Jump to content

கம்பமதயானை


Recommended Posts

பதியப்பட்டது

கம்பமதயானை*

 

 

‘எத்தனையளவு உள்ளே போகிறேனோ
அத்தனை பசுமை மலைகள்.’
டானடா சண்டூகா (ஜென் கவிதைகள்)


– தமிழில்: ஷங்கரராமசுப்பிரமணியன்

ண்ணுக்கெட்டிய உயரம் வரை மலையை இருள் சூழ்ந்திருந்தது. பெளர்ணமி நிலவின் வெளிச்சத்தைக் குடித்துக்கிறங்கிப்போயிருந்த மந்தமான இருள். வண்டாரி, பழையூ, செம்பட்டி, அத்திபட்டி ஊர்களிலிருந்து துணைக்கு வந்திருந்த ஆள்களுடன் செல்வராஜும் ஜோதியும் மலையிலிருந்து இறங்கிக்  கொண்டிருந்தார்கள். மஹாலிங்கத்தின் தரிசனத்துக்காகச் சாரை சாரையாக மக்கள் தாணிப்பாறை வழியாய் வந்துகொண்டிருந்தாலும் சாப்டூர் சுற்றின கிராமத்து மக்களுக்கு இன்னும் இதுதான் குறுக்குப் பாதை. தாணிப்பாறையிலிருந்து செல்வதைவிடவும் தூரம் குறைவுதான். ஆனால், ஏறி இறங்கக் கடினம். நிமிர்ந்து கொஞ்சமும் வளைவற்ற மலையில் ஏறும்போது வியர்த்து மூச்சு வாங்கும். உடலின் சக்தியையெல்லாம் திரட்டி நடந்தால், பாதி வழியில் சமயங்களில் திசை மிரண்டு போகவும்கூடும். இறங்கும்போது உடல் ஒருநிலையில் இருக்காது. கீழ் நோக்கி வேகமாகத் தள்ளுவதால், தலைசுற்றி மயக்கம் வரும். அனுபவஸ்தர்கள் இல்லாமல் சென்றால் ஆபத்து. ஆனால், ஊர்க்காரர்களுக்கு இந்தப் பாதையின் ஒவ்வோர் அங்குலமும் பிடிபட்டுவிட்டிருந்ததால், கண்ணைக் கட்டிவிட்டாலும் போய் வந்துவிடுவார்கள். வழிகள் மனிதர்களுக்குப் பழக்கத்தின் நீட்சி.

p104a_1535699150.jpg

விடிவதற்கான வெளிச்சம் வர இன்னும் அவகாசமிருந்தது. பழையூர் புளியந்தோப்பைத் தாண்டி ஓடையை நெருங்கியபோது, மனித நடமாட்டம் கண்ட மயில்கள் இடைவெளியில்லாமல் அகவத் தொடங்கின. கடந்த வாரம் பெய்திருந்த ஒற்றை மழையின் நீர்  இன்னும் ஓடையில் ஓடிக்கொண்டிருந்ததால், மெல்லியதாய் நீரின் சலசலப்பு. கருப்புதான் எல்லோருக்கும் வழிகாட்டியாய் முன்னால் சென்றுகொண்டிருந்தான். காடும் மலையுமே கெதியென வாழ்ந்து பழகியவனுக்குப் பெயருக்கேத்ததுபோல் உடம்பு. ஆனால், மினுங்கி ஒளிரும் அபூர்வமான கறுப்பு. கையிலிருந்த டார்ச் விளக்கை அணைத்தவன் இருளினூடாக ஓடையின் சத்தத்தைக் கூர்ந்து கவனித்தான். யானையோ மானோ நரிகளோ நீர் அருந்தலாம் என்பதுபோல் சலசலப்பு. கருப்பு செல்வராஜின் தம்பி. காடும் இந்த ஊரும் போதுமென எந்த வேலைகளுக்கும் தன்னைப் பழக்கிக்கொள்ளாதவனுக்கு மதுரைக்கு அப்பால் ஊர்கள் இருக்கக்கூடுமென்கிற நம்பிக்கை  இல்லை. எப்போதாவது பழங்காநத்தத்தில் இருக்கும் செல்வராஜின் வீட்டுக்குப் போய்வருவதால் மதுரை கண்ணால் கண்ட சாட்சி. காண முடியாத நிலங்கள் கதைகளில் மட்டுமே இயங்கக்கூடியவை என்று நம்புகிறவன்.

மலையிலிருந்து இறங்கியவர்களின் உடல் வியர்த்து மூச்சு இரைத்தபடியிருக்க, ஜோதி மட்டும் கொஞ்சமும் களைப்படையாதவளாய்த் தெரிந்தாள். நீண்டதூர மேய்ச்சலுக்குப் பழக்கப்பட்ட காட்டுமாட்டைப்போல் யாரையும் சட்டை செய்யாமல் திமிறும் உடல். இந்த இருளில் அவளைப் பார்க்கையில் செல்வராஜுக்கு அச்சமாகக்கூட இருந்தது. சமீப நாள்களாக இருளில் அவள் அச்சத்திற்குரியவள்.  “பொறுத்துப் போ மயினி, ஏன் வேக வேகமா நடக்கற?” வழி முழுக்க சொல்லியபடியே வந்த கருப்பின் பேச்சை அவள் சட்டை செய்யவே இல்லை.  இப்போதும் ஓடையில் மிருக அசைவு கேட்டு நின்றிருந்தவர்களை விட்டுவிட்டு முன்னால் நடந்த ஜோதியை, கருப்பு கையைப் பிடித்து நிறுத்தினான். ஜோதியின் கையில் பாதிகூட இல்லாத மெலிந்த அவன் கையில் புரண்டிருந்த நரம்புகளின் வலு அவளை நிறுத்தப் போதுமானதாகயில்லை. “மயினி... யான தண்ணி குடிக்குது. செத்த பொறு.” காற்றின் ஓசையைத் தொந்தரவு செய்யாத மெல்லிய சத்தத்தில் சொல்லியவனைப் பார்த்துச் சிரித்தவள், “தெரியும் கருப்பு... அதான் போறேன்” தொடர்ந்து நடந்தாள். உடன் வந்திருந்த ஆள்களுக்கெல்லாம் சங்கடம், தொடர்ந்து செல்லவும் பயம். “அவள விட்றா, அடங்காப்பிடாரி முண்ட. சொன்னா கேக்க மாட்டா” -ஜோதிக்குக் கேட்காத சத்தத்தில் செல்வராஜ் முனகினான். பழையூரின் காட்டுப்பகுதியில் முனி நாட்டம் அதிகமாகி இருப்பதான அச்சம் சுற்றி இருக்கும் ஊர்களுக்கெல்லாம் பரவியிருந்தது. உயிர்பலியெடுக்கக் கூடுமென்று எல்லோரும் நம்பினர். இரவில் தனித்து அலைகிறவர்கள் மீது முனி பெருநாட்டம் கொள்ளும். மரங்களின் அசைவும் இலைகளின் சலசலப்பும் முனிகளின் ஜடாமுடிகளாய் ஒருபுறம் அச்சுறுத்த, அசையும் யானையாய் இருளில் நளினமாக நடந்து சென்ற ஜோதி, முனியின் உயிர்சாட்சியாய்த் தெரிந்தாள் அவர்களுக்கு.

வேழம்

ஜோதியின் கணவன் என்பதைத் தாண்டி சுவராஸ்யமாகச் சொல்வதற்கு செல்வராஜைக் குறித்து எதுவுமில்லை. சுமாராகப் படித்து, சரியான வயதில் சுமாரானதொரு வேலைக்கும் சென்றுவிட்டவனுக்கு அவள் நெருங்கிய உறவு. தன்னைவிடவும் நான்கு இஞ்ச் உயரம் அதிகமிருந்தும் அவளையே திருமணம் செய்துகொள்ள வேண்டுமென பிடிவாதமாய் இருந்தான். செல்வராஜ் அவளைப் பார்க்கும்போதெல்லாம் பேரிளம் பருவத்திலிருக்கும் பெண்ணொருத்தியின் மீது கொள்ளும் கைக்கிளைக் காதல்கொண்டவனின் தவிப்பையே உணர்வான். இப்போதும்கூட அவளுடன் கூடுகிற பொழுதுகளில் பதின்பருவத்து இளைஞனிடம் காணப்படும் பதற்றமே வெளிப்படும். கலெக்டர் அலுவலகத்தில்  தனக்கிருந்த பாதுகாப்பான வேலை காரணமாகவும், அவள் மீது எந்தவிதத்திலும் உடல்ரீதியான வன்முறையைப் பிரயோகிக்கும் தைரியமற்றவன் என்ற நம்பிக்கையிலுமே அவள் தன்னைத் திருமணம் செய்துகொள்ளத் தயங்காமல் ஒப்புக்கொண்டாள் என்பதை இவன் நன்கு புரிந்துவைத்திருந்தான். 

இன்னும் வெளி உலகின் புழக்கங்களுக்கு அதிகம் பழகாத சாப்டூரிலிருந்து மதுரை கலெக்டர் அலுவலகத்திற்கு வேலைக்குச் சென்ற முதல் ஆள் இவன். ஒரு அக்கா, ஒரு தம்பியென பெரிய குடும்பம். அத்திபட்டி போகும் வழியில் பத்துப் பதினைந்து ஏக்கர் வயலும், ஓடைக்கு முன்பாக மலையைப் பார்த்துச் செல்லும் பாதையில் தென்னந் தோப்புமாய் வருமானத்திற்குக் குறைவில்லாத சொத்து. எத்தனை கடுமையான கோடையிலும்கூட நீர்வரத்து குறைந்து விவசாயம் நொடித்துப்போகும் நிலையில்லாமல் செழித்த ஊர். சூரிய அஸ்தமனத்திற்கு முன்பாகவே மலையிலிருந்து இறங்கிவரும் இந்தக் காற்றிற்குப் பழக்கப்பட்ட ஒருவனுக்கு இந்த ஊரைவிட்டுச் செல்லும் மனம் வராது. உடலின் அத்தனை நரம்புகளுக்குள்ளும் புகுந்துசென்று கிளர்த்தும் தனித்துவம் அந்தக் காற்றுக்கு உண்டு. முதல் சில மாதங்கள் ஊரிலிருந்துதான் வேலைக்குப் போய்வந்தான். “இம்புட்டுத் தூரம் தெனம் அலைஞ்சா உடம்பு கெட்டுப்போயிரும்டா. பேசாம மதுரைலயே ஒரு வீடப் பாரு” என அவன் அய்யாதான் எடுத்துச் சொன்னார். செல்வராஜ் ஊரிலிருந்து விலகியிருக்க தயங்கியதற்கான இன்னொரு காரணம், தம்பி கருப்பு. மனம் போன போக்கில் சுற்றிக்கொண்டிருக்கும் அவனை எப்படியாவது சரிசெய்து தன்னைப்போல் நல்ல வேலைக்கு அனுப்ப வேண்டுமென்பது இவன் விருப்பம். “வேலவெட்டிக்குப் போயிதான் கஞ்சி குடிக்கணும்னு நம்ம குடும்பத்துக்குத் தலையெழுத்து இல்லியேண்ணே. காடு கர இருக்குல்ல. இதுல வர்ற காசு போதாதா? என்னைய இப்டியே விட்றுண்ணே” -அவன் பிடிவாதமாக மறுத்தான்.

p104b_1535699188.jpg

பழங்காநத்தத்தில் அவர்களிருந்த வீதி நெரிசலானது. அதிகமும் இளைஞர்கள் நிரம்பிய அந்த வீதியின் கடைசி வீடு செல்வராஜுக்கு. பார்த்த முதல் தருணத்திலிருந்தே அன்பைப் பகிர்ந்துகொள்ளும் பாசக்காரர்களாகவே இங்கும்  மனிதர்கள் இருந்தனர். மதுரையே கொஞ்சம் பெரிய கிராமமாகத்தான் செல்வராஜுக்குத் தோணும். கிழக்கு பார்த்த வாசல் வச்ச விசாலமான வீடு.ரெண்டு பேருக்கு அது ரொம்பவே அதிகம் என்றாலும் தன் மனைவி நினைத்த மாதிரி வீட்டை அலங்கரித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக,  வேண்டிய எல்லாவற்றையும் வாங்கிப்போட்டிருந்தான். ஒவ்வோர் அறைக்கும் தனித்தனி நிறத்தில் பெயின்ட்கூட அடித்திருந்தார்கள். அவளுக்குப் பிடிக்குமேயென பெரிய மீன் தொட்டியும் வண்ண மீன்களும் வாங்கிக் கொடுத்திருந்தான். ஒவ்வொரு குட்டி மீனுக்கும் தனித்தனியாகப் பெயர்வைத்து அடையாளம் மாறாமல் அவள் கூப்பிடுவதைப் பார்க்க ஆச்சர்யமாக இருக்கும். “எல்லா மீனும் ஒரே மாதிரிதான் இருக்கு. ஒனக்கு மட்டும் எப்பிடிடீ அடையாளம் தெரியுது?” வியப்போடு கேட்பான். “இங்க வா” எனக் கையைப் புடித்து இழுத்துக்கொண்டுபோய் மீன்தொட்டியின் பக்கமாக உட்காருவாள். “ஓய் லொஜக் இங்க வா…” என மென்மையாகக் கண்ணாடியைத் தட்டினால் ஒரு மீன் ஆசையாக ஓடிவரும். அவளின் கைகளில் முத்தமிட்டுச் செல்லும். திரும்பி அவனைப் பார்த்துச் சிரிப்பாள். “பகல் முழுக்க இதுங்ககூடத்தான பேசிட்டு இருக்கேன். அதனால நான் என்ன சொன்னாலும் இதுங்களுக்குப் புரியும்.” அவளுக்கு மரம் செடி கொடியுடன்கூடப் பேசும் வல்லமை இருக்குமோ என நினைத்துக்கொள்வான்.

புருஷன் பொண்டாட்டி இரண்டு பேராக இருப்பதால், சுற்றியிருக்கும் எல்லோருமே அவர்களோடு தாயாய் பிள்ளையாய்ப் பழகினார்கள். இத்தனை இருந்தும் செல்வராஜுக்கு இருந்த ஒரே குறை, குழந்தையில்லை என்பதுதான். காலை குளித்துவிட்டு வாசலில் தலை உலர்த்தும் ஜோதியைப் பார்க்கையில் தெய்வாம்சம் நிறைந்து வழியும். ‘இந்த மகாலட்சுமிக்கா புள்ள இல்ல’ எனப் பக்கத்து வீட்டுப் பெண்கள்  மருகுவார்கள். ஆனால், ஒருவரும் முகத்திற்கு நேராக அதைக் கேட்பதில்லை. சின்னஞ் சிறுசுகதான கொஞ்ச நா போனா சரியாப் போகுமென தங்களுக்குத்தானே சமாதானம் செய்துகொண்டார்கள். புதிதாக எதிர்கொள்பவர்கள் சமயங்களில், “இத்தன வருஷமாகியும் இன்னுமா குழந்தை இல்ல?” என்று கேட்கும்போதுதான் அவனுக்குச் சுருக்கென்று இருக்கும். தன் ஆண்மையின் மீதும் ஜோதியின் தாய்மைமீதும் முகம் தெரியாதவர்களெல்லாம் கல்லெறிவதை அவனால் சகித்துக்கொள்ள முடியாது.

தன்னளவில் எந்தக் குறைகளும் இல்லை என செல்வராஜ் உறுதியாய் நம்பினான். மற்ற விஷயங்களில்கூட இதுவரை இரண்டு பேருக்குள்ளும் இணக்கமாகவே இருந்திருக்கிறது. நெருங்கிய நண்பர்கள் சொன்ன எல்லா மருத்துவர்களையும் ஒருமுறையேனும் சென்று சந்தித்தார்கள். முதல் இரண்டு முறை அவனுக்காக வந்த ஜோதி, அடுத்தடுத்து அவன் கூப்பிட்டபோது எரிச்சல்பட்டாள். “எதுக்கு இப்டி வாரத்துக்கு ஒரு டாக்டர்னு இழுத்துட்டுப்போற, ஒண்ணூ ஒரே டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போ. இல்லியா விட்று. இப்போ கொழந்தை இல்லன்னா என்ன? நாம சந்தோசமாத்தான இருக்கோம்.” இத்தனை சீக்கிரம் மறுத்துவிட்டாளே எனச் செல்வத்துக்கு முகம் வாடிப்போனது. அவனை அப்படிப் பார்க்கச் சகிக்காமல் “சரி சொன்னா கேக்கவாபோற, உன் இஷ்டம்போலச் செய்யி” என மருத்துவமனைக்குச் செல்ல ஒப்புக் கொண்டாள். மறுபடியும் முதலிலிருந்து பரிசோதனைகள், எந்தெந்த நாள்களில் உறவுகொள்ள வேண்டும், எவ்வாறு உடலைப் பராமரிக்க வேண்டும் என்பதோடு, கூடுதலாக யோகா குறித்த இலவச விளம்பரங்கள்.

மருத்துவம் சரியான தீர்வைத் தரவில்லை என்றானபோது, அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் பிரார்த்தனையை நோக்கி அவர்களின் கவனத்தைத் திருப்பச் சொன்னார்கள். எதிர்வீட்டு சுந்தரி அக்காவிற்குச் சாமி இறங்கும். வெள்ளிக் கிழமைகளில் அதனிடம் குறி கேட்க வெளியூர்களில் இருந்தெல்லாம் ஆள்கள் வருவார்கள். அந்த அக்காதான் முதலில் சொன்னது, “செல்வம் உனக்கு நம்பிக்கை இருக்கான்னு தெரியல, ஆனா நம்மள மீறிச் சில சக்தி இருக்கு. மனுஷன் கைவிட்டாலும் சாமி கைவிடாது. உனக்கு சாப்டூர்தான சொந்த ஊரு. மஹாலிங்கத்தோட காலடியில இருக்க. நீ கேட்டு உனக்கு வரம் தராம போயிருமா? ஒவ்வொரு பெளர்ணமிக்கும் அந்தப் புள்ளையைக் கூட்டிட்டு மஹாலிங்கம் கோயிலுக்குப் போயிட்டு வா, எல்லாம் சரியாப்போகும்.” அந்த வார்த்தைகளைக் கேட்டபோதே அவனுக்குள் ஒரு நிறைவு. நேர்த்திக் கடனாகத்தான் கடந்த ஒரு வருடமாக பெளர்ணமி நாள்களில் செல்வராஜ் தன் மனைவியோடு மலையேறிக் கொண்டிருக்கிறான். மஹாலிங்கத்திடம் வேண்டிய வரம் விரைந்து கிடைக்கும் என ஊர்க்காரர்கள் சொல்வதுண்டு. பிழைக்கச் சென்று குடில் தேடும் எல்லா ஊர்களும் குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னால் சொந்த ஊராகிப்போனாலும் கும்பிடும் சாமியென்னவோ பிறந்த ஊரைவிட்டு நகர்ந்து வருவதாக இல்லை. வேண்டுதல் ஒரு காரணமாகப்போனது, ஆறுதல் தேடிச் சொந்தங்களை வந்து பார்த்துவிட்டுப் போக.

p104c_1535699203.jpg

பிடி

திரும்பிய பக்கமெல்லாம் வைத்தியர்களின் முகஜாடை நிரம்பிய ஊர் ஜோதிக்கு.  முடக்குவாத வியாதிகளுக்கு மிகச் சிறப்பான நாட்டுவைத்தியம் செய்யும் அந்த ஊரைத் தேடி ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கில் ஆள்கள் வந்தபடியே இருந்தார்கள். சுருளி மலையடிவாரத்தின் அத்தனை மகத்துவங்களையும் உள்வாங்கிச் செழித்திருந்தது பூசலாம்பட்டி. ஜோதியின் அப்பாவும் வைத்தியர்தான். மனிதனின் எலும்புகளையும் நரம்புகளையும் வாழ்க்கை முழுக்க அணுகி, மனிதர்கள் எலும்பும் நரம்புமாகவே அவருக்குத் தெரிவார்கள். கை உடைந்து, கால் உடைந்து சிகிச்சைக்கு வருகிறவர்களின் விலகிய எலும்பைத் தேடிக் கூட்டிவைத்துக் கட்டுகையில் அவர்களின் அலறல் வீதி முழுக்க எதிரொலிக்கும். மனிதர்கள் வலியில் அலறுவதைச் சிறு வயதிலிருந்தே பார்த்துப் பழகியவளுக்கு அலறல்கள் ஒரு வயதுக்குப் பின் மரத்துப்போயிருந்தன. பாசிப்பயறு மாவையும் முட்டையின் மஞ்சள் கருவையும் கலந்து, கட்டுப்போட அவர்கள் தயாரிக்கும் கலவையின் மணத்திற்கு ஓரிரு நாள்கள் பழகினாலே நாசித்துவராங்களில் மட்டுமல்லாமல் நவதுவாரங்களும் நாற்றத்தைப் பொருட்படுத்தாது. ஆனாலும் ஜோதி விதிவிலக்கு. அவள் காட்டு மலர்களை நிறத்தைக்கொண்டும் மணத்தைக்கொண்டும் வெகு எளிதாகப் பிரித்துப் பார்க்கப் பழகியிருந்தாள்.

மூன்று பெண் பிள்ளைகளுக்குப்பின் பிறந்த கடைசிக் குழந்தை என்பதால், இவளின்மீது  எல்லோருக்கும் அதீத அன்பு. ஆனாலும், ஜோதியின் அய்யாவிற்கு ஒரு வருத்தமிருந்தது. பதினான்கு வயதாகியும் ஜோதி பூக்காமலிருந்தாள். மற்ற பெண் பிள்ளைகளைவிடவும் கூடுதல் உயரம். வீட்டிலிருந்து தெருமுனைக்கு நாலே எட்டில் ஓடிவிடும் அவளுக்குப் பாவாடைகள் எப்போதும் கெண்டைக்கால் வரைதான் இருக்கும். “ஏய் கழுத இத்தன வயசாகிடுச்சு இன்னும் குதிச்சிக்கிட்டு இருக்க. ஒரு இடத்துல அடங்கி இருக்க மாட்டியா?” என அப்பத்தா மட்டும்தான் இவள் மீது எரிந்து விழும். அதற்குக் கவலையெல்லாம் இன்னும் அவள் பூக்கவில்லை என்பதில்.

காளியம்மன் திருவிழாவிற்காக மூணாறிலிருந்து யானையும் செண்டை மேளமும் கொண்டு வந்திருந்தார்கள். திருவிழா நாளில் செண்டை மேளம் ஊரையே பிளந்துகொண்டிருக்க, அலங்கரிக்கப்பட்ட யானை ஊர் நடுவே பிரமாண்டமாக வலம் வந்துகொண்டிருந்தது. சாமியானை என்பதால் எல்லோரும் தொட்டுக் கும்பிட்டார்கள். ஜோதிக்கு யானைகள் எப்போதும் ஆச்சர்யம். அடுத்தொரு பிறப்பென்றால் யானையாகவே பிறக்க வேண்டுமென நினைப்பாள். தன்னைத் தவிர உலகில் எதையும் பொருட்படுத்தாத அந்தப் பிரமாண்ட உருவம், பாகனின் சத்தியத்திற்குக் கட்டுப்பட்டுச் சாந்தமாக நடப்பதைப் பார்க்க ஆச்சர்யமும் வியப்புமாக இருக்கும். அதனாலேயே யானை வரும் நாள்கள் அவளுக்கு முக்கியமானவை. அந்த வருடம் வந்திருந்த யானை, இதற்கு முன்பு வந்திருந்த யானைகளைவிடப் பிரமாண்டமாக இருந்தது. அதன் நீண்ட தந்தங்களைக் கண்ணுறும் எவர் ஒருவரும் மயங்கிப்போய்விடக்கூடும். யானையின் பிரத்யேக அழகு அதன் தந்தங்கள். ஊதா நிறப் பட்டுப்பாவடையும் தாவணியும் அணிந்திருந்த அவளுக்கு, தேடிப் பிடித்து காளியம்மன் சாமிக்கு அணிவித்திருந்த அதே மூக்கு வளையத்தை வாங்கித் தந்திருந்தார் அய்யா. கூட்டத்தை விலக்கி யானை வரும் திசையில் எதிர்நின்றவள், அசைந்து வரும் அதன் ஒவ்வோர் எட்டிலும் உலகை மறந்துபோயிருந்தாள். கூட்டத்தில் எவரையுமே கவனிக்காமல் வந்த யானை, சரியாக இவளுக்கு அருகில் வந்தபோது இவளின் கண்களை ஊடுருவிப் பார்த்தது. அசாதாரணமான பார்வை! சில நொடிகள் தொடர்ந்த அந்தப் பார்வையில் இவளுமே கண்ணை அசைக்கவில்லை. அருகில் நின்று கொண்டிருந்த பெரிய அக்கா, “ஏய் ஜோதி... யான கண்ண அப்பிடிப் பாக்கக் கூடாதுடீ, புத்தி பேதலிச்சுப் போகும்” எனச் சொன்னதுகூட இவளின் காதுகளில் விழுந்திருக்கவில்லை. அப்படியே மயங்கிப்போய் நின்றவளின் தலைமீது யானை தன் துதிக்கையை வைத்து ஆசிர்வதித்தது. கரியநிறக் குன்று சலனமில்லாமல் தன்னைக் கடந்து செல்வதைப்போல் உணர்ந்தாள். உடல் சிலிர்த்து கண்கள் நிலைக்குத்திப்போயிருக்க அப்படியே மயங்கிப்போனாள்.

கண் விழித்துப் பார்த்தபோது, வீட்டின் முற்றத்தில் கிடந்த கயிற்றுக் கட்டிலில்தான் படுத்திருக்கிறோம் என்று தெரிந்தது. சுற்றிலும் அக்காக்களும் அய்யாவும் அமர்ந்திருந்தார்கள். அப்பத்தா அவள் தலையில் ஓங்கிக் குட்டியது. “முட்டாச் சிறுக்கி... யானய உத்துப் பாக்கக் கூடாதுன்னு எத்தனவாட்டி சொல்லியிருக்கேன்” எனக் கோபமாகத் திட்டினாள். “பிள்ள பயந்துபோயி படுத்திருக்கு, நீ பேசாம இருத்தா” என அய்யாதான் அப்பத்தாவை அரற்றி அனுப்பிவைத்தார். உடலெங்கும் கொதிக்க, உள்ளுக்குள் குளிர் நடுக்கமெடுத்தது. எதையோ பேச நினைத்தாள் முடியவில்லை. “நீ பேசாமப் படுத்துத் தூங்குத்தா” என ஆறுதலாய் அவள் தலையைத் தடவிக்கொடுத்தார். கண்கள் விரிந்த நிலையிலேயே ஜோதி உறங்கிப்போனாள். நான்கு நாள்கள் காய்ச்சல் குணமான அதிகாலை வேளையில் ஜோதி ருதுவெய்தியிருந்தாள்.

குறும்புத்தனங்களும் உற்சாகமும் குறைந்து, சடாரெனப் பெரிய மனுஷியைப்போன்ற தோற்றம் அவளிடம். அக்காக்கள் எல்லோருக்கும் அவளைப் பார்க்க ஒரே நேரத்தில் பொறாமையாகவும் பெருமையாகவும் இருக்கும். ருதுவெய்திய சில நாள்கள் அத்தனை தேஜஸோடு இருந்தாள். செல்வராஜ் அப்போதுதான் இவளை முதல் முறையாகப் பார்த்திருந்தான். தன்னை அவன் பார்த்த முதல் தருணத்திலேயே அவளுக்குத் தெரிந்திருந்தது, இவன் தன்னைத் தேடி ஒருநாள் வரக்கூடுமென. அய்யா வாங்கிக் கொடுத்த மூக்கு வளையம் இப்போதுதான் ஜோதிக்கு அத்தனை பொருத்தமாய் இருந்தது. வைத்தியத்திற்கு வரும் ஆள்களுக்கெல்லாம் இவள் முகத்தை ஒருமுறை பார்த்தாலே நோய் குணமாகிப் போகுமெனத் தோன்றும். வயது வித்தியாசமில்லாமல் எல்லோரையும் வசீகரிக்கும் அபூர்வக்கண்கள். வேறு யாரையும்விட தான் விசேசமானவள், வலிமையானவள் என்பதைத் திடமாய் நம்பினாள்.  பருவத்திலிருக்கும்  ஒரு பெண்யானைக்கு இந்தக் காட்டின் இளவரசி நானே என்கிற மிதப்பு எவ்வளவு இருக்குமோ, அவ்வளவு மிதப்பு ஜோதிக்கு. அய்யாவுக்கு அவளை வீட்டைவிட்டு அனுப்பவே தயக்கம். ஊரில் எல்லோரின் கண்களும் தன் பிள்ளையின் மீதுதான் என்பதைச் சடவாகச் சொல்லுவார். அப்பத்தா அவளுக்குச் சுத்திப்போடாத நாளில்லை. அக்காக்கள் திருமணம் முடிந்துபோன வேகத்திலேயே இவளைப் பெண்கேட்டும் நிறைய பேர் வந்தார்கள். அய்யாவுக்குச் செல்வராஜின் அம்மா தங்கச்சி முறை என்பதால், மகள் நெருங்கிய சொந்தத்திற்குள்ளேயே இருக்கட்டுமென இவனுக்குக் கட்டிக் கொடுக்கச் சம்மதித்தார்.

பெரும் வனத்தை வேட்டையாடும் வேடுவன்போல் ஒவ்வொரு நாளும் செல்வராஜ் அவளோடு கூடுவான். வெளியில் பார்க்கும் எவருக்கும் அவனுடலில் காமத்தின் வீர்யமிக்க சுகந்தங்கள் இருப்பது தெரியாது. அவளே முதல் சில நாள்கள் வியந்துதான்போனாள். “ஏன் மாமா இப்பிடிக் காணாததக் கண்ட மாதிரி பாயுற, நான் எங்கியும் ஓடிப்போக மாட்டேன். கொஞ்சம் நிதானமா இரேன்” அவனை ஆற்றுப்படுத்த முயன்று  ஒவ்வொரு முறையும் தோற்றுப்போவாள். முதல் மாதத்தின் முடிவிலேயே உறவினர்கள், தெரிந்தவர்களெல்லாம் “எதும் விசேஷமா?” எனக் கேட்கத் தொடங்கிவிட்டார்கள்.  “இல்லங்க சும்மாதான் இருக்கேன்” எனச் சொல்வதற்கு ஜோதி சங்கடப்படுவதைப் பார்த்துவிட்டுச் செல்வராஜ்தான் எல்லோருக்கும் பொதுவாக “நாந்தான் கொஞ்ச நாள் போகட்டும்னு சொல்லியிருக்கேன். சின்னப் பிள்ளைதான என்ன அவசரம்?” எனச் சமாளித்தான். மாதங்கள், வருடம் கடந்து அடுத்தடுத்து இரண்டு மூன்று வருடங்களையும் கடந்தபோது, அவளின் மீது உறவினர்கள் எல்லோருக்கும் ஒருவித எரிச்சல் வந்தது.  “பிள்ள வாட்ட சாட்டமா மூக்கு முளியுமா இருந்தா போதுமா? வாரிசுன்னு ஒண்ணப் பெத்துக் குடுத்தாதான முழுப்பொம்பள.” எனச் செல்வராஜின் அம்மா ஒருமுறை எல்லோரின் காதுபடவே சொன்ன நாளிலிருந்துதான் செல்வராஜ் அவளை ஊருக்குக் கூட்டிச் செல்வதைக் குறைத்துக் கொண்டான்.

p104d_1535699244.jpg

ஜோதி சொற்களால் புண்பட்டிருந்தாள். ஆனால், அதை யாரிடமும் காட்டிக் கொள்ளவில்லை. யானையின் பொறுமை பாகனின் கண்களில் இருக்கிறது. செல்வராஜின் கண்களில் தன் மீதிருந்த அளப்பெரிய காதலை உணர்ந்ததால் ஜோதிக்கு மதம் பிடிக்கவில்லை. யானைகளின் மீது அவளுக்கிருக்கும் அலாதியான ப்ரியம் தெரிந்திருந்ததால், ஒருநாள் யானை முடியில் செய்த மோதிரம் ஒன்றை வாங்கிவந்து தந்தான். தன் இடது கை மோதிர விரலில் அணிந்துகொண்போது, ஜோதியின் விரலுக்கு அந்த மோதிரம் அவ்வளவு பொருத்தமாய் இருந்தது. கறுத்த உறுதியான யானையின் அந்தச் சின்னஞ் சிறிய மயிர், அவள் உடலை உரசிக்கொண்டிருந்த ஒவ்வொரு நொடியிலும் அவள் சந்தோசத்தின் உச்சத்தில் லயித்துப்போயிருந்தாள். அதனாலேயே செல்வராஜ், மருத்துவர்களைப் பார்க்கலாமென அவளிடம் கேட்டபோது, சந்தோசமாகச் சம்மதித்தாள். “உனக்கு இஷ்டம்னா மட்டும் போலாம் ஜோதி. இல்லன்னா வேணாம்.” எனப் பக்குவமாய் அவன் சொன்னபோது, தன்னைக் கையாளத் தெரிந்த பாகனாகவே செல்வராஜைப் பார்த்தாள். ஆனால், கட்டி வைக்கப்பட்ட யானைகள் மட்டுந்தானே பாகன்களுக்குக் கட்டுப்படுகின்றன. ஜோதி கட்டிவைக்கப்பட்டதாய்க் காட்டிக் கொள்ளும் பெண்யானை. தன் இணையைக் கண்டுகொள்ளும் எந்த நொடியிலும் இவனைத் தூக்கி வீசியெறியத் தயங்காத மிருக குணமொன்று அவளிடம் இருப்பதை அவனால் ஒருபோதும் கண்டுகொள்ள முடிந்ததில்லை.

மருத்துவமனையின் மருந்து வீச்சமும் பரிசோதனைகளும் அவளை எரிச்சலூட்டின. காட்டின் மூலிகைகளுக்கும் அப்பாவின் முரட்டு வைத்தியமுறைகளுக்கும் பழக்கப்பட்டுப்போன அவளுக்கு ஆங்கில மருந்தில் போதுமான நம்பிக்கை வந்திருக்கவில்லை. அய்யாவேதான் சமாதானப்படுத்தினார். “மாப்ள சொல்றதக் கேளும்மா. உன் நல்லதுக்குத்தான சொல்றாப்ள” என அவர் மருகுவதைப் பார்க்கச் சங்கடமாய் இருந்ததால், மனசில்லாமல் ஒவ்வொரு முறையும் அவனோடு மருத்துவமனைக்குச் செல்வாள்.  குழந்தை பிறக்கும் வரையிலும் தன் முயற்சியிலிருந்து பின் வாங்குவதாய்த் தெரியவில்லை, அவன் போக்கிலேயே விட்டுவிடுவோமென இவள் நினைத்துக் கொண்டிருந்தபோதுதான் ஒருமுறை பெண்மருத்துவர் இவளிடம் தனியாகப் பேசும்போது, “அவருக்கு உயிர்அணுக்கள் விந்துல குறைவா இருக்கும்மா. இவ்ளோ வருஷம் ட்ரீட்மென்ட் எடுத்துக்கிட்டதுலயே அதிகமாகி இருக்கணும். ஆனா, இதுவரை ஆகலைன்னா ஆச்சர்யமா இருக்கு. ம்ம்ம்... உங்கள முயற்சி பண்ணிப் பாக்க வேணாம்னு சொல்லல. ஆனா, இன்னொரு வாய்ப்பு இருக்கு. அதுக்கு முயற்சி பண்ணிப் பாக்கலாமா?” என மெதுவாக விஷயத்தைத் துவக்கினாள். “எனக்குப் பெருசா விஷயம் தெரியாது டாக்டர். எதுவா இருந்தாலும்  புரியற மாதிரி சொல்லுங்க” எனச் சிரித்தபடியே ஜோதி சொன்னாள். “உன்னோட கருமுட்டைகள் ரொம்ப ஆரோக்கியமா இருக்கு. நீங்க ஏன் வேற ஒருத்தர்கிட்ட விந்துதானம் வாங்கி குழந்த பெத்துக்கக் கூடாது?” ஒவ்வொரு வார்த்தையையும் அந்த டாக்டர் தயங்கித் தயங்கித்தான் சொன்னாள். ஜோதிக்கு என்னவோபோலாகிவிட்டது. “ச்ச... ச்ச... என்னங்க இப்பிடிலாம் பேசறீங்க. அந்த மனுஷனுக்குத் தெரிஞ்சா ரொம்பச் சங்கடப்படுவாரு. வேணாம் டாக்டர்” அவசரமாய் மறுத்தாள். “இன்னிக்கு இதெல்லாம் ரொம்ப சகஜம்மா. நிறைய பேர் இப்பிடிப் பெத்துக்கறாங்க. இதுல தப்பு ஒண்ணுமில்லையே.” இவளை எப்படியும் சம்மதிக்கவைத்துவிடுவதென அந்த டாக்டர் உறுதியாய் இருக்க, பதிலுக்கு மறுப்பதில் இவளும் உறுதியாய் இருந்தாள். சோர்ந்துபோன டாக்டர், “சரிம்மா நீ யோசிச்சுச் சொல்லு. தேவைப்பட்டா உன் புருஷன்கிட்டயும் பேசிப்பாரு” என முடித்துக்கொண்டார்.

வீடு வந்ததிலிருந்து ஜோதிக்கு அது குறித்த சிந்தனையே ஓடிக்கொண்டி ருந்தாலும், செல்வராஜிடம் கேட்டால் கண்டிப்பாக வருத்தப்படுவான் என நினைத்தாள். குழந்தையின் காரணமாகத் தன்னை யாரும் காயப்படுத்திடக் கூடாதென அவன் உறுதியாய் இருந்ததைப்போலவே, அவனும் காயப்பட்டுவிடக் கூடாதென ஜோதி உறுதியாய் இருந்தாள். தன் பெண்ணுடலை ஆக்ரமிக்கும் ஒவ்வொரு முறையும் நான் அசாத்தியமானதொரு ஆண்மகன் என்ற உணர்வுகளையே அவன் முகத்தில் இத்தனை வருடங்களாகப் பார்த்திருந்ததால், ஓரளவு அவனை நன்றாகவே புரிந்துவைத்திருந்தாள். ஆனாலும், குழந்தை பெற்றுக்கொள்வதுதான் எத்தனை சந்தோசம்? தன்னைப்போலவே பெரிய பெரிய கைகளும் கால்களும் உருண்டை முழிக் கண்களும் தடித்த உதடுகளுமாய் இரண்டு குழந்தைகள். வலிமையான குட்டி யானைகளைப்போல் அவர்கள் வளர்வதைப் பார்க்க எத்தனை மகிழ்ச்சியாய் இருக்கும்? நினைத்தபோதே அவளுக்கு மார் வீங்கி முட்டியது. இந்த விருப்பத்தைத் தனக்குள்ளேயே வைத்துதான் சந்தோசப்பட்டுக்கொள்ள முடியுமா? இரவுகளில் உறங்க முடியாமல் தவித்தாள். ஒவ்வொரு முறையும் புதிய மருத்துவமனைக்குச் செல்லும் போதெல்லாம், “இன்னும் கொஞ்ச நாள் முயற்சி பண்ணிப் பாப்பமே ஜோதி” என்றுதான் சொல்வானே தவிர, தன்னிடம் குறையிருக்கிறது என்பதை அவன் இத்தனை நாள்கள் வெளிப்படுத்தியிருக்கவில்லை. ஆக, இந்த விஷயத்திற்கு உடன்படமாட்டான் என்பது அவளுக்குத் தெளிவாக விளங்கியது. இரவுகளில் தன்னை இறுக அணைத்து உறங்கும் செல்வராஜே அந்த நீலநிற இரவு விளக்கின் வெளிச்சத்தில் ஒரு குழந்தையாகத்தான் தெரிவான்.

மருத்துவமனை முயற்சிகள் முடிந்து, ஆன்மிக வழிகளின் பக்கமாக அவன் திரும்பியபோது, ஒவ்வொரு பெளர்ணமி தினத்தன்றும் சதுரகிரி மலையேறப் போகிறோம் என்கிற எண்ணமே அவளுக்கு உற்சாகம் தந்தது. குடும்பம் குழந்தை என்பதற்கு அப்பாலும் ஒரு பெண்  சந்தோசம்கொள்ள எத்தனை விஷயங்கள் இருக்கின்றன. காட்டுவழிப் பயணம் அவளுக்குப் புதிதல்ல. கண்ணகிக் கோவிலுக்குப் பல வருடங்கள் நடந்து பழகியவள். இரவில் காடு, பல்லாயிரம் கண்கொண்டு விழித்திருக்கையில் ஒரு மனிதன் எந்த ரகசியங்களும் இல்லாமல் பயணிக்க முடியும். காட்டின் முன்னால் பொய்யாய் எந்த ஒன்றையும் செய்ய முடியாது. அதனாலேயே கடவுளின் மீது அவள் கூடுதல் நம்பிக்கைவைத்தாள். அவனைவிடவும் பெளர்ணமி நாள்களில் ஊருக்கு வந்து செல்வதில் அவளுக்கு அலாதியான விருப்பம். இந்த மலைக்காகவும் காட்டிற்காகவுமே இந்த ஊரின் மீது சொல்லொண்ணா பிரேமை வளர்ந்தது ஒவ்வொரு நாளும். கருப்புதான் ஒவ்வொரு முறையும் அவர்களுக்கு வழிகாட்டியாய் உடன்வருவான். காடு தொடங்கும் வரை, உடன் வருகிறவர்கள் குறித்து இருக்கும் சிந்தனையெல்லாம் காடு தொடங்கிய நொடியிலேயே அவளுக்கு மறைந்து போய்விடும். ஊரின் வீதிகளில் திருவிழாக்களில் பார்த்துப் பழகிய யானையை ஓர் அதிகாலையில் முதல் முறையாகக் காட்டில் வைத்துப் பார்த்தபோது, அவளின் காதுகள் விடைத்துக்கொண்டன. ஆம், ஒற்றை யானை. காட்டில் யார் ஒருவராலும் வீழ்த்திவிட முடியாத பிரமாண்டமான யானை. தனக்கருகில் மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதைப் பொருட்படுத்தாத அந்த அபூர்வ மிருகத்தை மெய்மறந்து பார்த்தாள். யானைக்கும் அவளுக்குமான பழைய கதைகள் எல்லாவற்றையும் அறிந்திருந்த செல்வராஜ் உடன் வந்த ஆள்களோடு சேர்ந்து வம்பாக இழுத்துக்கொண்டு வந்தான்.

ஊர் வந்தபிறகு எப்போதும்போல் இயல்பாகிவிட்ட ஜோதி, “எனக்கென்னவோ மஹாலிங்கத்தோட அருளால நம்மளுக்குச் சீக்கிரமே புள்ள பொறந்திரும்னு தோணுது மாமா” என நம்பிக்கையாகச் சொன்னாள். இந்த வார்த்தைகளுக்காகவே செல்வராஜ் இன்னும் இரண்டு முறை மலையேறி வரவும் தயாராக இருந்தான். அதன்பிறகு பெளர்ணமி நாள்களை அவர்கள் தவறவிடுவதில்லை. காட்டில் உலவும் தருணங்களில் தன் சுயம் கண்டுகொண்ட பூரிப்பில் இருந்தவளுக்கு, இன்னொரு முறை அந்த மருத்துவர் தன்னைச் சந்திக்க வரும்படி அழைத்தபோது என்னவோ போலிருந்தது. ஜோதி மறுத்தும், மருத்துவர் இரண்டொருமுறை திரும்பத் திரும்ப அழைத்ததால் கடைசியாக ஒருமுறை சந்தித்து வரலாமெனச் சென்றாள். “டாக்டர்  நான் நல்லா யோசிச்சுப் பாத்துட்டேன். நீங்க சொன்னது சரியா வராது. என்னய விட்றுங்க.” என உறுதியாக மறுத்தாள். அந்த டாக்டர் சிரித்தபடி “நீ அதுக்கு ஒத்துக்கமாட்டன்னு எனக்குத் தெரியும்மா. ஆனா, உன்னால வேற ஒண்ணு செய்ய முடியும்.  அதுக்குத்தான் வரச் சொன்னேன்.”  என்றாள். ஜோதிக்கு இந்தப் புதிய கோரிக்கை என்னவாய் இருக்குமென்கிற தயக்கம். “நீ பயப்படற மாதிரி ஒண்ணும் இல்லம்மா. எப்பிடி ஆண்களுக்கு உயிரணுக்கள் குறைவா இருக்கோ அதே மாதிரி சில பெண்களுக்குக் கருமுட்டைகள் ரொம்பக் குறைவா இருக்கும். ரெண்டு பேருக்கும் ஆரோக்கியமா இருந்தாதான் ஒரு குழந்தை உருவாகும். அப்பிடிக் கருமுட்டை குறைவா இருக்கிற பெண்களுக்கு உன்ன மாதிரி ஆரோக்கியமா இருக்கிற பெண்களோட கருமுட்டையத் தானம் பண்ணலாம். உனக்கு இது சம்மதம்னா மட்டுந்தான் இதுவும்.” தனது இந்தக் கோரிக்கையை நிச்சயம் அவள் மறுக்கமாட்டாளென டாக்டர் நம்பினார். ஜோதி அமைதியாக யோசித்தாள். தன்னால் ஆரோக்கியமான ஒரு குழந்தை உருவாக முடியுமென்றால், அது யாருக்குக் கிடைத்தால்தான் என்ன? குறைந்தபட்சம், எங்கோ தனது உயிரின் ஒரு பகுதி புத்தம் புதிய ஜீவனாய் வளருமென நினைத்தபோதே முரட்டுக் கைகளும் கால்களும் உருண்டைக் கண்களும்கொண்ட அந்த விநோதக் குழந்தையின் முகம் நினைவுக்குவந்தது. சிரித்தபடியே ஜோதி சம்மதித்தாள்.

முதல்முறையாகக் கருமுட்டை தானம் செய்துவிட்டு, வீடு திரும்பிய தினத்தில் ஜோதிக்கு இனம் புரியாத சந்தோசம். அவர்கள் தந்த தொகையைக்கூட வாங்கிக்கொள்ள மறுத்துவிட்டாள். தன் கனவு எங்கோ யாருக்கோ நிஜமானதாய் இருக்கப்போகிறது. சந்தோசத்தைப் பகிர்ந்துகொள்வது என்பதன் புதிய அர்த்தமாய்த் தனது செயல் தோன்றியது. ஆனால், அவள் செல்வராஜிடம் இதைச் சொல்லியிருக்கவில்லை. தனக்கேயான இந்த ரகசிய உலகிற்கு வெளியிலேயே அவனை வைத்திருக்க விரும்பினாள். அவனுக்கு உரிமையே இல்லாத ஒன்றில் உரிமைகொண்டாடும் எண்ணம் ஒருநாளும் அவனுக்கு வந்துவிடக் கூடாதென்கிற எச்சரிக்கையும் அதை மறைக்க ஒரு காரணம். மூன்று மாதங்களுக்குப் பிறகு, இவளே மருத்துவரை அழைத்து, ‘திரும்பவும் எப்போது வந்து தானம் செய்யட்டும்’ எனக் கேட்டாள். “நீ நெனைக்கிற மாதிரி அடிக்கடி வந்தெல்லாம் டொனேட் பண்ணிட முடியாது ஜோதி. உடம்பு கெட்டுப்போயிடும். தேவைப்படும்போது நானே கூப்பிடுவேன் சரியா?” என டாக்டர் சொன்னதைக் கேட்க இவளுக்கு ஏமாற்றமாய் இருந்தது. ஒவ்வொரு மாதமும் வீணாகத்தானே போகிறது, யாருக்கேனும் பயன்பட்டால் என்னவென்று நினைத்தற்குப் பின்னால் ஒவ்வொரு மாதமும் யாரோ ஒருவரின் மூலமாய் தனது புதிய கரு வளரட்டுமே என்கிற பேராசை. இந்தப் புதிய சந்தோசத்திற்குப் பின்னால் செல்வத்தோடு கூடும்போதெல்லாம் அவன் தன்னை எதிர்கொள்ள முடியாமல் அச்சம்கொள்வதைக் கவனித்தாள். இத்தனை காலம் அவளை ஆக்ரமித்திருந்தவனுக்கு இப்போதுதான் அவளது பலம் புரிந்தது.

முதல்முறை காட்டில் அந்த யானையைக் கண்டதற்குப் பின்பாகத்தான் தனக்கு இப்படியானதொரு சந்தோசம் கிடைத்திருக்கிறதென ஜோதி நம்பினாள். கருமுட்டைகளைத் தானம் செய்யத் தொடங்கிய பிறகு, ஒவ்வொரு முறை மலையேறும்போதும் அவள் மனம் காட்டில் அந்த யானையைத் தேடி ஏமாறும். ஒரேயொரு முறை அதனருகில் நின்று, கண்ணோடு கண் பார்த்து நன்றி சொல்ல வேண்டும் அல்லது அதன் துதிக்கையை இறுக அணைத்து முத்தமிட்டால் போதும். யானையின் கண்களை நேர்கொண்டு பார்த்தால் புத்தி பேதலித்துப்போகுமென அக்காவும் அப்பத்தாவும் சொன்னவையெல்லாம் எத்தனை பொய்களென்பதைப் பின்னொருநாள் அவர்களுக்குச் சொல்லியே ஆக வேண்டுமென நினைத்துக்கொள்வாள். அந்த மலையும் மரங்களும் மஹாலிங்கமும் அங்கேயேதான் இருந்தார்கள். அந்த யானை மட்டும் திரும்பவும் அவளின் கண்களில் பட்டிருக்கவில்லை.

களிறின் நிழலில் கனிதல்

காற்றின் ஒலியெனச் சொல்ல முடியாத  பேரோசை வெளியெங்கும் சூழ்ந்திருந்தது. பல்லாயிரம் குதிரைகளின் குளம்பொலியாய் இருக்கலாம்; யானைக் கூட்டங்களின் பிளிறலாய் இருக்கலாம். எதுவானாலும் அசாதாரணத்தின் கொந்தளிப்பு அந்த இரைச்சல்.  மஹாலிங்கத்தைத் தரிசித்துவிட்டு வரும் வழியில், ‘இதென்ன முனியின் அலம்பலா?’ அச்சத்தில் கருப்புவுக்கு மூத்திரம் முட்டி வயிறு வலிகண்டது. அருகிலிருந்த அடர்ந்த மாமரத்தை ஒட்டிச் சிறுநீர் கழிக்க ஒதுங்கினான். தரையெங்கும் படர்ந்திருந்த மாமரத்திலிருந்து காட்டமான மா வாசனை.  தனித்திருப்பதான அச்சத்தில் கால்கள் நடுங்கினபோது, இரைச்சலின் சத்தம் அதிகமானது. சிறுநீர் முன்னும் பின்னுமாய்த் தடுமாறி அவன் கால்களை நனைத்தபோது, கருப்புவுக்கு மூத்திரம் நின்றுபோனது. முனியின் மீதிருந்த அச்சம் ஒரு நொடி தன் மதினியின் நினைவுகளாய் மாற, அவள் திரும்பி வருகிறாளாவென எட்டிப் பார்த்தான். அந்தப் பாதையில் அவளின் நிழல் மட்டுமே இடைவெளியின்றி படர்ந்திருந்தது. செல்வராஜும் மற்ற ஆள்களும் இன்னும் அச்சம் விலகாமல் அதேயிடத்தில் நின்றுகொண்டிருந்தார்கள். யானையின் பிளிறலும் நீரை ஆவேசமாக அது வாரி இரைக்கும் சத்தமும் சீரான இடைவெளியில் கேட்கத் தொடங்கியபோது எல்லோருக்குள்ளும் ஒரு நடுக்கம்.

“அண்ணே நீயும் நானும் மட்டும் ஓட வரைக்கும் போயி என்னன்னு பாப்பமா? ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆயிரப் போகுது?” திரும்பி வந்த கருப்பு செல்வராஜிடம் சொன்னபோது, மற்றவர்களும் அவனை ஆமோதித்தனர். “ஏப்பா நாங்க சொல்ற வரைக்கும் யாரும் எங்கியும் நகராதிக.” கருப்பு அவர்களின் பதிலுக்குக் காத்திராமல் வேகமாக நடக்க செல்வராஜும் அவனைத் தொடர்ந்தான். விடியலுக்கான வெளிச்சம் மெதுமெதுவாய் வானில் நிரம்பிக் கொண்டிருக்க, இரண்டு பேரும் ஓடையின் சத்தத்தைக் கேட்க முடிகிற நெருக்கத்திற்கு வந்துவிட்டிருந்தனர். தூரத்திலிருந்தே ஓடையின் தெற்குப் பக்கமாய் அசையாமல் ஒரு முரட்டு யானை குனிந்து நீர் அருந்திக்கொண்டிருப்பதை இருவரும் கவனித்தார்கள். எப்போதும் ஓடைக் கரையிலிருந்தே நீர் அருந்தும் மிருகங்களைப் போல் இல்லாமல், இந்த யானை நீருக்குள் இறங்கியிருந்தது. யானையின் இரண்டு கால்களும் நீரில் பாதி மூழ்கியிருக்க அவ்வப்போது யானை, துதிக்கையால் நீரை வாரி இரைத்தது. ஆனால், இந்த ஜோதி எங்கு போனாள்? இருவரும் இன்னும் சில அடிகள் முன்னால் நடந்தனர். இப்போது, வெளிச்சம் யானையின் உடலும் அதன் நீர் படர்ந்த நீண்ட வாலும் தெரியும் அளவிற்குத் தெளிவாகியிருக்க, யானையின் தந்தம் இருக்குமிடத்திலிருந்து இரண்டு மனிதக் கால்கள் மட்டும் அதன் இரு பக்கக் காதுகளையும் நீரோடு வருடிக் கொண்டிருப்பதைக் கண்டு உறைந்துபோயினர். அந்தக் கால்களில் அச்சமோ நடுக்கமோ இல்லை. யானையின் கால்களைப்போலவே உறுதி. கருப்புவின் கைகளை இறுகப் பற்றிக்கொண்டு செல்வராஜ் இன்னும் சில அடிகள் முன்னேறியபோது, யானை உற்சாகமாகத் தன் உடலை வேறு பக்கங்களில் அசைத்தது. அதிகாலையின் வெளிச்சமும் நீர்மையும் பட்டு, பொன்னிறத்தில் மினுங்கும் அதன் தந்தத்தின் மேல் அதே நிறத்தில் சின்னதொரு உடையுமில்லாமல் ஜொலித்தது ஜோதியின் உடல். யானையின் முன்நெற்றியில் முகம் சாய்த்து தந்தத்தில் வலுவாக உட்கார்ந்திருந்தவளைத் தனக்கே தனக்கான உடமையைப்போல் துதிக்கையால் அது இறுக அணைத்திருந்தது. தன்னுடலில் ஒவ்வொரு பாகத்தையும் அந்த யானைக்கென அவள் தாரைவார்த் திருப்பதைத் துதிக்கையில் படர்ந்திருந்த ஸ்தனங்களும் தந்தங்களில் பெரு விருப்போடு அமர்ந்திருந்த நிதம்பமும் தெளிவாய் உணர்த்தின. கழுத்திலிருந்து நீண்டு விரிந்திருந்த ஜோதியின் நீள் கூந்தல் நீர்ப்பாம்புகளாய் அலைய, விடியலைக் காணத் துணிவில்லாத அச்சத்தோடு சகோதரர்கள் இருவரும் வந்த வழியிலேயே வேகமாய்த் திரும்பி நடந்தனர்.

*நாலாயிர திவ்வியப் பிரபந்தப் பாடல் ஒன்றிலிருந்து எடுத்தாளப்பட்டது.

- லஷ்மி சரவணகுமார்

ஓவியங்கள்  : கோ.ராமமூர்த்தி

https://www.vikatan.com/

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வடக்கு கிழக்கில் உள்ளவர்கள் ஹிந்தியும் படித்தால் இன்னும் முன்னுக்கு வரலாம் ...என்பது எனது கருத்து ...பிராந்திய வல்லரசின் ஆட்சி மொழி தெரிந்திருந்தால் அதனுடாக‌ தமிழ் மக்களுக்கு நல்ல எதிர்காலம் கிடைக்கும்  ...சிறிலங்கா இறையாண்மை உள்ள நாடு (ஹிந்தி மொழி தெரியாத காரணத்தால் தான்)  இந்திய அரசுடன்  அடிக்கடி மீன்பிடி பிரச்சனை வருகின்றது ... சிறிலங்கன் கடற்படையினர் இந்திய‌ மீனவர்களை கைது செய்கின்றனர் ...வடக்கு கிழக்கில் அமைச்சராக இருப்பவர்கள் நிச்சயமாக ஹிந்தி படிக்கவேண்டும்...வடக்கு மாகாண‌ ஆளுனர் நாலு மொழிகளில் திறைமையுடையவராக இருந்தால்   ....பிராந்திய வல்லரசை இலகுவாக சமாளிக்க  முடியும்..மீனவர் பிரச்சனையும் .. அவர் என்ன முற்றும் துறந்த புத்தரே... சிங்களவர் தானே ..தங்கள் மொழியை தாண்டி சிந்திக்க முடியவில்லை 
    • பொருளாதர பிரச்சனை இருப்ப‌வன் புலம்பெயர்ந்து தனது பொருளாதாரத்தை ஈட்டிக்கொள்வான் ....அந்த புலம் பெயர்ந்தவனை கொண்டே தாயகத்தின் பொருளாதாரத்தை உயர்ந்த ஒர் மாகாண சுயாட்சி தேவை.... இது சிறிலன்கன் என்ற நாட்டுக்கு நல்லது ...இந்தியவை பார்த்தாவது திருந்த வேண்டும் ....புதுச்சேரிக்கே மாகாண சுயாட்சி உண்டு ... நான் மாற மாட்டேன் பனங்காட்டு நரி...நம்ம டக்கியரின் விசிறி...மத்தியில் கூட்டாச்சி மாகாணத்தில் சுயாட்சி😅
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • கொஞ்சம் அழ இரண்டு ரீல்ஸ் ....... சரமாரி முத்தம் பெறவேண்டிய வயசில் தாயை இழந்துவிட்டது, அவள் கல்லறைக்கு முத்தம் கொடுத்து தன் கவலையை மறக்கிறது.   மகவை இழந்த சின்ன தாயை மகனாகி ஆறுதல் சொல்லி தேற்றுகிறது. கொஞ்சம் சிரிக்க மூண்டு ரீல்ஸ் ...................... திமிர் புடிச்ச குழந்தை   எனக்கு அடிவிழும்வரைதான் இன்னொருவனுக்கு எப்படி கவனமாய்  இருக்கவேண்டுமென்று அட்வைஸ் பண்ணலாம்.   இரு மம்மி, இந்த குண்டாவால போடு அந்த  குல்பி ஐஸ் விக்குறவனுக்கு      பொறுப்புணர்வுக்கு இரண்டு ரீல்ஸ் ......... வீட்டில் மொப் அடிக்கும்போது மனிசனே கொஞ்சம் நகர்ந்து நிக்கோணும் எண்டு நினைப்பதில்லை   ஐந்து பெரிதா ஆறு பெரிதா? அறிவு என்று வரும்போது ஆறைவிட ஐந்துதான் பெரிது.  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.