Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

லெப். கேணல் மகேந்தி போராளி என்பதற்கு மேலாக, “விடுதலைப் போராட்ட ஞானி”

Last updated Jun 9, 2020

மகேந்தி வீரச்சாவடைந்துவிட்ட செய்தி பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த சமாதான காலப்பகுதியில் ஒரு வழமையான பகல்ப்பொழுதில் எம்மை வந்தடைந்தது.

செய்தி உண்மையா? பொய்யா? என்ற ஆதங்கத்துடன் உறுதிப்படுத்த முற்பட்ட வேளையில், இல்லை அது உண்மைதான் என்ற கசப்பான யதார்த்தம் உறுதிப்படுத்தப்பட்டு வந்துவிட்டது.

மகேந்தி எமது போராட்ட வரலாற்றில் வித்தியாசமானவன். பல்லாயிரம் பேர் போராடிய இந்த மண்ணில், பல்லாயிரம் வீரர்கள் வீரச்சாவடைந்துவிட்ட இந்த மண்ணில், விடுதலைப் போரில், அவர்கள் எல்லோருடனும் பொதுவான இணைப்பில் இணைத்துப்பார்த்துவிட முடியாத அளவிற்கு மகேந்தி வித்தியாசமானவன்.

மக்களுடன் பழகுவதில் அவன் தனித்தன்மை கொண்டிருந்தான். எல்லோராலும் நினைக்கப்படும் கலகலவென்ற சிரித்தமுகம், எவருடனும் அதிர்ந்து பேசாத, முரண்பட்டுவிடவோ அல்லது முறைத்துப் பார்க்கக்கூடவோ தெரியாத கனிவான முகமும், பழகும் பாங்கும் மகேந்தியின் சொத்துக்களாக இருந்தன. அவன் பிறந்து வளர்ந்ததும், போராட்ட காலத்தில் பெரும் பகுதியை கழித்ததுமான யாழ்ப்பாணம், தென்மராட்சி மண்ணில் அனைத்து மக்களுக்கும் அறிமுகமானவன். அனைவரிடமும் அன்புடன் உறவு கொண்டாடும் மனிதனாக மகேந்தி இருந்தான்.

01-2.jpg

இந்திய இராணுவம் எமது மண்ணை ஆக்கிரமித்திருந்த காலப்பகுதியில், யாழ் மாவட்டத்தில் மகேந்தி எனக்கு அறிமுகமாகியிருந்தான். அக்காலப்பகுதியில் தென்மராட்சிப் பொறுப்பாக இருந்த தமிழ்ச்செல்வனின் (அப்போதைய தினேஸ்) நம்பிக்கையான உதவியாளர்களில் ஒருவனாக மகேந்தியும் இடம் பெற்றிருந்தான். தென்மராட்சியில் இருந்த விடுதலைப் போராட்ட அணிகளுக்குள் மகேந்தியும் அவனது மூத்த சகோதரனான ரவியண்ணனும் இடம்பெற்றிருந்தார்கள்.

மகேந்தியின் குடும்பமே விடுதலைப் போராட்டத்துடன் தொடர்புபட்டிருந்தது. அக்காலப்பகுதியில் இந்திய இராணுவத்தின் நெருக்கடிகளுக்கும், கெடுபிடிகளுக்கும் ஆளாகியிருந்த விடுதலைப் போராட்டத்தில் பற்றுள்ள குடும்பங்களில் மகேந்தியின் குடும்பமும் ஒன்றாக இருந்தது.

நான் யாழ். மாவட்டத்தைப் பொறுப்பேற்ற வேளையில் எனக்கான அணிகளை இணைத்துக் கொள்வதற்காக, ஆங்காங்கே இருந்த போராளிகளை என்னிடம் அழைத்திருந்தேன். அவ்வேளையில் அண்ணணும் தம்பியுமாக ஒரே அணியிலிருந்த மகேந்தியும், ரவியண்ணணும் ஒரே அணியில் இருப்பதைவிட யாராவது ஒருவர் என்னிடம் வருவது பொருத்தமாக இருக்கும் என்று நானும் தமிழ்ச்செல்வனுமாக முடிவெடுத்ததும், அவ்வேளையில் மகேந்தி தமிழ்ச்செல்வனுடன் நிற்க ரவி அண்ணன் என்னுடன் வந்து நிதிப் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டதும் இன்றும் நினைவிற்கு வருகின்றது.

மகேந்தியின் இன்னொரு சகோதரனான சூட்டியும் அக்காலப் பகுதியில் இயக்கத்தில் இணைந்திருந்து ஆனையிறவுச் சமர் காலப்பகுதியில் வெற்றிலைக்கேணி தரையிறக்கத்தைத் தடுக்கும் சண்டையில் வீரச்சாவடைந்திருந்தார். சிறப்பான ஆயுதப் பயிற்சிகளுக்காக தெரிவுசெய்யப்பட்ட போராளிகளை நாம் மணலாற்றுக்குத் தலைவர் அவர்களது தளத்திற்கு அனுப்பினோம். அதில் துப்பாக்கி சுடுவதில் சிறந்த குறி வல்லுநராக இருந்த மகேந்தியும் தெரிவுசெய்யப்பட்டுச் சென்று, பயிற்சி நிறைவுபெற்று வந்தது இன்றும் அவன் தொடர்பாக நினைவிற்கு வரும் ஆரம்பகால நிகழ்வுகள்.

போராட்டச் சக்கரத்தின் நீண்ட காலச் சுழற்சியில் மகேந்தியும் இணைந்தே சுழன்றான். போராட்ட காலத்தில் அறிமுகமான குடும்பம் ஒன்றிலிருந்து தனது காதல் மனைவியைக் கரம் பிடித்ததும், குழந்தைகள் பெற்று குடும்பகாரனாகியதுமான அவனது வாழ்வு தொடர்ந்தது.

L.Henal-Mahenthy-93.jpgசண்டைக் களங்களில் மிகவும் துணிச்சலுடன் செயற்படுபவனாக மகேந்தி பெயர் பெற்றிருந்தான். நிறையச் சண்டைக் களங்களில் அவன் நிறையத் தடவைகள் விழுப்புண்ணடைந்து மீண்டும் மீண்டும் களத்திற்குத் திரும்பும் ஒருவனாகவே இருந்தான். மகேந்தியின் போராற்றலின் மீதும், போர்க்களச் செயற்பாடுகளின் மீதும் எதிரி எப்போதும் அச்சமே கொண்டிருந்தான்.

உள்ளதை உள்ளபடி எவ்வேளையும் எவருக்கு முன்பும் கதைக்கும் பண்பு கொண்டவன் மகேந்தி. அவனது மனதில் இருந்த விடுதலைப் பற்றுணர்வு சார் பண்பினாலும், இயல்பான அவனது நெஞ்சுரத்தினாலும் ஏற்பட்ட பழக்கமாக இதனைக் கொள்ளலாம். இவ்வாறு நெற்றிக்கு நேரே எதனையும் கதைக்கும் பண்பு அவனது பலமாகவும் சில இடங்களில் பலவீனமாகவும் இருந்தது. விடயத்தை மனதில் வைத்திருக்காமல் நேரடியாகக் கதைக்கும் பண்பினால் அவன் சில பொறுப்பாளர்களுடன் முரண்பட்டுவிட வேண்டியிருந்ததையும் நான் அறிவேன். ஆனாலும் அவர்கள் தமது மனதில் மகேந்தி பற்றிக் குறைவாக நினைத்துவிடவோ, அல்லது நிரந்தரமான கசப்புணர்வுடன் இருந்துவிடவோ முடியாதபடி மகேந்தியின் விமர்சனங்களில் நேர்மைப் பண்பு இருந்தது.

மகேந்தியின் போராற்றல் திறன் எதிரிக்குப் பெரும் இழப்புக்களை ஏற்படுத்தியது. எமது விடுதலை இயக்கத்திற்கு நலல் வெற்றிகளைப் பெற்றுத்தந்தது. சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கையின் பின்னர் யாழ் மாவட்டத்தை ஆக்கிரமித்திருந்த படையினர் மத்தியில் வெற்றிகரமாக நிலைத்துநின்று படையினருக்குக் கணிசமான இழப்பை ஏற்படுத்துவதில் மகேந்தி வெற்றிகண்டிருந்தான்.

படையினரின் நெருக்கமான படை வேலிகளுடன் இணைந்த ஆக்கிரமிப்புக் கொடுங்கோல் ஆட்சிக்கு உள்ளே நிலைபெற்றிருந்தான். அங்குள்ள மூத்த சந்ததியினரால் அடைக்கலம் வழங்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்டு, இளம் சந்ததியினரை அணிதிரட்டிப் போரிட வைத்தது மகேந்தி தனது இராணுவத் தலைமைத்துவப் பண்பை வெளிப்படுத்துவதற்கும் ஒரு வாய்ப்பாக அமைந்தது.

சிறிலங்கா அரசிற்கு உண்மையான அச்சுறுத்தலை வழங்கிய மகேந்தியைப் போர் அரங்கிலிருந்து அப்புறப்படுத்துவதற்கு எதிரி பெரிதும் முயன்றான். சமாதான காலப்பகுதியில் எமது தாயகத்தில் கனன்று எரிந்துகொண்டிருந்த விடுதலைப் போர்த்தீயின் மீதும், முற்றுகை வேலிகள் மீதும் சமாதானப் போர்வைப் போர்த்தப்பட்டிருந்த காலத்தின் ஒரு வேளையது. அவ்வேளையில் எமது பொறுப்பாளர்களில் ஒருவர் பரபரப்பான செய்தியொன்றுடன் என்னிடம் வந்தார். மகேந்தி தென்கிழக்காசிய நாடொன்றில் நிற்கின்றார் என்ற செய்தியே அது. அத்துடன் ஐரோப்பிய நாடுகளில் மகேந்தியின் நண்பர்களாகவும் எமது ஆதரவாளர்களாகவும் இருந்த சிலரிடம் மகேந்தி சில உதவிகளை எதிர்பார்த்து தொலைபேசியில் உரையாடியுள்ளார்.

தென்கிழக்காசிய நாடு ஒன்றில் நிற்கின்றார். மேலும் ஐரோப்பிய நாடுகளின் உதவிகளை எதிர்பார்க்கின்றார் என்ற வகையிலான போராளியின் கருத்தானது மகேந்தி எங்கேயோ விலகிச் சென்று கொண்டிருக்கின்றார் என்ற செய்தியை மறை முகமாகச் சொல்வதாகவே இருந்தது. உண்மையில் ஐரோப்பிய நாடுகளில் இருந்து மகேந்தியுடன் உரையாடியவர்கள் அவசரமாக அச்செய்தியை எனக்கு அனுப்பியதின் உள் அர்த்தமும் அதுவென்றே நினைக்கின்றேன். விடயத்தைக் கேட்ட நான் உடனடிப் பதிலாகவே மகேந்தியுடன் தொலைபேசியில் உரையாடும்போது எனது சுகசெய்தியைச் சொல்லுமாறும் மகேந்தியிடம் சுகம் விசாரிக்குமாறும் பணித்ததுடன், ஐரோப்பிய நாடுகளில் உள்ள மகேந்தியின் நண்பர்களிடம் அவருக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்துகொடுக்குமாறும், அவரது தேவைகளை நிறைவு செய்து கொடுக்குமாறும் கூறியிருந்தேன்.

பின்னர் தலைவர் அவர்களுடன் உரையாடக் கிடைத்த வேளையில் மகேந்தி தென்கிழக்காசிய நாடு ஒன்றில் நிற்பது தொடர்பாகவும், அவரது நிலை தொடர்பாகவும் உரையாடிய வேளையில் மகேந்திக்குத் தேவையான உதவிகளைச் செய்து கொடுக்குமாறே தலைவர் அவர்களும் கூறியிருந்தார். அவரது மனதில் மகேந்தி பற்றிய உயர்வான மதிப்பின் வெளிப்பாடாகவே அதனை நான் பார்க்கின்றேன்.

L.Henal-Mahenthy-106.jpg
 

ஓரிரு நாட்கள் கழித்து தகவல் கசிந்து சிறிலங்காவின் தகவல் ஊடகங்கள் ஆரவாரம் செய்யத்தொடங்கின. சிங்கள இராணுவ ஆய்வாளர்கள் தமது பத்தி எழுத்துக்களில் மகேந்தியைப் பற்றிக் கூறத்தொடங்கினார்கள். மகேந்தி தென்கிழக்காசிய நாடு ஒன்றில் நிற்பதனைக் கண்டறிந்து எழுதியிருந்தார்கள் அவர் இயக்கத்தில் இருந்து விலகி ஓடிவிட்டதாகவும் அதனால் இயக்கம் இனிவரும் காலங்களில் இராணுவ ரீதியாக வெல்லப்படக் கூடியதாக ஆகிவிடும் என்ற வகையிலுமாக, சிங்கள ஆய்வாளர்களின் கட்டுரைகள் நீண்டு அவர்களது கனவுலகில் விரிந்துசென்றது.

சிங்கள தேசத்திற்கு மகேந்தியின் போராற்றல் அந்த அளவிற்கு அச்சுறுத்தலாக இருந்ததை வெளிப்படுத்தி உணர்த்திய சம்பவமாக அது அமைந்தது. வெளிநாட்டிலிருந்து தாயகம் திரும்பியவுடன் மகேந்தியும் நானுமாக சிறிலங்கா அரசின் மேற்படி செய்திகளையும், வெளிநாட்டிலிருக்கும் வேளையில் மகேந்தியுடனான எமது தொலைபேசித் தொடர்புகளையும் நகைச்சுவையுடனும், நெகிழ்ச்சியுடனும் நீண்ட நேரம் உரையாடிக்கொண்டதே அவனுடன் எனது கடைசிச் சந்திப்பாக நினைவில் பதிந்துள்ளது. சென்ற நினைவுகள் இன்றும் மாறாத பசுமையான நினைவுகள் ஆகிவிட்டன.

எமது மனங்களில் குறிப்பாக எனது மனதில் மகேந்தி எங்கிருந்தாலும் எந்த வேளையிலும் போராட்டத்தின் தளத்திலேயே நிற்பவன் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தான். அதற்குக் காரணமான சம்பவம் இவ்வேளையில் மனதை அழுத்தும் நினைவாக நிற்கின்றது.

1990களின் ஆரம்ப கட்டத்தில், எமது மக்களையும் எம் எல்லோரது நெஞ்சையும் பதற வைக்கும் உள் துரோகத்தை நாம் சந்தித்திருந்தோம். தலைவர் அவர்கள் தனது போராட்ட வரலாற்றில் தாண்டிவந்த உட் துரோகங்கள் அதிகம். ஆனாலும் எமது காலத்தில், ஆயிரக்கணக்கான போராளிகளாக போராட்டம் விரிவு பெற்றுவிட்ட வேளையில் சந்தித்த இப்பிரச்சினையால் நாம் எல்லோரும் நிலைகுலைந்துதான் போனோம்.

புலனாய்வு பற்றியதும், உட் துரோகம் பற்றியதுமான விரிவான பார்வை எமக்கு இல்லாமல் இருந்த நேரம் அது. நல்லவர் கெட்டவர் என பகுத்துப் பார்க்க முடியாத குழப்பம் சூழ்ந்த நேரம். தலைவர் அவர்களையும் எமது போராட்டத்தையும் பாதுகாத்துவிட வேண்டும் என்ற முனைப்பில் ஒரு பக்க முடிவாக அல்லாமல் பலபக்க முடிவாக உட் துரோகத்தைக் கையாண்டுகொண்டு இருந்த நேரம் அது.

அந்த குழப்பமான நேரத்தில் மகேந்தியும் விசாரணைக்கு உள்ளாக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டது. மகேந்தியும் விசாரிக்கப்பட்டான். நான் இதில் விபரிக்க விரும்பாத அளவிற்கு கடுமையாகவே விசாரணையை மகேந்தி சந்திக்க வேண்டிவந்துவிட்டது. “கடுமையான சூழலது” அந்த நிலையிலிருந்தும் மகேந்தி மீண்டு வந்தான். கடுமையான சூழலைச் சந்தித்து மீண்டு வந்தபோதும் அவன் உறுதி குலையாத போராளியாக மீண்டு வந்தான்.

சாதாரணமான மனிதனுக்குப் போராட்டத்திலிருந்து ஒதுங்குவதற்கு சாதாரணமான காரணங்களே போதுமானதாக இருப்பதைக் கண்டுள்ளோம். ஆனால் மகேந்திக்கு போராட்டத்திலிருந்து விலகிச் செல்வதற்கு நிறையக் காரணங்கள் இருந்தன. ஆனாலும் அவனும் அவனது குடும்பத்தினரும் தலைவர் மீது வைத்திருந்த பற்றும் நம்பிக்கையும் அவனை இந்தப் போராட்டத்துடன் இறுகப் பிணைத்து வைத்திருந்தது.

கடுமையான சூழலைத் தாண்டிவந்தும் குழம்பாமல் இருந்தமை மகேந்தி உறுதியான போராளி என்பதைக் காட்டி நின்றது. ஆனால் இவை எல்லாவற்றிற்கும் மேலாக எமது மனதில் பாரச்சுமையை ஏற்றும் விடயம் என்னவென்றால், மகேந்தி எம்மை அதன் பின்னர் எல்லாச் சந்தர்ப்பத்திலும் சிரித்த முகத்துடன் எதிர் கொண்டதுதான். அவனுக்கு முன்னால் நாம் சங்கடப்பட்டு நின்ற வேளையில் எல்லாம், அவன் எம்மைச் சங்கடப்படுத்திவிடக் கூடாது என்ற நோக்குடன் கவனமாகப் பழகுவான்.

எங்களைச் சந்திப்பதிலோ எங்களுடன் அன்பாகப் பழகுவதிலோ அவன் பின்நிற்பதே இல்லை. எம்முடனான உரையாடல்களின் போது அவன் தடுத்து வைக்கப்பட்டிருந்த காலத்து விடயங்களை எமக்கு நினைவூட்டும் வகையிலான எந்த ஒரு சொல்தானும் வெளிவந்துவிடாது நடந்துகொள்வான். அவன் மட்டுமல்ல அவனைச் சார்ந்த உறவுகள் கூட எம்மைச் சங்கடப்படுத்தும் வகையிலான எந்தவொரு வெளிப்பாட்டையும் காட்டியதே இல்லை. மகேந்தி திட்டமிட்டு கவனமாகத்தான் எம்முடன் அவனது தடுத்துவைப்புக் காலப்பகுதி பற்றிக் கதைப்பதைத் தவிர்க்கின்றானா? அல்லது அவனது இயல்பே அதுவாகிவிட்டதா? என நாம் மனதிற்குள் மலைத்து நிற்போம்.

L.Henal-Mahenthy-D-28-copy.jpgமகேந்தி ஒரு போராளி என்பதற்கு மேலாக இவ்விடயத்தில் மிக உயர்ந்த ஒரு மனிதனாக, ஒரு போராட்ட ஞானியாக தன்னை வெளிப்படுத்தினான் என்றே நினைக்கின்றேன். அவனது இந்தப் பண்பு இயல்பிலேயே வந்ததா? அல்லது தலைவர் மீதும் எமது விடுதலைப் போரின் மீதும் வைத்த பெரும் நம்பிக்கையில் விளைந்ததா? என்பது என்னால் விடை காண முடியாத கேள்வியாக இன்றும் தொடர்கின்றது.

மகிந்த ஒரு சிறந்த பொறுப்பாளராக, போராளியாக இருந்ததை விட மேற்கண்ட பண்பால் ஒரு ஞானியாக எம் மனங்களில் நீங்காத இடம்பெற்று வாழ்கின்றான். தமிழீழம் உள்ளவரை வாழ்வான்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

நினைவுப்பகிர்வு:
ச.பொட்டு
புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
 

https://www.thaarakam.com/news/136357

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.