Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உணவிலும் உள்ளதோ உருப்படாத சாதி?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உணவிலும் உள்ளதோ உருப்படாத சாதி?

29.jpg

அ.குமரேசன்

விளைந்த தானியத்தில், முளைத்த காய்கனியில், அரிந்த இறைச்சியில் சாதி அடையாளம் ஏதுமில்லை. ஏனெனில் அவை பிரம்மனின் தலையிலிருந்தோ, தோளிலிருந்தோ, இடுப்பிலிருந்தோ, காலிலிருந்தோ பிறக்கவில்லை, பிரம்மனிடமிருந்தேகூடப் பிறக்கவில்லை. தானியத்துக்கும் காய்கனிக்கும் இறைச்சிக்கும் மதம் இல்லை. ஏனெனில் அதனை ஈஸ்வர-ஹரியோ, கர்த்தரோ, அல்லாவோ இன்னபிற கடவுள்களோ விளைவிக்கவில்லை.

உணவில் சாதியில்லையே தவிர, உண்ணும் மரபில் சாதி இருக்கத்தான் செய்கிறது. எந்த உணவை யார் சாப்பிடுகிறார்கள் என்பதில் இருக்கிற சாதி எப்படிச் சாப்பிடுகிறார்கள் என்பதில் மட்டும் இல்லாமல் போகுமா?

உண்ணும் நடைமுறைகள் பலவும் பழக்கத்தால் படிந்துபோனவை. அந்தந்த வட்டாரத்தில் என்ன உணவு கிடைத்தது என்ற நிலைமையைச் சார்ந்து உருவானவை. மனிதர்கள் பூமியின் கண்டங்களுக்கும் துணைக்கண்டங்களுக்கும் பிற நிலப்பரப்புகளுக்கும் சென்றேறிகளாகப் பரவியபோது உணவுப் பழக்கங்களும் தொற்றிக்கொண்டு பரவின. வந்தேறிய இடத்தின் இயற்கைச் சூழல்கள், வாழ்க்கை வாய்ப்புகள், உழைப்பு நிலைமைகள் ஆகியவற்றின் அடிப்படையில் உணவுப் பழக்கங்களில் புதியவையும் மாற்றங்களும் கலப்புகளும் ஏற்பட்டன.

கடும் உழைப்பாளிகளின் குடும்பங்களில் முழு மரக்கறி உணவு குடிபுகுந்ததும் உண்டு (“இன்னிக்கு நம்ம வீட்டுல விரதம், அதனால நான்-வெஜ் கிடையாது”), தாவரம் சாராத மற்ற உணவெல்லாம் தீட்டெனத் தள்ளியவர்களின் குடும்பங்களில் விலங்குக் கறிகள் நுழைந்ததும் உண்டு (“நாங்க மீன் மட்டும் சேர்த்துக்கிடுவோம், முட்டை வெஜ்தான்னு சயின்டிஸ்டுகளே சொல்லிட்டாங்களே”)...

தோசை மெலிந்தது ஏன்?

இப்படி வட்டாரம் சார்ந்தும், அங்கு கிடைத்த தானியங்களின் தன்மை சார்ந்தும், அதனடிப்படையில் அமைந்த உழைப்புத்தளம் சார்ந்தும், வாழ்நிலை சார்ந்தும் தோசையோ, சப்பாத்தியோ, ரொட்டியோ, புரோட்டாவோ மெலிதாக அல்லது தடிமனாக வார்க்கப்பட்டன. நன்கு மென்று, நெடுநேரம் சவைத்து விழுங்குகிற உழைப்பாளிகள், தங்களது சுவைக்கேற்ற தடிமனான தோசையை அல்லது கடினமான புரோட்டாவை நாடியிருப்பார்கள் என்பதை ஊகிப்பது கடினமல்ல. உடல் உழைப்பை உதறிவிட்டு உயரத்தில் ஏறிக்கொண்டவர்கள், தங்களது கடைவாய்ப் பற்களின் அரைத்திறனுக்கு ஏற்ப மெல்லிய தோசை அல்லது மென்மையான புரோட்டாவைத் தேர்ந்தெடுத்திருப்பார்கள். கூட்டத்தோடு குத்துப்பாட்டுக்கு ஆடுகிற கால்களுக்கும், சபாவில் சங்கீதத்துக்கு அரைக்கண் மூடி அசைகிற தலைகளுக்கும் உள்ள நுட்பமான வேறுபாடு போன்றது இது.

இதைச் சொல்வதால், ஒன்றை மெல்லியதாகச் சாப்பிடுகிறவர்கள் எல்லோருமே “மேல்” நிலைப் புத்தி உள்ளவர்கள் என்றோ, தடிமனான ஒன்றை விரும்புகிறவர்கள் எல்லோருமே பாட்டாளிக் குணம் கொண்டவர்கள் என்றோ அர்த்தமல்ல. குடும்பங்களில் நிகழ்ந்துகொண்டே இருக்கிற உணவுக் கலப்போடு தொடர்புள்ளது இது.

நவீன மனுவாத வேலி

உணவில் சாதி இல்லவே இல்லை என்று சொல்லி மறுப்பது எதையும் ஆராய்ந்தறியும் முனைப்புக்குக் கதவடைத்துத் தாழ் போடுகிற வேலையாகிவிடும். அதே போல், “நீ தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்திருந்தாலும் மென்மையாகச் சாப்பிடுகிறாய் என்றால் உன்னில் மேல் வர்ணக் குணம் பாய்ந்திருக்கிறது என்றுதான் அர்த்தம்” என்று பட்டை கட்டிவிடுவதும் மானுடவியல் விசாரணைப் பாங்கிற்குக் கால் விலங்கு போடுவதாகிவிடும்.

அந்தந்த சமூகப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் அவரவர்க்கு வகுக்கப்பட்ட தடிமத்திலும் கலவையிலும் சுவையிலும்தான் சாப்பிட்டுக்கொண்டிருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதும், பட்டை கட்டுவதும் ஒருவகை நவீன மனுவாத வேலியாகிவிடும்.

29a.jpg

காபி, டீ பழக்கமும் சமூக அடையாளமும்

தமிழகத்திற்குத் தேநீர் எப்படி வந்தது என்ற கதை தேநீரைப் போலவே சுவையானது. தேனி உள்ளிட்ட பகுதிகளில் தோட்டங்களை வளைத்துப்போட்டுத் தேயிலை பயிரிடத் தொடங்கிய நிறுவனங்கள், அந்த வட்டாரத்திலும் பிறகு மாநிலம் முழுக்கவும் தொழிற்சாலை வாயில்களுக்கு முன்பாகக் கூடாரம் அமைத்து, தொழிலாளர்களுக்கு இலவசமாகத் தேநீர் வழங்கின. தெருத்தெருவாகச் சென்று அவர்களது குடும்பங்களுக்கும் தேநீர் தரப்பட்டது. சுவையோடு சுறுசுறுப்பைத் தந்த தேநீரை, உழைத்துக் களைத்த தொழிலாளர்கள் விரும்பிப் பருகினார்கள் “டீ குடிக்காமல் நாள் நகராது” என்ற நிலைமைக்குத் தொழிலாளர்களும் அவர்களின் குடும்பங்களும் வந்த பிறகு இலவச வழங்கல் நிறுத்திக் கொள்ளப்பட்டது. ஆனால், டீ என்றால் அது தொழிலாளர் பானம் என்பதாக ஒரு படிமம் உருவாக்கப்பட்டுவிட்டது.

இதற்கு நேர்மாறாக, காபி ஒரு மேல்தட்டு பானம் என்ற படிமமும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், 9ஆம் நூற்றாண்டில் எத்தியோப்பியா புல்வெளிப் பகுதியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த இளைஞன் ஒருவன், குறிப்பிட்ட ஒரு செடியின் சிவப்புக் காய்களைக் கடித்துத் தின்ற ஆடுகள் உற்சாகமாகத் துள்ளிக் குதித்து ஓடுவதையும், நெடு நேரத்திற்கு உற்சாகம் மாறாமல் இருந்ததையும் பார்த்து, அந்தக் காய்களின் கொட்டைகளைத் தானே கொதி நீரில் போட்டுத் தயாரித்த பானம் அதே போன்று சுறுசுறுப்பைக் கொடுத்ததை உணர்ந்தானாம். அவனிடமிருந்தே பின்னர் மன்னர் குடும்பத்திற்குத் தகவல் போனது, படிப்படியாக உலக நாடுகளுக்குப் பரவியது என்ற வரலாற்றுக் குறிப்பும் இருக்கிறது.

தமிழ்நாட்டுக்குள் எப்போது யார் மூலமாக வந்ததோ தெரியவில்லை. ஆனால் காபி குடிப்பது மேல்தட்டினர் நாகரிகம் என்ற அடையாளம் ஏற்பட்டுவிட்டது. டிகாக்‌ஷன், ஃபில்டர் என்றெல்லாம் இல்லாமல் நேரடியாகக் கருப்பட்டியில் காபித் தூள் போட்டுத் தண்ணீரை ஊற்றிக் கொதிக்கவைத்துப் பரிமாறுகிற கருப்பட்டிக் காபி எளிய குடும்பங்களின் பானமாக அடையாளப்பட்டது.

அண்மைக் காலமாக, நெடுஞ்சாலைகளில் ‘கும்பகோணம் டிகிரி காபி’ அறிவிப்புடன் கடைகள் வாகன ஓட்டிகளை வரவேற்கின்றன. காபி மட்டுமல்லாமல், அது வழங்கப்படும் பித்தளை டம்ளரிலும் ‘பாரம்பரியம்’ பராமரிக்கப்படுவதாகக் கூறுகிறார்கள். சென்னையில் அலுவலகம் செல்லும் வழியில் ஒரு காபித் தூள் விற்பனைக் கடையில் “பாரம்பரியம் உள்ள பிராமணாள் காபி கிடைக்கும்” என்று விளம்பரப்பலகை வைக்கப்பட்டிருந்ததைக் கவனித்திருக்கிறேன். பிராமணாள் காபிக் கடை என்றிருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது, பிராமணாள் காபி இருக்க முடியுமா? அந்தக் கடைக்காரர் அறியாமல் செய்ததாகச் சொல்லிவிட முடியுமா? அவர்களுக்கு மட்டும்தான் அவர் விற்பனை செய்கிறாரா என்பதும் தெரியவில்லை.

இரண்டும் ஒன்றல்ல

29b.jpg

முன்பு ‘பிராமணாள் ஓட்டல்’ என்றே அறிவிப்புப் பலகையில் எழுதிவைத்திருப்பார்கள். அதை அழிப்பதற்குப் பெரிய போராட்டம் தேவைப்பட்டது. தற்போது, வீம்புக்காகவே சிலர் அவ்வப்போது ஆங்காங்கே ‘பிராமணாள் கபே’ என்று துவங்குகிறார்கள். அதற்கு எதிர்ப்புக் கிளம்பியபோது, எதிர்ப்பாளர்களை மடக்குவதாக நினைத்துக்கொண்டு, “தேவர் உணவகம் என்று இருப்பதை ஏன் எதிர்க்கவில்லை? நாடார் மளிகை என்று இருப்பதை ஏன் மாற்றவில்லை” என்றெல்லாம் கேட்டார்கள். அந்தத் தேவர் என்பது உணவக உரிமையாளரை மட்டுமே அடையாளப்படுத்துகிற சொல். அவருடைய பெயரோடு இணைந்து வந்த ஒட்டுச் சொல். நாடார் என்பது மளிகைக் கடையை நடத்துகிறவரின் பெயரோடு இணைந்த, அவரது சமூக அடையாளத்தைக் காட்டுகிற சொல். இந்த அடையாளங்கள் ‘இது தேவர்களுக்கான உணவகம்’, ‘நாடார்களுக்கான மளிகை’ என்பதாகப் பொருள் தருகின்றனவா? ஆனால், பிராமணாள் ஓட்டலில் அப்படி அடையாளப்படுத்துகிற வீம்பு இல்லையா? அந்த ஓட்டலை அதன் உரிமையாளருடைய பெயருடன் சேர்த்து அய்யர் என்றோ, அய்யங்கார் என்றோ குறிப்பிட்டால் யாரும் எதிர்க்கப்போவதில்லை. பிராமணாள் என்பது அப்படியொரு சாதி அடையாளச் சொல்லா, அல்லது சாதி ஆணவச் சொல்லா? இரண்டாவது வகைச் சொல்தான் என்பதாலேயே அதற்கு பிராமண சமூக மக்களிடமிருந்தேகூட ஆதரவு வரவில்லை.

சுயமரியாதை, பகுத்தறிவு, சமத்துவ இயக்கங்கள் வளர்த்துவிட்ட சிந்தனையின் காரணமாகத் தமிழகத்தில் மிகப் பெரும்பாலோர் தங்கள் பெயருக்குப் பின்னால் சாதியை ஒட்டிவைப்பதில்லை (அவர்களின் வீட்டுத் திருமண அழைப்பிதழ்களில் மட்டும் ஒட்டப்படும்!). இங்கே இப்படிக் கடைகளுக்கும் உணவகங்களுக்கும் சாதி அடையாள ஒட்டும், பேச்சு வழக்கில்கூட இல்லாமல் போகிற மாற்றமும் நிகழுமானால் அது கொண்டாடப்பட வேண்டியது. சாதி அடையாளங்களின் நுட்பமான வேர்ப் பின்னல்களைப் புரிந்துகொள்வது, சாதி ஒழிப்புப் போராட்டம் வலுப்பெறுவதற்கு ஓர் அடிப்படைத் தேவை.

எனது உணவு, எனது உரிமை

மாட்டுக்கறி உணவுக்கு எதிரான தாக்குதல்கள் சட்ட வழியிலும், சங் பரிவாரத்தினர் வழியிலுமாக வந்தபோது, அது இஸ்லாமியர்களின் உணவு உரிமைக்கு எதிரானது மட்டுமல்ல, இந்துக்களிலேயே மாட்டுக்கறி உணவு உட்கொள்கிற சமூகப் பிரிவுகளுக்கு எதிரானதுமாகும் என்று சுட்டிக்காட்டப்பட்டது. பல இடங்களில், மதவெறிச் செயல்திட்டத்துடன் இணைந்த அந்தத் தாக்குதலுக்கான எதிர்ப்பின் அடையாளமாக மாட்டுக்கறி உணவு விழாக்கள் நடத்தப்பட்டன. அவற்றில் இஸ்லாமியர்களும் தலித்துகளும் மட்டுமல்லாமல் மற்றவர்களும் வெகுவாகக் கலந்துகொண்டார்கள். மாட்டுக்கறி சாப்பிட்டேன், சாப்பிடுகிறேன், சாப்பிடுவேன் என்று சமூக ஊடகங்களில் படங்களுடன் பலர் பதிவிட்டார்கள். நெடுங்காலப் பழக்கத்தின் காரணமாக அதனைச் சாப்பிட இயலாதவர்கள் கூடக் கலந்துகொண்டு ‘எனது உணவு, எனது உரிமை’ என்ற முழக்கத்திற்குத் தங்களது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தினார்கள்.

29c.jpg

ஆக, உணவில் சாதி, மதம் இல்லை என்றாலும் நிச்சயமாக வர்க்கம் இருக்கிறது. அதுவும்கூட அந்த உணவின் குற்றமல்ல. பெரும் கார்ப்பரேட் கடைகளில் விற்பனையாகும் கார்ப்பரேட் நிறுவனங்களின் அரிசி மூடைகளும், குடும்ப அட்டைதாரர்கள் சார்ந்திருக்கிற இலவச அரிசியும் ஒன்றல்ல. எளிய உணவுகளாலும் மலிவு விலைகளாலும் வாடிக்கையாளர் வயிற்றை நிரப்புகிற கையேந்தி பவன்களும், மெனு கார்டில் உள்ள பெயர்களைப் புரிந்துகொள்ளவே தனிப்பயிற்சி தேவைப்படுகிற அரை வெளிச்சக் குளிரரங்குகளும் சமமல்ல.

இந்த உரையாடல்களின் இலக்கு வெறும் விவாதச் சுவைக்காக அல்லாமல், இப்படிப்பட்ட “உயர்தர” உணவுகள் ஒழிக்கப்பட வேண்டும் என்பதற்காகவும் அல்லாமல், எல்லா வகை உணவுகளும் எல்லோருக்கும் கிடைக்கிற உண்மையான சமபந்திக்கு இட்டுச்செல்வதாக இருக்கட்டும்.

(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: அ.குமரேசன், இதழாளர், மொழிபெயர்ப்பாளர், அரசியல் விமர்சகர். 30 ஆண்டுகளுக்கும் மேல் இதழியல் துறையில் அனுபவம் வாய்ந்தவர். ஆறு நூல்களை எழுதியுள்ள இவர் 25க்கும் மேற்பட்ட நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலச் செயற்குழு உறுப்பினராகச் செயல்படுகிறார். தீக்கதிர் இதழ் சென்னைப் பதிப்பின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றி அண்மையில் ஓய்வுபெற்றவர்

 

https://minnambalam.com/k/2018/10/30/29

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.