Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனித உரிமைகள்: யாருடையவை, யாருக்கானவை?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மனித உரிமைகள்: யாருடையவை, யாருக்கானவை?

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2018 நவம்பர் 22 வியாழக்கிழமை, மு.ப. 12:42

மனித உரிமைகள், இலங்கையின் முக்கிய பேசுபொருளாக, நீண்டகாலம் இருந்தன. இப்போது அதைப் பின்தள்ளிப் பல விடயங்கள் முன்னிலைக்கு வந்துள்ளன.   

இருந்தபோதும், உலகளாவிய ரீதியில் மனித உரிமைகள், இப்போது மீண்டும் முன்னிலைக்கு வந்துள்ளன.   
கடந்த சில வாரங்களில் நிகழ்ந்த நிகழ்வுகள், மனித உரிமைகள் பற்றிய புதிய கேள்விகளையும் வாதங்களையும் தோற்றுவித்துள்ளன. இவை மீண்டும் ஒருமுறை மனித உரிமைகள் யாருடையவை என்ற வினாவையும் யாருக்கானவை என்ற விவாதத்தையும் தோற்றுவித்துள்ளன.   

கடந்த வாரம், மியான்மாரின் ஆங் சான் சூகிக்கு வழங்கியிருந்த விருதை சர்வதேச மன்னிப்புச் சபை திரும்பப் பெற்றுக் கொண்டது. இது மியான்மாரிலும் உலக அளவிலும் வாதங்களையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியது.   

அதேவேளை, ஐக்கிய நாடுகள் சபையில் மியான்மாரில் றோகிஞ்சா முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதியைக் கண்டித்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில், சில நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.   இவ்வாக்கெடுப்பு, உலக அரசியல் சதுரங்கத்தின் இன்னொரு பக்கத்தை எடுத்துக் காட்டியது. 

இதேவேளை, இம்மாதத்தின் தொடக்கத்தில் நோர்வேயின் பேர்கன் நகரில் உள்ள ரப்டோ அறக்கட்டளை (Rafto Foundation) தனது வருடாந்த மனித உரிமை விருதை, போலாந்து நாட்டின் மனித உரிமைகளுக்கான ஆணையாளருக்கு வழங்கியதன் மூலம், ஐரோப்பாவில் நிகழும் மனித உரிமைச் சிக்கல்களைப் பொது வெளிக்குக் கொணர்ந்துள்ளது.   

இந்த மூன்று நிகழ்வுகளும், மனித உரிமைகள் குறித்து, மீண்டும் பேசுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளன. இதை, இப்போது பேசுவதற்கான தேவை இருக்கிறது. 

இலங்கையில் போர் அவலத்துக்குப் பின்னரான அரசியல் களத்தின் மய்யப்புள்ளியாக, மனித உரிமைகள் இருந்தன. அதைச் சுற்றியே, தமிழர் அரசியலும் புலம்பெயர் அரசியலும் இயங்கின.  

 மனித உரிமைகளின் பேரால், அமெரிக்காவும் மேற்குலகும் தமிழருக்கான நீதியைத் தருவார்கள் என்ற நம்பிக்கை ஊட்டி வளர்க்கப்பட்டது. அமெரிக்கா, மேற்குலகம், இந்தியா, ஜப்பான் என்பன, தமிழருக்கு ஆதரவாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிற்பதாகச் சொல்லப்பட்டது.  

 இந்நாடுகள், மனித உரிமைகளுக்குக் குரல் கொடுப்பவை என்றும் அவற்றின் தயவிலேயே தமிழரின் விடுதலை தங்கியுள்ளது என்றும் சொல்லப்பட்டது. ஆனால், நடந்தது என்ன என்ற கேள்விக்கான பதிலை, இங்கு எழுதுவது அவசியமில்லை.   

மனித உரிமைகளின் பேரால், நாம் தொடர்ந்தும் ஏமாற்றப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லாமல் இல்லை. எமக்குச் சொல்லப்பட்டது போல, ‘ஒற்றைப் பரிமாண நிலை’யில் உலக அரசியல் அரங்கு இயங்குவதில்லை.   

கடந்த வாரம் மியான்மாரின், மனித உரிமைகள் நிலை தொடர்பிலும் குறிப்பாக றோகிஞ்சா முஸ்லிம்கள் தொடர்பிலும் ஐக்கிய நாடுகள் சபையின் அமர்வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், நாடுகள் எவ்வாறு வாக்களித்திருந்தன என்பதை நோக்குதல் தகும்.   

மியான்மாாரின் றோகிஞ்சா முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கையைக் கண்டிக்கும் தீர்மானத்துக்கு ஆதரவாக, 142 நாடுகள் வாக்களித்திருந்தன. எதிராக 10 நாடுகளும் 26 நாடுகள் வாக்கெடுப்பில் பங்குபற்றாமலும் ஒதுங்கியிருந்தன.   

இதில், எதிராக வாக்களித்த நாடுகளில் சீனாவும் ரஷ்யாவும் முதன்மையானவை. அவை, ஒருநாட்டின் விடயங்களில், சில நாடுகளின் விருப்பத்துக்காகத் தலையிடுவதற்கு, அனுமதிக்க முடியாது என்ற கோட்பாட்டின் அடிப்படையில், தொடர்ச்சியாக இவ்விரு நாடுகளும் மனித உரிமைகள் குறித்த தீர்மானங்களுக்கு எதிராக வாக்களித்து வந்துள்ளன.   

இவ்விடத்தில், இலங்கைக்கு ஆதரவாக 2010ஆம் ஆண்டு, கியூபா வாக்களித்த போது, தமிழ் மக்களுக்கு கியூபா துரோகமிழைத்து விட்டது என்று பலர் எழுதியதை நினைவூட்ட விரும்புகிறேன்.  

அமெரிக்கா, பிரித்தானியா, ஜேர்மனி, மெக்சிக்கோ ஆகியவை ஐ.நா மனித உரிமைகள் சபையில், இலங்கைக்கு எதிரான தீர்மானமொன்றை நிறைவேற்ற முனைந்தபோது, இலங்கை அரசாங்கம் அதைத் தவிர்க்கும் விதமாகக் கொண்டுவந்த தீர்மானத்தைக் கியூபா ஆதரித்தது. இது குறித்து, கிட்டத்தட்ட எட்டு வருடங்களுக்கு முன், நான் குறிப்பிட்ட மூன்று விடயங்களை, அதேவரிகளில் இங்கு மீள்நினைவூட்ட விரும்புகிறேன்.   

முதலாவது, மேற்குலகு இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்ற நினைத்தது, தமிழ் மக்கள் மீதான அக்கறையாலோ, மனித உரிமை மீறல்களைத் தட்டிக் கேட்கவோ அல்ல. மாறாக, இலங்கை அரசாங்கத்தைத் தனக்குப் பணிவான அரசாங்கமாக மாற்றவேயாகும்.   

இரண்டாவது, மேற்குலகத் தீர்மானம் நிறைவேறியிருந்தாலும், இலங்கை, மேற்குலக நலன்களைப் பேண ஒத்துழைக்குமிடத்து, தீர்மானம் எவ்விதமான செயல் வடிவத்தையும் எடுக்காது.   

மூன்றாவது, ஐ.நாவோ எந்த மேற்கு நாடுமோ, உண்மையிலேயே விரும்பியிருந்தால் இலங்கையில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் பற்றிய விசாரணைகளைத் தொடக்கி இருக்கலாம். அவர்களது நோக்கம் அதுவல்ல.   எதிர்வுகூறல்கள் சரியாக அமைந்ததில் மகிழ்வடைய எதுவுமில்லை. நாம், இன்னமும் மனித உரிமையின் பேரால் ஏமாற்றப்படுகிறோம் என்பதையிட்டு, கவலைப்படவே நிறைய இருக்கின்றன.   

அன்றும் இன்றும் சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள், அமெரிக்காவால் முன்னெடுக்கப்படும் மனித உரிமைத் தீர்மானங்களுக்குக்கு எதிராக வாக்களித்து வந்துள்ளன. 

நீண்டகாலமாக மனித உரிமைகளின் பெயரில், மூன்றாமுலக நாடுகள் பலவற்றின் உள்விடயங்களில் அமெரிக்கா தொடர்ச்சியாகத் தலையிட்டு வந்துள்ளது. ஒரு பக்கம் தனக்கெதிரான ஆட்சிகளைக் கவிழ்ப்பது; தனக்கெதிரான ஆட்சிகள் உள்ள நாடுகளில், பிரிவினைவாதத்தைத் தூண்டித் தலையிடுவது என, இலத்தீன் அமெரிக்காவிலும் ஆபிரிக்காவிலும் அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் பல காலமாய்ப் பல அநியாயங்களைச் செய்து வந்துள்ளன.  

அதற்கு ஐ.நாவைத் துணைக்கழைக்கப் பார்க்கின்றன. எல்லாவற்றிலும் பிரதானமாக எண்ணிலடங்கா மனித உரிமை மீறல்களை உலகமெங்கும் செய்யும் ஒரு நாடாகவும் சர்வதேச சட்டங்களைத் துளியும் மதிக்காத நாடாகவும் உள்ள அமெரிக்கா, எவ்வாறு இன்னொரு நாட்டுக்கெதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை முன்வைக்க முடியும்? என்ற அடிப்படையான கேள்வியை இந்நாடுகள் எழுப்புகின்றன.   

இனிக் கடந்த வாரம், மியான்மார் தொடர்பில், நடந்த வாக்கெடுப்பில் பங்குபற்றாத நாடுகளின் பட்டியலில் இலங்கை, இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகள் வருகின்றன.   

அமெரிக்காவும் மேற்குலகும் ஆதரவாக வாக்களிக்கும் ஒரு தீர்மானத்தில் இருந்து, மேற்குலகின் சிறந்த கூட்டாளியான ஜப்பான் விலகி நிற்கிறது. மியான்மாரின் றோகிஞ்சா அகதிகளைத் திருப்பி அனுப்பப் போவதாகச் சொன்ன இந்தியா, வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. தென்னாசிய நாடுகளில் பங்களாதேஷ், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளன.   

எமக்குச் சொல்லப்பட்டு வந்த மனித உரிமைக் காவலர்களின் கூட்டான அமெரிக்கா, மேற்குலகு, இந்தியா, ஜப்பான் ஆகியவை வெவ்வேறு திசைகளில் மியான்மார் விடயத்தில் பயணித்தது ஏன்?   

அயலார் தலையீடு என்ற அடிப்படையில், கோட்பாட்டு ரீதியாக எதிர்த்து வாக்களித்த நாடுகளின் நடத்தையைப் புரிந்து கொள்ளுமளவுக்கு, வாக்கெடுப்பில் பங்கேற்காத நாடுகளின் நடத்தையைப் புரிந்து கொள்ளவியலாது. 

மியான்மாரில் தனது நலன்களைக் காப்பதற்காக ஜப்பான் போராடுகிறது.  குறிப்பாக ஜப்பான், இலங்கையில் செய்தது போலவே, மியான்மாரில் அனல்மின்நிலையங்களை உருவாக்குவதற்கான வழிவகைகளை மேற்கொண்டுள்ளது. அதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியைத் துணைக்கு அழைத்துள்ளது. பல ஜப்பானிய நிறுவனங்கள், மியான்மாரில் முதலிட்டுள்ளன. எனவே, மியான்மார் அரசாங்கத்துக்கு எதிராக வாக்களிப்பது, அந்த நிறுவனங்களின் நலன்களுக்கும் ஜப்பானிய முதலீடுகளுக்கும் நல்லதல்ல. எனவே ஒதுங்கியது.   

இந்தியாவின் நிலைப்பாடும் அத்தகையதே. ஒருபுறம், இந்திய நலன்கள் மியான்மாரில் உள்ளன. மறுபுறம், இந்தியாவுக்கு அண்மைய பிராந்தியத்தில், மனித உரிமைகளின் பெயரால் நடக்கும் மேற்குலகத் தலையீடு, நீண்டகால நோக்கில், தனக்கு ஆபத்தானது என்பதை இந்தியா நன்கறியும்.   எனவே ஒதுங்கி இருந்தது. 
மனித உரிமைகள் அளவுகோல்களல்ல; அறத்தின் அடிப்படையுமல்ல. மாறாக, நாடுகளின் தனிப்பட்ட நலன்கள், மனித உரிமைகளின் பேரால் எதிரொலிக்கின்றன.   

சர்வதே மன்னிப்புச் சபை ஆங் சான் சூகிக்கு வழங்கியிருந்த விருதை, ‘நம்பிக்கைக்கான அடையாளம்’ என்ற விருதைத் திரும்பப் பெறுவதாக அறிவித்தது. 

image_84a2aa94fc.jpg

இது குறித்து சூகிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘ஒன்பது வருடங்களுக்கு முன்னர், சர்வதே மன்னிப்புச் சபை, தனது உயரிய விருதான ‘நம்பிக்கைக்கான அடையாளம்’ என்ற விருதை உங்களுக்கு வழங்கியது. நாம், உங்களின் அடையாளமாகக் கருதப்பட்ட அமைதியும் சேவை மனப்பான்மையும் தொடரும் என்று நம்பினோம். எப்போதும் நீதிக்காகவும் நியாயத்துக்காகவும் குரல் கொடுப்பீர்கள் என்று எதிர்பார்த்திருந்தோம். ஆனால், நீங்கள் தலைமை வகிக்கின்ற அரசாங்கத்தின் கொடுஞ்செயல்களுக்கு, நீங்கள் ஆதரவாக இருப்பதைக் கண்டு, அதிர்ந்து நிற்கிறோம். இனி அமைதிக்கும் நீதிக்குமான அடையாளம் நீங்கள் அல்ல’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.   

ஒரு காலத்தில், மேற்குலகின் மனித உரிமைத் தேவதையாக ஆங் சான் சூகி இருந்தார். அவருக்கு சமாதானத்துக்கான நொபெல் பரிசும் வழங்கப்பட்டது. ஆசியாவில், தலாய் லாமாவுக்கு அடுத்தபடியாகக் கொண்டாடப்பட்ட தலைவர் சூகி ஆவார்.   

இன்று, அத்தேவதையின் ஒளி மங்குகிறது. யாரை மேற்குலகும் மனித உரிமையின் காவலர்களும் தூக்கிக் கொண்டாடினார்களோ, அவர்களே இன்று அவரைத் தூற்றுகிறார்கள். அவரது ஆட்சியில், மனித உரிமை மீறல்கள் அதிர்ச்சியடைய வைத்திருக்கின்றன.   

மியான்மாருக்கான பிராந்திய ஆதிக்கப் போட்டியில், அவர் மேற்குலகின் பக்கம் நின்றார். அங்கு இடம்பெற்ற இராணுவ ஆட்சிக்கு எதிராக, மேற்குலகின் விக்கிரமானார். மியான்மாரில் இருந்த சீனாவின் செல்வாக்கை, எப்படியாவது இல்லாமல் செய்வதற்கு, இவரின் மூலம் மேற்குலகு முயன்றது.   

2016ஆம் ஆண்டு, அது சாத்தியமானவுடன் மியான்மாரில் ஜனநாயகம் மலர்ந்து விட்டதாகப் போற்றப்பட்டது. பதவிக்கு வந்தபின்னர், ஒருபுறம் மேற்குலகின் நலன்களை தக்க வைக்க ஆங் சான் சூகியால் முடியவில்லை. 

மறுபுறம், தனது அரசியல் இருப்புக்காகத் தேசியவாதத்தைக் கையில் எடுத்தார். எதிர்பார்ப்புகளை ஈடு செய்யவியலாதபோது, எல்லோரும் ஏந்துகின்ற பெருந்தேசியவாத அகங்காரத்தை, அவரும் கையில் எடுத்தார்.  

அவரது விருது பறிக்கப்பட்ட நிகழ்வானது, மனித உரிமைகள் குறித்த பழைய கேள்விகளைப் புதுப்பிக்கின்றன. மனித உரிமையின் காவலர்களாகப் போற்றப்பட்டவர்களே, மிகப்பெரிய மனித உரிமை மீறல்களைச் செய்பவர்களாக மாறுவதை எவ்வாறு புரிந்து கொள்வது?   

மனித உரிமை மீறல்களைச் செய்யக்கூடியவர்களைத் தான், மேற்குலகு மனித உரிமையின் காவலர்களான மேற்குலகம் உருவாக்குகிறதோ என்ற வினா இங்கு முக்கியமானது. 

ஒருவேளை, மேற்குலக நலன்களைப் பேணிய நிலையில், றோகிஞ்சாக்களுக்கு எதிரான வன்முறைகள், கட்டவிழ்க்கப்பட்டிருக்குமாயின் அது கண்டும் காணாமல் விடப்பட்டிருக்கும்.   

மேற்குலகு தங்களை, மனித உரிமையின் காவலர்களாக அறிவித்துள்ளது. ஆனால், மேற்குலகுக்குள்ளும் மனித உரிமைகள் சார்ந்த நெருக்கடிகள் ஆழமாய் நிலவுகின்றன. 

இதை, தனது வருடாந்த மனித உரிமைகள் விருதைப் போலந்து நாட்டின் மனித உரிமைகளுக்கான ஆணையாளருக்கு வழங்கியதன் மூலம், உணர்ந்துகொள்ளலாம் என்பதை இம்மாதம் ‘ரப்டோ அறக்கட்டளை’ (Rafto Foundation) காட்டி நிற்கிறது.   

1987ஆம் ஆண்டு முதல், இவ்விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. நன்கறியப்படாத அதேவேளை, சமூகத்துக்குப் பெறுமதியான பங்களிப்பை ஆற்றும் நபர்களுக்கு, இவ்விருது வழங்கப்பட்டு வந்துள்ளது. 
நீதிக்கான குரலாக ஒலித்த நோர்வேஜியப் பேராசிரியர் தொரொல்வ் ரப்டோவின் நினைவாக, 1987ஆம் ஆண்டு இவ்வறக்கட்டளை உருவாக்கப்பட்டது.   

சிறுபான்மையினரின் உரிமைகளுக்காகவும் நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காகவும் போராடும் போலந்து நாட்டின் மனித உரிமைகள் ஆணையாளர் அடம் பொட்னருக்கு 2018ஆம் ஆண்டுக்கான ‘ரப்டோ விருது’ வழங்கப்பட்டுள்ளது.   

இன்று போலந்தில் ஏற்பட்டுள்ள வெள்ளை நிறவெறியின் அதிகரித்த வெளிப்பாடும், சிறுபான்மை இனத்தினருக்கு எதிரான செயல்களும் ஏதேட்சதிகார ஆட்சியின் குணங்களையும் இவ்விருது சுட்டி நிற்கின்றது. இது உண்மையில், போலந்தில் மட்டுமல்லாது ஐரோப்பாவெங்கும் வீசுகின்ற தேசியவாத அலையின் குறிகாட்டி மட்டுமே.   

ஒவ்வொரு வாரமும், நிறவெறித் தாக்குதல்கள் நிகழ்வதாகவும் சிறுபான்மையினர் குறிப்பாக குடியேற்றவாசிகள் மிகுந்த நெருக்கடிகளை எதிர்கொள்வதாகவும் அடனம் பொட்னர் தனது விருது ஏற்புரையில் தெரிவித்தார்.   

மேலும், மாறிவரும் உலகச் சூழலில், மனித உரிமைகள் பரந்த தளத்தில் பொருள் கொள்ளப்பட வேண்டும். நாம் உருவாக்கி வைத்திருக்கின்ற ஜனநாயக அமைப்புகள், தாக்குதலுக்கு உள்ளாகின்றன. அவ்வமைப்புகளைத் தக்கவைப்பதோடு, அதன் சுதந்திரத்தைப் பேணுவது, மனித உரிமைகளைத் தக்கவைப்பதற்கான பிரதான பணியாகியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.   

இது இன்றைய தேசியவாத அலையின் ஆபத்துகளின் இன்னொரு பரிமாணத்துக்கு வெளிச்சம் பாய்ச்சியுள்ளது. உலக நாடுகளின், மனித உரிமைகள் பற்றிப் பேசும் நாடுகளின் மனித உரிமைகள், எவ்வாறு இருக்கின்றன என்ற கேள்வி எழுவது தவிர்க்கவியலாதது. 

அதேவேளை, நாம் மனித உரிமையின் பேரால், எதைநோக்கி, எவ்வாறு, யாருடைய நலன்களுக்காக வழிநடத்தப்படுகிறோம் என்ற வினாவை நிச்சயம் கேட்டாக வேண்டும்.   

ஏனெனில், 28 ஆண்டுகளுக்கு முன்பு, யாழ்ப்பாணத்தில் அன்னையர் முன்னணி ஒன்று, காணாமற் போன பிள்ளைகள் பற்றி எழுச்சியுடன் ஊர்வலம் போய், உரிமைக் குரல் எழுப்பியதை மனதில் இருத்தி, சில ஆண்டுகளுக்கு முன், ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் மூலம், தங்கள் பிள்ளைகளை மீட்டுத்தருமாறு கேட்டுத் தாய்மார், ஒரு தமிழ் அரசியல்வாதியின் காலில் விழும் காட்சியை, அதனுடன் ஒப்பிடும் போது, நாம் எங்கே வந்து நிற்கிறோம் என்று கேட்காமல் இருக்க முடியவில்லை.   

தமிழ் மக்களின் பிரச்சினை பற்றி, சர்வதேசத்தினது கவனத்தை ஈர்ப்பது என்ற போக்கின் வழியாக, தமிழ் மக்களின் பிரச்சினையின் அடையாளத்தை மாற்றுகிற அபாயம், இன்று நிஜமான ஒரு சாத்தியப்பாடாகி வருகிறது. இது மிகவும் ஆபத்தானது.   

தமிழ் மக்களின் பிரச்சினை வெறுமனே, ஒரு மனிதாபிமானப் பிரச்சினையாக, அகதிகள் பிரச்சினையாக, எல்லோரிடமும் கருணையை எதிர்பார்த்துக் கையேந்தி நிற்கிற ஒரு சமூகத்தின் மீதான கழிவிரக்கமாக, ஒடுக்குகின்ற திசையை நோக்கி, நாம் திரும்பிக் கொண்டிருக்கிறோம்.   

மனித உரிமைகளின் பின்னணியில், நாம் கேட்க வேண்டிய கலந்துபேச வேண்டிய சில கேள்விகளுடன் நிறைவு செய்ய விரும்புகிறேன். 

எவரதும் மனமாற்றத்தை நியாயப்படுத்தக்கூடிய விதமாகத் தமிழ் மக்களின் வாழ்வில் மேம்பாடு ஏற்பட்டுள்ளதா? 

தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் வென்றெடுக்கப்பட்டு உள்ளனவா?

 தமிழ்த் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமை ஏற்கப்பட்டுள்ளதா? 

தமிழ் மக்களின் வாழ்விடங்கள் மீது, அவர்களது உரிமை மதிக்கப்பட்டிருக்கிறதா? 

இன்று, தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை, தேசிய இனமொன்றின் மீதான தேசிய இன ஒடுக்கலாகவும் அதற்கெதிராக போராட்டம், சுயநிர்ணய அடிப்படையிலான ஒரு தீர்வுக்கான போராட்டமாகவும் கருதப்படுவதற்கு மாறாக, ஒரு மனித உரிமைப் பிரச்சினையாகவே பேசப்படுகிற ஒரு சூழ்நிலை எவ்வாறு உருவானது? அதை எவ்வாறு மாற்றுவது?  

மாறுகின்ற உலகச்சூழலும் அதன் அன்றாட நடப்புகளும் நமக்கான செய்திகளை காற்றுவாக்கில் சொல்லிச் சென்று கொண்டே இருக்கின்றன. கேட்பதும் கேட்காமல் விடுவதும் நமது தெரிவு.

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/மனித-உரிமைகள்-யாருடையவை-யாருக்கானவை/91-225608

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.