Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்நாட்டில் ஈழத் தமிழர் ஆதரவைக் குலைத்திடும் சதிப் பின்னணியில் நிற்கும் மர்ம மனிதர் எம்.கே.நாராயணன் - 2

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டில் ஈழத் தமிழர் ஆதரவைக் குலைத்திடும் சதிப் பின்னணியில் நிற்கும் மர்ம மனிதர் எம்.கே.நாராயணன் - 2

-~விடுதலை| க.இராசேந்திரன்-

தமிழ்நாட்டில் நடந்த தி.மு.க. ஆட்சியில் உள்ள சில முக்கிய தலைவர்கள் விடுதலைப் புலிகளுடன் தொடர்பு கொண்டு பேசி வருவதே தேச விரோதமாக - நாட்டுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடியதாக உளவுத்துறை மூலம் அறிக்கை தயாரித்தவர் எம்.கே. நாராயணன்.

உளவுத்தறையின் தலைவர் என்ற முறையில், அன்றைய பிரதமர் வி.பி. சிங் பார்வைக்கு இதைக் கொண்டு போயிருக்க வேண்டிய கடமை எம்.கே.நாராயணனுக்கு உண்டு. ஆனால், அதிகார மட்டத்தில் கமுக்கமாக வைக்கப்பட்டது அந்த அறிக்கை. மண்டல் குழு பரிந்துரை, ஈழத் தமிழர் பிரச்சினைகளில் - பார்ப்பன அதிகார வர்க்கத்தின் உணர்வுகளுக்கு எதிராக உறுதியோடு நின்றார் வி.பி.சிங் என்பதால் அவரது ஆட்சியை பார்ப்பன சக்திகள் திட்டமிட்டு கவிழ்த்தன.

சந்திரசேகர் தலைமையில் பொம்மை ஆட்சி ஒன்றை உருவாக்கியவுடன், உளவுத்துறை தயாரித்து வி.பி.சிங்கிடம் மறைக்கப்பட்ட அறிக்கையை வைத்து, அதையே காரணமாக்கி, அன்று தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது. அன்றைய கால கட்டத்தில், விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்படவில்லை என்பதை சுட்டிக்காட்ட வேண்டும். ராஜீவ் கொலைச் சம்பவம் நடந்தது, அதற்குப் பிறகுதான். விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்படாத காலத்திலேயே - அந்த இயக்கத்தினரோடு பேசுவதே ~தேச விரோதம்| என்ற கருத்தை உருவாக்கி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியைக் கவிழ்க்கும் அதிகாரம் கொண்டவைகளாக உளவு நிறுவனங்கள் செயல்பட்டன என்பது சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகும்.

வெளியுறவுத் துறையின் கொள்கைகளை நிர்ணயிப் பதில் வெளிநாட்டுத்துறை அமைச்சக அதிகார வர்க்கமும், உளவு நிறுவனங்களுமே, தீர்மானகரமான சக்திகளாக மாறி நிற்கின்றன. இந்திரா பிரதமராக இருந்த போது, அவர் பல்வேறு பிரச்சினைகளில் தன்னிச்சையான முடிவுகளை எடுக்கும் பிரதமராக செயல்பட்டிருக்கிறார் என்பதற்கான சான்றுகள் உண்டு.

பார்ப்பன அதிகார வர்க்கத்தின் ஆலோசனைகளை அவ்வப்போது ஏற்பவராக இருந்தாலும், முழுமையான கைப்பாவையாக அவர் மாறிடவில்லை என்ற முடிவுக்கே வர நேரிடுகிறது. பாகிஸ்தான் இந்தியாவுக்கு எப்போதும் அச்சுறுத்தலாக இருக்கும் என்று கருதிய இந்திரா, அந்நாட்டை கூறு போட்டு, பங்களாதேஷ் நாட்டை உருவாக்கிட முடிவெடுத்து, அதற்கு இந்தியாவின் ராணுவ உதவியையும் வழங்கினார். அதுபோல இலங்கையையும், இந்திரா உடைத்து விடுவார் என்ற அச்சம் - அன்றைய அதிபர் ஜெயவர்த்தனாவுக்கு இருந்து வந்தது.

இலங்கைப் பிரச்சினையில் சிங்களத் தலைவர்களைப் பற்றிய சரியான பார்வை, இந்திராவுக்கு இருந்தது என்று மறைந்த அன்டன் பாலசிங்கம் தனது ~போரும் அமைதியும்| நூலில் குறிப்பிடுகிறார். 'இந்திரா தொடர்ந்து அதிகாரத்தில் இருந்தால், அவர் இலங்கையை இரண்டாகப் பிரித்து விடுவார் என்று ஜெயவர்த்தனா என்னிடம் பலமுறை கூறியதுண்டு" என்று, இந்திய வெளியுறவுத் துறையின் மூத்த அதிகாரி ஜெ.என்.தீட்சித் தனது �யுளளபைnஅநவெ ஊழடழஅடிழ� நூலில் குறிப்பிடுகிறார்.

இந்திராவின் மரணத்தைத் தொடர்ந்து, அரசியலின் ஆழம் புரியாத - ராஜீவ் காந்தி பிரதமராக வந்தார். பார்ப்பன அதிகார வட்டம் மகிழ்ச்சிக் கடலில் குதித்தது. ஆசியாவின் வலிமை மிக்க தலைவராக உயரவேண்டும் என்ற துடிப்பில் இருந்த ராஜீவுக்கு அதிகார வர்க்கம் தூபம் போட்டது.

கடந்த காலத்தில் இந்திராவின் ஆட்சியில் பின்பற்றப்பட்டு வந்த வெளியுறவுக் கொள்கைகளை மாற்றி அதிரடியான நடவடிக்கைகளில் இறங்கினால்தான் உடனடியான மாற்றங்களைக் கொண்டு வர முடியும் என்று ராஜீவ் காந்தியிடம் தெரிவிக்கப்பட்டன. அதற்கு ராஜீவ் காந்தியும் பச்சைக்கொடி காட்டினார். அதன் காரணமாக இலங்கைப் பிரச்சினையில் இந்திராவின் ஆலோசகர்களாக இருந்த அதிகாரிகள் ஓரம் கட்டப்பட்டனர். ஈழத் தமிழர் பிரச்னையில் ஓரளவு தமிழர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட பார்த்தசாரதியிடமிருந்து அந்தப் பொறுப்புகளைப் பறித்து ரமேஷ் பண்டாரி என்ற மற்றொரு பார்ப்பன அதிகாரியிடம் ராஜீவ் ஒப்படைத்தார்.

இலங்கை உட்பட - ஆசியாவில் - இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளைத் தீர்மானிக்கும் சக்திகளாக உளவுத்துறை, வெளியுறவுத் துறையின் பார்ப்பனிய அதிகார வர்க்கம் உருவெடுத்தது. ராஜீவ் ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த இந்த கொள்கை மாற்றங்களை விடுதலைப் புலிகளின் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் எழுதிய ~போரும் அமைதியும்| நூலில் பதிவு செய்துள்ளார். (அந்நூலின் 64, 65 ஆம் பக்கங்கள்) இந்திராவின் ஆலோசகராக செயல்பட்டு வந்த பார்த்தசாரதியை அன்டன் பாலசிங்கம் புதுடில்லியில், அந்த அதிகாரியின் இல்லத்தில், 1985 ஜனவரியில் சந்தித்துப் பேசினார்.

ராஜீவ் ஆட்சிக்கு வந்த பிறகு, வெளியுறவுக் கொள்கைகள் மாற்றப்பட்டு வருகின்றன என்று கூறிய பார்த்தசாரதி, இணக்கமான அணுகுமுறைகளை கைவிட்டு இனி கடுமையான போக்குகளைப் பின்பற்ற முடிவு செய்துவிட்டார்கள். ராஜீவ், ஜெயவர்த்தனாவை நம்பத் துவங்கிவிட்டார் என்றும், ஜெயவர்த்தனாவின் இரட்டை வேடம் - சூழ்ச்சிகளை, ராஜீவிடம் எடுத்துச் சொல்லி, அவரை ஏற்க வைக்கும் நிலையில் தான் இல்லை என்றும், பிரச்சினை தனது கையை விட்டுப் போய்விட்டது என்றும், பார்த்தசாரதி தம்மிடம் கூறியதாக, பாலசிங்கம் பதிவு செய்துள்ளார்.

'போராடும் அமைப்புகள் தங்களுக்குள் ஒருங்கிணைப்பை உருவாக்கிக் கொண்டு, பொதுவான கோரிக்கைகளை உருவாக்கி, பேச்சுவார்த்தையில், அழுத்தமாக வலியுறுத்துங்கள்" என்று ஆலோசனை கூறிய பார்த்தசாரதி, இனி உளவுத்துறைதான் இந்தப் பிரச்சினைகளை விவாதிக்கும் என்பதையும் சுட்டிக் காட்டினார். (Mr. Parthasarathy also told me that the Indian Intelligence agencies would soon brief us on the new policies and approaches of Rajiv's administration) ஆக, ராஜீவ் பிரதமராக வந்த பிறகு, வெளியுறவுக் கொள்கைகளை - குறிப்பாக ஈழப் பிரச்சினைக்கான கொள்கைகளையும் அணுகுமுறைகளையும் தீர்மானிக்கும் உரிமைகளை உளவுத்துறை பார்ப்பனிய அதிகார வர்க்கம் எடுத்துக் கொண்டு விட்டது என்பதை இது உறுதிப்படுத்துகிறது. ஒரு ஜனநாயக அமைப்பில் அரசியல் தலைவர்கள் - அமைச்சர்கள் தீர்மானிக்க வேண்டிய கொள்கைகளை அவர்களை எல்லாம் ஓரம் கட்டிவிட்டு, அதிகாரவர்க்கம், தன் கரங்களில் எடுத்துக்கொண்டது.

இந்த மாற்றங்கள் - வெளிப்படையாகவே தெரியத் தொடங்கின. ஒருபுறம் டெலோ அமைப்பும், மறுபுறம் விடுதலைப் புலிகள் அமைப்பும், இலங்கை ராணுவத்துக்கு எதிராகத் தீவிரமான தாக்குதல்களை நடத்தி வந்தன. யாழ்தேவி தொடர் வண்டியில் டெலோ நடத்திய தாக்குதலில் (1985 ஜன. 19-ல்) 22 ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். கொக்கிளாய் ராணுவ முகாம் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் (1985, பி.13) 106 சிங்கள ராணுவத்தினர் பலியானார்கள். அதிர்ந்து போனது இலங்கை ராணுவம். தாக்குதலை சமாளிக்க முடியாத நிலையில், முல்லைத்தீவில் தமிழர் அகதிகள் முகாமில் பதிலடித் தாக்குதலை நடத்தி 52 அப்பாவித் தமிழர்களைக் கொன்றது. இந்த ~இனப் படுகொலையைத் தடுக்க வேண்டும்| என்று தமிழ் ஈழ அரசியல் தலைவர்கள் இந்தியாவுக்கு வேண்டுகோள் விடுத்தும் - இந்தியா மவுனம் சாதித்தது.

கடந்த காலங்களில் இத்தகைய இனப்படுகொலைகளைக் கண்டித்து வந்த இந்தியா - அப்போது மவுனம் சாதித்தது, இந்தியாவின் அணுகுமுறையில் ஏற்பட்டிருந்த மாற்றத்தை அறிவிப்பதாகவே இருந்தது, என்கிறார் அன்டன் பாலசிங்கம்.

1985 ஆம் ஆண்டு மார்ச் மாதம் - ஈழப் போராளிக் குழுக்களின் தலைவர்களை, உளவு நிறுவனங்கள் அழைத்தன. அவர்களிடம், உளவு நிறுவன அதிகாரிகள், இந்தியாவின் புதிய கொள்கைகளை விளக்கினார்கள்.

அப்போது ~ரா| உளவு நிறுவனத்தின் தலைவராக இருந்தவர் கிரிஷ் சந்திரசெக்சேனா. இவர் தான் ராஜீவ் காந்தியின் பாதுகாப்பு ஆலோசகராக பிறகு நியமிக்கப்பட்டார். அதன் பிறகு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஆளுநராகவும் நியமிக்கப்பட்டார். சென்னையில் ஒரு ரகசிய இடத்தில் - ~ரா| தலைவர் சச்சேனா அழைப்பை ஏற்று, விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனும், அன்டன் பாலசிங்கமும் அவரை சந்தித்தனர். அதிகார மிடுக்குடன், பேசிய அந்த அதிகாரி - 'கடந்த கால அணுகுமுறை இப்போது மாறிவிட்டது. இலங்கைத் தமிழர்களை ராணுவத் தாக்குதல்களிலிருந்து காப்பாற்றுவதற்குத்தான் உங்களுக்கு இந்தியா ஆயுதம் வழங்கியதே தவிர, தனிநாடு போராட்டத்துக்கு அல்ல. அது உங்களின் உணர்வாக இருக்கலாம். ஆனால், அங்கே நாடு பிரிவதை இந்தியா ஒருபோதும் ஆதரிக்காது. அது எங்கள் நாட்டில் பெரும் பாதிப்புகளை உருவாக்கிவிடும்" என்று கூறிய அவர், பிரபாகரனைப் பார்த்து, குரலை உயர்த்தி, 'எங்களின் இந்த அணுகுமுறையைப் புரிந்து கொண்டு, நீங்கள் ஆதரித்தாக வேண்டும்" என்றார்.

~ரா|வைத் தொடர்ந்து வேறு ஒரு நாளில், இந்திய உளவுத்துறை (அய்.பி.) அழைத்தது. விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் - அன்டன் பாலசிங்கத்தை சந்தித்தவர் உளவுத்துறை இயக்குனராக இருந்த இதே எம்.கே.நாராயணன் தான். உ.பி. மாநிலம் காசியில் இந்த சந்திப்பு நடந்தது. சச்சேனா கடுமையான குரலில் - புதிய வெளியுறவுக் கொள்கையை விளக்கினார் என்றால், எம்.கே.நாராயணன், மென்மையாக, அதே கருத்தை பிரதிபலித்தார். இவை எல்லாம் உளவுத்துறை வழக்கமாகப் பின்பற்றும் தந்திரங்கள் தான். ~தெற்கு ஆசியாவின் வலிமையான நாடு இந்தியா. இந்த மண்டலத்தில் நிலையான அமைதியைக் கொண்டு வருவது இந்தியாவின் கடமை. தெற்கு ஆசியாவை அமைதி மண்டலமாக்கிடுவதற்கான புதிய திட்டங்களை, நாங்கள் வகுத் துள்ளோம். இதற்கு நீங்கள் ஒத்துழைக்க வேண்டும்" என்றார் எம்.கே.நாராயணன்.

இந்தியாவின் பல்வேறு இனங்களை தனது அதிகார மய்யத்தின் கீழ் அடக்கி வரும் இந்திய தேசிய ஆட்சி, தனது எல்லைகளையும் கடந்து, தெற்கு ஆசிய மண்டலம் முழுவதற்கும் ~அமைதியை| தனது அதிகார வலிமையால் திணிக்க விரும்பியது. தெற்கு ஆசியா அமைதி மண்டலமாக இருப்பதுதான் அவர்களின் ஒரே நோக்கமே தவிர, அங்கு ஒடுக்கப்படுகிற இனங்களின் பிரச்சினைகள், அடக்குமுறைகள் அவர்களுக்கு முக்கியமல்ல. இதுவே ராஜீவ் காந்திக்கு பார்ப்பனிய அதிகார வர்க்கம் உருவாக்கிக் கொடுத்த, புதிய வெளியுறவுக் கொள்கைக்கான அணுகுமுறையாகும். இந்திய அதிகாரப் பார்ப்பன மேலாண்மையின் விரிவாக்கமாகவே இது அமைந்திருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது அல்லவா?

இலங்கை ராணுவத்தின் ஒடுக்குமுறை பற்றியும் ஜெயவர்த்தனா விரிக்கும் சூழ்ச்சி வலை பற்றியும் பிரபாகரன், எம்.கே.நாராயணனிடம் எடுத்துக் கூறினார், அவற்றைப் பொறுமையுடன் கேட்ட எம்.கே. நாராயணன், இறுதியில் தனது கருத்தையே மீண்டும் வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து, வேகமான மாற்றங்கள் உருவாயின. ~டெலோ|, ஈ.பி.ஆர்.எல்.எப்.|, ~ஈரோஸ்| ஆகிய அமைப்புகள் கூட்டாக உருவாக்கியிருந்த ~ஈழ தேசிய விடுதலை முன்னணி� (ஈ.என்.எல்.எல்.) என்ற கூட்டமைப்பில், விடுதலைப் புலிகளும் அங்கமாகியது. பூட்டான் தலைநகரான திம்புவில் இலங்கை அரசின் பிரதிநிதிகளுடன், போராளிகளின் பிரதிநிதிகள் பேச்சுவாத்தை நடத்த உளவு நிறுவனங்கள் ஏற்பாடு செய்தன. பேச்சுவார்த்தை துவங்குவதற்கு இரு வாரங்களுக்கு முன் ராணுவ விமானத்தில் போராளி குழுக்களின் தலைவர்களை டெல்லிக்கு அழைத்து, நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்தனர். போராளிகளை ~ரா| தலைமை நிலையத்துக்கு அழைத்துப் பேசிய ~ரா| உளவு நிறுவனத் தலைவர் சச்சேனா

'பேச்சுவார்த்தைக்கு முழு ஒத்துழைப்பு தந்தாக வேண்டும். எந்த மீறலையும், மோதலையும், ராஜீவ் அரசு சகித்துக் கொள்ளாது. அப்படி ஏதும் நடக்குமானால், இந்தியாவில் நீங்கள் பாதுகாப்பு கோரி அடைக்கலம் கோர முடியாது. எந்தப் பாதுகாப்பு உதவியையும் இந்தியா செய்யாது. பூட்டானில் பேச்சுவார்த்தை, இன்னும் இரண்டு வாரங்களில் துவங்கும். பங்கேற்க மறுப்பீர்களேயானால், இந்தியாவின் மண்ணையோ, அல்லது இந்தியாவின் கடற்பரப்பையோ நீங்கள் பயன்படுத்திக் கொள்ள முடியாது. (If you refuse to attend, neither Indian soil, nor territorial waters will be made available to you) என்று மிரட்டினார் (அன்டன் பாலசிங்கம் எழுதிய ~போரும் அமைதியும்| நூல். பக்.76)

தாயகத்தின் விடுதலைக்காக போராட முன் வந்துள்ள விடுதலை இயக்கங்களின் தலைவர்களிடம், அரசிடம் ஊதியம் பெறும் அதிகாரிகள், அதிகாரத் திமிருடன், உதிர்த்த வார்த்தைகளே இவர்களின் பார்ப்பனிய அதிகாரத்துவத்தை அப்பட்டமாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.

திம்பு பேச்சுவார்த்தையில் போராளிகளை பங்கேற்கச் செய்வதில் பெரும் வெற்றி பெற்றுவிட்டதாகவும், இது மகத்தான சாதனை என்றும் உளவுத்துறை அதிகார வர்க்கம் பீற்றிக் கொண்டது. ஆனால் நடந்தது என்ன? திம்பு பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும்போதே (1985-ஆகஸ்டு) ஜெயவர்த்தனா ஆட்சி, தமிழர்கள் மீது ராணுவத் தாக்குதலைத் தீவிரப்படுத்தியதோடு, போராளிகளின் மறைவிடங்களிலும், தாக்குதல்களை தொடுத்தது. செய்திகளை அறிந்த போராளிகள், பேச்சுவார்த்தையை பாதியிலேயே முறித்துக் கொண்டு வெளியேறினர்.

வெளியுறவு மற்றும் உளவுத்துறை அதிகார வர்க்கத்தின் முயற்சிகள் பெரும் தோல்வியை சந்தித்தன. திம்புப் பேச்சு தோல்வி அடைந்த பிறகும், அதிகார வர்க்கம் தனது போக்கை மாற்றிக் கொள்ளவில்லை. திம்பு பேச்சுவார்த்தையின் போது போராளிகளுடன் சென்னையிலிருந்து தொலைபேசியில் (hotline) தொடர்பு கொண்டு கருத்துகளைத் தெரிவித்து வந்தார் பாலசிங்கம்! பேச்சு வார்த்தை முறிந்ததற்கு பாலசிங்கம் தான் காரணம் என்று உளவுத்துறை முடிவு செய்தது.

பேச்சுவார்த்தை நடக்கும் போதே - தமிழர்கள் மீது ஜெயவர்த்தனா, தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியதைப் பற்றியோ, உருப்படியான திட்டங்களை ஜெயவர்த்தனா ஆட்சி முன்வைக்காதது பற்றியோ கவலைப்படாத உளவுத்துறை, போராளிகளை மிரட்டி, பணிய வைப்பதில் மட்டும் குறியாக இருந்தது. பாலசிங்கம் - திம்புவில் தொடர்பு கொண்டு பேசியதை பதிவு செய்து கண்காணித்து வந்த உளவுத்துறை, பாலசிங்கத்தின் மீது கோபம் கொண்டது. (திம்புவில் தொடர்பு கொண்டு பேசும் இணைப்புகளை உருவாக்கித் தந்ததே உளவுத்துறைதான்) கோபமடைந்த உளவுத்துறை பாலசிங்கத்தை இந்தியாவிலிருந்து நாடு கடத்த உத்தரவிட்டது.

1985 ஆக. 23 ஆம் தேதி சென்னை பெசன்ட் நகரில் விடியற்காலையில் அன்டன் பாலசிங்கம் தங்கியிருந்த வீட்டில், அவரை கைது செய்த காவல்துறை அடுத்த நாளே விமானத்தில் ஏற்றி லண்டனுக்கு அனுப்பியது. ஏற்கனவே லண்டனுக்குப் போய்விட்ட ~டெலோ| ஆலோசகர்கள் சந்திரகாசன், நடேசன் சத்தியேந்திரா ஆகியோருக்கும் நாடு கடத்தல் தமிழிகத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

உளவு நிறுவனத்தின் கைபொம்மையாகி, ராஜீவ் ஆட்சி எடுத்த இந்த விபரீத முடிவு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகளை உருவாக்கியது. தமிழ்நாடு கொந்தளித்து எழுந்தது. இதனால் அடுத்த ஆறு வாரங்களில் நாடு கடத்தல் உத்தரவு ரத்து செய்யப்பட்டது.

தொடர்ந்து ராஜீவ் காந்தி மேற்கொண்ட ஈழத் தமிழர் பிரச்சினை தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் தோல்வியிலேயே முடிந்திருக்கின்றன. உளவுத்துறையும், அதிகார வர்க்கமும் மேற்கொண்ட ~திணிப்பு| நடவடிக்கைகள் வெற்றி பெறாமலே போனது.

ஈழத் தமிழ்ப் போராளி குழுக்களுக்கு, இந்தியாவில் - ஆயுதப் பயிற்சி வழங்கப்பட்டதற்கான காரணமே, இலங்கை அரசை மிரட்டி, இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதுதான் என்பதை, ஏற்கனவே சுட்டிக் காட்டியிருந்தோம்.

உளவுத் துறையின் செயல்பாடுகள், அந்த எல்லையோடு மட்டும் நின்று விடவில்லை. போராளிக் குழுக்களை, வேறு பிரச்சினைகளுக்குப் பயன்படுத்திய அதிர்ச்சியூட்டும் சம்பவங்களும் உண்டு.

தென்கிழக்கு ஆசியாவில், காஷ்மீர், சிக்கிம் நாடுகளை தனது கட்டுப்பாட்டுக்குக் கீழே கொண்டு வந்த பிறகு, நேபாளம், பூட்டான் நாடுகளும், இந்திய ராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுவிட்டன.

இலங்கையையும் தனது கட்டுப்பாட்டுக்குக் கீழே கொண்டு வரும் முயற்சிகள் தொடங்கிய நிலையில் இலங்கைக்கு அருகிலே உள்ள மாலத்தீவு மட்டும் ஒதுங்கியே இருந்தது. மாலத்தீவிலே தொடர்ந்து ஆட்சி அதிகாரத்தில் இருந்து வருபவர் அப்துல் ஹயூம். இந்தியாவுடன் அதிக நெருக்கமில்லாத அப்துல்ஹயூம், பாகிஸ்தானோடு மிகவும் நெருக்கமாக இருந்தவர். மாலத்தீவையும், இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர, ~ரா| உளவு நிறுவனம் திட்டம் தீட்டியது. அதற்கான ரகசிய திட்டங்கள் உருவாக்கப்பட்டன.

அப்துல் ஹயூம், ஏற்கனவே ஆட்சியிலிருந்தவர்களைக் கவிழ்த்து விட்டு அதிகாரத்தைப் பிடித்தவர். அவரால், ஆட்சியிலிருந்து விரட்டி அடிக்கப்பட்டவர்கள் இரண்டு பேர். ஒருவர் சிங்கப்பூரிலும், மற்றொருவர் கொழும்பிலும் தஞ்சமடைந்திருந்தனர். இவர்களைப் பயன்படுத்தி மாலத்தீவில் கலகம் ஒன்றை உருவாக்கி, ஆட்சியைக் கவிழ்க்க திட்டங்கள் உருவாக்கப்பட்டன. இதற்கு - ஈழப் போராளி குழு ஒன்றையே பயன்படுத்த இந்தியாவின் உளவு நிறுவனம் ~ரா| (RAW - Research and Analysis Wing) முடிவு செய்தது.

இந்தியாவிடம் நேரடியாகப் பயிற்சிப் பெற்ற போராளிக் குழுக்களைப் பயன்படுத்தினால், பின்னணியில் இந்தியா நிற்பது புரிந்து விடும் என்பதால், இந்தியாவின் பயிற்சித்திட்டத்திலிருந்து ஒதுங்கி நின்ற உமாமகேசுவரனின் தலைமையில் செயல்பட்ட ~புளோட்| என்ற போராளிக் குழுவைப் பயன்படுத்த முடிவு செய்தார்கள். முதலில் - கொழும்புக்கும், சிங்கப்பூருக்கும் சென்று, அப்துல் ஹயூமின் அரசியல் எதிரிகளை சந்தித்துப் பேசி, ஒப்புதல் பெற்றது ~ரா| நிறுவனம்.

வவுனியாவில் செட்டிகுளம் என்ற பகுதியில் தங்கியிருந்தார் உமாமகேசுவரன். அப்போது விடுதலைப் புலிகள் அமைப்புக்கும், உமாமகேசுவரன் அமைப்புக்குமிடையே மோதல்கள் நடந்து கொண்டிருந்தன. 1987 ஆம் ஆண்டு, ஆகஸ்டு 22 ஆம் தேதி இந்திய ராணுவத்தின் விசேட விமானம் வவுனியா வந்து, உமாமகேசுவரனை சென்னைக்கு அழைத்து வந்தது. சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள ஒரு வீட்டில் உமாமகேசுவரன் - ரா அதிகாரிகள் ரகசிய சந்திப்பு நடந்தது.

மாலத்தீவுப் பிரச்சினையை வெளிப்படையாக சொல்லாமல், தாங்கள் கூறும் பகுதியில் தாக்குதல் நடத்த வேண்டும் என்றும், அதற்குரிய பணம், ஆயுதம் வழங்குவதாகவும் ~ரா| பேரம் பேசியது. புலிகளுக்கு எதிராகவே, தம்மை ~ரா| நிறுவனம் பயன்படுத்துவதாக உமாமகேசுவரன் கருதி சம்மதம் தெரிவித்தார். ஒரு தொகை முன் பணமாக வழங்கப்பட்டது. தாக்குதல் நடத்தப்படும் இடம், நாள் ஆகியவற்றை பிறகு தெரிவிப்பதாக, ~ரா| அதிகாரிகள் கூறிவிட்டனர். மீண்டும் ராணுவ விமானத்திலேயே உமாமகேசுவரன் வவுனியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ~ரா| நிறுவனம் தந்த பணத்தைக் கொண்டு கற்பிட்டி என்ற பகுதியில் ~மாசிக்கருவாடு| (இது இலங்கையில் பிரபலமான உணவு) தயாரிப்பு தொழிற்சாலை ஒன்றையும், கொழும்பின் புறநகர்ப் பகுதியில், மிகப் பெரிய கோழிப் பண்ணை ஒன்றையும் ஏற்படத்த, உமாமகேசுவரன் முதலீடு செய்து, ~ரா|வின் அழைப்புக்காகக் காத்திருந்தார்.

இந்த நிலையில் கோழி இறைச்சி ஏற்றுமதி வியாபாரி என்று கூறிக் கொண்டு, தனது பெயர் அப்துல்லா என்று கூறிக்கொண்டு, ஒருவர், உமாமகேசுவரனை சந்தித்தார். உமாமகேசுவரனும், ஒரு கோழி வியாபாரி என்ற முறையிலேயே பேசினார். சந்திக்க வந்தவர் - 'உங்களை எனக்குத் தெரியும்; நீங்கள்தான் புளொட் தலைவர் உமாமகேசுவரன்; நான் மாலத்தீவின் குடிமகன்; மாலத்தீவில் அப்துல் ஹயூம், இஸ்லாமிய நெறிகளுக்கு எதிராக ஆட்சி நடத்துகிறார். மக்களுக்கு உரிமை இல்லை. அவரது ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும். ~ரா| அதிகாரிகள் தான், என்னிடம் உங்களை சந்திக்கச் சொன்னார்கள்" என்று கூறியவுடன், உமாமகேசுவரன் அதிர்ச்சியடைந்தார்.

'மாலத்தீவு பற்றி என்னிடம் ~ரா| அதிகாரிகள் எதுவும் சொல்லவில்லையே அங்கே ஆட்சிக் கவிழ்ப்புக்கு நான் என்ன செய்ய முடியும்?" என்று கேட்டார். 'உங்களிடம் இது பற்றி பேசியிருப்பதாக ~ரா| அதிகாரிகள் என்னிடம் கூறினார்களே, உங்களிடம் ஏதும் கூறவில்லையா? அவர்கள் உங்களிடம் திட்டங்களை விரிவாகக் கூறுவார்கள். நீங்கள் அவர்களுடன் பேசி, உங்கள் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளுங்கள். நம்முடைய சந்திப்பின் நினைவாக, இந்தப் பரிசை பெற்றுக் கொள்ளுங்கள்" என்று கூறி, புத்தம் புதிய ~மெஸ்டா| கார் ஒன்றை பரிசாக வழங்கிவிட்டு அப்துல்லா விடைபெற்றார். இடையில் ஒருவார காலம் ஓடியது. மற்றொரு ~ரா| அதிகாரி, உமாமகேசுவரனை சந்தித்தார். கேரளாவின் துறைமுக நகரமான கொச்சினில் அடுத்து சந்திக்க வேண்டும்; இது வேறு யாருக்கும் தெரிய வேண்டாம் என்று கூறிச் சென்று விட்டார்.

இந்த முறை இந்திய ராணுவ விமானத்தில் உமாமகேசுவரன் செல்லவில்லை. இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் கொழும்பிலிருந்து திருவனந்தபுரம் வந்தார். ~ரா| அதிகாரிகள் அவரை அங்கிருந்து காரில் கொச்சினுக்கு அழைத்துச் சென்றனர். கொச்சின் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த சிங்கப்பூர் கப்பல் ஒன்றில் இந்த முக்கிய சந்திப்பு 1987 அக்டோபர் 14 ஆம் தேதி நடந்தது. மாலத்தீவில் ஆட்சிக் கவிழ்ப்புக்கு ஏன் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறீர்கள் என்று ~ரா| அதிகாரிகளிடம் உமாமகேசுவரன் கேட்டார். அதற்கு ~ரா| அதிகாரிகள் இவ்வாறு பதிலளித்தனர்:

'இந்தியா மிகப் பெரிய நாடு ராஜீவ் ஆசியாவிலேயே பெரும் தலைவராக வளர்ந்து வருகிறார். ஆனால், இது ஜெயவர்த்தனாவுக்கோ, சிங்கள அரசியல்வாதிகளுக்கோ தெரியவில்லை. நாங்கள் அவர்களுக்கு இதைப் புரிய வைக்க வேண்டும். தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் செல்வாக்கு பெற்று, எல்லா இடங்களிலும் ஊடுருவி விட்டார்கள். இந்த நிலையில் ஜெயவர்த்தனா - ஜெ.வி.பி. - விடுதலைப் புலிகளுக்கு நாங்கள் பாடம் கற்பிக்க விரும்புகிறோம்; அதற்கு ஒரு தளம் வேண்டும்; எனவே தான் மாலத்தீவைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளோம்; ஏற்கனவே, ஆட்சி அதிகாரத்திலிருந்து இறக்கப்பட்ட தற்போதைய அதிபரின் அரசியல் எதிரிகளை முன்னிறுத்தி இதை நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.

இதை நீங்கள் வெற்றிகரமாக செய்து முடித்து விட்டால், மாலத்தீவிலுள்ள இரண்டு தீவுகளை நீங்கள் தளமாகப் பயன்படுத்திக் கொள்ள ஏற்பாடு செய்கிறோம். அந்தத் தீவிலிருந்து கிடைக்கும் வருமானத்தையும் நீங்களே எடுத்துக் கொள்ளலாம்" என்று உமாமகேசுவரனுக்கு நம்பிக்கை ஊட்டினார்கள். மூன்று மணிநேரப் பேச்சுவார்த்தைக்குப் பின்பு உமாமகேசுவரன் மாலத்தீவில் ஆட்சிக்கவிழ்ப்புக்கு சம்மதித்தார்.

'பாலத்தீன மக்கள் விடுதலை முன்னணியிடம் பயிற்சி பெற்றவர்கள் என்னிடம் இருக்கிறார்கள்; எனக்குத் தேவை ஆயுதமும், பணமும் தான்" என்று உமாமகேசுவரன் கூறினார்.

'அது பிரச்சினையல்ல, கொழும்பில், உங்களுக்கு முதல் கட்டமாக அப்துல்லா (அவரும் அப்போது உடனிருந்தார்) ஒரு கோடி ரூபாய் இலங்கைக் காசு தருவார். எல்லாம் முடிந்த பிறகு ரூ.10 கோடி இலங்கைக் காசு தருகிறோம். அடுத்த வாரம் ஆயுதங்கள் உங்கள் கைகளில் கிடைக்கும்" என்று ~ரா| அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆயுதங்களை எங்கே வைப்பீர்கள் என்ற கேள்வியை ~ரா| அதிகாரிகள் கேட்டனர். மன்னார் மாவட்டத்தில் எங்கள் கட்டுப்பாட்டுப் பகுதியில் வைத்துக் கொள்கிறோம் என்றார், உமாமகேசுவரன். விடுதலைப் புலிகள் உங்கள் பகுதியில் ஊடுருவி, தாக்குதல் நடத்தினால் என்ன செய்வீர்கள் என்று ~ரா| அதிகாரிகள் கேட்டனர். சற்று நேரம் அவர்களே யோசித்துவிட்டு, 'உங்கள் கட்டுப்பாட்டுப் பகுதிகளை விடுதலைப் புலிகள் கைப்பற்றாமல் இருக்க இந்திய அமைதிப்படையின் கட்டுப்பாட்டின் கீழ் அதைக் கொண்டு வந்து விடுகிறோம்" என்று கூறினர். அந்தப் பகுதி அப்போது அமைதிப் படையின் கட்டுப்பாட்டின் கீழ் வராமல் இருந்தது.

அதன்படி கொச்சின் சந்திப்புக்குப் பிறகு, புளோட் முகாம்கள் இருந்த முள்ளிகுளம், செட்டிகுளம், முருங்கன் ஆகிய பகுதிகள், புளோட் ஒப்புதலோடு இந்திய ~அமைதி|ப்படையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன. அப் பகுதிகளை இணைக்கும் முக்கிய தரை வழிப் பகுதிகளில் இந்திய இராணுவத் தடை அரண்கள் உருவாக்கப்பட்டன. மாலத்தீவு ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான ஆயுதங்களைப் பாதுகாத்து வைப்பதற்காகவே, தமிழ் ஈழ மண்ணில் ~ரா| உளவுத் துறை இந்த நடவடிக்கைகளில் இறங்கியது.

அதே நேரத்தில் - தமிழ்நாட்டில் மண்டபத்துக்கு அருகே உள்ள தீவு ஒன்றில் வைத்து ~ரா| - ~புளோட்|டுக்கு ஆயுதங்கள் வழங்கியது. மண்டபத்துக்கு அருகே உள்ள ஒரு தீவிலேயே மூன்று பிரிவுகளுக்கு பயிற்சிகளும் தரப்பட்டன.

நன்றி: புரட்சிப் பெரியார் முழக்கம

நன்றி - தமிழ்நாதம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.