Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெண்களுக்கு எதிரான  அவதூறு பேச்சுக்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

பெண்களுக்கு எதிரான  அவதூறு பேச்சுக்கள்

இலங்கையில் மொத்த மக்கள் தொகையில் 52 சதவீதமானவர்கள் பெண்களாக இருந்தபோதிலும் பாராளுமன்றத்தில் இவர்களின் பிரதிநிதித்துவம் 5.3 சதவீதமும் மாகாண சபையில் 4 சதவீதமும் உள்ளுராட்சி மன்றத்தில் 23.8 சதவீதமாகவுமே (இது பெண்களுக்கு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 25 வீத கோட்டா வழங்கப்பட்ட பின்னர்) காணப்படுகின்றது. 

சட்டவாக்கத் தத்துவம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட  பிரதிநிதிகளைக்கொண்ட பாராளுமன்றத்தினாலும் மக்கள் தீர்ப்பொன்றின்போது மக்களாலும் பிரயோகிக்கப்பட வேண்டும். மீயுயர் அதிகாரத்தை கொண்ட பாராளுமன்றத்திற்கு மக்கள் தமது ஆணையை வழங்கி பிரதிநிதிகளை தெரிவு செய்யும் செயற்பாட்டில் பெண்கள் அதிகளவில் உள்வாங்கப்படாமை கவலைக்குரிய விடயமாகும். மக்கள் பிரதிநிதிகளாக பெண்களை பாராளுமன்றத்திற்கு அனுப்புவது மிகவும் சவால் மிக்க விடயமாக மாறி வருவதையே நடைமுறையில் காணக்கூடியதாக உள்ளது. பெண்களுக்கு எதிரான உளவன்முறை பேச்சுக்களின் அதிகரிப்பு அவர்களின் அரசியல் பிரவேசத்தை தடுப்பதற்கான பிரதானமான காரணமாக அமைந்து விடுகின்றது. 

பெண்கள் என்ற காரணத்துக்காக அவர்களை இழிவுப்படுத்தும் வதந்திகள், எதிர்மறையான பிரசார நடவடிக்கைகள், சமூக வலைத்தளங்களை முன்னிறுத்தி மேற்கொள்ளப்படும் பாலியல் ரீதியான அவதூறு பேச்சுக்கள் மற்றும் பெண்ணின் பொது விம்பத்தை பாதிக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் மாத்திரமன்றி கலாசார சமூக ரீதியில் திணிக்கப்படும் கட்டுப்பாடுகளும் பெண்களின் அரசியல் பிரவேசத்துக்கு தடையாக உள்ளன.

1931ஆம் ஆண்டு இலங்கையில் சர்வஜன வாக்குரிமை அறிமுகப்படுத்தப்பட்டது. பிரித்தானிய காலனித்துவத்தின் கீழிருந்த நாடுகளில் முதன் முதலில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய நாடு எமது நாடாகும். வளர்ச்சியடைந்த பல நாடுகளில் அப்போது பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டிருக்கவில்லை. இவ்வாறான வரலாற்றை கொண்டிருக்கும் இலங்கையில் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இன்னும் 6 சதவீதமாகக் கூட அதிகரிக்கப்படவில்லை. அது மாத்திரமன்றி தெற்காசியாவில் குறைந்தளவு பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை கொண்ட நாடும் இலங்கையாகும.

ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் பதிவு செய்யப்பட்ட 44 கட்சிகள் மற்றும் 352 சுயேச்சை குழுக்களினூடாக 7458 வேட்பாளர்கள் களத்தில் குதித்துள்ளதுடன் இவர்களில் 819 பேர் பெண் வேட்பாளர்கள் ஆவர். 

பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் முகமாக பல்வேறு பெண்கள் அமைப்புக்களும் அரச சார்பற்ற நிறுவனங்களைச் சேர்ந்த பெண் செயற்பாட்டாளர்கள் என பலரும் கடந்த பல தசாப்தங்களாக அயராது உழைத்து வருவதோடு அரசியல் தொடர்பில் பெண்களுக்கான பயிற்சிகளையும் அளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

இவ்வாறானதொரு பிண்ணனியில் பெண்களுக்கெதிரான உளவன்முறைப் பிரயோகங்களால் அவர்களின் அரசியல் பிரவேசத்துக்கு பெரும் சவால் ஏற்பட்டுள்ளது. இவ்வாறான சவால்களை எதிர்கொண்ட பல பெண்களிகளில் ஒருவரே நளினி ரட்ணராஜா. 

Nalini_Ratnaraja.jpg

கடந்த 20 வருடங்களாக பெண் செயற்பட்டாளராக மக்களின் பிரச்சினைகள் மற்றும் பெண்களின் அரசியல் பிரவேசம் தொடர்பில் அக்கறையுடன் செயற்பட்டு வரும் இவர் இம்முறை பொதுத்தேர்தலில் களமிறங்கும் வாய்ப்பையும் இழக்க நேரிட்டுள்ளது. இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்.

“முன்னரெல்லாம் பெண்களை பற்றி அவதூறாக பேசுவது என்பது மொட்டைக் கடதாசியின் மூலமே இடம்பெற்றது.  ஆனால் தற்போது அது சமூக வலைத்தளங்கள் மூலம் அரங்;கேறி வருகிறது. பெண்களுக்கு எதிரான பாலியல் தாக்குதல்கள், கலாசாரம், அரசியல், குடும்ப பொறுப்பு போன்றவை பெண்கள் அரசியலுக்கு வர தடையாக உள்ளன. இதனை சொல்லிச்சொல்லி பெண்களை முடக்கி விடுகின்றனர். 

வேட்பாளர் பட்டியலுக்குள் வருவதான ஊகம் வந்தவுடனேயே என்மீது சரமாரியாக பாலியல் ரீதியான தாக்குதல்கள் மேற்கொண்டதுடன் என்னை நடத்தை கொலை செய்தார்கள். பெண்களை அரசியலுக்கு ஏற்றவாறு மாற்றுவதற்கு பயிற்சிகளை அளித்து வரும் நான் அரசியலுக்கு வருவேன் என்ற பயத்தில் என் பயணத்தை தடைச்செய்ய பார்க்கின்றார்கள”; என்று கூறினார். மேலும் பெண்களை அரசியலுக்கு உள்வாங்குவதற்கான அவசியத்தையும் வலியுறுத்துகின்றார். 

“நாட்டின் பொருளாதாரத்துக்கு பெண்கள் கனிசமான அளவில் பங்களிப்பு செய்து வரும் அதேவேளை நிர்வாகத்துறையிலும் பல உயர் பதவிகளிலுள்ள பல பெண் ஆளுமைகளை காணக்கூடியதாக உள்ளது. இவ்வாறானதொரு நிலையில் கொள்கைகளும் சட்டங்களும் இயற்றப்படும் இடமான பாராளுமன்றத்தில் பெண்கள் மற்றும் சமூகம் சார்ந்த விடயப்பரப்பு தொடர்பில் பெண்களின் குரல் எழுப்பப்பட வேண்டும். ஆகவே அவர்கள் தீர்மானம் எடுக்கப்பட வேண்டிய இடத்தில் இருப்பது கட்டாயத் தேவையாகும். 

அரசியல் பிரசாரங்களில் பேசுபொருளாக பயன்படுத்தப்படும் காணாமல் போனோர் பிரச்சினை, பெண்களின் வளப்பகிர்வு தொடர்பான போராட்டம், காணி விடுவிப்பு போராட்டம் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை போன்றவற்றுக்கு இன்னும் தீர்வு வழங்கப்படவில்லை. இந்த பிரச்சினைகளால் அதிகளவில் பாதிக்கப்படுள்ளதும் பெண்களே. ஆகவே இவற்றுக்கு தீர்வினை பெற்றுக்கொள்வதற்கு இப்பிரச்சினைகள் தொடர்பில் களத்தில் குரல் கொடுத்து விளிம்பு நிலை மக்களுடன் சேவையாற்றிய பெண்களை கட்டாயமாக பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்து அனுப்ப வேண்டியது பெண்களாகிய எம்மனைவரினதும் பொறுப்பாகும்” என்றார்.

உள்ளக பாராளுமன்ற ஒன்றியத்தின் (Inter Parliamentary Union) 2019ஆம் ஆண்டு அறிக்கையினடிப்படையில் அதிக பெண்களை பாராளுமன்றத்தில் கொண்டுள்ள நாடுகளின் பட்டியலில் 61.3 சதவீதத்தை பெற்று ருவாண்டா முதலிடத்தை பெற்றுள்ளது. தெற்காசியாவில் குறிப்பாக பெண்களை அரச தலைவர்களாக உருவாக்கிய நாடுகளாக இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகள் உள்ளன. 

உலகில் முதலாவது பெண் பிரதமரையும் இலங்கையில் நிறைவேற்ற அதிகாரம் கொண்ட முதல் பெண் ஜானாதிபதியை கொண்ட நாடாக நாம் பெருமையாக எம்மை அடையாளப்படுத்திக் கொண்டாலும். இவ்வாறு அரசியலில் பிரவேசித்த பெண்களில் பெரும்பாலானோரின் அரசியல் பிரவேசம் அவர்களின் அரசியல் குடும்ப பின்னணியாலேயே சாத்தியமாகியது. 

இலங்கையில் காணப்படும் சமூக கட்டமைப்பு மற்றும் ஆணாதிக்க சிந்தனை காரணமாக பெண்களின் அரசியல் பிரவேசம் இன்னும் எட்டாக்கனியாகவே உள்ளது என்கிறார் அரசியலில் பெண்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டாளர் வெராய் பல்தசார்.

Virai_Balthasar.jpg

“எமது கலாசாரத்தை எடுத்துக்கொண்டால் தாய்மை மிகவும் புனிதமான பெருமையான விடயமாகவும் பார்க்கப்படுகின்றது. அதனால் பெண்ணின் வகிபாகம் குடும்பத்துக்குள்ளேயே மட்டுப்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்து வலுபடுத்தப்படுகின்றது. பொது தளத்தில் உயரிய பதவியுடன் அதிகாரத்துடன் பெண் இருப்பது பெரிதாக வரவேற்கப்படுவதில்லை. இதனால் பெண்களின் அரசியல் பிரவேசம் பெரிதாக ஊக்குவிக்கப்படுவதில்லை. இவையனைத்தையும் தாண்டி ஒரு பெண் அரசியலில் கால்பதித்து விட்டால் அவதூறு பேச்சுக்களால் அவள் பல்வேறு துன்பங்களுக்கு உள்ளாக வேண்டியுள்ளது. 

பெண் வேட்பாளர்கள் இவ்வாறான உள வன்முறை பேச்சுக்களால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். ஆகவே இவர்கள் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுவதற்கு செலவழிக்கும் நேரத்தில் இவ்வாறான அவதூறு பேச்சுக்களுக்கு பதிலளிப்பதற்கும் நேரத்தை செலவிட வேண்டியுள்ளது. இது பெண்களின் அரசியல் பிரவேசத்தை தடுப்பதற்கு திட்டமிட்டு முன்னெடுக்கப்படும் ஒரு செயலாகும். 

அனைத்து பெண்களும் கட்சி பேதமின்றி பெண்கள் தொடர்பான பொது பிரச்சினைகளுக்கு ஒருமித்த குரலையெழுப்ப வேண்டும் என்கிறார் வெராய் பல்தசார்.

அபிவிருத்திடைந்த நாடுகளில் அரசியலில் உள்வாங்கப்பட்டுள்ள பெண் தலைவிகள் சிறந்த சட்டங்களை இயற்றுவதிலும் கொள்கை வகுப்பதிலும் தலை சிறந்து விளங்குகின்றனர். நியூசிலாந்தின் பிரதமர் ஜசிந்தா ஆடன் உலகை அச்சுறுத்தியுள்ள கொரோனா வைரஸ் தாக்குதலின் போது தமது தூரநோக்க தீர்மானங்களின் மூலம் நாட்டு மக்களை கொவிட் வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்ததுடன் நாட்டை குறுகிய காலப்பகுதியில் வழமைக்கு கொண்டுச்சென்றதையும் காணக்கூடியதாக இருந்தது. 

இலங்கையிலும் இவ்வாறான தூர நோக்கு சிந்தனையுள்ள பெண்கள் பலர் உள்ளனர். ஆகவே பாராளுமன்றத்தில் பெண் பிரதிநிதிகளை அதிகளவில் உள்வாங்குவதற்கு இம்முறை தேர்தலில் மூன்று விருப்பு வாக்குகளில் ஒன்றையேனும் பெண்ணொருவருக்காக பயன்படுத்துவோம் என “அவளுக்கு ஒரு விருப்பு வாக்கு என பிரச்சார நடவடிக்கையினூடாக நாடாளவிய ரீதியில் பெண்களை விழிப்பூட்டி வருகின்றார் மனித உரிமை ஆர்வலர் ஷெரின் சரூர்.

Shreen_Saroor.jpg

 “பெண்கள் பிரசாரங்களுக்கு செல்லும் போது பாலியல் சேட்டைகளால் அவர்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகுவதோடு இது தொடர்பில் வெளிப்படுத்தவோ முறைப்பாடு செய்யவோ முன்வருவதில்லை. இன்னும் எமது கலாசார பின்னணியின் அடிப்படையில் பெண்களின்  அரசியல் பிரவேசத்தை தடுக்கும் வகையிலேயே ஆணாதிக்க சமுதாயம்  செயற்படுகின்றது. 

நீதி பொறுப்புக்கூறல் சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய சமூகத்தை கட்டியெழுப்புவதற்கும் பல்லின மக்களின் உரிமைகளையும் அவர்களது மத கலாசார பல்வகைத்தன்மையை கட்டியெழுப்புவதற்கும் அரசியல் களத்தில் தங்களின் ஆளுமையையும் திறமையையும் வெளிக்காட்டவிருக்கும் பெண்களுக்கு ஆதரவை வழங்கி அவளை வெற்றிபெறச் செய்வது நமது பாரிய பொறுப்பாகும். ஆகவே அவளுக்கு வாக்களித்து ஜனநாயத்தின் எழுச்சிக்கு வழிவகுப்போம் என்கிறார் ஷெரின் சரூர்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தலைமுறை (Generation) மற்றும் பெபரல் (PAFFREL)  அமைப்பு இணைந்து சமூக வலைத்தளமான முகநூலினூடாக பகிரப்பட்ட தேர்தல் வன்முறை தொடர்பிலான பதிவுகள் கருத்துக்கள் படங்கள் ஒளிப்பதிவுகள் மையமாகக்கொண்டு மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் அறிக்கை யொன்றையும் சமர்ப்பித்திருந்தன. 

முகநூல் மூலமாக மேற்கொள்ளப்படும் தேர்தல் வன்முறைகள் மற்றும் அவதூறு பேச்சுக்கள் தொடர்பில் தலைமுறையின் தலைவர் செனெல் வன்னியாராச்சி தெரிவிக்கையில்,

“கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது முகநூலில் மும்மொழிகளிலும் பதிவேற்றப்பட்ட அவதூறு பேச்சு இபோலியான செய்திகள் போலியான செய்தியின் மூலம் தனிநபரை குறிவைத்து மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் தேர்தல் சட்ட மீறல்கள் பெண்கள் மற்றும் தனிநபர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில்  கண்காணித்து அறிக்கையொன்றை சமர்ப்பித்தோம். இதனடிப்படையில் தேர்தலுக்கு முன்னரான காலப்பகுதியில் 460 சம்பவங்களும்  மௌன காலப்பகுதியில் 1190 சம்பவங்களும் தேர்தல் நாளன்று  273 சம்பவங்களும் பதிவாகியுள்ளன. இந்த ஆய்வானது 17 அக்டோபர் 2019 முதல் 27 நவம்பர் 2019 வரை மேற்கொள்ளப்பட்டது. 

இந்த பொதுத்தேர்தலிலும் அவதூறு பேச்சு தொடர்பில் 17 சம்பவங்கள் இதுவரை பதிவாகியுள்ளன. அதேவேளை பெண் வேட்பாளர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட இவ்வாறான அவதூறு பேச்சு மற்றும் வன்முறைகள் தொடர்பிலான 10 சம்பவங்களின் முழுமையாக கண்காணித்து அது தொடர்பான அறிக்கையை தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பியுள்ளோம் என்றார் செனெல்.

Senel_Wanniarachhi.jpg

தேர்தலுக்கு முன்னரான காலப்பகுதி மௌன காலப்பகுதி தேர்தல் நாளன்று தேர்தலுக்கு பின்னர்

41.jpg

இலங்கையில் அரசியல் செயற்பாடுகள் வன்முறை மிக்கதாக இருப்பதால் அதில் கால்பதிக்க பெண்கள் பின்நிற்கின்றனர். அரசியல் கலாசாரத்தில் மாற்றம் கொண்டுவந்து அதனை ஜனநாயகமிக்கதாக மாற்றுவதற்கு பெண்கள் அதிகளவில் இம்முறை பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட வேண்டும். பெண்கள் தமது அரசியல் உரிமைகளை வென்றெடுக்க அவர்களுக்கு களம் அமைத்துக்கொடுக்க வேண்டியது எம் ஒவ்வொருவரினதும் கடமையாகும். ஆகவே இம்முறை அவளுக்காக வாக்களிப்போம்.  

நிரஞ்சனி ரோலண்ட்

 

https://www.virakesari.lk/article/87038

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.