Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தணிக்கை செய்யப்படாத தமிழ்த்தாய் வாழ்த்தை உரக்கப்பாடுவோம்!

Featured Replies

தணிக்கை செய்யப்படாத தமிழ்த்தாய் வாழ்த்தை உரக்கப்பாடுவோம்! -பகுதி1

 

 பேராசிரியர் ந. கிருஷ்ணன்

 செய்தி: தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த காஞ்சி மடச் 'சின்னவா' விஜெயேந்திரர்

 

 

 

மனிதகுல விரோத 'நால்வர்ண மனுதர்ம சநாதன மனுதர்ம'த்தைக் கடைப்பிடித்து, தமிழில் பேசினால் தீட்டு என்று குளித்து, தமிழ்மொழித் தீட்டுத் துவேஷம் கடைப்பிடிக்கும் காஞ்சி சங்கர மடச்சாமியார்களை நன்றாக அறிந்தவர்களுக்கு, காஞ்சி மடச்சின்னவர் விஜேந்திர சாமியார் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது எழுந்து நிற்காமல் அவமரியாதை செய்தார் என்பதில் எந்த வியப்பும் வரப்போவதில்லை. தன் தாய்மொழியான வடமொழி (சமஸ்கிருதம் என்னும் அறைச்செயற்கை மொழி உருவாவதற்கு முன் ஆரியர்களால் பேசப்பட்ட பேச்சுமொழி) உலகவழக்கு அழிந்து, ஒழிந்து சிதைந்துபோனது என்று ஆரியத்தின் அகால மரணத்தை தமிழ் மொழியின் சீரிய இளமையுடன் ஒப்பிட்டு, தமிழ்த்தாய் வாழ்த்தில் மனோன்மணியம் சுந்தரம் பிள்ளையவர்கள் பாடிய பகுதியை நீக்கிவிட்டு, எஞ்சிய பகுதியையே நாம் இப்போது 'தமிழ்த்தாய்' வாழ்த்தாகப் பாடிவருவதை இத்தலைமுறைத் தமிழர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம்; "உலகவழக்கு அழிந்து ஒழிந்து சிதைந்துபோன ஆரியத்தின் (வடமொழியின்) எச்சங்களான சங்கர மடச்சாமியார்களுக்கு 'தமிழ்த்தாய்' வாழ்த்துப் பாடப்படும் போதெல்லாம் உடல் முழுவதும் எரிச்சல் ஏற்பட்டு தியானம் செய்வது இயல்புதானே என்பது தணிக்கை செய்யப் படாத முழுமையான 'தமிழ்த்தாய்' வாழ்த்தைப் படித்தவர்களுக்குப் புரியும். இதையெல்லாம் சாமர்த்தியமாக மறைத்து, 'மனிதவிரோத சநாதன மனுதர்ம'மும் 'தமிழ் அற'மும் ஒன்றுதான் என்று தமிழர்களை ஏமாற்றி, அவர்களுக்குக்  குருவாக முயற்சிக்கும் சங்கர மடச்சாமியார்களின் பசுவேடம் அவ்வப்போது கலைந்து, சுயமான புலித்தோலை காட்டத்தான் செய்கிறார்கள்; இருந்தும் அதெல்லாம் சும்மா என்று கண்களை மூடிக்கொண்டு, தமிழர்கள் சிலர் கண்மூடித்தனமாக நம்புவதுதான் அவலம். மற்றபடி இச்செய்தியில் எந்த வியப்பும் இல்லை!

 

 

முழுமையான தமிழ்த்தாய் வாழ்த்து (UnEdited Version of TamilThai Vazhthu)

 

 

 

பாயிரம்

 

கடவுள் வணக்கம்

 

(நேரிசை வெண்பா)

 

 

 

வேத சிகையும் விரிதலையும் மெய்யன்பர்

 

போதமும் போய் தீண்டாப் பூரணமே - பேதமற

 

வந்தெனை நீ கூடுங்கால் வாழ்த்துவர்யார் வாராக்கால்

 

சிந்தனையான் செய்ம்முறையென் செப்பு.

 

 

 

தமிழ்த் தெய்வ வணக்கம்

 

(பஃறாழிசைக் கொச்சகக்கலிப்பா)

 

 

 

நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்

 

சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்

 

தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்

 

தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!

 

அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற

 

எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே!

 

 

 

பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்

 

எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்

 

கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்

 

உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்

 

ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்

 

சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே!" - மனோன்மணியம் சுந்தரனார்

 

 

 

நீக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்தின் பொருள்: "பலவகையான உயிர்களையும், உலகங்களையும், படைத்து, காத்து, இறுதியில் ஒடுக்கும் எல்லையற்ற பரம்பொருளான இறைவன் எந்த மாறுதலுக்கும் உட்படாமல் முன் இருந்தபடியே இருப்பதுபோல்,  தமிழ் என்னும் ஒருமொழியிலிருந்து கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு என்று  பல மொழிகள் பிறந்தபோதும், ஆரியமொழியைப் போல, உலகவழக்கு அழிந்து, ஒழிந்து சிதையாமல், என்றும் மாறாத சீரிய இளமையோடு, நிற்கும் திறத்தை வியந்து, எம் செயல் மறந்து வாழ்த்துகிறோம்" என்கிறார் மனோன்மணியம் சுந்தரனார். என்றும் மாறாத, நிலைப்பேறு உடைய இறைவனைப் போல், எம் தமிழ்த் தாயும் என்றும் மாறாத நிலைப்பேறு கொண்டவள் என்று பெருமிதம் கொள்கின்றார் சுந்தரனார்.

 

வடவேதமொழியான தாய்மொழியைத் தொலைத்து, மொழியற்ற கையறு நிலையில் வாழும் காஞ்சி மடச்சாமியாருக்கு, இறைவனைப் போல் என்றும் வாழும் தமிழ்த்தாய்க்கு வாழ்த்துப் பாடும்போது எரிச்சல் வருவது இயல்புதானே! தமிழர்கள் இதைப் பெரிதுபடுத்த வேண்டாம். இச்செயல் மூலம், தனது ஆரிய புலித்தோலை மற்ற தமிழர்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய  ஆரிய விஜயேந்திர சாமியாருக்கு தமிழர்கள் உண்மையில் நன்றி சொல்லக் கடமைப்பட்டவர்கள் என்று மகிழ்வோம். கடவுள் வாழ்த்து பாடும் போது தியானம் செய்வதுதான் சங்கர 'மடமரபு' என்று சங்கரமடம் சொல்லிய விளக்கத்தை ஏற்போம்; 'மடமரபு'களைப் பின்பற்றும் மடச்சாமியாரைப் தமிழர்கள் பொருட்படுத்த வேண்டாம். 'மடமரபு'களிடம் மன்னிப்பு கேட்கச் சொல்லி போராட்டங்கள் நடத்துவது அறிவுடைமை ஆகாது.

ஆரிய சங்கர மடச் சாமியார்கள் வயிறு எரிவதற்கு காரணமாக இருக்கும், மனோன்மணியம் சுந்தரனார் பாடிய தமிழ்த்தாய் வாழ்த்திலிருந்து மேலும் சில குறட்பாக்களைக் காண்போம்.

 

 

கடல்குடித்த குடமுனி உன் கரைகாணக் குருநாடில்

 

தொடுகடலை உனக்கு உவமை சொல்லுவதும் புகழாமே. (1)

 

 

ஒரு பிழைக்கு அரனார் முன் உரைஇழந்து விழிப்பாரேல்

 

அரியது உனது இலக்கணம் என்று அறைவதும் அற்புதம் ஆமே. (2)

 

 

 

சதுமறை ஆரியம் வருமுன் சகம் முழுதும் நினது ஆயின்

 

முதுமொழி நீ அநாதி என மொழிகுவதும் வியப்பாமே.  (3)

 

 

 

வேகவதிக்கு எதிர் ஏற விட்டதொரு சிற்றேடு

 

காலநதி நினைக்கரவாக் காரணத்தின் அறிகுறியே. (4)

 

 

 

கடையூழி வரும் தனிமை கழிக்க அன்றோ அம்பலத்துள்

 

உடையார் உன் வாசகத்தில் ஒரு பிரதி கருதினதே.   (5)

 

 

 

தக்கவழி விரிந்து இலகுஞ் சங்கத்தார் சிறுபலகை

 

மிக்க நலஞ் சிறந்த உந்தன் மெய்ச்சரித வியஞ்சனமே.(6)

 

 

 

வடமொழி தென்மொழி எனவே வந்த இருவிழி அவற்றுள்

கொடுவழக்குத் தொடர்பவரே கிழக்கொடு மேற்கு உணராரே.(7)

 

 

வீறுடைய கலைமகட்கு விழியிரண்டு மொழியானால்

கூறு வடமொழி வலமாக் கொள்வர் குண திசை அறியார்.(8)

 

 

கலைமகள் தன் பூர்வதிசை காணுங்கால் அவள் விழியுள்

வலதுவிழி தென்மொழியா மதியாரோ மதியுடையார்.   (9)

 

 

பத்துப்பாட்டுஆதி மனம் பற்றினார் பற்றுவரோ

எத்துணையும் பொருட்கிசையும் இலக்கணம் இல் கற்பனையே. (10)

 

 

வள்ளுவர் செய் திருக்குறளை மறுவற நன்கு உணர்ந்தோர்கள்

 

உள்ளுவரோ மநுவாதி ஒருகுலத்துக்கு ஒருநீதி!               (11)

 

 

 

மனம் கரைத்து மலங்கெடுக்கும் வாசகத்தில் மாண்டோர்கள்

 

கனஞ்சடையென்று உருவேற்றிக் கண்மூடிக் கதறுவரோ.      (12)

 

 

 

    எனவாங்கு

 

 

    நின் புகழ்ந்து ஏத்து நின் நெடுந்தகை மைந்தர்

    பற்பலர் நின்பெரும் பழம்பணி புதுக்கியும்

    பொற்புடை நாற்கவிப் புதுப்பணி குயிற்றியும்

    நிற்பவர் நிற்க, நீபெறும் புதல்வரில்

    அடியேன் கடையேன் அறியாச் சிறியேன்

    கொடு மலையாளக் குடியிருப்பு உடையேன்

    ஆயினும் நீயே தாய் எனும் தன்மையின்

    மேய பேராசை என் மீக்கொள ஓர்வழி

    உழைத்தலே தகுதி என்று இழைத்த இந் நாடகம்

    வெள்ளியது எனினும் விளங்கு நின் கணைக்காற்கு

    ஒள்ளிய சிறுவிரல் அணியாக்

    கொள் மதி அன்பே குறியெனக் குறித்தே.

 

 

அவையஞ்சின நெஞ்சொடு கிளத்தல்.

 

 

(நேரிசை வெண்பா)

அமைய அருளனைத்தும் ஆட்டுமேல் நெஞ்சே

சுமைநீ பொறுப்பதெவன் சொல்வாய் - நமையுமிந்த

நாடகமே செய்ய நயத்தால் அதற்கிசைய

ஆடுவம்வா நாணம் அவம்.

 

 

பாயிரம் முற்றிற்று.

 

 

(1)ம் குறட்பாவுக்குப் பொருள்: கடலையே உள்ளங்கையில் மொண்டு குடித்த ஆற்றல் வாய்ந்த குடமுனிவர் அகத்தியரே தமிழன்னையாம் உன்னை நன்கு அறிந்துகொள்வதற்காக இறைவனையே குருவாக நாடினார் என்றால், தமிழ்த்தாயே! அலைகடலைத் உனக்கு உவமையாகச் சொல்வது உனக்குப் புகழாகுமா? என்றால் நிச்சயம் புகழாகாது. என்றார் மனோன்மணியம் சுந்தரனார்.

 

 

(2)ம் குறட்பாவுக்குப் பொருள்: பாண்டியன் அவைக்களத்தில் தருமிக்காக இறைவனாகிய சிவபெருமான் எழுதிக்கொடுத்த கொங்குதேர் வாழ்க்கைஎனத்தொடங்கும் பாடலில் சங்கத்தமிழ்ப் புலவராகிய நக்கீரர் பிழை சுட்டி, இறைவனிடம் வினவ, அதற்கு தகுந்த பதிலளிக்க இயலாது இறைவனே விழித்தாரென்றால் தமிழ்த்தாயே! உனது இலக்கணத்தின் சிறப்பையும் அதன் அற்புதத்தையும் எப்படிப் புகழ்வது.

 

 

(3)ம் குறட்பாவுக்குப் பொருள்: வேதங்களும் வேதமொழியான வடமொழியும் தோன்றுவதற்கு முன்பே, உலகம் முழுவதும் ஆதிக்கம் பெற்றுக் கோலோச்சிய ஒரே மொழியாகத் தாயே! தமிழே! நீயே விளங்கினாய் என்பது உன் பழைமையின் சிறப்பை விளக்குவதாய் திகழ்கின்றது.

 

 

(4)ம் குறட்பாவுக்குப் பொருள்: சைவ சமயக் குரவரான திருஞான சம்பந்தருக்கும் சமணர்களுக்கும் இடையே நிகழ்ந்த புனல்வாதத்தில், சைவத்தமிழ் ஏடும், வடமொழி சமண ஏடும் வையை ஆற்றில் விடப்பட்டது; அதில் சைவத்தமிழ் ஏடு வைகைநதி நீரில் எதிரேறி கரையை அடைந்தது. வடமொழியில் எழுதப்பட்ட சமண ஏடு வைகை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. தமிழானது வையை நதியை மட்டும் எதிர்த்து நீந்திக் கரையேறவில்லை; காலம் என்னும் நதியையையும் எதிர்த்து நீந்திப் பன்நெடுங்காலம் கன்னித்தமிழாய் நடைபோடும் என்பதற்கு அறிகுறியாய் இச்சம்பவம் அமைந்துள்ளது என்று விளக்குகிறது இக்குறள்.

 

 

(5)ம் குறட்பாவுக்குப் பொருள்: சிவபெருமான் கடையூழிக்காலத்தில் அனைத்தையும் அழித்தபின், சிவபெருமானே பல்வேறு உலகங்களையும் மீண்டும் படைக்கும் முன் அவர் மட்டும் சிலகாலம் தனிமையில் இருப்பார்; அத்தனிமையை இனிமையாகக் கழிப்பதற்காகத் தமிழ்த்தாய் பெற்றெடுத்த திருவாசகத்தின் பிரதியை இறைவனே தன் கைப்படப் எழுதிப் படியெடுத்துக் கொண்டான் என்றால்,   தமிழ்த்தாயே! உன் சிறப்பை என்னவென்று புகழ்வது என்று வியக்கின்றார் மனோன்மணியம் சுந்தரனார்.

 

 

(6)ம் குறட்பாவுக்குப் பொருள்: சங்ககாலத்தில், புலவர்கள் கூடும் அவையில் வைக்கப்பட்டிருந்த சங்கச்சிறுபலகையானது தன்மீது வைக்கப்படுவது தகுதியுடைய தமிழ் நூலாயின் விரிந்து இடம்கொடுத்தது, தகுதியற்றதாயின் சுருங்கி புறம்தள்ளியது எனக்கூறப்படும் செய்தி தகுதியுடையதை மட்டுமே தமிழ் கொண்டுள்ளது என்பதை சிறப்புற விளக்கி நிற்கின்றது.

 

 

(11)ம் குறட்பாவுக்குப் பொருள்: " 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்; சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்" என, அனைத்து உயிர்களும் பிறப்பால் சமம் என்று அனைத்து உயிர்களுக்கும் சமநீதி உரைத்த வள்ளுவர் அருளிய திருக்குறளை பிழையில்லாமல் நன்கு உணர்ந்தவர்கள், பிறப்பால் , ஒரு குலத்துக்கு ஒரு நீதி சொல்லும் மனுநீதியை மனதால்கூட நினைத்தும் பார்க்க மாட்டார்கள்" என்று சநாதன நால்வருண மனுநீதி சொல்லும் கயவர்களைக் கண்டிக்கிறது மனோன்மணியம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்து.

 

 

(12)ம் குறட்பாவுக்குப் பொருள்: ஊனை உருக்கி, மனம் கரைத்து, நம்மைப் பிடித்த அழுக்குகள், தீமைகள் அனைத்தையும் நீக்கவல்ல திருவாசகம் என்னும் இறைத் தமிழில் கரைந்துபோகும் தமிழர்கள், கண்களை மூடிக்கொண்டு, பொருளற்ற வடமொழி மந்திரங்களை ஒருபோதும் ஓதிக் கதற மாட்டார்கள் என்று தமிழன்னையிடம் உறுதிபடத் கூறுகின்றார் இக்குறட்பாடலில் சுந்தரனார்.

 

 

இச்செய்திகள் தமிழர்களாகிய நமக்கெல்லாம் தெரியாவிட்டாலும், ஆரிய சங்கர மடச்சாமியார்களுக்கு நன்றாகவே தெரியும். சமஸ்கிருதம் தேவபாசை, அடிமைச் சநாதன தருமம் என்று தமிழனை சூத்திரனாக்கத் துடிக்கும் ஆரிய மடச்சாமியார் எப்படி அவர்கள் சதிக்கு எதிராகச் சங்கூதும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்பார்?

 

 

பசுத்தோல் போர்த்திய நால்வருணச் சனாத மநுவாதிப் புலி, தானே தனது முகமூடியைக் கிழித்துக் காண்பித்த பின்னும், தமிழர்கள் ஏமாளிகளாக இருப்பார்கள் என்பதே அம்மடச்சாமியார்களின் அடிப்பொடிகளின் கணிப்பு. ஜெயேந்திரர், சந்திரசேகரேந்திரர் ஆகிய இருவருமே விஜயேந்திரரை விட மோசமான நிலைப்பாடு கொண்டவர்கள் என்பதைக் காண்போம்.   

  • தொடங்கியவர்

தணிக்கை செய்யப்படாத தமிழ்த்தாய் வாழ்த்தை உரக்கப்பாடுவோம்! -பகுதி2

  

காஞ்சிச் சங்கராச்சாரியார்களின் அரசியல் உள்நோக்கம்

 ஆங்கிலேயக் காலனி ஆதிக்கக் காலத்தில்தான், ஸ்மார்த்த குருவான காஞ்சி சங்கராச்சாரியார்கள் மநுவாத சநாதனசமயத்தை  'இந்து' என்ற அவியல் தத்துவமாக்கப் புகுந்து, தங்களை சைவசமயம், வைணவ சமயம் உள்ளிட்ட அனைத்து சமயங்களுக்கும் ஒரே தலைமைக் குருவாகக் காட்டிக்கொள்ள முனைந்தார்கள். வைணவர்கள் காஞ்சிச் சங்கராச்சாரியார்களின் அரசியல் நோக்கத்தைப் புரிந்துகொண்டு, தத்துவார்த்த நிலையில், தங்கள் தனித் தன்மையைத் தங்கள் குருமார்களான ஜீயர்கள் தலைமையில் காத்துக்கொண்டார்கள். சைவர்களுக்குத் தத்துவார்த்த நிலையிலும், சமயத்தலைமையிலும் அமர்ந்திருந்த சைவ மடாதிபதிகளான பண்டார சந்நிதிகள், சைவர்களை வழிநடத்தும் அறிவார்ந்த தலைமையினைத் தரத் தவறிவிட்டனர். பெரும்பான்மையான சைவ மடாதிபதிகள், சங்கரமடத்தின் சநாதன மனுதர்மத்துக்கு ஆதரவாகவே இருந்தனர். சைவ மடாதிபதிகள் அறிவார்ந்த சமயச் சொற்பொழிகளை ஆற்றும் திறனோ, வழிநடத்தும் திறனோ அற்றவர்களாகவே இருந்தமையால், பெரும்பான்மைச் சைவர்கள் வழிநடத்தும் ஆன்மீகத் தலைமை இல்லாமல் தனித்து விடப்பட்டனர். இந்நிலையைச் சாதகமாகக் கொண்டு, சைவர்களின் தலைமை காஞ்சி சங்கர மடமே என்று காட்டிக்கொள்ளும் முனைப்பில், தத்துவார்த்த நிலையில், தாங்கள் ஏற்றுக்கொள்ளாத தேவார, திருவாசகங்களுக்கும், திருப்பாவை, திருவெம்பாவை பாவை நோன்புகளுக்கு மாநாடுகள் நடத்தித் தங்களை சைவ, வைணவ சமயங்கள் உள்ளிட்ட அனைத்துச் சமயங்களுக்கும் தலைவராகக் காட்டிக்கொள்ளக் ஸ்மார்த்தர்களில் ஒரு பிரிவினரின் குருவான காஞ்சிமடம் மகாபெரியவா தலைமையில் ஸ்மார்த்தர்கள் முனைந்தனர்.

 சைவர்களின் குழப்பம்

 சிவபெருமானை முழுமுதற்கடவுளாக, ஒரே இறைவனாகக் கொள்ளும் சைவசமயிகள் பலரும், 'அகம் ப்ரம்மாஸ்மி - நானே இறைவனாக இருக்கிறேன்' என்று கருதும் ஸ்மார்த்த மதக் குருவான சங்கராச்சாரியாரைப் பார்த்து, இவரையே நாம் குருவாக ஏற்றுக்கொள்ளலாமே என்று நினைக்கின்றனர். அவர்கள் பார்வையில், சங்கராச்சாரியாரும் திருநீறு அணிகின்றார்; சிவபெருமானாகிய சந்திர மௌலீச்வரருக்குப் பூசை செய்கின்றார்; காவி அணிந்த துறவியாக இருக்கின்றார் என்பதால், இவரையும் சைவ சமயக் குருவாகத் தவறாக எண்ணி ஏமார்ந்துவிடுகின்றனர்.

 காலில் பட்டுத்துணிகட்டித் தீட்டைத் தவிர்த்த ஜெயேந்திரர் ஸ்வாமிகள்

 நான் சிறுவனாக இருந்தபோது, திக்விஜயம் மேற்கொண்டிருந்த காஞ்சிப் பெரியவர் ஜெயேந்திர சரஸ்வதி அவர்களைத் தரிசிக்கச் சென்றிருந்தேன். காவி உடையும், கையில் தண்டமும் கொண்டிருந்தவரின் காலைச் சுற்றி, ஒரு பட்டு வஸ்திரத்தை அணிந்து அமர்ந்திருந்தார். சங்கராச்சாரியார் காலைச் சுற்றிப் பட்டுவஸ்திரம் அணிந்திருந்தது எனக்குச் சிரிப்பை வரவழைத்தது. என்னருகில் நின்றிருந்த என் வகுப்புத் தோழன், 'டேய் அபிஸ்டூ, சிரிக்காதேடா!' என்றான். 'காவிச் சாமிக்கு பட்டுத்துணிமேல ஆசை போகலேயேடா, அதான் சிரிப்பா வருது' என்றேன் நான். பட்டைச் சுத்தினால்தான் சூத்திராள் தொட்டாலும் தீட்டு வராது, தெரியுமோல்லியோ? மத்தபடி, பெரியவா பட்டெல்லாம் உடுத்தரதில்லேடா, புரிஞ்சுக்கோ' என்றான். எனக்குப் புரிந்துவிட்டது பூணூலைத் துறந்த சங்கராச்சாரியார் இன்னும் சாதித் தீட்டைத் துறக்கவில்லை என்று.

 பிற்காலத்தில், இவர்மேல், பாலியல் குற்றச்சாட்டும், கொலைக்குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டபோதும், இவர் பீடத்தைத் துறந்து, புறம்போக்கு நிகழ்த்திய போதும், இவரைக் குருவாகக் கருதிய பல்லாயிரக்கான சைவர்களுக்காக வருந்தினேன். தத்துவ ரீதியில் ஸ்மார்த்தம் சைவத்திலிருந்து வேறுபட்டது.

 

மகாபெரியவா என்றழைக்கப்படும் காலஞ்சென்ற சந்திரசேகரேந்திர சரஸ்வதி அவர்களும் தீண்டாமையையும், தமிழ்மொழியை நீசமொழி என்று தூற்றுவதையும், நீசபாஷையில்(தமிழில் என்று படிக்கவும்) உரையாடினால் குளிக்கவேண்டும் என்று மொழித்தீட்டையும் கடைப்பிடித்தவர். மகாப்பெரியவா மிகச் சிறந்த ஆன்மிகக் கருத்துக்களைக் கூறியவர் என்பதை யாரும் மறுக்கவியலாது.

 

கல்வியில் கரைகடந்த புலமை இருந்தபோதும், இறைஞானம் கைவரப் பெறாமையால், தீண்டாமை, மொழித்துவேஷம் ஆகிய இரு கொடியநோயினாலும் மிகவும் பாதிக்கப்பட்டவர் என்பதால் மகாப்பெரியவா பரிதாபத்துக்கு உரியவர். கல்விஅறிவு பெற்றும், இறைஞானம் கைவரப்பெறாத இவர்போன்றவர்களுக்காவே 'கல்வி என்னும் பல்கடல் பிழைத்தும்' என்று மாணிக்கவாசகர் கீர்த்தித் திருவகவலில் பாடினார் போலும்.

 திருக்குறளைத் "தீய குறள்" என்ற மகாப்பெரியவா?!

 ஸ்ரீஆண்டாள் அருளிய திருப்பாவை இரண்டாம் பாசுரத்தில் “வையத்து வாழ்வீர்காள்!” பாடலின் ஆறாம் அடியில் “தீக்குறளை சென்றோதோம்“ என்று வருகிறது. காஞ்சி "மகாப்பெரியவா" அவர்கள் 1963ல் ஜூன் மாதம் மதுரையில் திருக்குறள் பற்றி பேசுகையில் ஆண்டாள் திருப்பாவையின் "செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்" என்னும் அடியிலுள்ள "தீக்குறளை சென்றோதோம்" என்னும் தொடருக்குத், தீய திருவள்ளுவரின் குறளை யாங்கள் ஓத மாட்டோம் என்று ஆண்டாள் சொன்னதாகப் பொது மேடையில் பொருள் கூறி, திருப்பாவையில் “தீய திருக்குறளை படிக்கமாட்டோம்” என ஸ்ரீஆண்டாள் குறிப்பிடுவதாக தெரிவித்துத் தம் தமிழிலக்கண அறியாமையையும், "பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும்" என்று சாதி வருணாசிரம தருமத்தை ஒப்புக்கொள்ளாது முழங்கிய திருக்குறள் மீதான தமது தீராத வெறுப்பையும் பதிவு செய்தார்.

 மகாப்பெரியவா அருளிய இக்கருத்து தமிழ் அறிவு ஜீவிகளிடையேயும் சாமான்ய மனிதர்களிடையேயும் குழப்பத்தினையும், சர்ச்சையையும் உண்டாக்கியது. அதாவது  “ச்”  சேர்த்து திருப்பாவை வரியை பெரியவா குறிப்பிட்டது திருக்குறளுக்கு எதிராக திருப்பாவை உள்ளது போல் எண்ண வைத்தது. மகாப்பெரியவா "தீக்குறளை சென்றோதோம்" என்ற திருப்பாவை வரியை மாற்றி "தீக்குறளைச் சென்றோதோம்" எனச் சொன்னதே அப்பிரளயத்தை உருவாக்கியது. "தீக்குறள்" என்பதற்குப் பொருள் "கோள்  சொல்லமாட்டோம்" அதாவது "பிறருக்குத் தீங்கு உண்டாக்கும் வகையிலான பொய் சொல்லமாட்டோம்"  என்பதே பொருள்.

 

"மகாப்பெரியவா"வை கண்டித்த வைணவர்களின் துணிவு!

 

இதுகுறித்து  வைணவர்கள் ஸ்ரீவைஷ்ணவ ஸூதர்சனம் என்ற மாத இதழில் (சோதி 16 ஒளி-12) தலையங்கம் தீட்டித் தங்கள் கண்டனத்தினை பதிவு செய்திருந்தார்கள். குமுதம் இதழ் 21-11-1963 தலையங்கத்தில் மகாப்பெரியவாளின் கருத்துக்கு மறுப்பையும்,  தன் வருத்தத்தினையும் தெரிவித்திருந்தது. வேடிக்கை என்னவெனில் பிரபல பத்திரிகை "குமுதம்" கூட  "ச்"  சேர்த்ததை உணராமல், "தீக்குறளைச் சென்றோதோம் எனப் பீடாதிபதி சொல்லி திருக்குறளுக்கு எதிராக திருப்பாவையைப் பற்றி பேசும்படி வைத்தது தவறு" என மட்டும் பதிவு செய்திருந்தது.

 குமுதத்தின் தலையங்கத்தினை சுட்டிக்காட்டி பேசிய 'மகாப்பெரியவா' தந்த விளக்கம் 5/12/63 குமுதத்தில்,  "பாவையர் நோன்பு காலத்தில் இனிமையான (திருக்)குறளைக்கூட ஓதமாட்டோம் இறைவன் நினைவில் ஆழ்ந்துவிடுவோம் என பாவையர் கூறுவதாக பொருள் கொள்ளலாம் என்று சொன்னேன், அப்படி நான் புதிதாக விளக்கப்புகுந்தது (திருக்)குறளின் பெருமையை வலியுறுத்துவதற்காகத்தானே தவிர, அதை குறைவு படுத்துவதற்காக அல்ல!.... உரை சொன்னது பொருந்தியதா பொருந்தவில்லையா என்பது வேறு; உரை சொன்னதன் உள்நோக்கம் குறட்பெருமையை உணர்த்துவதற்குத்தான்.” என்று 'மகாப்பெரியவா' சாமர்த்தியமாகத் தன் திருக்குறள் வெறுப்பை மூடிமறைக்க விளக்கியிருந்தார்.

 திருக்குறளைத் தாழ்வுபடுத்தவில்லை என்பதை விவரித்த மகாப்பெரியவா, திருப்பாவைக்கு தான் உணர்த்திய  பொருள் தவறு என, தன் விளக்கத்தில் ஒப்புக் கொள்ளவில்லை,  வருத்தமும்  தெரிவிக்கவில்லை. மேலும், 5/12/63 குமுதம் இதழில் பெரியவாள் “தீக்குறள்” என்னும் பதத்திற்கு இனிமையான குறள் என்று பொருள் கூறுகிறார், அதுவும் பிழை. அப்படி பொருள் இருந்தால், "தீந்தமிழ்",  "தீஞ்சுவை" என்பது போல "தீங்குறள்"  என்றல்லவா இருந்திருக்கவேண்டும்? ஆனால் திருப்பாவையிலோ, "தீக்குறளை சென்றோதோம்"  என்றே உள்ளது.  நடமாடும் தெய்வமாகவும் ஜகத்குருவாகவும் மதிக்கப்பட்டவரின் தெய்வத்தின் குரலில், திருப்பாவை குறித்து அபஸ்வரம் வந்தால், அது எப்படித் தெய்வத்தின் குரலாக இருக்கும்?  பொய்மைப் புனைவுகள் நெடுநாட்கள் நிலைப்பதில்லை.

 'சநாதன மனுதர்ம'த்தைக் கடைப்பிடிக்கும் 'மகாப்பெரியவா' சங்கராச்சாரியார் 'தமிழ் அறம்' கடைப்பிடிக்கும் தமிழர்களுக்குக் குருவாக முடியமா? 'தமிழை நீசபாஷை' என்று தூற்றிய 'மகாப்பெரியவா'வின் அளவுகடந்த தமிழ்மொழி வெறுப்பு!

 அப்போதிருந்த ஆட்சிமொழிக் காவலர் திரு. கீ. இராமலிங்கனார் 'மகாப்பெரியவா' மடத்திற்குச் சென்று இதுபற்றி வினவியபோது, 'மகாப்பெரியவா' நேரடியாகத் தமிழில் விடை சொல்லாமல், தம் அணுக்கத் தொண்டரிடம் தமிழில் மொழிபெயர்த்துச் சொல்லுமாறு சமற்கிருதத்திலேயே விடை கூறினாராம். "சுவாமிகளுக்கு நன்றாகத் தமிழ் தெரியுமே! தமிழிலேயே எனக்கு நேரடியாய் விடை கூறலாமே!" என்று ஆட்சி மொழிக் காவலர் சொன்னதற்கு, "சுவாமிகள் பூசை வேளையில் நீச பாஷையில் பேசுவதில்லை" என்று அணுக்கத் தொண்டர் மறுமொழி கூறினாராம். இதுதான் மகாப்பெரியவாளுக்குத் தமிழ் மொழி குறித்தும்,  தமிழர்களிடம் உள்ள வெறுப்பு நிலையும் ஆரியமொழி வெறியும்.  "ஒன்றே குலமும், ஒருவனே தேவனும்' என்றும், "என்னை நன்றாக இறைவன் படைத்தனன், தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே!" என்றும் சொன்ன திருமூலரையும், 'தண்ணார் தமிழ் அளிக்கும் தண்பாண்டி நாட்டானை' என்று சிவபெருமானையே தமிழ்நாட்டுப் பாண்டிநாட்டானாகக் கொண்டாடும் மாணிக்கவாசகரையும் குருவாகக் கொள்ளும் தமிழர்களுக்குத் 'தமிழ் நீசபாஷை' என்று தூற்றிய "மகாப்பெரியவா" எப்படிக் குருவாக முடியும்? உங்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்.

 அரசியல் அதிகாரமே 'மகாப்பெரியவா' திருப்பாவை-திருவெம்பாவை மாநாடு நடத்தியதன் நோக்கம்

 காஞ்சி சங்கரமடத்தை 'இந்து' என்னும் அவியல் மூட்டைக்குள் உள்ள பல்வேறு சமயமக்களுக்கும் ஏகோபித்த ஆன்மீகத் தலைவராகக் காட்டிக்கொள்ளும் நுண் அரசியல் முயற்சியே மகாப்பெரியவாளின் திருப்பாவை-திருவெம்பாவை மாநாடுகளின் அரசியல் உள்நோக்கம்.  இதன் மூலம், மத்திய அரசையும், அதிகாரிகளையும் ஆட்டிவைக்கும் அதிகார மையமானது காஞ்சி மடம். அவர் காலத்தில், சைவ மடாதிபதிகள் சைவசமயிகளுக்கு ஆன்மிகத் தலைமை ஏற்று நடத்தும் சமய அறிவாற்றலும், பேச்சுத் திறனும் கொண்டிருக்கவில்லை. காலஞ்சென்ற தவத்திரு குன்றக்குடி அடிகளார் ஒருவர் மட்டும் மக்களோடு மிகவும் தொடர்பில் இருந்து அறிவார்ந்த சைவத் தலைமையைத் தந்தார். ஆயினும், ஊடகங்கள் ஏற்படுத்திய மாயையில் சைவர்கள் எளிதில் விழுந்துவிட்டார்கள். அறிவார்ந்த ஜீயர்கள் வைணவர்களைத் திறமையாக சங்கரமடத்தின் மாய வலையிலிருந்து காத்தார்கள்.

 மகாப்பெரியவா போன்ற தீண்டாமை நோயாளிகளிடம் ஆன்மிகம் கேட்டால், இறைமைக் கல்வி கைவரப்பெறாது என்பதால், இறைவனையே குருவாகக் கொண்ட மாணிக்கவாசகர், "கற்றாரை யான் வேண்டேன்! கற்பனவும் (இறைவன் அருளால்) இனி அமையும்; குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தா! உன் குரைகழற்கே கற்றாவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே" என்று திருப்புலம்பல் பதிகத்தில் பாடியுள்ளார். ஸ்மார்த்த மதகுருக்கள், சிவபெருமானை வழிபடுவதுபோல் சிவச்சின்னங்களை அணிந்தும், சைவநீதிக்கு எதிரான கொள்கைகளைக் கைக்கொண்டு, ஸ்மார்த்தர்களைப் பிடித்த தீண்டாமைத் தொற்றுநோயை சைவர்களிடையே பரப்பி, சிவபெருமானுக்கு உவப்பில்லாத தீண்டாமையைக் கடைப்பிடிக்கச் செய்வார்கள் என்று மணிவாசகர் இனம் கண்டுகொண்டாரோ என்னவோ, அச்சப்பத்துப் பதிகத்தில்

 புற்றில் வாழ் அரவும் அஞ்சேன்! பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன்!

கற்றைவார் சடைஎம்அண்ணல் கண்நுதல் பாதம் நண்ணி

மற்றுஓர் தெய்வம் தன்னை உண்டுஎன நினைந்து எம் பெம்மாற்கு

அற்றில்லாதவரைக் கண்டால் அம்ம! நான் அஞ்சுமாறே!   - திருவாசகம் அச்சப்பத்து:1

 என்று பாடினார் போலும்! "புற்றுக்குள்ளே என்ன பாம்பு இருக்குமோ தெரியாது, அதற்கு எனக்கு அச்சமில்லை! இறைவன் தன் திருவடி காணாத பொய்யர்களின் உருவத்தைக் கண்டும் எனக்கு அச்சமில்லை! ஆனால், கற்றை வார்சடை கொண்ட எம் அண்ணல் முக்கண் அப்பன் சிவபெருமானின் திருவடிகளை வழிபடுபவர்போலச் சிவவேடம் புனைந்து, சிவன் அல்லாது மற்றும் ஓர் இறைவன் உண்டு என்னும் சிந்தனையை நம்முள் விதைக்க வரும், போலிச் சைவர்களைக் கண்டு, அம்மம்மா! எனக்கு மிகவும் அச்சமாக இருக்கின்றது" என்று பாடினார் மணிவாசகப் பெருமான். ஸ்மார்த்த குரு சங்கராச்சாரிகள் நம்மிடையே விதைக்க நினைக்கும் சிந்தனை 'தீண்டாமை, தமிழ் மொழி வெறுப்பு, சிவபெருமான் அல்லாத பரப்பிரமம் என்று ஒன்று உண்டு, நீயே அப்பரப்பிரம்மம்' என்பவையே என்று புரிந்து கொள்க.

 

தீண்டாமையைக் கைக்கொண்டால், சிவபெருமான் நம்மிடமிருந்து நிலையாக விலகிவிடுவான். தமிழ் மொழியால் பாடாவிட்டால், சிவபெருமானுக்கே மிகவும் விருப்பமான, அழகிய சிற்றம்பல உடையானே பெருவிருப்போடு தம் கைப்படவே எழுதி எடுத்துக்கொண்ட திருவாசகம் உங்களுக்கு வசப்படாது; சிவபெருமானும் உங்களுக்கு வசப்படமாட்டான். ஸ்மார்த்தம் கூறும்  பரப்பிரம்மம் நீங்கள் பல உலகங்களையும் கடந்து தேடிச்சென்று அடையவேண்டிய பொருள்! உண்மைப் பரம்பொருளான எம்புண்ணியன் சிவபெருமானோ, நாம் இருக்கும் இடத்தைத் தேடி (இங்கு, நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளி, செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை -திருவெம்பாவை:17) இம்மண்ணுக்கு வந்து, நம் நிலைக்குத் தன்னையே இழிவுபடுத்திக்கொண்டு, நமக்கு பேரறிவு ஊட்டி, அருள்தந்து, தானே ஆதிப்பிரமம் என்று நமக்கு வெளிப்படுத்தி அருளும் அருளாளன் என்னும் மணிவாசகரின் திருவாசகத்தைக் காண்போம்!

 மாது இவர் பாகன்; மறை பயின்ற வாசகன்; மாமலர் மேயசோதி!

கோது இல் பரங் கருணை, அடியார் குலாவும் நீதி குணமாக நல்கும்

போது அலர் சோலைப் பெருந்துறை எம்புண்ணியன், மண்ணிடை வந்து இழிந்து

ஆதிப் பிரமம் வெளிப்படுத்த அருள் அறிவார் எம்பிரான் ஆவாரே! - திருவாசகம்:திருவார்த்தை-1

  தமிழுக்கு முதன்மை கொடுத்த வைணவம்

 பெருமாள் கோவில்களில் பன்னிரு ஆழ்வார்களின் பாசுரங்களே முதலில் பாடப்படும். வேதங்களுக்கு இரண்டாம் இடம்தான். வைணவம் உடையவர் இராமானுசர் தலைமைக்காலம் தொட்டுத் தீண்டாமையையும், சாதியையும் ஓரளவு வெற்றி கொண்டது என்று ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அந்தணரல்லாத நம்மாழ்வார் வைணவத்தின் தலைமை ஆழ்வாராக உணர்வுபூர்வமாக அனைத்து வைணவர்களாலும் கொண்டாடப்படும் உன்னதம், வைணவத்தின் 'ஓர் குலம்' வெற்றியைப் பறைசாற்றும்.

 நாயன்மார்களின் பக்தி இயக்கம்

 நாயன்மாரின் பக்தி இயக்கமே பெரும்பான்மைத் தமிழரகளையும், தமிழையும் ஆரிய, சமண, சாக்கிய களப்பிரர்களின் அடிமைத் தளையிலிருந்து மீட்டது. சைவ சமயக்குரவர்களின் சாதி, வருணம் கடந்த அன்புவழியும், தொண்டும் மக்களை நல்வழிப் படுத்தின. பன்னிரு திருமுறைகளும் சைவர்களுக்குத் தமிழ் மறைநூல்கள் ஆயின. சாதிச் சழக்குகளைச் சமயக் குரவர்கள் சாடியே மக்களை நல்வழிப்படுத்தினர். தேவாரப் பாடல்கள் தமிழ்மொழியை நன்கு வளர்த்தன. சைவசமயச் சாத்திர நூலாகவும், தோத்திர நூலாகவும் திருமூலரின் திருமந்திரம் ஒளிவீசியது.

(இன்னும் வரும்)

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.