Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகரந்த வெளி – தமிழ் சிறுகதை உலகு தமிழகத்திற்கு வெளியே- சுனில் கிருஷ்ணன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மகரந்த வெளி – தமிழ் சிறுகதை உலகு தமிழகத்திற்கு வெளியே- சுனில் கிருஷ்ணன்

ko.sa_.jpg

[கோ சாரங்கபாணி]

[ஈரோட்டில் 10,11-8-2019ல் நிகழ்ந்த சிறுகதை அரங்கில் பேசப்பட்ட கதைகள் பற்றிய கட்டுரை] 

தமிழக வரலாற்றில் புலம்பெயர்வு தொல்நெடுங்காலமாக நிகழ்ந்து வருகிறது. வணிகத்தின் பொருட்டு தென்கிழக்கு ஆசியத் தீவுகளுக்கு பயணித்ததாக இருக்கலாம். அல்லது தேசாந்திரியாக நிலமெங்கும் அலைந்து திரிந்ததாகவும் இருக்கலாம் அல்லது போருக்காக மண் நீங்கியதாகவும் இருக்கலாம். செல்லும் இடங்களில் தங்கள் பூர்வீக வாழ்வின் எச்சங்களை எப்போதும் விட்டு வந்தார்கள். பண்டிகைகளாக, சிற்பங்களாக, ஏதோ ஒரு சடங்காக பண்பாட்டு நினைவு பேணப்பட்டு வந்தது.

மிகப்பெரிய அளவிலான புலம் பெயர்வு என்பது காலனிய காலகட்டத்தில் நிகழ்ந்தது. ஒப்பந்தக் கூலிகளாக ஆங்கிலேய ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளுக்கு கப்பல் கப்பலாக தமிழர்கள் சென்றார்கள். இலங்கையின் மலையக பகுதிகளுக்கும், மொரிஷியஸ் தீவிற்கும், மேற்கிந்திய தீவுகளுக்கும், மலேசிய, சிங்கபூர் நாடுகளுக்கும், தென்னாப்பிரிக்காவிற்கும் சென்றார்கள். பஞ்சம் வாட்டியெடுக்கும் வாழ்விலிருந்து தப்பித்து ஒரு வளமான வாழ்வின் மீதான கற்பனையின் பாற்பட்டு சாரை சாரையாக புறப்பட்டுச் சென்றார்கள். இலக்கடைவதற்கு முன்னரே கணிசமானவர்கள் இறந்தும் போனார்கள்.

சென்றவர்கள் வெகு அரிதாகவே திரும்பினார்கள். அவர்களும் அவர்களுடைய சந்ததியினரும் புதிய நிலத்தில் வேரூன்றி வாழத் துவங்கினார்கள். மலேசிய எழுத்தாளர் சீ.முத்துசாமியின் மலைக்காடு நாவல் இப்படியாக கிராமங்களில் இருந்து ஆசை வார்த்தையை நம்பி புறப்பட்டு கப்பலேறுவதையும் அதன் பின் சந்திக்கும் அவமானங்களையும் நுட்பமாக சொல்கிறது. ஏறத்தாழ நூறாண்டுகளுக்கு மேலாக இந்த இடம் பெயர்வு நிகழ்ந்தது. இதைத் தவிர கணிசமான தமிழர்கள் ஆற்றல் மிகுந்த சூரியன் அஸ்தமிக்காத பிரித்தானிய பேரரசின் ராணுவத்தின் கீழ் பணியாற்றி அடையாளமற்று மரணித்தும் போனார்கள். இலக்கிய ரீதியாக எந்த சுவடும் அற்று போனவர்கள் இவர்களே.

இதற்கு பின்பான புலம் பெயர்வு அலை என்பது 80 களின் மத்தியில் ஈழப் பிரச்சனையின் காரணமாக நிகழ்ந்தது. இந்தியா, ஐரோப்பிய, ஆஸ்திரேலிய மற்றும் கனடாவிற்கு ஈழத் தமிழர்கள் ஏதிலிகளாக சென்று சேர்ந்தார்கள். இங்கிலாந்து, ஃபிரான்ஸ், ஆஸ்திரேலியா மற்றும் கனடாவில் இன்று கணிசமான ஈழத் தமிழர்கள் வாழ்கிறார்கள். ஏறத்தாழ இந்த அலை இருபது ஆண்டுகள் நீடித்தது. இவைத் தவிர்த்து புதுச்சேரி ஃபிரான்ஸ் தேசத்தின் காலனியாக இருந்ததால் இரு நாட்டு குடியுரிமை மற்றும் சலுகைகள் வழியாக அங்கும் பண்பாட்டு தொடர்ச்சி உள்ளது. ஏறத்தாழ ஈழ புலம் பெயர்வின் காலகட்டத்தில், குறிப்பாக தாராளமயமாக்களுக்குப் பின் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி பல மத்திய வர்க்கத் தமிழ் குடும்பங்களை வளைகுடாவிற்கும், அமெரிக்காவிற்கும், ஆஸ்திரேலியாவிற்கும் குடி பெயரச்செய்தது இன்றைய தேதியில் உலகின் அனைத்து நாடுகளிலும் தமிழர்கள் வசிக்கிறார்கள் என்றே எண்ணுகிறேன்.

இது ஒரு பொது வரலாற்றுச் சித்திரம். இலக்கியப் பங்களிப்பை மட்டும் கருத்தில் கொண்டால் காலனிய  அலை, ஈழ அலை, தகவல் தொழில்நுட்ப அலை என மூன்றாக வரையறை செய்யலாம். மூன்றிற்கும் நுட்பமான வேறுபாடுகளும் தொடர்ச்சியும் உண்டு.

மலையகத் தமிழரான தெளிவத்தை ஜோசப் காட்டும் நிலக் காட்சிகளும் சித்தரிப்புகளும் மலேசிய எழுத்தாளரான சீ. முத்துசாமியின் படைப்புலகிற்கு வெகு அண்மையாகவே உள்ளன. தேச எல்லைகளுக்கு அப்பால் ஆங்கிலேய ஆளுகை, கங்காணிகள், தோட்டப்புறம் என அவை ஒன்றைப் போலவே தோற்றம் கொள்கின்றன. பிராந்திய ரீதியாக பிரிக்கலாம் என்றால் சிங்கப்பூர்-மலேசிய- மலையக இலக்கியம், ஐரோப்பா- அமெரிக்க – ஆஸ்திரேலிய இலக்கியம் என இரண்டாக வகுக்கலாம். இதிலும் சிங்கப்பூர் இலக்கியத்தின் துவக்கக் காலத்தை மலேசிய-மலையக இலக்கியத்துடன் சேர்த்துக்கொண்டாலும் தற்கால சிங்கப்பூர் இலக்கியத்தை அமெரிக்க- ஐரோப்பா வகையிலேயே கொணர முடியும் எனத் தோன்றுகிறது.

சிங்கப்பூர் எழுத்தாளர் கனகலதா எழுதிய ஒரு கட்டுரையில் சிங்கப்பூர் இலக்கியத்தை தினையற்ற திணை என குறிக்கிறார். திணை சார்ந்து இயங்கி வந்த தமிழ் இலக்கியம் திணையற்ற சூழலை முதன்முறையாக எதிர்கொண்டது சிங்கப்பூரில் என சொல்லலாம் என்பது அவருடைய வாதம். ஒருவகையில் அது நவீன நகர்மயமான சூழல். இந்த திணையற்ற திணை எனும் வரையறை எல்லா பேரு நகரங்களுக்கும், நவீன நகர்புற வசிப்பிடங்களுக்கும் பொருந்தும் என்றே தோன்றுகிறது. அல்லது பெருநகரம் என்பதே ஒரு புதிய திணை. உலகெங்கும் பெருநகர வாழ்வு ஏறத்தாழ ஒன்று போலவே இருக்கிறது.

தமிழின் எல்லா வடிவிலான சிறுகதைகளுக்கும் முன்னோடியாக இருக்கும் பேறு பெற்ற (சற்றே சலிப்பும் பொறாமையும் கொள்ளத்தக்க) புதுமைப் பித்தனே அவருடைய ‘துன்பக் கேணி’ கதை வழியாக புலம் பெயர் கதை களத்திற்கும் முன்னோடி ஆகிறார். நெல்லை வாசவன்பட்டியில் பஞ்சம். ஆனால் கப்பலில் அரிசி சென்று கொண்டிருக்கிறது. என நுட்பமாக சொல்கிறார். பண்ணையாரை பகைத்துக்கொள்ளும் வெள்ளையன் கைதாகிச் சென்றதும். அவனுடைய மனைவி மருதியும் அவளுடைய அன்னையும் இலங்கை தேயிலைத் தோட்டத்திற்குச் செல்கிறார்கள். நோய்மை அடைந்து சீரழிந்து வாழ்கிறாள். மருதியின் மகள் வெள்ளச்சியின் வாழ்க்கை வரை நீள்கிறது கதை. கொடுமைக்கார கங்காணிகள், சீரழிக்கும் மேலாளர்கள், சர்வ வல்லமை வாய்ந்த ஆங்கிலேய துரைமார்கள், இவற்றுள் உழன்று அழியும் கூலிப் பெண்கள் என இன்று வரை எழுதப்படும் தோட்டப்புற கதைகளின் பெரும்பாலான இயல்புகள் புதுமைப் பித்தனின் கதையிலேயே துலங்கி வருகிறது. ம. நவீன் தொகுத்த ‘மீண்டு நிலைத்த நிழல்கள்’ ஒரு முக்கியமான நேர்காணல் தொகுப்பு. சிங்கை- மலேசிய இலக்கிய/ சமூக ஆளுமைகளை நேர்காணல் செய்து தொகுத்திருக்கிறார். அதில் இடம்பெற்றுள்ள மா. ஜானகிராமனின் நேர்காணலில் வரும் ஒரு வரி என்னை வெகுவாக அலைகழித்தது- “ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்குச் செல்வது சாவதற்காக அல்ல. இந்த நாட்டுக்கு வந்து மக்கள் இறந்திருக்கிறார்கள். ஒரு நாட்டை உருவாக்க வந்து உயிர்ப்பலி கொடுத்திருக்கிறார்கள்.” விண்ணை முட்டும் கட்டிடங்களின் அஸ்திவாரத்தில் உப்பாக தமிழர்கள் இருக்கிறார்கள்.

நாவல்களில் ப. சிங்காரம் இரண்டாம் உலகப் போர் பின்புலத்தில் எழுதிய ‘புயலிலே ஒரு தோணி’ ஒரு சாதனையாக தமிழ் வாசகர்களால் வாசிக்கப்படுகிறது. அதற்கு சற்று முந்தைய காலத்தில் வெளிவந்த எம்.எஸ்.கல்யாணசுந்தரத்தின் ‘இருபது வருடங்கள்’ சிங்காரத்தின் நாவல் அளவிற்கே முக்கியத்துவம் வாய்ந்தது. இரண்டாம் உலகப்போர், பிரித்தானிய வீரராக ஜப்பானின் போர் கைதியாக சிலகாலம் தென்கிழக்கு ஆசிய தீவுகளில் கதை நாயகர் சிலகாலம் வாழ்கிறார்.

si-muthu.jpg

புலம் பெயர் இலக்கியத்தின் படிநிலைகள் யாவை?

பெரும் கனவுகளுடன் பொருளீட்டி தன் நிலத்திற்கு திரும்பிவிட முடியும் எனும் நம்பிக்கையிலேயே கப்பல் ஏறினார்கள். ஆனால் ஒருபோதும் அது நிகழப் போவதில்லை என்பதை உணர்ந்ததும் தன் நிலம் மற்றும் மனிதர்களைப் பற்றிய நினைவேக்கமே படைப்பின் முதல் உந்து விசையாக இருக்கிறது. கண்காணா தொலைவில் இருக்கும் தன் நிலத்தின் நினைவுகளை கவிதைகளாகவும் கதைகளாகவும் ஆக்கினார்கள். லதா சிங்கப்பூரில் பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே குஜிலி பாடல்களாக ஊர் நினைவுகள் புழங்கியதை அடையாளம் காட்டுகிறார். சிங்கை- மலேசிய – மலையக இலக்கியத்தின் ஆரம்ப கதைகள் பெரும்பாலும் இத்தகையத் தன்மை உடையவையே.

தற்கால கதைகள் அவர்கள் வளர்ந்த ரப்பர் தோட்டத்தின் நினைவுகளை சொல்பவையாக இருக்கின்றன. சிங்கப்பூர்-மலேசிய பயணத்தின் போது இன்றும் அங்கு மு.வ, நா. பார்த்தசாரதி மற்றும் அகிலனுக்கு இருக்கும் வாசிப்பு செல்வாக்கு அளப்பறியாதது என உணர முடிந்தது. தமிழ் நவீன இலக்கிய கர்த்தாக்களிடம் தங்கள் ஆதர்சம் யார் எனக் கேட்டால் பாரதி, புதுமைப்பித்தன் போன்றோரையே பெரும்பான்மையினர் அடையாளப்படுத்துவர். மு.வ., நா.பா., அகிலன் போன்றோரை தங்கள் ஆதர்சம் என நவீன எழுத்தாளர் கருதுவதில்லை. அரிதாக அப்படி எவரும் சொன்னாலும்கூட அவர்களின் இலக்கிய தகுதி குறித்து சில ஐயங்கள் எழுப்பப்படும். வெகு மக்கள் எழுத்தாளர்கள் என்றே அவர்கள் அடையாளப்படுத்தப்படுவார்கள். மலேசிய இலக்கியவாதிகள் தங்கள் ஆதர்சமாக மு.வ., நா.பா., அகிலனைச் சொல்கிறார்கள். அதிலிருந்து மேலெழும்பி, விலகி சிலருக்கு ஜெயகாந்தன் ஆதர்சமாகிறார். வேறு சிலர் வண்ணதாசனையும் வண்ணநிலவனையும் வந்தடைகிறார்கள். சிங்கப்பூரைச் சேர்ந்த பி. கிருஷ்ணன் மட்டுமே புதுமைப்பித்தனை தன் ஆதர்சமாக சொல்கிறார். ‘புதுமை தாசன்’ எனும் பெயரில் இயங்கினார்.

1950 களில் கோ. சாரங்கபாணியால் உருவான இலக்கிய அலை என்பது திராவிட கருத்தியல் அடிப்படையில் உருவானது. ஒருவேளை புதுமைப்பித்தன் இன்னும் பலருக்கு ஆதர்சமாக இருந்திருந்தால் நவீன சிங்கப்பூர் மலேசிய இலக்கியப் போக்கு வேறு திசையில் காத்திரமாக வளர்ந்திருக்குமோ எனும் எண்ணம் ஏற்பட்டது. தன் நிலத்திலிருந்து வேறொரு நிலத்தில் வேர் பிடித்து வாழ முனைந்து அன்றாடம் போராடிக் கொண்டிருக்கும் ஒரு தலைமுறைக்கு மு.வவும், நாபாவும், அகிலனும் ஆசுவாசம் அளித்திருக்கக்கூடும். புதுமைப்பித்தன் ஒருபோதும் அந்த ஆசுவாசத்தை அளித்திருக்க மாட்டார். அவரைப் பற்றிக்கொண்டு வாழ்வில் எதையும் கடந்துவிட முடியாது. நவீன இலக்கியம் கூரையற்ற வெட்டவெளியில் நிற்கும் மனிதனின் காலடி மண்ணையும் சரிப்பது. இந்த புரிதல்கள் லட்சியவாத எழுத்துக்களின் மீதான மதிப்பீடுகளை என்னளவில் மறுபரிசீலனை செய்யத் தூண்டின.  ஆனால் சிக்கலே வாழ்க்கை தோட்டங்களை விட்டு வெளி நகர்ந்த பின்னரும் கூட பழையவற்றையே இறுகப் பற்றிக்கொள்வதுதான்.

புலம் பெயர் எழுத்தின் அடுத்தக் கட்டம் தான் வாழுமிடத்தை தன் சொந்த ஊராக ஆக்கிக்கொள்ளும் முயற்சிகள் அதற்கு அவசியமானவை என்பதை உணரும் நிலையில் நிகழ்கிறது. சைனா டவுன் மாரியம்மனும், பத்துமலை முருகனும், அங்காளம்மனும், இசக்கியும், முனியாண்டிகளும் அப்படித்தான் வந்து சேர்கிறார்கள். அடையாளமிழப்பிற்கு அஞ்சி பண்பாட்டை இறுகப் பற்றுகிறார்கள். புலம் பெயர்ந்த பின்னும் சாதி அடையாளம் இறுக்கமாக பின் தொடர்கிறது. பின்னர் ஒரு நுனி தன் பண்பாட்டு தனி அடையாளத்தை துறந்து புதிய வசிப்பிடத்தின் அன்னிய பண்பாட்டில் தன்னை முற்றிலுமாக கரைத்துக்கொள்ள விழைகிறது. இந்த நிலையில்தான் பிற பண்பாடுகளை உற்று நோக்கத் துவங்குகிறார்கள். அதீத சுயமிழப்பிற்குப் பின் சுதாரித்துக்கொண்டு மீண்டும் பண்பாட்டு மீட்பை பேசுகிறார்கள்..

எனது வாசிப்பு எல்லைக்குட்பட்ட சிங்கப்பூர்-மலேசிய எழுத்துக்களில் அரிதாகவே பிற இனத்தைப் பற்றிய வலுவான சித்திரம் வருகிறது. அனோஜனின் ‘பச்சை நரம்பு’ தொகுதியை முன்வைத்து சிங்களர்கள் பற்றிய பதிவு குறித்தும் இதே பார்வையை முன்வைத்தேன். சீனர்கள், மலாய் காரர்கள், சிங்களவர்கள் என பிறரைப் பற்றிய நுண்மையான சித்திரம் மிகக் குறைவே. மீறி இருப்பவை பெரும்பாலும் அவர்களைப் பற்றிய வழமையான பொதுபுத்தி சித்திரங்களே. தமிழ் சமூகம் ஒரு மூடிய சமூகமா என்றொரு கேள்வி எழுகிறது. தன்னை மட்டுமே உற்று நோக்குவது தான் அதன் இயல்பா. யுவால் நோவா ஹராரி ஐரோப்பியர்களுக்கும் ஆசியர்களுக்கும் (குறிப்பாக இந்தியர்கள் சீனர்கள்) இடையிலான மத்திய காலகட்டத்து வேறுபாடை பற்றி சொல்லும்போது ஐரோப்பியர்கள் அடிப்படையிலேயே புதியவற்றை தேடித்தேடி செலபவ்ர்களாக அனுபவங்களுக்காக ஏங்குபவர்களாக இருந்தார்கள் என்கிறார். அவர்கள் உலகை வெல்ல காரணமும் கூட. இந்தியாவில் துறவு ஒரு உச்ச விழுமியமாக சமூகத்தால் போற்றப்படுவதையும் சேர்த்தே புரிந்து கொள்ள வேண்டியதாக இருக்கிறது. இன்றும் இந்திய வரலாற்றை அதன் பண்பாட்டி அறிய நாம் ஐரோப்பிய கண்களையே சார்ந்திருக்க வேண்டி இருக்கிறது. ஒப்பந்தக் கூலி வாழ்வை பற்றிய கதைகள் பொதுவாக ஒரேவிதமானவை. அந்நிய நிலத்தில் அழிந்து போகும் மக்கட் கூட்டத்தின் நினைவுகளை தக்க வைக்க வேண்டும் எனும் குறிக்கோளை முதன்மையாக கொண்டவை. துன்பங்களின் ஊடாக இருட்டுக்கோ அல்லது வெளிச்ச கீற்றுக்கோ படைப்பாளியின் அகச் சான்றைப் பொருத்து பயணிக்கக் கூடியவை. பெரும்பாலும் மானுடத்துவ இயல்பு கொண்ட கதைகள் என வரையறை செய்யலாம். தற்கால சிங்கப்பூர் மலேசிய கதைகள் மெதுவாக தோட்டங்களில் இருந்து மாறிவரும் வாழ்வு சூழலை இக்கட்டுக்களை சித்தரிக்கின்றன. நவீன் மலேசிய இலக்கியத்தில் அவ்வகையில் முக்கியமான ஆளுமை. பாலமுருகன், அ. பாண்டியன், யுவராஜன் என சி.முத்துசாமி- சை.பீர்மொஹமதுக்கு அடுத்த வரிசை ஒன்று உருவாகி வந்திருக்கிறது. வல்லினம் புதிய தலைமுறை எழுத்தாளர்களை உருவாக்க முனைந்து வருகிறது. சிங்கப்பூரிலும் லதா, சித்துராஜ் பொன்ராஜ், எம்.கே.குமார், அழகுநிலா போன்றோர் புதிய களங்களில் எழுதி வருகிறார்கள்.

இந்த அமர்விற்கு சீ. முத்துசாமி மற்றும் நவீனின் கதைகளை பரிசீலனைக்கு எடுக்கவில்லை. காரணம் அவர்கள் நமக்கு ஓரளவு பரிச்சயமானவர்கள். இந்தியாவிற்கு வெளியே வாழும் அத்தனை எழுத்தாளர்களின் கதைகளையும் வாசித்து எழுதப்படும் கட்டுரையும் அல்ல. ஒரு பறவை கோணத்தில் சில அவதானிப்புகளை வைப்பதே இக்கட்டுரையின் நோக்கம். நவீன் மலேசியாவின் சிறந்த பந்து கதைகள் என எனக்கு சிலவற்றை அனுப்பி இருந்தார். அவற்றில் மூன்று கதைகள் மட்டுமே தோட்டப் பின்புலம் இல்லாத கதைகள். நவீன், பாலமுருகன், மஹாத்மன் கதைகள் அவ்வகையில் முக்கியமானவை. பாலமுருகனின் பேபிக் குட்டி குழந்தையின் மரணமும் அதற்கு சாட்சியாக வாழும் சபிக்கப்பட்ட முதியோரின் கதையையும் இணையாகச் சொல்கிறது. அகத்தில் மெல்லிய பதட்டம் குடிகொள்கிறது. இந்த கதை எந்த பின்புலத்திலும் எழுதப்படலாம். புலம் பெயர் இலக்கியங்களில் நமக்கு இப்படியான ஒரு எதிர்பார்ப்பு உள்ளது. அது எந்த நிலத்தை பேசுகிறதோ அதன் பண்பாட்டுக் கூறுகளை கொண்டு வந்து சேர்த்தே ஆக வேண்டும். ஒருவகையில் பண்பாட்டை பண்டமாக காணும் ஒரு நிலை என எண்ணத் தோன்றுகிறது. ‘எல்லா கதைகளிலும் பண்பாட்டுக் கூறுகளை தேடுவதும், அக்கதைகளை மதிப்பிட அதை ஒரு காரணியாக பயன்படுத்துவதும் தேவையில்லை. மஹாத்மனின் சிறுகதைகள் பெரும்பாலும் அகத்தில் நிகழ்பவை. புற விவரணைகள் சொற்பம். நீண்ட தன்னுரையாடல் வகைக் கதைகளை தேர்ந்த மொழியில் எழுதுகிறார். அவருடைய ‘ஒ லாவே’ எந்த பண்பாட்டுப் பின்புலத்திலும் நல்ல கதையாகவே மதிப்பிடப்படும். மலேசிய வாழ் எழுத்தாளர்களின் கதைகள் மற்றும் மலேசிய கதைகளுக்கும் மெல்லிய இடைவெளி இருப்பதை உணர முடிகிறது.

விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட “சீனலட்சுமியின் வரிசை” ஒரு சிங்கப்பூர் கதை என சொல்லலாம். சிங்கப்பூரின் தனித்துவமான பண்பாட்டுக் கூறுகளை படைப்பூக்கத்துடன் கதையில் பயன்படுத்திக் கொள்கிறது. இரண்டாம் உலகப் போரின் ஜப்பான் ஆக்கிரமிப்பு காலத்தில் தனித்து சுற்றி அலையும் சீனக் குழந்தைகளை பல இந்தியர்கள் எடுத்து வளர்த்தார்கள் என்பது ஒரு கட்டுரைத் தகவலாக சொல்லப் பட்டிருக்கலாம். ஆனால் அப்படியில்லாமல் விரிவாக சீன லட்சுமியின் வழி அந்த பாத்திரத்தின் இயல்புகள் நிறுவப் படுகின்றன. சிங்கப்பூர்வாசிகளுக்கு தங்கள் கட்டுக்கோப்பின் மீதிருக்கும் பெருமிதம் அவர்களின் பண்பாட்டுக் கூறுகளில் ஒன்று. வரிசையை கடைப்பிடித்தல் என்பது கட்டுக்கோப்பை பறைசாற்றும் மிக முக்கியமான சடங்கு. சீனராக பிறந்து, தமிழர்களால் வளர்க்கப்பட்ட ஒருவர் தன்னை முழு சிங்கப்பூர்வாசியாக உணர்கிறார். ஒருவகையில் இந்த கட்டுகோப்பு, வரிசை என்பது கீழ்படிதலும் கூட. தேர்தலுக்கு வாக்களிக்க வரிசையில் நிற்பதும் அதில் எதிர்கட்சிக்கு வாக்கு அளிக்கும் சிலரும் இருக்கக்கூடும் என்பதை அவள் உணர்வதும் கதையின் போக்கில் சொல்லப்பட்டாலும் மிக முக்கியமான தகவல். அவள் மனம் அதை ஒரு மீறலாக, வரிசைக் குலைவாக காண்கிறது. தனக்கு பாதுகாப்பு தரும் மற்றொரு வரிசையில் தன்னை புதைத்துக் கொள்கிறாள். ஒரு பண்பாட்டு புலத்தை நுட்பமாக படைப்பூக்கத்துடன் எப்படி பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. லதாவின் மற்றொரு கதை ‘அலிசா’ சிங்கப்பூருக்கு அருகே இருக்கும் உபின் தீவை களமாகக் கொண்டது. சிங்கப்பூருடன் தொடர்பற்ற பண்பாட்டுப் பரப்பு. அங்கிருந்து கருங்கற்களை வெட்டி சிங்கப்பூருக்கு எடுத்துச் செல்கிறார்கள். நகர் மயமான ஒழுங்கு நிறைந்த சிங்கப்பூரும் உபின் தீவும் இணையாக சித்தரிக்கப் படுகிறது. அதன் வழியாக அந்த தீவே ஒரு பாத்திரமாக கதையை வடிவமைக்கிறது. இங்கே மற்றொரு விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரு கதை அதன் ஆவணத் தன்மையால் முக்கியத்துவம் அடையாது. அது ஒரு கூடுதல் தளம் மட்டுமே. ஒரு நிகழ்வையோ, சடங்கையோ வேறு எவரும் ஆவணப்படுத்தாதல் கதையில் விரிவாக ஆவணப்படுத்தினால் அது நல்ல கதை என்றொரு எண்ணம் நமக்கு உண்டு. வேறு எவரும் சொல்லாத நிகழ்வைக் கொண்டு எழுத்தாளர் என்ன சொல்ல வருகிறார் என்பதே கதைக்கான இடத்தை அளிக்கிறது. ‘லங்கா தகனம்’  நடன அடவுகளின் துல்லிய ஆவணத் தன்மையால் முக்கியத்துவம் பெறவில்லை. ஒரு கலைஞனின் எழுச்சியை சொல்வதாலேயே முக்கியமானதாக கருதப்படுகிறது.

A_Muttulingam_Amuttu_Muthulingam_DSC_029

ஈழ இலக்கியம் தனக்கென தனித்த வரலாறும் பண்பாடும் கொண்டது. மொத்த ஈழ இலக்கியத்தையும் தமிழகத்திற்கு வெளியே இருக்கிறது என்பதானாலேயே புலம் பெயர் இலக்கியம் என வரையறை செய்யக் கூடாது. மலையகத் தமிழ் இலக்கியத்தை மட்டுமே புலம் பெயர் இலக்கியம் என அடையாளப்படுத்த இயலும்.  இன்றைய ஈழ இலக்கியம் என்பது அ.முத்துலிங்கம், ஷோபா சக்தி, கவிஞர் சேரன், தேவகாந்தன், கலாமோகன், நோயல் நடேசன், பொ. கருணாகரமூர்த்தி துவங்கி தற்போது எழுதிக் கொண்டிருக்கும் குணா கவியழகன், சயந்தன், அனோஜன் வரை நீளும் ஈழ இலக்கியத்தின் முக்கிய ஆளுமைகள் பலரும் ஈழத்திற்கு வெளியே வாழ்கிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஈழம் தமிழக நில வரம்பிற்குள் இல்லை என்றாலும் தமிழ் இலக்கியத்தின் உயிர்ப்பான நீட்சியே. ஆனாலும் தமிழக இலக்கிய பரப்பில் வட்டார இலக்கியங்களுள் ஒன்றாக ஈழ இலக்கியம் எக்காலத்திலும் கருதப்பட்டது இல்லை. குணா கவியழகன் போர் என்பது ஒரு புதிய திணை என முன்வைக்கிறார். ஒரு நிலத்தில் போர் நிகழும்போது, அதுவும் நெடுங்கால போர் நிகழும்போது அதன் இயல்புகள் திரிந்து புதிய வடிவத்தை அடைகின்றன உலகெங்கிலும் போர் திணையில் சில பொதுத்தன்மைகளை உள்ளூர் பண்பாட்டிற்கு அப்பால் காணமுடியும் என்பது ஒரு சுவாரசியமான பார்வை. அனோஜனின் மன நிழல், நானூறு ரியால் போன்ற கதைகளை போர் திணை எனும் பின்புலத்தில் வாசிக்கும்போதே அதன் முக்கியத்துவம் புரிகிறது. ஈழத்தில் இருந்து எழுதும் கதைகளுக்கும் (அதாவது ஈழத் தமிழில் கதை சொல்வதற்கும்) ஈழக் கதைக்கும் வேறுபாடுண்டு. ஈழக் கதையில் போர் இன்றியமையாத பாத்திரம், ஏதோ ஒரு புள்ளியில் இழப்பின் வலியை அதன் நினைவை மீட்டும். இவ்விரண்டை செய்வதாலேயே அது நல்ல கதையாக ஆகிவிட முடியாது. பண்பாடு பண்டமாக்கப்படுவது போலவே மெல்லுணர்வும் பண்டமாக்கப்படுகிறது. அனோஜன் தன் நேர்காணலில் இப்படிச் சொல்கிறார் “கழிவிரக்கத்தை உண்டு செய்யும் ஆக்கங்கள் ஒரு பக்கம் அதிகம் வருகின்றன. தமிழ்நாட்டில் அவை ஒருவகை பண்டப் பொருட்களாக காட்சிப்படுத்தப்படுவதும் சில இடங்களில் நடந்தேறுகின்றது.” அரங்கிற்கு எடுத்துக்கொண்டிருக்கப்படும் ஈழ எழுத்தாளர் யதார்த்தனின் கதை “வொண்டர் கோன்” போருக்கு பின்பான காலகட்டத்தை சித்தரிக்கிறது. யதார்த்தன் தொன்னூறுகளில் பிறந்தவர். போரின் இறுதி பகுதியும் பால்யத்தின் இறுதி பகுதியும் ஏறத்தாழ ஒரே சமயத்தில் நிகழ்ந்திருக்கும். தற்போது ஜாப்னாவில் வசிக்ககிறார். முகாம்களில் ‘சதோசோ’ (sodexo) பூட் சிட்டி(food city) இருந்ததும் அங்கு வகை வகையாக மக்கள் வாங்கி உண்டார்கள் என்பதும் நாம் ஈழம் குறித்து கொண்டுள்ள பொதுச் சித்திரத்தை குலைப்பவை. சோவியத்தின் உடைவுக்குப் பிறகு தேவாலயங்களில் பயங்கர கூட்டம் கூடியது என ஸ்வெட்லான அலேக்சிவிச் எழுதியது நினைவுக்கு வந்தது. ஷோபா முதல் அனோஜன் வரை பலரும் லட்சியவாதத்தின் மீதான அயர்ச்சியை எழுதியுள்ளார்கள். நிம்மதியான வாழ்விற்கும் விடுதலைக்கும் இடையே ஒன்றை தேர்வு செய்ய வேண்டும் என்றால் மனிதர்கள் நிம்மதியான வாழ்வையே தேர்வார்கள். வாழ்வின் இனிமை அனோஜனின் கதையில் பேரீச்சை என்றால் யதார்த்தன் அதே இனிமையை வொண்டர் கோன் எனும் ஐஸ் கிரிமீல் காண்கிறார். கதை நாயகன் பதினேழு வயது ஜீவநேசன் (அதாவது உயிர்களை நேசிப்பவன்). ஜீவநேசன் வொண்டர் கோன் ஐஸ்க்ரீம்களை திருடியதற்காக பிடிபடுகிறான். அவனை புவனாவும் அவருடைய மகள் மயூரதியும் மீட்கிறார்கள். கதை இறுதியில் புவனாவின் வளத்திற்கான காரணம் சொல்லப்படுகிறது. ஜீவநேசனின் வொண்டர் கோன் திருட்டு அவர்களுக்கு முன் சிறுத்து ஒன்றுமில்லாமல் ஆகிறது. உருகி வழியும் வொண்டர் கோனை மூவரும் உண்டுக் கொண்டிருப்பதோடு கதை முடிகிறது. உணர்வு சுரண்டல் ஏதுமின்றி வாழ்விச்சையின் இயல்புகளை யதார்த்தன் இக்கதையில் கையாண்டுள்ளார். புவனாவிற்கு கணவர் சார்ந்த தோற்ற மயக்கம் ஆகட்டும், அல்லது அவர்கள் இறந்தவர்களின் மீதிருந்து எடுத்த தாலிக்கொடிகள் ஆகட்டும் வாழ்விச்சையின் வெளிப்பாடே. ஒருவகையில் ஜீவநேசனின் வொண்டர் கோனும் அதுவே.

உலகளாவிய கதைகள் என்பது அமெரிக்காவில் நிகழும் குடும்பச் சண்டை என்பதல்ல. அந்த கதை அமெரிக்காவில் ஏன் நிகழ வேண்டும்? அந்த களம் மேலதிகமாக என்னவிதமான பண்பாட்டு துலக்கத்தை அளிக்கிறது? பண்பாட்டு அழுத்தம், பண்பாட்டு கலப்பு, பண்பாட்டு ஏற்பு ஆகிய நிலைகளை கடந்து ஒருவகையில் கரம் விரித்து உலகை தழுவும் உள்ளார்ந்த பண்பாட்டு மதிப்பினால் எழுவது இவ்வகைக் கதைகள் என சொல்லலாம். தமிழில் நாஞ்சில் நாடனையும் அ.முத்துலிங்கத்தையும் உலகப் பார்வை கொண்ட எழுத்தாளர்கள் என சொல்லலாம். இந்தியா முழுக்க அலைந்து திரிந்த அனுபவம் நாஞ்சிலுக்கு உண்டு. கான் சாகிப், தன்ராம் சிங் போன்ற அவருடைய பாத்திரங்களை மறக்க முடியாது. முத்துலிங்கம் ஐ.நா பதவியில் உலகம் முழுக்க வசிக்கும் பேறுபெற்றவர். அந்த அனுபவங்கள் படைப்புலகில் வெளிப்பட்டு மிளிர்கிறது. சில கதைகளில் அவை சுவாரசியமான தகவல் என்ற அளவில் நின்றுவிடுவதும் உண்டு. முத்துலிங்கத்தின் ‘அமெரிக்ககாரி’ தமிழின் மிகச்சிறந்த கதைகளில் ஒன்று என சொல்வேன். கதை இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு படிக்க சென்றவளின் பண்பாட்டு சிக்கல்களை பேச துவங்குகிறது. உச்சரிப்பு, மொழி பயன்பாட்டில் உள்ள வேறுபாடுகள் அவளை தனித்து காட்டினாலும் நுட்பமான அறிவால் அதை புரிந்துகொண்டு பழகி கொள்கிறாள். பலரும் அவளை நெருங்க முயன்று விலகுகிறார்கள். முதலாமவன் ;மூன்றாம் நாள் அவளிடம் அறையில் தங்க முடியுமா என கேட்கிறான், இரண்டாமவன் அன்றே கேட்கிறான். மூன்றாமவன் வாயில் முத்தம் கொடுக்கிறான், நன்றி கூறல் விழாவிற்கு இல்லத்திற்கு அழைத்து சென்று வீட்டினரை அறிமுகம் செய்கிறான். விருந்துண்டு உறங்கி கொண்டிருக்கும்போது நடுசாமத்தில் அவன் வந்து நிற்கிறான். துரத்தி விடுகிறாள். அவர்கள் தேடும் ஏதோ ஒன்று அவளிடம் இல்லை. இலங்கையில் அவளுடைய சூட்டிகையிம் காரணமாக ‘அமெரிக்ககாரி’ என அழைக்கப்பட்டவள். அவளும் அப்படித்தான் எண்ணினாள், கனவு கண்டாள். ஆனால் அவள் அமெரிக்காவிலும் ‘இலங்கைக்காரியாகவே’ இருந்தாள்.

QrIndfo0z8XybVZRWlbeA_pdbfjyl4pyRKSQoKzNWWINweUgqlVGU_UpGUBZRmxnpjtlTH98my2ALby85jP5mpcFh3UDOjS4cXctlK4dsI8jsHndyoJV7NjkoyR5ujDJqGlEnXi8O5aUJ5yrNud2MoBfofaIh6yIlt96T0ZlDrakwhNAGbrHDFdCi9bD_oYA29CKfbsUNGzkxtz_fWR5HeipZOpdNv_jonfCeQ_uJ8vaRyRBeBektU3D7I8tDhdBBV-1YvQBmuvmfWVe0M1yr-N5_Avv1mTyTIfXOZSmHHf-ji5D_88lEZmz9nJhPt-7Nfu5HlqmR-03IAsnFWt8OFNUqsS_fS4pid-UnS8vn962wDkeWYMi4YugqxLJw0qZz3wmImlP37lV1FsNVltYfMIFBtNReuG5U83-nmeT82SoSGM7SHTgs_9pV2RRse2H1yDrKqkX7S9E6xhcp6QNzyiKhxOTc36_pV-nbVgu6q4GbvWP_1tFw441n27UMf45K08VA0C0tliunqiL9Y9g_vPllq3XBqY3RMQ_htwRx756Z4yGh9cYzeNHBg_CwsriBt7aSQOhKrI3M7Q4Ggh_9LSlvLj3fY21BichfMlm-ZRHGV1q=w995-h659-no

கனகலதா

கலாச்சார விழாவில் அவள் பாடி அபிநயம் பிடித்த  ‘என்ன தவம் செய்தனை’ பாடலை வெகுவாக ரசித்த வியட்நாமியகாரன் அவளை நெருங்குகிறான். பலசந்திப்புகளுக்கு பின்னரும் அவன் அவளை அறைக்கு அழைக்கவில்லை. அவனோடு இயல்பாக இருக்க அவளால் முடிந்தது. மெல்ல உறவு வளர்ந்து உறுதியாகி மணமுடித்து கொள்கிறார்கள். நான்கு ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை என்பதால் மருத்துவரை சந்திக்கிறார்கள். அவனுக்கு விந்தணு எண்ணிக்கை குறைபாடு இருக்கிறது. வீடு வாங்க சேர்த்த பணத்தை கொண்டு அவனுடைய ஆப்ரிக்க ஆசிரியரின் விந்தணுவை தானமாக பெற்று ஐ.வி.எப் முறையில் கருதரித்து பெண் குழந்தையை பெற்றெடுக்கிறாள். // ‘அம்மா, அவள் முழுக்க முழுக்க அமெரிக்கக்காரி. நீ அவளை பார்க்கவேணும். அதற்கிடையில் செத்துப்போகாதே.இருவரும் ஒரே சமயத்தில் பேசினார்கள். அவர்கள் குரல்கள் அட்லாண்டிக் சமுத்திரத்தின் மேல் முட்டி மோதிக்கொண்டன. அவள் மடியிலே கிடந்த குழந்தையின் முகம் அவள் அம்மாவுடையதைப் போலவே இருந்தது. சின்னத் தலையில் முடி சுருண்டு சுருண்டு கிடந்தது. பெரிதாக வளர்ந்ததும் அவள் அம்மாவைப்போல கொண்டையை சுருட்டி வலைபோட்டு மூடுவாள். தன் நண்பிகளுடன் கட்டை பாவாடை அணிந்து கூடைப்பந்து விளையாட்டு பார்க்கப் போவாள். சரியான தருணத்தில் எழுந்து நின்று கைதட்டி ஆரவாரிப்பாள். ‘என் அறையில் வந்து தூங்கு’ என்று ஆண் நண்பர்கள் யாராவது அழைத்தால் ஏதாவது சாட்டுச் சொல்லி தப்பியோட முயலமாட்டாள். பல்கலைக்கழக கலாச்சார ஒன்று கூடலில் ‘என்ன தவம் செய்தனை’ பாடலுக்கு அபிநயம் பிடிப்பாள் அல்லது பதினாறு கம்பி இசைவாத்தியத்தை மீட்டுவாள். ஒவ்வொரு நன்றிகூறல் நாளிலும் புதுப்புது ஆண் நண்பர்களைக் கூட்டி வந்து பெற்றோருக்கு அறிமுகம் செய்துவைப்பாள். அவர்களின் உயிரணு எண்ணிக்கை மில்லி லிட்டருக்கு இரண்டு கோடி குறையாமல்  இருக்கவேண்டுமென்பதை முன்கூட்டியே பார்த்துக்கொள்வாள்.// என்று இக்கதை முடிகிறது.

yatha.jpg

[யதார்த்தன்]

அவன் அவளிடம்  அவசியமென்றால் என்னைவிட்டுவிட்டு வேறொருவரை திருமணம் செய்துகொண்டு குழந்தை பெற்றுகொள் என்கிறான். அவள் மறுக்கிறாள். அப்போது கிளிண்டன் – மோனிகா உறவு அமெரிக்காவில் செய்தியானதை பற்றிய ஒரு வரி வருகிறது. அவன் அவளிடம். ‘ஏ, இலங்கைக்காரி, நீ ஏன் என்னை மணமுடித்தாய்?’ என்றான். ‘பணக்காரி, பணக்காரனை முடிப்பாள். ஏழை ஏழையை முடிப்பாள். படித்தவள் படித்தவனை முடிப்பாள். ஒன்றுமில்லாதவள் ஒன்றுமில்லாதவனை முடிப்பாள்.’ அவள் சொல்லாமல் விட்டபதில் ‘ஆசியன் ஆசியனை மணப்பாள்’ என்பதே. விளையாட்டாக சொல்லப்படும் ஒரு வரியாக இக்கதைக்குள் இது வருகிறது “அவளுடைய கட்டிலை அவனுடைய கட்டிலுக்கு பக்கத்தில் போட்டபோது அது உயரம் குறைவாக இருந்தது.  ‘ஆணின் இடம் எப்பவும் உயர்ந்தது என்பதை நினைவில் வைத்துக்கொள்’ என்றான் அவன். “ ஏனோ அவனை மணக்க அவளுக்கு இது தான் காரணம் என தோன்றியது.

நவயுகத்தின் அடையாள சிக்கல்களின் மிக முக்கியமான இழைகளை தொட்டு செல்கிறது. அமெரிக்காவின் வசதிகளை அனுபவித்து கொண்டிருக்கும் ஒவ்வொரு நொடியும் இலங்கையில் துயரப்படும் தன் அன்னையை பற்றி எண்ணுகிறாள். நாற்பது டாலர் சப்பாத்து வாங்கியதை எண்ணி அவளுக்கு வெட்கமாக இருக்கிறது. ஒருவகையில் அப்படி அந்த பணம் செலவானதை எண்ணி வருந்தும் வரை அவள் இலங்கைக்காரி தான். நவீன காலகட்டத்தின் மிக முக்கியமான சிக்கல்களில் ஒன்று பண்பாட்டு உராய்வினால் நேரும் ‘அடையாள சிக்கல்’. தேச பண்பாடுகள் அளவுக்கு எல்லாம் செல்ல வேண்டாம், கவிதையை பற்றி பேசிகொண்டிருக்கையில் நாஞ்சில் ஒருமுறை “இந்த கோயில்பட்டி எழுத்தாளர்களே இப்படித்தான்..விசும்பு, மௌனம்னு” என்றார். இந்திய இலக்கியத்தில் தமிழ் இலக்கியத்திற்கு ஒரு முகம் இருக்கும், நூறு மைல் கூட தொலைவில்லாத நாஞ்சில் நிலத்துக்கும் கரிசல் மண்ணுக்குமே பண்பாட்டு உராய்வு இருக்கிறது. பதினான்கு கிலோமீட்டர் அப்பால் உள்ள தேவகோட்டை நகரத்தார்களுடன் காரைக்குடி நகரத்தார்கள் மண உறவு கொள்ள யோசிப்பார்கள். நவீன மனிதனின் பொருளியல் சுதந்திரமும் தொழில்நுட்பமும் கல்வியும் அவனுக்கு வாய்ப்புக்களை அளிக்கின்றன. நவீன மனிதனின் முன் இருக்கும் மிகப்பெரிய கேள்வி என்பது எவ்விதம் தன் அடையாளத்தை தாண்டி செல்வது? எப்படி வேறோர் அடையாளத்தில் தன்னை புகுத்தி கொள்வது?  ‘அமெரிக்ககாரி’ என இலங்கையில் சொல்லி சொல்லி வளர்க்கப்பட்டவள் அமெரிக்காவில் ‘இலங்கைகாரியாகவே’ இருக்கிறாள். அமெரிக்ககாரி கதையில் வரும் இவ்வரி தான் இக்கதையின் மையம் என எண்ணுகிறேன். //ஒருநாள் கேட்டாள், ‘ஓர் இலங்கைப் பெண்ணுக்கும், வியட்நாமிய ஆணுக்குமிடையில்  ஆப்பிரிக்க கொடையில் கிடைத்த உயிரணுக்களால் உண்டாகிய சிசு என்னவாக பிறக்கும்?’ அதற்கு அந்தப் பெண் ஒரு வினாடிகூட தாமதிக்காமல் ‘அமெரிக்கனாக இருக்கும்’ என்றாள். //

முந்தைய ரெய்த் உரை ஒன்றில் க்வாமி அந்தோணி அப்பையா ‘பிழையான அடையாளங்கள்’ எனும் தலைப்பில் விரிவாக உரையாற்றினார். அப்பையா ஆப்ரிக்க தந்தைக்கும் ஆங்கிலேயே அன்னைக்கும் பிறந்த அமெரிக்ககாரர். ‘அடையாள சிக்கல்கள்’ ‘பண்பாட்டு உராய்வுகள்’ ஆகியவைகளை திறந்த மனதோடு அணுக முடியும் என்பதே அவருடைய வாதம். ஒற்றை இறுதியான அடையாளம் என்பதில் அவருக்கு நம்பிக்கை இல்லை. ஒரே நேரத்தில் தான் ஒரு கானாக்காரன்னாகவும், ஆங்கிலேயனாகவும், அமெரிக்கனாகவும் இருக்க எந்த தடையும் இல்லை என்கிறார். அடையாள சிக்கல்களுக்கு தீர்வாக உலகம் தழுவிய மானுடத்தை முன்வைக்கும்  ‘காஸ்மோபோலிடனிசத்தை’ முன்வைக்கிறார். ‘அமேரிக்கா’ காஸ்மோபோலிடன்களின் கனவு என கூறலாம். (எனினும் இன்றைய அமெரிக்காவை அப்படிச் சொல்ல முடியாது. வேண்டுமானால் கானடாவை சொல்லலாம்) முத்துலிங்கத்தின் இலங்கைகாரி காணும் ‘அமெரிக்க’ கனவும் இது தான். அவள் புக முடியாத அடையாளத்துக்குள் இயல்பாக வந்தமர்கிறாள் அவளுடைய மகள் ‘அமெரிக்ககாரியாக’. இப்போது யோசிக்கையில் இந்த கதை என்றல்ல, முத்துலிங்கத்தின் மொத்த படைப்புலகை தொகுத்து காணும் போது, தமிழின் முதல் (இப்பொழுதைக்கு ஒரே) காஸ்மோபோலிடன் எழுத்தாளர் என இவரையே கூற முடியும் என தோன்றுகிறது.

இந்த வரிசைய்ல் வைக்கத்தக்க மற்றுமொரு முக்கியமான கதை ஜெயமோகனின் ‘பெரியம்மாவின் சொற்கள்’. பண்பாடு என்பது மொழியில் வெளிப்படுவது. இரு மொழிகளுக்கும் இடையிலான ஊடாட்டம் பண்பாடுகளின் ஊடுபாவும் கூட. அருள், கருணை, கற்பு, நன்றி போன்றவற்றை ஆங்கிலத்தில் கொண்டு சேர்ப்பதில் உள்ள சிக்கல்கள் வழியாக இந்த பண்பாட்டு உராய்வுகளை, விழுமிய உராய்வுகளை கதை தொட்டுக் காட்டுகிறது. தற்காலத்தில் அருண் நரசிம்மன் ‘அமெரிக்க தேசி’ எனும் நாவல் இந்த களத்தில் வெளிவந்துள்ள படைப்பு. ஜப்பானிய ஆண்களுக்கு இருக்கும் திருமணச் சிக்கல் குறித்து தமிழில் சித்துராஜ் பொன்ராஜின் ‘கடல்’ பேசுகிறது. சிவா கிருஷ்ணமூர்த்தி இங்கிலாந்தில் வசிக்கிறார். அவருடைய ‘வெளிச்சமும் வெயிலும்’ தொகுப்பு முழுவதுமே இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய வாழ்வை அடிப்படையாக கொண்டவை. ‘மறவோம்’ எனும் அவருடைய கதை இரண்டாம் உலகப்போரில் இறந்து போன வீரர்களை நினைவுகூரும் கதை. நமக்கு எல்லோரும் வெள்ளையர்கள். ஆனால் அவர்களுக்குள் நிலவும் இன பாகுபாட்டை, மேட்டிமையை நாம் அறிவதில்லை. ‘வெளிச்சமும் வெயிலும்’ ஸ்கண்டிநேவியர்கள் ஆஸ்திரேலியர்கள் மீது காட்டும் இன முன்முடிவை கோடிட்டுக் காட்டுகிறது.  கார்த்திக் பாலசுப்பிரமணியனினின் ‘இரு கோப்பைகள்’ ஆஸ்திரேலியாவில் நிகழ்கிறது. தமிழக சிறுநகர பின்புலம் கொண்டவன் பார்வையில் மேற்கத்திய சமூகத்தின் குடும்பம் மற்றும் தனிமை போன்றவை பரீசிலிக்கப் படுகிறது. அவருடைய மற்றொரு கதையான ‘லிண்டா தாமஸ்’ ஒரு அமெரிக்க ஐடி நிறுவன ஊழியரைப் பற்றிய கதை. இங்கும் நன்றி விசுவாசம் போன்ற இந்திய மதிப்பீடுகள் மேற்கத்திய தொழில் நேர்த்தியுடன் உராய்கிறது. எஸ். சுரேஷின் கதைகள் அதிகமும் செகந்திராபாத்தில் நிகழ்பவை. அவருடைய ‘கூபோ’ ஜப்பானில் நிகழ்வது. ஆனால் அத்தகைய ஒரு காதல் கதை ஜப்பானில் ஏன் நிகழ வேண்டும்? அது எங்கு வேண்டுமானாலும் நிகழலாம். ராம் செந்திலின் ‘தானிவாத்தாரி’ ஜப்பானிய பின்புலத்தில் நிகழும் காதல் கதை தான். ஆனால் அங்கே கதைக்களம் நியாயம் செய்யப்படுகிறது.

தமிழகத்திற்கு வெளியே வளமான புனைவாக்கம் நிகழ்ந்து வருகிறது. புதிய பண்பாடுகளுடனான் அறிமுகம் வழியாகவே தமிழகத்தின் படைப்புலகம் தம் எல்லைகளை மீற முடியும் எனும் வலுவான நம்பிக்கை எனக்கு உள்ளது. இறுதியாக, ஆசிஷ் நந்தி ஓர் உரையாடலில் தேர்ந்த படைப்பாளியின் மிக முக்கியமான கூரு எதுவென தான் ஆராய்ந்து அறிந்து கொண்டதை சொல்கிறார். “the capacity to host and celebrate the ‘otherness’ of other” என்கிறார். “பிறராதல்’ என இதை கூறலாம். படைப்பாளி ‘பிறராகி’ அவனுடையவற்றை தமதாக்கிக் கொள்கிறான். இருமை அழிந்து புதிய களங்களில் தமிழ் புனைவுலகு விரியும்.

நன்றி

தரவுகள்

எல்லைகள் கடந்த எழுத்து – அ.முத்துலிங்கத்தின் படைப்புலகம்- சொல்வனம்- நரோபா

மீண்டு நிலைத்தவை- சுனில் கிருஷ்ணன் – 21.10.18 ஆற்றிய உரை

திணையற்ற தமிழரின் முதல் குரல் – கனகலதா

யதார்த்தன் – ‘வொண்டர் கோன்’ மெடுசாவின் கண்களின் முன் நிறுத்தப்பட்ட காலம்

கனக லதா- சீனலட்சுமியின் வரிசை, நகர் மனம் தொகுப்பு

 

 

https://www.jeyamohan.in/125066#.XVelKC3TVR4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.