Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிக்கலில் தவிக்கும் சினிமா உலகம் - எப்படி இருக்கும் எதிர்காலம்?

Featured Replies

சிக்கலில் தவிக்கும் சினிமா உலகம் - எப்படி இருக்கும் எதிர்காலம்?

 
 

கே.ஜி.மணிகண்டன், அலாவுதின் ஹுசைன்

 

‘சமூகத்தின் பிரச்னை களைத் தீர்ப்பேன்’ என்ற அறைகூவலுடன் சினிமா விலிருந்து முதல்வர் வேட்பாளர்கள் அரசியலுக்கு வந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் தமிழ் சினிமாவோ, ஜி.எஸ்.டி, கேளிக்கை வரி, டிக்கெட் கட்டணம், கந்து வட்டி விவகாரம், கியூப், யு.எஃப்.ஓ கட்டணங்கள் என்று பல பிரச்னைகளின் சிக்கலில் தவிக்கிறது. கந்துவட்டிப் பிரச்னையால் தற்கொலை செய்துகொண்ட அசோக்குமாரின் மரணம், ‘புதுப்படங்கள் ரிலீஸ் இல்லை’ என்ற தயாரிப்பாளர்களின் முடிவு, ‘திரையரங்குகள் மூடப்படும்’ என்ற அறிவிப்பு... என்னதான் ஆச்சு நம்ம தமிழ் சினிமாவுக்கு?

டிக்கெட் விலை, பார்க்கிங் கட்டணம், ஆன்லைன் புக்கிங் சார்ஜ் என ரசிகர்களை வாட்டியெடுக்கும் பிரச்னைகள் ஒருபுறம்; அதிகரிக்கும் நடிகர்களின் சம்பளம், விநியோகஸ்தர்களின் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள், சாட்டிலைட் ரைட்ஸ் பிரச்னை, தியேட்டர்கள் கிடைக்காதது, கந்துவட்டிப் பிரச்னை, அடிக்கடி நடக்கும் பஞ்சாயத்துகள், ஆன்லைன் பைரஸி எனத் தயாரிப் பாளர்களை வதைக்கும் பிரச்னைகள் மறுபுறம், இந்த இரண்டுக்கும் நடுவே நசுங்கிக்கொண்டிருக்கிறது இன்றைய தமிழ்சினிமா!

p8a_1520922201.jpg

இயக்குநர் பார்த்திபன் ஒருமுறை, ‘பெரிய நடிகர்களின் படங்கள் எப்போது ரிலீஸ் ஆனாலும் ஓடும்; ரசிகர்களும் தேடிவந்து படம் பார்ப்பார்கள். சிறுபட்ஜெட் படங்கள் அப்படிக் கிடையாது. எனவே, பண்டிகைக் காலங்களை சிறுபட்ஜெட் படங்களுக்கென ஒதுக்கவேண்டும்’ எனக் கோரிக்கை வைத்தார். இந்தக் கருத்துக்கு நேரெதிராக, ‘பண்டிகைக் காலங்களில் மட்டுமே பெரிய படங்கள் ரிலீஸ் ஆகும். மற்ற தினங்களில் சிறுபட்ஜெட் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்போம்’ என்றார், அன்றைய தயாரிப் பாளர் சங்கத் தலைவர் தாணு. இரண்டுமே நடக்கவில்லை என்பது வேதனையளிக்கும் உண்மை. ஒவ்வொரு முறை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைமை மாறும்போதும், சில அதிரடி அறிவிப்புகள் வந்துகொண்டுதானிருக்கும். தியேட்டர் வசூலைத் தாண்டி, சாட்டிலைட் ரைட்ஸ் எனப்படும் தொலைக்காட்சி உரிமம்தான் சிறுபட்ஜெட் படங்களுக்கான உரம். ஆனால், சிறுபட்ஜெட் படங்களை சமீப நாள்களாகத் தொலைக் காட்சிகள் வாங்குவதில்லை. சரி, சிறுபட்ஜெட் படங்களை ஊக்குவித்தால் மட்டும், தமிழ் சினிமா நல்ல நிலைக்கு வந்துவிடுமா என்றால், அதுவும் இல்லைதான்!

தமிழ் சினிமாவின் பிரதான பிரச்னை கந்துவட்டி. அசோக் குமாரின் மரணத்திற்குப் பிறகு, அன்புச்செழியன்மீது தீவிரமாகப் புகார்களை வாசித்துக் கொண்டிருந் தவர்கள், ஆதரவாகப் பேசிக் கொண்டிருந்தவர்கள் எல்லோரும் சில நாள் களுக்குப்பிறகு அமைதியாகி விட்டார்கள். அசோக்குமார் இறந்தபோது அதிரடி காட்டிய சினிமா சங்கங்கள், இப்போது அதுதொடர்பாக வாய் திறக்காதது ஏன்? ‘எங்கள் பக்கமும் தவறு இருக்கிறது’ என்று ஒப்புக்கொள்கிறார்களா? இந்தக் கேள்விகளுக்கு நேர்மையாகப் பதில் தேட வேண்டும்.

p8b_1520922224.jpg

‘தமிழ் சினிமாவில் கந்துவட்டியை முழுவதுமாக ஒழிக்க முடியாது’ என்று திரையுலகில் பலரும் ஒப்புக் கொள்கின்றனர். ஆனால், அதைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரலாம் என்றும் அவர்களே சொல்கிறார்கள். ஆனால், அதற்கான முயற்சி களும் எடுக்கப்படவில்லை. ஒருநாள் ஷூட்டிங் நடக்க வில்லை என்றால், படம் குறித்த தேதியில் ரிலீஸ் ஆகவில்லை என்றால், தியேட்டர் வசூல் தவிர்த்து இதர வருமானங்கள் வரவில்லை என்றால் தயாரிப்பாளரின் கடனுக்கான வட்டி குட்டி போடும். இதைத் தவிர்ப்பதற்குத் தயாரிப்பாளர் ஒருவர் சொன்ன வழி இது, ‘வங்கிகளைப் போன்ற கட்டமைப்போடு, பைனான்ஸி யர்கள் இயங்கவேண்டும். அது முறையற்ற கணக்குவழக்காக இல்லாமல், வெளிப்படைத் தன்மையோடு இருக்க வேண்டும். முக்கியமாக, சினிமாவில் புழங்கும் பண விவகாரங்களை அரசாங்கம் கண்காணிக்க வேண்டும்!’ என்கிறார். ஆனால், இதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. ‘சினிமாவில் புழங்குவது அரசியல்வாதிகளின் பணமும் கூட!’ என்பதுதான் அது.

கந்துவட்டிக்கு அடுத்து தயாரிப்பாளர்களின் இப்போதைய தலையாய பிரச்னை கியூப், யு.எஃப்.ஓ நிறுவனங்கள் வசூலிக்கும் கட்டணங்கள். ‘தற்போது டிஜிட்டல் முறையில் திரையரங்குகளில் திரைப் படங்களைத் திரையிட்டுக் கொண்டிருக்கின்றன கியூப், யு.எஃப்.ஓ மற்றும் இதர நிறுவனங்கள். இவற்றில் பெரும்பாலான திரையரங்கு களைக் கைவசம் வைத்திருக்கும் கியூப் நிறுவனத்துக்கு, திரையிடல் (Virtual Projection Fees) கட்டணமான ரூ.22,500 என்ற தொகையைக் கொடுக்க முடியாது, பிராஸஸிங் ஃபீஸ் மட்டுமே கொடுக்க முடியும் என்கிறார்கள்,  தயாரிப்பாளர்கள். ‘இந்தத் தொகையை வைத்து தான், திரையரங்குகளுக்கான புரொஜெக்டர் உள்ளிட்ட வசதிகளைச் செய்து கொடுக்கி றோம். எனவே இதை ரத்து செய்ய முடியாது” என்கிறார், கியூப் நிறுவனத்தின் இயக்குநர் ஜெயேந்திரா. தயாரிப் பாளர்களின் முதல்கட்டப் போராட்டத் திற்குப் பிறகு, கியூப் கட்டணத்தை இதுவரை 14,000 ரூபாயாகக் குறைத் திருக்கிறார்கள். ஆனாலும், முற்றிலுமாக இந்தக் கட்டணத்தை நீக்கவேண்டும் என்று போராடுகிறார்கள் தயாரிப்பாளர்கள்.

p8c_1520922251.jpg

தயாரிப்பாளர்கள் அறிவித்திருக்கும் ஸ்டிரைக் அறிவிப்போடு, திரையரங்க உரிமையாளர்களும் ஸ்டிரைக் அறிவித்திருக்கிறார்கள். டிக்கெட் விலை ரூ.100-க்குள் இருந்தால், 18% ஜி.எஸ்.டி மற்றும் 8% உள்ளாட்சி அமைப்பின் கேளிக்கை வரி. ரூ.100-க்கு அதிகமாக இருந்தால், 28% ஜி.எஸ்.டி மற்றும் 8% கேளிக்கை வரி. ஜி.எஸ்.டி வரியை ஏற்றுக்கொள்ளும் திரையரங்க உரிமையாளர்கள், உள்ளாட்சி அமைப்பு வரியான எட்டு சதவிகிதத்தை நீக்கச் சொல்லிப் போராடுகிறார்கள். மேலும் ‘இருக்கைகளைக் குறைக்க அனுமதி வேண்டும்’, ‘லைசென்ஸ் புதுப்பிக்கும் காலஅவகாசத்தை ஒரு வருடத்திலிருந்து மூன்று வருடங்களாக மாற்ற வேண்டும்’, ‘தியேட்டர் பராமரிப்புக் கட்டணத்தை உயர்த்தித் தரவேண்டும்’ எனப் பல்வேறு கோரிக்கைகளை முன்வைக் கிறார்கள். ‘‘ஜி.எஸ்.டி-யை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், கேளிக்கை வரியையும் செலுத்தவேண்டும் என்பது கூடுதல் சுமை” என்கிறார், திரையரங்க உரிமையாளர்கள் சங்கச் செயலாளர் பன்னீர்செல்வம்.

ஆனால், வேறொரு கோணத்தில் திரையரங்க உரிமையாளர்கள்மீது குற்றம் சாட்டுகிறார் தயாரிப்பாளர் சங்கப் பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு. “தியேட்டர்கள் குறைந்த பட்சக் கட்டணம், அதிகபட்சக் கட்டணம் என்று இரண்டே வகைகளில் டிக்கெட் விற்பதால், 30 ரூபாய், 50 ரூபாய்க்குப் படம் பார்த்த ரசிகர்களையெல்லாம் நாம இழந்துட்டு நிற்கிறோம். தியேட்டருக்கு வரும் பார்வை யாளர்கள் எண்ணிக்கை குறைந்தால், டிக்கெட் விலையை ஏற்றிச் சரிகட்டிடலாம் என்று நினைக்க ஆரம்பித்து விட்டார்கள். அதுவே பெரும் பின்னடைவைக் கொடுத் திருக்கிறது. ஆன்லைன் டிக்கெட் புக்கிங்கிற்கான சேவைக் கட்டணம் தனிக்கதை. ஐந்து ரயில் டிக்கெட்களை புக் பண்றதுக்கே, ஒரு சர்வீஸ் சார்ஜ்தான். ஆனா, ஒவ்வொரு சினிமா டிக்கெட்டிற்கும் ஒரு சர்வீஸ் சார்ஜ் வசூலிப்பது எந்த விதத்துல நியாயம்னு புரியலை. 2017-ஆம் ஆண்டு FICCI அறிக்கைப்படி, ஆந்திர சினிமாவின் வருமானம் 24% உயர்ந்திருக்கு. ஆனால், தமிழ்சினிமாவின் வருமானம் 5% சரிஞ்சிருக்கு. சென்ற ஆண்டு பல தரமான படங்கள் வெளியானாலும், தமிழ் சினிமாவின் நிலை இதுதான்” என்கிறார்.

p8d_1520922269.jpg

ஒரு பெரிய நடிகரின் படம் தோல்வியடைந்தால், அதற்குப் பதிலாக அதே தயாரிப்பாளருக்கு ஒரு படம் நடித்துக்கொடுப்பது எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்திலிருந்து பின்பற்றப்பட்ட நடைமுறை. அதை, இப்போதைய நடிகர்கள் பின்பற்றுவதில்லை என்பதும் தயாரிப்பாளர்களின் மனக்குறை. அதிகரித்துக்கொண்டே போகும் நடிகர்களின் சம்பளத்தைப் பலரும் சுட்டிக்காட்டினால், ‘ஒரு தயாரிப்பாளர் ஒரு நடிகரைக் குறிப்பிட்ட சம்பளத்தில் ஒப்பந்தம் செய்தால், இன்னொரு தயாரிப்பாளர் அதே நடிகரைக் கூடுதல் சம்பளத்துடன் ஒப்பந்தம் செய்கிறார். நடிகர்கள் சம்பள உயர்வுக்குத் தயாரிப்பாளர்களே காரணம்’ எனத் திரைத் துறையினரே சொல்கிறார்கள்.

p8f_1520922320.jpg

கியூப், யு.எஃப்.ஓ போன்ற நிறுவனங்களுக்கும் ஆப்பு வைக்கும் நிறுவனங்கள் வரப்போகின்றன என்று சுட்டிக்காட்டுகிறார் இசையமைப்பாளர் சாம் டி ராஜ். ‘நெட்ஃபிலிக்ஸ்’ நிறுவனத்தின் ஆலோசகராக இருக்கும் அவரிடம் பேசினோம்.

p8e_1520922286.jpg

“2022-ல அமேசானும், நெட்ஃபிலிக்ஸ் நிறுவனங்களும் ‘ஸ்கிரீனிங்’ பார்ட்னரா தமிழ் சினிமாவுக்குள்ளே வந்திடு வாங்கனு நினைச்சேன். ஆனா, நடக்குற சம்பவங்களை யெல்லாம் பார்த்தா, 2020-லேயே இது நடக்கும்னு நினைக்கிறேன். நெட்ஃபிலிக்ஸ், அமேசான் மாதிரியான நிறுவனங்கள் நேரடியாகவே ஒரு படத்தை ரிலீஸுக்கு வாங்கி, தியேட்டர்ல போடுவாங்க, ஏற்கெனவே பெங்களூரில் மினி சினிமா ஹால் மூலமா, இந்த நிறுவனங்கள் ஸ்கிரீனிங் பண்ணிக்கிட்டிருக்காங்க. சென்னையில் அவங்க காலடி எடுத்து வைப்பதற்கான காலமும் வரத்தான் போகுது. கியூப் நிறுவனங்கள் ஸ்கிரீனிங் பண்றது, 2K குவாலிட்டி. ஆனால் அமேசான், நெட்ஃபிலிக்ஸ் எல்லாம் 4K குவாலிட்டியில படம் காட்டுறாங்க. மேலும்  புரொஜெக்டரே தேவையில்லை. எல்.இ.டி சுவர் இருந்தாலே போதும். எதிர்கால சினிமா இப்படித்தான் இருக்கும். இது நடந்தா தியேட்டர் உரிமையாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் இடையில் பிரச்னைகள் வராது. உண்மையைச் சொல்லப்போனால் விநியோகஸ்தர்களோட தேவையே இருக்காது” என்கிறார், சாம் டி ராஜ்.

p8f_1520922303.jpg

தமிழ் சினிமாவின் பிரதான பிரச்னைகளுக்கான தீர்வுகளாகத் திரையுலகினர் சிலர் முன்வைக்கும் முடிவுகள் இவை...

* டிஜிட்டல் தொழில்நுட்பம் வந்தபிறகு, ஒரு திரைப்படத்தைத் தமிழகம் முழுவதும் நூற்றுக் கணக்கான தியேட்டர்களில் வெளியிடுகிறார்கள். சிறுபட்ஜெட் படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பதில் பிரச்னை இருக்கிறது. இதை மாற்றி, ‘சிறு படமோ, பெரிய படமோ... குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தியேட்டர்களே ஒவ்வொரு படத்திற்கும் ஒதுக்கப்படும்’ என்ற விதிமுறையைக் கொண்டுவர வேண்டும்.

* ஒரு திரைப்படம் உருவாகும்போதே, தோராயமான ரிலீஸ் தேதியைப் பதிவு செய்யலாம். ஏனெனில், ஒரேநேரத்தில் ஆறேழு திரைப்படங்கள் முட்டி மோதுவதைத் தடுக்க முறையான ஒரு வழி கிடைக்கும்.

* திரையரங்குகளின் மூலம் கிடைக்கும் வருமானத்தை மட்டுமே நம்பிக்கொண்டி ருக்காமல், நெட்ஃபிலிக்ஸ், அமேசான் மாதிரியான இணையதளங்களில் நேரடியாகப் படங்களை வெளியிட்டு வருமானம் பெறலாம். ஒரு சினிமாவை உலகின் அனைத்து மொழிகளிலும் சப்-டைட்டிலிங் கொடுத்து வெளியிடும் முயற்சியை எடுக்கலாம். மும்பை போன்ற முக்கிய சினிமா நகரங்களில் இதற்காகவே சில ஏஜென்ஸிகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

* தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்துத் திரையரங்குகளையும் ஒரு குடையின்கீழ் இணைத்து, டிக்கெட் விற்பனையை டிராக் செய்யலாம். சில மல்டிபிளெக்ஸ் திரையரங்குகளில் டிராக் செய்யும் வசதி இருக்கிறது என்றாலும், முழுமையாக இல்லை. ஏனெனில், பெரிய தயாரிப்பாளர்களிடம் நியாயமாக நடந்து கொள்ளும் திரையரங்க உரிமையாளர்கள், புதிய தயாரிப்பாளர்களுக்கு நியாயமான டிக்கெட் கணக்குகளைச் சமர்ப்பிப் பதில்லை என்ற குற்றச் சாட்டைச் சில தயாரிப்பாளர்கள் முன் வைக்கிறார்கள். எனவே இந்த நடைமுறையை அமல்படுத்தினால் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும்.

* தியேட்டர் டிக்கெட்டிற்கு சர்வீஸ் சார்ஜ் வசூலிக்கும் நடைமுறையில் இருக்கும் சிக்கலைத் தடுக்க, தயாரிப் பாளர்கள் சங்கமே டிக்கெட் புக்கிங்கிற்கான இணையதளம் ஒன்றைத் தொடங்கலாம்.
தீர்வுகளை நடைமுறைப்படுத்தி, திரையுலகம் உயிர்பெற வேண்டும்.


மாற்றுவழி ரெடி!

“கியூப் பிரச்னையைப் பொறுத்தவரை, அவர்கள் எங்களிடம் சமாதானமாக வரத்தான் வேண்டும். இல்லையெனில், இந்த நிறுவனங்களுக்கான மாற்று வழியைத் தேடி வைத்திருக்கிறார்கள், தயாரிப்பாளர்கள். இதற்குத் திரையரங்க உரிமையாளர்களும் முழு ஒத்துழைப்பு கொடுப்பார்கள். தவிர, நீண்டநாள் இந்தப் பிரச்னை நீடித்தால், திரைப்படத் தொழிலாளர்கள் பாதிக்கப் படுவார்கள் என்பதால், சீக்கிரமே இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்!”

- இயக்குநர்கள் சங்கத் தலைவர், விக்ரமன்.


டிக்கெட் விலையில் மாற்றம் தேவை!

“திரைத்துறை நன்றாக இருந்தால்தான், தொழிலாளர்கள் நன்றாக இருப்பார்கள். தொழிலாளர்கள் பலருக்கும் சம்பளம் பெற்றுக்கொடுப்பதே இப்போது கஷ்டமான வேலையாக இருக்கிறது. பெரிய படங்களுக்கான அதே டிக்கெட் விலையைச் சிறுபட்ஜெட் படங்களுக்கும் வைக்கக் கூடாது, தியேட்டர் பார்க்கிங் கட்டணத்தை மணிக்கணக்கில் வசூலிக்கக் கூடாது, அரசு நிர்ணயித்த கட்டணத்தையே வசூலிக்க வேண்டும், கேண்டீன் கட்டணங்கள் நியாயமான விலையில் இருக்கவேண்டும் எனப் பல்வேறு விஷயங்களைத் திரைத்துறையினர் விவாதித்துக்கொண்டிருக்கிறோம்.

இந்த ஸ்ட்ரைக்கால் தொழிலாளர்களுக்கான வருமானம் பாதிக்கப்பட்டாலும், எதிர்கால நன்மையைக் கருதி, தயாரிப்பாளர்களின் முடிவை ஆதரிக்கிறோம்!”

- ஃபெப்சி அமைப்பின் தலைவர், ஆர்.கே.செல்வமணி.


கட்டணம் குறையும் காலம் வரும்!

“சென்ற வருடம் வெளியான 190-க்கும் அதிகமான படங்களில் 112 படங்கள் சராசரியாக 50 திரையரங்குகளில் வெளியாகின. அவற்றைத் திரையிடுவதற்கு கியூப் நிறுவனத்திற்குக் கட்டிய வி.பி.எஃப் கட்டணம், ஒரு திரையரங்கிற்கு ஒரு படத்திற்கு ஐந்தாயிரம் ரூபாய்.  200 முதல் 400 திரையரங்குகளில் பெரிய அளவில் வெளியிடப்பட்ட 26 படங்களுக்கு 14,000 முதல் 16,000 ரூபாய் வரை இந்தக் கட்டணம் செலுத்தியிருக்கிறார்கள்.  இரண்டிற்கும் இடைப்பட்ட அளவில் அதாவது, 50 முதல் 200 திரையரங்குகளில் வெளியான சில படங்களுக்கு 9,000 முதல் 10,000 ரூபாய் வரை செலுத்தியிருக்கிறார்கள். பத்து வருடங்களுக்கு முன்னர் எத்தகைய வெளியீடாய் இருந்தாலும் ஒரு திரையரங்கிற்கு 17,000 ரூபாய் வி.பி.எஃப் கட்டணமாக இருந்தது. இன்று தொழில்நுட்ப வள்ர்ச்சியால் ஒரு படத்தின் வெளியீட்டையும் ஓட்டத்தையும் பொறுத்து 5,000 முதல் 16,000 வரை கட்டணம் நிர்ணயிக்கப்படும் நிலைக்கு வந்துள்ளது. 2006-லிருந்து இருக்கும் டிஜிட்டல் தொழில்நுட்பம் 2011-க்குப் பிறகுதான் தமிழகத்தில் முழுமை பெற்றுள்ளது. அதிலும் குறிப்பாக, தற்போதுதான் சர்வதேச அளவில் பயன்படுத்தும் 2K புரொஜெக்‌ஷன் தொழில்நுட்பத்திற்கு மாறிக்கொண்டிருக்கிறோம். இது முழுமையடையும்போது, இந்தக் கட்டணங்கள் குறைவதற்கான காலமும் கனியும்!”

கியூப் நிறுவனத்தின் துணைப் பொது மேலாளர், சதீஷ் துளசி.

https://www.vikatan.com/anandavikatan/2018-mar-21/cinema-news/139286-kollywood-in-big-trouble.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.