Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலை புலிகளின் வான் தாக்குதல் ஏற்படுத்தியிருக்கும் உணர்வலைகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலை புலிகளின் வான் தாக்குதல் ஏற்படுத்தியிருக்கும் உணர்வலைகள்

[04 - April - 2007]

விடுதலைப்புலிகளின் இலகு விமானம் 26.03.07 இல் கட்டுநாயக்க விமானப்படைத்தளம் மீது நடத்திய தாக்குதலானது உள்நாட்டு மற்றும் சர்வதேசளவில் அதிர்ச்சியளித்திருப்பதைக் காணலாம். இது இத்தகைய அமைப்பொன்றினால் உலகில் நடத்தப்பட்ட முதலாவது தாக்குதல் என்ற வகையில் பல்வேறுபட்ட உணர்வலைகளைத் தோற்றுவித்துள்ளது. இத்தாக்குதலானது இலங்கைக்கு மட்டுமன்றி, உலக நாடுகளுக்கும் ஒரு அச்சுறுத்தலாகுமென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ விசேடமாக கூட்டப்பட்ட அரசியல் கட்சிகள் மாநாட்டில் கூறியுள்ளார். பயங்கரவாதம் முற்றாகக் களையப்பட வேண்டுமென்பதை இச்சம்பவம் மேலும் உணர்த்தியுள்ளதாகவும், அதற்கு எல்லோரினதும் ஒத்துழைப்பு அவசியமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார். மேற்படி, மாநாட்டில் ஐக்கிய தேசிய கட்சியும் (ஐ.தே.க.) தமிழ் தேசிய கூட்டமைப்பும் (த.தே.கூ.) பங்குபற்றவில்லை. இவ்விரு கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதா இல்லையா என்பது தெரியவில்லை. பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் மற்ற எல்லா கட்சிகளும் பயங்கரவாதம் ஒழித்துக் கட்டப்பட வேண்டும் எனும் கூட்டுப் பிரகடனம் ஒன்றை வெளியிட்டிருந்தன.

பாதுகாப்பு செயலாளர் விசனம்

ஜனாதிபதி கூறியது போலவே, பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷவும் விடுதலைப்புலிகள் மேற்கொண்ட வான் தாக்குதலானது சர்வதேச ரீதியானதொரு அச்சுறுத்தலெனவும், உலகின் ஏனைய பயங்கரவாத இயக்கங்களும் புலிகள் வழியைப் பின்பற்றுவதற்கு இடமுண்டு எனவும் எச்சரித்துள்ளார். புலிகளை 2 அல்லது 3 வருடங்களில் முற்றாக ஒழித்துவிட முடியுமென பாதுகாப்புச் செயலாளர் முன்னர் பகிரங்கமாக அறிவித்திருந்தமை தெரிந்ததே. விடுதலைப்புலிகளை குறைத்து மதிப்பிடுவது மிகத் தவறு. மற்றும் தேசிய இனப்பிரச்சினைக்கு நம்பகத்தன்மையான அரசியல் தீர்வுத்திட்டமொன்றினை முன்வைக்காமல் அவர்களைத் தோற்கடிப்பது கடினமென அண்மையில் அமெரிக்க தூதுவர், றொபேட் ஓ பிளேக் கூறியிருந்தாரல்லவா? ஆனால், அர சாங்கம் அதனைப் புறந்தள்ளிவிட்டது. மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் விடுதலைப்புலிகளின் தாக்குதலால் தூதுவர் பிளேக் நல்ல பாடத்தினை நேரடியாகவே படித்திருப்பார் என சிங்கள கடும்போக்காளர் அவரைச் சீண்டியிருந்த போதிலும் பிளேக் அதனைப் பொருட்படுத்தவில்லை என்பதைக் காணலாம்.

விடுதலைப்புலிகள் வான் தாக்குதல் நடத்திய பின்னர், அவர்களை ஒழித்துக்கட்ட வேண்டும் எனும் அரசாங்கத்தின் பிரயத்தனம் அதி தீவிரமடைந்துள்ளது. தமது வான்படை பலத்தினைக் கட்டியெழுப்புவதற்கு விடுதலைப்புலிகள் கடந்த பல காலமாக முயற்சிகள் மேற்கொண்டு வந்துள்ளமை ஆட்சியாளர் அறியாததொன்றல்ல. எந்த வகையிலாவது, அதாவது, "சமாதானத்துக்கான யுத்தம்", "தமிழரை! விடுதலைப்புலிகளின் பிடியிலிருந்து மீட்பதற்கான யுத்தம்" போன்ற யுக்திகள் மூலம் விடுதலைப்புலிகளை இராணுவ ரீதியாக மடக்க வேண்டுமென ஆட்சியாளர் செயற்பட்டு வந்தமையால், விடுதலைப்புலிகள் தமது இராணுவக் கட்டமைப்புகள் முதலியவற்றை பலப்படுத்துவதில் அயராது ஈடுபட்டுக் கொண்டிருப்பார்கள் எனும் யதார்த்தத்தினைப் புரிந்து கொள்வது யாருக்கும் கடினமாயிருக்க முடியாது.

மறுபுறத்தில், ஆட்சியாளர் பேரினவாத சக்திகளுக்கு வளைந்து கொடுக்காமல், துணிச்சலாக இதய சுத்தியாக காத்திரமான நம்பகத்தன்மை கொண்ட அரசியல் தீர்வுத்திட்டமொன்றினை முன்வைத்திருந்தால் அதனை விடுதலைப்புலிகள் புறந்தள்ளக்கூடாதென சர்வதேச ரீதியாகவும் கடுமையான அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கும் என்பது பரவலான அபிப்பிராயமாக காணப்படுகிறது. எனவே, விடுதலைப் புலிகள் மேற்கொண்ட வான் தாக்குதலையிட்டு ஆவேசப்பட்டுச் செயற்படுவது நாட்டுக்கு நல்லதல்ல. ஏனென்றால், அது மேலும் மோசமான எதிர்விளைவுகளைக் கொண்டு வராது என்பதற்கு உத்தரவாதம் இல்லை என்பதையே கடந்தகால அனுபவங்கள் கூறுகின்றன.

ஐ.நா. செயலாளர் நாயகம் கோரிக்கை

இச்சந்தர்ப்பத்தில் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கி மூன் விடுத்திருக்கும் கோரிக்கையானது முக்கியமானதாகும். அதாவது, சம்பந்தப்பட்ட தரப்பினர் தாக்குதல், பதில் தாக்குதல் எனும் அழிவுப் பாதையில் தொடர்ச்சியாகப் பயணித்துக் கொண்டிருப்பதை விடுத்து, முன் நிபந்தனை எதுவுமின்றி பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்குமாறே மூன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனிடையே, சர்வதேச சமூகத்தினரின் அறிவுறுத்தல்கள் எமக்குத் தேவையில்லை, பேச்சுவார்த்தைகள் அவசியமற்றவை, யுத்தம் தொடர வேண்டும், விடுதலைப்புலிகள் நசுக்கப்பட வேண்டும் என ஜே.வி.பி., "பயங்கரவாதத்துக்கு எதிரான தேசிய இயக்கம்" போன்ற அமைப்புகள் அறைகூவல் விடுத்துள்ளன.

"இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பாரி லானுங் கெடும்" என்பது குறள். பல வருடங்களுக்கு முன் முன்னாள் ஐ.நா. செயலாளர் நாயகம் கோபி அனான் தமிழ் மக்கள் ஆளாக்கப்பட்டிருந்த அவலங்கள் தொடர்பாக குரல் கொடுத்த போது, முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் பொங்கி எழுந்தார். வேண்டுமென்றால், இலங்கையில் நுளம்புத் தொல்லையை நீக்குவதற்கு அனான் முயற்சி மேற்கொள்ளலாம். ஆனால், நாட்டின் வேறு விவகாரங்கள் தொடர்பாக அவர் தலையிடப்படாது என கதிர்காமர் கடிந்தார். அது போலவே, தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்து அவர்கள் சமத்துவமாகவும் கௌரவமாகவும் வாழ வழி சமைப்பதன் மூலம் தனிநாட்டுக் கோரிக்கை தானாகவே அகன்று விடும். அதனை விடுத்து, அவர்கள் முதலில் தனிநாட்டுக் கோரிக்கையை கைவிட வேண்டுமென நிபந்தனை விதிப்பது அர்த்தமற்றது. அதற்காகப் போராடும் உரிமை அவர்கட்கு உண்டு என முன்னாள் பிரித்தானிய் துணை வெளிவிவகார அமைச்சர் பீற்றர் ஹெயின் இலங்கைக்கு விஜயம் செய்து, கொழும்பு "பிரிட்டிஷ் கவுன்சில்" நிலையத்தில் ஆற்றிய உரையில் குறிப்பிட்டிருந்தார். அப்படியெல்லாம் கூறுவவதற்கு பீற்றர் ஹெயினுக்கு அருகதை இல்லையென கதிர்காமர் காரசாரமாக சாடியிருந்தார். பிந்திய காலகட்டங்களில் கதிர்காமர், ஜே.வி.பி. யினருடன் மிக நெருக்கமாகப் பழகி வந்தவர். விடுதலைப் புலிகளால் சமர்ப்பிக்கப்பட்டிருந்த இடைக்கால தன்னாட்சி அதிகார சபை (ISGA) நகலை ஜே.வி.பி.யினருடன் இணைந்து நடத்திய தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சரமாரியாக விமர்சித்து, அதன் மீது பேச்சுவார்த்தை நடத்துவதைக் கூட தடுத்தாள்வதில் பெரும் பங்கு வகித்தவர் கதிர்காமர்.

தயான் ஜெயதிலக

ஐ.நா.வின் இலங்கைக்கான புதிய தூதுவர் தயான் ஜயத்திலக்க, ஒரு சில நாட்களுக்கு முன்னர் தான் பதவிப் பொறுப்பு ஏற்றவர். இலங்கையை யாரும் மிரட்ட முடியாது என அவர் ஜெனீவாவில் நடந்து முடிந்த மனித உரிமைகள் சபைக் கூட்டத்தில் ஆற்றிய இறுதிக்கட்ட உரையில் கூறிவைத்தார். இலங்கை ஒரு "தரமான ஜனநாயக நாடு, தரம் வாய்ந்த ஜனநாயக சமூகம்" என்றெல்லாம் சூளுரைத்துள்ளார். அது உண்மையென்றால், எல்லா இலங்கையர்களும் நிச்சயமாக் சந்தோசப்படலாம். ஆனால், இலங்கைதான் ஆசியாவிலேயே மிகுந்த வன்முறைகொண்ட நாடு என ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு (AHRC) மிக அண்மையில் தெரிவித்ததோடு சூடானின் டர்ஃபூரையே மிஞ்சிவிட்டது எனவும் குறிப்பிட்டுள்ளது. ஜெனீவாவில் நடந்து முடிந்துள்ள மனித உரிமைகள் சபைக் கூட்டத் தொடரில் இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை மிகுந்த கவலைக்குரியதென வெவ்வேறு வட்டாரங்களால் விளக்கப்பட்டிருந்தது தெரிந்ததே. எவ்வாறாயினும், இலங்கை மீது ஐரோப்பிய ஒன்றியம் முன்வைத்திருந்த பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்படவில்லை. இது இலங்கை அரசுக்கு கிடைத்த வெற்றியென்று கருத முடியாது. குறிப்பாக இடர் முகாமைத்துவ, மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க மணித்தியாலக் கணக்காக மேற்கொண்ட பகீரதப் பிரயத்தனம் காரணமாகவே வாக்கெடுப்பு தவிர்க்கப்பட்டது.

பொருளாதார வளர்ச்சி

2006 இல் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதம் என்று மத்திய வங்கி அறிவித்துள்ளது. இது திறந்த பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட பின், எட்டப்பட்ட மிகக் கூடுதலான வளர்ச்சி வீதம் என கூறப்படுகிறது. இது எவ்வளவு தூரம் மக்களின் வாழ்க்கைத்தரத்தில் பிரதிபலித்துள்ளது என்பது ஒருபுறமிருக்க, தற்போதைய வளர்ச்சியானது 6 சதவீதத்துக்கு இறங்கியுள்ளதாக அறியக்கிடக்கிறது. இன்று போரை நிறுத்தி தேசிய இனப்பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காணப்படுமாயின் இரவோடிரவாக வளர்ச்சி மட்டம் 3 சதவீதத்தால் உயர வாய்ப்பு உண்டு என்பதை சென்ற டிசம்பரில் நடந்த இலங்கை அபிவிருத்தி மன்றக் கூட்டத்தில் உலக வங்கி உபதலைவர் பிறவுல் பட்டேல் கூறிய கருத்துக்களிலிருந்து புரிந்துகொள்ளலாம்.

வட அயர்லாந்து உடன் படிக்கை

வட அயர்லாந்தில் 26.03.2007 இல் DUP எனப்படும் ஜனநாயக ஒருங்கிணைப்பு கட்சித் தலைவர் இயன் பெயிஸ்லி மற்றும் சீன் ஃபெயின் அமைப்பின் தலைவர் ஜெரி அடம்ஸ் இருவருக்கும் இடையில் கைச்சாத்தாகிய சமாதான உடன்படிக்கை மிகுந்த வரவேற்புக்குரிய வரலாற்று நிகழ்வு ஆகும். அங்கே சமாதான முயற்சியில் இன்றியமையாத பங்காற்றியவராகிய போல் மேஃபி ஜனாதிபதியின் வேண்டுதளின் பேரில் அண்மையில் இலங்கை வந்து தனது அனுபவங்களை அக்குவேறு ஆணிவேறாக எடுத்துக் கூறினார். இலங்கையைப் போலவே அங்கேயும் 20 வருடங்களுக்கு மேலாக யுத்தம் நடந்தது. 3,000 பேர் கொல்லப்பட்டனர். ஆனால், யுத்தத்தின் மூலம் பிரச்சினைக்குத்தீர்வு கிடையாது என எல்லா தரப்பினராலும் உணரப்பட்டது. இலங்கையில் ஆகக் குறைந்தது 65,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், கொலைகள் தொடர்ந்த வண்ணமிருப்பது மிகுந்த வேதனைக்குரியதாகும். வட அயர்லாந்து போலவே ஸ்கொட்லன்ட் மற்றும் வேல்ஸ் மாநிலங்கள் முகங்கொடுத்துவந்த பிரச்சினையும் ஏற்கனவே தீர்க்கப்பட்டு விட்டன. குறிப்பாக, ஸ்கொட்லன்ட் மாநிலத்தை எடுத்துக் கொண்டால், அங்கே 209 அங்கத்தவர்கள் கொண்ட பாராளுமன்றம் உருவாக்கப்பட்டது. சர்வதேச அங்கீகாரம் பெற்ற தனிவேறான கிறிக்கற் குழு செயற்படுவதற்கும் இடமளிக்கப்பட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து, பெல்ஜியம், கனடா போன்ற பல நாடுகளில் சமஷ்டி ஆட்சி முறைமை வெற்றிகரமாக செயற்பட்டு வருவதைக் காணலாம். எனவே, மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் இராணுவ அணுகுமுறையை விடுத்து தனது அரசியல் தீர்வுத்திட்டத்தை துரிதப்படுத்த வேண்டும். தமிழருக்கு நீதி வழங்குவதே பயங்கரவாதத்திற்கு எதிரான பெரிய ஆயுதம் என மிக அர்த்தபுஷ்டியாக ஜனாதிபதி ராஜபக்ஷ சென்ற சுதந்திர தின உரையில் குறிப்பிட்டிருந்ததை மறந்து போவது நல்லதா? பிரச்சினையை விரைந்து தீர்த்து விட்டால் முதலீடுகள் தாமாகவே நிறைய வந்து சேரும். எனவே, அரசாங்கம் அரசியல் தீர்வை நோக்கி துரிதமாக நகர வேண்டியதே காலத்தின் கட்டாயமாகும்.

நன்றி தினக்குரல்

புலிகளிம் வான் தாக்குதலை சர்வதேசம் கண்டிக்காதது எமக்கு மகிழ்ச்சியே.

ஆனால் மகிந்தாவின் வெள்ளை வான் தாக்குதல்களையும் கண்டிக்காதது என்ன நியாயம் ?

புலிகளின்ர வான் தாக்குதல் மட்டுமல்ல அண்மையில் அம்பாறையில் வெடித்த குண்டிற்கும் எதுவும் தெரிவிக்கவில்லை .

நல்ல விடயம் தான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.