Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அது... இது... எது?

Featured Replies

 
 
 
 
 
 
 
 
 
அது... இது... எது?
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
E_1525414058.jpeg
 

வங்கியில், குணசுந்தரியை தற்செயலாக பார்த்தார், பரந்தாமன். அவளது அப்பா காலத்திலிருந்தே குடும்ப நண்பர் என்பதால்,''என்னம்மா இந்த பக்கம்...'' என்று உரிமையுடன் விசாரித்தார்.
சொல்லலாமா, வேண்டாமா என்ற தயக்கத்தோடு, அருகில் நின்றிருந்த கணவனை பார்த்தாள், குணசுந்தரி.
''ஒண்ணுமில்ல... பொண்ணுக்கு வரன் அமைஞ்சிருக்கு; மூணு மாசத்துல கல்யாணம். பட்ஜெட் அதிகமாகும்ன்னு தோணுது; அதான் வீட்டை அடமானமா வெச்சு, கடன் வாங்க வந்திருக்கோம். குணசுந்தரி பேர்ல வீடு இருக்கு,'' என்றார், அவளது கணவர், குமார்.
''வீட்ட வெச்சா...'' கவலையும், ஆச்சரியமுமாக கேட்டார் பரந்தாமன்.
''இதிலென்ன தப்பு... ஒரு புரட்டல் தானே... எனக்கு இன்னும் அஞ்சு வருஷம், 'சர்வீஸ்' இருக்கு; நடுவுல லோன் போட்டோ இல்ல ரிட்டயர்மென்ட் செட்டில்மென்ட் பணத்துலயோ ஈசியா மீட்டுடுவேன்,'' நம்பிக்கையோடு சொன்னார், குமார்.
ஏதோ சொல்ல நினைத்த பரந்தாமன், பின், ''நீங்க சொல்றது சரி தான்...'' என்றார்.

சில நாட்களுக்கு பின் -
மெக்கானிக் ஷாப்பில், தன் காரை சர்வீஸ் விட வந்திருந்த குணசுந்தரியின் அண்ணன், குணசேகரனை பார்த்ததும், ''சவுக்கியமா...'' என்றார், பரந்தாமன்.
''ஓ... பரந்தாமன் மாமா... எப்படி இருக்கீங்க?'' என்று விசாரித்தான்.
''நல்லா இருக்கேன்; ஆமா, 'பிசினஸ்' எப்படி போகுது?''
''சூப்பரா போகுது; இப்ப இன்னொரு, 'பிளான்ட்' ஆரம்பிச்சிருக்கேன்; கடவுள் அருளால நல்ல மார்க்கெட் இருக்கு...'' குஷியாக சொன்னான் குணசேகரன்.
''அப்புறம், உன் தங்கச்சி பொண்ணுக்கு மாப்பிள்ளை பாக்கறாங்க போலிருக்கு... குணசுந்தரி சொன்னா...'' என்று பரந்தாமன் சொன்னதும், ''ஆமாம் மாமா... நல்ல இடம்; நல்ல பையன்... இதை பாக்குறதுக்கு தான், அப்பா, அம்மா இல்ல,'' என்றான்.
''ஆமாம்... அப்புறம் ஒரு விஷயம்... எதார்த்தமா கேக்குறேன், தப்பா நினைச்சுக்க மாட்டியே...''
''தாராளமா கேளுங்க...''
''இல்ல... உன் மச்சான் குமாரை, போன வாரம் பேங்க்ல பாத்தேன்; பொண்ணோட கல்யாணத்துக்காக வீட்ட அடமானம் வெச்சு பணம் வாங்க வந்திருந்தார். ஒரு ரொட்டேஷன்னு சொன்னாரு; இது பெரிய விஷயமில்ல தான்... ஆனா, என் மனசுல, நீ, வசதியா இருக்கும்போது, உன் தங்கச்சி ஏன் வீட்டை அடமானம் வைக்கணும்... நீயே பணம் கொடுத்து உதவலாம்; இல்ல, வட்டி இல்லாத கடனாக் கூட கொடுக்கலாமேன்னு தோணிச்சு... அதான்...'' என்று இழுத்தார் பரந்தாமன்.
கொஞ்சம் ஆச்சரியத்துடன் பார்த்தான், குணசேகரன். சில நொடிகள் யோசித்தவன்,''இதான் இவங்ககிட்ட இருக்கிற பிரச்னை... குமாரும் சரி, என் தங்கச்சியும் சரி, இந்த விஷயத்த எங்கிட்ட சொல்லல; நீங்க சொல்லி தான் தெரியுது. குமாருக்கு அரசாங்க வேலை, ஒரே பொண்ணு; கஷ்டப்படுற நிலைமையிலா இருப்பாங்கன்னு நினைச்சேன்...
''சரி... வீடு கட்டியிருக்காரு, பொண்ண படிக்க வெச்சிருக்காரு... மிடில் கிளாஸ்ன்னே வெச்சுப்போம்... பட்ஜெட்ல இவ்வளவு குறையுதுன்னு என்கிட்ட வந்து, உரிமையா கேக்கலாம்ல... எனக்கெப்படி அவங்க கஷ்டம் தெரியும்... கேக்கறது கவுரவ குறைச்சல்ன்னு நினைக்கிறாரு குமார். அப்படி அவரு கவுரவம் பார்த்தா, நானும், கவுரவம் பார்ப்பேன்ல்ல... இப்ப கூட, நீங்களே மீடியேட்டரா இருந்து, குமார் இல்ல, என் தங்கச்சிகிட்ட பேசுங்க... வந்து என்கிட்டே கேக்கட்டும்; தர்றேன். என்ன... நான் சொல்றது சரி தானே...'' என்றான்.
ஏதோ யோசித்த பரந்தாமன், தான் சொல்ல வந்ததை நிறுத்தி, அவனிடம் விடைபெற்று சென்றார்.
இரண்டு வாரத்திற்கு பின் -
வழக்கமான உடல் பரிசோதனைக்கு மருத்துவ மனைக்கு சென்றிருந்தார், பரந்தாமன். அங்கே, மீண்டும் குணசுந்தரியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
''என்னம்மா இங்க?''
''காய்ச்சல்... மாத்திரை சாப்பிட்டும் கேக்கல; அதான், ரெண்டு நாள், 'அட்மிட்' ஆகி, டெஸ்ட் செய்துட்டு போலாம்ன்னு வந்தேன்,'' என்றாள்.
''சரி... அண்ணன்கிட்ட சொன்னியா?''
''இல்லங்க மாமா... பாவம் அவரு பிசியா இருப்பாரு; அவரை தொந்தரவு செய்ற அளவுக்கு, இது பெரிய நோய் இல்லயே...'' என்றாள்.
'என்ன பெண் இவள்... பின் எதற்கு தான் அண்ணன்- தங்கை உறவு...' என்று குணசுந்தரி மீது, பரந்தாமனுக்கு கோபம் வந்தது.
குணசுந்தரி தடுத்தும் கேட்காமல், உடனே, குணசேகரனுக்கு போன் போட்டு, விஷயத்தை சொன்னார்.
அடுத்த பதினைந்தாவது நிமிடம், தன் மனைவியுடன், ஆஜரானான் குணசேகரன். வந்தவுடன், தங்கையை திட்டினான்.
''அறிவில்ல... பெரிய மனுஷின்னு நினைப்பா உனக்கு... போ... ஏதாவது ஜூஸ் சாப்பிட்டு வா... டாக்டர் வந்தா நான் பேசுறேன்...'' உரிமையோடு விரட்டினான். பின், ''ரொம்ப நன்றி மாமா... பாருங்க... இவ எதையும் சொல்றதில்ல...'' என்று வருந்தினான்.
டாக்டர் வந்து, ரத்த பரிசோதனையில், 'டைபாய்டு' என்றார். இருந்தும் பயமில்லை, ஓய்வு தேவை என்று அறிவுரை தந்தார்.
தன் கணவர் குமாருடன், டூ - வீலரில் புறப்பட்டாள் குணசுந்தரி. அவர்கள் செல்வதை பார்த்துக் கொண்டிருந்தவனிடம், ''குணசேகரா... போன் செய்ததும் ஓடி வந்துட்டேயே...'' என்றார், பரந்தாமன்.
''அவளுக்கு நான் ஒருத்தன் தானே இருக்கேன்; என்னையும் அறியாம உடம்பு பதறிடிச்சு,'' உணர்வுப்பூர்வமாக சொன்னான்.
''இந்த விஷயத்த, தங்கச்சி உன்கிட்ட சொல்லி கூப்பிடலயே... அப்புறம் ஏன் வந்த?'' என்று பரந்தாமன் கேட்க, திடுக்கிட்ட குணசேகரன்,''என்ன கேள்வி இது... கூடப் பிறந்தவளுக்கு ஒரு கஷ்டம்... அதுவும் உடல்நிலை தொடர்பா வரும்போது, வெற்றிலை, பாக்கு வைச்சு அழைக்கணும்ன்னா எதிர்பார்க்க முடியும்... விஷயம் கேள்விப்பட்டு ஓடி வர்றது நம்ம கடமை இல்லயா...'' என்றான்.
''இல்லப்பா... அன்னிக்கு பணக்கஷ்டம் வரும்போது, கவுரவம் பாக்காம வந்து கேக்கணும்ன்னு சொன்ன... எனக்கெப்படி அவங்க தேவை தெரியும்ன்னு கேட்ட... நான் சொன்னப்புறம் கூட, நீயா போய் பணத்தேவை இருக்கான்னு கேக்கல... ஆனா, இப்ப கடமை, உடன்பிறப்புன்னு நெகிழ்ந்து பேசுற...
''பணம்ன்னு வந்தா நிதானம், கவுரவம், பகுத்தறிவு எல்லாம் வேலை செய்யும்போல... மத்தபடி உடம்பு சரியில்லேன்னா, வந்து ஆறுதல் சொல்லிட்டு போய்டலாம்... என்ன, 'லாஜிக்' இது... ஏம்ப்பா... உன்னை நீயே ஏமாத்திக்கிற... நீயும், உன் தங்கையும் சின்ன வயசுல ஒண்ணா, ஒரே வீட்டில தான சாப்பிட்டு, படுத்து, துாங்கி வளர்ந்தீங்க...
''தொடர்ந்து அதே மாதிரி இருக்க முடியாது தான்... ஆனா, எல்லாருக்கும் தனித்தனி குடும்பம்ன்னு ஆனப்புறம், குறைந்தபட்சம் ஒருத்தருக்கு ஒருத்தர் போன்லயாவது பேசி, தொடர்பு இருந்தா தானே ஒருத்தரோட தேவை, மத்தவங்களுக்கு புரியும்... 'தங்கச்சிய கவர்மென்ட் மாப்பிள்ளைக்கு கட்டிக் கொடுத்தாச்சு... இனிமே கவலை இல்லே'ன்னு நீயா எப்படி நினைச்சுக்கலாம்...
''ஒரு நல்லது, கெட்டதுன்னா நீயே போய், பணம் கொடு; அவங்க மறுத்தா விட்டுடு... உனக்கு வசதி இருக்கறதுனால தானே உன்னால கொடுக்க முடியுது... வந்து கேக்கணும்ன்னு, நெருங்கின உறவுகிட்டயே நீ எதிர்பார்க்குறது, எந்த வகையில் நியாயம்... உன் மாப்பிள்ள உன் கிட்ட கேட்டு, நீ இல்லேன்னு சொல்லிட்டா, அவருக்கு எவ்வளவு அவமானமா போய்டும்... அதுக்காக கூட உதவி கேட்காம இருந்திருக்கலாம்.
''தம்பி... எல்லாருக்கும் மனசாட்சி உண்டு; அத, இப்ப ஏமாத்தலாம். அப்புறம், அது உன்னை குடைய ஆரம்பிக்கும். இப்ப கூட, நீ உன் தங்கச்சி சொல்லலன்னு வராம இருந்தா, உன் மனசாட்சி விடாது; அதான் ஓடி வந்துட்ட... இந்த உணர்வு எப்பவும், எதுலயும் இருக்கணும். அதான் நியாயம்.
''நடுவுல பல தடங்கல் வரும்... சமாளிக்கணும், புரிய வைக்கணும். இல்ல... பண விஷயத்துல என்னால உதவ முடியாதுன்னு ஒத்துக்கணும்; அதுவும் நியாயம் தான். உண்மைய மறைச்சு, மத்தவங்கள ஏமாத்தறதா நினைச்சு, உன்னை நீயே ஏமாத்திக்காத... உங்க குடும்ப நண்பர் என்ற முறையில் இத சொல்றேன்,'' என்று சொல்லி, வெளியேறினார் பரந்தாமன்.
குணசேகரனுக்கு, அவர் சொல்வது புரிந்தது. தங்கை மகளின் திருமணத்தை தானே முன்னின்று, எல்லா செலவுகளையும் செய்து, நடத்த முடிவெடுத்தான்; பரந்தாமன் சொன்னது போல், வரக்கூடிய தடைகளையும் சமாளிக்க தயாரானான்.

http://www.dinamalar.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.