Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விக்னேஸ்வரன் என்ன செய்யப் போகின்றார்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விக்னேஸ்வரன் என்ன செய்யப் போகின்றார்?

சி.அ.யோதிலிங்கம் 

10021655-c141-41d5-84b2-4ebd768ce8551.jp

 

மாகாணசபைத் தேர்தல்களை அரசாங்கம் இந்த வருடம் நடாத்துமோ என்னவோ தமிழ் அரசியலில் அதற்கான பரபரப்பு ஆரம்பித்துவிட்டது. தமிழ் தேசியக் கூட்டமைப்பில் தீர்மானம் எடுக்கும் சக்திகளாக உள்ள சம்பந்தனோ, சுமந்திரனோ புலிகளை ஏற்றவர்கள் அல்லர். புலிகள் அழிக்கப்பட்ட போது சுமந்திரன் அதனை இயற்கை நீதி என்றார். இன்று தேர்தல் பயத்தில் தமிழரசுக்கட்சியின் இரண்டாம் மட்டத் தலைவர்கள் புலிகளைத் தலையில் தூக்கத் தொடங்கியுள்ளனர். வடமராட்சியில் இடம்பெற்ற மே தினத்தில் புலிகளின் எழுச்சிப்பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன. முக்கியஸ்தர்கள் பலர் புலிகளின் சிவப்பு, மஞ்சள் சால்வையை அணிந்திருந்தனர். எல்லாவற்றிற்கும் விக்னேஸ்வரன் கொடுத்த அதிர்ச்சி வைத்தியமும், கஜேந்திரகுமாரின் கூட்டமைப்பு எதிர்பார்க்காத வளர்ச்சியுமே காரணம்.

மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் என்ன செய்யப் போகிறார் என்பது இன்னமும் தெளிவாக வெளிப்படுத்தப்படவில்லை. இது விடயத்தில் தமிழ் மக்கள் பேரவையின் முக்கியஸ்தர்களும் குழம்பிப்போய் உள்ளனர். விக்னேஸ்வரன் தனிக்கட்சி அமைப்பாரா? அக்கட்சி யாருடன் கூட்டுச்சேரும் என்பதெல்லாம் மர்மமாக இருக்கின்றது. அவர் தேர்தலில் போட்டியிடுவார் என்பது மட்டும் உறுதி. இந்தியாவில் பல நாட்கள் தங்கியிருந்ததினால் இந்தியா என்ன விடயங்களை அவருக்கு போதித்திருக்கும் என்பதும் மர்மமாக உள்ளது.

இந்தியாவிற்கு இரண்டு பிரச்சனைகள்: ஒன்று தமிழ் மக்களின் மாற்று அரசியல் தலைமை என்பது கஜேந்திரகுமாரிடம் சென்றுவிடக்கூடாது என்பதாகும். கஜேந்திரகுமாரைக் கையாளமுடியாத நபர் என்றே இந்தியா பார்க்கின்றது. நரேந்திரமோடி நேரடியாக வந்தாலும் கூட இந்தியா தமிழ் மக்களின் நலன்களுக்கு எதிராகச் சென்றால் கஜேந்திரகுமார் முகத்திற்கு நேரே எதிர்த்துப் பேசுவார். இவ்வளவிற்கும் அவர் இந்திய நலன்களுக்கு எதிரானவர் அல்லர்.

ஆனால் இந்திய நலன்களுக்காக தமிழ் மக்களின் நலன்களை விலையாகக் கேட்டால் அவர் ஒரு போதும் சம்மதிக்க மாட்டார். சம்மந்தனைப் போல ஒரு எடுபிடியாக என்றைக்கும் அவர் இருக்கப் போவதில்லை. ஆனால் இந்தியாவிற்கு நல்ல நண்பராக இருக்கக் கூடியவர். துரதிஸ்டம் இந்தியா நண்பர்களை விரும்புவதில்லை, எடுபிடிகளைத்தான் விரும்புகின்றது. இந்தியாவின் இந்த நிலைப்பட்டினால் தான் நேபாளம், பூட்டான் மட்டுமல்ல சின்னஞ்சிறிய நாடான மாலைதீவு கூட இந்தியாவை விட்டுத் தூர விலகிச் செல்கின்றது.

மைத்திரி -         ரணில் அரசாங்கத்தின் வீழ்ச்சிப்போக்கு ஆட்சிமாற்றத்தின் மூலகர்த்தாக்களாக இருந்த இந்தியாவையும் அமெரிக்கத் தலைமையிலான மேற்குலகத்தையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இலங்கை தொடர்பான தமது நிகழ்ச்சி நிரல்கள் கண்ணுக்கு முன்னாலேயே உதிர்ந்து போவதை அவற்றினால் சகித்துக் கொள்ள முடியவில்லை. பெரும் தேசியவாதத்தையும், தமிழ் தேசியவாதத்தையும் மேலோட்டமாக கணிப்பிட்ட தவறுதான் இதற்குக் காரணம். இவை இரண்டும் இலங்கைத் தீவில் ஆழமாக வேரூன்றிய மரங்கள் என்பதை அவர்கள் கணிப்பிடத் தவறிவிட்டனர். இந்த மரங்களைப் பிடுங்க நினைத்தவர்கள் தலைகுப்புற விழுந்தது தான் வரலாறு. இன்று ரணிலும், சம்பந்தனும் தலைகுப்புற விழுந்து கொண்டிருக்கின்றனர்.

கஜேந்திரகுமார் தலைமை மீது இந்தியாவிற்குள்ள மற்றோர் பயம் தமிழ் தேசிய மக்கள் முன்னணி மேல்நிலைக்கு வந்தால் புவிசார் அரசியலில் தமிழர்களும் பங்காளிகளாகி விடுவர் என்பது தான். புலிகள் இருக்கும் போது புவிசார் அரசியலில் தமிழர்களும் பங்காளிகளாகியிருந்தனர். தமிழ் மக்கள் விவகாரத்தை விட்டு விட்டு ஒரு சிறிய விடயத்தைக் கூட கையாள முடியாத நிலையில் வல்லரசுகள் இருந்தன. புலிகளை வல்லரசுகள் சேர்ந்து அழித்தமைக்கு பிரதான காரணம் இதுதான். சம்பந்தன் தலைமை புலிகளின் கோரிக்கைக்கு குறைவான கோரிக்கைகளை ஏற்கத் தயாராக இருந்தமை இரண்டாவது காரணம்.

உண்மையில் புவிசார் அரசியலில் தமிழர்களின் கேந்திரப்பலம் சிங்கள தேசத்தை விட அதிகமானது. தமிழகமும் கேந்திர இடத்தில் இருப்பதால் தமிழர்களின் கேந்திரப்பலம் இரட்டிப்பானது. இந்த உண்மை இந்தியாவிற்கும் நன்கு தெரியும். அமெரிக்கா தலைமையிலான மேற்குலகத்திற்கும் நன்கு தெரியும். தற்போது சம்பந்தன் தலைமையை பொக்கற்றுக்குள் வைத்துக்கொண்டு தமிழ் மக்களை புவிசார் அரசியல் மைதானத்திற்கு வெளியே துரத்தியுள்ளது. இதனால் தங்களின் நலன்களை மட்டும் பார்க்கக்கூடிய நிலையை உருவாக்கியுள்ளது. ஜனாதிபதி தேர்தலிலும், நம்பிக்கையில்லாப் பிரேரணை விவகாரத்திலும் இந்தப் பலத்தினை சம்பந்தன் பிரயோகிக்காததிற்கு காரணம் இந்த வல்லரசுகளின் பொக்கற்றுக்குள் இருந்தமைதான்.

இந்தியா விக்னேஸ்வரனையும் கையாள முடியாத நபர் என்றே பார்க்கின்றது ஆனாலும் கஜேந்திரகுமாரை விட கையாளலாம் என நினைக்கின்றது. விக்னேஸ்வரனா, கஜேந்திரகுமாரா என்ற தெரிவில் விக்னேஸ்வரனைத் தேர்ந்தெடுப்பதைத் தவிர மாற்றுத்தெரிவு இந்தியாவிற்கு இல்லை. உள்ளூராட்சிச் சபைத் தேர்தலில் ஆனந்தசங்கரியை முன்னிலைப்படுத்த முனைந்து இந்தியா படுதோல்வி அடைந்திருக்கிறது. தோல்வி மட்டுமல்ல தனது விசுவாசியான சுரேஸ் பிரேமச்சந்திரனையும் அநாதையாக்கியுள்ளது.

10021655-c141-41d5-84b2-4ebd768ce8554.jp

2009ம் ஆண்டு போர் முடிவிற்கு வந்த காலம் தொடக்கம் மாற்றினை  இறுக்கமாக அடையாளப்படுத்தி வந்தவர் கஜேந்திரகுமார் தான். எனவே மாற்று வாக்குகள் அவரது கட்சிக்குள் செல்லும் என்ற அரிச்சுவடி உண்மைகளைக் கூட இந்தியா ஒழுங்காகப் புரிந்து கொள்ளவில்லை. இந்தியா மட்டுமல்ல சுரேஸ் பிரேமச்சந்திரனும் புரிந்து கொள்ளவில்லை. இரண்டு கோடி ஊழல் பற்றி சிவசக்தி ஆனந்தன் சிரமம் எடுத்து பிரச்சாரம் செய்த போதும் இதன் அறுவடையைப் பெற்றுக் கொண்டவர் கஜேந்திரகுமார்தான்.

இந்தியாவிற்குள்ள இரண்டாவது பிரச்சனை தனது விசுவாசிகளான சுரேஸ் பிரேமச்சந்திரன், ஐங்கரநேசன் போன்றவர்களுக்கு பாதுகாப்பான அரசியல் களத்தை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்பது தான். இருவரும் விக்னேஸ்வரனின் கடைக்கண் பார்வைக்காக ஏங்கிக் கிடக்கின்றனர். விக்னேஸ்வரனின் தாழ்வாரத்தில் ஒதுங்குவதைத்தவிர அவர்களுக்கு வேறு தெரிவு இல்லை. கூட்டமைப்பு இணக்க அரசியலை எப்போது தேர்ந்தெடுத்ததோ அன்றே வீழ்ச்சிப் பாதைக்குச் சென்று விட்டது. தமிழரசுக்கட்சியின் இரண்டாம் மட்டத் தலைவர்கள் புலிகளின் அடையாளங்களை தம் மீது பூச முற்பட்டாலும் வீழ்ச்சிப் போக்குத் தவிர்க்க முடியாதது. இதே வீழ்ச்சிப் போக்கு 1965ம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து அரசாங்கத்தை அமைத்த போதும் தமிழரசுக் கட்சி கண்டது. அந்த வீழ்ச்சிப் போக்கு அசைக்க முடியாத தளபதி எனக் கருதப்பட்ட அமிர்தலிங்கத்தைக் கூட 1970 தேர்தலில் வீழ்த்தியது. தமிழர் விடுதலைக் கூட்டணியை உருவாக்கி தமிழீழக் கோரிக்கையை எடுத்திருக்காவிட்டால் 70 களின் ஆரம்பத்திலேயே தமிழரசுக்கட்சி மடிந்திருக்கும். 1983 வரை அது உயிருடன் இருந்திருக்காது.

விக்னேஸ்வரனைப் பொறுத்தவரை தனது இருப்பைப் பாதுகாப்பதற்கும், தனக்கு சார்பாகவுள்ள அனந்தி, ஐங்கரநேசன், அருந்தவபாலன் என்போரின் இருப்பைப் பாதுகாப்பதற்கும் தனிக்கட்சி உருவாகுவது தவிர்க்க முடியாதது. அவர் பின்னர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியுடன் கூட்டுச் சேரலாம். இரண்டு தோணியில் கால் வைத்திருக்கும் சித்தார்த்தன், விக்னேஸ்வரன் கூட்டணியில் இணைவார் என எதிர்பார்க்க முடியாது. சிவகரனின் ஜனநாயகத் தமிழரசு கட்சியும் இக் கூட்டணியில் இணைய முற்படலாம்.

விக்னேஸ்வரனுக்கு சவாலாக இருக்கப் போவது கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் கூட்டணி அமைப்பதுதான். 2009 தொடக்கம் மாற்று என அடையாளப்படுத்தி தற்போது சற்றுப் பலமாக இருக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியை விட்டுவிட்டு விக்னேஸ்வரனால் பிரகாசிக்க முடியாது. கஜேந்திரகுமார் அணியுடன் இணையாவிட்டால் இன்று விக்னேஸ்வரனுடன் இருக்கும் தமிழ் மக்கள் பேரவையைச் சேர்ந்த பலர் கூட அவருடன் இருக்க மாட்டார்கள். தமிழ் சிவில் சமூக அமையம் போன்ற கல்வியாளர்களின் அமைப்புக் கூட ஆதரவாக இருக்க மாட்டாது. ஒப்பீட்டு ரீதியில் வலுவான இளைஞர் அணியைக் கொண்டிருப்பது தமிழ் தேசிய மக்கள் முன்னணியே! அதில் பெரும்பான்மையோர் கொள்கைக்காக முன்னணியில் சேர்ந்த 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களே ஆவர். 'எழுக தமிழ்' வெற்றியில் இவ் இளைஞர்களின் பங்களிப்பு அதிகமாக இருந்தது. விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விவகாரத்திலும் அதிகமாகச் செயற்பட்டவர்கள் இவர்களே! தற்போது உள்ளூராட்சித் தேர்தலைத் தொடர்ந்து வலுவான உள்ளூர் தலைமைத்துவமும் முன்னணிக்குக் கிடைத்துவிட்டது. புலம்பெயர் நாடுகளிலும் வலுவான ஆதரவுத்தளம் முன்னணிக்கு உண்டு.

கஜேந்திரகுமார் தன்னுடைய கட்சியின் நிலைப்பாட்டினை தெளிவாகவே கூறிவிட்டார். விக்னேஸ்வரன் தங்களது கட்சியில் இணைந்தாலும் ஏற்றுக் கொள்வோம். அவர் தனிக்கட்சி அமைத்தாலும் கூட்டுச் சேர தயாராக உள்ளோம் என்றும் கூறியிருக்கின்றார். ஆனால் கொள்கை உறுதிப்பாடு உள்ளவர்களை மட்டும் உங்களோடு இணைத்துக் கொள்ளுங்கள் என்றும் கூறியிருக்கின்றார். இதன் நேரடியான பொருள் விக்னேஸ்வரன் அணியுடன் மட்டும் நாம் கூட்டுச்சேர தயாராக இருக்கின்றோம் என்பதே! சுரேஸ் பிரேமச்சந்திரனோடு, சித்தார்த்தனோடு கூட்டுச் சேர்வதை நாங்கள் விரும்பவில்லை என்பதே! பேராசிரியர் சிற்றம்பலம் இணைந்து கொள்வது கஜேந்திரகுமாருக்கு முரண்பாடாக இல்லை.

சித்தார்த்தனைத் தவிர்த்துவிட்டாலும் சுரேஸ் பிரேமச்சந்திரனோடு கூட்டுச் சேர்வது விக்னேஸ்வரனைப் பொறுத்தவரை தவிர்க்க முடியாதது. இந்தியாவைத் திருப்திப்படுத்தல் என்பதற்கப்பால் தன்னைச் சுற்றிச் சுற்றியே வரும் ஒருவரை புறம் தள்ள அவரால் முடியாது. இதைவிட புதுக்கட்சியை உடனடியாக பதிவு செய்ய முடியாது. ஆனால் இரு கட்சிகளின் கூட்டணியை பதிவு செய்யலாம். இந்த விடயத்திலும் சுரேஸ் பிரேமச்சந்திரனின் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி அவருக்குத் தேவையாக உள்ளது. தற்போது உள்ள சூழலில் கூட்டணி ஒன்று அமைப்பதானால் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியும் அகில இலங்கை தமிழ் காங்கிரசும் சேர்ந்து மட்டுமே அமைக்கலாம். விக்னேஸ்வரன் அக்கூட்டணிக்கு தலைமை தாங்கலாம். சுரேஸ் பிரேமச்சந்திரன் தமிழர் விடுதலைக் கூட்டணி போல முக்கூட்டுத்தலைமையை விரும்பக் கூடும்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி விக்னேஸ்வரனுடன் மட்டும் தான் ஓர் உடன்படிக்கைக்குச் செல்லும். ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியுடன் உடன்படிக்கைக்குப் போகாது. இந்த நெருக்கடியான சூழலில் விக்னேஸ்வரன் தனது அணியுடன் சுரேஸை இணைத்துக் கொண்டு தானும், கஜேந்திரகுமாரும் மட்டும் உடன்படிக்கைக்குச் செல்லலாம். ஐம்பதுக்கு ஐம்பது என்ற வகையில் உடன்படிக்கை செய்து கொள்ளப்படலாம். கஜேந்திரகுமாருக்கு பலர் கூறும் ஆலோசனை, விக்னேஸ்வரன் அணியில் யாரும் இருந்துவிட்டுப் போகட்டும், நீங்கள் அவருடன் மட்டும் உடன்படிக்கைக்குச் செல்லுங்கள் என்பதே!

மறுபக்கத்தில் சம்பந்தன் தலைமையும் விக்னேஸ்வரனுடன் சமரசத்திற்கு செல்லலாம். இச்சமரசம் முதலமைச்சர் பதவியைக் கொடுப்பதாக அமையாது. தேசியப் பட்டியல் மூலமோ அல்லது நேரடி வேட்பாளர் மூலமோ பாராளுமன்ற உறுப்பினர் பதவியை கொடுப்பதாக அமையும். சர்வதேச விவகாரங்களைக் கையாளும் பொறுப்பு தரலாம் என ஆசைகாட்டப்படலாம். முதலமைச்சர் பதவியைக் கொடுப்பது இந்திய-அமெரிக்க நிகழ்ச்சி நிரலைக் குழப்பி விடும் என சம்பந்தன் தலைமை அஞ்சுகின்றது. வெறும் அபிவிருத்தியை மட்டும் பேசும் அமைப்பாக வடமாகாண சபை இருக்க வேண்டும் என்பதே அவர்களது எதிர்பார்ப்பு. என்னதான் எதிர்பார்ப்புக்கள் இருந்தாலும் வடமாகாண சபை ஒரு அரசியல் மேடையாக இருப்பதை எவராலும் தடுக்க முடியாது. வடமாகாண சபை அதிகாரங்களைப் பொறுத்தவரை மிகவும் பலவீனமானது ஆனால் அரசியலைப் பொறுத்தவரை முக்கியத்துவம் வாய்ந்தது.

இந்திய-அமெரிக்க சக்திகளுக்குள்ள கவலை முன்னரே கூறியது போல தமது கண்ணுக்கு முன்னால் தமது நிகழ்ச்சி நிரல் சிதைந்து போவது தான். பெருந்தேசியவாதம் தான் இந்தச் சிதைவுக்கு காரணம். அரை குறை அரசியல் தீர்விற்கு கூட தயாரில்லாத நிலையிலேயே பெரும்தேசியவாதம் உள்ளது. இதன் விளைவை இலண்டனில் இடம்பெற்ற பொதுநலவாய மாநாட்டில் பார்க்க முடிந்தது. அங்கு உலகத் தலைவர்களினால் மைத்திரிக்கு கொடுக்கப்பட்ட முன்னைய கௌரவம் கொடுக்கப்படவில்லை. மைத்திரி விரும்பியபடி இருதரப்பு பேச்சுவார்த்தைகளையும் நடாத்தமுடியவில்லை. அரசாங்கத்தை இந்தியாவும், அமெரிக்காவும் சேலைன் கொடுத்தே காப்பாற்றி வருகிறது. சேலைன் குழாய்களை எடுத்து விட்டால் அன்றே அரசாங்கம் மரணித்துவிடும்.

இந்த இடியப்ப சிக்கல் சூழலில் விக்னேஸ்வரன் என்ன செய்யப்போகின்றார்?

இது தான் தமிழ் அரசியலில் இன்று எழுந்துள்ள மிகப்பெரிய கேள்வி! 

 

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=2&contentid=10021655-c141-41d5-84b2-4ebd768ce855

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.