Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாரதியின் கடைய வாழ்வு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாரதியின் கடைய வாழ்வு

கிருஷ்ணன் சங்கரன்

spacer.png


 

“கடலூர் ஜெயிலிலிருந்து ஸ்ரீமான் சுப்ரமணிய பாரதி விடுதலையடைந்து கடையம் போய்ச் சேர்ந்ததாகவும் அவருடைய உடம்பு அசௌகரியமாக இருப்பதால் பாபநாசம், குற்றாலம் போன்ற இடங்களில் கொஞ்ச காலம் தாமதிப்பாரென்றும், அவர் திருநெல்வேலியைக் கடந்து சென்றபொழுது அவருடைய சிநேகிதர்கள், ரயில்வே ஸ்டேஷனில் எதிர்கொண்டழைத்து, சந்தோஷ ஆரவாரம் செய்ததாகவும் தந்தி கிடைத்திருக்கிறது” என்று குறிப்பிடுகிறது அன்றைய சுதேசமித்திரன் பத்திரிகை. தன் விடுதலையில் சிரத்தை எடுத்துக்கொண்ட ஸ்ரீமதி அன்னிபெசன்ட், ஸ்ரீ திருமலை அய்யர், ஸ்ரீ சி.பி.ராமசாமி அய்யர் மற்றும் நண்பர்களுக்கு நன்றி தெரிவித்து ரங்கசாமி அய்யங்காருக்குக் கடிதம் எழுதுகிறார் பாரதி.

ஸ்டேஷனிலிருந்து ஒரு மைல் தொலைவிலுள்ள மனைவியின் வீட்டிற்கு மூட்டை முடிச்சுக்களோடு இருட்டோடு இருட்டாக நடந்தே வந்துசேர்கின்றனர் தம்பதியர். செல்லம்மாள் வீட்டார் பாரதியின் மெலிந்த உடலையும், சவரம் செய்யாத முகத்தையும் கண்டு வருந்தினர். கை, கால்களைச் சுத்தம் செய்துகொண்டு வர, சாதம் இடுகிறார் செல்லம்மாள். சிறிய மண்ணெண்ணெய் விளக்கு. கதவிற்குப் பின்புறம், ஒருக்களித்து நின்று, முகத்தை முழுதும் காட்டாமல் ‘அத்திம்பேர் வாங்கோ’ என்றொரு குரல். குரல் வந்த திசையை நோக்கிய பாரதி கூரிய கண்களை உருட்டி விழிக்கிறார். ‘என்ன அப்படிப் பார்க்கறேள். நம்ம சொர்ணமல்லவா அவள்’ என்கிறார் செல்லம்மாள். ‘சொர்ணம்மாவா நீ,சொர்ணம்மாவா நீ’ என்று அரற்றியபடியே கண்களில் கண்ணீர் வழிய, சாப்பிடாமல் எழுந்து கையை அலம்பிக்கொண்டு, பென்சிலையும் பேப்பரையும் எடுத்துக்கொண்டு விளக்கடியில் அமர்ந்து எழுதுகிறார் ‘மங்கியதோர் நிலவினிலே கனவிலிது கண்டேன், வயது பதினாறிருக்கும் இளவயது மங்கை…  ‘  பாண்டிச்சேரி வீட்டில்  தன்னுடைய மகளைப்போல இருந்த செல்லம்மாளின் தங்கை சொர்ணம்மாளுக்கும், தன் முன்னே விதவைக்கோலத்தில் பார்த்த சொர்ணம்மாளுக்கும்தான் எவ்வளவு வித்தியாசம். பச்சைக் குழந்தைக்கு, பசும்பொன் பதுமைக்கு விதவைக்கோலம் பண்ணி மூலையில் சாத்தியிருக்கிறது சமூகம். இத்தனைக்கும் கல்யாணம் செய்வதற்கு முன்பே அந்தச் சிறுவனுக்கு நோய் இருப்பதாகச் சொல்கிறார்களே என்று எச்சரித்திருக்கிறார் பாரதி.  

பாரதி கடையம் நீங்கிய பிறகு, தன் தம்பிக்கு நீண்ட நாட்கள் கழித்துப் பிறந்த மகனையே பற்றுக் கோடாகக் கொண்டு வாழ்ந்து வந்தார் சொர்ணம்மாள். அந்தச் சிறுவனும் சிறுவயதிலேயே மரணமடையவும், தாங்கொண்ணா வேதனையில் உழன்று, பின்னர் திருவண்ணாமலையில் ரமணரைச் சந்தித்தார். அதன் பின்னர் சிலகாலம் ரிஷிகேஷ், டெல்லி, காசி முதலிய இடங்களுக்கெல்லாம் சென்று, பின்னர் சுவாமி சிவானந்தரிடம்  தீட்சை பெற்று, கிருஷ்ணானந்த ஸ்வாமினியாக கடையத்தில் ஆசிரமம் அமைத்து நடத்தி வந்தார். இந்தப் புத்தக ஆசிரியர் எம்.ஜி.ஆரிடம் உதவி கேட்கச் சொல்ல ‘நான் பாரதியின் மைத்துனிடா , யாரிடமும் எதுவும் கேட்கமாட்டேன்’. என்று தொடர்ந்து மறுத்து வந்திருக்கிறார். இவருடைய சிரமத்தைக் காணச் சகியாமல் எம்.ஜி.ஆரிடம் ஆசிரியரே விண்ணப்பித்து முதல் ‘பென்ஷன்’ வருமுன்பே இயற்கை எய்திவிட்டார். சுவாமி சிவானந்தர் பாரதியோடு எட்டயபுரத்தில் ஒன்றாகப் படித்தவர். அந்த அனுபவங்களையெல்லாம் சொர்ணம்மாளிடம் கூறியிருக்கிறாராம். இந்தச் சொர்ணம்மாள்தான் பாரதி பற்றிய பல செய்திகளைப் பகிர்ந்து கொள்கிறார் ஆசிரியர் கணபதி ராமனிடம். நூலின் பெயர்: கடையத்தில் உதிர்ந்த பாரதி படையல்கள். ஆழ்வார்குறிச்சி திருவள்ளுவர் கழக வெளியீடு. குறுகிய வட்டத்துக்குள் புழங்கியிருக்கக்கூடிய இந்தச் சிறிய நூல் கவிஞரை நேரில் கண்டு பேசிய பலரின் சொற்களின் மூலம் அவரை அண்மையிலெனக் காட்டுகிறது. 

திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம் வட்டத்தில் அமைந்த அழகிய ஊர் கடையம். இது தென்காசிக்கும் அம்பாசமுத்திரத்திலும் இடையே உள்ளது.  மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி வரும் ராம நதி, ஜம்பு நதி என்று இரண்டு நதிகள் வளம் சேர்கின்றன. புகைவண்டி நிலையம், அஞ்சலகம், பத்திரப்பதிவு அலுவலகம் உண்டு. மேலக்கடையம், கீழக்கடையம் என்று பிரிவுகள். நீர் வளம் எப்போதுமிருப்பதால் முக்கியத் தொழில் விவசாயம்.    

கடையம் பாரதியைப் போலவே எனக்கும் வேட்டாம் (வேற்று அகம் – மனைவியின் வீடு). பாரதி சாதிப் பிரிவினையை எதிர்த்துக் கலகம் செய்த கல்யாணியம்மன் மற்றும் சாஸ்தா கோயில்களுக்கு சில வருடங்களுக்கு முன்  ‘சாஸ்தா ப்ரீதி’ க்காக என் மனைவியின் குடும்பத்தாரோடு நானும் சென்றிருக்கிறேன். அன்றைக்கு மாலை வழிபாட்டின்போது கோயிலிலிருந்து எழுந்த பஞ்ச வாத்திய முழக்கத்தை விஞ்சியது சுற்றுப்புற காடுகளில் இருந்து எழுந்த சீவிடுகளின் (சிள் வண்டு) ஒலி.  நோக்குமிடமெல்லாம் இயற்கையின் களியாட்டம்தான்.  பச்சையில் இத்தனை நிற பேதங்களா?  ஊருக்கு வெளியே மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அழகான நந்தவனத்தோடு கூடிய கல்யாணியம்மன் வில்வவனநாதர் கோயில். பாரதி பாடிய சமஸ்க்ருதப் பாடலான ‘பூலோக குமாரி…ஹே..அம்ருத நாரி’ (எண்பதுகளில் பாலமுரளி பாடிய இந்தப் பாடலை தூர்தர்ஷனில் அடிக்கடி போடுவார்கள்) மற்றும் ‘உஜ்ஜயினி நித்ய கல்யாணி …’ என்ற பாடலும் இந்த அம்மன் மேல் பாடியதுதான். சுவாமிக்கு ‘தசரத ராமேஸ்வரமுடையார்’ என்றும் பெயர். தசரதன் சிராவணன் என்ற அந்தணச் சிறுவனை, அவன் இருட்டிலே தண்ணீர் மொள்ளும் போது யானை என்று நினைத்து தவறுதலாக அம்பெய்து கொன்று, அவன் தந்தையிடம் சாபம் வாங்கிய இடம். மிக அழகான  கோயில் குளமும், நந்தவனமும் மனதைக் கொள்ளை கொள்ளுகின்றன. மலையில் சற்று ஏறினால்தலைமலை அய்யன் என்றழைக்கப்படும் சாஸ்தா கோயில். பல்லை உடைக்கும் குளிரில் ராமநதிக் குளியல். கால்பட்ட இடமெல்லாம் கண்ணடிக்கிற தொட்டாற்சிணுங்கிச் செடிகள். பச்சை அலையடிக்கும் நெல் வயல்களும், நீர் தளும்பும் குளங்களுமாக இப்பொழுதும் ரம்மியமாக இருக்கிறது. பாரதி உலவிய இந்த இடங்களையெல்லாம் தன் ‘பாரதி’ படத்தில் இடம்பெற்ற ‘நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே….’ என்ற பாடலில் சிறப்பாகக் காட்சிப்படுத்தியிருப்பார் இயக்குநர் ஞான.ராஜசேகரன்.  

spacer.png

 

இங்குதான் ஒரு திருவாதிரை நாளில் மேலக்கடையத்து பிராமணர்கள் வழிபாடு செய்தபோது கீழக்கடையத்தைச் சேர்ந்த மற்ற சாதி மக்களும் வந்துவிட, பிராமணர்களுக்கு பொங்கல் இலையில் பரிமாறப்பட்டது. கீழ்க்கடையத்து மக்களுக்கு கையில் பிரசாதம் வழங்கப்பட்டது. பாரதி அவர்களோடு வரிசையில் நின்று பிரசாதம் வாங்கியிருக்கிறார். பிரசாதம் கொடுத்த அந்தணர் ‘ஏண்டா, பூணல் போட்ட பாப்பானா நீ, இந்தக் கீழ் சாதிக்காரங்களோடு நிற்கிறாயே’ என்று ஏச, இவர் பூணலை அறுத்து அவர் முகத்தில் வீச, ஏகக் களேபரமாகியிருக்கிறது. ‘உஜ்ஜயினி நித்ய கல்யாணி’ என்ற பாடலை வீராவேசமாகப் பாட, கீழே விழும் நிலையிலிருந்த பாரதியைப் பிடித்து அமைதிப் படுத்தியவர் அவருடைய அணுக்கத் தொண்டர் ஆறுமுகக் கம்பர்.  இதுபோலவே பத்திரகாளியம்மன் கோயிலிலும் முழுக்காப்பு நாளில் சாதி வாரியாக பிரசாதம் வழங்கப்பட்டபொழுது பாரதி பாடிய பாடல்தான் ‘உலகத்து நாயகியே எங்கள் முத்து மாரியம்மா… ‘ இந்தப் பாட்டிலே வருகிற ‘ துணி வெளுக்க மண்ணுண்டு எங்கள் முத்து மாரியம்மா.. மனம் வெளுக்க வழியில்லை..’ என்ற வரியில் வருகிற மனம் வெளுக்க வழியில்லை என்ற வரியை ‘ஓயாமல்’ பாடியதைக் கேட்டு எரிச்சலடைந்த ஒரு சாரார் பாரதியை கோயிலுக்கு வெளியே அடித்துத் தள்ளிவிட்டார்களாம். அப்போதும் காத்தவர் ஆறுமுகக்கம்பர்தான். இத்தகைய மோதல்களின் மூலமும் பிற சாதியினரிடம் நட்பு பாராட்டுவதன் மூலமும் பிராமணர்களின் ஏகோபித்த எதிர்ப்பை சம்பாதித்துக்கொண்டார் பாரதி. சாஸ்தா என்கிற தலைமலை அய்யனைக் காண இன்றும்கூட பாரதி காலத்தில் இருந்தது போல தீப்பெட்டி முதற்கொண்டு எல்லாப் பாத்திரங்களையும் கொண்டு சென்று சமைத்துச் சாப்பிடும் வகையில்தான் இருக்கிறது. ஒரு மூன்று மைலாவது காட்டுக்குள் ஓடைகளும், பாறைகளும் கடந்து நடக்கவேண்டும். இங்கு 1919ல் நடந்த ஒரு விழாவில் ஊரோடு சென்று வழிபாடு செய்யும்போது, அனைவருக்கும் சாதி வாரியாகப் பிரசாதம் வழங்கப்பட, ஒவ்வொரு சாதி வரிசையிலும் அமர்ந்து பிரசாதம் உண்டார் பாரதி. இதைக் கண்ட கடையத்து பிராமணர்கள் கடுமையாகக் கோபமுற்றனர். பாரதி குடும்பத்தை ‘சாதிப் பிரஷ்டம்’  செய்தனர். அவர்களுக்கு நீரும், மோரும்  தரக்கூடாது என்று கட்டுப்பாடு விதித்தனர். குழந்தைகள் யாரும் பாரதியின் குழந்தைகளோடு விளையாட அனுமதிக்கப்படவில்லை. சில நாள்களுக்குப் பாரதிக்குச் சாப்பாடு கொடுக்கவும் தடை இருந்தது. பாரதி மூன்று நாள்கள் பட்டினி கிடக்க நேரிட்டது. பட்டினி வதை. இதைப் பார்த்த ஒரு குடியானவன் யாருக்கும் தெரியாமல் பழங்களைக் கொடுத்திருக்கிறான். யாருக்கும் தெரியாமல் நீர் எடுக்கப்போவதுபோல் குடத்தில் உணவெடுத்துச் சென்று கொடுத்திருக்கிறார் செல்லம்மா. இது வெளித்தெரிய வர, மலத்தைக் கரைத்து பாரதி வீட்டின் முன் தெளித்தார்களாம். இதை ஆசிரியரிடம் கூறியவர் தொண்ணூறு வயதான கல்யாணி ஆச்சி. இந்த உச்சகட்ட சாதிக் கொடுமையை அனுபவித்த பாரதி ஒரு பிராமணர் என்பதுதான் நகைமுரண்.

சம்பாதிக்கிற ஒரு ரூபாய் கூலியையும் முழுதாக வீட்டுக்குக் கொடுக்காமல் பாரதிக்குக் கொடுத்து உதவியவர் அணுக்கத் தொண்டர் ஆறுமுகக் கம்பர் என்கிற சாய வேட்டிக் கம்பர். விடிந்தும் விடியாத இளங்காலைப்பொழுதில் இருவரும் ஜம்பு நதிக்கருகே, தட்டப்பாறையில் அமர்ந்து பரந்த வயல் பரப்பையும் நீண்ட மலைத் தொடரையும், அடர்ந்த தென்னஞ் சோலைகளையும் கண்டு களிப்பார்கள். நீண்ட காலம் நெய்தல் நிலத்தை மட்டுமே கண்டு வந்திருந்த பாரதியை மருதமும், குறிஞ்சியும் கவர்ந்ததில் ஆச்சரியமென்ன? அந்த மோன நிலையில் பிறந்த பாடல்தான்,

‘காலைப் பொழுதினிலே கண்விழித்து மேனிலைமேல்
மேலைச் சுடர் வானை நோக்கிநின்றோம் விண்ணகத்தே
கீழ்த்திசையில் ஞாயிறுதான் கோடில் சுடர் விடுத்தான்’

அப்போது கையில் பேனா, பேப்பர் இல்லாததால் ஒரு மண்கட்டியை எடுத்து பாறையில் எழுதி முடித்தாராம் பாரதி. இந்த ஆறுமுகக் கம்பருக்குச் சின்னம்மை, மாடத்தி, தெய்வானை என்று மூன்று சகோதரிகள். பாடுவதிலும் ஆடுவதிலும் வல்லவர்கள். இவர்களில் சின்னம்மையை (90 வயது) ஆசிரியர் சந்தித்து பேசும்போது ” ராசா வருவாரு, இந்தப் பாட்டைப் பாடுன்னுவாரு, பாடுவோம். இந்தப் பாட்டுக்கு ஆடுன்னுவாரு, ஆடுவோம். கை கொட்டிச் சிரிப்பாரு” என்கிறார்.  

அப்போதே பாரதியிடம் உதவியாளனாக இருந்தவர் சங்கரலிங்க மூப்பனார். அவருக்கு அப்போது வயது பன்னிரெண்டுதான். சரியாக மாதம் முதல் தேதி ஆறு ரூபாய் சம்பளத்தை அந்த பையனின் தகப்பனாரிடம் கொடுத்து விடுவாராம் பாரதி. சங்கரலிங்கத்தின் சகோதரர் சுப்பையா மூப்பனார் (90 வயது) பாரதியோடு நன்கு பழகியவர். அவர் ஆசிரியரிடம் கூறுகிறார் ‘ அய்யரு எங்க வீட்டுக்கு வருவாரு.. மோர் கேட்டு வாங்கிச் சாப்பிடுவாரு. அவர் கட்டியிருக்கிற வேட்டி நாக்கில் போட்டால் ஒட்டிக்கொள்ளும். அவ்வளவு ‘பீசு’ வேட்டி. மத்த அய்யருகளைப் போலத்தான் (பஞ்சகச்சம்) கட்டியிருப்பாரு. வந்தாருன்னா ‘டே கொஞ்சம் தண்ணி கொடு’ ன்னு அதட்டலாகத்தான் கேப்பாரு.  மோர் கேட்டுக் குடிப்பாரு. இவ கொடுத்திருக்கிறா. ஒரு முறை இங்ககூட சாப்பிட்டிருக்காரு, அன்னைக்கு காணத்தொவையல். ரொம்ப நல்லாருக்குன்னு சாப்பிட்டாரு.   சங்கரலிங்கம் சம்பளத்தை எங்க அப்பா கிட்டதான் கொடுப்பாரு. ஒரு நா கருக்கல்ல வந்தாரு, ஒரே நாய்க் கொரைப்பு. ஒரு பாட்டு ஒன்னு பாடுனாரு, அத்தனையும் கப்புனு அடங்கிப் போச்சு. ஏவிளே? என்ன பாட்டு ஞாபகம் இருக்கா? (அவர் மனைவிக்குத் தெரியவில்லை)  எங்க கூட பழக்கம் வைச்சுக்கிட்டதுக்கு அய்யருங்க எங்க அப்பாவெல்லாம் சண்டை போட்டிருக்கிறாங்க. கீழ்க்கடையத்தில் ஐயருக்கு ரெண்டு ஸ்நேகித ஆள் உண்டு. சங்கரலிங்க நாடார், பொன்னையா நாடார் . அவங்க கூடலாம் சண்டை போட மாட்டாங்க. ஏன்னா அவங்கள்லாம் பணக்காரங்க. அடிக்கடி ரயில் கெடி பக்கம் போவாங்க.. ‘வெள்ளைப் பதினி’ குடிப்பாங்க. ராத்திரி ரொம்ப நேரம் கழிச்சுத்தான் வீட்டுக்குப் போவாரு.’ ஆசிரியர் கண்டு பேசிய பலரும் கவிஞருடைய ஒல்லியான உருவத்தையும், முறுக்கு மீசையையும், கூரிய பார்வையையும், தலைப்பாகைப் பின்தொங்கலையும் நினைவு கூறுகிறார்கள்.   

spacer.png

 

பாரதிக்கு பல தளங்களில் நண்பர்கள் இருந்தனர். வ.உ. சிதம்பரம் பிள்ளை, சுப்ரமணிய சிவா, சோமசுந்தர பாரதி தவிர கல்லிடைக்குறிச்சி, கடையநல்லூர், ரவணசமுத்திரம், அம்பாசமுத்திரம் முதலிய இடங்களில் தேச விடுதலைக்காகப் போராடிய பலரும் அவர் நண்பர்கள். அது போகக் கடையத்தில் பாரதிக்கு கனக சபாபதிப்பிள்ளை, சிவ மாணிக்கம்பிள்ளை, நாராயணப்  பிள்ளை என்று பெரும் நண்பர் குழாம் இருந்தது. இதில் கனக சபாபதிப்பிள்ளை பாரதி கடையம் நீங்கி சென்னை கிளம்பியவுடன் பைத்தியம்  பிடித்தாற்போல் ஆகிவிட்டாராம் – பித்துப்பிடித்த தம்பியை சமாதானப்படுத்த பாரதியை  கடையத்திற்கு அழைத்து வர சென்னை வருகிறார் அவர் சகோதரர் சுப்பையா பிள்ளை. மரணப் படுக்கையில் இருக்கும் பாரதி செல்லம்மாவை அழைத்து ‘ரெண்டு இலை போடு’  என்கிறார். இதைக் கேட்ட சுப்பையா பிள்ளை கதறி அழுகிறார். எப்பொழுதும் பாரதி வீட்டுக்கு வரும்போது கனகசபாபதி தன் அம்மாவிடம் சொல்லும் வார்த்தைகள் அவை – கல்யாணியம்மன் கோயில் திண்ணையில் இவர்களோடு நாட்டு நடப்புகளைப் பேசிக்கொண்டிருக்கும்போதே, பாரதி இருந்திருந்தாற்போல கல்யாணியம்மன் கோயில் குளத்தில் மூழ்கி எழுவாராம். பாரதியின் பாடல்களுக்கு சிவ மாணிக்கம் பிள்ளை மிருதங்கம் வாசிப்பதும் உண்டு. இந்த சிவமாணிக்கம் பிள்ளை பாரதியின் பிரிவு தாளாமல் தற்கொலைக்கே முயற்சித்தவர். நாராயணப் பிள்ளையிடம் பாரதிக்கு இருந்த நட்பு அவர்களை சம்பந்தியாகும் வரை கொண்டுசென்றிருக்கிறது. அவருடைய பையனுக்கு தன் பெண் சகுந்தலாவை மணம் முடிக்க பாரதிக்கு சம்மதம். ஆனால், நாராயணப் பிள்ளையின் மனைவி கோமதியம்மாள் மறுத்துவிட்டார். இன்றைய ஆணவக்கொலை நிகழ்வுகளை மனதில் கொண்டு நூறு ஆண்டுகளுக்கு முன் அந்த மனிதரின் பரந்த மன விசாலத்தை நினைவு கொள்ள வேண்டியிருக்கிறது. நாராயணப் பிள்ளையின் ரோஜாத் தோட்டத்தில் பூக்களைப் பார்த்து பரவசப்பட்ட பாரதியை, எந்த ஆதரவுமில்லாத நிலையில் குறைந்த விலையில் நூல் பிரசுரிக்க  ‘தமிழ் வளர்ப்புப் பண்ணை’ என்ற அமைப்பைக் கடையத்தில் அமைக்கப் போராடிய பாரதியை நினைவு கூர்கிறார் சகுந்தலா பாரதி ‘என் தந்தை’ என்னும் நூலில். கடையம் சத்திரம் ஆண்கள் பள்ளியில் முதன் முதலில் படித்த பெண் சகுந்தலா பாரதிதான். நாராயணப் பிள்ளைக்கு இருந்த செல்வாக்கை உபயோகப்படுத்தி, ஆசிரியருக்குப் பக்கத்திலேயே உட்கார்த்தி வைத்துப் பாடம் சொல்லப்பட்டது. 

கடையத்தைச் சுற்றிலும் உள்ள கிராமங்களில் உள்ள சுடலைமாடன், எழுத்துக்கல் மாடன், பன்றி மாடன், பனையேறி மாடன், சீவலப்பேரி சுடலை, உய்க்காட்டுச் சுடலை, கள்ளக் கரையான், வேம்படி மாடன் என்று கணக்கில்லாத தெய்வங்கள். இங்கு நடக்கிற கொடைகளுக்கெல்லாம் தவறாமல் போய்விடுவாராம் பாரதி. அப்படி ஒரு கொடையில் நையாண்டி மேளம் ஒலிக்க பூசாரி சாமியாடுகிறார். பூசாரியின் குரலில் மாடன்  பேசுகிறார் ‘பழம் வெச்சான், வெத்தலை வெச்சான், பாக்கு வெச்சான், ஒண்ணு வைக்கல, சுண்ணாம்பு வைக்க மறந்து போனான்’ பக்கத்திலிருந்த பாரதி அதே குரலில் ‘சாமி நமக்கு நிலம் வெச்சான், பலம் வெச்சான், செல்வம் வெச்சான், ஒண்ணே ஒண்ணு வெக்கல, மூளை வைக்க மறந்து போனான்’ என்றவுடன் கேட்டவர்களெல்லாம் சிரித்தார்கள் என்கிறார் சிவமாணிக்கம் பிள்ளை. இதே கருத்து

ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று தேடி
அலையும் அறிவிலிகள் பல்
ஆயிரம் வேதம் அறிவொன்றே தெய்வமுண்
டாமெனில் கேளீரோ
மாடனைக் காடனை வேடனைப் போற்றி
மயங்கு மதியிலிகாள் ஏதன்
ஊடு நின்றோங்கு அறிவொன்றே
தெய்வமென்று ஓதி அறியீரோ

என்ற அவர் கவிதையிலும் எதிரொலிக்கிறது.

கடையத்திற்கு அருகில் உள்ள பொட்டல்புதூர், ரவணசமுத்திரம் முதலிய ஊர்களில் முஸ்லிம்கள் அதிகம். அந்த ஊர்களில் உள்ள பள்ளிவாசலில் சொற்பொழிவாற்றியிருக்கிறார் பாரதி. முஸ்லிம்களைக் கண்டால் ஹிந்தியில்தான் அதிகமும் உரையாடுவாராம். 

spacer.png
 

சிறிய வாழ்க்கையிலும் செறிவான பல வாழ்க்கைகளை வாழ்ந்திருக்கிறார் கவிஞர். ‘நவராத்திரிக்கு ஏதாவது பாட்டு எழுதித் தாங்கோ மாமா’  என்று கேட்ட பெண்கள் கோவிலுக்குப் போய்விட்டு வருவதற்குள் எழுதிக்கொடுத்த பாடல்தான் ‘ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் பராசக்தி’. பாட்டு வாத்தியார் வராத அன்று பெண்களுக்குக் கற்றுக்கொடுத்த பாடல்தான் ‘காக்கைச் சிறகினிலே நந்தலாலா…’.  நாதஸ்வர மன்னன் ஆழ்வார்குறிச்சி சண்முகத்தை அடிக்கடி சந்தித்துத் தன் பாடல்களுக்கு மெட்டுப் போட்டிருக்கிறார். அவருக்கு யோக மார்க்கத்தின் மீதும், ஆத்ம ஞானத்தின் மீதும் பாண்டிச்சேரியில் இருந்த ஈடுபாடு கடையத்திலும் தொடர்கிறது. யதுகிரி அம்மாள் ‘ பாரதி நினைவுகள்’ என்ற நூலில் கூறுகிறார். “நான் பாரதியை உற்றுப் பார்த்தேன். வெறும் எலும்புக்கூடு. சிவப்பான கண்கள். துர்பலமான உடம்பு. பார்க்கச் சகிக்கவில்லை. என் மனதில் இருப்பதைப் புரிந்து கொண்டவர்போல ‘நான் புதிய வழியில் யோக சாதகம் செய்கிறேன். அதனால் உடம்பு இளைத்திருக்கிறது’ என்றார்,” என்கிறார்.

‘எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தாரப்பா யானும் வந்தேன் ஒரு சித்தர் இந்நாட்டிலே….  ‘ என்னும் பாரதி கடையதிலிருந்து திருநெல்வேலி வந்து மேலரத வீதியில் ஒரு வீட்டு மாடியில் எங்களுக்கு சாகா வரத்தினை உபதேசித்தார் என்று மூக்குக் கண்ணாடி வணிகம் செய்து வந்த ராமையா பிள்ளை கூறியதாக கூறுகிறார் அறிஞர் ஏ.வி.சுப்ரமணிய அய்யர். பாரதி இங்கிருந்து கானாடுகாத்தான் சென்றிருக்கிறார். அநேகமாக நூல் பிரசுரிப்பதற்கான நிதி கேட்கு முகமாக இருக்கலாம். ‘இத்துடன் பாஞ்சாலி சபதம் இரண்டாம் பாகம் அனுப்பியுள்ளேன். சற்றே பொறுமையாகப் படித்துப் பார்க்கவும்’ என்று சண்முகம் செட்டியாருக்கு எழுதிய கடிதம் அதை உறுதி செய்கிறது. அங்கு அவரைச் சந்தித்ததை  நாமக்கல் கவிஞர் தன்னுடைய ‘என் கதை’யில் விரிவாக எழுதியிருக்கிறார். குடும்பத்தோடு சங்கரன் கோயில், பாபநாசம், திருவனந்தபுரம் போய் வந்திருக்கிறார். செல்லம்மா தன்னுடைய சங்கரன்கோயில் யாத்திரையை கட்டுரையாக வடித்திருக்கிறார். எதிர்நீச்சலே வாழ்க்கை. கஷ்டங்களே தினப்பாடு. ஆனாலும் கவி மனதிற்கு ‘எத்தனை கோடி இன்பம் வைத்தாய், இறைவா …’ என்றுதான் பாடத் தோன்றுகிறது. கடைசியாக, இத்தனை இடர்பாடுகளுக்குப் பின் 1920 டிசம்பர் மாதம் தன்னுடைய இரண்டு வருட கடைய வாழ்வை முடித்துக்கொண்டு  சென்னைக்கு  இடம் பெயர்கிறார்  கவிஞர்.  அதற்கடுத்த வருடமே உலகமும் நீத்தார் அந்த சாகாவரம் பெற்ற கவி. அந்த உலகக் குடிமகன் உயிர் நீத்தபோது வயது முப்பத்தி ஒன்பதுகூட முடியவில்லை.  
 

spacer.png

spacer.png


spacer.png


spacer.png

spacer.png

spacer.png

spacer.png

 

https://solvanam.com/2020/08/22/பாரதியின்-கடைய-வாழ்வு/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.