Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தொல் தமிழர் கொடையும் மடமும்..

12322577_10156235363270198_5418875569050

செவ்விலக்கியங்களில் பல வள்ளல்கள் பற்றிய குறிப்புகள் பரந்த அளவில் இடம் பெற்றுள்ளன. அவர்கள் வாழ்ந்த காலத்தைக் கணக்கில் கொண்டு வள்ளல்கள் முதலேழு, இடையேழு, கடையேழு என்று பகுத்துள்ளனர். ஆனால் முதலேழு மற்றும் இடையேழு வள்ளல்களுடைய பெயர்கள் அவ்வளவு எளிதாக யாருக்கும் தெரிந்திருப்பதில்லை, கர்ணனை தவிர்த்து. அவர்களைப் பற்றியத் தரவுகள் கூட மிகவும் அரிதாக இருக்கின்றன. பழங்காலத்தில் ஈகையையும் கொடையையும் ஒன்றாகப் பார்த்தனர். உண்டாட்டுக் கொடையென (தொல். பொ 58). இல்லான் கொடையே கொடைப்பயன் (நாலடி,65). என்கிறது பாடல். நுணுகிப் பார்க்கும்போது பொதுவாக ஈகையிலிருந்து முற்றிலும் வேறுபட்டது கொடையாகும்.

கொடை விளக்கம்

கொடை என்ற சொல்லிற்குத் தியாகம், புறத்துறை, திருவிழா, வசவு, அடி என்றும் ஈகைக்கு – கொடை, பொன், கற்பகம் என்றும் சென்னை பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி. (பக்.236 ) பொருள் தருகின்றது.

தமிழ்-தமிழ் அகரமுதலி கொடை என்ற சொல்லிற்கு ஈகம், தியாகம், கொடை, கைக்கொண்ட ஆநிரையை இரவலர்க்கு வரையாது கொடுக்கும் (புறத்துறை), ஊர்த்தேவதைக்கு மூன்று நாள் செய்யும் திருவிழா, வசவு, அடி(ப.- 387) என்று பொருள் சுட்டுவதைக் காணலாம்.

செவ்வியல் காலத்தில் அரசர்கள் நற்கொடை வள்ளல்களாக இருந்திருக்கிறார்கள். தம்மைப் பாடி வருகின்ற புலவர்களுக்கும் மற்றவருக்கும் பொன்னையும் பொருளையும் வரையாது கொடுத்து மகிழ்ந்தமையைச் செவ்விலக்கியங்களால் உணர முடிகிறது. பாரி, காரி, ஓரி, அதியன், பேகன், நள்ளி, ஆய் அண்டிரன் போன்றோர் கடையேழு வள்ளல்கள் என்று போற்றப்பட்டனர். பாரி முல்லைக்குத் தேரையும் பேகன் மயிலுக்குப் போர்வையையும் அளித்து அழியாப் புகழ் பெற்றனர். ஆற்றுப்படை இலக்கியங்கள் மன்னர்களின் கொடைத் தன்மையைக் கூறுவனவாக இருத்தலைக் காண்கிறோம். கல்வெட்டுக்கள், செப்பேடுகள் மூலமும் மன்னர்களின் கொடைத்தன்மைகளைக் காணலாம். கொடை குறித்து வள்ளுவர்,

தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு

வேளாண்மை செய்தற் பொருட்டு (குறள். 222)

என்று குறிப்பிடுவது நாம் ஈட்டும் செல்வம் மற்றவருக்கும் கொடுப்பதற்கே என்கிறார். கொடை குறித்து புறநானூற்றுப் பாடல் கூற்று.

“கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன்று. (புறம். 204:4)

இதோ வாங்கிக்கொள் என்று நாமே மனமுவந்து கொடுப்பது மிகச் சிறந்தது என்கிறது.

தமிழ்க் கொடை வள்ளல்கள்

முதலேழு வள்ளல்கள் :

1.சகரன்

2.காரி

3.நளன்

4.தந்துமாரி

5.நிருதி

6.செம்பியன்

7.விராடன்

இடையேழு வள்ளல்கள்:

1.அக்குரன்

2. அந்திமான்

3.கர்ணன்

4.சந்திமான்

5.சிசுபாலன்

6. வக்கிரன்

7.சந்தன்

கடையேழு வள்ளல்கள்:

1.பாரி

2.காரி

3.ஓரி

4.அதியன்

5.பேகன்

6.நள்ளி

7.ஆய் அண்டிரன்.

கடையேழு வள்ளல்கள்

பத்துப்பாட்டில் இடம்பெற்றுள்ள சிறுபாணாற்றுப்படையைப் பாடிய நல்லூர் நத்தத்தனார், ஏழு வள்ளல்கள் பற்றியும் அவர்களின் கொடைமடச் செயல்கள் பற்றியும் எடுத்துரைத்துள்ளார். கொடைமடச் செயல்கள் என்றால், பகுத்தறியாது மடமையோடு கொடையளித்த செயல்கள் என்று பொருள் கொள்ளலாம். இத்தகைய செயல்களே அவ்வள்ளல்களுக்குச் சிறப்பைச் சேர்த்துள்ளன. இவ் வள்ளல்களைப் பற்றிய செய்திகளை எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான புறநானூற்றுப் பாடல்களும் சுட்டுகின்றன.

கடையேழு வள்ளல்களும் புறநானூற்றுப் பாடல் எண்களும்

    அதியமான் நெடுமான் அஞ்சி – 100, 101, 103, 104, 206, 208, 231, 232, 236, 315, 390, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100, 101, 102, 103, 104,
    ஆய் – வேள் ஆய் அண்டிரன் – 127, 128, 129, 130, 131, 132, 133, 134, 135, 136, 240, 241, 374, 375,
    ஓரி – வல்வில் ஓரி – 152, 153, 204,
    காரி – மலையமான் திருமுடிக்காரி – 121, 122, 123, 124, 125, 126,
    நள்ளி – கண்டீரக் கோப்பெருநள்ளி – 148, 149, 150,
    பாரி – 105, 106, 107, 108, 109, 110, 111, 112, 115, 116, 117, 118, 119, 120, 236, 105, 106, 107, 108, 109, 110, 111, 112,
    பேகன் – வையாவிக் கோப்பெரும்பேகன் – 141, 142, 143, 144, 145, 146, 147,

சிறுபாணாற்றுப்படையில் (84 – 114) ஓய்மானாட்டு நல்லியக்கோடனும் வள்ளல் குமணனும் (புறம்.158) மேற்குறிப்பிட்ட கடையேழு வள்ளல்களுக்குப் பின்னர் வாழ்ந்தவர்களாக அறியப்படுகின்றனர்.

பிற வள்ளல்களும் புறப்பாடலும்

புறநானூற்றுப் பாடல்களைப் பாடிய புலவர் பெருமக்கள் அவர்கள் வாழ்ந்த காலத்தில் அரசாண்ட பிற வள்ளல்களையும் பாட்டில் பதிவு செய்துள்ளனர். அவர்களின் பெயர்கள் வருமாறு, அம்பர் கிழான் அருவந்தை – 385, அவியன் – 383, ஆதனுங்கன் – 175, 389, எவ்வி – வேள் எவ்வி – 233, 234, எழினி – அதியமான் எழினி – 230 \ எழினி – அதியமான் நெடுமான் அஞ்சி மகன் பொகுட்டெழினி – 96 \ எழினி – அதியமான் மகன் பொகுட்டெழினி – 392 \ எழினி – அதியான் மகன் பொகுட்டெழினி – 102, எழினியாதன் – வாட்டாற்று எழினியாதன் – 396,  ஓய்மானாட்டு நல்லியக்கோடன் – புறம் 176, & சிறுபாணாற்றுப்படை, ஓய்மான் நல்லியாதன் – 376, ஓய்மான் வில்லியாதன் – 379, கரும்பனூர் கிழான் – 381, 384, காரியாதி – மல்லி கிழான் காரியாதி – 177, குமணன் – 158, 159, 160, 161, 162, 163, 164, 165, கொண்கானங்கிழான் – 154, 155, 156, சாத்தன் – ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன் – 242, 243, சாத்தன் – சோணாட்டுப் பிடவூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன் – 395, தருமபுத்திரன் – 366, திருக்கண்ணன் – மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணன் – 174, திருக்கிள்ளி – ஏனாதி திருக்கிள்ளி – 167, தொண்டைமான் இளந்திரையன் – பெரும்பாணாற்றுப்படை, தோன்றிக்கோன் – தாமான் தோன்றிக்கோன் – 399, நன்னன் – செங்கண்மாத்து வேள் நன்னன்சேய்நன்னன் – மலைபடுகடாம், நாகன் – நாலை கிழவன் நாகன் – 179, பண்ணன் – சிறுகுடி கிழான் பண்ணன் – 173, 388,  பண்ணன் – வல்லார் கிழான் பண்ணன் – 181, பாரிமகளிர் – 113, 114, பிட்டங்கொற்றன் – 168, 169, 170, 171, 172, பொறையாற்று கிழான் – 391, மாறன் – ஈந்தூர் கிழான் தோயன் மாறன் – 180, மாறன் – தந்துமாறன் – 360, வள்ளுவன் – நாஞ்சில் வள்ளுவன் – 137, 138, 139, 140, 380, விண்ணத்தாயன் – சோணாட்டுப் பூச்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணத்தாயன் – 166, வெளிமான் – 238.

புறநானூற்றிலேயே போலி வள்ளல்களாகத் திகழ்ந்த மன்னர்கள் பற்றியக் குறிப்புகளும் காணக்கிடைக்கின்றன. அவர்களின் பெயர்களும் வருமாறு, இளவெளிமான் – பரிசில் சிறிது – 207, 237, கடியநெடுவேட்டுவன் – பரிசில் நீட்டித்தவன் – 205, குமணன் தம்பி இளங்குமணன் – 165, மூவன் – பரிசில் நீட்டித்தவன் – 209

இனி தொல்தமிழ் நிலத்துக் கடையேழு வள்ளல்களான பேகன், பாரி, காரி, ஆய், அதிகன், நள்ளி, ஓரி எனும் அந்த ஏழு வள்ளல்களின் சிறப்பினைக் காண்போம்.

    வள்ளல் பேகன்

தொன்மைக்காலத்தில் பழனிமலையைப் பொதினி என்று அழைத்தனர். ஊருக்கு ஆவிநன்குடி என்று பெயர் வழங்கியது. பொதினி என்பதே பிற்காலத்தில் பழனி என்று மாறிவிட்டது. ஆவியர் குலம் என்பது ஒரு குறுநில மன்னர் குடிக்குப் பெயர். அவர்கள் அரசாண்ட இடம் ஆதலால் ஆவிநன்குடி என்று ஊருக்குப் பெயர் வந்தது. ஆவி, வையாவி என்று இரு வகையிலும் ஆவியர் குல மன்னர்களை வழங்குவதுண்டு. ஆதலால் வையாவிபுரி என்றும் அழைத்தனர். அதுவே நாளடைவில் வையாபுரி என்று மாறியது. அந்த ஆவியர் குலத்தில் வந்தவன் பேகன் என்னும் குறுநில மன்னன். பாரியைப்போல அவனும் ஒரு வேள். அவனை வையாவிக் கோப்பெரும் பேகன் என்று குறிப்பிடுவர். வையாவி ஊரில் உள்ள அரசனாகிய பெரிய பேகன் என்பது இதன் பொருளாகும்.

வள்ளல் பேகன் ஓர் சிறந்த கொடையாளியாவார். புலவர்களுக்கு வாரி வாரி வழங்கும் வள்ளல். யாழை வாசித்துப் பாடும் பாணர்கள் வருவார்கள். அவன் அரண்மனையில் பல நாள் தங்குவார்கள். அவர்களுடைய இசையின்பத்தை நுகர்ந்து களிப்பான் பேகன். பிறகு பலவகைப் பரிசில்களை அளிப்பான். பொன்னாலாகிய தாமரைப் பூவை அவர்கள் அணியும்படியாகத் தருவான். அந்தக் காலத்தில் பாணர்களுக்குப் பொற்றாமரை அளிப்பது வழக்கம். பாணர்களுடைய மனைவிமார்கள் ஆடுவார்கள்; பாடுவார்கள். அவர்களுடைய ஆடல் பாடல்களையும் கண்டு மகிழ்வான். அவர்களுக்குப் பல்வகையான அணிகலன்களைப் பரிசளிப்பான். சில சமயங்களில் பாணர்களுக்கும் புலவர்களுக்கும் தேரையும் அளித்து மகிழ்வான். பொதினி எனப்படும் பழனி மலைக்குத் தலைவர். மழை வளம் மிக்க அம்மலையின் காட்டில் மயில்கள் திரிந்து கொண்டிருக்கும். ஒருநாள் அப்படித் திரிந்து கொண்டிருந்த ஒரு மயில் அகவியதைக் கேட்டு, அது குளிரால் நடுங்கி அகவியது என்று நினைத்தான். அவரகத்தே அருள் உணர்ச்சி பெருகவே, தமது போர்வையை அம்மயிலுக்குப் போர்த்தினார். மயில் போர்வையைப் பயன்படுத்திக் கொள்ளுமா? கொள்ளாதா? எனச் சிறிதும் எண்ணிப் பாராமல் இத்தகைய செயலைச் செய்தார். இவ்வாறு செய்தமையே ‘கொடைமடம்’ என்று போற்றுகின்றார்கள்.

வானம் வாய்த்த வளமலைக் கவாஅன்

கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய

அருந்திறல் அணங்கின் ஆவியர் பெருமகன்

பெருங்கல் நாடன் பேகனும்   (சிறுபாண்.84-87)

புறநானூற்ற்றின் 142ஆம் பாடலைப் பாடிய பரணர், “கழற்கால் பேகன், வரையாது (அளவில்லாது) வழங்குவதில் மழை போலக் கொடைமடம் படுவதன்றி, வேந்தரது படை மயங்கும் போரில் மடம்படான்” என்ற கருத்தை அமைத்து பாடியிருக்கிறார். பேகனின் கொடைச்சிறப்பைக் கபிலர், பரணர், அடிசில்கிழார், பெருங்குன்றூர்கிழார் போன்றோர் பதிவிட்டுள்ளனர்.

எத்துணை ஆயினும் ஈதல் நன்று என

மறுமை நோக்கின்றோ அன்றே

பிறர் வறுமை நோக்கின்று அவன் கைவண்மையே (புறம்.141:13-15)

என்று புலவர் பரணர் நயம்படச் சுட்டுகிறார்.

கொடைமடம் படுதல் அல்லது

படைமடம் படாண் பிறர் படைமயக் குறினே (புறம்.142:5-6)

இப்பரணரின் பாடல் இரந்து நிற்பவர் எத்தகுதியைப் பெற்றிருந்தாலும் வரையறை இன்றி கொடுக்கும் வண்மனம் படைத்தவன் பேகன் என்பதை அறிவிக்கிறது. கபிலர் பாட்டில்  கைவள் ஈகைக் கடுமான் பேக! (புறம்.143:6) என்றும் சுட்டுவது சிறப்பாகக் கருதப்படுகிறது. பேகனின் கொடைத் தன்மையால் அவனின் மனைவி நலிந்தவளாகி கூந்தலிலே நறும்புகையூட்டி தண்மலர் சூடிட வழி இல்லாமல் இருப்பதாக, கொடைக்குப் பிந்தைய நிலையை எடுத்துரைக்கிறார் புலவர் அரிசில்கிழார்.

ஒலிமென் கூந்தல் கமழ்புகை கொளீஇத்

தண்கமழ் கோதை புனைய (புறம்.146:9-10)

    வள்ளல் பாரி

பறம்பு மலையைத் தலைமை இடமாகக் கொண்டு ஆட்சி செய்த குறுநில மன்னர் வேள்பாரி ஆவார். இவர் கடைச்சங்கக் காலத்தைச் சார்ந்தவர். வேளிர் குலத்தில் பிறந்ததால் வேள்பாரி என அழைத்தனர். பாரி பறம்பு மலையையும் அதனைச் சூழ்ந்த பகுதிகளையும் ஆண்டவர். பறம்புநாடு முந்நூறு (300) ஊர்களைக் கொண்டதாகும். பறம்புமலை, பிறம்பு மலை என்றாகி இப்பொழுது ‘பிரான்மலை’ என்று அழைக்கப்படுகிறது. அப்போதைய பாண்டிய அரசின் எல்லையின் அருகில் வரும். இதற்கு இன்னொரு பெயர் ‘கொடுங்குன்றம்’ என்பதாகும். இம்மலை மேருமலையின் ஒரு பகுதி என்னும் புராணக்கதையும் உண்டு. பிரான்மலை சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர், காரைக்குடி திருப்பத்தூர் வட்டத்தில் சிவகங்கை ஒன்றியத்தில் கிருங்காக்கோட்டை என்னும் ஊரின் அருகில் உள்ளது. பாரியின் ஆட்சிக்குட்பட்ட பகுதியில் மொத்தம் 300 கிராமங்களே இருந்தன. அப்படி இருந்த போதிலும் அவர் மூவேந்தர்களை விட பெரும் புகழ் பெறக்காரணம் அவரது கொடைத்தன்மையே எனலாம். கேட்போருக்கு இல்லை எனாது அளிப்பது அவனது தனிச்சிறப்பாக இருந்தது.

புலவர் கபிலர் பாரியின் நண்பராக அறியப்படுகிறார். திருச்சியிலிருந்து மதுரை செல்லும் வழியில் கொட்டாம்பட்டியிலிருந்து விலகிச் செல்லும் சாலையில் கிழக்கு நோக்கிச் சென்றால் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது பிரான்மலை. பாண்டியநாட்டில் உள்ளது திருவாதவூர். அவ்வூரில் பிறந்தவர் கபிலர் எனும் புலவர்; இவர் சங்கத்தமிழ் இலக்கியப்பரப்பில் மிக அதிகமான பாடல்களைப் பாடியவர் என்ற பெருமைக்குரியவர். இவர் கலையழகுமிக்க கவிதைகளைப் பாடியவர்; ‘பொய்யாநாவிற்கபிலர்’ என்று புகழப்படுபவர். இவர் பாரியின் மிகநெருங்கிய நண்பராவார். பாரியைப் பற்றி இறவாப்புகழுடைய பாடல்களைப்பாடியவர் கபிலர். மூவேந்தர்களும் பொறாமை கொள்ளும் அளவிற்கு அரசர் வேள்பாரியின் புகழ் தென்னகம் முழுவதும் பரவி இருந்தது. பாரி மூவேந்தரால் வஞ்சித்துக் கொல்லப்பட்டார். வேள்பாரிக்கு இருமகளிர் உண்டு. அங்கவை, சங்கவை ஆகியோர் இவரது மகள்கள் ஆவர். ஆதரவின்றி இருந்த பாரியின் மகள்களுக்குத் திருமணம் செய்து வைக்க எண்ணி ஔவையார் முயன்றபோது அதனைத் தடுக்க மூவேந்தர்கள் முயன்றனர். ஆனால் ஔவையார் அவர்களைத் தடுத்து நிறுத்தி கரபுரநாதர் கோவிலில் மணம் செய்து வைத்தார். அந்தக் கோவில் தற்போது சேலத்தில் உத்தமசோழபுரம் (சோழன் இருந்த இடம்) என்ற பகுதியில் உள்ளது. மேலும் அருகில் வீரபாண்டி (பாண்டியன் இருந்த இடம்), சேலம் (சேரநிலம்-சேரன் இருந்த இடம்) உள்ளது. பாரியை ஒளவையும் சிறப்பித்துப் பாடியிருக்கிறார்.

வள்ளல் வேள்பாரியின் கொடைப்பண்பைப் பற்றிக் கபிலர் மழையைப் போல கைமாறு ஏதும் கருதாது கொடையை வழங்குபவன் என்று கூறிப் புகழின் உச்சிக்கே கொண்டு செல்வதைக் காணலாம்.

……………சுரும்பு உண

நறுவீ உறைக்கும் நாக நெடுவழிச்

சிறுவீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய

பிறங்கு வெள்ளருவி வீழும் சாரல்

பறம்பின் கோமான் பாரியும்;   (சிறுபாண்.87 – 91)

பாரி பாரி என்று பல ஏத்தி

ஒருவர்ப் புகழ்வர் செந்நாப் புலவர்

பாரி ஒருவனும் அல்லன்

மாரியும் உண்டு ஈண்டு உலகுபுரப் பதுவே (புறம்-107)

பறம்பு பாடினர் அதுவே அறம்பூண்டு

பாரியும் பரிசிலர் இரப்பின் (புறம்.108:4-5)

    வள்ளல் காரி

அதியமான் காலத்து வரலாற்றிலே வந்த காரியும் ஏழு வள்ளல்களில் ஒருவன். அவன் முழுப்பெயர் மலையமான் திருமுடிக் காரி ஆகும். மலையமான் என்பது அவன் குடிப்பெயர். திருக்கோவலூரே அவனுடைய தலைநகர். அதை நடுவிலே பெற்ற நாட்டைப் பல காலமாக ஆண்டு வந்தவர்கள் மலையமான்கள் என்னும் வீரக் குடியினர். அவர்கள் ஆண்ட நாடாதலின் அதற்கு மலையமான் நாடு என்ற பெயர் விளங்கிற்று. அது நாளடைவில் மாறி மலாடு என்று அழைக்கப்பட்டது.

வள்ளல் காரி ஈகையிற் சிறந்தவனாகவும் வீரத்தில் இணையற்றவனாகவும் விளங்கியிருக்கிறான். அவனது பெரும்படையில் தெரிந்தெடுத்த அடலேறு போன்ற வீரர்கள் இருந்தனர். அந்தப் படைப் பலத்தினால் அவனைக் கண்டால் யாரும் அஞ்சி நடுங்குவார்கள். இரு பெரு மன்னர்களுக்குள் போர் மூண்டால் அவரில் ஒரு மன்னன் மலையமான் திருமுடிக் காரியை அணுகுவான். தனக்குத் துணையாக வரவேண்டுமென்று சொல்வான். காரி தன் படையுடன் சென்று போரிலே ஈடுபடுவான். பிறகு வெற்றி யாருக்கு என்பதைப் பற்றி ஐயமே இல்லை. அவனிடம் கரிய நிறம் பொருந்திய குதிரை ஒன்று இருந்தது; காரியென்பதே அதற்கும் பெயர். அது மலையமானுடைய உள்ளம் போலப் பாயும் இயல்புடையது. சோழனுக்கோ, பாண்டியனுக்கோ, சேரனுக்கோ துணையாகச் சென்று போரிடுவான் காரி. போர் முடிவில் வென்ற மன்னன் அவனுக்குப் பற்பல பரிசில்களைத் தருவான். பொன்னும் மணியும் அளிப்பான், ஊர் அளிப்பான்; நாடு அளிப்பான். வண்டி வண்டியாகத் தான் பெற்ற பண்டங்களை ஏற்றிக்கொண்டு வருவான் காரி. யானைகளும் குதிரைகளும் தேர்களும் அவனுக்குப் பரிசிலாக கிடைக்கும்.

ஒருசில நாட்களில் அப்பொருட்கள் அனைத்தையும் காரி வாரி வீசுவான். தமிழ்ப் புலவர்களைக் கண்டால் அவன் பேரன்பு கொள்வான். அவர்களுக்குக் காதிற் கடுக்கன் போட்டுப் பார்ப்பான். தேரைக் கொடுத்து ஏறச் செய்து கண் குளிரக்கண்டு பெருமகிழ்ச்சி அடைவான். இதனால் அவனுக்குத் தேர் வழங்கும் பெரு வள்ளல் என்ற பெயர் வந்துவிட்டது. ‘’தேர்வண் மலையன்” என்று புலவர்கள் பாடிப்புகழ்ந்தனர்.

………………………  கறங்குமணி

வால்உளைப் புரவியொடு வையகம் மருள

ஈர நல்மொழி இரவலர்க்கு ஈந்த

அழல்திகழ்ந்து இமைக்கும் அஞ்சுவரு நெடுவேல்

கழல்தொடித் தடக்கை காரியும்    (சிறுபாண்.91-95)

இப்பாட்டில் மன்னன் மலையமான் திருமுடிக்காரியின் கொடைகொடுக்கும் அளவு பற்றிச் சுட்டக்காணலாம். (புறம்.121) எனும் பாட்டில், தன்னை தேடி வருகின்ற புலவர்க்கு பரிசில் வழங்கும் முன், அவர் தம் தகுதியை நன்கறிந்து அதற்கு ஏற்ப பரிசு வழங்குக என்று கபிலர் அறிவுரை கூறும் விதமாக அமைந்திருப்பதன் மூலம் பரிசில் பெறவேண்டி வந்த இரவலர்க்குப் பரிசு வழங்கியதை வெளிக்காட்டுகிறது. (புறம்.123) என்ற பாடலில், தன்னை நாடி வருகின்ற இரவலர்க்குப் பரிசாக தேரையும் கொடுத்தான் என்பதால் திருமுடிக்காரியின் கொடைச்சிறப்பு தெள்ளென விளங்கும்.

புலவர்கள் பாடி பரிசில் வாங்கச் செல்லும் முன் நாள் கிழமையும் சரியல்ல என்றும், தீமை தரும் என உணர்த்தும் சகுணங்களைப் பார்த்தும், அன்றைக்கு மலையமான் காரியின் அவைக்குச் சென்றாலும் திறன் சொல்லால் பாடினாலும் அவன் பரிசில் தருவான் என்று கூறுவதன் மூலம் புலவர்கள் பரிசில் பெறுவதற்கு நாள் கிழமையைப் பார்த்தனர் என்பதும் வெளிக்கொணரும் செய்தியாகிறது.

நாளன்று போகிப் புள்ளிடைத் தட்பப்

புதன்று புக்குத் திறனன்று மொழியினும்

வறிது பெயர்குநர் இரங்கும் அருவிப்

பீடுகெழு மலையற் பாடி யோரே (புறம்-124)

4. வள்ளல் ஆய் அண்டிரன்

நறுமணம் கொண்ட பொதிகைமலை தமிழ்நாட்டிற்கும் தமிழ்மொழிக்கும் சிறப்பைத் தருகிறது. இம்மலையைச் சார்ந்து திருக்குற்றாலம், பாவநாசம் என்னும் அழகிய இடங்கள் இருக்கின்றன. அங்கே ஆய் குடி என்பது ஓரூர். அதை ஆய்க்குடி என்று இப்போது சொல்கிறார்கள். ஆய் என்ற வள்ளல் வாழ்ந்திருந்த இடம் அது. ஆய் அண்டிரன் என்றும் அவனைப் புலவர்கள் புகழ்ந்துரைக்கின்றனர். இவனுடைய ஆட்சிக்குட்பட்டது பொதிய மலை. அக்காலத்தில் அம்மலையில் யானைகள் மிகுதியாக இருந்தன. ஆதலின் ஆய் பல யானைகளைப் பிடித்து வந்து பழக்கினான். ஆண் யானைகளைப் போருக்கு ஏற்றபடியும், பெண் யானைகளை வாகனமாகப் பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையிலும் பழக்கச் செய்தான். அவனுடைய ஆனைப் பந்தியில் நூறு யானைகளுக்குக் குறைவாக என்றும் இருந்ததில்லை என்பர். இவனிடம் அடிக்கடி பாணர்களும் புலவர்களும் வருவார்கள். அவர்களுக்கு மற்றவர்கள் கொடுப்பது போலப் பொன்னும் மணியும் கொடுப்பான்; அவற்றோடு யானையையும் பரிசிலாக வழங்குவான். யானைப் பரிசில் தருபவன் என்று போற்றப்படுகிறான்.

ஆய் மன்னன் மோசியாரை ஒருநாள் தன் தேரில் அழைத்துச் சென்றான். அந்தத் தேர் காட்டு வழியே சென்றது. அங்கே பழக்கப்பட்ட பல யானைகள் இருந்தன. அவற்றைப் பார்த்த புலவர் ஒரு பாட்டைப் பாடினார். “இந்தக் காட்டில் இத்தனை களிறுகள் இருக்கின்றனவே! இந்தக் காடு, மேகக் கூட்டங்கள் தங்கும் மலையையும் சுரபுன்னை மலரால் தொடுத்த கண்ணியையும் உடைய ஆய் அண்டிரனுடைய குன்றத்தைப் பாடிற்றே?” என்று பாடினார். அவனுடைய யானைக் கொடையையே அப்பாடலில் சிறப்பித்தார்.

…………… நிழல்திகழ்

நீலநாகம் நல்கிய கலிங்கம்

ஆலஅமர் செல்வற்கு அமர்ந்தனன் கொடுத்த

சாவம் தாங்கிய சாந்துபுலர் திணிதோள்

ஆர்வ நன்மொழி ஆயும்    (சிறுபாண்.95-99)

வள்ளல் ஆய்அண்டிரனின் கொடைச்சிறப்பினைப் பற்றி உரையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடுகிறார்.

ஈகை அரிய இழையணி மகளிரொடு

சாயின்று என்ப ஆஅய் கோயில் (புறம்.127:5-6)

இப்பாடலால் கொடைக்குக் கொடுத்தற்கு அரிய என “இழையணி” என்று குறிக்கப்படுவது தாலி தான் என்று ம.பொ.சி. தம் நூலான “மங்கல அணி” என்னும் நூலில் சுட்டுகின்றார். இதனை தாலி அல்ல என்றும் திரு.அ.தட்சிணாமூர்த்தி தம் நூலான தமிழர் நாகரீகமும் பண்பாடும்(1999) என்ற நூலில் “இழை” என்பதற்கு “அணி” என்ற பொதுப்பொருள் உண்டு என்றும் குறிப்பிடுகின்றார். திரு.கே.கே. பிள்ளை அவர்களும் ம.பொ.சியின் கருத்தை ஆதரிப்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. இருப்பினும் தனது மனைவி அணிந்துள்ள மங்கல அணியைத் தவிர எல்லாவற்றையும் வழங்கினார் என்று புலவர் சுட்டுவதைக் காணமுடிகிறது.

ஆய்அண்டிரன் இரவலராக வந்தவருக்கு யானைகளையும் பரிசாக வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கச் செய்தியாகும்.

ஆஅய் அண்டிரன், அடுபோர் அண்ணல்;     

இரவலர்க்கு ஈத்த யானையின், (புறம்.129:5-6)

விளங்குமணிக் கொடும்பூண் ஆஅய்! நின்னாட்டு

இளம்பிடி ஒருசூல் பத்து ஈனும்மோ? (புறம்.130:1-2)

மழைக் கணஞ் சேக்கும் மாமலைக் கிழவன்,

வழைப் பூங் கண்ணி வாய்வாள் அண்டிரன்

குன்றம் பாடின கொல்லோ;

களிறு மிக உடைய இக் கவின் பெறு காடே? (புறம்.131)

என்ற பாடலில் புலவர் முடமோசியார் ஆய்அண்டிரனின் நாட்டில் கொடையாகக் கொடுக்க அளவில்லாத யானையைப் பெற்றுள்ளான் என்பதை வெளிக்காட்டுகிறார். பரிசில் பெறவேண்டி யான் வரவில்லை ஆயினும் அதை ஏற்காது பரிசில் வழங்கியதையும் பாடல் எடுத்துரைக்கிறது.

இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும்

அறவிலை வணிகன் ஆஅய் அல்லன் (புறம்-134)

என்பதன் மூலம் சுயநலம் கருதாது கொடையறம் செய்பவன் அண்டிரன் என புகழப்படுகிறார். வள்ளல் ஆய் அண்டிரனின் கொடைச்சிறப்புப் பற்றி ஒளவையார் சிறப்பாகப் பாடியதைக் காணமுடிகிறது.

இருங்கடறு வளைஇய குன்றத் தன்ன ஓர்

பெருங்களிறு நல்கியோனே; அன்னதோர்

தேற்றா ஈகையும் உளதுகொல்? (புறம்-140:7-9)

    வள்ளல் அதியமான்

அதியமான் நெடுமான் அஞ்சி தகடூரை ஆண்ட அதியமான் மரபைச் சேர்ந்த சங்கக் காலக் குறுநில மன்னர்களுள் ஒருவன். இவர் வாழ்ந்த காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 2ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியைச் சேர்ந்தது. அஞ்சியின் வீரமும், கொடைச் சிறப்பும் ஒளவையார் முதலிய புலவர்களின் பாடல்களின் கருப்பொருட்களாக உள்ளன. திண்மையான உடல்வலிமை பொருந்தியவன் என்றும் சேரன், சோழன், பாண்டியன் உட்பட்ட ஏழு அரசர்களை எதிர்த்து நின்று வென்றவன், இவனது அரண்மனையில் இல்லையென்று வருவோருக்கு அடையாத வாயிலைக் கொண்டது என்றும் அவனது கைகள் மழையைப் போல் ஈயும் தன்மையுடையது. தனக்குக் கிடைத்த சாவா மருந்தாகிய நெல்லிக்கனியைத் தான் உண்ணாது ஒளவையாருக்குக் கொடுத்தான். இச்செயலே அதியமானின் கொடையின் திறனை வெளிக்காட்டுகிறது.

அந்தக் காலத்தில் மலைநாட்டை ஆண்ட மலையமான் திருமுடிக்காரி என்பவனுடன் போரிட்டு அவனது தலைநகரமான திருக்கோவிலூரை அஞ்சி கைப்பற்றியதாகத் தெரிகிறது. காரிக்குச் சார்பாக சேர மன்னன் பெருஞ்சேரல் இரும்பொறை என்பான் நெடுமான் அஞ்சியுடன் போர் தொடுத்தான். சோழ மன்னனும் பாண்டிய மன்னனும் அதியமானுக்கு ஆதரவாக இருந்தனர். எனினும் அஞ்சி இப்போரில் தோற்று இறந்தான்.  இப்போரினை நேரில் கண்ட புலவர்கள் பாடிய நூலே தகடூர் யாத்திரை என்பதாகும். இப்போது இந்நூல் முழுமையாகக் கிடைக்கப்பெறவில்லை.

இலக்கியச் சான்றுகள் மட்டுமன்றி, இம்மன்னன் பற்றிய குறிப்புடன் கூடிய ஜம்பைக் கல்வெட்டு என அறியப்படும், தமிழ் பிராமிக் கல்வெட்டு ஒன்று ஜம்பை என்னும் இடத்தில் கிடைத்துள்ளது. ஜம்பை, தென்னாற்காடு மாவட்டம் திருக்கோவிலூருக்கு அருகில் உள்ளது. சமண முனிவருக்கு இம்மன்னன் கற்படுக்கைகள் வெட்டிக் கொடுத்தது பற்றி இக் கல்வெட்டுக் கூறுகின்றது. “சதியபுதோ அதியந் நெடுமாந் அஞ்சி” என்று இம்மன்னனின் பெயர் இக் கல்வெட்டில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது கி.மு. 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 2 ஆம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதியைச் சேர்ந்தது என அறியப்பட்டுள்ளது.

……………………….. மால்வரைக்

கமழ்பூஞ் சாரல் கவினிய நெல்லி

அமிழ்துவிளை தீம்கனி ஒளவைக்கு ஈந்த

உரவுச் சினம் கனலும் ஒளிதிகழ் நெடுவேல்

அரவக்கடல் தானை அதிகனும்   (சிறுபாண்.99-103)

புறப்பாடல், (புறம்.94)  ’பெரும! நீ, நீர்த்துறையில் படிந்திருக்கும் யானை அதன்மீது ஊர்ந்துவந்து அதன் கொம்புகளைக் கழுவும் மக்களுக்கு அடங்கிக் கிடப்பது போல எம்போன்ற பாணர்க்கும் புலவர்க்கும் இனிமை தருபவன். உன் பகைவர்க்கு அந்த யானையின் மதநீர் போலக் கொடுமையானவன்’ என்கிறது. கீழ்க்காணும் பாடல் அதியமான் நெடுமானஞ்சயின் கொடைச் சிறப்பைப் பற்றிக் கூறுகின்றது.

ஒருநாள் செல்லலம்; இருநாட் செல்லலம்;

பன்னாள் பயின்று, பலரொடு செல்லினும்

தலைநாள் பொன்ற விருப்பினன் மாதோ; (புறம்-101:1-3)

இப்பாடலால் அதியமான் அரசவைக்கு பரிசில் பெறவேண்டிவரும் புலவர்க்கு ஒருநாளும் முந்தைய நாள் கொடையை விட அதிகமாகவே தரப்பட்டுள்ளதைச் சிறப்பித்துக் கூறும் அரிய பாடலாக காணப்படுகிறது.

6. வள்ளல் நள்ளி

குறிஞ்சி(மலை) வளம் செறிந்த கண்டீர நாட்டினர். இவரை நளிமலை நாடன் என்றும் கண்டீரக் கோப்பெரு நள்ளி என்றும் பெரு நள்ளி என்றும் வழங்கினர். நள்ளி, தன்னை நாடி வந்தவர்க்கு நல்குரவால் பின்னர் நலியாதவாறும் வேறோருவர் பால் சென்று இரவாதவாறும் நிரம்ப நல்கும் இயல்பினை உடையவர்.

………………………….கரவாது,        

நட்டோர் உவப்ப, நடைப் பரிகாரம்  

முட்டாது கொடுத்த, முனை விளங்கு தடக் கை,      105

துளி மழை பொழியும் வளி துஞ்சு நெடுங் கோட்டு

நளி மலை நாடன், நள்ளியும்;    (சிறுபாண்.103-107)

கண்டீரக் கோப்பெருநள்ளியின் கொடை பற்றி வன்பரணர் என்ற புலவர் சிறப்பித்துப்  பாடியிருக்கிறார்.

நள்ளி ! வாழியோ; நள்ளி ! நள்ளென்

மாலை மருதம் பண்ணிக் காலைக்

கைவழி மருங்கிற் செவ்வழி பண்ணி,

வரவுஎமர் மறந்தனர்; அது நீ

புரவுக்கடன் பூண்ட வண்மை யானே  (புறம்.149)

என்ற பாட்டினால், பாணர்களுக்குப் பரிசில் வேண்டி மன்னரிடத்தில் மீண்டும் செல்ல தேவையில்லை என்று எண்ணி மாலைநேரமும் காலைநேரத்திலும் பண்பாடுவதை மறந்தனர் என்று புலவர் கூறிமை சுட்டத்தக்கது.

    வள்ளல் வல்வில் ஓரி

ஒரு நாள் வல்வில் ஓரி தற்போது இராசிபுரம் என்று அழைக்கப்படும் ஸ்ரீ ராஜபுரம் என்னும் பகுதியில் வேட்டையாட சென்ற போது அங்கு ஒரு பன்றியின் மீது அம்பினை செலுத்த, அப்பன்றியானது ஒரு புதரில் போய் மறைந்து விட, அந்த இடத்தில் வல்வில் ஓரி சென்று பார்க்கும் போது அங்குப் பன்றிக்குப் பதிலாக ஒரு சிவலிங்கமும் அச்சிவலிங்கத்தின் மீது வல்வில் ஓரி எய்த அம்பும் அந்த அம்புப்பட்டதால் அந்த சிவலிங்கத்தில் ரத்தமும் கசிந்து கொண்டிருந்தது. இதனைக் கண்ட ஓரி சிவன்தான் தன்னை பன்றி வடிவில் வந்து சோதித்ததாக எண்ணி அவ்விடத்திலேயே சிவபெருமானுக்கு அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் என்ற பெயரில் ஆலயம் எழுப்பினான். இதனைக் குறிக்கும் வகையில் அந்த அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயிலின் கொடிமரத்தில் சிவபெருமானைக் குறிக்கும் வகையில் முட்புதரின் முன் பன்றி வடிவமும் வல்வில் ஓரியை குறிக்கும் வகையில் வாளும் கேடயமும் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு இவ்வாலய கோபுரத்தின் பின்புறத்தில் சித்திரிக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.

இவ்வோரி கடையெழு வள்ளல்களுள் மற்றொருவனான காரி எனபவனோடு போரிட்டு மாண்டான் என நற்றிணை 320 இல் கபிலர் குறிப்பிடுகிறார். நாட்டை வென்ற காரி அதை சேரமான் பெருஞ்சேரலிரும்பொறைக்குக் கொடுத்தான் என்று பரணர் பாடினார். அகநாணுற்றுப் பாடலும் இதனை உறுதி செய்கிறது.

முள்ளூர் மன்னன் கழல்தொடிக் காரி

செல்லா நல் இசை நிறுத்த வல் வில்

ஓரிக் கொன்று சேரலர்க்கு ஈத்த

செவ் வேர்ப் பலவின் பயம் கெழு கொல்லி, (அகம்.209:12-15)

மேலும் வல்வில் ஓரி நற்றிணையின் 6, 265 ஆம் பாடல்களில் சிறப்பாகப் பேசப்படுகிறான். புறநானூற்றில் வன்பரணர், கழைதின் யானையார் என்போர் இவனைப் புகழ்ந்து பாடியதைப் புறம்: 152, 153, 204 ஆம் பாடல்கள் குறிப்பிடக்காணலாம்.

ஓம்பா ஈகை விறல்வெய் யோனே (புறம்.152:32)

மழையணி குன்றத்துக் கிழவன் நாளும்

இழையணி யானை இரப்போர்க்கு ஈயும் (புறம்.153:1-2)

புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை        

உள்ளிச் சென்றோர் பழியலர்; அதனாற்

புலவேன் வாழியர், ஓரி; விசும்பின்

கருவி வானம் போல

வரையாது சுரக்கும் வள்ளியோய்! நின்னே. (புறம்.204:10-14

…………………….. நளிசினை

நறும்போது கஞலிய நாகுமுதிர் நாகத்து

குறும்பொறை நல்நாடு கோடியர்க்கு ஈந்த

காரிக் குதிரைக் காரியொடு மலைந்த

ஓரிக்குதிரை ஓரியும்    (சிறுபாண்.107-111)

மேற்கண்ட செய்திகளின் வழி, தொல்தமிழ் மக்களின் பண்பட்ட வாழ்வில் கொடைத்தன்மைகள், கொடைச்சிறப்புகள், மன்னர்களின் ஆளுமைச் சிறப்புகள், கடையேழு வள்ளல்களின் கொடைமடச் செய்திகள் போன்றவை வெளிப்பட்டு நிற்கின்றன. கொடை வள்ளல் என்ற பட்டம் வெறும் செயலுக்கான பட்டம் மட்டும் அல்ல அந்த செயல், உயர்ந்த மனநிலையில் எந்த ஒரு சிறு ஆராய்ச்சிக்கும் உட்படுத்தாமல் உள்ளத்தால் செய்யப்பட்டதாகும். இது அவன் தன்மைக்குக்  கொடுக்கப்பட்ட பட்டமாகும். பண்டைய தமிழர்கள் அறத்தைக் கூட அது செய்யப்பட்ட மனநிலையைக்  கொண்டு அறத்தில் சிறந்த அறம் போற்றி வாழ்வாங்கு வாழ்ந்தனர் என்பதற்கு இவை நற்சான்றாக விளங்குகிறது. மிகத் தொன்மைக் காலத்திலேயே கொடையைப் போற்றி வளர்த்தப் பெருமை தமிழருக்கே உரியது என மார்தட்டிக்கொள்வோம்.

முனைவர் ம. தமிழ்வாணன்,முதுநிலை ஆய்வு வல்லுநர்,செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்,தரமணி, சென்னை – 113

உசாத்துணை :

    திருக்குறள், வ.உ.சிதம்பரனார் உரை, இரா.குமரவேலன் பதிப்பு, பாரிநிலையம் சென்னை 2008
    தமிழ்ச் செவ்வியல் நூல்கள் மூலம் முழுவதும், சுப்பிரமணியன்.ச.வே.(ப.ஆ.), மணிவாசகர் பதிப்பகம், பாரிமுனை சென்னை. 2008
    உ. வே. சாமிநாதையர், பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியருரையும் 1889
    தொல்காப்பியம், பொருளதிகாரம், சி.வை.தாமோதரம்பிள்ளை பதிப்பு 1885
    சங்க இலக்கியம் (பாட்டும் தொகையும்), சு. வையாபுரிப்பிள்ளை, பாரி நிலையம், சென்னை வெளியீடு, முதற் பதிப்பு 1940,

https://www.vallamai.com/?p=88133

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.