Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கு ஆளுநரின் முன்னாலுள்ள சவால்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு ஆளுநரின் முன்னாலுள்ள சவால்கள்

-லக்ஸ்மன்

கிழக்கு மாகாணத்தில், பெரும்பான்மையாகத் தமிழ் மக்கள் வாழும் நிலையில், கிழக்கு மாகாணத்தின் ஆளுநராகத் தமிழர் ஒருவரை நியமிக்க, ஜனாதிபதி முன்வரவேண்டும்; இன ஐக்கியத்தின் வெளிப்பாடாக, சிறுபான்மை இனங்களுக்குத் தமது அரசாங்கத்தில் பங்குகளைக் கொடுத்து, அவர்களையும் இணைத்துக் கொண்டு, அவர்களுக்கும் அதிகாரப் பரவலாக்கம் செய்யக்கூடிய வாய்ப்புகளை ஜனாதிபதி வழங்க வேண்டும்; அதன் ஊடாகவே சிறுபான்மையினர் உடனான நல்லிணக்கத்தை வெற்றிபெற  வைக்க முடியும் என்ற கோசங்கள் வலுத்த நிலையில் தான், தேசிய கீதம் தொடர்பான இடறல்கள் ஏற்பட்டுள்ளன.  

இலங்கையில் 13ஆவது திருத்தச்சட்டம் ஊடாக, மாகாண சபை முறைமை அமுல்படுத்தப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆயினும், இந்திய அரசாங்கத்தின் அழுத்தம் காரணமாக, 1988ஆம் ஆண்டு அமுலுக்கு வந்து, 1988ஆம் ஆண்டு, வடகிழக்கு மாகாண சபை உருவானது.   

அதன் பின்னர், வடகிழக்கு மாகாணம், வடக்காகவும் கிழக்காகவும் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. பின்னர் கிழக்கு மாகாண சபைக்கு 2008இலும் 2012இலும் தேர்தல்கள் நடைபெற்று, கிழக்கில் மாகாண சபை இயங்கியது. 2013இல் வட மாகாண சபையின் தேர்தலும் நடைபெற்று, அதுவும் தனியாக இயங்கியது.  

அரசமைப்பின் 13ஆவது திருத்தம், தமிழர்களின் நலனுக்காகவே உருவாக்கப்பட்டது என்ற வகையில், மற்றைய மாகாணங்களைப் பற்றி, இப் பத்தியில் அலசத் தேவையில்லை. ஆனால், அவை மாகாண சபைச் சட்டத்தின் மூலம் கிடைக்கின்ற வரப்பிரசாதங்களை அனுபவிக்கின்றன. அது வேறு கதை.   

கிழக்கில் மூன்று தடவைகளும் வடக்கில் இரண்டு தடவைகளும் மாகாண சபை இயங்கியிருக்கிறது. ஆனால், விளைந்த பயன் என்ன?   

மக்கள் பிரதிநிதிகளாக இருப்பவர்கள், எதைத்தான் சாதித்து விட்டார்கள்? வட கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் வரதராஜபெருமாள், தமிழீழத்தைப் பிரகடனம் செய்துவிட்டு, நாட்டைவிட்டுச் சென்று, இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்.   

வடமாகாணத்தின் முதலமைச்சராக இருந்த, ஓய்வு பெற்ற நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன், அரசாங்கத்தைக் குறை கூறியே, தன்னுடைய காலத்தை முடித்துவிட்டார்.   

அதேபோன்று, நாடே வேண்டாம் என்று ஓடிப் போன வரதர், மீண்டும் வந்து முதலைக் கண்ணீர் அரசியல் செய்து கொண்டிருக்கிறார். இது யார் கொடுக்கும் துணிச்சலில் நடக்கிறது என்பது, உள்ளங்கை நெல்லிக்கனி.   

அந்த அடிப்படையில், 1988ஆம் ஆண்டு முதல், மாகாண சபை முறைமையை முதற்படியாக அமுல்படுத்துவதற்கான செயற்பாடுகளில், தொடக்கப் புள்ளி நடந்து விட்டது. இப்போது நடைபெறுபவை எல்லாம் தொடர் புள்ளி என்பது தான் உண்மை.   

இருந்தாலும், 13ஆவது திருத்தச்சட்டத்தை, முறைப்படியாக அமுல்படுத்தத் தவறுவதால், தமிழ்த் தலைமைகள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை என்ற கருத்தே, தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. அதன்படியே, 13ஐ முழுமையாக அமுல்படுத்த, இந்திய அரசாங்கத்துடனும் இலங்கை அரசாங்கத்துடனும் தமிழ்த் தலைமைகள், பேச்சு வார்த்தையில் ஈடுபட வேண்டும் என்ற கோரிக்கை, தற்போது முன்வைக்கப்பட்டும் வருகிறது.   

தற்போது உருவாகியுள்ள நல்ல சந்தர்ப்ப சூழ்நிலையை, சரியாகப் பயன்படுத்திக் கொண்டு, தமிழ் மக்களுக்கான உரிமைகளை வென்றெடுக்க வழி செய்ய வேண்டும் என்ற அடிப்படையிலேயே இக்கோரிக்கை வலுத்துவருவதை உணரக் கூடியதாக உள்ளது.  

தமிழ் மக்களுக்குத் தேவையான அதிகாரப் பங்கீட்டை, மாகாண சபை முறைமையில் விவரிக்கப்பட்டவாறும்,  ஏற்கெனவே அமுல்படுத்தப்பட்டுள்ளதுமான விடயங்கள், அமுல்படுத்தப்படாத விடயங்கள் அனைத்தையும் அலசி ஆராய்ந்து, இனிவரும் மாகாண சபை ஆட்சிக்காலத்தில், முதலமைச்சர், அமைச்சர்கள், உறுப்பினர்கள் அனைவரும் முன்னுதாரணமாகச் செயற்பட வேண்டும் என்பதுதான் அதன் உட்பொருள் ஆகும்.  

இந்நிலையில்தான், 52சதவீதம் பெண்கள் வாழுகின்ற கிழக்கு மாகாணத்தில், மாகாண ஆளுநர் அநுராத யஹம்பத்தின் முன், இனவாதம் இல்லாத, ஊழல்மோசடியற்ற, மூவினங்களையும் அனைத்து மதங்களையும் சேர்ந்த மக்களை இணைத்துக் கொண்டு, ஏற்றத்தாழ்வின்றிச் சரியான முறையில் வழிநடத்துதல் என்ற பணிகள் குவிந்துள்ளன.  

கிழக்கு மாகாணம், மூவீன மக்களும் குறிப்பாக, 40சதவீதம் தமிழர்கள், 37சதவீதம் முஸ்லிம்கள், 23சதவீதம் சிங்களவர்கள் வாழும் பிரதேசமாக உள்ளது. இம்மாகாணத்தில், பல அரசியல் கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்கள், தவிசாளர்கள், ஏனைய உள்ளூராட்சி நிறுவனங்களின் மக்கள் பிரதிநிதிகள் எனப் பலரும் இருக்கிறார்கள்.   

இருந்தாலும், ஒரு சில மக்கள் பிரதிநிதிகள், இனரீதியாகவும் மதரீதியாகவும் பிரதேச ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் தங்களது செயற்பாடுகள் காரணமாக, வீணான முரண்பாடுகளை இனங்களுக்குள் ஏற்படுத்துகின்றார்கள். குறிப்பாக, அபிவிருத்தி வேலைத் திட்டங்களில், மூன்று சமூகங்களுக்கு மத்தியில் ஏற்றத்தாழ்வுகள் அறிந்தோ அறியாமலோ உருவாக்கப்பட்டுள்ளன.   

எனவே, கிழக்கு ஆளுநரின் முதற்பணி, எதிர்காலத்தில் இனங்களுக்கிடையில் ஒற்றுமையையும் ஐக்கியத்தையும் நிலைநாட்டுவதுடன் இனமத பேதமின்றி செயற்படுவதற்கும் வகை செய்வதுடன் முன்னுதாரணமாகச் செயற்பட வேண்டும்.   

1989, 2008, 2012ஆம் ஆண்டுகளில், மூன்று தடவைகள் கிழக்கு மாகாண சபை இயக்கம் பெற்றிருக்கிறது. அவ்வேளைகளில், பலர் ஆளுநர்களாக இருந்தார்கள். ஆதனால், ‘இப்போது இவர் என்ன, புதிதாகச் செய்துவிடப் போகிறார்’ என்ற சலிப்பிருந்தாலும், மக்களின் நலன் கருதியே முயற்சிகள் நடைபெறுகின்றன என்ற அடிப்படையில், அரசியல் தலைவர்கள் ஒத்துழைத்து, முயற்சிக்கத்தான் வேண்டும்.   

அந்த ஒழுங்கில், ஆளுநர் முன்னுள்ள பணிகளாக, மாகாண சபையில் நிதி ஒதுக்கீடுகளின் போது, கிழக்கு மாகாணத்தின் மக்கள் தொகையின் விகிதாசாரத்தின் அடிப்படையிலும் வறுமை, யுத்தப் பாதிப்பு போன்ற அம்சங்களும் கவனிக்கப்படுதல் முக்கியத்துவம் பெறுகின்றன.   

அடுத்து, மாகாண நிர்வாகத்துக்குக் கீழுள்ள குறிப்பாக, முன்னேற்றகரமாகவும் செயற்றிறனுடனும் செயற்படுகின்ற வைத்தியசாலைகள், பாடசாலைகள் போன்ற நிறுவனங்களை, மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு செல்வதற்கான அனுமதியை வழங்கக் கூடாது.   

பொருளாதார முதலீடு எனக் கூறிக்கொண்டு, கிழக்கு மாகாணத்திலுள்ள காணி, இயற்கைவளம், ஏனைய வளங்களைப் பிற மாகாணத்தில் உள்ளவர்களுக்கு வழங்குவது தொடர்பாகப் பரிசீலனை செய்ய வேண்டும்.   

நீண்டகாலமாக, கால்நடைகளின் மேச்சல் தரை தொடர்பாகப் பல பிரச்சினைகளைக் கால்நடைப் பண்ணையாளர்கள் எதிர்நோக்குகின்றனர். அவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளூராட்சி சபைகளின் கீளுள்ள, வருமானம் குறைந்த சபைகளை இனம் கண்டு, விசேட நிதி ஒதுக்கீடு செய்தல் வேண்டும்.   

தொடர்ந்தும், குறைபாடுகள் முன்வைக்கப்படுகின்ற மாகாண சபையின் கீழுள்ள பாலர் பாடசாலை கல்விப் பணியகம், வீடமைப்பு அதிகார சபை, சுற்றுலாத்துறைப் பணியகம், தனியார் போக்குவரத்துச் சபை, கூட்டுறவு அபிவிருத்திச் சபை போன்ற சபைகளில் நியமனங்கள், நிதி ஒதுக்கீடுகள் செய்யும் போது, திறமை, இன விகிதாசாரம், பிரதேசம் போன்றவற்றின் அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.   

குறிப்பாக, இதில் 2018, 2019ஆண்டுகளில் நிதி ஒதுக்கீட்டில் இடம்பெற்ற பாரபட்சம் விசாரிக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உதாரணமாக, பாலர்பாடசாலை கல்விப் பணியகத்துக்கான நிர்வாகிகள் தெரிவின்போது, கல்விமான்களைக் கொண்டு நிரப்படாமல், கட்சி சார்பானவர்களையும் முழுநேர அரசியல்வாதிகளையும் கொண்டு பதவிகள் வழங்கப்பட்டு உள்ளதால், பாலர் பாடசாலை அரசியல் ரீதியாகவும் மத ரீதியாகவும் பிரிக்கப்படுகின்ற சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றன.  

image_8be6f5563c.jpg

அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் பட்டப் படிப்பை முடித்து, வருடா வருடம் வெளியேறும் பட்டதாரிகளையும் டிப்ளோமாதாரிகளையும் பயிற்சி அடிப்படையிலும் நிரந்தர நியமன அடிப்படையிலும் உள்வாங்கி, நியமனங்கள் வழங்கச் செயற்றிட்டங்கள் உருவாக்கப்பட்டு, அமுல்படுத்தப்படுதல் வேண்டும்.   

மாகாண சபைக்குச் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்களின் நியமனங்கள், இடமாற்றம், புதிய நியமனம், பதவி உயர்வு, நிதி ஓதுக்கீடு போன்றவற்றிலும் முறைகேடுகள் ஏற்படா வண்ணம், பொதுவான கொள்கைகளை அமுல்படுத்துதல் வேண்டும்.  

சேவை மூப்பு அடிப்படையில், மாகாண அமைச்சின் செயலாளர்கள், பதவிநிலை உத்தியோகத்தர்களின் நியமனங்கள் மேற்கொள்ளப்படுவதுடன், இதுவரை இடம்பெற்ற நியமனங்கள், மீள்பரிசீலனை செய்யப்படல் வேண்டும். (ஐந்து வருடங்களுக்கு மேல், ஒரே பதவியில் இருப்போர், அரச இடமாற்றக் கொள்கையின் அடிப்படையில், இடமாற்றப்படல் வேண்டும்.)   

மட்டக்களப்பு மாவட்டத்தில், கடந்த காலங்களில் சுமார் 25 வருடங்களுக்கு மேலாக, காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி போன்ற பகுதிகளூடாகத் தெரிவு செய்யப்பட்ட முஸ்லிம் அமைச்சர்கள், மத்திய அரசாங்கம் ஊடாகத் தமிழ்ப் பிரதேசங்களுக்கு நிதி ஒதுக்கீடுகளைச் செய்யும்போது, பாராபட்சமாகவே செயற்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டுக்கள் பல உள்ளன. 74சதவீதம் தமிழர்கள் உள்ள இம்மாவட்டத்தில் இது ஏற்புடையதல்ல. இதனால் இனமுரண்பாடுகள் ஏற்பட்டன.   

மாகாண வரவு செலவுத் திட்டம், விசேட நிதி ஒதுக்கீடு, வெளிநாட்டு நிதி ஒதுக்கீடு, பின்தங்கிய பிரதேசங்களுக்கான அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் போன்ற நிதி ஓதுக்கீடுகளின் போது, இனவிகிதாசாரம், வறுமை, நிலப்பரப்பு அடிப்படையிலேயே நிதி ஒதுக்கீடு செய்ய ஆவன செய்ய வேண்டும்.  

தேசியக் கொள்கைகளை புறந்தள்ளிவிட்டு, முஸ்லிம் பிரதேசங்களை உள்ளடக்கி, முஸ்லிம் கல்வி வலயம், உள்ளூராட்சி சபை, பிரதேச செயலகங்கள் உருவாக்கப்படுகின்ற நிலையில், கல்முனை பிரதேசத்திலுள்ள தமிழ்ப் பாடசாலைகளை உள்ளடக்கி, புதிய கல்வி வலயங்களை உருவாக்குவதோடு, கல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்துக்கு நிதி, காணி அதிகாரங்களை அமுல்படுத்துவதற்கு வர்த்தமானி பிரகடனம் வெளியிடப்பட வேண்டும்.  

உள்ளூராட்சி சபைகள் உருவாக்குதல் தொடர்பாக, மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரான், வாகரை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட காணிகளை, முஸ்லிம் பகுதிகளுக்கு மாற்றுவதற்காக, கிரான் பிரதேச செயலகத்துக்குத் தனியான பிரதேச சபை வழங்க, முஸ்லிம் அமைச்சர்களால் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை நிவர்த்தி செய்ய, கிரான் பிரதேச செயலகத்துக்குப் பிரதேச சபை உருவாக்கப்பட வேண்டும்.  

மத்திய அரசாங்கத்தின் சுகாதார அமைச்சரும், மாகாணத்திலுள்ள சுகாதார அமைச்சரும் ஒன்று சேர்ந்து, முஸ்லிம் பிரதேசத்திலுள்ள மாகாண சபையின் கீழிருந்த வைத்தியசாலைகளை, முறைகேடாகத் தரம் உயர்த்தியதோடு, ஆளணி அனுமதியும் பெற்று, அமைச்சின் நிதி, வெளிநாட்டு நிதி, நிறுவனங்களின் நிதி போன்றவற்றின் நிதியை, ஒருபக்கச் சார்பாக, நடந்துகொண்டமை தொடர்பான குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகின்றது. இது எதிர்காலத்திலேனும் சரி செய்யப்படுதல் சிறப்பாகும்.   

மத்திய அமைச்சுகளால் கிழக்கு மாகாணத்துக்கு ஒதுக்கப்படும் நிதிகள், இனவிகிதாசார அடிப்படையில் ஒதுக்கப்படல் வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, நகர அபிவிருத்தி அமைச்சு, கைத்தொழில் அமைச்சு, சுற்றுலாத்துறை அமைச்சு, சுகாதார அமைச்சு என நீண்டு கொண்டே செல்கிறது.   

அதேவேளையில், செயலாளர், சிரேஷ்ட உதவிச்செயலாளர், நிர்வாக உத்தியோகத்தர் அனைவரும், முஸ்லிம் அதிகாரிகளாக உள்ளமை காரணமாக, கிழக்கின் முதலமைச்சால் தமிழ் உள்ளூராட்சி சபைகளுக்கான நிதி ஒதுக்கீடு, புதிய நியமனங்கள் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன என்பதும் இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டும்.   

தமிழ்மொழி நாட்டின் ஆட்சி மொழியாக இருந்த போதும் வடக்கு, கிழக்கில் அமுலாக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு பெரும் குற்றச்சாட்டாக இருக்கிறது. அதேநேரத்தில், மகாவலிக்குரிய காணிகளின் பங்கீடு, புதிய கல்வி வலயம், மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு ஊடாக நியமனங்கள் வழங்குதல் எனப் பலவும் கிழக்கின் ஆளுநரை நெருக்கும் விடயங்களாக இருக்கின்றன.   

அரசியல் ரீதியான விடயங்களுக்கு அப்பால், அடிப்படைப் பிரச்சினைகள், உட்கட்டமைப்பு வசதிகள், விசேட தேவைகள் பூர்த்தி செய்யப்படுதல் போன்றவையும் முதலும் முக்கியமானவையுமாகும்.   

இணக்கப்பாட்டு அரசியலை, எந்தவித இனவாதமும் இல்லாமல், மூன்று இனங்களும் ஐக்கியமாக வாழ்வதற்கான சூழ்நிலையை உருவாக்குவது ஜனாதிபதியைப் போன்று, ஆளுநருக்கும் பொறுப்பளிக்கப்பட்ட கடமையாகும். இந்தவகையில் இதற்கான செயற்பாடுகளுக்கான முன்னெடுப்புகள் நடைபெறுமா? பொறுத்திருப்போம்.     

‘தமிழர்களை ஓரங்கட்ட வேண்டாம்’

 “ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய அரசாங்கம், ஏற்படுத்தும் மாற்றங்களை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத விதத்தில் அமைந்துள்ளன. இதுவரை காலமாகத் தமிழ் மக்கள் உணர்ந்து வந்த அடக்குமுறைகளை, மேலும் பலப்படுத்தும் வகையில் இந்த அரசு செயற்பட்டு வருகின்றது. தமிழ் மொழியில் தேசிய கீதம் பாட வேண்டாம் எனவும் கோட்டாபய அரசாங்கம் கூறுவதானது, மீண்டும் இந்த நாட்டில் இனங்களுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்த, இந்த அரசாங்கமே வித்திடுவதாக அமையும்” என மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.   

புதிய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பாக அவர் தொடர்ந்து கூறுகையில், “வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பிரதேசத்தில் நடைபெற்ற சுனாமி நினைவேந்தல் நிகழ்வுகளில், கலந்து கொண்டிருந்தேன். அந்நிகழ்வில், தேசிய கீதம் சிங்கள மொழியில் மாத்திரமே பாடப்பட்டது. நிகழ்வில் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியும் இருந்தார். இதுவரை காலமாகத் தமிழில் பாடப்பட்ட தேசிய கீதம், இப்போது நிறுத்தப்பட்டுள்ளது. இன்று தமிழ் மக்கள் முழுமையாகப் புறக்கணிக்கப்படும் விதத்தில், இந்த அரசு செயற்படுகின்றது. இதை, யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி முன்னிலையில் கூறியிருந்தேன்”   

“நாம் கடந்த காலங்களில் நல்லிணக்கம் உருவாக்கப்பட வேண்டும்; தேசிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் மிகவும் பொறுமையாகச் செயற்பட்டு, பேச்சுகள் மூலமாக, நிலைமைகளைச் சுமுகமாகக் கையாண்டு வந்தோம். ஆனால், இன்று அரசாங்கம் தமிழ் மக்களை இலக்கு வைத்து முன்னெடுக்கும் செயற்பாடுகள், தமிழ் மக்களைப் பொறுமை இழக்க வைக்கும் விதத்தில் அமைகின்றது. ‘இந்த நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்த போதிலும் தமிழ் மக்களுக்கு இன்னமும் சுதந்திரம் கிடைக்கவில்லை’ என்று தந்தை செல்வா ஒருமுறை கூறினார். அதை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், இந்த அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது. இந்த நாட்டில் பிளவுகள் ஏற்பட வேறு யாரும் காரணம் அல்ல. அரசாங்கமே இவை அனைத்துக்கும் பொறுப்புக்கூற வேண்டும்”   

“ஒருவேளை, வருகின்ற சுதந்திர தினத்தன்று, தமிழ் மொழியில் தேசிய கீதம் பாட வேண்டாம் என அரசாங்கம் கூறுமானால், அன்றில் இருந்து இந்த நாட்டில், இன முரண்பாடுகள், பிளவுகள் பலமடையும் என்பதை, ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் கூறிக்கொள்ள விரும்புகின்றோம். இதற்காகத் தமிழ் மக்களும் தமிழ் பேசும் முஸ்லிம் மக்களும் மலையக மக்களும் ஒன்றாக அணி திரள வேண்டிய நிலை காணப்படுகின்றது. இந்த விடயமானது புதிதல்ல; தனிச் சிங்களச் சட்டம் கொண்டு வரப்பட்டபோது எதிர்த்திருந்தோம். அவ்வாறான நிலையே இன்று தோற்றுவிக்கப்படுகிறது.   

தமிழ் இனத்துக்கு விரோதமாக இந்த அரசாங்கம் எடுக்கின்ற நடவடிக்கைகளுக்கு எதிராக, மக்களை அணிதிரட்டுவதற்கு எமது கட்சியின் இளைஞர்கள், தொண்டர்கள் தயாராக வேண்டும்.  
எதிர்பார்த்தது போல, தனது குடும்பத்தைப் போர்க்குற்றங்களில் இருந்து பாதுகாப்பதற்காக பலவிடயங்களை கோட்டாபய அரசாங்கம் தற்போது செய்து கொண்டிருக்கின்றது; பல கைதுகள் இடம் பெற்றுக்கொண்டிருக்கின்றன.”   

“இந்த நாட்டில், எப்போது என்ன நடக்கும் என்று தெரியாத ஒரு குழப்பமான நிலை உருவாக்கப்படுகிறது. வருகின்ற தேர்தலுக்குப் பிறகு என்ன செய்வார்கள், எப்படி அவர்களது அரசை நடத்துவார்கள் என்பது பெரும் கேள்வியாகவே இருக்கிறது” என அவர் மேலும் தெரிவித்தார்.    

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கிழக்கு-ஆளுநரின்-முன்னாலுள்ள-சவால்கள்/91-243233

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.