Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியலுக்குள் பெண்கள் புகுவதை ஆணாதிக்கமே முடக்குகிறது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

‘அரசியலுக்குள் பெண்கள் புகுவதை ஆணாதிக்கமே முடக்குகிறது’

 

 

 

image_eeef64c390.jpg

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மட்டுமல்ல, மற்றுமுள்ள பல கட்சிகளும்  பெண்களை அரசியலில் முன்னுக்குக் கொண்டுவருவதில் அக்கறை காட்டவில்லை. இது  பெண்களின் பிழையல்ல. இது ஆணாதிக்கத்தின் ஒரு வடிவமேயாகும் என்று,  நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில், கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் சார்பில்,  மட்டக்களப்பு மாவட்டத்தில் உதயசூரியன் சின்னம் இலக்கம் 6இல்  களமிறங்கியுள்ள கலாநிதி சந்திரகாந்தா மகேந்திரநாதன் தெரிவித்தார்.  

தமிழ்மிரருக்கு அவர் வழங்கிய செவ்வியின் முழு விவரம் வருமாறு,   

கேள்வி - கிழக்குப் பல்கலைக்கழகத்திலே கடந்த 30 வருடகாலமாக விரிவுரையாளராகவும் சிரேஷ்ட ‪விரிவுரையாளராகவும் நிர்வாகியாகவும் கடமையாற்றிய கல்வியாளரான தாங்கள் உப வேந்தராக நியமனம் பெறலாம் என எதிர்பார்க்கப்பட்டவர். அவ்வாறிருக்கும் நிலையில் திடீரென அரசியலுக்குள் ஈர்க்கப்பட்டதன் காரணமென்ன?

பலரின் வேண்டுகோளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் இணங்க நான் இவ்வாறு அரசியலுக்குள் நுழைய நேரிட்டுள்ளது. 

குறிப்பாக பெண்கள் அரசியலிலே ஈடுபட வேண்டும். பெண்கள் எல்லாத் துறைகளிலும் ஒதுக்கப்பட்டுவரும் ஒரு நிலையுள்ளது. குறிப்பாக கிழக்குப் பல்கலைக்கழகத்திலே ஒரு பெண் இதுவரை ஓர் உபவேந்தராக வருவதற்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டே வந்துள்ளன. 

அந்தக் குறைபாட்டை நிவர்த்தி செய்வதற்கு நான் இரண்டு தடவைகள் முயற்சித்தேன். அதில் இறுதி வரை வெற்றி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த வேளையில் துரதிர்ஷ்டவசமாக அது கைகூடவில்லை. 

ஆயினும் நான் ஒரு கல்வியாளர், புத்திஜீவி எனும் அளவுக்கு அப்பல்கலைக்கழகம் என்னை வளர்த்து விட்டிருக்கின்றது. இதற்கு நான் அந்தப் பல்கலைக்கழகத்துக்கு என்ன கைம்மாறு செய்யப்போகின்றேன் என்ற கேள்வி என்னுள் எப்போதும் எழுவதுண்டு. அதன் உந்துதல்தான் நான் ஏன் உபவேந்தராக வரக் கூடாது. வந்து என்னால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும் என்று ஆதங்கம் இருந்தது. 

ஆனால், நான் உபவேந்தராக வரவேண்டும் என்று எதிர்பார்த்தது தனியே எனக்கு ஒரு முகவரி வேண்டும் ஓர் உயரிய அந்தஸ்து கிடைக்க வேண்டும் என்பதற்காக அல்ல. 

அதனால், நான் உபவேந்தராக வந்து, மட்டுப்படுத்தப்பட்ட சேவைகளைப் புரிவதை விட அரசியல் பலத்தோடு கூடிய எல்லையற்ற சேவைகளைச் செய்ய முடியும் என்ற சிந்தனையின் அடிப்படையில் இந்த அரசியல் நுழைவு அமைந்தது. 

அபிவிருத்தி சார்ந்த அரசியல் பலம், எங்களுக்கு இல்லை. அபிவிருத்தி சார்ந்த அரசியல் பலம் என்பது, எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்திருப்பது அல்ல. அபிவிருத்தி சிந்தனைகளோடு சார்ந்த அரசியல் பலம் எமக்கு இருந்திருக்குமாக இருந்தால் கிழக்குப் பல்கலைக்கழகம் உட்பட கிழக்கு மாகாணத்தில் எத்தனையோ எண்ணிலடங்கா அபிவிருத்திகளை நாம் அடைந்திருக்க முடியும். 

ஆகவேதான் அரசாங்கத்தோடு சேர்ந்த அபிவிருத்தி சார்ந்த அரசியல் பலத்தோடு ஏன் நான் முயலக் கூடாது என்று. சிந்தித்தேன். 

கேள்வி - நீங்கள் கூறும் அபிவிருத்தி சார்ந்த அரசியல் பலத்தைப் பெறவேண்டும் என்பதற்காக கிழக்குத் தமிழர் ஒன்றியம் என்ற கட்சியை நீங்கள் தேர்ந்தெடுத்ததற்கான காரணம் என்ன?

ஆம், நாங்கள் பார்க்கின்ற பெரிய கட்சிகள், கூட்டைமப்பு இப்படியான கட்சிகளைப் பற்றிப் பல கேள்விகள் ஐயப்பாடுகள், பெண்கள், இளைஞர்கள் மத்தியிலே விரக்திகள் உள்ளன. 

இந்த விரக்தி மக்களுக்கு அரசியலில் உள்ள ஆர்வத்தையும் வாக்களிக்கத் தேவையில்லை என்ற அவநம்பிக்கையையும் குறைத்து விடுமோ என்கின்ற பயம் இருந்தது. 

இவ்வேளையில் என்னைப் பல கட்சிகள் அணுகின. ஆனாலும் தமிழர் எனும் தனித்துவம் பற்றி நான் மிகக் கவனமாக இருந்தேன். தமிழர் எனும் உரிமையை நாங்கள் விட்டுக் கொடுக்காமல் அரசியல் பலத்தைப் பெற்று அரசாங்கத்தோடு இணைந்து அபிவிருத்தியை மேற்கொள்ளப் பேரம் பேசும் சக்தியாக இருந்தால் சிறப்பாக இருக்கும் என்ற சிந்தனைக்கேற்ப ஆதியிலிருந்து தமிழர்களால் அங்கிகரிக்கப்பட்ட கட்சிதான் தமிழர் விடுதலைக் கூட்டணி. அக்கட்சி தமிழரின் உரிமைக்காகப் போராடும் ஒரு கட்சி. அதனால்தான் நான் உதய சூரியன் சின்னத்தைக் கொண்ட கிழக்குத் தமிழர் ஒன்றியத்தில் இணைந்து கொண்டேன். 

எதிர்க்கட்சியிலே இருந்து எதுவும் முடியாது என்பதை நாங்கள் பல தசாப்த காலங்களாகக் கண்டு வந்திருக்கின்றோம். 

கேள்வி - மட்டக்களப்பில் அரசியலுக்கூடாக எதனைச் சாதிக்கலாம் என நினைக்கிறீர்கள்?

இது நல்லதொரு கேள்வி. நிச்சயமாக மட்டக்களப்பை எடுத்துக் கொண்டால், இங்கு கல்வித் தரம் மிகவும் கீழ் நிலைக்குப் போய்க் கொண்டிருக்கின்றது. 

52.3 சதவீதம் பெண்களைக் கொண்ட மாவட்டம் இது. பெண்கள் ஏராளமான பிரச்சினைகளை அனுபவிக்கும் மாவட்டம். குறிப்பாகச் சொல்லப்போனால் விதவைகள் அதிகம். பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் எண்ணிக்கையில் அதிகம். கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் இந்த மாவட்டத்தில் அதிகம். 

போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் அதிகம்.  காணாமலாக்கப்பட்டோரில் தங்கி வாழும் பெண்கள் அதிகம். அத்தோடு இளம் பெண்கள் மத்தியிலே பலவிதமான சமூக கலாசாரப் பண்பாட்டுப் பிரச்சினைகள் குறிப்பாகத் தற்கொலை செய்து கொள்ளும் இளம் பெண்கள் உள்ள மாவட்டம். 

ஆகவே பெண்கள் சம்பந்தமான கண்டு கொள்ளப்படாத பிரச்சினைகள் அதிகமுள்ள மாவட்டமாக மட்டக்களப்பு இருக்கிறது. 

எனவே, இப்படிப்பட்ட பிரச்சினைகளுக்கு முடிவு கண்டாக வேண்டும். அப்படியாக இருந்தால் இந்த மாவட்டத்தின் சார்பாக ஒரு பெண் பிரதிநிதித்துவம் நாடாளுமன்றத்திலே இருக்க வேண்டும். 

இளைஞர், யுவதிகளின் வேலை வாய்ப்பும் இங்கே பாராமுகமாக இருக்கின்றது. இந்த விடயங்கள்தான் நான் மாற்றம் காண வேண்டும் என்று அவாவுறும் என்னுடைய முக்கியமான நிகழ்ச்சி நிரலில் உள்ளன. 

வேலைவாய்ப்பை எப்படிக் கொடுக்கலாம் என்று ஆராயும்போது எங்களுடைய இயற்கை வளங்களைப் பயன்படுத்தி அதனை மூலதனமாகக் கொண்டு என்னுடைய நிபுணத்துவத்தைப் பிரயோகித்து பலவிதமான அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ளும்பொழுது நிச்சயமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரியதொரு மாற்றத்தைச் சாதித்துக் காட்ட முடியும். 

கேள்வி - மட்டக்களப்பில் கல்வித் துறையிலும் நிர்வாகத் துறையிலும் பெண்கள் உயர் பதவிகளில் கோலோச்சுகிறார்கள். ஆனால் அரசியலில் அவ்வாறு இல்லையே?

ஆம்! அது உண்மை. பெண்களுக்கான சந்தர்ப்பம் வழங்கப்படாமல் ஆணாதிக்கம் மேலோங்கி இருப்பதே இதற்குக் காரணமாகும். இது எனக்கு மிகவும் வேதனையையும் சீற்றத்தையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்ற ஒரு விடயமாகும். 

தமிழர் கூட்டமைப்பை எடுத்துக் கொண்டால், மட்டக்களப்பிலே ஒரு தசாப்த காலத்துக்கும் மேலாகப் பெண்களை ஒரு பிரதிநிதியாக, ஒரு வேட்பாளராக அவர்கள் தேர்ந்தெடுக்கவில்லை. 

மக்கள் மத்தியிலே நீண்ட வரலாற்றைக் கொண்ட இந்தக் கட்சி, பெண்கள் பற்றி ஏன் அக்கறை கொள்ளவில்லை? அவர்களைப் பார்த்து நான் கேட்கின்றேன், நீங்கள் பெண்களைப் புறக்கணிக்கின்றீர்களா அல்லது ஆணாதிக்கமா அல்லது உங்களால் முடியாமற்போன காரியங்களைப் பெண்கள் சாதித்துக் காட்டி விடுவார்கள் என்ற பயமா என்றும் எனக்குக் கேட்கத் தோன்றுகின்றது. 

கூட்டமைப்பு மட்டுமல்ல மற்றுமுள்ள பல கட்சிகளும் பெண்களை அரசியலில் முன்னுக்குக் கொண்டு வருவதில் அக்கறை காட்டவில்லை. நீங்கள் கூறியதுபோல, மட்டக்களப்பு மாவட்டத்திலே மாவட்டச் செயலாளர் ஒரு பெண்ணாக இருக்கின்ற அதேவேளை மற்றுமுள்ள பல கூட்டுத்தாபன திணைக்களங்களின் தலைவர்களாகவும் பெண்கள் இருக்கின்றார்கள். இவ்வாறெல்லாம் இருக்கும்போது, ஏன் அரசிலுக்குள் அதிகார முடிவெடுக்கும் அந்தஸ்தில் பெண்களைக் கொண்டு வருவதற்கு இக்கட்சிகள் அக்கறை காட்டவில்லை.? 

கூட்டமைப்பிலே சில வேட்பாளர்கள் மூன்றாவது தடவையாகவும் போட்டியிடுகின்றார்கள். அவ்வாறானவர்கள் கடந்த 30 வருட அரசியலிலே என்ன சாதித்தார்கள் என்பது விடை காண முடியாத பெரிய கேள்வியாகும். 

அல்லது அவர்களது கல்விப் புலம், அவர்களது மொழியாற்றல், உலக நடப்புகள், உள்ளூர் நடப்புகள் பற்றிய அறிவு இவையெல்லாம் கேள்விக்குரிய விடயங்கள். அரசியலிலே அவர்களுடைய பங்குதான் என்ன? பெண்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதிலே அவர்களின் பங்கு என்ன? 

ஆகவேதான் நான் இடித்துரைக்கின்றேன். இது பெண்களின் பிழையல்ல. இது ஆணாதிக்கத்தின் ஒரு வடிவமேயாகும். 

கேள்வி - நீங்கள் கூறும் இவ்வாறான பால்நிலைப் பாகுபாடுகள் வேரூன்றியிருக்கின்ற அரசியலுக்குள் நுழைந்து நீங்கள் அதனை முறியடித்து எவ்வாறான மாற்றத்தைக் கொண்டுவரலாம் என நினைக்கிறீர்கள்?

நிச்சயமாக இதை முறியடித்து மாற்றத்தைக் கொண்டுவர முடியும். இதற்குத் துணிவுள்ள பெண்கள் முன்வரவேண்டும். நீங்கள் சொன்னதுபோல எங்களுடைய கலாசார பண்பாட்டு விடயங்களைப் பார்க்கின்றபோது குறிப்பாக தமிழ்ப் பெண்கள் அரசியலுக்குள் உள்வாங்கப்படுவதென்பது மிகவும் அசாதாரண விடயமாகும். 

ஆனால் அந்தச் சவால்களை என்னால் எதிர்கொள்ள முடியும். காரணம் என்னவென்றால் முதலாவது என்னிடமுள்ள சேவை மனப்பான்மை. அதனால்தான் நான் எனது எஞ்சியிருக்கும் பல்கலைக்கழக உயர்பதவிகளைத் துறந்துவிட்டு சவால் நிறைந்த அரசியலுக்குள் நுழைந்திருக்கின்றேன். இது எனது தியாகத்தின் அடிப்படையில் இடம்பெற்றதாகும். 

அடுத்தது, எனது சவால்களை எதிர்கொள்ளும் எனது மனத்துணிவு. 

நான் ஒரு தமிழ்ப் பெண்ணாக அவ்வளவு வலிகளைச் சுமந்தவள் என்கின்றபடியால் எந்தச் சவால்களையும் எதிர்கொள்ள எந்தக் கணப்பொழுதும் நான் தயார்.

நான் கல்விப் பின்புலத்தில், அதிகார மட்டத்தில், கடந்து வந்த போர்ச் சூழலில் எத்தனையோ வலிகளைச் சுமந்து, எதிர் நீச்சலடித்து வந்துள்ளேன். இவை எல்லாம் எனக்கு உரம் சேர்த்துள்ளன. உந்துகோலாகப் பெரிய சக்திகளாக இருந்துள்ளன. 

ஆகவே, பெண் பிரதிநிதிகள் என்று வருகின்றபொழுது, பலவிதமான பிரச்சினைகள், சவால்கள் வருகின்றன. அவற்றை எதிர்கொள்ள மனத்துணிவு வேண்டும். 

நிச்சமாக இவ்வாறான எந்தச் சவால்கள் இனி எதிர்காலத்திலும் என்னை எதிர்கொண்டாலும் அவற்றை நேரெதிரே நின்று நான் முறியடித்துக் காட்டுவதுமட்டுமல்ல ஒரு பெண்ணால் இந்தக் கிழக்கு மாகாணத்திலே மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதைச் செயலில் நிரூபிப்பேன். 

கேள்வி - இந்தத் தேர்தலிலே வெற்றி வாய்ப்புக் கிடைத்து, நாடாளுமன்றம் பிரவேசித்தால் எவற்றை முக்கியத்துவப்படுத்துவீர்கள் ?

முதலில் கிழக்கிலிருந்தும் தமிழர்கள் மத்தியிலே பன்மொழி ஆற்றல் கொண்ட ஆளுமையுள்ளவர்கள், நிபுணத்துவம் நிறைந்தவர்கள், துணிச்சலானவர்கள், தியாக மனப்பான்மை கொண்டவர்கள், நேர்மையும் நெஞ்சுறுதியும் கொண்டவர்கள் நாடாளுமன்றம் நுழைந்துள்ளார்கள் என்பதை நிரூபிப்பேன். சொந்தக் காலில் நிற்க முடியும் என்பது அங்கு நிரூபணமாகும். வெளியாரைத் தங்கியிருக்கும் நிலை இல்லை என்று உறுதிப்படுத்தும் செயற்றிட்டங்களை அமலாக்குவேன். ஒட்டுமொத்தமாக, கிழக்குத் தமிழர்கள் தலைநிமிர நான் வழிவகை செய்வேன். 

ஏன் நான் இதனைச் சொல்கின்றேன் என்றால், வெளிநாட்டிருந்து தூதுவர்கள், பிரதிநிதிகள், இராஜதந்திரிகள் போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களைப் பார்வையிட வரும்போது, அவர்கள் தமிழர்களைச் சந்திக்க வேண்டுமாக இருந்தால் அவர்கள் வடக்குக்குத்தான் அனுப்பப்படுகின்றார்கள். ஏன் கிழக்கிலே தமிழர்கள் வாழவில்லையா? கிழக்கிலே மக்களின் பிரதிநிதிகள் இல்லையா? கிழக்கு மாகாணம் போரினால் பாதிக்கப்படவில்லையா? 

ஆகவேதான் நான் சொல்லுகின்றேன் கிழக்கிலும் தமிழர்கள் வாழ்கின்றார்கள் என்பதை வெளியுலகின் கண் திறக்கப்படும்படியாக நிரூபித்துக் காட்ட வேண்டும். 

கிழக்கின் அபிவிருத்தி அதையும் செயல் ரீதியாக நிரூபித்துக் காட்டுவேன். 

கேள்வி - நீங்கள் இவற்றையெல்லாம் கோடிட்டுக் காட்டினாலும் பல்லின மக்கள் வாழ்கின்ற கிழக்கு மாகாணத்திலும் நீங்கள் களமிறங்கியுள்ள மட்டக்களப்பு மாவட்டத்திலும் அடிக்கடி இனவாத சிந்தனைகள் தூண்டி விடப்படுவதால் அழிவுகளும் அமைதியின்மையும் அவ்வப்போது ஏற்படுகின்றன. அதனைக் கையாள என்ன வழி?

நான் இவ்விடத்தில் உதட்டளவில் கூறாமல் உள்ளத்திலிருந்து கூறுகின்றேன், பேச்சுவார்த்தையால் தீர்க்கப்பட முடியாத எந்தப் பிரச்சினையும் இருக்க முடியாது. 

உணர்வுகளை உசுப்பேற்றக் கூடிய இவ்வகையான இன முறுகல்களைப் பார்க்கின்றபோது இவை மிகவும் கவனமாக அணுகப்பட வேண்டும். எந்தவிதமான உள்நோக்கமும் இல்லாமல் மனத்தூய்மையோடு நோக்கப்பட வேண்டியவை. 

இதற்கு நாங்கள் தெரிவு செய்கின்ற அரசியல்வாதிகளிடம் இத்தகைய மனத்தூய்மை இருக்க வேண்டும். 

பிரச்சினையில் யார் சிக்கியிருந்தாலும் சிக்க வைக்கப்பட்டாலும் பொதுவாக மனிதர்கள் என்கின்ற வகையில் மனிதர்களை நாம் மனிதாபிமானத்தோடு மதித்து அணுக வேண்டும். 

அப்படி இருந்தாலும் இனக் கலகங்களை இலகுவாகத் தீர்த்து, அமைதியையும் அபிவிருத்தியையும் அச்சமில்லாத ஆக்கபூர்வ வாழ்வையும் தோற்றுவிக்கலாம்.   

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/அரசியலுக்குள்-பெண்கள்-புகுவதை-ஆணாதிக்கமே-முடக்குகிறது/91-253071

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.