Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

திசை திருப்பப்படும் இளமையின் ஆற்றல்கள்.! - நா.யோகேந்திரநாதன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திசைதிருப்பப்படும் இளமையின் ஆற்றல்கள்.! - நா.யோகேந்திரநாதன்.!

N_Yokenthiranathan_kaddurai.jpg

இளமைக் காலத்தை மனிதனின் வாழ்வுக்காலப்பகுதியின் வசந்தம் எனக் கூறப்படுவதுண்டு. அந்த வசந்தத்துக்குள் துணிவு, நேர்மையின் நின்றுபிடிக்கும் பற்றுறுதி, அநீதிகளைக் கண்டு கொதித்தெழும் இயல்பு, கூட்டு செயற்பாட்டின் மீது நம்பிக்கை எனத் தமக்கும், தாம் வாழும் சமூகத்துக்கும் பயனுள்ள வகையிலான சிறப்பம்சங்கள் மேலோங்கியிருப்பதைக் காணமுடியும்.

காலங்காலமாக எமது சமூகத்தில் இளைஞர்களிடையே நிலவி வரும் ஆரோக்கியமான அம்சங்கள் திசைதிருப்பப்பட்டு இளைஞர்களை மட்டுமின்றி எதிர்கால சமூகத்தையே ஒரு சீரழிவுக் கலாச்சாரத்துக்குள் தள்ளிவிடுமோ என அச்சமடையும் சூழ்நிலை மெல்ல மெல்ல தோற்றம் பெற ஆரம்பித்துள்ளது. இவை ஒரு கலாச்சாரம், பண்பாடு உள்ள சமூகத்துக்குரிய தன்மைகள் மெல்ல மெல்ல மங்கிப்போக ஒரு உதிரிச் சமூகத்தை உருவாக்கும் ஆபத்தைக் கொண்டுள்ளது என்பது விளங்கிக்கொள்ளப்பட வேண்டும்.

வாள் வெட்டுக் குழுக்களின் அடாவடித்தனங்கள், மாணவர் மத்தியிலான போதை வஸ்து பாவனைகள் போன்ற முறைமீறல்கள் அண்மையில் இனங்காணப்பட்டவை என்பன வெளிப்படையில் தென்பட்டாலும் அவற்றுக்கும் அப்பால் அவை வலுப்பெறுவதற்கான சூழல், மனநிலை என்பன எம்மை அறியாமலே எம்மாலேயே உருவாக்கப்படுகின்றன அல்லது அனுமதிக்கப்படுகின்றன என்பதை நாம் கண்டுகொள்வதில்லை.

வெவ்வேறு தரப்பினரால் எமது இனத்தில் பண்பாட்டு அடையாளங்களையும் தனித்துவமான மொழி, பொருளாதார, நில உரிமை அம்சங்களையும் சிதைக்கும் நோக்குடன் திட்டமிட்ட வகையில் இத்தைகய முறைகேடுகள் இங்கு பரப்பப்பட்டாலும் அவை இங்கு பரப்பப்படுமளவுக்கான ஒரு களத்தை உருவாக்கிக் கொடுத்தவர்கள் நாமே என்பது உணரப்பட வேண்டும்.

அண்மையில் பொலீஸ் குற்றத்தரப்பு பிரிவினர் விடுத்துள்ள அறிக்கையில் 26 பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த 136 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியப்படுத்தியிருந்தனர். கொலை, கொள்ளை, கப்பம், கூலிக்கு கொலை செய்தல், போதை வஸ்து வர்த்தகம் என்பன இப்பாதாளக் குழுக்களாலேயே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இக்குழுக்களின் பின்னால் பல்வேறு சக்தி வாய்ந்த அரசியல்வாதிகளும், சர்வதேச சட்டவிரோதக் கும்பல்களின் அனுசரணையும் உள்ளதாக கருதப்படுகிறது. அண்மையில் போதை வஸ்து தடுப்புப்பிரிவைச் சேர்ந்த பொறுப்பதிகாரி உட்பட அப்பிரிவைச் சேர்ந்த 13 பேரும் பல சிறையதிகாரிகளும் போதை வஸ்து வர்த்தகம் தொடர்பாகவும், கைதிகளுக்கு தடை செய்யப்பட்ட சில பொருட்களை விநியோகித்தமை தொடர்பாகவும் கைது செய்யப்பட்டிருந்தனர். எத்தனை பேர் தொடர்ந்து கைது செய்யப்பட்டாலும் இக்குழுக்கள் அழிக்க முடியாத சக்தி வாய்ந்த ஒரு வலைப்பின்னலாக நிலை பெற்றுள்ளதென்பதை உணர முடிகிறது.

இந்த வலைப்பின்னல் வடபகுதியில் தென்னிலங்கையைப் போன்று இன்னும் பலம் பெறவில்லையென்ற போதிலும் அவை இங்கு காலூன்றுவதற்கான கதவுகள் திறக்கப்பட்டுவிட்டன என்பதை அண்மையில் போதை வஸ்து சம்பந்தமாக கைது செய்யப்பட்ட மாணவர்கள் தங்கள் ஆசிரியரிடம் இரகசியமாக வெளியிட்ட சில தகவல்களிலிருந்து தெரிய முடிகிறது.

அதாவது கிளிநொச்சியில் 9 தற்காலிக மையங்களில் இரகசியமாக முன்னறிவிக்கப்படும் நேரங்களில் இவ்வர்த்தகம் தனிநபருக்கு தனிநபர் என்ற அடிப்படையில் இடம்பெற்று வருவதாக தெரிவித்துள்ளனர். ஆனால் எவ்வளவு முயற்சி செய்த போதிலும் அந்த வர்த்தகர் யாரென்பதை மாணவர்கள் தெரிவிக்க கண்டிப்பாக மறுத்துவிட்டனர்.

அப்படித் தெரிவித்துவிட்டால் தாங்கள் சுட்டுக் கொல்லப்பட்டுவிடுவோம் என அவர்கள் ஏற்கனவே அச்சுறுத்தப்பட்டு இருந்தார்கள். தாங்கள் அந்த வர்த்தகரை காட்டிக்கொடுத்த பின் தாங்கள் விளக்கமறிலுக்கு அனுப்பப்பட்டாலும் அங்கு வைத்தும் தாங்கள் கொலை செய்யப்படுவார்கள் என மாணவர்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் தங்கள் கைத்தொலைபேசிகளை விற்றுக் கூட போதை வஸ்து வாங்கியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. எனினும் அவர்கள் தற்சமயம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

பிடிபட்ட மாணவர்களில் 4 பேர். இன்னும் பிடிபடாதவர்களும், பிடிபடமுடியாதவர்களும் எத்தனை பேர் என்பதும் அவர்கள் யாரென்பதும் அறிந்து கொள்ள முடியாதளவுக்கு அந்த வர்த்தக வலைப்பின்னல் வலிமை வாய்ந்த வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளதென்பது புலனாகிறது.

பொதுவாகவே இளைஞர்களிடம் எதையும் அறிய வேண்டும். புதிய விடயங்களை அனுபவிக்க வேண்டும். ஒரு கலகலப்பான மனநிலையில் உலா வரவேண்டும் எனபது போன்ற உந்துதல்கள் இருப்பது இயல்பானது. அந்தத் தேவைக்கு தமக்கும் தாம் வாழும் சமூகத்திற்கும் நன்மை தரக்கூடிய பயனுள்ள விடயங்கள் அவர்களைக்கிட்டாத போது அந்த வெற்றிடத்தை தீய சக்திகள் பயன்படுத்தி இளைஞர்களை சமூக விரோத செயல்களின் பக்கம் இழுத்து அவற்றிற்கு அடிமையாக்குவதை இலக்காக வைத்து செயற்படக்கூடிய வாய்ப்புகள் ஏற்பட்டுவிடுகின்றன.

ஆவா குழுவினர் என வாள்வெட்டுக்குழுவினர் ஆரம்பத்தில் ஊருக்குள் நடக்கும் அநீதிகளை தடுத்து நிறுத்தும் வகையில் செயற்பட்ட சில இளைஞர்களே சில நாட்களில் சில அதிகார பின்னணி கொண்ட இனந்தெரியாத சக்திகளால் வழிநடத்தப்படும் நிலைமை ஏற்பட்டதாகவும், அதையடுத்து வாள் வெட்டுக்குழுக்களாக பிரபலப்படுத்தப்பட்டனர் என்பதும் தெரியவந்துள்ளது. சரியான நோக்கத்துடன் சில நடவடிக்கைகளில் ஈடுபட்ட இளைஞர்கள் சரியான வழிகாட்டல் இன்மையால் சில தீய சக்திகளால் பாதாள உலகக் குழுக்களாக மாற்றப்படக் கூடிய அபாயம் உள்ளதை மறுத்துவிட முடியாது. இங்கு இளைஞர்களிடம்; இயற்கையாகவே அமைந்துள்ள அநீதிகளுக்கு எதிரான உந்துதல்கள் திட்டமிட்ட வகையில் அதிகாரப்பின்னணி கொண்ட சக்திகளால் சமூக விரோத வன்முறைகளாக மாற்றப்படும் முயற்சிகளை அவதானிக்கமுடிகிறது.

பல்வேறு வழிமுறைகள் மூலம் இனவழிப்பு நடவடிக்கைகளைக் கட்டவிழ்த்துவிடும் மேலாதிக்க சக்திகளின் கோரக்கரங்கள் எமது இளைஞர்களின் தனித்துவங்களை சிதைப்பதற்கு வழிவிடும் விதமாக எமது இளைஞர்களை பலவீனப்படுத்தியதில் எமக்கு பங்கில்லை என்று சொல்லிவிடமுடியாது.

கடந்த 30 வருடங்களாக உலக வரலாற்றில் சிறப்பான ஒரு பகுதியைப் பதிவு செய்த இணையற்ற வீரமும், அற்புதமான தியாகங்களும் கொண்ட எமது விடுதலைப் போராட்டத்தின் ஆயுத வடிவம் சர்வதேச சதிமூலம் முள்ளிவாய்க்காளில் மௌனிக்க வைக்கப்படவிட்டது. இன்றைய இளைஞர்களான அப்போதைய சிறுவர்கள் அன்றைய விமானக் குண்டு வீச்சுகளையும், எறிகணை வெடிப்புகளையும், அவலச் சாவுகளையும் கண்டிருப்பார்களே ஒழிய அந்த விடுதலைப் போராட்டத்தின் மேன்மையையும், விடுதலை என்ற உன்னத இலட்சியத்துக்காக போராளிகள் வழங்கிய உயிர்க்கொடைகளையும் அவர்கள் பசி, தாகம், பனி, வெயில் மழை தூக்கமின்மை போன்ற தனிமனிதத்தேவைகளைக் கூட இரண்டாம் பட்சமாக்கி வாழ்ந்த அவர்களின் மேன்மையையும் உணர்ந்து கொள்ள அப்போதைய அவர்களின் வயது போதுமானதாக இருந்திருக்கவில்லை. அவர்கள் மனதில் சிங்கள இராணுவத்திற்கும், போராளிகளுக்குமிடையிலே ஒரு பெரும் போர் நடந்ததாகவும் அதில் சாவுகளும் அவலங்களும் ஏற்பட்டதாவும் போராளிகள் தோல்வியடைந்ததாகவும் பதியப்பட்ட நினைவுகளாக மனதில் நிலைத்திருக்கும்.

இன்றைய நாட்களில் பயங்கரவாதம் என்ற பெயரில் அப்பாவி இளைஞர்களைக் கூட கைது செய்து விசாரணையின்றி நீண்ட காலம் சிறையிலடைப்பது பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள் எனச் சொல்லி சுட்டுத்தள்ளுவது எங்கும் பரந்திருக்கும் அரச புலனாய்வுப் பிரிவின் கண்ணுக்குத் தெரியாத வலிமையான வலைப்பின்னல் என்பன காரணமாக பெற்றோர்கள் இளைஞர்கள் விடுதலைப் போராட்டம் சம்பந்தமாக வரலாறுகளையோ, உணர்வுகளையோ அறிந்து கொள்ள முடியாதவாறும் அவற்றின் சீரிய தேவை தொடர்பாக உணர்ந்து கொள்ள முடியாதவாறும் மிக எச்சரிக்கையாக கவனித்து வருகின்றனர்.

இதன் காரணமாக எமது இளைஞர்கள் எமது இனத்தின் வீரம் மிக்க சாதனைகளையும், தியாக உணர்வுகொண்ட அற்புதங்களையும் மனப்பூர்வமாக உணர்வதன் மூலம் எமது இனத்தின் மகத்துவத்தை உள்வாங்க முடியாதவர்களாக உள்ளனர். எமது இனத்துக்கே உரிய தனித்துவமான பண்பாட்டு அம்சங்கள் பாதுகாக்க வேண்டுமென்ற உணர்வும் எழுவதற்கான வாய்ப்புகள் இல்லை.

எனிலும் இளமை என்பது உறங்கிக்கிடப்பதில்லை. தனது தனித்துவங்களின் உந்துதலிலிருந்து விலகிவிடுவதில்லை. எனவே புதியவற்றை அறியும் ஆவல் விதம் விதமான மாற்றங்களை அனுபவிக்கும் முனைப்பு ஏனையவர்களை விட முன்னணியில் நிற்கவேண்டுமென்ற உணர்வு என்பனவற்றையெல்லாம் பயன்படுத்தி போதை வஸ்து குழுக்களும் வாள்வெட்டுக் குழுக்களை உருவாக்கும் சக்திகளும் வாலிபர்களை திசைதிருப்பி விடுகின்றன.

இவற்றின் அடிப்படை நோக்கம் அடிப்படையில் எமது சமூகத்தை ஒரு உதிரிச் சமூகமாக மாற்றி எமது தனித்துவங்களை நாமே கைவிட்டு சுலபமாக எமது இனத்தை அழிப்பதற்கு மேலாதிக்க சக்திகளுக்கு வழிவிடும் அபாயத்தைக் கொண்டிருப்பதேயாகும்.

போர் காலத்திலும் சரி போருக்கு முற்பட்ட காலத்திலும் சரி இளைஞர்கள் விளையாட்டுக் கழகங்கள் நாடகக் குழுக்கள் இலக்கியக் குழுக்கள் வீதி நாடகங்கள் எனப் பல்வேறு விடயங்களில் ஈடுபட்டிருந்தனர். இதன் காரணமாக இளைஞர்களின் கூட்டு செயற்பாடு வலுப்பெற்றதுடன் இளைஞர்கள் சமூகத்தை முன்கொண்டும் செல்லும் சக்தியாகவும் திகழ்ந்து வந்தனர்.

ஆனால் போர் முடிந்த பின்பு இவ்விடயங்கள் எல்லாமே அற்றுப் போய்விட்டன. இளைஞர்கள் ஒன்று கூடி செயற்படும் போது புலனாய்வுப் பிரிவினர் அதை வேறுவிதமாக நோக்கலாம் என்ற அச்சத்தில் பெற்றோரும் அப்படியான விடயத்தில் இளைஞர்கள் ஈடுபடுவதை அனுமதிப்பதில்லை.

அதன் காரணமாக பல இளைஞர்கள் கைத் தொலைபேசிகளுடன் சங்கமமாகி தங்களைத் தாங்களே தனிமைப்படுத்துவதுடன் சமூக வலைத்தளங்களால் வழிகாட்டப்படுமளவுக்கு தம்மைத் தாமே பலவீனப்படுத்தி விடுகின்றனர்.

இன்றைய தென்னிந்திய சினிமாவும் கையில் வாளேந்தியோ துப்பாக்கி ஏந்தியோ இரத்தக் களரியை ஏற்படுத்துபவர்களே நாயகர்கள் என்ற எண்ணத்தை இளைஞர்கள் நெஞ்சில் அவர்கள் அறியாமலே பதிய வைத்துவிடுகிறது. அதிலும் படமாளிகைக்கு போக வேண்டிய தேவையின்றி தென்னிந்திய சினிமா தொலைக்காட்சி மூலம் வீட்டுக்குள்ளேயே வந்து விடுகிறது.

இத்தகைய சூழலில் வாலிபர்கள் முகங்கொடுக்கும் தனிமை, எமது இனத்தின் மேன்மையையும், புனிதத்தையும் நெஞ்சார உணர்ந்துகொள்ளாமை, எமது பண்பாட்டு அம்சங்களில் பற்றுறுதியின்மை, எமது இனத்தின் வரலாறு பற்றிய தெளிவான பார்வையின்மை, நாம் ஒரு பெரும் இனவழிப்புக்கு உட்படுத்தப்படும் ஒரு சமூகம் என்பதை விளங்கிக்கொள்ளாமை என்பன காரணமாக எமது இளைஞர்கள் தீய சக்திகளால் ஆட்கொள்ளப்படக் கூடிய களநிலை நிலவுகிறது.

இதன் காரணமாகவே சிலர் திட்டமிட்ட வகையில் வாள்வெட்டுக் குழுக்களை உருவாக்கவும், போதை வஸ்து வர்த்தகத்தை விரிவுபடுத்தவும் முடிகிறது.

எனவே பெற்றோர்கள் மட்டுமின்றி முழுச் சமூகமுமே இளைஞர்களுக்கென சில தனித்துவமான குணாம்சங்கள் உண்டு என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். அவ்வகையில் அவர்களின் புதியவற்றை அறியவும் புதியவற்றை செயற்படுத்தவுமான ஆற்றலை சரியான வழியில் முன்னெடுத்துச் செல்லும் வகையில் அவர்கள் வழிநடத்தப்பட வேண்டும். எமது விடுதலைப் போராட்டத்தையும் அதன் மேன்மையையும், எமது பாரம்பரிய பண்பாட்டு சிறப்புகளையும் இளைஞர்களை உணர வைப்பதன் மூலம் எமது இனத்தின் மகத்துவத்தை அவர்கள் நெஞ்சில் ஆழப்பதிக்க வேண்டும். அத்துடன் விளையாட்டு கலை இலக்கியம் சமூக சேவைகள் போன்ற விடயங்களில் அவர்களை ஈடுபடுத்தி கூட்டுச் செயற்பாடுகளால் கிடைக்கும் நன்மைகளையும் தீமைகளிலிருந்து கிடைக்கும் பாதுகாப்பையும் அனுபவ பூர்வமாக உணர வைக்க வேண்டும்.

வாள் வெட்டுக் குழுக்களை கைது செய்து சிறையிலடைப்பதாலோ போதைப்பழக்கத்துக்கு ஆட்கொள்ளப்பட்டவர்களுக்கு தண்டனை அளிப்பதாலோ நிச்சயமாக இச்சீரழிவுகளை தடுத்து நிறுத்திவிட முடியாது இவை தோன்றுவதற்கும் பரவுவதற்குமான காரணங்களை கண்டறிந்து அதன் மூல வேர்களை அடியோடு கெல்லி எறிவதன் மூலமே இனவழிப்பு நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் இத்தகைய விடயங்களை இல்லாமல் செய்யமுடியும்.

இதில் ஒவ்வொரு பெற்றோரும் சமூகத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் தீவிர விழிப்பு நிலையில் அக்கறையுடன் செய்றபட்டால் மட்டுமே எமது இளைஞர்களை இப்பேரழிவிலிருந்து காப்பாற்ற முடியும்.

அருவி இணையத்துக்காக நா.யோகேந்திரநாதன்.

http://aruvi.com/article/tam/2020/09/01/16201/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.