர்னர் உரையில், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பெயர்களைக் குறிப்பிட்டபோது, ஆளும்கட்சி எம்.எல்.ஏ-க்கள் மேஜையைத் தட்டி ஆரவாரம் செய்தார்கள். ஆனால், தினகரன் மௌனமாக உட்கார்ந்திருந்தார். அதைப்பார்த்த அமைச்சர் ஒருவர், “இவரு எம்.பி-யாக இருந்தப்ப, டெல்லி பக்கமே போகக்கூடாதுன்னு அம்மா தடை போட்டாங்க. போயஸ் கார்டன்ல தலைகாட்டக்கூடாதுன்னு பல வருஷம் தடை போட்டிருந்தாங்க. தினகரன்மீது எழுந்த புகார்கள்தான் அந்த நடவடிக்கைகளுக்குக் காரணம். அந்தக் கோபத்துல, இப்ப கைதட்டாம இருக்கிறாரு போலிருக்கு’’ என்று கமென்ட் அடித்தாராம்.

dot_1515501537.jpg அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களில் சிலரை வளைக்க    பி.ஜே.பி தலைமை திட்டமிட்டுள்ளது. கணிசமான எம்.எல்.ஏ-க்கள் சேர்ந்ததும் அவர்களை மொத்தமாக அழைத்துச் சென்று மோடி முன்பாக நிறுத்தத் திட்டம்.

dot_1515501537.jpg  ‘‘எம்.எல்.ஏ-க்கள் யாரும் தினகரனைப் பார்த்துச் சிரிக்கக் கூடாதுன்னு அமைச்சர்கள் சொல்றாங்க. இதுல எத்தனை பேர் தினகரனுக்கு போன்ல வாழ்த்து சொன்னவங்கன்னு தெரியுமா?’’ என்று கிண்டல் அடித்தாராம் ஓர் ஆளும்கட்சி எம்.எல்.ஏ.

dot_1515501537.jpg  ரஜினி மன்றத்தினர் மத்தியில் உச்சரிக்கப்படும் பெயர் ‘பிரதர்ஸ்’. வட மாவட்டத்தைச் சேர்ந்த இந்த இரட்டையருக்கு, ரஜினியின் உள்வட்டத்தில் இருக்கும் ஒருவர் நெருக்கம். தீபாவளி, பொங்கல்... இப்படி விசேஷ நாள்கள் வந்தால், ரஜினி வீட்டு செக்யூரிட்டி, வேலைக்காரர்கள், மண்டப ஊழியர்கள் என்று அனைவரது வீடுகளுக்கும் போய் பவ்யமாக தாம்பாளத்தில் பரிசுப் பொருள்கள் வழங்கி கௌரவிக்கிறார்களாம்.  அதனால், பிரதர்ஸ் வந்தால் ராயல் சல்யூட் அடித்து வரவேற்கிறார்களாம் போயஸ் தோட்டத்தில். ‘‘இந்த ஐடியா நமக்குத் தெரியாமல் போய்விட்டதே’’ என்று மன்ற நிர்வாகிகள் பலர் புலம்புகிறார்கள்.

https://www.vikatan.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.