Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திவாகரன் தனிக்கட்சி! - பின்னணியில் எடப்பாடி

Featured Replies

திவாகரன் தனிக்கட்சி! - பின்னணியில் எடப்பாடி

 
 

 

‘‘நான் எவ்வளவுதான் அமைதியாகச் சென் றாலும், என்னையும், என் மகனையும் டி.டி.வி.தினகரன் ஒதுக்கியே வைக்கிறார். மரியாதை இல்லாத இடத்தில் நாம் இருந்து என்ன செய்ய முடியும்? இப்போதும் என்னிடம் எட்டு அமைச்சர்கள் தொடர்பில் இருக்கிறார்கள். நாம் நமக்கான வழியைப் பார்த்துக்கொள்ள வேண்டியதுதான்’’ என மன்னார் குடியில் தனக்கு நெருக்கமான ஆதரவாளர்கள் மத்தியில் கர்ஜனை செய்திருக்கிறார் திவாகரன். விரைவில் தனிக்கட்சி ஆரம்பிக்கும் மனநிலையில் திவாகரன் இருப்பதாக, அவருக்கு நெருக்கமானவர்கள் கிசுகிசுக்கிறார்கள். இதன் பின்னணி யில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாகச் சொல்லப்படுவதால், பரபரக்கத் தொடங்கியுள்ளது மன்னார்குடி வட்டாரம்.

ஜெயலலிதா இருந்தபோதே, ‘சென்னையும் மன்னையும் ஒன்றுதான்’ என்கிற அளவுக்கு பவர் சென்டராக வலம் வந்தவர் சசிகலாவின் தம்பி திவாகரன். ஜெ. மறைவுக்குப் பிறகு தான் சிறை செல்ல நேர்ந்தபோது, கட்சியின் அதிகாரத்தை தினகரனிடம் கொடுத்தார் சசிகலா. அப்போது தொடங்கியது, தினகரனுக்கும் திவாகரனுக்குமான அதிகார மோதல். இந்த மோதலில், சசிகலா குடும்பத்திடமிருந்து ஆட்சி அதிகாரம் பறிபோனது. ஆதரவாளர்கள் சிலர், ‘‘நீங்கள் மோதிக்கொள்வதால் இழப்பு எல்லோருக்கும்தான்’’ என்று சொல்லி, இருவரையும் இணைக்க முயன்றனர். டாக்டர் வெங்கடேஷின் அம்மா சந்தானலெட்சுமி மறைந்த நேரத்தில், மரண வீட்டில் சமாதானம் பேசி இருவரையும் ஒன்றாக போஸ் கொடுக்க வைத்தனர்.

p46a_1524578090.jpg

அதையடுத்து அமைதியான திவாகரன், தன் மகன் ஜெயானந்துக்குக் கட்சியில் மாநில அளவில் முக்கியப் பொறுப்பு கொடுக்க வேண்டும் என்று தினகரனிடம் கோரிக்கை வைத்தார். தினகரன் அதை ஏற்காமல், ‘‘கட்சியை நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் எனக்குப் பக்கபலமாக பின்னால் இருந்தால் மட்டும் போதும்’’ எனத் தடைபோட்டார். அதிகபட்சமாக திவாகரன் குடும்பத்துக்கு தினகரன் செய்தது, மேலூரில் நடத்திய முதல் கூட்டத்தின்போது மேடையில் ஜெயானந்தை உட்கார வைத்ததுதான்!

கட்சி பொறுப்பு கிடைக்காத கடுப்பில் இருந்த ஜெயானந்த், ‘போஸ் மக்கள் பணியகம்’ என்ற அமைப்பைத் தொடங்கி மாவட்டம்தோறும் நிர்வாகிகளை நியமித்து, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தி தனி ஆவர்த்தனம் செய்ய ஆரம்பித்தார். திவாகரனும் தன் மகனுக்கு மகுடம் சூட்டும் விழாவாக மன்னார் குடியில் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழாவை நடத்தினார். இதனால் இருவர்மீதும் தினகரனுக்குக் கோபம் அதிகமானது.

அந்தச் சூழலில் தான், தன் கணவர் நடராசன் இறுதிச் சடங்குக்காக பரோலில் தஞ்சாவூர் வந்தார் சசிகலா. அப்போது சசிகலா முன்னிலையிலேயே இருவருக்கும் மோதல் வெடித்தது. ‘‘நான் இந்த இயக்கத்தின் வெற்றிக்காகவும் உழைத்தவன். ஆனால், என்னிடம் எதையுமே ஆலோசிப்பது இல்லை; மதிப்பதும் இல்லை. ஒதுங்கியே இருந்து எல்லாவற்றையும் செய்தேன். இப்போது ஒதுக்கப்பட்டுக் கிடக்கிறேன்’’ என்று திவாகரன் வெடித்தார்.

அத்துடன் ஒரு புகார்ப் பட்டியலையும் வாசித்திருக்கிறார் திவாகரன். ‘‘சேலத்திலிருந்து மாற்றுக் கட்சியைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர் ஒருவர் தன் ஆதரவாளர்களுடன் நம் கட்சியில் இணைவதற்காக என்னை அணுகினார். நானும் அவரை தினகரனிடம் அனுப்பி வைத்தேன். ஆனால், ‘உங்க பகுதியில மாவட்டச் செயலாளர் இருக்கார். அவரை அணுகாமல் ஏன் திவாகரனைப் போய்ப் பார்த்தீங்க’ என்று தினகரன் அந்தப் பிரமுகரிடம் கேட்டிருக்கிறார். நான் அனுப்பினேன் என்ற ஒரே காரணத்துக்காக பல வகையில் இழுத்த டித்தனர். இப்படிச் செயல்பட்டால், நாம் இழந்ததை எப்படி மீட்பது? மேலும், கட்சி நிகழ்ச்சி, லெட்டர் பேடு போன்றவற்றில் உன் போட்டோவைக்கூட சரியா பயன்படுத்துறது இல்லை. இவற்றுக்கெல்லாம் என்னிடம் ஆதாரம் இருக்கிறது’’ என்று சசிகலாவிடம் தினகரன் குறித்து சொல்லியிருக்கிறார் திவாகரன். 

தினகரன், ‘‘நான்தான் கட்சியை வழிநடத்துகிறேன். திவாகரன் மீடியாவிடம் எதையாவது பேசிவிடுகிறார். ஜெயானந்த் தனியாக ஓர் அமைப்பைத் தொடங்கி நடத்துகிறார். இவையெல்லாம் நம் ஆதரவாளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறது. எனக்கு உதவியாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை, இவர்கள் இடையூறு செய்யாமல் இருந்தால் போதும். மற்றதை நான் பார்த்துக்கொள்வேன்’’ என்று சசிகலாவிடம் சொன்னார்.

சசிகலா கஷ்டப்பட்டு இருவருக்கும் சமாதானம் செய்து வைத்தார். தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடராசன் படத்திறப்பு விழா உலகத் தமிழர் பேரமைப்பு சார்பில் கடந்த வாரம் நடந்தது. பழ.நெடுமாறன், வைகோ, தினகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவைக் காரணம் காட்டி திவாகரன் அதில் கலந்துகொள்ளவில்லை. படத்திறப்பு விழாவில் பேசிய பிரமுகர் ஒருவர், ‘‘சசிகலா குடும்பத்தில் யாரும் எதற்காகவும் சண்டை போட்டுக்கொள்ளக் கூடாது. அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றே நடராசன் விரும்பினார். சசிகலாவுக்கு நீங்கள் செய்யும் கைம்மாறும் இதுதான்’’ என்றார். ‘தினகரனுக்கும் திவாகரனுக்கும் நடக்கும் மோதலை மனதில்வைத்தே அவர் இப்படிப் பேசினார்’ என்கிறார்கள்.

சசிகலாவின் சமாதானப் பேச்சு சில நாள்கள்கூட நீடிக்காமல், இப்போது மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில்தான், மன்னார்குடி மன்னை நாராயணசாமி நகரில் உள்ள தன் இல்லத்தில் ஆதரவாளர்களுடன் திவாகரன் ஆலோசனை செய்திருக்கிறார்

அப்போது, ‘‘தினகரனை அதிகாரத்துக்குக் கொண்டு வந்ததால்தான், ஆளும்தரப்புக்கு நம்மீது கோபம். இப்போதும் சசிகலாவை அவர்கள் ஏற்கத் தயாராகத்தான் இருக்கிறார்கள். மனைவி அனுராதா, மைத்துனர் டாக்டர் வெங்கடேஷ் சொல்வதைத்தான் தினகரன் கேட்கிறார். இதனால், நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். நாஞ்சில் சம்பத் வெளியே சென்றதற்கு இவர்களின் செயல்பாடுகள் தான் காரணம். இப்போது, தங்க தமிழ்ச்செல்வனும் தினகரனின் செயல்பாடுகளால் கடுமையான விரக்தியில் இருக்கிறார். ‘நீங்கள் எந்த நிலையிலும் வெளியே சென்று விடக்கூடாது’ என்று சசிகலா சத்தியம் வாங்கியிருப்பதால்தான், தங்க தமிழ்ச்செல்வன் கட்சியில் நீடிக்கிறார். இப்போதே இப்படியென்றால், 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பு வந்த பிறகு என்னவாகும் என்றே தெரியாது. அதனால், நமக்கு ஆக வேண்டியதை நாம் பார்க்கவேண்டும். ஆளும்தரப்பிலிருந்து முக்கியஸ்தர்கள் இருவர் என்னிடம் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள்’’ என ஆதரவாளர்களிடம் சொல்லியிருக்கிறார் திவாகரன். ‘அவரிடமிருந்து அறிவிப்பு விரைவில் வெளிவரும்’ என்கிறார்கள் உள்விவரங்கள் அறிந்தவர்கள்.

தினகரனுக்கு நெருக்கமானவர்களிடம் பேசினோம். ‘‘தினகரன் பொறுப்பேற்ற பிறகுதான், குடும்பத்தின்மீது இருந்த அவப்பெயரையெல்லாம் துடைத்து, கட்சியை வளர்த்திருக்கிறார். நிர்வாகிகள் அனைவரும் தினகரன் பக்கம்தான் இருக்கிறார்கள். அவருக்கு அரசியலில் மிகப்பெரிய எதிர்காலம் இருப்பதாக பல கட்சித் தலைவர்கள் பேசிவருகிறார்கள். இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஆளும்தரப்பினர், சசிகலா குடும்பத்திலிருந்து யாரையாவது பிரித்து அவர்கள் பக்கம் இழுக்க நினைத்தனர். அதன்மூலம் தினகரனை முடக்கும் ஆபரேஷனைத் திட்ட மிட்டனர். திவாகரனுக்கு நெருக்கமான அமைச்சர் ஒருவர் மூலம் காய்களை நகர்த்தினார் எடப்பாடி பழனிசாமி. அவர்கள் சொல்கிறபடியே திவாகரன் செயல்படுகிறார். யார் என்ன செய்தாலும் தினகரனை யாராலும் வீழ்த்த முடியாது’’ என்றனர் அவர்கள்.

இந்நிலையில், தினகரன் பக்கம் இருக்கும் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-வான வெற்றிவேல், திவாகரனையும் அவரின் மகன் ஜெயானந்தையும் வெளிப்படையாகக் கண்டித்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டார். ‘‘கடந்த ஆண்டு மறைந்த மகாதேவன் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டு துக்கம் விசாரித்த சில அமைச்சர்களையும் சட்டமன்ற உறுப்பினர்களையும், மூளைச்சலவை செய்து, அவர்களை நிரந்தரமாக எடப்பாடி அணியில் இருக்குமாறு பார்த்துக்கொண்டது யார் என்பதும் எங்களுக்குத் தெரியும்’ என வெற்றிவேல் அனல் கிளப்பியுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அ.தி.மு.க சார்பில் டெல்டா மாவட்டங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்தப் படுகின்றன. ஏப்ரல் 28-ம் தேதி திருவாரூரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி கலந்து கொள்கிறார். ‘‘அப்போது சில பேச்சுகள் உறுதி செய்யப்படும். அதன்பிறகு திவாகரன் களத்தில் இறங்குவார்’’ என்கிறார்கள் உள்விவரங்களை அறிந்தவர்கள்.

 - கே.குணசீலன்
படங்கள்: ம.அரவிந்த்


p46_1524578059.jpg

‘சீண்டினால் அரசியல்தான்!’

தி
வாகரனின் மகன் ஜெயானந்த் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியிருக்கும் இரண்டு பதிவுகள் பரபரப்பைக் கிளப்பின. ஏப்ரல் 22-ம் தேதி, ‘மாபெரும் தவறுகளைப் பொறுத்துக்கொண்டிருக்கிறோம். இந்த நிலை நீடித்தால், அந்த அமைப்பு விரைவில் சமைக்கப்படும்’ என ஸ்டேட்டஸ் போட்டார் ஜெயானந்த். அடுத்த ஐந்து மணி நேரத்தில், ‘அரசியலில் செயல்படப் போவதில்லை. யாருக்கும் இடையூறாக இருக்கப்போவதில்லை. என்னைச் சீண்டி அரசியலில் இழுத்துவிட்டால்தான் உண்டு’ என மீண்டும் ஒரு ஸ்டேட்டஸ் போட்டார். ‘அமைப்பு சமைக்கப்படும்’ என ஜெயானந்த் குறிப்பிட்டது, திவாகரனின் தனிக்கட்சி பற்றித்தான் என்கிறார்கள்.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

உறவினர்களாக இருந்தாலும் ஜெயலலிதா வழியில் தூக்கி எறிவேன்- டி.டி.வி.தினகரன்

 

கட்சிக்கு எதிராக கருத்தை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தால் உறவினர்களாக இருந்தாலும் ஜெயலலிதா வழியில் தூக்கி எறிவேன் என்று டி.டி.வி.தினகரன் பேசினார்.#AMMK #Dinakaran #Thivakaran

 
 
உறவினர்களாக இருந்தாலும் ஜெயலலிதா வழியில் தூக்கி எறிவேன்- டி.டி.வி.தினகரன்
 
தஞ்சாவூர்:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தஞ்சையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பேசியதாவது:-

ஜெயலலிதாவின் தொண்டர்கள் 90 சதவீதம் பேர் எங்கள் பக்கம் உள்ளனர். இரட்டை இலை சின்னம் வழக்கில் நிச்சயம் நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கை உள்ளது.

தமிழகத்தில் ஆட்சியில் இருப்பவர்கள் உளவுத்துறையை பயன்படுத்தி பல்வேறு தவறான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பரப்புகிறார்கள். எனவே கட்சிக்கு எதிரான கருத்தை யாராவது பதிவு செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். யாராக இருந்தாலும் மன்னிக்க மாட்டேன். உறவினர்களாக இருந்தாலும் ஜெயலலிதா வழியில் தூக்கி எறிவேன்.

யாருக்கும், எதற்காகவும் பயந்து பின்வாங்க மாட்டேன். என்னை எளிதில் ஏமாற்றி விடலாம் என்று யாரும் நினைத்து விடக்கூடாது. உறவுகளையும், நட்பையும் மதிப்பவன் நான். விட்டில் பூச்சிகளைப்போல் துரோகிகளிடம் மாட்டிக்கொள்ளாதீர்கள். இணையதள பதிவு உண்மையா? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

அடுத்த ஆண்டு நடக்கும் பாராளுமன்ற தேர்தல் முடியும் வரை காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க போவதில்லை. அதே சமயம் காவிரி நீரை பெற்றுத்தரும் வரை எங்கள் போராட்டம் ஓயாது. ஜெயலலிதாவின் ஆட்சியை தொண்டர்கள் ஆதரவோடு விரைவில் அமைப்போம்.

இவ்வாறு அவர் பேசினார். #AMMK #Dinakaran #Thivakaran

https://www.maalaimalar.com/News/TopNews/2018/04/25100430/1158905/TTV-dinakaran-says-Though-relatives-Jayalalitha-will.vpf

  • தொடங்கியவர்

தினகரனுடன் இனிமேல் இணைந்து செயல்பட மாட்டேன்- திவாகரன்

 

அ.ம.மு.க.வை ஒருபோதும் ஏற்க முடியாது எனவும் தினகரனுடன் இனிமேல் இணைந்து செயல்பட போவதில்லை எனவும் திவாகரன் கூறியுள்ளார்.#TTVDinakaran #Thivakaran

 
தினகரனுடன் இனிமேல் இணைந்து செயல்பட மாட்டேன்- திவாகரன்
 
மன்னார்குடி:

சசிகலா சகோதரர் திவாகரன், மன்னார்குடியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வெற்றிவேல் என்பவர் யார்? எங்களை பற்றி குறை சொல்ல அவருக்கு தகுதி இல்லை. காங்கிரசில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் சேர்ந்தவர். மகாதேவன் இறந்த சமயத்தில் எம்.எல்.ஏ.க்களை தினகரன் அணிக்கு வரவேண்டாம் என்று நான் கூறியது உண்மைதான். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை ஒருபோதும் ஏற்க முடியாது.

திராவிடமும், அண்ணாவும் இல்லாத கட்சியை ஒருபோதும் ஏற்க முடியாது. அ.ம.மு.க.வுடன் எங்களுக்கு உடன்பாடு இல்லை. அம்மா அணி என்றே நாங்கள் தொடர்ந்து செயல்படுவோம். தினகரன் நடத்தும் போராட்டங்களில் நாங்கள் பங்கேற்க மாட்டோம். இனிவரும் காலங்களில் தினகரனுடன் இணைந்து செயல்பட வாய்ப்பே இல்லை.
 
201804250958309174_1_8ag9yik4._L_styvpf.jpg


நிர்வாகிகளையும், தொண்டர்களையும் கேட்காமலேயே தினகரன் தனது குடும்ப உறுப்பினர்களுக்காக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தொடங்கியுள்ளார். அ.தி.மு.க என்ற சுவடே இருக்கக்கூடாது என்பதற்காக அ.ம.மு.க.வை தொடங்கியுள்ளார். சசிகலாவை சந்தித்து பொய்யான தகவல்களை கொடுத்து வருகிறார் தினகரன். தேவைப்பட்டால் அம்மா அணி என்ற பெயரிலேயே தேர்தலில் போட்டியிடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.#TTVDinakaran #Thivakaran

https://www.maalaimalar.com/News/District/2018/04/25095831/1158904/Thivakaran-says-I-will-not-work-anymore-with-Dinakaran.vpf

  • தொடங்கியவர்

``சசிகலா குடும்பத்தில் அதிகாரச்சண்டை..!'' வேடிக்கை பார்க்கும் ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ்!

 
 

சசிகலா தினகரன் திவாகரன் எடப்பாடிபழனிசாமி

.தி.மு.க. என்ற மிகப்பெரிய கட்சியை, தான் உயிரோடு இருந்தவரை இரும்புக்கோட்டையாக வைத்திருந்தார் ஜெயலலிதா. அவருடைய மறைவுக்குப் பின்னர், அ.தி.மு.க-வில் சசிகலா குடும்பத்தினரின் ஆதிக்கத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் எதிர்ப்பு தெரிவித்து தனி அணியாகப் பிரிந்தபோது, ஒட்டுமொத்தக் கட்சியையும், ஆட்சி நிர்வாகத்தையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டார் சசிகலா. மன்னார்குடி குடும்பத்தினரும் சசிகலாவின் கண் அசைவுகளுக்கு ஏற்ப அடங்கி ஒடுங்கியிருந்தனர். சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா தற்போது பெங்களூரு சிறையில் இருப்பதால், மன்னார்குடி குடும்பத்தில் அரசியல் அதிகாரச்சண்டை இப்போது ஏற்பட்டுள்ளது. மத்திய பி.ஜே.பி அரசின் மிரட்டலுக்கு பயந்து அ.தி.மு.க-வின் துணைப் பொதுச்செயலாளராக சசிகலாவால் நியமிக்கப்பட்ட டி.டி.வி. தினகரனையும், சசிகலா குடும்பத்தினரையும் ஒதுக்கி வைப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து, பின்னர் ஓ.பி.எஸ். அணியுடன் இணைந்தார்.  இதையடுத்து, தினகரன் தன்னிச்சையாகச் செயல்படுகிறார் என்றும், குடும்ப உறவுகளை ஓரங்கட்டுகிறார் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. அதிலும், சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கும், தினகரனுக்கும் இடையே அதிகாரச் சண்டை ஏற்பட்டுள்ளது. இவர்களின் மோதலை வேடிக்கை பார்க்கிறது ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ் டீம்.

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் குடும்பத்தில் இப்போது மன்னார்குடியில் இருக்கும் சசிகலாவின் சகோதரர் திவாகரனும், அவரது மகன் ஜெய் ஆனந்தும் டி.டி.வி.தினகரனுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு, `போஸ் மக்கள் பணியகம்' என்ற அமைப்பை ஜெய் ஆனந்த் தொடங்கினார். அதன் மூலம் சமூகப் பணிகளில் ஈடுபடப்போவதாக அறிவித்தார். இந்த அமைப்பின் பின்னணியில் இருப்பது ஆளும்கட்சி என்ற சந்தேகம் டி.டி.வி.தினகரன் அணியினருக்கு உண்டு. ஏனெனில், அ.தி.மு.க-வில் இளைஞரணி அல்லது மாணவரணி ஆகியவற்றில் ஏதாவது ஓர் அணியின் தலைமைப் பொறுப்பை தன்னுடைய மகனுக்குத் தர வேண்டும் என்பது ஏற்கெனவே திவாகரனின் விருப்பமாக இருந்தது. ஆனால், `எந்தப் பொறுப்பையும் அளிக்க முடியாது' என்று அந்தக் கோரிக்கையை ஆரம்பகட்டத்திலேயே ஏற்க மறுத்துவிட்டார் டி.டி.வி.தினகரன்.

மன்னார்குடி குடும்பம்

என்றாலும், திவாகரன் தொடர்ந்து குடும்ப உறவுகள் மூலம் தன்னுடைய கோரிக்கையை வலியுறுத்தி வந்துள்ளார். ``1980-களில் ஜெயலலிதாவுக்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு எவ்வளவோ கஷ்டங்களை அனுபவித்தேன். 30 வருடங்களாக, அ.தி.மு.க-வில் ஆட்சி அதிகாரத்தில் குறிப்பிடத்தக்க எந்தப் பதவியையும் நாங்கள் அனுபவிக்கவில்லை. ஜெயலலிதா மரணமடைந்த சமயத்தில்கூட கட்சியில் ஒரு கொந்தளிப்பான நிலை இருந்தபோது, சென்னையிலிருந்து அனைத்துப் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்தேன். சொத்துகள் அனைத்தும் இளவரசி குடும்பத்தைச் சேர்ந்த கிருஷ்ணபிரியா, விவேக், ஷகிலா ஆகியோரின் கட்டுப்பாட்டில் உள்ளன. கட்சி, டி.டி.வி.தினகரன் கட்டுப்பாட்டில் கொடுக்கப்பட்டது. இத்தனை ஆண்டு காலம், ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கும் உழைத்து நாங்கள் பட்ட அரசியல் பழிவாங்குதல்களுக்கு எல்லாம் பலன் என்ன? வேதனைகளும் சோதனைகளும்தான் எங்களுக்குக் கிடைத்தன. எனவே, எங்கள் குடும்பத்துக்குக் கட்சியில் உரிய அங்கீகாரம், மரியாதையைத் தாருங்கள்'' என்று திவாகரன் கேட்டு வந்தார். 

அதன் வெளிப்பாடுதான் இப்போது சசிகலா குடும்பத்தில் மோதலாக வெடித்துள்ளது என்கிறார்கள் மன்னார்குடி குடும்பத்துக்கு நெருக்கமானவர்கள். இதையடுத்தே டி.டி.வி.தினகரனுக்கு எதிராக ஜெய் ஆனந்த் வெளிப்படையாகச் சில தினங்களுக்கு முன், தனது மனக் குமுறலைப் பதிவிட்டார். ``மாபெரும் தவறுகளைப் பொறுத்துக்கொண்டிருக்கிறோம். இந்த நிலை நீடித்தால் அந்த அமைப்பு விரைவில் சமைக்கப்படும்'' என்று முகநூல் பதிவில் ஜெய் ஆனந்த் கூறியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, டி.டி.வி.தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். இந்நிலையில், `போஸ் மக்கள் பணியகம்' லெட்டர் பேடில் ஜெய் ஆனந்த் திவாகரன் என்ற பெயரில் ஓர் அறிக்கை வெளியானது. அதில், ``எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த உறவினரை கரூரிலிருந்து வேலூருக்கு மாற்றி பழிவாங்கும் நடவடிக்கை எடுத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இதுபோன்ற சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

நாங்கள் அரசியலில் உங்களுடன் பயணித்ததால்தானே எங்களைப் பணிய வைக்க, பி.ஜே.பி. அரசு, கடந்த 8 மாத காலமாக வருமான வரித்துறை மூலமாக எங்கள்  குடும்பத்துக்கும் என்னைச் சார்ந்தோர்களுக்கும் மிகுந்த இன்னல்களையும், இம்சைகளையும் கொடுத்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா? என் நண்பர்களில் ஏராளமானோர் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு 8 மாதங்கள் ஆகி விட்டன. தொழில் முடங்கி வாழ்வாதாரத்திற்கே அவர்கள் போராடும் அவலத்தை நீங்கள் அறிவீர்களா? நாங்கள் எந்தப் பதவியையும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், ஒரு சில விஷயங்களில் எங்களுக்கு மாற்றுக் கருத்து இருப்பதை மறுக்கவில்லை. பல மாதங்களாக திரைமறைவில் பல இன்னல்களையும், அவமானங்களையும் சந்தித்து வருகிறோம்'' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அறிக்கை அ.தி.மு.க-வினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

ஜெய் ஆனந்த் சசிகலா விவேக் ஜெயராமன்

இந்தச் சூழ்நிலையில் மன்னார்குடியில் திவாகரன் பேசுகையில், ``அரசியலில் நிரந்தர எதிரியும் கிடையாது; நிரந்தர நண்பர்களும் இல்லை. `அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை' தினகரன் தொடங்கியிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. அவருடன் இணைந்து இனி செயல்பட மாட்டேன். கட்சி உறுப்பினர்களைக் கேட்காமல் தினகரன் குடும்பத்தினர் தன்னிச்சையாகச் செயல்பட்டு அம்மா முன்னேற்றக் கழகத்தை தொடங்கியிருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமியோடு எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை. அவர்களோடு சேர மாட்டேன். அதுபோன்ற தகவல்கள் எல்லாம் வெறும் வதந்தி. அம்மா அணி என்ற பெயரில் நாங்கள் செயல்படுவோம். தேவைப்பட்டால் தேர்தலில் தனித்து நிற்போம். திராவிடமும், அண்ணாவும் இல்லாத கட்சியின் பெயரை ஏற்க முடியாது'' என்றார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில் தஞ்சையில் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் டி.டி.வி.தினகரன் பேசுகையில், ``அ.தி.மு.க தொண்டர்கள் 90 சதவிகிதம் பேர் என்னுடன் உள்ளனர். இரட்டை இலையும் அ.தி.மு.க-வும் நமக்குக் கிடைத்தே தீரும். கட்சிக்கு எதிராக யார் கருத்துச் சொன்னாலும் நடவடிக்கை எடுப்பேன். உறவினராக இருந்தாலும், ஜெயலலிதா வழியில் அவர்களைத் தூக்கி எறிவேன். யாருக்காகவும், எதற்காகவும் பின்வாங்க மாட்டேன். என்னை யாரும் ஏமாற்ற முடியாது. உறவுகளையும், நட்பையும் நான் எப்போதும் மதிப்பவன். விட்டில் பூச்சிகளைப்போல துரோகிகளிடம் மாட்டிக் கொள்ளாதீர்கள்'' என்றார். 

`பி.ஜே.பி-யின் பழிவாங்கும் நடவடிக்கை'; `எடப்பாடி அரசின் நெருக்கடிகள்' என ஜெய் ஆனந்த் தன் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த போதிலும், மன்னார்குடி குடும்பத்திற்குள் தற்போது கிளம்பியிருக்கும் அதிகாரச் சண்டைதான் அனைத்திற்கும் மூலகாரணம் என்று சொல்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். ஏற்கெனவே, தனது கணவர் நடராஜன் இறுதிச் சடங்கிற்காகப் பரோலில் தஞ்சை வந்திருந்த சசிகலாவின் காதுகளுக்கு, தினகரன் - திவாகரன் இடையே நீடிக்கும் குடும்பப் பிரச்னைகள் போயின. அப்போது, இருதரப்பினருக்கும் இடையே சமாதானம் பேசியதுடன், அனைவரும் பிரச்னைகளைக் கிளறாமல் அமைதியாக இருக்கும்படி சொன்னாராம் சசிகலா.

ஆனாலும், அவர்கள் குடும்பப் பிரச்னை இன்னமும் குறைந்தபாடில்லை. அது இப்போது வெளிப்படையாக வெடித்துக் கிளம்பி விட்டது. இந்த விவகாரத்தில் அடுத்து என்ன செய்யலாம் என்று திவாகரன், தனது குடும்பத்தினருடனும் ஆதரவாளர்களுடனும் தீவிர ஆலோசனையில் இருக்கிறார். பெங்களூரு சென்று சசிகலாவைப் பார்க்கவும் அவர் திட்டமிட்டுள்ளார். அதன்பிறகு, தனது அரசியல் நிலைப்பாடு குறித்து அடுத்தகட்ட நடவடிக்கையை அறிவிக்க இருக்கிறார். மன்னார்குடி குடும்பத்தில் வெடித்துள்ள அரசியல் மோதலை அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் டீம்.

https://www.vikatan.com/news/coverstory/123265-power-politics-inside-mannarkudi-family.html

  • தொடங்கியவர்

``உங்களைச் சொல்லி ஒண்ணும் ஆகாது, தூண்டுபவர்களைச் சொல்ல வேண்டும்” ஜெயானந்த் பதிலடி!

 
 

தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் தனது முகநூல் பக்கத்தில், திவாகரன் குறித்த ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அந்தப் பதிவுக்கு தற்போது திவாகரன் மகன் ஜெயானந்த் பதிலளித்துள்ளார்.

ஜெயானந்த் - வெற்றிவேல்

கடந்த சில நாள்களாகவே தினகரனுக்கும் திவாகரனுக்கும் இடையே கருத்து மோதல்கள் நிலவி வருதாக மன்னார்குடியிலிருந்து செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இந்த விவகாரம் தொடர்பாகத் திவாகரன் மகன் ஜெயானந்த் தனது முகநூல் பக்கத்தில் கருத்து ஒன்றைப் பதிவிட்டிருந்தார். 'மாபெரும் தவறுகளைப் பொறுத்துக்கொண்டு இருக்கிறோம். இந்தநிலை நீடித்தால் அந்த அமைப்பு விரைவில் சமைக்கப்படும்' எனக் குறிப்பிட்டிருந்தார். இந்தப் பதிவு தினகரன் ஆதரவாளர்களைக் கடும் கொந்தளிப்பில் ஆழ்த்தியது.

ஜெயானத்தின் கருத்துக்குப் பதிலளிகும் விதமாகத் தினகரன் ஆதரவாளர் வெற்றிவேலும் முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். `அம்மா மறைவுக்குப் பிறகு, கட்சியின் ஆணிவேராகச் சசிகலாவும் கட்சியின் முகமாகத் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனும் செயல்பட்டு வருகிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. மன்னிக்க முடியாத துரோகத்தாலும் மறக்க முடியாத சூழ்ச்சியாலும் சசிகலா சிறைக்குச் சென்ற பிறகு, பல்வேறு அடக்குமுறைகளுக்கும் அத்துமீறல்களுக்கும் மத்தியில் கட்சியை வலிமையோடு முன்னெடுக்கும் பணியில் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் செயலாற்றி வருகிறார். ஆனால், எங்கள் தியாகத்தைக் கொச்சைப்படுத்தும் நோக்கில், எங்கள் உணர்வைக் காயப்படுத்தும் எண்ணத்தில், சசிகலா குடும்பத்தைச் சார்ந்த திவாகரனும் ஜெயானந்த்தும் செயல்படுவது வேதனையளிக்கிறது.

கடந்த ஆண்டு மறைந்த மகாதேவனின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டு துக்கம் விசாரித்த சில அமைச்சர்களையும் சட்டமன்ற உறுப்பினர்களையும் மூளைச்சலவை செய்து, அவர்களை நிரந்தரமாக எடப்பாடி பழனிசாமி அணியில் இருக்குமாறு பார்த்துக்கொண்டது யாரென்பதும் எங்களுக்குத் தெரியும். மதவாத சக்திகளுக்கு ஒருபோதும் அடிபணியக் கூடாது என்கிற காரணத்தினால்தான், சசிகலா நெஞ்சம் நிமிர்த்தி சிறைக்குச் சென்றார். ஆனால், ஏதோ தங்கள் பின்னால்தான் 18 சட்டமன்ற உறுப்பினர்களும் இருக்கிறார்கள் என்பதுபோல் தோற்றத்தை உருவாக்கி, அதே மதவாத சக்திகளுக்கு அடிமையாகிப்போன எடப்பாடி பழனிசாமியோடு தொடர்பு வைத்துக்கொண்டு சசிகலாவை சிறையிலிருந்து மீட்கப்போகிறேன் என்கிற ரீதியில் திவாகரன் செயல்படுவது, உண்மைக்குப் புறம்பானது' எனப் பதிவிட்டிருந்தார். 

தினகரன்

இவரைத் தொடர்ந்து இன்று கும்பகோணத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தினகரன், `திவாகரன், காழ்ப்பு உணர்ச்சி காரணமாக இப்படிச் செயல்படுகிறார். அவர் சில நாள்களாகச் சசிகலாவையும் என்னையும் பற்றி தவறாகப் பேசிவருவதாகப் பலரும் சொன்னார்கள். ஆனால், அது குறித்து எனக்குக் கவலை இல்லை. ஜெயலலிதா இருக்கும் போதிலிருந்து நான் அரசியலில் இருந்துவருகிறேன் என்பதற்காகச் சசிகலா என்னை துணைப் பொதுச் செயலாளராக ஆக்கினார். இதற்காக, சசிகலாமீது உள்ள கோபத்தை என்மீது காட்டிவருகிறார். இதனால் எனக்கு எந்தப் பாதிப்பும் வராது. அரசியல் வேறு குடும்பம் வேறு. தனி நபராக அவர் கட்சியை ஆளப் பார்க்கிறார்’ எனப் பேசியிருந்தார்.

தினகரன் பேச்சுகும் வெற்றிவேலின் பதிவுக்கும் பதிலளிக்கும் விதமாகத் தற்போது திவாகரனின் மகன் ஜெயானந்த் மீண்டும் ஒரு பதிவை தனது முகநூலில் வெளியிட்டுள்ளார். `சசிகலா, திவாகரனுக்கு பிறந்த நாள் முதல் சகோதரர். அவர்கள் ஒன்றாக வளர்ந்தவர்கள். அக்காவைத் திட்டாத தம்பி உலகில் கிடையாது. இதைக்கூடப் பெரிதாக்க வெற்றிவேல் கர்வம் காட்டுவது ஏனோ?

ஜெயானந்த்

அ.தி.மு.க வரலாற்றில் M.N என்று ஓர் அத்தியாயம் உண்டு. அதுபோல குடும்பத்தில் ஒரு சிலருக்கு உண்டு. நான் கேட்கும் கேள்வி... கழகத் தொண்டனாய் செயல் பட்ட ஒரு சிலருக்கு சசிகலா குடும்பம் என்ற பட்டத்தைத் தலையில் கட்டி, குடும்ப அரசியல் என டாடா காட்ட வெற்றிவேல் துடிக்கக் காரணம் என்ன. எங்களைத் திரைமறைவில் அசிங்கப்படுத்தினால் நாங்கள் தவறான வழி எடுப்போம் எனக் கனவு கண்டு சசிகலா குடும்பத்தை சிதைத்துக்கொண்டு இருக்கிறீர்கள். உங்களைச் சொல்லி ஒண்ணும் ஆகாது, தூண்டுபவர்களைச் சொல்ல வேண்டும்.

என் தந்தைக்குப் பதவி ஆசை இருந்திருந்தால் தினகரனுடன் ஒரு வருடத்துக்கு முன்பு சேர்ந்தே இருக்க மாட்டார். வந்தவரை அரவணைக்காமல் இருந்தால்கூட பரவாயில்லை, திட்டமிட்டு புறக்கணித்தால் அவர் எப்படி பொறுத்திருப்பார். சசிகலாமீது உள்ள களங்கத்தை தினகரன்தான் துடைத்தார் எனக் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. சசிகலா மத்திய அரசாங்கத்துக்குப் பணியாமல் சிறை சென்ற அனுதாபம், சசிகலாவின் பக்கபலம் மற்றும் ஜெயலலிதா சசிகலாவை எடுக்கச் சொன்ன வீடியோ. இவை மூன்றும்தான் தினகரனை கரைசேர்த்தன. ஆர்.கே.நகரில் வென்ற துணிச்சலில் வெற்றிவேல் பேசுவது எதிர்காலத்தில் பாதகமாகிவிடும்’ எனப் பதிவிட்டிருந்தார்.

https://www.vikatan.com/news/politics/123292-dhivakaran-son-jeyananth-blame-on-dhinakaran-and-vetrivel.html

  • தொடங்கியவர்

தினகரன் - திவாகரன் இடையில் வெடிக்கும் மோதல்

 

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த தினகரன் மற்றும் திவாகரன் இடையான மோதல் வெளிப்படையாக வெடித்துள்ளது. தினகரன் யதேச்சதிகாரமாக நடந்துகொள்வதாக சசிகலாவின் சகோதரர் திவாகரன் குற்றம் சாட்டியிருக்கிறார்.

டிடிவி தினகரன்

கடந்த சில மாதங்களாகவே உள்ளுக்குள் புகைந்து கொண்டிருந்த இந்த விவகாரம் தற்போது வெளிப்படையாக வெடித்துள்ளது.

வெற்றிவேல் பதிவு

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை நடத்திவரும் டிடிவி தினகரன் அணியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரான வெற்றிவேல் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதியன்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டார்.

அந்தப் பதிவில், "எங்கள் தியாகத்தை கொச்சைப்படுத்தும் நோக்கில், எங்கள் உணர்வை காயப்படுத்தும் எண்ணத்தில், சின்னம்மா குடும்பத்தை சார்ந்த திரு. திவாகரனும்,ஜெய்ஆனந்தும் செயல்படுவது வேதனையளிக்கிறது. கடந்த ஆண்டு மறைந்த திரு.மகாதேவன் அவர்களின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு துக்கம் விசாரித்த சில அமைச்சர்களையும் சட்டமன்ற உறுப்பினர்களையும், மூளைச்சலவை செய்து, அவர்களை நிரந்தரமாக எடப்பாடி அணியில் இருக்குமாறு பார்த்துக்கொண்டது யாரென்பதும் எங்களுக்கு தெரியும்.

ஏதோ தங்கள் பின்னால் தான் 18 சட்டமன்ற உறுப்பினர்களும் இருக்கிறார்கள் என்பதுபோல் தோற்றத்தை உருவாக்கி, அதே மதவாத சக்திகளுக்கு அடிமையாகிப் போன பழனிசாமியோடு தொடர்பு வைத்துக்கொண்டு சின்னம்மாவை சிறையில் இருந்து மீட்கப்போகிறேன் என்கிற ரீதியில் திரு.திவாகரன் செயல்படுவது உண்மைக்கு புறம்பானது" என்று குறிப்பிட்டிருந்தார்.

தினகரன் அணியைச் சேர்ந்த 18 எம்எல்ஏக்களும் திவாகரன் கட்டுப்பாட்டில் இருப்பதைப் போன்ற பொய்ப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.

பதில் அறிக்கை

இதையடுத்து, திவாகரனின் மகனான ஜெயானந்த் தான் நடத்திவரும் போஸ் மக்கள் பணியகத்தின் சார்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். வெற்றிவேலுக்கு பதில் சொல்வதைப் போல அமைந்த அந்த அறிக்கையில், தானும் திவாகரனும் எல்லா மேடைகளிலும் டிடிவி தினகரனே முதல்வர் என்று பேசிவருவதைச் சுட்டிக்காட்டியிருக்கிறார். மேலும், அரசியலில் தினகரனுடன் பயணித்ததால்தான் கடந்த எட்டு மாத காலமாக பா.ஜ.க. வருமான வரித்துறை மூலமாக மிகுந்த இன்னல்களையும் இம்சைகளையும் கொடுத்தார்கள் என்றும் 72 மணி நேரம் தன்னுடைய வீட்டில் தங்கி, அடிக்க வருவதுபோல செய்து, அவர்கள் விரும்பியதை எழுதி வாக்குமூலம் வாங்க நினைத்தார்கள் என்றும் கூறியிருந்தார்.

தவிர, வெற்றிவேல் வெளியிட்டுள்ள அறிக்கையே அவருடையது அல்ல என்றும் வேறு ஒருவருடையதை அவர் வெளியிட்டுள்ளதாகவும் ஜெயானந்த் குற்றம்சாட்டியிருந்தார்.

வெற்றிவேல்

இதையடுத்து திவாகரனுக்கும் தினகரனுக்கும் இடையில் வெளிப்படையாகவே மோதல் வெடித்தது.

கட்சி தொடங்கியதில் சம்மதமில்லை

மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமையன்று பேசிய திவாகரன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் கட்சியைத் துவங்கியதில் சசிகலா உட்பட யாருக்கும் ஒப்புதல் இல்லை என்று தெரிவித்தார். இது அவருடைய குடும்பத்தினர் மட்டுமே சேர்ந்து எடுத்த முடிவு என்றும் தினகரனின் செயல்பாடுகள் தங்களுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லையென்றும் கூறினார்.

அண்ணா தி.மு.கவின் சுவடே இல்லாமல் கட்சியை நடத்த வேண்டுமென தினகரன் விரும்புவதாகவும் யாரும் எந்தக் கேள்வியும் கேட்கக்கூடாது என எதேச்சதிகார பாணியில் கட்சியை நடத்தவதாகவும் திவாகரன் குற்றம் சாட்டினார்.

தினகரன் இதற்கு முன்பாக ஜெயலலிதா, சசிகலா, ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி கே. பழனிச்சாமி ஆகியோரை ஏமாற்றியவர் என்றும் தற்போது தொண்டர்களை ஏமாற்றிவருவதாகவும் திவாகரன் குற்றம்சாட்டினார்.

சசிகலா மீதான கோபத்தை...

திவாகரனின் சரமாரி குற்றச்சாட்டுகளையடுத்து, தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், "திவாகரன் குடும்பத்தில் மூத்தவர். அதற்கான மரியாதையை அவருக்கு கொடுப்பேன். அதற்காக கட்சி நடவடிக்கைகளில் அவர் தலையிட முடியாது. அவரைவிட மூத்தவர்கள் எல்லாம் குடும்பத்தில் இருக்கிறார்கள். அவர்கள் சொல்வதைக் கேட்டும் கட்சியை நடத்த முடியுமா? சசிகலா மீதான கோபத்தை திவாகரன் என்னிடம் காட்டுகிறார்" என்று தெரிவித்தார்.

மேலும் சசிகலாவை திவாகரன் சிறையில் சென்று பார்ப்பதேயில்லையென்றும் குற்றம்சாட்டிய அவர், குடும்பத்தைவிட தனக்கு கட்சிதான் முக்கியம் என்று தெரிவித்திருக்கிறார்.

இதற்கிடையில் புதன்கிழமையன்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஜெயானந்த் திவாகரன் மேலும் சில கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார். "எனது தந்தைக்கு பதவி ஆசை இருந்திருந்தால் டி.டி.வியுடன் ஒரு வருடத்திற்கு முன்பு சேர்ந்தே இருக்க மாட்டார். வந்தவரை அரவணைக்காமல் இருந்தால் கூட பரவாயில்லை. திட்டமிட்டு புறக்கணித்தால் அவர் எப்படி பொருத்திருப்பார். அவர் என்ன சிறுவனா?" என்றும் "சின்னம்மா மீது உள்ள களங்கத்தை டிடிவி தான் துடைத்தார் என கூறுவதை ஏற்று கொள்ள முடியாது. சின்னம்மா மத்திய அரசாங்கத்திற்கு பணியாமல் சிறை சென்ற அனுதாபம், சின்னம்மாவின் பக்கபலம் மற்றும் அம்மா அவர்கள் சின்னாமாவை எடுக்க சொன்ன வீடியோ- இவை மூன்றும் தான் டிடிவி-யை கரைசேர்த்தன" என்றும் அவர் கூறியிருக்கிறார்.

போஸ் மக்கள் பணியகத்தின் சார்பில் அறிக்கை

குடும்ப அரசியல் என்று பட்டம் கட்டி தங்களை கட்சியிலிருந்து துரத்த வெற்றிவேல் முயற்சிப்பதாகவும் ஜெயானந்த் குற்றம்சாட்டியிருக்கிறார்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வி.கே. சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை செல்லும் தருணத்தில் எடப்பாடி கே. பழனிச்சாமியை முதல்வராக நியமித்ததோடு, டிடிவி தினகரனை கட்சியில் துணைப் பொதுச் செயலாளராகவும் ஆக்கினார்.

ஆனால், இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்கென தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முற்பட்டார் என்ற வழக்கில் கைதுசெய்யப்பட்டு தினகரன் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவரது கட்டுப்பாட்டில் இருந்த கட்சியை முதல்வரான எடப்பாடி பழனிச்சாமி கைப்பற்றினார்.

இதற்குப் பிறகு நடந்த சென்னை ராதாகிருஷ்ணன் நகர் இடைத் தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றிபெற்ற நிலையில் தற்போதும் சுமார் 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தினகரனுக்கு ஆதரவாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

ஆனால், இரட்டை இலையும் கட்சியின் பெயரும் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அணிக்கே சொந்தம் என தேர்தல் ஆணையம் தீர்ப்பளித்துவிட்ட நிலையில், சில மாதங்களுக்கு முன்பாக, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் அமைப்பு ஒன்றை ஆரம்பித்தார் தினகரன்.

இந்த நிலையில்தான், தானும் தன் குடும்பத்தினரும் ஒதுக்கப்படுவதாக திவாகரன் நினைக்க ஆரம்பித்தார். இதையடுத்து அவரது மகன் ஜெயந்த், போஸ் மக்கள் நல பணியகம் என்ற பெயரில் ஒரு அமைப்பை ஆரம்பித்து, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என்ற பெயரில் கூட்டங்களை நடத்த ஆரம்பித்தார். திவாகரனும் மன்னார்குடியில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவைத் தனியாக நடத்தினார்.

சசிகலாபடத்தின் காப்புரிமைKASHIF MASOOD

தினகரன் தரப்பைச் சேர்ந்த 18 சட்டமன்ற உறுப்பினர்களும் தற்போது சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டு, அந்த விவகாரம் தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.

என்ன உறவு?

திவாகரன், வி.கே. சசிகலாவின் சகோதரர். டிடிவி தினகரன் சசிகலாவின் அக்காள் வனிதாமணியின் மூத்த மகன். இவரது சகோதரர் சுதாகரன், ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனாக சிறிதுகாலம் இருந்தார்.

2011 டிசம்பரில் வி.கே. சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்ட சசிகலா குடும்ப உறுப்பினர்கள் 12 பேரை ஜெயலலிதா விலக்கிவைத்ததோடு, அ.தி.மு.கவிலிருந்தும் நீக்கினார். பிறகு, சசிகலாவை மட்டும் தன்னுடன் சேர்த்துக்கொண்டார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, டிடிவி தினகரனையும் அவரது மைத்துனர் வெங்கடேஷையும் கட்சியில் மீண்டும் சேர்த்தார் சசிகலா.

https://www.bbc.com/tamil/india-43899383

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.