Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காலம் குறித்து கார்லோ ரோவேலியுடன் ஒரு நேர்முகம்- மார்க் வார்னர், எமானுவல் மொஸ்காடோ: ரா. கிரிதரன் தமிழாக்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காலம் குறித்து கார்லோ ரோவேலியுடன் ஒரு நேர்முகம்- மார்க் வார்னர், எமானுவல் மொஸ்காடோ: ரா. கிரிதரன் தமிழாக்கம்

பதாகைJanuary 3, 2019

மொழிபெயர்ப்பாளர் குறிப்பு: 

காலமும் இலக்கியமும்

எனக்குக் காலமே என்னவென்று தெரியவில்லை. செய்கையே காலம். அல்லது ஒரு செய்கைக்கும் அடுத்ததற்கும் உள்ள இடைவெளி. செய்கை இடைவெளி இரண்டும் கலந்ததே காலம். அல்லது ரெண்டுமே இல்லை. என்னைப் பொறுத்ததுதான் காலம். என் உணர்வுக்கு ஒன்றை விடுத்து அடுத்தது என்று ஏற்படும்போதுதான் காலம். அப்படியென்றால் என்னைப் பொறுத்தவரை ரெயில் நின்றுகொண்டிருக்க்கிறது.

– அசோகமித்திரனின் ‘காலமும் ஐந்து குழந்தைகளும்

காலம் என்பது இயற்பியலுக்கு எந்தளவு தேவையான கருத்தாக இருக்கிறதோ அதேயளவு நெருக்கமான கருத்தாக கலை இலக்கியத்துறைக்கும் இருந்து வந்திருக்கிறது. காலம் நிலத்தடி நீராக ஒவ்வொரு கலைப்படைப்பின் கீழும் இருக்கிறது. செவ்வியல் படைப்புகளில் காலம் ரெட்டை மாட்டு வண்டியைப் போல நிதானமாக ஊர்ந்து செல்லும். சில நேரங்கள் காலம் என்பது நின்றுவிட்ட உணர்வையும் எழுத்தாளர் உருவாக்கிவிடுவார். அதை வெற்றிகரமாகச் செய்து காட்டிய நவீன சிறுகதைகளில் அசோகமித்திரனின் ‘காலமும் ஐந்து குழந்தைகளும்’ முக்கியமான ஒன்றாகும். இங்கு ஒருவன் ரயிலைப் பிடிக்க ஓடுகிறான். இன்னும் ஐந்து நிமிடத்தில் அவன் ஏற வேண்டிய வண்டி புறப்பட்டுவிடும். வீட்டிலிருந்து கிளம்பிய நேரத்திலிருந்து வழி நெடுக தடங்கல்கள் பல. ஒவ்வொரு தடங்கலும் அவனைப் பொறுத்தவரை காலத்தை நிறுத்துகிறது, பின்னோக்கி ஓட வைக்கிறது. தடை உருவானதும் சிந்தனை வேறொரு காலத்தில் அந்தத் தடையைப் பிந்தொடர்கிறது. எல்லையற்ற மனோவேகம் வேறொரு காலத்தில். இவன் பெரிய மூட்டையைத் தூக்கிக்கொண்டு அதிலிருக்கும் தம்ளர் விலா எலும்பை நோகும்படி ஓடுகிறான். அவனைச் சுற்றி காலம் வேறொரு வேகத்தில் இருக்கிறது. தெரு ஓரப் பிச்சைக்காரர்கள் தங்களது ஐந்து குழந்தைகளுக்கு மயக்க மருந்து கொடுத்து காலத்தை நிறுத்திவிட்டதாக அவன் நினைக்கிறான். போதாத நேரமாக காலமற்ற கடவுள் அவன் எதிரே வந்து தாமதத்துக்கான காரணங்களை நினைத்துப் பார்க்கச் சொல்கிறார். அவன் கடவுளை, “அந்தாலே போ,” எனச் சொல்லிவிட்டு ஓடி வரும்போது ரயில் புறப்பட்டு விடுகிறது. ஒரு கணம் திகைத்து நிற்பவன், தன் உளநிலையே காலம் எனும் முடிவுக்கு வரும்போது ரயில் அங்கேயே நிற்பதைப் பார்க்கிறான். நிதானமாக ஏறி உட்கார்ந்து கொள்கிறான். தம்ளர் இடித்த விலா எலும்பின் வலியில் குறைவில்லை.

மிக எளிமையான கதையாக இருந்தாலும், காலம் எப்படி ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு வகையில் அமைந்திருக்கிறது எனும் வகையில் உள்ள ஒரு கதையாக இது இருக்கிறது. ஆனால், கதையில் வரும் காலத்தை எல்லாம் ஒட்டுமொத்தமாகத் தொகுக்கும் வகையில் புனைவின் கால வேகம் அமைந்திருக்கிறது. சம்பவங்களைக் கோர்த்துச் செல்லும்போது ஒரு நீண்ட ஜரிகையாக எல்லாமே அமைந்திருக்கின்றன – பலவேறு காலங்களில் நடந்தாலும் கூட.

அறிவியல்பூர்வமாக பார்க்காமல் இதை தத்துவ வழியில் அணுக முடியும். தத்துவமும் இன்று உண்மையான காலத்தையும் அவரவருக்கு சார்புள்ள காலத்தையும் தனித்தனியே ஆராய்ந்து வந்தாலும்கூட, தத்துவம் எப்போதும் தனிமனித காலத்துக்கும் உலகளாவிய காலம் எனும் கருத்துக்கும் இடையேயுள்ள வேறுபாட்டை முன்வைத்தபடிதான் இருக்கிறது. இதனாலேயே பிரத்யட்ச உண்மைக்கு வலிமை இருந்தாலும், நம் அறிதல்முறை காலத்தைக் கடந்து ‘இன்றைய’ காலத்தில் அல்லாது அனுமானங்களையும் உண்மையாகக் கொள்கிறது.

கார்லோ ரொவேலி இந்தக் கட்டுரையில் சொல்வது போல காலத்தை நாம் ஒரு துறையின் அறிவைக்கொண்டு முழுவதும் அறிந்துகொள்ள முடியாது. இலக்கியம், நரம்பியல் துறை, தத்துவம், உளவியல் என பல துறைகளை முழுமையாக இணைக்கும் அறிதல் முறை நமக்கு அவசியமாகிறது. தனித்தனியாக துறைகள் நிபுணத்துவம் அடைந்து வரும் காலத்தில் Integrated thought systems நாம் அறிந்த அனைத்தையும் ஒன்று சேர்க்க உதவும். அப்படி அனைத்தையும் ஒருங்கிணைக்கும் ஒரு துறையாக நாம் இலக்கியத்தைப் பார்க்க முடியும்.

இனி நேர்முகம்.

oOo

உங்களுடைய ‘காலத்தின் ஒழுங்கு’ எனும் புத்தகத்தைப் படிக்கும் வாசகர்கள் நேரடியாகவும், உலகளாவிய உண்மையாகவும், இருக்கும் காலத்தைப் பற்றி இத்தனை தீவிரமான அக்கறை அவசியமா என வியக்க மாட்டார்களா? ஒரு இயற்பியலாளருக்கு ஏன் காலம் மீது ஆர்வம் வர வேண்டும்?

உலகத்தின் உண்மை இயல்பு பற்றி யாருக்கும் அவசியம் தெரிந்திருக்க வேண்டிய நிர்ப்பந்தம் இல்லை. ஆனால் நம் அனுபவ அறிவுக்கு முற்றிலும் வேறொரு வகையில் காலம் இயங்குவது உண்மை. இத்தனை சிக்கலில்லாமலும் இயல்பாகவும் இருக்கும் ஒன்று நம் அறிதலுக்கு முற்றிலும் புறம்பானதொரு வகையில் செயல்படுவதை ஆர்வத்துடனும் ஆச்சர்யத்துடனும் பார்க்க வேண்டியுள்ளது.

காலத்தைப் பற்றிய நமது அடிப்படை புரிதல் தவறு என்கிறீர்களா? அல்லது அது உலகளாவிய ஒன்றாக இருப்பதில்லையா?

நமது அனுபவ எல்லைக்குள் வரும் காலத்தை ஊதிப்பெருக்கி உண்மை ரூபமான காலத்தின் மீது போட்டுப் பார்க்கும்போதுதான் சிக்கல் ஏற்படுகிறது. தட்டையான உலகம் எனும் படிமம் அழகான ஒன்று. லண்டனின் பூமி சமதளமானது எனச் சொல்வதில் தவறில்லை. ஒரு கட்டிட வல்லுநர் வீடு கட்டும்போது பூமி சமதளத்தில் இருக்கிறது எனும் முன் அனுமானத்தோடு மட்டுமே அணுக வேண்டும். வீடு விழாது. ஆனால் தூரத்திலிருந்து உலகத்தைப் பார்க்கும்போது அது தட்டையாக இல்லை. இந்த முரண் உங்களுக்குத் தெளிவாகப் புரிகிறது. நமது கண்ணோட்டம் தவறல்ல, ஆனால் முழுமையானதாக இல்லை. நம்மைச் சுற்றி இருக்கும் உலகின் புரிதலைக் கொண்டு அண்டம் முழுவதையும் அறியத் தொடங்குவது தவறாகும்.

சரி, காலத்தை நாம் எப்படி முழுமையாகப் புரிந்துகொள்வது? தட்டையான உலகத்துக்கான உங்கள் படிமம் என்ன? வளைந்திருக்கும் உலகத்தைப் பார்க்க நாம் சற்றே விலகிச் செல்ல வேண்டியதாக இருக்கிறது. அது போல உண்மையான காலத்தைப் புரிந்துகொள்ள என்ன செய்ய வேண்டும்?

நாம் யுத்தம் புரிந்து ஒருவரை ஒருவர் அழித்துக் கொள்ளாமல் உலகத்தில் தொடர்ந்து வாழ முடிந்தால், ஒரு நாள் ஒளியைவிட வேகமான பயணம் செய்த ஒருவர் தன் குழந்தைகளைவிடச் சிறுவனாக மாறி திரும்ப முடிவது நம் முன்னே நடப்பதோடு மட்டுமல்லாது அது மிகச் சாதாரண அனுபவமாகவும் இருக்கும்! காலம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேகத்தில் செல்கிறது எனும் உண்மை புரிந்துகொள்ள எளிமையானதாகிவிடும். அப்போது, இறுக்கமான காலத்தின் பிடியில் நமது உடல்கள் சிக்கிக் கொண்டிருக்கிறது எனும் அறிவு உலகம் தழுவிய உண்மையாக இருக்காது.

காலத்தைப் பற்றி நமக்கு ஏற்கனவே என்ன தெரியும்? நம் அறிதலின் நிலை என்ன?

ஐன்ஸ்டீனின் பொது சார்பு நிலை கொள்கையில் விவரிப்பதைக் கொண்டு நமக்கு ஏற்கனவே நிறைய தெரியும். குவாண்டம் இயற்பியலின் புரிதலைப் போல, துகள் இயற்பியல் கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் பிரித்துப் பார்க்கவில்லை என்பதும் நமக்கு நன்றாகத் தெரியும். அதாவது கடந்த காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் இடையே இருக்கும் வித்தியாசம் விரிபார்வையில் மட்டுமே புலப்படும் நிகழ்வு..

காலத்தைப் பற்றி நமக்குத் தெரியாததில் எது எளிமையானது?

கடந்த கால புகைப்படங்கள் இருக்கும்போது எதிர்காலப் படங்கள் ஏன் இல்லை? முட்டாள்தனமான கேள்வியாகத் தோன்றினாலும் இது அத்தனை முட்டாள்தனமானது அல்ல. இயல்பான உலகம் காலத்தால் வரையறுக்கப்படுவது – அதாவது கடந்த காலம் முடிந்தது என்றும், எதிர்காலம் திறந்த ஒன்று என்றும் சொல்லப்படுகிறது. நமக்கு இருக்கும் ஞாபகங்களும், கடந்த காலப் படங்களும் எதிர்காலத்தை அல்ல, நடந்து முடிந்தவற்றை சேகரித்து வைத்திருக்கின்றன. ஆனால் இயற்பியலில் கடந்தகாலம் மற்றும் எதிர்காலம் ரெண்டுக்கும் வித்தியாசங்களைத் தேடத் தொடங்கினால் நாம் குழப்பமான இடத்துக்கு சென்று சேருவோம். கடந்த காலத்தில் உலகம் நூதனமான நிலையில் இருக்கிறது. இயற்பியலாளர்கள் அதை குறைவான குலைதி (Entropy) என்கிறார்கள் (குலைவுறும் தன்மை/நிலைகுலையும் தன்மையின் அளவையியல் என்ற பொருளில் நான் இங்கு பயன்படுத்துகிறேன்). கடந்த கால அண்டத்தில் குலைதி குறைவு என்பதாலேயே இது மட்டுமே எதிர்காலத்துக்கும் கடந்த காலத்துக்கும் வித்தியாசமாக இருக்க முடியும். குறைவான குலைதி என்பது ஒழுங்கமைதியுள்ள அமைப்பைச் சுட்டி நிற்பதால் இதுவும் ஒரு குறைபாடுள்ள விளக்கமே.

இயல்பாகவே வஸ்துக்களின் ஒழுங்கமைதி குலைகின்றன என்பது  மட்டுமே எதிர்காலத்துக்கும், கடந்த காலத்துக்கும் உள்ள வேறுபாடு என்றால் நமக்குப் பல கேள்விகள் தோன்றுகின்றன: கடந்த காலத்தில் ஏன் நிகழ்வுகள் ஒழுங்கமைதி கொண்டிருந்தன? அச்சீரமைப்பை உருவாக்கியவர் யார்? இது இன்றுவரை பதிலில்லாத கேள்வி.

காலத்தைப் பற்றி நமது எதிர்காலப் புரிதல் எப்படிப்பட்டதாக இருக்கும் என நினைக்கிறீர்கள்?

என்னைப் பொருத்தவரை காலம் ஒரு குழப்பமான கருதுகோள். அது ஒற்றைப் படைத்தன்மை கொண்டதல்ல. அது பல்வேறு கோணங்களில் அணுகக்கூடிய வகையில் பல தளங்கள் கொண்ட அமைப்பு. அதனால்தான் என் புத்தகங்களில் இலக்கியம், நிறைய தத்துவங்கள், உளவியல் மற்றும் சொந்த அனுபவங்களைக் கொண்டு எழுதுகிறேன். நாம் அவற்றின் பல கோணங்களை இணைக்க வேண்டியிருக்கிறது. பல துறைகளும் தேவைக்கு அதிகமாகப் பிரிந்து கிடப்பதே என்னைப் பொருத்தவரை இன்றைய காலத்தின் குறைபாடாக இருக்கிறது. காலம் போன்ற சிக்கலான கருதுகோளைப் புரிந்துகொள்ள நம் நரம்பியல் நிபுணர்கள், தத்துவவாதிகள், இயற்பியலாளர்கள், ஏன் இலக்கியங்கள் கூட ஒன்றுடன் ஒன்று கலந்துரையாடல் நடத்த வேண்டும். என் புத்தகத்தில் நான் ப்ரெளஸ்ட் பற்றி நிறைய எழுதியிருக்கிறேன்.

காலம் என்பதை உணர்வுத்தளத்திலும் நாம் அனுபவிக்கிறோம். உணர்வுரீதியான பாதிப்பை நமக்கு காலம் அளிக்கிறது. காலம் பற்றிய உரையாடல்களில் நாம் காலம் குறித்த உணர்வு ரீதியான பாதிப்பு இல்லாமல் பேச முடியாது. காலம் கடக்கும்போதெல்லாம் நாமும் கடந்து போகிறோம் என்பதும் ஒரு காரணம். ஒரு இயற்பியலாளராகச் சிந்திக்கும்போதுகூட நாம் உணர்வுத்தளத்தை மறந்தோமென்றால் குழம்பிப் போவோம். ஏனென்றால் கடந்து போகும் காலம் குறித்த கவலையற்ற இயற்பியல் துறையில்கூட நாம் உணர்ச்சிரீதியான உரையாடலை எதிர்பார்க்கிறோம். நம் நரம்பு மண்டலத்துடன், நமது உணர்வு ரீதியான வாழ்க்கையுடன் தொடர்புடையது காலம். இது இயற்பியல் அல்ல. காலம் கடக்கும் எனும் உணர்வு நமது மூளையை பாதிக்கிறது. ஆகவே இயற்பியலாளருடையது அல்லாது நரம்பியல் வல்லுனரின் சிக்கலாக மாறுகிறது. இயற்பியல் தளத்தில் காலம் என்பது மிகவும் பலகீனமானது என்பதால் இப்படிப்பட்ட கருதுகோள்களின் மீது தத்துவத்துறை புது வெளிச்சத்தை பாய்ச்சக்கூடும்.

காலத்தின் உணர்வு ரீதியான கட்டமைப்பு உங்கள் சிந்தனையை பாதித்திருக்கிறதா?

ஆமாம். தத்துவவியலாளர்கள் எழுதி இதுவரை வெளியான புத்தகங்களிலேயே மிகச் சிறப்பான புத்தகத்தை எழுதிய ஹான்ஸ் ரெய்ன்பாக் எனும் தத்துவவாதி, காலாதீதமான கருதுகோளைத் தேடுவது காலத்தைக் கண்ட பயத்தினால் விளைந்த தத்துவம் என்கிறார். எல்லையற்ற மாற்றங்களுடனான சமரசமே காலத்தைப் பற்றிய அறிதலின் பயணம் எனத் தோன்றுகிறது. புத்த தத்துவத்தின் நிலையற்ற கருதுகோள் போல அசைவில் அசைவற்ற நிலை. காலத்தை கவனித்து வருபவனாக வாழ்வை கழித்து வரும் நான், எதுவும் நிலையானதல்ல எனும் நம்பிக்கையை ஏற்றுக்கொள்ளத் தொடங்கிவிட்டேன். இது நான் அறிவியல் படிப்பதால் வந்த மாற்றமா அல்லது வயதானதாலா எனத் தெரியவில்லை.

 எல்லாவற்றையும் ஒருங்கிணைக்கும் இரு கோட்பாடுகள்

நம் அண்டத்தைப் புரிந்துகொள்வதில் நம்மிடையே இருக்கும் சிறப்பான இருகோட்பாடுகளைப் பற்றிப் பேசலாம்சிறிய துகள்களின் இயங்குவிதிகள் பற்றியகுவாண்டம் இயற்பியல் மற்றும் அதிக எடையுள்ள பொருட்களின்இயங்குவிதிகளை பற்றிய பொதுச்சார்புக்கொள்கைஇரண்டுகோட்பாடுகளுக்கிடையே பல முரண்பாடுகள் உள்ளனரெண்டுமே அதனதன்தளங்களில் உண்மைக்கு நெருக்கமாக உள்ளனஆனால் அந்தஉண்மைகளுக்கிடையே பல முரண்கள் உண்டுஇரண்டு கோட்பாடுகளையும்இணைக்கும் முயற்சிகள் பல நடந்துள்ளனலூப் குவாண்டம் ஈர்ப்புக்கோட்பாடும் , இழைக்கொள்கையும் அம்முயற்சியில் இறங்கியுள்ளனஅவற்றைப் பற்றி மேலும்விவரங்கள் சொல்ல முடியுமா?

இவ்விரண்டும் பொது சார்புக்கொள்கையையும், குவாண்டம் இயற்பியல் கருதுகோளையும் இணைக்கும் உத்தேசமான கோட்பாடுகளாகவே கருதப்படுகின்றன. நமக்குப் புரிந்தவரை இவ்விரண்டில் ஒன்று மட்டுமே உண்மையாக இருக்க முடியும். இவ்விரண்டில் இழைக்கொள்கை பெரிய கேள்விகளை நோக்கி பயணம் செய்கிறது. எல்லாவற்றையும் ஒரே சமன்பாட்டில் அடைக்கும் பெரு முயற்சியில் உள்ளது. நமது தூலப்பொருட்களின் அடிப்படைக் கட்டுமான துகள்களான எலெக்ட்ரான், குவார்க் போன்ற அனைத்துமே இழைகளால் அமைந்தவை எனும் ஆதாரக்கொள்கையின் அடிப்படையில் இழைக்கோட்பாடு இயங்குகிறது. ஒரே கோட்பாட்டின் மூலம் அனைத்தையும் இணைக்கும் முயற்சி. லூப் குவாண்டம் ஈர்ப்புக் கொள்கைக்கு பெரிய குறிக்கோள்கள் இல்லை. குவாண்டம் இயற்பியலின் புரிதலைக்கொண்டு பொதுச் சார்புக்கொள்கையை விவரிக்கப் பார்க்கிறது. வெளி மற்றும் காலத்தின் கொள்கைக்கு குவாண்டம் வடிவம் கொடுக்கும் கோட்பாட்டு முயற்சி மட்டுமே. நம்மைச் சுற்றியிருக்கும் வெளி தொடர்ச்சியான ஒன்றாக அல்லாமல் சிறு துணுக்குகளின் தொகையாக (குவாண்டம்) இருப்பதாக கணிக்கும்போது சிறு சிறு குவாண்டம்களாய் உள்ள வெளி, அதாவது, சிறு சிறு துகள்களாலான வெளி, இந்தத் துகள்களும் சின்னஞ்சிறு லூப்களாக உள்ளன என்று அமைத்துக் கொள்ள முடியும். இந்த குவாண்டம் வெளித் துகள்கள் வெளி எனும் வெற்றிடத்தை நிறைக்காமல் இவையே வெளியாக அமைகின்றன – சிறு சிறு பஞ்சு இழைகள் சேர்ந்து நாம் அணியும் சட்டையாவது போல இந்த குவாண்டம் வெளித் துகள்கள் வெளியென்ற ஒன்றாகின்றன.

இழைக்கொள்கைக்குப் பெரிய குறிக்கோள்கள் இருந்தாலும் முற்றிலும் புதிய ஒன்றை அது முன்வைக்கவில்லை. இழைகள் வெளியினில் நகர்வதால் காலத்துக்கும் வெளிக்கும் இடைவெளி இருப்பதை ஏற்றுக் கொள்கிறது. ஆனால் லூப் குவாண்டம் ஈர்ப்பு விசையில், இருக்கும் இடமோ இருக்கும் காலமோ இல்லையாதலால், அனைத்துமே குவாண்டா என்று அழைக்கப்படும் துணுக்குகளாய் தோன்றுகின்றன. அதாவது காலமும் வெளியும் இருவேறுகருதுகோள்கள் அல்லரெண்டுமே ஒன்றிலிருந்து விளைந்தவை எனும்புதுமையை இது முன்வைக்கிறது. இவற்றில் எது சரியானது என நமக்கு இப்போது தெரியாது. ஆனால் விஞ்ஞானம் பலவேறு கோட்பாடுகளுக்கிடையே பெரிய உரையாடல்களை நிகழ்த்தியபடி முன்னகர்ந்துள்ளதால் இதுவும் நல்லதுதான். இந்த சிக்கலைத் தீர்க்காதவரை எந்த ஒரு ஒற்றைக்கொள்கையும் நமது சுதந்திரமான சிந்தனைக்கு இடையூறாக இருப்பதில்லை.

லூப் குவாண்டம் ஈர்ப்புக் கோட்பாட்டை சரியானது என ஏன் நினைக்கிறீர்கள்இழைக் கொள்கையின் சிக்கல் என்னகறாரான சோதனை முடிவுகளைக்கேட்கவில்லைஉங்கள் உள்ளுணர்வு இதைப் பற்றி என்ன சொல்கிறது?

சோதனை மூலம் வெற்றி கண்ட ஐன்ஸ்டீனின் பொதுச்சார்புக் கொள்கையின்படி காலமும் வெளியும் ஈர்ப்பலையின் வெவ்வேறு வடிவங்களே. என்னைப் பொருத்தவரை என்றென்றும் அழியாத கண்டுபிடிப்பாக இது இருக்கும். அண்டத்தின் மையத்தை நாம் கண்டடைந்தது போன்றது இது. அறிந்து கொண்டதும் நாம் உலகத்தை புதுவிதமாகப் புரிந்துகொள்கிறோம்.

என்னுடைய உள்ளுணர்வைப் பற்றிக் கேட்டீர்கள் – வெளிச்சம் ஒரு மின்னணு அலை மட்டுமல்ல, ஃபோட்டான்களால் உருவானதுமாகும். வெளியும் ஈர்ப்பலையினால் உருவானது மட்டுமல்லாது குவாண்ட்டாக்களாகவும் இருக்கும், வெளிச்சத்தைப் போல. வெளியை குவாண்டாக்களாகப் பிரிக்கும்போது வெளி என்பது வெளித்துகள்களின் வரிசையாகவும் இருக்கும் – இது என்னுடைய ஆழமான உள்ளுணர்வு.

அதாவது நாம் பார்க்கும் வெளி தொடர்ச்சியான ஒன்றாக இல்லாமல் சிறுத்குவாண்டாக்களாலான வெளி என்று அறிவோம் இல்லையாஇதை எப்படிசோதித்துப் பார்க்க முடியும்எவ்விதமான சோதனை முடிவுகளின் மூலம் காலம்குவாண்டம் ஈர்ப்பு பற்றி சரியான திசையில் ஆய்வுகள் நடத்த முடியும்

ரெண்டு திசைகளில் இந்த ஆய்வு சுவாரஸ்யமாகச் செல்லக்கூடும். முதலாவது நமது அண்டத்தின் பெருவெடிப்பு. அண்டவியல் வளர்ந்து கொண்டிருக்கும் துறை. கிட்டத்தட்ட 13 அல்லது 14 பில்லியன் வருடங்களுக்கு முன்னால் நடந்த இந்த நூதனமான நிகழ்வான பெருவெடிப்பை நாம் இன்னும் முழுவதுமாகப் புரிந்துகொள்ளவில்லை. அண்டவியல் தகவல்கள், வானவியல் கண்காணிப்புகள், பெருவெடிப்பில் எஞ்சியவை போன்றவற்றை லூப் குவாண்டம் ஈர்ப்புக் கோட்பாட்டின் கணக்குகள் கொண்டு ஆராய்வது அந்தக் கோட்பாட்டை நிரூபணம் செய்யும் முடிவுகளை அடைவதற்கு நல்ல வழிமுறையாகும்.

மற்றொரு குவாண்டம் ஈர்ப்பு ஆய்வுக்கான தளம் எனக்குத் தனிப்பட்ட வகையில் ஆர்வமூட்டக்கூடியது – கருந்துளை. அண்டம் முழுவதும் கருந்துளை நிரம்பியிருப்பதை நாம் அறிவோம். சிறியதும் பெரியதுமாகப் பல கருந்துளைகள். முப்பது வருடங்களுக்கு முன்னர் அண்டத்தில் இவை இருப்பதை நாம் அறியவில்லை. தற்பொழுது அண்டம் முழுவதும் மிகப்பெரிய கருந்துளைகள் குவாண்டம் கோட்பாட்டின் விதிகளுக்கு உட்பட்டு இருக்கும் சாத்தியங்கள் உள்ளன. அவை வெடித்துச் சிதரும்போதும் ஆவியாக காணாமல் போகும்போதும் சிறு தடயங்களை விட்டுச் செல்லும்.

கருந்துளையிலிருந்து வெண்துளையாக மாறும்போது வெளியாகும் கதிர்களை ஆய்வு செய்யும் வழிமுறையில் என் சகாக்களுடன் ஈடுபட்டு வருகிறேன். இது போன்ற கதிர்களை முன்னரே கவனித்திருந்தாலும் தெளிவான முடிவுகளை எட்ட முடியவில்லை. ஆய்வுகள் முன்னேறியபடி உள்ளன. நாம் இன்னும் சென்று சேரவில்லை என்றாலும் எங்கும் முட்டியும் நிற்கவில்லை .

நான் ஆய்வு மாணவனாக இருந்தபோது தத்துவ நோக்கில்லாததால் பல புதியதரிசனங்களை புரிந்துகொள்ள முடியாதவர்களாக இருக்கிறோம் எனசந்தேகித்திருக்கிறேன்இன்றைய விஞ்ஞான சொல்லாடல்கள் மிகவும்குறுகிவிட்டதாக நினைக்கிறீர்களாநாம் சரியான கேள்விகளைக்கேட்கிறோமா?

இதில் நானும் உங்கள் பக்கம்தான். பெரும்பாலான நேரங்களில் முன்னேற்றம் விஞ்ஞான தர்க்கத்தில் இல்லாமல் கோட்பாடு சார்ந்தே இருக்கிறது. குறிப்பாக விஞ்ஞான வளர்ச்சியின் வரலாற்றையும் அங்கு நடந்த பெரிய பாய்ச்சல்களையும் பார்க்கும்போது இந்த எண்ணம் வராமல் இல்லை. நியூட்டன், ஃபாரடே, ஐன்ஸ்டீன், ஏன் மாக்ஸ்வெல் அல்லது ஷ்ரோடிங்கர் அல்லது ஹைசென்பர்க் என யாரை எடுத்துக்கொண்டாலும் சரியான சமன்பாடு கண்டுபிடித்தது மட்டுமே மிகப்பெரிய பாய்ச்சலாக மாறவில்லை. பெருமளவு நேரங்களில் மிகவும் வித்தியாசமான கோணத்தில் அணுகுவதால் பிரச்சனையின் அடிப்படை மாறிவிட்டிருந்தது. இதுவே அவர்களது வெற்றி. விஞ்ஞானத்தில் முன்னேற்றம் என்பது நமது மூளைகளை திறந்து வைத்திருப்பதால் மட்டுமே உருவாவதல்லாது துறை அதிநிபுணத்தனத்தால் உருவாவது அல்ல எனும் என் நம்பிக்கை மீண்டும் உறுதியாகி இருக்கிறது.

உங்கள் புத்தகத்தினால் ஆர்வமேற்பட்டு மேற்கொண்டு படிக்க நினைக்கும் இளம்வாசகருக்கு நீங்க பரிந்துரைக்கும் புத்தகங்கள் என்னென்ன?

நான் எல்லாவற்றையும் படிக்கும்படி சொல்லுவேன். தன்னைச் சுற்றிலும் கவனிப்பதுடன் தொடர்ந்து படிப்பது மட்டுமே நம் அறிவைத் திறக்கும். நான் சிறு வயதில் வரையறை இல்லாமல் சகலத்தையும் படிப்பவனாக இருந்தேன். ஒரு இளைய வாசகன் தன்னை மெலிதாகக்கூட ஈர்க்கும் எல்லாவற்றையும் படித்து மூளையில் ஏற்றிவிடவேண்டும். பின்னர் மறந்துவிடும் என்றாலும் உள்ளே மூளைக்குள் எல்லாமே பயன்பாட்டில் இருக்கும், நாம் மறந்தால்கூட. நாம் படித்த அத்தனையையும் மறந்தபின் எஞ்சி இருப்பதுதான் கலாச்சாரம் என யாரோ சொல்லியிருக்கிறார்கள்.

நன்றி: The Spectator

 
 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.