Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கற்கை நன்றே கற்கை நன்றே...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கற்கை நன்றே கற்கை நன்றே...

காரை துர்க்கா   / 2020 ஜூன் 02

இருவர் கவலையுடன் பகர்ந்த விடயங்களைக் கொண்டு, இன்றைய பத்தியைத் தொடர விளைகிறேன். ஒருவர், 39 வயதுடைய பெண். இவரது தலைமையிலேயே அந்தக் குடும்பம் சீவியம் நடத்துகின்றது. அதாவது, பெண் தலைமைத்துவக் குடும்பம். அந்தப் பெண்னுக்கு 17, 15 வயதுகளில், முறையே பெண்ணும் ஆணும் என இரு பிள்ளைகள் உள்ளனர்.

மற்றையவர், ஆங்கில ஆசிரியர். ஒரு நாள் ஆசிரியர், ஆங்கில வினைச் சொற்களைக் கற்பித்துக் கொண்டிருந்தாராம். அவ்வேளையில், Learning (கற்றல்), Earning (உழைத்தல்) ஆகிய சொற்களின் தமிழ்க் கருத்தை விளங்கப்படுத்திய வேளை, "இந்த இரு சொற்களிலும் முதன்மையானது எது" என, மாணவர்களிடம் கேட்டாராம். "Earning" (உழைத்தல்) என்ற சொல்லே முக்கியமானது என, ஏகோபித்த குரலில் மாணவர்களிடமிருந்து பதில் வந்ததாம்.

அடுத்து, அந்தப் பெண்ணின் கதை. அவர், நாளாந்தம் கூலி வேலைக்குச் சென்றே, குடும்பத்தை நடத்தி வருகின்றார். ஒரு நாளுக்குரிய கூலியாக, 700 ரூபாய் வரையிலேயே பெறுகின்றார். இந்த வருமானத்தில், குடும்பச் செலவுடன் பிள்ளைகளது கல்வி நடவடிக்கைகளையும் முன்கொண்டு செல்வதில், பலத்த சவால்களை எதிர்கொண்டு வருகின்றார். அத்துடன், தனது உடல் உபாதைகள் காரணமாக, கடந்த நான்கு ஆண்டுகளாக மாதாந்தம், அரச வைத்தியசாலைக்கு 'கிளினிக்' சென்று வருகின்றார். இதனால், ஒழுங்காக வேலைக்குச் செல்வதிலும் இடர்பாடுகளைச் சந்தித்து வருகின்றார். 

"அம்மா! எங்களுக்காக நீங்கள் ரொம்பவும் கஷ்டப்படுகின்றீங்கள். நான் படித்தது போதும்; இன்னும் ஒரு வருடம் பொறுத்திருங்கள். 'ஓஎல்' சோதனை முடிந்தவுடன், நான் உழைக்கப் போறன். நான் உழைச்சு, குடும்பச் செலவையும் அக்காவின்ர படிப்பையும் பார்த்துக் கொள்கின்றேன்". தனது நெருக்கடிகளைத் தினசரி பார்த்து வருகின்ற 15 வயதுடைய மகன், இவ்வாறு தெரிவித்ததாக அந்தப் பெண் கூறினார். தனது துன்பங்களைப் புரிந்து கொண்ட மகனை நினைத்து, ஒருபக்கம் பெருமைப்படுவதாகவும் மறுபக்கம், பிள்ளையின் கற்றலுக்கான மனநிலை, எங்கள் குடும்ப நிலைவரத்தால் குழம்பி விட்டதே எனக் கவலைப்படுவதாகவும் அப்பெண்மணி தெரிவித்தார்.

'ஒரு பானை சோற்றுக்கு, ஒரு சோறு பதம் போல', வடக்கு-கிழக்கில் வாழும் பல்லாயிரக்கணக்கான பெண் தலைமைத்துவக் குடும்பங்களில் கணிசமானோர், இதே நிலையிலேயே இன்று உள்ளனர்.

இரண்டாம் கட்ட ஈழப் போர் என்று கூறப்படுகின்ற ஆயுதப் போர், பிரேமதாஸ அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே, 1990 ஆம் ஆண்டு ஜுன் மாதம் ஆரம்பமானது.

அக்காலப் பகுதியில், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைப் பிரதேசம், 'பாதுகாப்பு வலயம்' எனச் செஞ்சிலுவைச் சங்கத்தால் பிரகடனப்படுத்தப்பட்டு இருந்தது. இதை அடையாளப்படுத்தும் முகமாக, வலயத்தைச் சூழ, சகவடிவில் (+) மின்சாரக் குமிழ்கள் ஒளிரவிடப்படும்.

அந்தக் காலப் பகுதியில், புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குப் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டிருந்தது. மின்சார விநியோகம் முற்றாக நிறுத்தப்பட்டிருந்தது. அதேவேளை, எரிபொருள் விநியோகமும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பல நோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் விநியோகிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைப் பிரதேசத்தில், ஒளிரவிடப்பட்டிருந்த மின்குமிழ்களின் வெளிச்சத்தில், இரவில், வீதியோரத்தில் இருந்து, பல மாணவர்கள் கல்வி கற்றார்கள்; சிறந்த பெறுபேறுகளைப் பெற்றார்கள்; தங்களுக்கும் தாங்கள் சார்ந்த சமூகத்துக்கும் பெருமை சேர்த்தார்கள்.

இவ்வாறாக, அன்று வெடியோசைகளுக்கும் வேட்டொலிகளுக்கும் இடையேயும் உணவுத் தட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் நாளை உயிருடன் இருப்போமோ,  கந்தகக் குண்டுக்கு இரையாகி விடுவோமோ என்ற ஐயப்பாடுகள், நிச்சயமின்மைகளுக்கு இடையேயும், தெரு விளக்கில் படித்து எம்மவர்கள் சாதித்துக் காட்டினார்கள்.

அன்று, கடும் யுத்தத்துக்குள்ளும் படித்து முன்னேற வேண்டும் என, அன்றைய சந்ததி கருதியது. இன்று, உழைத்து முன்னேற வேண்டும் என, இன்றைய சந்ததி கருதுகின்றது. இதற்கு, இன்றைய சந்ததியைக் குற்றம் சொல்லிப் பிழை இல்லை. ஏனென்றால், இன்றைய சந்ததி கடந்து வரும் பாதைகள், முற்றிலும் பிழைத்துப்போய் விட்டன.

இந்நிலையில், பெரும்பாலான பெற்றோர், என்ன விலை கொடுத்தேனும் தங்கள் பிள்ளைகளைப் படிப்பிக்க வேண்டும் என்றே உள்ளனர். ஆனாலும், அவர்களில் பெரும்பான்மையினர் பொருளாதாரப் பிரச்சினையுடன் தினசரி போரிட்டு வருவதால், பிள்ளைகளுடன் சமாதானமாக வாழ்வது, சவாலான விடயமாகி வருகின்றது.

அதேவேளை, பட்டம் பெற்றவுடன் அரசாங்கம், தங்களுக்கு உத்தியோகம் வழங்க வேண்டும் என எதிர்பார்க்கும் தன்மை, ஏனைய இனங்களைவிடத் தமிழ் மக்கள் (மாணவர்கள்) மத்தியில் அதிகமாக உள்ளது. அதற்காகத் தங்கள் மாவட்டச் செயலகம் முன்னால், தகரக் கொட்டகை அமைத்து, பட்டதாரிகள் போராட்டம் நடத்துகின்றனர். இவற்றைப் பார்க்கின்ற 15 வயதுடைய மாணவன் ஒருவன், 'படித்துப் பட்டம் பெற்றும் வேலை இல்லையே! இப்போதே ஏதாவது உழைக்கலாம்' என, அப்பாவித்தனமாக மனதில் நினைக்கலாம்.

இவ்வாறானதொரு நிலையில், ''வடக்கு மாகாணத்தில் பரீட்சைப் பெறுபேறுகளை அதிகரிக்க வேண்டுமானால், வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களம், பெற்றோர் மத்தியில் பிள்ளைகளின் கல்வி தொடர்பில் கரிசனையை ஏற்படுத்த வேண்டும்" என, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் வாழ்நாள் பேராசிரியருமான பொ. பாலசுந்தரம்பிள்ளை தெரிவித்து உள்ளார்.

கடந்த ஆண்டு, சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறு தொடர்பிலேயே, பேராசிரியர் இவ்வாறாகக் கருத்து வெளியிட்டு உள்ளார். வடக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில், ஆசிரியர் வளம் உட்பட அனைத்து வளங்களும் சிறப்பாகக் காணப்படுகின்றன. அதேவேளை, அரசாங்கம், தனியார் தொண்டு நிறுவனங்கள ஊடாகவும்; பாடசாலைகளுக்கு வளங்கள் பெற்றுக் கொடுக்கப்படுகின்றன.

இவ்வாறான சூழ்நிலையில், பரீட்சைப் பெறுபேறுகளில் முன்னேற்றம் ஏற்படாது இருப்பதற்குக் காரணம், பெற்றோர் தமது பிள்ளைகளின் கல்வியில் கூடிய கரிசனை செலுத்தாமையே எனச் சுட்டிக்காட்டுகின்றார் பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை.

இந்நிலையில், பெற்றோர், தமது பிள்ளைகளின் கல்வியில் கூடிய கரிசனை செலுத்தாமை மட்டுமே, வடக்கு மாகாணத்தின் கல்வி வீழ்ச்சிக்குக் காரணம் என்ற கருத்து, குழப்பமானதாகவே உள்ளது.

ஏனெனில், மாணவர்களின் கல்வி அறுவடை, பெற்றோருடன் மட்டுமல்லாது அரசியல்வாதிகள், அதிகாரிகள், ஆசிரியர்கள், பல்கலைக்கழக சமூகம் ஆகியோரிலும் தங்கியுள்ளது. இதில், சிலருக்கு நோயைக் குணப்படுத்த வேண்டும். அத்துடன், சில விடயங்களில் ஆளையே குணப்படுத்த அல்லது, மாற்ற வேண்டிய தேவைப்பாடுகள், தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் நிறையவே உள்ளன.

இதற்கிடையே, 1981ஆம் ஆண்டு, இது போன்றதொரு (ஜுன் 01) நாளிலேயே, தமிழ் மக்களின் பொக்கிஷமான யாழ்ப்பாணம் பொது நூலகம் (அறிவாலயம்) தீயுடன் சங்கமமானது. அந்தத் தீ அணைந்தாலும், அதன் உக்கிரம், எங்கள் மனங்களில் கனன்று கொண்டிருக்கின்றது.

இவ்வாறாகத் தமிழ் மக்களின் கல்விக்குக் கல்லறை கட்ட, காலங்காலமாகப் பல தரப்புகளாலும் பல தடவைகள் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன; இன்னமும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆகவே, பல்வேறு தடைகளையும் உடைத்தெறிந்தே, தமிழ்ச் சமூகம் கல்வியைத் தொடருகின்றது; தொடர வேண்டிய நிலையில் உள்ளது. நடைமுறைக்குச் சாத்தியம் எனப் பிறர் கருதுகின்ற நிலையை, நாம் அதையும் தாண்டிச் செல்வதற்கும் வெல்வதற்கும், ஒரு தரப்பை மாத்திரம் சுட்டிக்காட்டலாமா? 

இந்நிலையில், வடக்கு மாகாணத்தின் கல்விப் பின்னடைவுக்கு, எமது ஒட்டுமொத்த சமூகமும் அதன் கூறுகளும் கூட்டாகப் பொறுப்பு ஏற்க வேண்டும் என்பதே நியாயமானது. நாம் முன்னோக்கிப் பார்க்க வேண்டிய விடயங்கள், ஏராளம் உள்ளன. எமது சொந்தப் பலவீனங்களைக் கூர்ந்து கவனிப்போம்; தவறுகளிலிருந்து பாடம் கற்போம்.

கல்வியின் ஊடாக ஏற்படுகின்ற, தாக்குப் பிடிக்கும் திறனே, எமக்குப் பல வழிகளிலும் உதவப் போகின்றது. எமது இளஞ்சந்ததியின் கல்வியே, எமது கைகளில் போடப்பட்டிருக்கும் அடிமைச் சங்கலியை உடைக்கப் போகின்றது. வீழ்ந்து கிடக்கும், எமது பொருளாதாரத்தை நிமிர்த்தப் போகின்றது.

இது இவ்வாறு நிற்க, ''சரி! உங்கள் மகன் அடுத்த ஆண்டு உழைக்கப் போறான். உங்கள் பஞ்சம் பறந்தோடப் போகுது. இனி, நீங்கள் வீட்டிலிருந்து சமைத்து ஆறின சோறு சாப்பிடலாம் தானே'' என, அந்த அம்மாவைக் கேட்டபோது, ''உந்தச் சின்னப் பொடியன்ர கதையை விடுங்கோ. நான் பிச்சை எடுத்தாவது, என்ர ஆம்பிளைப் பிள்ளையைப் படிப்பிக்க வேண்டும்'' என்ற பதிலில் பொதிந்திருந்த வைராக்கியம், மெய் சிலிர்க்க வைத்தது. 'கற்கை நன்றே கற்கை நன்றே, பிச்சை புகினும் கற்கை நன்றே' என்ற, தமிழ்ப் பாட்டியின் வரிகளும் வைரமானவையே!    

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கற்கை-நன்றே-கற்கை-நன்றே/91-251264

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.