Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொலிஸ் வன்முறையும் அடிப்படை உரிமைகளும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பொலிஸ் வன்முறையும் அடிப்படை உரிமைகளும்

என்.கே. அஷோக்பரன்   / 2020 ஜூன் 08

அமெரிக்கா, மினியாபொலிஸ் நகரத்தில் ஜோர்ஜ் ஃபுளொய்ட் என்ற கறுப்பின நபர், வௌ்ளையினப் பொலிஸ் அதிகாரியின் வன்முறைத் தாக்குதலால், படுகொலையானமையின் எதிரொலியானது அமெரிக்கா மட்டுமல்லாது, உலகமெங்கும் இனவெறிக்கெதிரான குரலாக, ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கிறது.

image_5b6b794ae7.jpgஜோர்ஜ் ஃபுளொய்டின் படுகொலை தொடர்பில், இரண்டு அம்சங்கள் முக்கியமாகக் கவனிக்கத்தக்கவை. முதலாவது, கறுப்பர்கள் மீதான இனவெறி; இரண்டாவது, பொலிஸ் வன்முறை. இந்த இரண்டினதும் துர்ப்பாக்கிய கலவைதான், ஜோர்ஜ் ஃபுளொய்ட்டின் படுகொலைக்குக் காரணமாக அமைந்துள்ளது.

இந்தப் படுகொலை, இனவெறிக்கு எதிரான பெருங்குரலை, உலகெங்கும் ஒலிக்கவைத்திருக்கும் நிலையில், மறுபுறத்தில் பொலிஸாரின் அராஜகங்கள், வன்முறைகள், சித்ரவதைகள் ஆகியவற்றுக்கு எதிரான குரல்களையும் ஓங்கி ஒலிக்கச் செய்திருக்கிறது.

குறிப்பாக, '' defund police'' (அரச பாதீட்டிலிருந்து பொலிஸ் திணைக்களங்களுக்குப் பணம் ஒதுக்கப்படக் கூடாது) என்ற குரல்கள், அமெரிக்காவில் பெருமளவில் ஒலிக்கத் தொடங்கி இருக்கிறது. மினியாபொலிஸ் நகர கவுன்சிலின் சில உறுப்பினர்கள், மினியாபொலிஸ் பொலிஸ் திணைக்களத்தை, முற்றாக இல்லாதொழிப்பதற்கான முன்மொழிவுகளையும் மேற்கொண்டு இருக்கிறார்கள்.

பொலிஸ் வன்முறை, அராஜகம், சித்ரவதை பற்றி, உலகம் பேசிக்கொண்டிருக்கும் இந்தப் பொழுதில்தான், இலங்கையிலும் ஒரு துக்ககரமான சம்பவம் இடம்பெற்றுள்ளது.

image_6c33ed0bca.jpgஊரடங்குப் பொழுதில், தர்கா நகரில் தாரிக் என்ற சிறுவன், சைக்கிளில் சென்று கொண்டிருந்தான். தாரிக், மூளை நரம்பு வளர்ச்சிக் குறைபாடுள்ள (autism) ஒரு சிறுவன். தர்கா நகர சந்தி ஒன்றின் அருகே, பொலிஸ் பரிசோதனை நிலையமொன்று அமைக்கப்பட்டிருந்தது. அங்கிருந்த பொலிஸார், சைக்கிளில் இருந்து தாரிக்கைத் தள்ளிவிட்டதுடன், 'விசாரிக்கின்றோம்' என்ற போர்வையில் அவன்மீது வன்முறைத் தாக்குதலில் ஈடுபட்டனர்.

ஓடிஸத்தால் பாதிக்கப்பட்ட சிறுவனான அவனுக்குப் பொலிஸார் கேட்கும் கேள்விகளுக்கு உடனடியாகவும் தௌிவான வகையிலும் பதிலளிக்க முடியவில்லை. அதற்காக, அவன் காட்டுமிராண்டித் தனமான தாக்குதலை, எதிர்கொள்ள வேண்டியிருந்தது. மனநலம், பாதிக்கப்பட்டவனோ இல்லையோ, ஒரு சிறுவனைக் காட்டுமிராண்டித் தனமாகத் தாக்குவது, எந்தவகையிலும் நியாயப்படுத்த முடியாதது.

இந்தத் தாக்குதலின் சி.சி.டி.வி பதிவு, இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் கசிந்திராவிட்டால், இந்தச் சம்பவம் வௌியில் தெரியவந்து இருக்காது; தாரிக்குக்கு நியாயம் வேண்டிய குரல்களும் ஒலித்திருக்காது. இலங்கைப் பொலிஸ் சித்திரவதைக்குப் பெயர்போனது என்பதற்கு, இலங்கைப் பொலிஸார் சித்திரவதையிலும் மனிதாபிமானமற்ற இழிவான நடத்துகையிலும் ஈடுபட்டுள்ள பல சம்பவங்களை உறுதிப்படுத்தும், உயர்நீதிமன்றின் தீர்ப்புகளே சாட்சி!

பொலிஸாரால் நடத்தப்படும், இத்தகைய சட்டவிரோத வன்முறைத் தாக்குதல்கள், சித்திரவதைகள், மனிதாபிமானமற்ற இழிவான நடத்துகைகள் தொடர்பில், மக்கள் எவ்வாறு நியாயம் பெறுவது என்பது, மிக முக்கியமான கேள்வி. இலத்தீனில் ஒரு பிரபல சொல்லவடையுண்டு. ' Quis custodiet ipsos custodes?' இதன் அர்த்தம், 'கண்காணிப்பாளனைக் கண்காணிப்பது யார்?' என்பதாகும்.

பொலிஸார் தொடர்பில், இந்தச் சொல்லடை, குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தைப் பெறுகிறது. பொலிஸார், பொதுமக்களைக் கண்காணிக்கிறார்கள்; பொலிஸாரைக் கண்காணிப்பது யார்?

இலங்கையில் அதற்கான வலுவான சட்டக்கட்டமைப்பு இல்லை. சுயாதீன ஆணைக்குழுவாக, பொலிஸ் ஆணைக்குழு அமைக்கப்பட்டிருந்தாலும் பொதுமக்களுக்கு எதிரான பொலிஸாரின் அராஜகங்களைக் கட்டுப்படுத்துவதில் உள்ள மெத்தனப்போக்கு, பொலிஸ் ஆணைக்குழுவின் குறைபாட்டையே சுட்டி நிற்கிறது.

பொலிஸாருக்கு எதிராக, பொலிஸாரிடமே முறையிடுவதெல்லாம் நடைமுறைச் சாத்தியச் சிக்கல்கள் உள்ள விடயம். ஆகவே, இன்றைய இலங்கைச் சட்டக் கட்டமைப்பின் கீழ், தனிமனிதர்களுக்கு பொலிஸ் அராஜக வன்முறைகளுக்கு எதிராக, நியாயம் பெறக் கூடிய ஏற்பாடாக இருப்பது, அரசமைப்பின் 11ஆம் சரத்து வழங்கு, சித்திரவதைக்கு எதிரான அடிப்படை மனித உரிமையாகும்.

இலங்கை அரசமைப்பின் மூன்றாவது அத்தியாயம், அரசமைப்பு ரீதியாக உறுதிசெய்யப்பட்டுள்ள மனித உரிமைகளைப் பட்டியலிடுகிறது. அந்த அத்தியாயத்தில், இடம்பெறும் அரசமைப்பின் 11ஆம் சரத்தானது, ''ஆளெவரும் சித்திரவதைக்கு அல்லது கொடூரமான மனிதாபிமானமற்ற அல்லது இழிவான நடத்துகைக்கு அல்லது தண்டனைக்கு உட்படுத்தப்படலாகாது' என்று வழங்குகிறது. மேலும், அரசமைப்பின் 17ஆம் சரத்து வழங்கியுள்ளதன் படி, அரசமைப்பின் மூன்றாம் அத்தியாயத்திலுள்ள ஏற்பாடுகளின்படியான அடிப்படை உரிமைகளானவை, ஆட்சித்துறை நடவடிக்கை மூலம் அல்லது நிர்வாக நடவடிக்கை மூலம் மீறப்பட்டால், அல்லது உடனடியாக மீறப்படவுள்ளதாக அமையும் போது, அது தொடர்பில் உயர்நீதிமன்றத்துக்கு விண்ணப்பிக்க முடியும் என்று வழங்குகிறது. ஆகவே, ஆட்சித்துறை நடவடிக்கை, நிர்வாக நடவடிக்கைகளால் அடிப்படை மனித உரிமைகள் மீறப்படும் போது, உயர்நீதிமன்றத்துக்குக் குறித்த மீறல் இடம்பெற்ற ஒருமாத காலத்துக்கு உள்ளாக, அல்லது உடனடியாக மீறப்படவுள்ள நிலையில், அரசமைப்பின் 126ஆவது சரத்தின்படியான மனுவொன்றைச் சமர்ப்பிப்பதன் மூலம், அடிப்படை உரிமைகளை நிலைநாட்டிக்கொள்ள முடியும்.

அரசமைப்பின் 11ஆம் சரத்தின் கீழான சித்திரவதைக்கு எதிரான பாதுகாப்பானது, பொலிஸாரின் வன்முறைத் தாக்குதல்கள், கொடூரமான மனிதாபிமானமற்ற இழிவான நடத்துகைகளுக்கு எதிரான பாதுகாப்பாக அமையும் என்பது தொடர்பில், இலங்கையின் சட்டமானது கூர்ப்படைந்துள்ளது.

அரசமைப்பால் உறுதிப்படுத்தப்பட்ட, அடிப்படை மனித உரிமைகள் மீறப்படும்போது, அது தொடர்பிலாக உயர்நீதிமன்றை நாடி, நீதியைப் பெறும் வாய்ப்பு, 1978ஆம் ஆண்டின் இரண்டாவது குடியரசு யாப்பின் மூலமே அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், அந்த வாய்ப்பை வழங்கிய அரசமைப்பின் 17ஆவது சரத்தானது, 'ஆட்சித்துறை நடவடிக்கை அல்லது நிர்வாக நடவடிக்கைகளால், அடிப்படை மனித உரிமைகள் மீறப்படும் போது' என்ற மட்டுப்பாட்டை ஏற்படுத்தியிருந்தது.

பொலிஸ் வன்முறை என்பது, ஆட்சித்துறை அல்லது நிர்வாக நடவடிக்கையா என்ற கேள்வி, ஆரம்பகாலங்களில் முக்கியமானதாக அமைந்தது. தட்சிணாமூர்த்தி எதிர் சட்டமாஅதிபர் (1978 1 இல.ச.அ 154) வழக்கில், நீதியரசர் வணசுந்தர வழங்கிய தீர்ப்பில், குறித்த வன்முறைத் தாக்குதலானது மீள நிகழ்வதாகவும் அது பற்றிய உத்தியோகபூர்வ சகிப்புத்தன்மை காணப்படும்போதும், அது நிர்வாக நடைமுறையாகக் கருதப்படும். அவ்வாறு சித்திரவதை நடவடிக்கைகள் தொடர்பிலான நிர்வாக நடைமுறையொன்று இல்லாத பட்சத்தில், குறித்த நடவடிக்கைகளுக்கு அரசு பொறுப்பாளியாகாது என்று குறிப்பிடப்பட்டது.

இதே கேள்வி, மீண்டும் வேல்முருகு எதிர் சட்டமாஅதிபர் (1981 1 இல.ச.அ. 406) வழக்கில் எழுந்தபோது, ஐவரடங்கிய உயர்நீதிமன்ற அமர்வில், நீதியரசர் வணசுந்தர (அவரோடு நீதியரசர் இஸ்மாயில் இணங்கினார்), குறித்த சித்ரவதை நடவடிக்கைகள், அரசால் அங்கிகரிக்கப்படவோ, ஊக்குவிக்கப்படவோ, அரசின் நன்மைக்காகச் செய்யப்படவோ இல்லை. ஆகவே, இதுதொடர்பில் சட்டரீதியான பொறுப்பேதும் அரசின் மீது சுமத்தப்பட முடியாது என்று தீர்ப்பளித்தார். ஆனால், அதேவழக்கில் நீதியரசர் சர்வானந்தா (அவரோடு நீதியரசர் ரத்வத்த இணங்கினார்) அளித்த தீர்ப்பில், அரசானது ஓர் அதிகாரியிடம் வற்புறுத்தும் அதிகாரத்தை வழங்கியுள்ளபோது, அந்த அதிகாரத்தை அவர், அடிப்படை உரிமைகளுக்கு ஏற்பவோ, எதிராகவோ பயன்படுத்துவதானது ஆட்சித்துறை நடவடிக்கையாகவே கருதப்படும் என்று தீர்மானித்திருந்தார். இங்கு இரு நிலைப்பட்ட கருத்து நிலைகள் காணப்பட்டமை தௌிவாகத் தெரிகிறது.

அடுத்ததாக வந்த, மரியதாஸ் ராஜ் எதிர் சட்டமாஅதிபர் (1983 2 இல.ச.அ. 397) வழக்கில் நீதியரசர் சர்வானந்தா, வேல்முருகு வழக்கில், தான் வழங்கிய தீர்ப்பில் குறிப்பிட்ட விடயத்தையே, மீள உரைத்திருந்தார். இந்தத் தீர்ப்போடு, நீதியரசர்களான ரணசிங்ஹ மற்றும் றொட்றிகோ ஆகியோர் இணங்கியிருந்தனர்.

அதன் பின்னர், விவியன் குணவர்த்தன எதிர் பெரேரா (1983 1 இல.ச.அ. 305) வழக்கில், நீதியரசர் சோஸா வழங்கிய தீர்ப்பில் (நீதியரசர்கள் ரத்வத்த, கொலின்-தோமே ஆகியோர் இணங்கியிருந்தனர்), நீதியரசர் சர்வானந்தா அவர்களின் கருத்தையே மீள உரைத்திருந்தனர்.

ஆகவே, உயர்நீதிமன்றம் வழங்கிய பொருள்கோடலின் பரிணாம வளர்ச்சியானது, 1983 காலப்பகுதியில், அரச அதிகாரியொருவர் மனித உரிமையை மீறும்போது, அவரது நடவடிக்கை, அதனை அரசு அங்கிகரித்திருந்தாலும் இல்லாவிட்டாலும், ஆட்சித்துறை நடவடிக்கையாகவே கருதப்படும் என்ற நிலையை அடைந்திருந்தது எனலாம்.

பொலிஸ் வன்முறை, சித்திரவதை ஆகியவற்றுக்கு எதிரான, மிக முக்கிய தீர்ப்புகளுள் ஒன்றாக அமல் சுதத் சில்வா எதிர் கொடிதுவக்கு (1987 2 இல.ச.அ. 119) அமைந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு, நீதியரசர் அதுகோரளவால் (பிரதம நீதியரசர் சர்வானந்தா, நீதியரசர் டி அல்விஸ் இணங்கியிருந்தனர்) வழங்கப்பட்டிருந்தது. இந்தத் தீர்ப்பில், நீதியரசர் அதுகோரள குறிப்பிட்ட சில விடயங்கள், முக்கியத்துவம் வாய்ந்தவை. குறித்த தீர்ப்பில், ''எங்கள் அரசமைப்பின் 11ஆவது பிரிவானது, எந்தவொரு நபரும் சித்திரவதைக்கு உட்படுத்தப்படக்கூடாது. அல்லது கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது இழிவான நடத்துகைக்கு அல்லது தண்டனைக்கு உட்படுத்தப்படக்கூடாது என்று கட்டளையிடுகிறது. ஒவ்வொரு நபரும், மற்றொரு நபரைச் சித்திரவதை, கொடூரமான அல்லது மனிதாபிமானமற்ற நடத்துகைக்கு உட்படுத்துவதை அது தடைசெய்கிறது. இது, கட்டுப்பாடுகளுக்கும் வரம்புகளுக்கும் உட்படாத ஒரு முழுமையான அடிப்படை உரிமையாகும். இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு நபரும், அவர் ஒரு குற்றவாளியாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், இந்த உரிமையின் முழுமையான உள்ளடக்கத்தின் உத்தரவாதத்துக்கு உரித்துடையவர்கள். அரசமைப்பு பாதுகாப்புகள், பொதுவாக அரசு மற்றும் அதன் உறுப்புகளுக்கு எதிராக இயக்கப்படுகின்றன. பொலிஸ் படை, அரசின் ஓர் அங்கமாக இருப்பதால், இந்த உரிமையைப் பாதுகாக்கவும் முன்னேற்றவும் அரசமைப்பால் கட்டளையிடப்பட்டுள்ளது என்பதுடன், எந்தவகையிலும் எந்தச் சூழ்நிலையிலும் அதை மறுக்கவோ, சுருக்கவோ, கட்டுப்படுத்தவோ கூடாது. இந்த உரிமையைப் பொலிஸ் படையின் ஒவ்வோர் உறுப்பினரையும் சார்வதைப் போலவே, மற்றவர்களுக்கும் இந்த உரிமையை, அவர்களின் நிலைப்பாடு, நம்பிக்கைகள் அல்லது முன்னோடிகளைப் பொருட்படுத்தாமல், மறுப்பதைத் தடைசெய்துள்ளது. ஆகவே, அடிப்படையாக அமைய வேண்டும் என்று அறிவிக்கப்பட்ட மற்றும் எண்ணப்பட்ட இந்த உரிமையானது, எப்போதும் அடிப்படையாக வைத்துக்கொள்ளப்பட வேண்டும். அத்துடன், ஆட்சித்துறையானது தனது நடவடிக்கையால் அதைக் குறைத்துவிடக் கூடாது என்ற நோக்கத்தில், அதன் முழுமையான எல்லையளவுக்கு, இந்த உரிமையை இரட்சித்துக் காப்பது, இந்த நீதிமன்றத்தின் கடமையாகும். இந்த நீதிமன்றம், அதன் அரசமைப்பு கடமையை நிறைவேற்றுவதில், எந்தவொரு பொலிஸ் அதிகாரியும் அவர் எவ்வளவு உயர்ந்த அல்லது தாழ்ந்த பதவியிலிருந்தாலும், பொலிஸ் ஒற்றுமையின் தவறான உணர்வால் தூண்டப்பட்டு, உண்மையை மறைக்கவோ அல்லது சிதைக்கவோ எந்தவொரு முயற்சியையும் ஆமோதிக்க முடியாது. இந்த வழக்கின் உண்மைகள், பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் மீது, சில பொலிஸ் அதிகாரிகளால் பின்பற்றப்பட்ட மூன்றாம்தர நடவடிக்கை முறைகள் தொடர்பான, அதிர்ச்சியூட்டும் அம்சங்களை வெளிப்படுத்தியுள்ளன. இத்தகைய முறைகள், காட்டுமிராண்டித்தனமான மற்றும் மனிதாபிமானமற்றவை என்று மட்டுமே விவரிக்கப்படக் கூடியவை. மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் ஒவ்வொரு முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு, இந்தக் காலகட்டத்தில், மனித ஒழுக்கம், கௌரவம் பற்றிய ஒரு மனிதனின் உணர்வுக்கு எதிரான பெருமளவுக்கு கிளர்ச்சி செய்வதாகவே, இந்த நடடிவக்கைகள் அமைகின்றன. ஒரு மனிதனின் மனசாட்சியை, உதவியற்ற சந்தேக நபர் ஒருவரை அவர் காவலில் வைக்கப்பட்டுள்ள வளாகத்தின் எல்லைக்குள் மோசமான மற்றும் காட்டுமிராண்டித்தனமான சிகிச்சை முறைகளுக்கு உட்படுத்தும் ஒரு சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பொலிஸ் அதிகாரியின், கோழைத்தனமான செயலைப் போல வேறொன்றும் அதிகமாக அதிர்ச்சியூட்டப்போவதில்லை. பொலிஸாரின் இத்தகைய நடவடிக்கை சட்டத்தை அவமதிப்பதை மட்டுமே வளர்க்கும். மேலும், சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க வேண்டிய காவல்துறையின் திறனைப் பற்றிய நம்பிக்கையை பொதுமக்களிடம் இழக்கச் செய்யும். மனுதாரர் எந்தவித அனுதாபத்துக்கும் தகுதியற்ற ஒரு கடினமான முக்கிய குற்றவாளியாக இருக்கலாம். ஆனால், அரசமைப்பு உத்தரவாதங்கள், நமது ஜனநாயக அமைப்பில் ஏதேனும் அர்த்தம் அல்லது மதிப்பைக் கொண்டிருக்க வேண்டுமென்றால், நமது அரசமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட பாதுகாப்பு, அவருக்கு மறுக்கப்படாமல் இருப்பது அவசியம்'' என்று நீதியரசர் அதுகோரள தீர்ப்பளித்திருந்தார்.

1987இல் எழுதப்பட்ட இந்த வசனங்கள், இன்றும் என்றும் மிகப் பொருத்தமானவை. ஒருவன் மிகப் பாரதூரமான குற்றவாளியாகக் கூட இருக்கலாம்; ஆனால், அவனுக்கு அடிப்படை மனித உரிமைகள் உண்டு. அதைப் பாதுகாப்பதே ஜனநாயக அரசின் கடமை. உரிமை மீறப்படும் போது, உயர்நீதிமன்றத்துக்குச் சென்று, நியாயம் தேட ஒரு வாய்ப்பு உள்ளது. ஆனால், உரிமை மீறப்படாது பாதுகாக்க, பொலிஸார் சித்திரவதை, வன்முறையில் ஈடுபடாது பாதுகாக்க, எத்தகைய நெறிமுறைகள் உள்ளன என்று சிந்திக்க வேண்டிய தேவை இருக்கிறது.

இது தாரிக்குக்கான நியாயமாக மட்டுமல்லாமல், இனிமேல் தாரிக்கைப் போல, எவரும் பொலிஸ் அராஜகத்துக்கு ஆளாகாமல் இருப்பதற்கு, ஏதுவகை செய்யும் கொள்கை முடிவுகள், எடுக்கப்பட வேண்டும்.
 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/பொலிஸ்-வன்முறையும்-அடிப்படை-உரிமைகளும்/91-251533

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.