Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காஷ்மீர் யாருக்கு? - தோழர் தியாகு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காஷ்மீர் யாருக்கு?

6959.jpg

பண்டித ஜவகர்லால் நேருவின் தனி அடையாளங்களில் ஒன்று அவர் எப்போதும் தன் ஷெர்வானி சட்டையில் குத்தியிருந்த ரோஜாப் பூ. ஒவ்வொரு நாளும் இதற்கென்றே காஷ்மீரிலிருந்து ரோஜாப் பூ வருவதாகச் சொல்லிக் கொள்வார்கள். நேருஜியின் உடைகள் இலண்டனில் சலவை செய்யப்பட்ட செய்திபோல் இந்த காஷ்மீர் ரோஜா கதையும் உண்மையாகவோ பொய்யாகவோ இருக்கலாம், நாமறியோம். ஆனால் நேரு காஷ்மீரிப் பண்டித (பார்ப்பன) வகுப்பில் பிறந்தவர் என்பதும், எப்படியாவது காஷ்மீரை இந்தியாவில் இணைத்துக் கொள்ளத் தனி அக்கறை எடுத்துக் கொண்டவர் என்பதும் மறுக்க முடியாத உண்மைகள்.

ஆனால் காஷ்மீர் பற்றி ஒவ்வொரு நாளும் வேளாவேளைக்கு நமக்குப் பரிமாறப்படும் செய்திகளில் பொய்களே பெருஞ்சோறாகவும் உண்மைகள் வெறும் ஊறுகாயாகவும் இருப்பதுதான் கவலைக்குரியது.

nehru-page-hari-singh-only-for-print_098

காஷ்மீர் பற்றிய பொய்களில் மூத்த பொய் காஷ்மீர் இந்தியாவின் பிரிக்கவொண்ணாப் பகுதி என்பதே. இந்தப் பொய்யை ஏற்றுக் கொள்வதுதான் தேசபக்தியாம்! ஏற்க மறுப்பவர்கள் ஆண்டி-இண்டியன்சாம்!

பிரிக்கவொண்ணாப் பகுதி என்றால் என்ன? ஆங்கிலத்தில் Integral Part. அதாவது மனிதனுக்குத் தலை போல! ஒருங்கிணைந்த பகுதி! தலையில்லாத மனிதன் வெறும் முண்டம்! தலை இல்லா விட்டால் மனிதன் இல்லை. அதே போல் காஷ்மீர் இல்லா விட்டால் இந்தியாவே இல்லை என்றாகிறது. பாரதிய ஜனதா முதலான இந்துத்துவ ஆற்றல்களும் காங்கிரஸ் முதலான இந்தியத் தேசிய அமைப்புகளும் மார்க்சிஸ்டு முதலான இந்தியத் தேசிய இடதுசாரிகளும் காஷ்மீர் இந்தியாவின் பிரிக்கவொண்ணாப் பகுதி என்று திரும்பத் திரும்பச் சொல்கின்றன. ராமஜெயம் போல் இதை யார் கூடுதலான தடவை சொல்வது என்று போட்டியிடுகின்றனர்.

சத்யமேவ ஜெயதே! வாய்மையே வெல்லும்! காஷ்மீர் இந்தியாவின் பிரிக்கவொண்ணாப் பகுதி என்று தலையிலடித்து சத்தியம் செய்கின்றனர். ஆனால் உண்மை என்ன?

பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் என்று சொல்லி இந்தியா அதிகாரக் கைமாற்றம் பெற்ற 1947 ஆகஸ்டு 14-15 நள்ளிரவு நேரம் ‘விதியுடன் உடன்படிக்கை’ (Tryst with Destiny) குறித்து பண்டித நேரு முழங்கியபோது அவரது சட்டையில் ரோஜாப் பூ இருந்திருக்கலாம். ஆனால் இந்தியாவில் காஷ்மீர் இல்லை. காஷ்மீர்தான் பாரத மாதாவின் ‘சிரசு’ என்றால் அவள் தலையில்லாத முண்டமாகவே பிறந்தாள் என்று பொருள். அவள் கன்னியாகுமரி என்னும் பாதமும் இல்லாமலே பிறந்தாள் என்பதையும் சேர்த்துக் கொள்ளலாம். இது பலருக்கும் கசப்பாக இருக்கலாம், ஆனால் உண்மைகளுக்கு இரக்கமில்லை.

கன்னியாகுமரி அப்போது திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் பகுதியாக இருந்தது. 1947 அதிகாரக் கைமாற்றத்துக்கான உடன்படிக்கையின்படி பிரித்தானிய இந்தியா இரண்டாகப் பிரிக்கப்பட்டு, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகள் பிறந்தன. ஆனால் சமஸ்தான இந்தியா இவ்வாறு பிரிக்கப்படவில்லை. சமஸ்தானங்கள் (மொத்தம் 552) விருப்பம் போல் இந்தியாவுடனோ பாகிஸ்தானுடனோ சேர்ந்து கொள்ளலாம் அல்லது தனியரசாகவும் நீடிக்கலாம் என்று உரிமையளிக்கப்பட்டது.

பிரித்தானியக் காலனியாதிக்கத்துக்கு எதிரான போராட்டம் சமஸ்தான மக்களையும் எழுச்சி கொள்ளச் செய்தது. அவர்கள் அயலாட்சிக்கு எதிராக மட்டுமல்லாமல் மன்னராட்சிக்கு எதிராகவும் குடியாட்சியத்துக்கு (ஜனநாயகத்துக்கு)  ஆதரவாகவும் போராடினார்கள். இந்தக் குடியாட்சியத்தின் ஓர் இன்றியமையா கூறு மொழிவழித் தேசியமாக அமைந்தது. தமிழகத்தில் 1938ஆம் ஆண்டே இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் முடிவில் பிறந்த ‘தமிழ்நாடு தமிழருக்கே!’ முழக்கம், 1947 ஆகஸ்டு 15க்குப்பின் நடந்த வடக்கெல்லை, தெற்கெல்லைப் போராட்டங்கள்… இவையெல்லாம் அன்றைய தமிழ்த் தேசிய எழுச்சியின் வெளிப்பாடுகளே. இவ்வகையில் கன்னியாகுமரியைத் தமிழகத்துடன் இணைப்பதற்கான போராட்டம் இந்த  வரலாற்றுப் போக்கின் எல்லாக் கூறுகளையும் தன்னகத்தே கொண்டிருந்தது.

நிஜாமின் ஆளுகையில் இருந்த ஐதராபாத்தின் தெலங்கானா பகுதியில் பொதுமையர் (கம்யூனிஸ்டுகள்) தலைமையில் நடந்த வீரத் தெலங்கானா ஆயுதமேந்திய மக்கள் போராட்டத்தின் முழக்கம் ‘விசாலாந்திரத்தில் மக்கள் ராஜ்யம்’ என்பதுதான். பொட்டி சிறீராமுலுவின் உயிரீகமும் தெலுங்குத் தேசிய உணர்வெழுச்சியின் வெளிப்பாடே. வீரத் தெலங்கானாவில் மன்னராட்சிக்கும் நிலக்கிழாரியத்துக்கும் எதிராகவும் இந்தியத் தேசியத்துக்கும் தெலுங்குத் தேசியத்துக்கும் ஆதரவாகவும் மூண்டெழுந்த போராட்டங்கள் ஒரே புள்ளியில் மையங்கொண்டன.

1948 செப்டம்பரில் “போலீஸ் நடவடிக்கை” என்ற பெயரில் நேரு ஏவிய  இந்திய இராணுவம் ஐதராபாதில் நுழைந்தது. நைஜாம் மன்னர் சரணடைந்தார். அவர் ஐதராபாத் மாநில ராஜ பிரமுகர் (ஆளுநர்) ஆக்கப்பட்டார். பொதுமைக் கட்சியின் தலைமையிலான மக்கள் போராட்டம் அடக்கியொடுக்கப்பட்டது. 1956ஆம் ஆண்டு தெலுங்கு மக்களின் தாயகம் மொழிவழி ஆந்திர மாநிலமாக அமைக்கப்பட்டது.

சமஸ்தானத்து மக்களின் ஜனநாயக ஆவலைப் பயன்படுத்தி அவற்றை இந்தியக் குடையின்கீழ் கொண்டுவரும் முனைப்பின் அடையாளமாகக் கருதப்பட்டவர் அன்றைய துணைப் பிரதமர் சர்தார் வல்லபாய் படேல். சமஸ்தானங்களின் குறுநில மன்னர்களை வழிக்குக் கொண்டுவர அவர் சாம பேத தான தண்ட வழிகளைப் பயன்படுத்தினார். பெரும்பாலான மன்னர்கள் ராஜ பிரமுகர்களாக்கப்பட்டு, அவர்களுக்குப் பெரும் வசதிகளும் சலுகைகளும் அரச மானியமும் வழங்கப்பட்டன.

ஜெர்மன் தேசத்தை ஓர்மை செய்து ஒன்றுபடுத்திய பிஸ்மார்க்குடன் படேலை ஒப்பிடுவோர் உண்டு. பிஸ்மார்க்கின் ஜெர்மனி ஜெர்மன் மொழி பேசும் இயற்கைத் தேசம். இந்தியா அப்படியன்று. இது பல மொழி பேசும் பல தேசங்களை உள்ளடக்கிய துணைக்கண்டம். படேலை இரும்பு மனிதர் என்பார்கள் சிலர். ஆம், மக்கள் போராட்டங்களை ஒடுக்கியதில் இரும்பு மனிதரே. இந்திய ஒடுக்குமுறைச் சிறையிலிருந்து விடுபடும் தேசிய இனங்களின் போராட்டங்கள் வளர வளர படேலின் இரும்பு துருப்பிடிக்கக் காணலாம்.

இந்திய விடுமைக்கு முன் துணைக்கண்டத்தின் இன்னொரு பெரிய சமஸ்தானமாக இருந்தது ஜம்மு-காஷ்மீர். இது இந்தியா–பாகிஸ்தான் எல்லையில் இருந்தது. பெரும்பான்மை மக்கள் 77 விழுக்காடு என்னுமளவுக்கு இசுலாமியர்களாக இருந்தனர். ஆனால் மகாராஜா அரிசிங் ஓர் இந்து மன்னர். மக்கள்தொகை விழுக்காட்டின் அடிப்படையில் காஷ்மீர் இயல்பாகவே பாகிஸ்தானுடன் இணைந்திருக்கும்.

காஷ்மீருடன் ஒப்புநோக்கத்தக்கது குசராத்தின் ஒரு பகுதியான ஜூனாகாத் சமஸ்தானம். அங்கு மன்னர் முஸ்லிம். பெரும்பான்மை மக்கள் இந்துக்கள். அது பாகிஸ்தானின் எல்லையோரத்தில் இருந்தது. மன்னர் பாகிஸ்தானுடன் இணைய விரும்பியும் இந்தியாவுடன்தான் இணைய வேண்டும் என்று வலியுறுத்தினார் பண்டித நேரு. பெரும்பாலான மக்கள் இந்துக்கள் என்பதே அவர் சொன்ன காரணம். ஜூனாகாத் நவாப் 1947 செப்டம்பர் 15ஆம் நாள் பாகிஸ்தானுடன் இணைப்பு ஒப்பந்தத்தில் ஒப்பமிட்டார். மக்கள் இந்த இணைப்பை எதிர்த்துக் கிளர்ந்தெழுந்தார்கள். இந்திய அரசும் இந்த இணைப்பை ஏற்க மறுத்து விட்டது. 1947 திசம்பரில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு இந்தியாவுடன் இணைவதற்கு 99 விழுக்காட்டுக்கு மேல் மக்கள் ஆதரவளித்தனர். ஜூனாகாத் இந்தியாவில் இணைந்தது.

ஜூனாகாத்தில் நடந்தவற்றை காஷ்மீரில் நடந்தவற்றுடன் ஒப்புநோக்கினால் இந்திய அரசின் அணுகுமுறை எப்படி இரட்டை அளவுகோலுடையது என்பதை அறியலாம். ஜூனாகாத் அளவுகோலின்படி காஷ்மீர் பாகிஸ்தானுடன் எளிதில் இணைந்திருக்க முடியும். அப்படி நடக்காமல் போனது என்றால் அதற்கான முதற்பெரும் காரணம் காஷ்மீர் மக்களின் சமயச் சார்பற்ற உணர்வும் விடுதலை வேட்கையுமே.

பிரித்தானியப் பேரரசியத்துக்கும் காஷ்மீரின் முடியாட்சிக்கும் நிலக் கிழாரியத்துக்கும் எதிரான ஜனநாயகப் போராட்டத்தில் முகிழ்த்ததே காஷ்மீர் தேசியம். ராஜபுத்திர டோக்ரா அரச வழித்தோன்றலாகிய  மகாராஜா அரிசிங்கின் ஆட்சி ஒளிவுமறைவற்ற இந்து வகுப்புவாத ஆளுகையாகவே இருந்தது. குறிப்பாகச் சொன்னால் காஷ்மீர் பள்ளத்தாக்கின் முஸ்லிம் அடித்தட்டு மக்களை அடக்கியொடுக்கிற்று.

37443-abgdqjjlyc-1468070422-300x135.jpg

 

மன்னராட்சிக்கு எதிரான போராட்டங்களின் உச்சமாக 1931ஆம் ஆண்டு காஷ்மீரில் ஒரு பேரெழுச்சி உருவாயிற்று. குர்-ஆனை அவமதித்தது தொடர்பான சிக்கலும், இது குறித்து முறையிட்டவர்களைப் பணிநீக்கம் செய்ததும் இவ்வெழுச்சிக்குத் தூண்டுகோலாயின. இந்து மகாராசாவைத் தூக்கியெறியும்படி தூண்டியதாக அப்துல் காதர் என்ற இளைஞரைத் தளைப்படுத்தி சிறீநகர் சிறையில் வழக்கு உசாவலுக்கு உட்படுத்தியதை எதிர்த்து மக்கள் கிளர்ந்தெழுந்தார்கள். 1931 ஜூலை 13ஆம் நாள் காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் உயிரிழந்தனர். இன்று வரை காஷ்மீர் பள்ளத்தாக்கு எங்கிலும் ஜூலை 13 ஈகியர் நாளாகக் கொண்டாடப்படுகிறது.

அப்போதே காஷ்மீர் மன்னராட்சிக்கு இந்துத்துவ ஆற்றல்கள் முட்டுக்கொடுத்து நின்றன. சான்றாக, இந்து மகாசபை 1931 ஆகஸ்டு 15 தக்கோலா மாநாட்டில் “காஷ்மீர் மகாராஜாவுக்கு எதிராக நடைபெற்று வரும் கடுமையான பரப்புரை குறித்து அச்சம் கொள்வதாக”த் தீர்மானம் இயற்றியது.

1931 போராட்டத்தை இந்து—முஸ்லிம் சிக்கலாகக் கருதக்கூடிய ஒருசிலர் இருந்தாலும், காசுமீரத்து இஸ்லாமிய மக்களில் பெரும்பாலோர் இந்து வகுப்புவாதத்துக்கு எதிர்வினையாகக் கூட முஸ்லிம் வகுப்புவாதத்தில் வீழ்ந்து விடவில்லை. இந்தியாவுக்கும்  பாகிஸ்தானுக்கும் சமயச் சார்பின்மையைக் கற்றுத்தரும் முதிர்ச்சி உடையவர்கள் காஷ்மீரிகள் – அன்றும் இன்றும்!

1938இல் முஸ்லிம் மாநாட்டுக் கட்சியிலிருந்து ஷேக் அப்துல்லா தலைமையில் பிரிந்து வந்தவர்கள் அனைத்து ஜம்மு–காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி (AJKNC) அமைத்தார்கள். இக்கட்சி 1931 போராட்டத்தை ‘அடக்குமுறையாளர்களுக்கு எதிரான ‘அடக்குண்ட மக்களின் போர்’ என வரையறுத்தது.

“நீதியையும் நியாயத்தையும் நிலைநாட்டுவதே இப்போரின் குறிக்கோள். ஆளுவோர் முஸ்லிம்களாக இருந்து ஆளப்படுவோர் இந்துக்களாக இருந்திருந்தாலும் இப்படித்தான் நிகழ்ந்திருக்கும்.”

ஷேக் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டுக் கட்சியே காஷ்மீர் தேசியத்தின் முதல் அரசியல் இயக்கம். காஷ்மீர் தேசியத்தை முறியடிக்க விரும்பிய மன்னர் சாதி மத அடிப்படையில் தோன்றிய அரசியல் இயக்கங்களை வரவேற்று ஊக்கப்படுத்தினார்.

பண்டித நேரு என்பதில் பண்டிதர் என்பது காஷ்மீர்ப் பார்ப்பனரைக் குறிக்கும் சாதிப் பெயராகும். பண்டிதர்களில் ஒரு பகுதியினர் ஷேக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சியை ஆதரித்தனர். வேறு சிலர் காஷ்மீர் பண்டித மாநாட்டுக் கட்சியைத் தோற்றுவித்தனர். ஜம்மு பகுதியில் இந்து சபா தொடங்கப்பெற்றது. சீக்கியர்களுக்கென சிரோன்மணி கல்சா தர்பார் அமைக்கப்பட்டது. மேற்சொன்ன சாதிமதக் கட்சிகளுக்கு எதிராக மட்டுமின்றி, இசுலாமிய நிலக்கிழாரியம், வகுப்புவாதம் ஆகியவற்றை எதிர்த்தும் தேசிய மாநாட்டுக் கட்சியின் உருவில் காஷ்மீர் தேசியம் வளர்ந்தது.

காஷ்மீர் பள்ளத்தாக்கு முஸ்லிம்கள் ஒடுக்கப்படுவதற்கு மன்னரின் இந்துமதச் சார்பே காரணம் என்று கூறிய முஸ்லிம் மாநாட்டுக் கட்சி இதற்குத் தீர்வு இஸ்லாமிய இறையரசே என்றது. தேசிய மாநாட்டுக் கட்சியோ நிலவுடைமையை ஒழித்து சமூகப் பொருளியல் விடுதலை பெறுவதே குறிக்கோள் என்றது.

அனைத்துலக அரங்கிலும் தேசிய மாநாட்டுக் கட்சி சோவியத்து சோசலிச ஒன்றியத்துக்கு ஆதரவாக நிலையெடுத்தது. 1942 மீர்பூர் மாநாட்டில் சோவியத்து செஞ்சேனைக்கு வாழ்த்துத் தெரிவித்தும் பாசிச எதிர்ப்புப் போராட்டத்துடன் தோழமை கொண்டும் தீர்மானங்கள் இயற்றப்பட்டன.

1944ஆம் ஆண்டு தேசிய மாநாட்டுக் கட்சி புதிய காஷ்மீர் (நயா காஷ்மீர்) என்ற கொள்கை அறிக்கையை வெளியிட்டது. இந்தியப் பிரிவினை நடந் தாலும் நடக்கா விட்டாலும் காஷ்மீர் சுதந்திர அரசாகத் திகழ வேண்டும் என்ற நோக்கத்தை இந்த அறிக்கை பறை சாற்றியது. 50 உறுப்புகள் கொண்ட வரைவு அரசமைப்புச் சட்டமும் வெளியிடப்பட்டது. இதன்படி அரசமைப்புக் குட்பட்ட முடியரசர் அரசுத் தலைவராக இருக்கலாம். பாதுகாப்பு, அயலுறவு தொடர்பான அதிகாரங்கள் தேசியப் பேரவை என்னும் நாடாளுமன்றத்திடம் இருக்கும். காஷ்மீரத்துக் கென்று தனிக் குடியுரிமை இருக்கும். ‘தாய்நாட்டைக் காப்பது அனைத்துக் குடிமக்களுக்கும் தலையாய புனிதக் கடமையாகும்’ என்று இந்த அரசமைப்புச் சட்டம் சொல்லும்போது தாய்நாடு என்ற சொல் காஷ்மீரைக் குறிக்குமே தவிர இந்தியாவையோ பாகிஸ்தானையோ குறிக்காது என்பது நோக்கற்பாலது.

‘புதிய காஷ்மீர்’ கொள்கையறிக்கையோடு தொழிலாளர் ஆவணம், உழவர் ஆவணம், தேசிய நலவாழ்வு ஆவணம் ஆகியவையும் வெளியிடப்பட்டன. கொள்கையறிக்கைக்கான முன்னுரையில் ஷேக் அப்துல்லா சோசலிச சோவியத்து நாட்டைப் போற்றினார்:

“சோவியத்து சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியத்தைச் சேர்ந்த வெவ்வேறு தேசிய இனங்கள், மக்களினங்கள் அடைந்துள்ள மறுமலர்ச்சியைக் காணும்போது ஊக்கம் பிறக்கிறது.”

முஸ்லிம் மாநாட்டுக் கட்சியை தேசிய மாநாட்டுக் கட்சியாக மாற்றியதை 1939இல் முஸ்லிம் லீக் குறை கூறியபோது முகமது அலி ஜின்னாவோடு மோதிக் கொண்டார் ஷேக் அப்துல்லா. ”காஷ்மீர் முஸ்லிம்களை விட்டு விடுங்கள், உங்கள் வேலையைப் பாருங்கள்” என்றார். 1944இலும் ஷேக் அப்துல்லாவுக்க்கும் ஜின்னாவுக்கும் கடும் மோதல் ஏற்பட்டது. பாகிஸ்தான் அமையும்போது அதில் காஷ்மீரை இணைப்பதற்கு ஷேக் அப்துல்லாவே தடையாக இருப்பதாக ஜின்னா நினைத்தார்,

1946–47இல் அனைத்திந்திய முஸ்லிம் லீக் பாகிஸ்தான் அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்தபோது, காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைப்பதற்காக முஸ்லிம் மாநாட்டுக் கட்சி ஜம்மு—காஷ்மீரில் வரிகொடா இயக்கம் நடத்தியது. இந்த இயக்கம் கொடிய முறையில் அடக்கியொடுக்கப்பட்டது. அதே போது தேசிய மாநாட்டுக் கட்சியோ “காஷ்மீரை விட்டு வெளியேறு” என்ற முழக்கத்துடன் மன்னராட்சியை எதிர்த்துப் போராடியது.

ஷேக் அப்துல்லா வைப் பொறுத்தவரை, காஷ்மீரின் தனித் தன்மையை விட்டுத் தராமலே, தேவையானால் தன்னாட்சித் தகு நிலையுடன் இந்தியக் கூட்டாட்சிக் குடியரசில் இணைந்திருக்கலாம் என நினைத்தார். காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைக்கும் எண்ணம் மட்டும் அவருக்கு இல்லவே இல்லை. நேரு போன்ற இந்தியத் தலைவர்களின் சமயச் சார்பின்மையில் அவர் நம்பிக்கை கொண்டிருந்தார். அவரது நம்பிக்கைக்கு அவர்கள் இரண்டகம் செய்தார்கள் என்பதே வரலாறு.

இணைவது இந்தியாவுடன் என்றாலும் சரி, பாகிஸ்தானுடன் என்றாலும் சரி, முடியாட்சி மிஞ்சாது என்பது மகாராஜா அரிசிங்குக்குத் தெரியும். நெடுநாள் தனித்து நீடிக்கவும் இயலாது. மக்களின் எதிர்ப்பும் வலுத்து வந்தது. இந்துத்துவ ஆற்றல்கள் தவிர மன்னரை ஆதரிப்பார் யாருமில்லை. எனவே பாகிஸ்தானுடன் இணையும் பேச்சுக்கே இடமில்லை. இந்தியாவுடன் இணைவதிலும் காஷ்மீர் மக்களுக்கு விருப்பமில்லை. காஷ்மீர் மக்களுக்கு அன்று முதல் இன்று வரை முதற்பெரும் தேர்வு ஆசாதி எனப்படும் விடுதலைதான்.

1947 செப்டம்பர் 29ஆம் நாள் ஷேக் அப்துல்லா சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். அடுத்த சில நாளில் அறிவித்தார்:

“ஜம்மு-காஷ்மீரில் வாழும் நாற்பது லட்சம் மக்களைப் புறந்தள்ளி பாகிஸ்தானுடனோ இந்தியாவுடனோ இணைவதாக அரசு அறிவிக்குமானால் நான் புரட்சிக் கொடி உயர்த்துவேன். எங்கள் சுதந்திரக் கோரிக்கை எங்கு அங்கீகரிக்கப்படுகிறதோ அந்த அரசுடன் நாங்கள் இணைய விரும்புவதே இயல்பு.”

இந்திய இணைப்புக்கு மன்னர் அரிசிங் ஊசலாடிக் கொண்டிருந்தபோது அவரை இணங்க வைக்க நேரு அரசு துணைப்பிரதமர் வல்லபாய் படேலை ஆர்எஸ்எஸ் தலைவர் கோல்வால்கரிடம் அனுப்பியது. கோல்வால்கர் 1947 அக்டோபரில் அரிசிங்கைப் போய்ப் பார்த்து இணைப்புக்கு உடன்பட வைத்தார்.

அரிசிங் இந்திய இணைப்புக்கு உடன்படப் போவதை அறிந்த பாகிஸ்தான் காஷ்மீரின் வடமேற்குப் பழங்குடிகளின் படையெடுப்புக்கு ஆதரவளித்தது. அல்லது அதுவே அப்படையெடுப்பைத் தூண்டி நடத்தியிருக்கலாம். மிரட்சியுற்ற அரிசிங் இந்தியாவிடம் ராணுவ உதவி கேட்டார். உடனடியாக இணைப்பு ஒப்பந்தத்தில் ஒப்பமிட வேண்டும் என்ற நிபந்தனையோடு இந்தியப் படை காஷ்மீரத்தில் நுழைந்தது. அன்று நுழைந்ததுதான் இன்று வரை வெளியேறவில்லை.

1947 அச்டோபர் 26ஆம் நாள் இடைக்கால அரசு அமைக்கும்படி ஷேக் அப்துல்லா கேட்டுக் கொள்ளப்பட்டார். அதே நாளில் அரிசிங் இணைப்பு ஒப்பந்தத்தில் ஒப்பமிட்டார். அடுத்த நாளே இந்தியப் படை காஷ்மீருக்குள் அனுப்பி வைக்கப்பட்டது. மூன்று நாள் கழித்து நெருக்கடிக்கால ஆட்சித் தலைவராக ஷேக் அமர்த்தப்பட்டார்.

இந்திய இணைப்புக்கு எதிராக காஷ்மீர் மக்கள் கிளர்ந்தெழுந்தார்கள். அரிசிங் ஓடிப்போனார். இந்தியாவுடன் காஷ்மீரை இணைக்கும் ஒப்பந்தத்தைத் தப்பியோடும் மன்னர் ஒப்பமிட்ட ஒப்பந்தம் என்று வரலாறு சொல்வது இதனால்தான்.

காஷ்மீர் இந்தியாவின் பிரிக்கவொண்ணாப் பகுதி என்று அறுதியிட்டுச் சொல்வோர் எல்லாம் அதற்கு இந்த ஒப்பந்தத்தைத்தான் சான்றாகக் காட்டுகின்றார்கள். மன்னர் விரும்பிப் போட்டாரோ, வேறு வழியின்றி நெருக்கடியில் போட்டாரோ அவரது ஒப்பத்தைக் காட்டி மக்களை என்றென்றும் அடிமைப்படுத்தி வைத்திருப்பது ஜனநாயகத்துக்கு முரணல்லவா?

அரிசிங் கையொப்பமிட்ட இணைப்பு ஒப்பந்தம் தவிர காஷ்மீர் இந்தியாவின் பகுதி என்பதற்கு வேறு சான்று இருந்தால் சொல்லுங்கள்.

ஏரண முறையில் பார்த்தால் இந்தியா வேறு, காஷ்மீர் வேறு என்று இருந்ததால்தானே இணைப்பு ஒப்பந்தம் என்ற ஒன்றே தேவைப்பட்டது. இந்த இணைப்பு ஒப்பந்தமே காஷ்மீர் இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதியல்ல என்பதைத்தான் காட்டும்.

இணைப்பை ஒட்டி காஷ்மீர் மக்களுக்கு இந்திய அரசு கொடுத்த உறுதிமொழி: இந்தியாவுடன் காஷ்மீர் இணைப்பு இறுதியானதன்று, இந்த இணைப்பு குறித்து பொதுவாக்கெடுப்பு நடத்தி காஷ்மீர் மக்களின் விருப்பமறிந்தே இறுதி முடிவெடுக்கப்படும் என்பதே. .

1948 ஜனவரி முதல் நாள் காஷ்மீர் தொடர்பான பூசலை ஐக்கிய நாடுகள் அமைப்புக்கு இந்தியாவே எடுத்துச் சென்றது. போர்நிறுத்தம், துருப்புகளை விலக்கிக் கொள்ளுதல், காஷ்மீர் ம்க்களிடையே வாக்கெடுப்பு நடத்தி காஷ்மீரின் வருங்காலத்தைத் தீர்வு செய்தல் என்ற அடிப்படையில் ஐநா பாதுகாப்பு மன்றத்தில் தீர்மானம் இயற்றப்பட்டது. வாக்கெடுப்பு நடத்துவதற்கான ஐநா ஆணையமும் அமைக்கப்பட்டது.

காஷ்மீர் இந்தியாவின் பிரிக்கவொண்ணாப் பகுதி என்றால் இந்திய அரசு ஐநாவுக்குச் சென்றது ஏன்? வாக்கெடுப்பு நடத்த ஒப்புக்கொண்டது ஏன்?

காஷ்மீர் இந்தியாவின் பிரிக்கவொண்ணாப் பகுதி என்பது வரலாற்று உண்மையும் அல்ல, அரசியல் நீதியும் அல்ல. காஷ்மீர்மீதான இந்தியாவின் உரிமை என்பது திருட்டுப் பொருள்மீது திருடனுக்குள்ள உரிமையே தவிர வேறல்ல.

இணைப்புக்குப் பின் இத்தனை ஆண்டுகள் கழித்தும் காஷ்மீர் மக்கள் இந்தியாவிடமிருந்து  அயன்மைப்பட்டிருப்பதை இந்திய அரசாலேயே மறுக்க இயலவில்லை. காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதையும் சிறைக்கூடமாக மாற்றித்தான் காஷ்மீரை இந்தியாவுக்குள் வைத்திருக்க முடியுமென்றால், காஷ்மீர் இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதி என்று சொல்வதுபோல் கொடுமை வேறு என்ன?

 

https://uyirmmai.com/article/காஷ்மீர்-யாருக்கு/

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.