Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அடக்கு முறையை வெளிக்காட்டும் ஊடகவியலாளரின் தடுப்புக்காவல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அடக்கு முறையை வெளிக்காட்டும் ஊடகவியலாளரின் தடுப்புக்காவல்

[30 - March - 2007]

- அமந்தபெரேரா -

பெண் ஊடகவியலாளர் முனுசாமி பரமேஸ்வரி பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின்கீழ் 4 மாதங்கள் சட்டவிரோதமாக சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தமை எழுத்துத் துறையில் அவர் எதிர்நோக்கும் அடக்கு முறையை எடுத்துக்காட்டுகிறது.

23 வயதான பரமேஸ்வரிக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்ய சாட்சியம் எதுவும் இல்லை என்று சட்டமா அதிபர் நாட்டின் உயர் நீதிமன்றத்துக்கு அறிவித்ததை அடுத்து கடந்த புதன்கிழமை பரமேஸ்வரி விடுதலை செய்யப்பட்டார். பரமேஸ்வரியை விடுதலை செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதன் பின்னரும் ஒரு இரவு முழுவதும் அவர் சிறையிலேயே வைக்கப்பட்டிருந்தார் என்று சுதந்திர ஊடக இயக்கத்தைச் சேர்ந்த சுனந்த தேசப்பிரிய தெரிவித்தார். தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த காலத்திலும் உறவினர்கள் அவரை நேரிற் சென்று பார்ப்பதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இந்த நிலைமை எமக்கு எதனை உணர்த்துகிறது? செய்தியாளர்களின் சுதந்திரம் மீது கட்டவிழ்த்துவிடப்படும் அடக்கு முறையையே இது எடுத்துக்காட்டுகிறது என்று தேசப்பிரிய `ஐ.பி. எ.ஸ்'ஸிடம் தெரிவித்தார்.

பரமேஸ்வரி விடுதலை செய்யப்பட்டபோதிலும் அரசாங்க படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடக்கம் மோதல்கள் நடைபெற்று வருவதால் ஊடகவியளாளர்கள் அவர்களது பணியை செய்வதில் பேராபத்தை எதிர்நோக்குவது சுதந்திர ஊடக இயக்கத்தின் கவலையாகும் என்றும் அவர் கூறினார். கடந்த இரண்டு வருடங்களில் செய்தியாளர்களும் ஊடகப்பணியாளர்களுமாக எட்டுப்பேர் கொல்லப்பட்டுள்ளார்கள் என்று தெரிவித்த தேசப்பிரிய இவர்களில் அநேகமானோர் சிறுபான்மைத் தமிழராவர் என்றும் கூறினார்.

பரமேஸ்வரியும் ஒரு தமிழ் ஊடகவியலாளரே. விடுதலைப் புலிகளின் தற்கொலைப் போராளிகளுடன் தொடர்புகள் வைத்திருக்கிறார் என்ற சந்தேகத்தின் பேரில் பரமேஸ்வரி கடந்த வருடம் நவம்பர் மாதம் 23 ஆம் திகதி பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டார். `அவர்களுடன் எனக்கு ஒரு தொடர்பும் இல்லை. அவர்கள் பற்றிய செய்தி ஒன்றை எழுதுவதற்காகவே அவர்களைச் சந்தித்தேன். அது பற்றி அதிகாரிகளுக்கும் தெரிவித்திருந்தேன்.' என்று பரமேஸ்வரி `ஐபிஎஸ்'ஸிடம் தெரிவித்தார்.

தலைநகரில் வாழும் தமிழ் மக்கள் கடத்தப்படுவது குறித்தும் அச்சுறுத்தப்படுவது குறித்தும் பரமேஸ்வரி தாம் பணியாற்றும் சிங்களப் பத்திரிகையான `மௌபிம'வுக்கு பல கட்டுரைகள் எழுதியுள்ளார். கடத்தப்பட்ட ஒருவரின் சகோதரியைச் சந்திக்கச் சென்றபோதே பரமேஸ்வரி கைது செய்யப்பட்டார்.

அவர் கைது செய்யப்பட்டவுடன் நாட்டின் ஊடக சுதந்திர அமைப்புக்கள் அவர் குற்றமிழைத்திருந்தால் அவர் மீது விசாரணை நடத்தி சட்டரீதியான நடவடிக்கையை எடுக்குமாறு கோரி ஆர்ப்பாட்டங்களில் இறங்கின.ஊடகவியலாளர்களின் உரிமைகளைக் காப்பாற்றப் போராடும் சர்வதேச அமைப்புகளான சர்வதேச செய்தியாளர்கள் சம்மேளனம் (Internastional Federation of Journalists) ஊடகவியலாளர் பாதுகாப்புக் குழு (Committee for the Protection of Journalists) ஆகியனவும் இந்த ஆர்ப்பாட்டங்களில் இணைந்து கொண்டன.

நீண்ட கால தாமதத்தின் பின்னரேனும் இறுதியில் தங்களது சகாவான பரமேஸ்வரி விடுதலை செய்யப்பட்டமை குறித்து தாங்கள் மகிழ்ச்சியடைவதாகவும் குற்றச்சாட்டின்றி அவர் தடுத்து வைக்கப்பட்டிருக்கக் கூடாது என்றும் ஊடகவியலாளர்கள் பாதுகாப்புக் குழுவின் நிறைவேற்று பணிப்பாளர் ஜொவெல் சைமன் தெரிவித்தார்.

இலங்கையில் நீதிமன்ற விசாரணையின்றி ஊடகவியலாளர்களை தடுப்புக்காவலில் வைத்திருப்பதற்கு பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை பயன்படுத்துவது பத்திரிகை சுதந்திரத்திற்கு விடுக்கப்படும் பாரதூரமான அச்சுறுத்தலாகும் என்று சைமன் தெரிவித்தார்.

பரமேஸ்வரியின் கைதும் தடுப்புக்காவலும் இலங்கையில் அடிப்படை மனித சுதந்திரத்திற்கு விடுக்கப்படும் பயங்கர அச்சுறுத்தலாகும் என்று சர்வதேச செய்தியாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் கிறிஸ்தோபர் வொறன் தெரிவித்தார். அவர் விடுத்த அறிக்கையில், இலங்கை மக்களை பயங்கரவாதத்திலிருந்து காப்பாற்றுவதற்கெனக் கூறிக்கொண்டு, கொண்டுவரப்பட்ட இச்சட்டம் ஊடகங்களை அடக்குவதற்காகவும் அச்சுறுத்துவதற்காகவும் பயன்படுத்தப்படுவது மிகக்கேவலமான செயல் என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழர்கள் பெரும்பாலாக வாழும் வடபகுதி மாவட்டமான யாழ்ப்பாணத்தில் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. செய்தித் தாளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. ஊடகவியலாளர்கள் கடத்தப்படுவதுடன் துன்புறுத்தல், வன்முறைகள் போன்றவற்றுக்கும் ஆளாகிறார்கள், பரமேஸ்வரி விடுதலை செய்யப்பட்டு இரண்டு நாட்களின் பின்னர் பரிஸில் அமைந்துள்ள ஊடக சுதந்திர அமைப்பான Rapporters Without Borders விடுத்த அறிக்கை ஒன்றில் காணாமல் போயுள்ள யாழ்ப்பாண ஊடகவியலாளர் சுப்பிரமணியம் இராமச்சந்திரன் உண்மையில் இராணுவ காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்கடத்தல்களிலும் ஆட்கள் பலவந்தமாக காணாமல் போவதிலும் படையினர் சம்பந்தப்படுவதாக அரசாங்கம் பகிரங்கமாக ஒப்புக் கொள்வது கவலைக்குரிய விடயமாகும். ஆனால், இராமச்சந்திரன் இன்னமும் உயிருடன் இருக்கிறார் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் வெளிவரும் பிரபல தமிழ்த் தினசரி பத்திரிகைகளில் ஒன்றான `உதயன்' நாளிதழின் ஆசிரியர் வி.கான மயில்நாதன் யாழ்ப்பாண நிலைமை பற்றி இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கத்திற்கு எழுதிய கடிதத்தில், "எங்கள் குரல்வளை நசுக்கப்படுகிறது. படிப்படியாக எங்கள் உயிர் மீது இலக்கு வைக்கப்படுகிறது. எங்கள் ஜீவாதாரம், எங்கள் புலமைத் தொழில், அசைக்கமுடியாத ஜனநாயக பண்புகளுக்கும் ஊடக சுதந்திரத்திற்குமான எங்கள் மன உறுதிப்பாடு ஆகியவற்றை காப்பாற்ற எப்போதையிலும் பார்க்க தற்போது உங்கள் உதவி எங்களுக்கு தேவை." என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மோதல்கள் இடம்பெறும் பிரதேசங்களிலிருந்து செய்திகள் எழுதுவது கடும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட கிழக்கு மாகாண நகரான வாகரைக்கு செய்தியாளர்கள் விஜயம் செய்ய வேண்டுமானால் இராணுவத்திடமிருந்து அனுமதி பெற வேண்டும். அப்பிரதேசத்தில் இடம்பெறும் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்புக்கள் தெரிவித்து வரும் ஆட்சேபனைக்கு மத்தியிலும் தொடர்ந்து மீள் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. கட்டுப்பாடுகள் காரணமாக ஒரு பக்க செய்திகளையே எழுத முடிகிறது என்று தேசப்பிரிய தெரிவித்தார்.

பரமேஸ்வரி பணியாற்றும் பத்திரிகையின் தாய்க் கம்பனிகளின் வங்கி கணக்குகள் அரசாங்கத்தினால் முடக்கி வைக்கப்பட்டுள்ளதால் பத்திரிகை மூடவேண்டிய நிலையிலுள்ளது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் பதவிநீக்கம் செய்யப்பட்ட வெளிநாட்டமைச்சர் மங்கள சமரவீரவுடன் இக்கம்பனிகள் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டுள்ளன. பத்திரிகையின் நிதிப் பணிப்பாளர் துஷந்த பஸ்நாயக்க தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கை நீதியான ஊடகப்பணிக்கு விடுக்கப்பட்ட நெத்தியடி ஆகும் என்று பத்திரிகையின் முகாமைப் பீடம் தெரிவித்துள்ளது.

ஊடகம் அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. சுதந்திரமாக செயற்பட விரும்பும் செய்தியாளர்கள் இதனை உணருகிறார்கள். பரமேஸ்வரியின் விடயம் அதில் ஒன்று மாத்திரமே. வெளியில் தெரியாமல் இது போல் பல உண்டு. ஆனால், துரதிர்ஷ்டவசமாக அரசாங்கம் இதற்கு தீர்வுக்காண எதையும் செய்யவில்லை என்று உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தைச் சேர்ந்த பொட்டல ஜயந்த தெரிவித்தார்.

உண்மை நிலையை அறிந்துகொள்வதற்கான சர்வதேச அமைப்பு ஒன்று, கடந்த வருடம் அக்டோபர் மாதம் இந்த அச்சுறுத்தல்கள், ஆட்கடத்தல்கள் ஆகியன குறித்து அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தபோது அவை குறித்து விசாரணை நடத்தி பரிகாரம் தேடப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. ஆனால் எதுவுமே நடக்கவில்லை.

மீண்டும் `மௌபிம' பத்திரிகையில் தமது பணியை தொடரும் பரமேஸ்வரி, "எனக்கு இது ஒரு பயங்கர அனுபவம் பொலிஸாரினால் நான் துன்புறுத்தப்பட்டேன். என்று சகாக்கள் சிலர் கூட என் மனதை புண்படுத்தினார்கள். ஆனால் நான் எனது எழுத்துப் பணியை தொடர்வேன்" என்று கூறினார். `மௌபிம' பத்திரிகையே தப்பிப் பிழைக்குமா என்பதுதான் தமக்கு சந்தேகத்தை தருவதாக அவர் கூறினார்.

தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.