Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லாயக்கு - நிலத்தையும் மொழியையும் இழத்தல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

லாயக்கு

முகம்மது தம்பி மரைக்கார் / 2019 ஜனவரி 29 செவ்வாய்க்கிழமை, மு.ப. 07:18Comments - 0

image_f0f3cb52fe.jpgஒரு மக்கள் கூட்டம் தனக்கான நிலத்தையும் மொழியையும் இழத்தல் என்பது மிகவும் ஆபத்தானது.

ஓர் இனத்தை அழித்து விடுவதற்கு, அவர்களை நிலமற்றவர்களாக மாற்றி விடுவதே, மிகச் சூழ்ச்சிகரமான வழியாகும். நிலத்தை மீட்பதற்காகவும் மொழிக்கான அங்கிகாரத்துக்காகவும் உலகில் ஆரம்பித்த சண்டைகள், இன்னும் முடிந்தபாடில்லை.  

இலங்கையின் சிறுபான்மைச் சமூகங்களும், நீண்ட காலமாக, இந்த ஆபத்துக்குள் சிக்கி விட்டன. ‘தேசிய இனம்’ எனும் அடையாளத்தை, சமூகமொன்று பெற்றுக் கொள்வதற்கு, நிலமும் மொழியும் மிகப் பிரதானமானவையாகும். அதனால்தான், தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் நிலங்களை அபகரிக்கும் முயற்சிகளில், பெரும்பான்மையினப் பேரினவாதிகள், தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர்.  

நாட்டில், மாறிமாறி ஆட்சிக்கு வந்த, அனைத்து அரசாங்கங்களும் சிறுபான்மைச் சமூகங்களின் நிலத்தை, ஆக்கிரமிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்துள்ளன. தொல்பொருள் திணைக்களம், வன பாதுகாப்புத் திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம், இராணுவம் ஆகியவற்றைக் கொண்டு, சிறுபான்மைச் சமூகங்களின் பல்லாயிரக் கணக்கான ஏக்கர் வளமான நிலங்கள், பறித்தெடுக்கப்பட்டுள்ளன. பௌத்த மதத்தின் பெயராலும், சிறுபான்மையினரின் நிலங்கள் கபளீகரம் செய்யப்பட்டு இருக்கின்றன.  

அந்தவகையில், கிழக்கு மாகாணத்தில் 60 ஆயிரம் ஏக்கர்களுக்கும் மேற்பட்ட நிலங்களை முஸ்லிம் சமூகம் இழந்திருக்கிறது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும், அம்பாறை மாவட்டத்தில் மட்டும், முஸ்லிம்களின் 30 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளதாக, முன்னாள் இராஜாங்க அமைச்சரும், ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் செயலாளருமான எம்.ரி ஹசன் அலி கூறுகிறார்.  

அம்பாறை மாவட்டத்தில், ஹிங்குரான சீனிக் கூட்டுத்தாபனத்துக்கென கைப்பற்றப்பட்ட முஸ்லிம்களின் காணிகள், சம்மாந்துறை, கரங்கா வட்டை, பொத்துவில், வட்டமடு, பொன்னன்வெளி, அஷ்ரப் நகர் போன்ற பகுதிகளில், முஸ்லிம்கள் பறிகொடுத்த காணிகளின் பட்டியல் மிக நீளமானது.   

அம்பாறை மாவட்டம், அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட பொன்னன்வெளி, அஷ்ரப் நகர் ஆகிய பகுதிகளில் மட்டும், முஸ்லிம்களுக்குச் சொந்தமான பல நூறு ஏக்கர் காணிகள், பெரும்பான்மையினப் பேரினவாதிகளால் அபகரிக்கப்பட்டுள்ளன.   

அங்குள்ள, தீகவாபி பிரதேசமும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் 1987ஆம் ஆண்டு, புனித பூமியாகப் பிரகடனம் செய்யப்பட்டது. அதையடுத்து, முஸ்லிம்களின் பொன்னன்வெளி விவசாயக் காணி 600 ஏக்கர் அபகரிக்கப்பட்டது.   

2009ஆம் ஆண்டு அஷ்ரப் நகரில், முஸ்லிம்களுக்குச் சொந்தமான சுமார் 150 ஏக்கர் காணியை சுற்றி, வனஜீவராசிகள் திணைக்களம் யானை வேலியை அமைத்து விட்டு, அந்தக் காணிகளைக் கையகப்படுத்தினர். 2011ஆம் ஆண்டு, அந்தப் பகுதிக்குள் இராணுவத்தினர் வந்து, முகாம் அமைத்துக் கொண்டனர்.   

இதன் மூலம் 69 குடும்பங்கள், தமது காணிகளை இழந்தன. வனஜீவராசிகள் தினைக்களமும் இராணுவமும் அபகரித்துக் கொண்டதால் இராணுவத்துக்குப்  பயந்து வெளியேறினார்கள். அவ்வாறு வெளியேறியவர்களில் ஏராளமானோர்,  வசிப்பதற்குச் சொந்த இடமில்லாமல், இன்று வரை அலைந்து கொண்டிருக்கின்றார்கள் என்பது, வேறு கதை.

தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி, பாதிக்கப்பட்ட மக்கள் பல்வேறு ஆர்ப்பாட்டங்களையும் கவனயீர்ப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருந்த போதும், சில வாரங்களுக்கு முன்னர் வரை, அந்த முயற்சிகள் கைகூடவில்லை. 

  அஷ்ரப் நகர் கிராமத்தின் ஆதிப் பெயர், ஆலிம்சேனை. யுத்தம், சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களை 2006ஆம் ஆண்டு, அந்தக் கிராமத்தில் மீள்குடியேற்றியபோது, ‘அஷ்ரப் நகர்’ என்று, அக்கிராமத்துக்கு மாற்றுப் பெயர் வைக்கப்பட்டது.

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட மக்கள் எல்லோரும் சேர்ந்து, இராணுவம் கைப்பற்றிக் கொண்ட தமது காணிகளை உடனடியாக விடுவிக்குமாறு கோரி, அடிக்கடி ஆர்ப்பாட்டத்திலும், கவனயீர்ப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்தனர். ஆனாலும், கடந்த எட்டு வருடங்களாக அந்த மக்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை.  அங்குள்ள நாடளுமன்ற உறுப்பினர்களாலும், மேற்படி விடயத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தீர்வைப் பெற்றுக் கொடுக்க முடியவில்லை.  

image_5dee86d31c.jpg

இந்த நிலையில்தான், அஷ்ரப் நகரில் அமைக்கப்பட்ட முகாமிலிருந்து இராணுவம் வெளியேறியுள்ளது. இதையடுத்து, தாம் முகாம் அமைத்திருந்த காணிகளை விடுவித்துள்ள இராணுவத்தினர், அதற்கான ஆவணங்களை கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவிடம் கடந்த 18ஆம் திகதி உத்தியோகபூர்மாகக் கையளித்துள்ளனர்.  

இராணுவத்தால் இவ்வாறு 39.25 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் மாகாண காணி ஆணையாளர் ஊடாக, உரிமையாளர்களிடம் காணிகளைக் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஜே. லியாகத் அலி தெரிவித்தார்.   

இந்த நிலையில்தான், அஷ்ரப் நகரில் முகாம் அமைத்திருந்த இராணுவம் வெளியேறியுள்ளது. இதையடுத்து, அந்தக் காணிகள் விடுவிக்கப்பட்டமைக்கான ஆவணங்களை, கிழக்கு மாகாண ஆளுநரிடம் இராணுவம் கையளித்துள்ளது.  

இந்தநிலையில், இராணுவத்தினர் விடுவித்தவை மட்டுமன்றி, தாங்கள் இழந்த 150 ஏக்கர் காணிகளையும் மீட்டுத் தருமாறு, கிழக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்த அஷ்ரப் நகர் மக்கள், எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

இது ஒருபுறமிருக்க, வடக்கு மாகாணத்தில் இராணுவம், ஏனைய அரச இயந்திரங்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 90 சதவீதமான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக, அந்த மாகாணத்தின் ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்திருக்கின்றார்.  

மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னர், வடக்கில் தமிழர்கள் பறிகொடுத்த கணிசமானளவு காணிகள், விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. தமிழர்களின் நாடாளுமன்றப் பிரதிநிதிகள் எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு, இதைச் சாதித்திருக்கின்றனர்.   

இன்னொருபுறம், தமது காணிகளை வடக்கில் பறிகொடுத்த தமிழர்கள், அவற்றை மீட்டெடுக்கும் பொருட்டு, கேப்பாப்புலவு போன்ற இடங்களில், தன்னெழுச்சியாக சாத்வீகப் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.  

ஆனால், கிழக்கில் முஸ்லிம்களின் காணிகளை விடுவிப்பதில், அரசாங்கம் பெரிதாக அக்கறை காட்டவில்லை. மறுபுறம், முஸ்லிம்களின் அரசியல் பிரதிநிதிகளும் இவ்விவகாரத்தில் ஆட்சியாளர்களுக்கு அழுத்தம் கொடுத்ததாகவும் தெரியவில்லை.  ஆனால், ‘தானாக விழும்’ பழங்களை, தாங்கள்தான் ‘வீழ்த்தியதாக’ உரிமை கோரும், அரசியலை, முஸ்லிம் அரசியல்வாதிகள் செய்து கொண்டிருப்பதுதான் வெட்கக்கேடாகும்.  

மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை, ஆட்சியில் அமர்த்துவதற்குத் தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் கட்சிகள் பெரிதும் உதவியிருக்கின்றன. குறிப்பாக, அண்மையில் நடந்த அரசியல் குழப்பத்தின்போது, சிறுபான்மை அரசியல் கட்சிகளின் நாடாளுமன்ற பிரதிநிதிகள், ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்திருந்தன.   

இவற்றுக்குக் கைமாறாக, முஸ்லிம் அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களுக்கும் தமது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ‘கொழுத்த’ அமைச்சர் பதவிகளைத் தெரிவு செய்து பெற்றுக் கொண்டனர். ஆனால், தமிழர் தரப்பு, அமைச்சர் பதவிகளைத் தவிர்த்து, தங்கள் மக்களிடமிருந்து அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்டெடுப்பதிலும், புதிய அரசியல் யாப்பில் தமது சமூகத்துக்குத் தேவையானவற்றை உள்ளடக்குவதிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.   

வடக்கில் தமிழர்கள் இழந்த 90 சதவீதமான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், கிழக்கு முஸ்லிம்கள் இழந்த 10 சதவீதமான காணிகளேனும் விடுவிக்கப்படவில்லை என்பதிலிருந்தே, இங்குள்ள முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ‘லாயக்கு’ என்ன என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.  

எனவே, கிழக்கு முஸ்லிம்கள், இன்னும் ‘இலவு’ காத்துக் கொண்டிராமல், தாங்கள் இழந்த காணிகளை மீட்டெடுப்பதற்குத் தன்னெழுச்சிப் போராட்டங்களைத் தொடங்க வேண்டும்.   
பூனைக்கு மணியை, யாராவது கட்டியே ஆக வேண்டுமல்லவா?  

‘வைராக்கிய மனிதர்’

image_2b0ea8427f.jpgசுற்றிவர முட்கம்பி வேலியிடப்பட்ட இராணுவ முகாம். ஆங்காங்கே இராணுவத்தினரின் கட்டடங்களும் பாதுகாப்புக் காவலரண்களும் அமைந்திருக்கின்றன. இவற்றின் இடையே இருக்கின்ற சிறியதொரு ஓலைக்குடிசையில், தனது குடும்பத்தினருடன் வாழ்ந்து வருகிறார் மிஸ்பாஹ்.   

அஷ்ரப் நகரில் இராணுவத்திடம் தங்கள் காணிகளைப் பறிகொடுத்தவர்கள், அங்கிருந்து கவலையோடு வெளியேறியபோது, “உயிர் போனாலும், எனது இடத்தை விட்டுப் போக மாட்டேன்” என்று உறுதிபடச் சொல்லி, இராணுவ முகாமுக்குள் அகப்பட்டுக் கொண்ட தனது வாழ்விடத்திலேயே, குடும்பத்துடன் இன்னும் இருக்கின்றார் மிஸ்பாஹ்.  

தனது நிலத்தை விட்டுக் கொடுப்பதில்லை என்கிற வைராக்கியத்துடன், இவ்வாறு தன்னுடைய வீட்டிலேயே வாழ்ந்து வருவதன் பொருட்டு,  மிஸ்பாஹ் எதிர்கொண்ட அச்சுறுத்தல்களும் பிரச்சினைகளும் கொஞ்ச நஞ்சமல்ல.  

மிஸ்பாஹ்வுக்கு இப்போது 59 வயதாகிறது. மனைவி, 13 பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறார். பிள்ளைகளில் ஏழு பேர் ஆண்கள்; ஆறு பேர் பெண்கள். அஷ்ரப் நகரில், சேனைப்பயிர் செய்கையில் ஈடுபட்டு, கௌரவமாக வாழ்க்கையை நடத்திக்கொண்டிருந்த போதுதான், அந்த மக்களின் நிலத்தை, இராணுவம் அபகரித்துக் கொண்டது.  

மிஸ்பாஹ்வை, அவருடைய இருப்பிடத்தில் சந்தித்துப் பேசியபோது,  கடந்த எட்டு வருடங்களாக, தான் எதிர்கொண்டு வந்த துயரங்களை, அவர் பகிர்ந்து கொண்டார்.  

“என்னையும் எனது குடும்பத்தையும் இங்கிருந்து விரட்டிவிட வேண்டும் என்பதற்காக, இராணுவத்தினர் பல்வேறு அட்டகாசங்களில் ஈடுபட்டனர். மாலை 6.00 மணியானால், குடிசையை விட்டு, நாங்கள் வெளியே போகக் கூடாது என்று, அவர்கள் கட்டளையிட்டார்கள். அதனால், வெளியே சென்று தண்ணீர் எடுத்து வரக்கூட முடியாமலிருந்தது; தொழுகைக்காகப் பள்ளிவாசலுக்குச் செல்ல முடியவில்லை; அவசரத் தேவைகளின் நிமித்தம் கடைகளுக்கோ, வேறு இடங்களுக்கோ, மாலை 6.00 மணிக்கு பிறகு, எங்களால் செல்வதற்கு முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டோம்”.  

“ஒரு நாள் இரவு, நாங்கள் தூங்கிக் கொண்டிருந்த போது, எங்கள் குடிசையின் கதவை இராணுவத்தினர் உடைத்து, உள்ளே வர முயன்றார்கள். அப்போது நாங்கள் சத்தமிட்டுக் கத்தினோம்.

image_41e48f1f86.jpg

அவர்கள் ஓடி விட்டார்கள். மறுநாள் காலை, அந்தச் சம்பவம் தொடர்பில், முறைப்பாடு செய்வதற்காக அக்கரைப்பற்று பொலிஸ் நிலையம் சென்றோம். அங்கு இராணுவத்துக்குச்  சார்பாக, பொலிஸார் நடந்து கொண்டனர். இராணுவத்தினரை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்த பொலிஸார், எங்கள் முறைப்பாட்டைப் பதிவு செய்யாமலேயே, அதே இராணுத்தினரின் வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைத்தார்கள்” என்று, தான் எதிர்கொண்ட கஷ்டங்களை மிஸ்பாஹ் விவரித்தார்.   

இப்படி ஏராளமான கெடுபிடிகளுக்கு மத்தியில்தான், பெண் பிள்ளைகள், மனைவி உள்ளிட்ட குடும்பத்தினருடன், கடந்த எட்டு வருடங்களையும் மிஸ்பாஹ் கடத்தியுள்ளார்.  

இராணுவத்தினர், தமது காணிகளை அபகரித்துக் கொண்டமைக்கு எதிராகவும் தொடர்ச்சியாக இராணுவத்தினர், தமக்கு அச்சுறுத்தல் விடுத்து வந்தமையைக் கண்டித்தும், மிஸ்பாஹ் உட்பட பாதிக்கப்பட்ட மூவர், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்தார்கள்.  

மேலும், பாதிக்கப்பட்ட 69 குடும்பங்கள் சார்பாக, தங்கள் காணிகளைப் பறிகொடுத்த ஆதம்பாவா இப்றாலெப்பை, அகமது லெப்பை கதீஜா உம்மா ஆகிய இருவர், உயர்நீதிமன்றில் 2012ஆம் ஆண்டு வழக்குத் தாக்கல் செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.  

அந்த வழக்கில், நீதிமன்றம் கட்டளையொன்றைப் பிறப்பித்திருந்தது. நாட்டினுடைய பாதுகாப்பின் பொருட்டு, இராணுவ முகாம் அமைப்பதற்காக அந்தக் காணிகள் தேவைப்படுமாயின், குறித்த காணிகளின் உரிமையாளர்கள் விரும்பிய இடத்தில், சகல வசதிகளும் கொண்ட மீள்குடியேற்றமொன்றை உருவாக்கிக் கொடுக்குமாறு, நீதிமன்றம் கட்டளையிட்டது.  

இதையடுத்து, “அஷ்ரப் நகர் கிராமத்திலுள்ள சுமார் ஒன்றரை ஏக்கர் நிலத்தில், ஐந்து குடிசைகளை அமைத்த இராணுவம், அங்கு சென்று எங்களைக் குடியேறுமாறு, கேட்டுக்கொண்டது. ஆனால், காணிகளை இழந்தவர்கள் எவரும், அங்கு சென்று குடியேறவில்லை” என்றார் மிஸ்பாஹ்.  

அஷ்ரப் நகரில் பொதுமக்களின் காணிகளை, இராணுவம் கைப்பற்றியபோது, அங்கு நிர்மாணிக்கப்பட்டிருந்த வீடுகள் எவையும் இப்போது இல்லை. “அனைத்தையும் இராணுவத்தினர் அழித்து விட்டார்கள்” என்று மிஸ்பா கவலையோடு கூறினார்.  

அந்த இடத்தில், பொதுமக்களின் வாழ்விடம் என்று, இப்போது மிஸ்பாஹ்வின் குடிசை மட்டுமே எஞ்சியிருக்கிறது. அடிப்படை வசதிகள் எவையுமற்ற அந்தக் குடிசைக்குள்தான் மிஸ்பாஹ்வின் ‘பெரிய’ குடும்பம் வாழ்கிறது என்கிற தகவல் கவலையளிப்பதாக உள்ளது.  

மிஸ்பாஹ்வை சந்தித்த போது, அவரின் மகள் பாத்திமா சாஜிதா என்பவருடனும் பேசக் கிடைத்தது. தனது பாடசாலைக் கல்வி, இந்தக் காலகட்டத்தில் தடைப்பட்டு விட்டதாக அவர் கவலையுடன் கூறினார்.  

“இராணுவ முகாமுக்குள் எங்கள் காணியும் வாழ்விடமும் சிக்கிக் கொண்டதால், எங்களுடைய தொழிலான சேனைப் பயிர்ச் செய்கையை மேற்கொள்வதற்கும் வீடு ஒன்றைக் கட்டிக் கொள்வதற்கும் வாப்பாவால் முடியாமல் போய்விட்டது” என சாஜிதா கூறினார்.  

“அதனால், தமது குடும்பத்துக்கும் அஷ்ரப் நகரில் இராணுவத்தினரிடம் காணிகளைப் பறிகொடுத்தோருக்கும் அடிப்படை வசதிகளைக் கொண்ட வீட்டுத் தொகுதியொன்றை, அரசாங்கம் அமைத்துத் தரவேண்டும்” என்கிறார் சாஜிதா.  

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/லாயக்கு/91-228703

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.