Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நேற்று தமிழர்கள், இன்று முஸ்லிம்கள், நாளை யார்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று தமிழர்கள், இன்று முஸ்லிம்கள், நாளை யார்?

கலாநிதி அமீர் அலி

1956 பொதுத்தேர்தலில் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் வெற்றிக்குப் பிறகு இலங்கையின் அரசியல் கட்சிகளின் பிரசாரங்களில் ஆதிக்கம் செலுத்திவருவது ஒரேயொரு பிரச்சினையே இனவாதமே அது.

attack.jpg

ஐம்பது வருடங்களுக்கும் மேலாக இந்த பிரசாரங்களின் பிரதான இலக்காக தமிழ் சமூகமே இருந்தது. இறுதியில் ஒரு முப்பது வருடகால போருக்கும் வழிவகுத்தது. அந்த போரினால் நாட்டுக்கும் மக்களுக்கும் ஏற்பட்ட இழப்பு  உண்மையில் மதிப்பிடமுடியாததாகும். தமிழர் பிரச்சினை இப்போது அதன் தாக்கத்தை இழந்து வாக்காளர்களைக் கவருவதற்கு தென்னிலங்கையில் பயன்படுத்தமுடியாத ஒன்றாகிவிட்டது. என்றாலும்கூட, குறிப்பிட்ட சில ' அரசியல் ஹீரோக்கள் ' தமிழர் பிரச்சினைக்கு புத்துயிர் கொடுக்க முயற்சித்துக்கொண்டிருப்பதையும் காணக்கூடியதாக இருக்கிறது.

2009 ஆம் ஆண்டுக்குப் பிறகு அதுவும் குறிப்பாக 2015 ஆம் ஆண்டிலிருந்து சிங்கள அரசியல்வாதிகள் அச்சுறுத்தும் புதிய பிரசாரங்களை முன்னெடுப்பதற்கு இன்னொரு இலக்கை தேடிக்கொண்டிருந்தார்கள் ; அந்த தேடலில் அவர்கள் முஸ்லிம் சமூகத்தை கண்டுபிடித்தார்கள். சிங்களவர்களுக்கு மேலாக அரசியல்ரீதியிலும் கலாசாரரீதியிலும் தமிழர்கள் மேலாதிக்கம் செலுத்தும் ' அச்சுறுத்தல் ' இருப்பதாக புனைவுசெய்து சிங்களமக்களை நம்பவைக்கக்கூடியதாக பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டதைப் போன்று முஸ்லிம்கள் வர்த்தகரீதியிலும் குடிப்பரம்பல் ரீதியிலும் சிங்களவர்கள் மேலாக ஆதிக்கம் செய்யும் அச்சுறுத்தல் வந்துவிட்டது என்று இப்போது பிரசாரங்கள் முழுவீச்சில் முன்னெடுக்கப்படுகின்றன.சஹரான் & கோ.வின் ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைக் குண்டுத்தாக்குதல்கள் ( அவற்றின் பின்னணி பற்றிய விபரங்கள் இப்போது விளக்கமாக வெளிவந்துகொண்டிருக்கின்றன) காரணமாக முஸ்லிம்களுக்கு எதிராக ஏற்கெனவே முன்னெடுக்கப்பட்டுவந்த பிரசாரங்களில்  ' முஸ்லிம் பயங்கரவாத ' பரிமாணமும் சேர்ந்துகொண்டுள்ளது.

அதேவேளை, எந்தவொரு அரசியல் கட்சியுமே பொருளாதாரம், சுகாதாரம், கல்வி,சுற்றாடல் பாதுகாப்பு போன்ற மக்களை பெரிதும்  வாட்டிவதைக்கின்ற உண்மையான பிரச்சினைகளைப் பற்றி பேசுவதாக இல்லை.கடந்த காலத்தில் கூட, இடதுசாரிகளைத் தவிர வேறு எந்தவொரு அரசியல் கட்சியின் தலைவரும் தேர்தல் சமர்களின்போது உண்மையான பிரச்சினைகளில் கவனம் செலுத்தியதில்லை. இ்ன்று ஆட்சியதிகாரத்துக்காக மல்லுக்கட்டிக்கொண்டிருக்கின்ற மூன்று பிரதான கட்சிகளும் -- ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி , ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன திறந்த பொருளாதாரத்தை ஏகமனதாக ஆரத்தழுவியிருக்கின்றன.

அரசாங்கத்துறையை பொருளாதார பங்கேற்பிலும் முகாமைத்துவத்திலும் இருந்து படிப்படியாக விடுவிப்பதற்கு தயங்காத அளவுக்கு இந்த கட்சிகள் திறந்த பொருளாதாரத்தை நேசிக்கின்றவையாக மாறிவிட்டன. அதனால் முஸ்லிம் அச்சுறுத்தலைப் பற்றி பேசி மக்களை திசைதிருப்புவதைத் தவிர அவற்றுக்கு ஆக்கபூர்வமான திட்டம் எதையும் மக்கள் முன்வைக்கக்கூடிய வல்லமை இல்லை.மார்க்சியத்துடன் ஒரு புனைவுத்தன்மையான பிணைப்பைக் கொண்ட ஜனதா விமுக்தி பெரமுன ( ஜே.வி.பி.) யாவது ஆக்கபூர்வமான பொருளாதார நிகழ்ச்சித்திட்டத்துடனான நம்பகத்தன்மையான மாற்றாக அமையும் பார்த்தால் அதுவும் ஏமாற்றமாகப் போய்விட்டது. ஜே.வி.பி.யையும் கூட இனவாத வைரஸ் தோற்றிக்கொண்டுள்ளது. தீவிர வலதுசாரிக்கட்சிகளிடம் எந்தவிதமான உருப்படியான கொள்கையும் இல்லை.அவை படுமோசமான அரசியல் வங்குரோத்து நிலையில் இருக்கின்றன. இதுதான் எமது தேசத்தின் இன்றைய நிலை.

இவற்றினால் ஏற்படக்கூடிய விளைவு எத்தகையதாக இருக்கும் இருக்கும்? தமிழ்ச் சிறுபான்மை இனத்தவர்களை கண்ணியமாக நடத்தி அவர்களுக்கு சிலவகையான அதிகாரப் பகிர்வுகளை வழங்குவதற்கு தொடர்ச்சியாக மறுத்துவந்த காரணத்தால்தான் இறுதியில் உள்நாட்டுப் போர் வந்தது. இப்போது என்ன நடந்திருக்கிறது.தமிழர்களுக்கு அதிகாரத்தைப் பகிர மறுத்தவர்கள் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனர்களுக்கு 99 வருடங்களுக்கு  கொடுத்திருக்கிறார்கள். எப்போது அவர்கள் இங்கிருந்து போவார்கள்? இந்த கேள்விக்கு கடவுளினால் மாத்திரமே பதில் சொல்லமுடியும்.

 அதேபோன்றே 2009 ஆம் ஆண்டுக்குப் பிறகு இலங்கை விவகாரங்களில் இந்தியாவின் செல்வாக்கும் கணிசமானளவுக்கு அதிகரித்திருக்கிறது. உள்நாட்டில் எந்தவொரு நடவடிக்கையையும் முன்னெடுப்பதற்கு முன்னதாக இந்திய தலைவரிடம் ஆசீர்வாதம் பெறுவதற்காக இலங்கையின் ஜனாதிபதிகளும் பிரதமர்களும் புதுடில்லிக்கு விஜயம் செய்வதென்பது பெரும்பாலும் ஒரு சடங்காகவே மாறிவஞ்டது எனலாம்.மதரீதியான ஆசீர்வாதத்துக்காக திருப்பதியும் அரசியல்ரீதியான ஆசீர்வாதத்துக்காக புதுடில்லியும் இலங்கைத் தலைவர்களுக்கு அரசியல் யாத்திரை மையங்களாக மாறிவிட்டன.

அம்பாந்தோட்டையைப் போன்ற சொத்துக்களை நீண்டகால அடிப்படையில் பெற்றுக்கொள்வதன் மூலம் இலங்கைத் தீவில் சீனப்பிரசன்னத்தை எதிரீடு செய்வதற்கு இந்தியா விரும்புகிறது.பிரதமர் நரேந்திர மோடி சிறிசேன அன்ட் கம்பனிக்கு வெறுமனே ' ஹலோ ' சொல்வதற்கு ' கடந்தவாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவில்லை.சீன -- இந்திய புவிசார் அரசியலுக்குள் இலங்கை வசமாக மாட்டிக்கொண்டுள்ளது.  அதிகாரம் செய்யவிரும்புகின்ற  மூன்றாவது நாடும்  மிகவும் பலம்பொருந்தியதுமான  அமெரிக்கா ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்களை அடுத்து  திருகோணமலையில் தனது கடற்படை கப்பல்களுக்கு தரிப்பு வசதிகளைப் பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாக இலங்கையிடமிருந்து சலுகைகளை வலிந்து கேட்பதற்கு சர்வதேச முஸ்லிம் பயங்கரவாத அச்சுறுத்தலை ஊதிப்  பெருப்பித்துக்காட்டும் என்பது நிச்சயம். ( எல்லாவற்றுக்கும் மேலாக அமெரிக்க ஏகாதிபத்தியமே ஜிஹாதிகளையும் ஜிஹாதிகளுக்கு எதிரானவர்களையும் உருவாக்கியது. இப்போது  இலங்கையைப் போன்ற கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்ததும் பொருளாதார மற்றும் அரசியல் ரீதியில் வலிமையற்றதுமான நாடுகளில் நிரந்தரமாகக்  காலூன்றுவதற்கு அமெரிக்க வெளியுறவு  கொள்கைவகுப்பாளர்களுக்கு சர்வதேச ஜிஹாதிய அச்சுறுத்தல் ' வசதியான ஒரு சந்தைப்படுத்தல் ' கருவியாக மாறியிருக்கிறது ) மோடியைத் தொடர்ந்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பியோ இலங்கை வருகிறார். அமெரிக்காவின் கோரிக்கையையும் நெருக்குதலையும் எவ்வளவு காலத்துக்கு இலங்கையினால் மறுத்துநிற்க முடியும் ? மூன்று மேலாதிக்க நாடுகள் மத்தியில் இலங்கை இப்போது சிக்கியிருக்கிறது.

அதேவேளை, இலங்கையின் பொருளாதாரம் ஒரு பக்கத்தில் செயலிழந்துபோன அரசாங்கத்தின் காரணமாகவும் மறுபக்கத்தில் தொடரும் இனவாக பதற்றநிலை மற்றும் வன்செயல்கள் காரணமாகவும் பாரதூரமான தாக்கத்துக்குள்ளாகியிருக்கிறது. சீர்குலைந்துபோயிருக்கும் பொருளாதாரத்தை மீட்டெடுக்க மத்திய வங்கி ஆளுநர் என்னதான் முயற்சிகளை எடுத்தாலும் -- தேசத்தின் பெரும்பாக பொருளாதாரத்தின் அத்திபாரங்கள் கெட்டியானவையாக இருப்பதாக பிரகடனம் செயதாலும் மக்கள் அனுபவிக்கின்ற கஷ்டங்கள் வேறுபட்ட கதையையே சொலகின்றன.அன்றாடம் அதிகரித்துக்கொண்டிருக்கும் வாழ்க்கைச் செலவு, குவியும் தனிப்பட்ட கடன்கள் மற்றும் வறுமை அதிகரிப்பு  எல்லாமே தற்கொலைகள் அதிகரிப்பதற்கு வழிவகுக்கின்றன ; இவை விரைவாக வீழ்ச்சியடைந்துகொண்டிருக்கும் பொருளாதாரம் ஒன்றின் வெளிப்பாடுகள்.

இந்த பொருளாதார இடர்நிலை இனவாத வைரஸுக்கு பெருமளவுக்கு ஊட்டம் கொடுக்கிறது. ஒரு குடும்பத்தில் தாராளமாக வளம் இருந்தால் மூத்த சகோதரன் கூடுதலான வளத்தை அபகரிப்பதாகவும் தனக்கு சொற்பமே கிடைப்பதாகவும் இளைய சகோதரன் முறையிடமாட்டான். பகிர்வதற்கு சொற்பமே இருக்கின்றபோது தான் தகராறு தொடங்குகிறது. பொருளாதாரத்தை முழுமையாக எடுத்துப் பார்க்கும்போது இது தான் உண்மை நிலை.பொருளாதாரம் சுபிட்சம் அடைந்து பன்முக அரசியல் சமூகத்தில் பகிர்ந்துகொள்வதற்கு தாராளமாக இருக்கும்போது மக்களினால் அமைதியையும் சமாதானத்தையும் அனுபவிக்கக்கூடியதாக இருப்பதை வரலாறு நிரூபித்து நிற்கிறது. பொருளாதார இடர்நிலையின்போது மக்கள் கொந்தளிப்புக்கு முகங்கொடுக்கவேண்டியிருக்கிறது என்பதுடன் பன்முகத்தன்மையும் ஆபத்துக்குள்ளாகிறது.

கடந்த பல தசாப்தங்களாக இலங்கையின் பன்முகத்தன்மையின் கதை இதுதான்.இனவாதம் பொருளாதாரத்தை பலவீனப்படுத்துகிறது ; அந்த பலவீனம் இனவாதத்தை போஷித்து வளர்க்கிறது. நாட்டின் பன்முக சமூகம் உயர்வாழவேண்டுமானால் இந்த தொடர்பு துண்டிக்கப்படவேண்டும்.இந்த உண்மையை முறையாகப் புரிந்துகொண்ட நாடு என்றால் அது சிங்கப்பூர் தான்.அந்த நாடு லீ குவான் யூவின் தலைமைத்துவத்தின் கீழ்  அதன் தோற்றத்தின் போதே இந்த விளக்கத்தை பெற்றிருந்தது.அதன் காரணத்தினால்தான்  1980களில் பேரினவாதத்தன்மையான கோரிக்கைகளை முன்வைத்த சிங்கப்பூரின் பெரும்பான்மையினத்தவர்களான சீனர்களைப் பார்த்து அந்த நாட்டை ஒரு இலங்கையாக்கிவிடாதீர்கள் என்று லீ குவான் யூ எச்சரிக்கை செய்தார். 

அந்த நிலைப்பாட்டை எடுத்ததன் மூலம் அவர் தான் ஒரு அரசியல்வாதி அல்ல, அரசியல்ஞானி என்பதை உலகிற்கு நிரூபித்தார்.

1950 களிலும்  1960 களிலும் தொடங்கி( ஒரு சிலர் விதிவிலக்காக )  சிங்கள அரசியல்வாதிகள் பெரும்பான்மையினத்தவர்களுக்கும் சிறுபான்மையினத்தவர்களுக்கும் இடையிலான  அபிவிருத்தி இடைவெளிக்கு மற்றைய  சமூகத்தவர்களையே குற்றஞ்சாட்டினார்கள்.

அந்த இடைவெளியை நிரப்புவதற்கு  கடுமையான தீர்மானங்களை எடுக்காமல் அவர்கள் இனவாத அடிப்படையில் பாரபட்சமான அணுகுமுறைகளையே கடைப்பிடித்தார்கள்.அப்போது குற்றச்சாட்டு  தமிழர்களுக்கு எதிராகத் திரும்பியது....

இப்போது முஸ்லிம்களுக்கு எதிராகத் திரும்பியிருக்கிறது ; அடுத்து யாருக்கு எதிராகத் திரும்பும்? இந்திய வம்சாவளி தமிழர்கள்?

தேசத்தைக் கட்டியெழுப்புதல் என்பதே நாடு இன்று முகங்கொடுக்கின்ற அடிப்படை பிரச்சினையாகும். ' மென்மையான இன ஒதுக்கல் ' ஒன்றின் அறிகுறிகளை இலங்கை ஏற்கெனவே காண்பிக்கத் தொடங்கிவிட்டது ; அது  ' வன்மையான இன ஒதுக்கலாக ' பலமடைவதற்கு முன்னதாக அரசியல்வாதிகள் நிதானமாகவும் விவேகமாகவும் செயற்பட்டு, குணப்படுத்த முடியாத முறிவு நாட்டுக்கு ஏற்படுவதைத்  தடுக்கவேண்டும். ஏனெ்ன்றால், வெளிநாட்டு சக்திகள் இந்த முறிவை பெரிதும் விரும்புகின்றன. ஏனென்றால், வறியவையும் பலவீனமானவையும் உறுதிப்பாடற்றவையுமான  நாடுகளை ஒன்றுக்கு  எதிராக  ஒன்றை தொர்ச்சியாகப் பயன்படுத்தமுடியும் ;அதன் மூலமாக உள்நாட்டு அரசியல் அதிகார சக்திகளை தங்களது தாளத்துக்கு ஏற்ப ஆடவைக்கலாம் என்று அவை நம்புகின்றன.

முஸ்லிம்களுக்கு எதிரான தற்போதைய அலையைப் பொறுத்தவரை, முஸ்லிம் சமூகத்திற்குள் சீர்திருத்தங்களுக்காான தேவை குறித்து நிறையவே சொல்லப்பட்டிருக்கின்றன.ஆனால், எந்தவொரு சமூகமும்  அதன் இருப்புக்கு வெளியில் இருந்து அச்சுறுத்தலை எதிர்நோக்கும்போது உள்சீர்திருத்தங்களை முன்னெடுக்கப்போவதில்லை. அந்த பினபுலத்தில் நோக்குகையில், சீர்திருத்தங்களை நியாயப்படுத்துகிறவர்கள் கூட தங்களது சொந்தச் சமூகத்தினால் துரோகிகளாகவே கருதப்படுவர்.

நாட்டின் பொருளாதாரம் கட்டியெழுப்பப்பட வேண்டும்.அதற்கு சகல சமூகங்களினதும் ஒத்துழைப்பு தேவை.பொருளாதாரம் என்பது வெறுமனே புள்ளிவிபரங்களுடனும் வகைமாதிரிகளுடனும் சம்பந்தப்பட்ட விவகாரம் அல்ல. அதைவிடவும் பெரியது.அது மக்களைப்பற்றியது.மக்கள் அச்சத்துடனும் ஏக்கத்துடனும்்வாழும்போது எந்த பொருளாதாரமும் செழிக்க முடியாது. மதத்தை அனுஷ்டித்து கலாசாரத்தை கொண்டாடுவதற்கு மக்களின் வயிறு நிரம்பவேண்டும் என்பதை மதத்தையும் கலாசாரத்தையும் பேணிப்பாதுகாக்கவேண்டும் என்ற அதீத பற்றுதலை கொண்டவர்கள் முதலில் விளங்கிக்கொள்ளவேண்டும். வ்வாறு கூறுவதை பொருள்முதல்வாதத்தை போதிக்கும் ஒரு மடத்தனமான காரியம் என்று அர்த்தப்படுத்தக்கூடாது.

மாறாக இதை  மனிதவாழ்வு பற்றிய பகுத்தறிவுபூர்வமான நோக்காக கருதவேண்டும். இலங்கை அரசியல்வாதிகள் நாட்டினதும் அதன் மக்களினதும் சிறந்த எதிர்காலத்தைப் பற்றி உண்மையான  அக்கறைகொண்டவர்களாக இருந்தால், அவர்கள் தமிழ் மக்களுடனும் முஸ்லிம் மக்களுடனும் நல்லிணக்கச் செயன்முறையைத் துரிதப்படுத்தவேண்டும் ;  வன்முறையைக் கட்டவிழ்த்துவிடுகின்ற ( சில காவியுடைக்காரர்களையும் உள்ளடக்கிய ) கும்பல்களிடமிருந்து முஸ்லிம்களைப் பாதுகாக்கவேண்டும்.

அனுகூலமான சில சமிக்ஞைகளையும் காணக்கூடியதாக இருக்கிறது. மக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்துகின்ற போக்கிற்கு எதிராக பல சிவில் உரிமை குழுக்கள் வெளிப்படையாகப் பேசுவதற்கு முன்வந்திருப்பதை உதாரணத்துக்கு கூறலாம். 

நிலைவரம் மட்டுமீறிச் சென்று பயங்கரமான கட்டத்தை எட்டிவிட்டதை செல்வாக்குமிக்க சில மதத்தலைவர்கள் கூட இப்போது உணருகின்றார்கள்.அவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து  எந்தளவு விரைவாக செயற்படுகிறார்களோ அந்தளவுக்கு அது நாட்டின் கௌரவம் மீட்கப்படுவதற்கு நல்லதாக இருக்கும்.

 

https://www.virakesari.lk/article/58596

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.