Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் அரசியலில் பாலின வன்மம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் அரசியலில் பாலின வன்மம்

என்.கே. அஷோக்பரன்   / 2020 மார்ச் 16

இலங்கை சனத்தொகையில், 2017ஆம் ஆண்டு தொகைமதிப்பு புள்ளிவிவரத் திணைக்களத்தின் அனுமானத்தின்படி, 51.6 சதவீதமானோர் பெண்களாவர். அதேவேளை, 2016/2017 புள்ளிவிவரங்களின்படி, இலங்கைப் பல்கலைக்கழகங்களில் இளமாணிப் பட்டப்படிப்புக்கு அனுமதி பெற்றுக்கொண்டவர்களில் 60.9 சதவீதமானோர் பெண்கள்; இளமாணிக் கற்கைகளுக்காகப் பல்கலைக்கழகங்களில் இணைந்துகொண்டவர்களில் 62.3 சதவீதமானோர் பெண்களாவர்.   

மேலும், இதே ஆண்டு, இளமாணிப் பட்டம் பெற்றுக்கொண்டோரில், 63.1 சதவீதமானோர் பெண்கள். இதே ஆண்டு, இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களில் முதுமாணிப் பட்டப்படிப்புக்கு அனுமதி பெற்றுக்கொண்டோரில் 54.9 சதவீதமானோர் பெண்கள்; முதுமாணிக் கற்கையில் இணைந்துகொண்டவர்களில் 50.2 சதவீதமானோர் பெண்கள் ஆவார்.   

தொகைமதிப்பு புள்ளிவிவரத் திணைக்களத்தின் 2014 ஆண்டின் கணிப்பீட்டின்படி, இலங்கையின் தொழிற்படையில், க.பொ.த உயர்தரம், அதற்கு மேலான கல்வித் தகைமை கொண்டவர்களில், ஆண்கள் வெறும் 14.8 சதவீதமாகவும் பெண்கள் 28 சதவீதமாகவும் இருக்கிறார்கள்; ஏறத்தாழ இரண்டு மடங்கு.   

ஆனால், அரசியலைப் பொறுத்தவரையில், இலங்கை நாடாளுமன்றத்தில் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் வெறுமனே 13 உறுப்பினர்களே, அதாவது 5.7 சதவீதமானவர்களே பெண்களாவர்.  

உலகின் முதலாவது பெண் பிரதமரான சிறிமாவோ பண்டாரநாயக்க, இலங்கையின் முதலாவது நிறைவேற்றதிகாரம் கொண்ட பெண் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க எனப் பெண் அரசியல் தலைமைத்துவத்தின் பெருமையைச் சொல்லிக் கொள்ளும் இலங்கை, நாடாளுமன்றத்தில், ஒட்டுமொத்த நாடாளுமன்ற வரலாற்றிலும் பெண் பிரதிநிதிகளின் எண்ணிக்கை 6.5 சதவீதத்தைத் தாண்டியதில்லை.   

1978ஆம் ஆண்டிலிருந்து, ஆகக்கூடிய பெண் பிரதிநிதித்துவ விகிதாசாரம் 5.7 சதவீதம் என்பது, வெட்கக் கேடானது மட்டுமல்ல, மிகுந்த மனவருத்தத்துக்கும் உரியது.   

ஆனால், மறுபுறத்தில், அரசியல் பதவியைப் பெற முடிந்த பெண்களில் பெரும்பாலானோர், அரசியல் குடும்பங்களிலிருந்து வந்தவர்கள் என்பதும், அரசியல்வாதியாக இருந்த கணவர், தந்தையின் படுகொலை, மரணத்தின் விளைவாக அல்லது அவர்களால் போட்டியிட முடியாத சூழல் ஏற்படும் பட்சத்தில், அரசியலுக்கு வந்து, அந்த வெற்றிடத்தை நிரப்பிக்கொண்டவர்களாவர். இலங்கை அரசியலில், பெண்களின் வகிபாகம் பற்றிய பல ஆய்வுகளின் நிமித்தம், இந்தப் போக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.   

இது, இலங்கையில் அரசியல் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இரண்டு பெண்கள் முதல், இன்று வரை நாம் அவதானிக்கக் கூடிய ஒரு விடயமாக இருக்கின்றது.   

இலங்கையின் சட்டவாக்கச் சபையில் நியமன உறுப்பினராக இருந்த ஜே. எச். மீதெனிய அதிகாரி இறந்தபின், 1931இல் டொனமூர் அரசாங்க சபைக்கான தேர்தலில், அவரது ஆசனத்துக்கு, அவரது மகள் அடிலீன் மொலமுரே போட்டியிட்டு வெற்றிபெற்றார்.   

1931இல், அதே டொனமூர் அரசாங்க சபையில், கொழும்பு வடக்கு ஆசனத்தை வென்ற சேர். இரட்ணசோதி சரவணமுத்து, நீதிமன்றத்தால் தேர்தல் முறைகேடு தொடர்பில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட பின்னர், அந்த ஆசனத்துக்காக இடம்பெற்ற இடைத்தேர்தலில், அவரது மனைவி, லுயிசா நேசம் சரணவணமுத்து போட்டியிட்டு வெற்றி பெற்றார்.  

இந்தப் பாணிக்கு, சிறிமாவும் சந்திரிகாவும் கூட விதிவிலக்கல்ல; தனது கணவர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க கொலை செய்யப்பட்ட பின்னர், அவரின் வெற்றிடத்தை நிரப்ப அரசியலுக்குள் நுழைந்த சிறிமாவோ, பலராலும் ‘அழுகின்ற விதவை’ (weeping widow) என்றே விளிக்கப்பட்டார்.   

சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, கொல்லப்பட்ட தந்தையின் மகளாகவும் கொல்லப்பட்ட கணவரின் மனைவியாகவும் கூடத் தன்னை முன்னிறுத்திக் கொண்டார்.   

கிட்டத்தட்ட, தனது கணவனின், அல்லது தந்தையின் இறந்த உடலின் மீது நின்று, அரசியலுக்கு வரும் இந்தப் பாணி, இலங்கையில் மட்டுமல்ல, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் எனத் தெற்காசியாவில், பொதுவாகக் காணக்கூடியதோர் அம்சமாகவே இருக்கிறது.   

இன்றைய தினத்தில், பெண்களின் அரசியல் வகிபாகம் அதிகரிக்க வேண்டும் என்று, கோரிக்கை விடுக்கும் ஹிருணிக்கா பிரேமசந்திர வரை, இந்தப் பாணி தொடர்கிறது.  

ஆனால், இதைக் குறிப்பிடுவதால், இந்தப் பாணிக்கு மாற்றாகப் பெண்கள் அரசியலில் ஈடுபடுவதில்லை என்று, அர்த்தப்படுத்தி விட முடியாது. இலங்கை அரசியல் பரப்பில், குறிப்பாக, இடதுசாரி அரசியலில், எதுவித பின்புலம் மற்றும் ஆதரவின்றித் தனித்துவமான அரசியலில் ஈடுபட்ட பல பெண்கள் இருந்திருக்கிறார்கள்; இருந்து கொண்டிருக்கிறார்கள். நிற்க!  

தமிழ் அரசியலைப் பொறுத்தவரையில், லுயிசா நேசம் சரவணமுத்துவுக்குப் பிறகு, இன்னொரு தமிழ்ப் பெண் நாடாளுமன்றம் ஏகுவதற்கு, ஏறத்தாழ நான்கு தசாப்த காலம் தேவைப்பட்டது. 

1977ஆம் ஆண்டுத் தேர்தலில், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி சார்பான வேட்பாளராக, பொத்துவில் தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மயில்வாகனம் கனகரட்ணம், பின்னர் ஜே.ஆர். தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தோடு இணைந்து கொண்டார். 

இவர் மீது, 1978ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் திகதி, துப்பாக்கிச்சூட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதலில் ஏற்பட்ட காயங்களிலிருந்து, மிக நீண்டகாலம் முழுமையாகக் குணமாக முடியாது தவித்த அவர், 1980ஆம் ஆண்டு ஏப்ரலில் காலமானார். 

இவரது இடத்துக்கு, இவரது சகோதரியான ரங்கநாயகி பத்மநாதன் நியமனம் பெற்ற போது, இவரே லுயிசா நேசம் சரவணமுத்துவுக்குப்  பிறகு, நாடாளுமன்றம் ஏகிய அடுத்த தமிழ்ப் பெண்மணியானார். 

இன்று நாடாளுமன்றத்தில் உள்ள 13 பெண் உறுப்பினர்களில், வெறும் இரண்டு பேர் மட்டுமே தமிழர்கள். ஒருவர், மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரனின் மனைவியான விஜயகலா மகேஸ்வரன்; மற்றையவர், தமிழரசுக் கட்சியில் வன்னித் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெறாவிடினும், தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றத்துக்கு நியமனம் பெற்ற சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா ஆகியோர் ஆவார்.

தமிழர்கள் மத்தியிலும் கூட, பெண் பிரதிநிதித்துவத்துவத்துக்கான தேவை அதிகம் இருப்பதை, இவை சுட்டிக்காட்டி நிற்கின்றன. இந்த நிலையில் தான், அண்மையில் இடம்பெற்ற, இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற சில சம்பவங்கள், மிகுந்த வருத்தமளிப்பவையாக இருப்பதை, அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.   

நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் நியமனங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற இந்தப் பொழுதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில், போட்டியிட வாய்ப்புள்ளவர்கள் எனச் சில பெண்களது பெயர்கள், பரபரப்பாகப் பேசப்பட்ட போது, தமிழரசியல் பரப்பில் குறிப்பாக, சமூக ஊடகங்களில் அதற்கெதிரான கொந்தளிப்புக்கள் எழத் தொடங்கின. 

இவற்றில் சில, குறித்த பெண்களது கொழும்பு மய்ய வாழ்வை, முன்னிறுத்தியதாகவும் வடக்கு, கிழக்குக்கு அந்நியமானவர்கள்  என்பதாவும் இவர்கள் இதுவரை, தமிழ் மக்களுக்கு என்ன செய்தார்கள் என்று கேள்வி எழுப்புவதாகவும் அமைந்திருந்தன.

அதேவேளை, விமர்சனங்கள் என்ற பெயரில் சில, பாலின வன்மத்தையும் வெறுப்பையும் கக்குவதாகவும் அநாகரிகமானதாகவும் அபத்தமானதாகவும் வெறுப்புப் பேச்சுகளாகவும் அமைந்திருக்கின்றன. 

இது, தமிழ் அரசியல் பரப்பில், பாலின வன்மம் தொடர்பான அச்சங்களை ஏற்படுத்துவதாக மட்டுமல்லாது, பெண்களின் பாதுகாப்பு, பாலின சமத்துவம் தொடர்பான கரிசனங்களையும் எற்படுத்துவதாக அமைகிறது.  

அரசியல் ரீதியிலான விமர்சனங்கள் என்பது, அரசியலில் தவிர்க்க முடியாதது. இலங்கை அரசியலில், நாகரிக எல்லைகளை எல்லாம் கடந்து, மிகக் கேவலமாக அரசியல் விமர்சனங்கள் அமைகின்றன என்பதற்கு, ‘மேன்மைமிகு’ நாடாளுமன்றத்தில் பேசப்பட்ட பேச்சுகளே சான்று. 

ஆனால், பெண்கள் என்று வரும் போது, இந்த அரசியல் விமர்சனங்களுக்கு இன்னோர் அசிங்கமான முகம் முளைத்துவிடுகிறது. பெண்களை விமர்சிக்கும் போது, அவர்களது தனிப்பட்ட ஒழுக்கம், குறிப்பாகப் பாலியல் ஒழுக்கம் சார்ந்த அசிங்கமானதும், மிகக் கேவலமானதுமான வெறுப்புப் பிரசாரங்கள் முன்வைக்கப்படுகின்றன. 

தமிழரசுக் கட்சி சார்பில், போட்டியிடுவார்கள் என்று பேசப்பட்ட இரண்டு பெண்களில் ஒருவர், விடுதலைப் புலிகள் அமைப்பு பற்றியும் ஆயுதப் போராட்டம் பற்றியும், காட்டமான விமர்சனமொன்றை முன்வைத்திருந்தார். இத்தகைய விமர்சனம், தமிழ் அரசியலுக்கும் குறிப்பாக, தமிழ்த் தேசிய அரசியலுக்குப் புதுமையானதல்ல. 

அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் முதல், இராஜவரோதயம் சம்பந்தன், ஆபிரஹாம் சுமந்திரன் எனத் தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுத்தவர்கள், முன்னெடுப்பவர்கள் கூட, பல சந்தர்ப்பங்களில் விடுதலைப் புலிகள் பற்றியும் ஆயுதப் போராட்டம் பற்றியும் மாற்றுக் கருத்துகளையும் விமர்சனங்களையும் முன்வைத்திருக்கிறார்கள். இதற்குக் காட்டமானதும் சிலசந்தர்ப்பங்களில் வன்முறைத்தனம் மிக்கதுமான எதிர்வினைகளை, இவர்கள் சந்தித்தும் இருக்கிறார்கள். 

ஆனால், பெண்களிடமிருந்து இதையொத்த கருத்துகள், நிலைப்பாடுகள் வரும்போது, அவர்களது ஒழுக்கம், குறிப்பாகப் பாலியல் ஒழுக்கம் பற்றிய கேள்விகளும் விமர்சனங்களும் எதிர்வினைகளும் முன்வைக்கப்படுவது, முழுத் தமிழினத்தையுமே வெட்கித் தலைகுனிய வைக்கும் போக்காகும்.

இந்த விமர்சனங்களும் எதிர்வினைகளும் முன்வைக்கப்பட்ட விதத்தை அவதானித்த அனைவருமே, அது எவ்வளவு அசிங்கமானதும் அபத்தமானதும் என்பதை உணர்ந்தே இருப்பார்கள்.  

அரசியலில், பெண்களின் பங்களிப்புப் போதாது என்று வருந்துவது ஒருபுறமும், மறுபுறத்தில், அரசியலில் ஈடுபடவிளையும், அரசியல் கருத்துகளை முன்வைக்கும் பெண்களின் சுயகௌரவத்தையும் சுயமரியாதையையும் கேள்விக்கு உட்படுத்துவது, அவர்கள் மீதான பாலின வன்மத்தைக் கக்குவது குறித்துப்  புரிந்துகொள்ளச் சிரமமான அதேவேளை, அநாகரீகமும் பிற்போக்குவாதமும் பீடித்துக் கொண்டுள்ள ஒரு சமூகத்தின் அழுக்கை வௌிச்சமிட்டுக் காட்டுவதாகவும் அமைகிறது. 

இது, தமிழ்ச் சமூகத்துக்கு மட்டுமான பிரச்சினையென்றும் வரையறுத்து விட முடியாது. அண்மையில், “பெண்களின் அரசியல் வகிபாகம் அதிகரிக்கப்பட வேண்டும்” என்ற கோரிக்கையை முன்னிறுத்தி, ஹிருணிக்கா பிரேமசந்திர உள்ளிட்ட அரசியலிலுள்ள பெண்கள் சிலர், ‘திடமான பெண்’ என்ற செயற்றிட்டத்தை முன்னெடுத்து வருகிறார்கள். 

அதன்போது தான், தினம்தினம் சமூக ஊடகவௌியில், எதிர்கொள்ளும் பாலின வெறுப்புப் பேச்சுகளை, ஹிருணிக்கா பொதுவௌியில் பிரசுரித்திருந்தார். இது, எமது சமூகம், பாலின ரீதியில் உள்ளுக்குள் அழுகிக்கொண்டிருப்பதை, உணர்த்துவதாக இருக்கிறது. 

கல்வி, தொழில் எனப் பெண்கள் தடைகளைத் தகர்த்து, அதிகம் சாதித்துக் கொண்டிருக்கும் காலமாக இது இருந்தாலும், பாலினம் குறித்த பிற்போக்குவாத மனநிலை, இன்னமும் மாறவில்லை. 

இன்று, சமூக ஊடகங்கள் அளித்துள்ள வசதிகளைப் பயன்படுத்தி, அது மிக வேகமாக வௌிப்படுகிறது என்பதோடு, பரவிக்கொண்டும் இருக்கிறது என்பது, வெட்கத்துக்கும் கவலைக்கும் உரியதாகும்.  

இதற்காக, அரசியலுக்கு வரும் பெண்கள் மீது, விமர்சனமே வைக்கப்படக்கூடாது என்று அர்த்தமல்ல. அரசியலில் விமர்சனமும் மாற்றுக் கருத்துகளும் தவிர்க்க முடியாதவை. 

ஆனால், கருத்துகளைக் கருத்துகளால் எதிர்கொள்ளப்பட வேண்டுமேயன்றி, தனிமனிதத் தாக்குதல்களால் அல்ல. உண்மையில், கருத்துகளைக் கருத்துகளால் எதிர்கொள்ள முடியாத வங்குரோத்து நிலைதான், தனிமனிதத் தாக்குதல்களுக்குக் காரணமாகின்றன. 

அதுவும், பெண்கள் என்று வரும்போது, அந்தத் தனிமனித தாக்குதல்கள், பாலின வன்மமாகவும் வெறுப்பாகவும் ஆகிவிடுகின்றன. தனி மனிதத் தாக்குதலைக் கையிலெடுக்கும் போதே, கருத்து ரீதியில், நீங்கள் தோற்றுவிடுகிறீர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.  

பெண்கள் மீதான, இந்தப் பாலின வன்மங்களையும் வெறுப்பையும் நாம் கட்சி, கருத்து, நிலைப்பாட்டு பேதங்களைத் தாண்டி, கண்டிக்க வேண்டும். இல்லையென்றால், தமிழைத் தாயென விளிப்பது கூட, அர்த்தமற்ற தொன்றாகவிடும்.  

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தமிழ்-அரசியலில்-பாலின-வன்மம்/91-246950

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.