Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரிஷாட்டும் அரசாங்கமும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரிஷாட்டும் அரசாங்கமும்

-எம்.எஸ்.எம். ஐயூப்  

முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாஸ் பதியுதீன், கடந்த வருடம் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தினத் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தியவர்களுடன் தொடர்பு வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு, கடந்த வாரம் விடுதலை செய்யப்பட்டார். அது, தென்னிலங்கை அரசியலில், பெரும் குழப்ப நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.  

கடந்த ஏப்ரல் மாதமே, ரியாஸ் பதியுதீன் கைது செய்யப்பட்டார். “குண்டுத் தாக்குதல் நடத்தியவர்களுடன், அவர் நடத்திய தொலைபேசி உரையாடல்களைப் பற்றிய உறுதி செய்யப்பட்ட தகவல்கள் பொலிஸாரிடம் இருக்கின்றன” என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன அப்போது தெரிவித்திருந்தார்.   

விந்தை என்னவென்றால், “ரியாஸூக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யக்கூடிய வகையிலான, பலமான ஆதாரங்கள் இல்லை. எனவே, இரகசியப் பொலிஸார் அவரை விடுதலை செய்தனர்” என்று அதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர், கடந்த வாரம் அறிவித்திருந்தார்.    

பொலிஸார், சந்தேகத்தின் பேரிலும் சி.சி.டி.விக்களில் பதிவான காட்சிகள் போன்ற மிகத் தெளிவானதும் உறுதியானதுமான ஆதாரங்களின் அடிப்படையிலும் சந்தேக நபர்களைக் கைது செய்கிறார்கள். 

சிலவேளைகளில், ஆதாரங்கள் இல்லாமலும் ஆதாரங்களைத் தாங்களே உருவாக்கியும் சிலரைப் பொலிஸார் கைது செய்வதாகவும் கூறப்படுகிறது. வேறு சில சந்தர்ப்பங்களில், ஆதாரங்கள் இருந்தும் எவரையும் அவர்கள் கைது செய்வதில்லை.   

மஹிந்த ராஜபக்‌ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில், தங்காலையில் பலரது கண் முன்னே, ஒரு பிரிட்டிஷ் பிரஜை தாக்கப்பட்டு, கொல்லப்பட்டும் அவரது ரஷ்யக் காதலி, கூட்டுப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டும் ஒரு வருடம் சென்ற பின்னர், பிரிட்டிஷ் இளவரசர் சார்ள்ஸ் தலையிட்டதை அடுத்தே, குற்றஞ்சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டார்.   

2015ஆம் ஆண்டு, கொட்டதெனியாவ என்னும் ஊரில், சேயா சதெவ்மி என்ற ஐந்து வயதுச் சிறுமியை, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி, கொலை செய்ததாகப் பொலிஸார் ‘கொண்டயா’ என்றழைக்கப்படும் நபரொருவரைக் கைது செய்தனர். அவரிடம் கொலை தொடர்பாக, ஒப்புதல் வாக்குமூலம் பெற்றதாகப் பொலிஸார் அறிவித்தனர். பின்னர், அக்கொலையை மற்றொருவர் செய்ததாகத் தெரியவந்தது. எனவே, சந்தேக நபர்கள் தொடர்பாகப் பொலிஸார் கூறுவதெல்லாம் உண்மையல்ல; எல்லாம் பொய்யுமல்ல.  

இப்போது எழுந்துள்ள கேள்வி என்னவென்றால், ரியாஸ் பதியுதீனைப் பற்றி, பொலிஸார் அன்று கூறியது உண்மையா அல்லது, இப்போது கூறுவது உண்மையா என்பதே ஆகும். ஆதாரங்களின் அடிப்படையிலன்றி, பலர் தத்தம் அரசியல் மற்றும்  தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில், இவ்விரண்டு கூற்றுகளில் ஒன்றைத் தெரிவு செய்திருப்பதே இங்குள்ள விந்தையாகும்.   

பலருக்கு, இந்த விடயத்தை விளங்கிக் கொள்வதற்கு, மற்றொரு சம்பவம் மேலும் சிக்கலாக்கியுள்ளது. அதே வாரத்தில், வவுனியா மாவட்டச் செயலாளர் அலுவலகத்தின் புதிய கேட்போர் கூடத்தைத் திறந்து வைக்கும் வைபவம் நடைபெற்றது. உள்ளக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்‌ஷ, அவரது அமைச்சின் செயலாளரான ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.   

வைபவத்தில், அமைச்சர் சமல் ராஜபக்‌ஷவும் ரிஷாட்டும் கைகுலுக்கிக் கொள்ளும் படம், ஊடகங்களில் வெளியாகியது. அத்தோடு, “ஒரு காலத்தில், அமைச்சர் ரிஷாட் உள்ளிட்ட பலர், இனமத பேதமில்லாமல், போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்கினார்கள்” எனப் பாதுகாப்புச் செயலாளரான கமல் குணரத்ன, அந்தக் கூட்டத்தில் தெரிவித்தார். 

பாதுகாப்புச் செயலாளரது கூற்றையும் அமைச்சர் சமல் ராஜபக்‌ஷ, ரிஷாட்டுடன் கைகுலுக்கியதையும் ரிஷாட்டின் சகோதரர் விடுதலை செய்யப்பட்டதையும் முடிச்சுப் போட்டு, பிரதான ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் இப்போது பலர், பல கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.   

ஆளும் கட்சிக்கும் அதன் நட்புக் கட்சிகளுக்கும் நாடாளுமன்றத்தில் 150 ஆசனங்கள் இருந்த போதிலும், அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றத் தேவையான 150 வாக்குகள், அரசாங்கத்திடம் இருக்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏனெனில், ஆளும் கட்சியின் ஓர் உறுப்பினர் சபாநாயகராக இருக்கிறார். அரசாங்கத்தின் 150 ஆசனங்களில் 15 ஆசனங்கள், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குரியது.   

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பாக விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் ஸ்ரீ ல.சு.க தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராகப் பல விடயங்கள் கூறப்பட்டு வருகின்றன. 20ஆவது திருத்தச் சட்டமூலத்தின் சில அம்சங்களைத் தாம் ஏற்றுக் கொள்ளவில்லை என, ஸ்ரீ ல.சு.க பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்திருந்தார். 

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பாக விசாரணை செய்யும் ஆணைக்குழுவில், திங்கட்கிழமை (05) சாட்சியமளித்த மைத்திரி, அரசாங்கம் மாற்றப் போகும் அரசமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்தில் சில அம்சங்களைப் பாராட்டினார். இந்தநிலையில், ஸ்ரீ ல.சு.க எம்பிக்கள் ஓரிருவராவது போலிக் காரணங்களைக் கூறிக்கொண்டு, வாக்களிப்பைத் தவிர்த்துக் கொண்டால், 20 ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற முடியாமல் போய்விடலாம். எனவே, ரிஷாட் போன்றோரின் ஆதரவை, அரசாங்கம் நாடுவதாகச் சிலர் கருத்து வெளியிட்டு வருகின்றனர். 

இந்தநிலையில், ரிஷாட்டின் சகோதரர் விடுதலை செய்யப்பட்டமையானது, அரசாங்கத்தைப் பெரும் அசௌகரியத்துக்கு உள்ளாக்கி இருப்பதாகத் தெரிகிறது. சமல், ரிஷாட் இருவரும் கைகுலுக்கிக் கொண்டதைப் பற்றி, அமைச்சர்களிடம் கருத்துக் கேட்கும் அளவுக்கு, அந்தச் சம்பவம் ஊடகங்களுக்கு முக்கியமாகிவிட்டது. 

இதற்குப் பதிலளித்த கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச, “இது போன்ற கூட்டங்களுக்கு, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் அழைக்கப்படுவார்கள். ஆளும் கட்சி உறுப்பினர்கள், அவர்களைப் பார்த்து முறைத்துக் கொண்டு இருப்பதில்லை. அந்த இடங்களில், அவர்கள் சகஜமாகப் பழகுவார்கள்” எனவும்  கூறினார்.   

இக்கருத்து ஏற்றுக் கொள்ளக் கூடியதாகும். உண்மையிலேயே, நாடாளுமன்றத்திலும் சபைக்கு வெளியே ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நண்பர்களாக பழகிக் கொள்வது, புதிய விடயமல்ல. ஆனால், கடந்த அரசாங்கத்தின் காலத்தில், அவ்வரசாங்கத்தின் தலைவர்களால் பயங்கரவாதக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட ஒருவருடன், அத்தலைவர்களில் ஒருவர் கைகுலுக்கி இருந்தால், விமல் என்ன கூப்பாடு போட்டிருப்பார் என்பதை, எவராலும் ஊகித்துக் கொள்ள முடியும்.   

ரிஷாட்டின் சகோதரர் விடுதலை செய்யப்பட்டமையின் பின்னால், ஏதோ கொடுக்கல் வாங்கல் இடம்பெறுவதாகத் தாம் சந்தேகிப்பதாகப் பேராயர் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை கூறியிருந்தார். இது அரசாங்கத்தைப் பெரிதும் அசௌகரியத்துக்கு உள்ளாக்கியிருக்க வேண்டும்.  இந்தச் சம்பவங்களை அடுத்து, தமக்கு எவ்வித விசேட தொடர்பும் ரிஷாட்டுடன் இல்லை என்று எடுத்துரைக்க வேண்டிய நிர்ப்பந்தம் அரசாங்கத்தின் தலைவர்களுக்கு ஏற்பட்டது.    

“ரிஷாட்டுடன் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தைப் பற்றிப் பேசவில்லை. வன்னி மக்களின் பிரச்சினைகளைப் பற்றியே பேசினேன்” என, ஊடகவியலாளர் சந்திப்பொன்றில்  சமல் ராஜபக்‌ஷ கூறினார். 

‘வவுனியா கூட்டத்தின் போது, ரிஷாட்டைப் போற்றிப் புகழவில்லை. அவர் மீள்குடியேற்ற அமைச்சராக இருந்தார் என்று மட்டுமே கூறினேன்’  என்று, கமல் குணரத்ன ஊடக அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

அதேவேளை, இரகசியப் பொலிஸின் பிரதி அத்தியட்சகர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நுவன் வெதசிங்க, அப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு, மேல் மாகாண (வட பிராந்திய) பிரதிப் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். 

‘அரசாங்கத்துக்கும் ரிஷாட்டுக்கும் இடையே இரகசிய உடன்பாடும் எதுவும் இல்லை. அதிகாரிகள் தவறு செய்தால், அதை சீர்செய்கிறேன்’ எனத் தமது டுவிட்டர் கணக்கில், ஜனாதிபதி குறிப்பிட்டிருக்கிறார். இவ்வாறு குறிப்பிட்டமை, இரகசியப் பொலிஸின் பிரதி அத்தியட்சகரை இடமாற்றம் செய்ததைக் குறிப்பிடுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது. அவ்வாறாயின் அது, ஜனாதிபதி பொலிஸ் விசாரணைகளில் தலையிடுவதையே சுட்டிக் காட்டுகிறது. ஜனாதிபதி அதைத் தான் குறிப்பிட்டார் என்றால், அந்தப் பதவிக்கு அடுத்து நியமிக்கப்பட்டவர், ரியாஸை மேலும் பின் தொடரலாம்.   

அரசாங்கம்,  தாமே மேற்கொண்ட ஊடகப் பிரசாரத்துக்குப் பதில் கூற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு இருப்பதையே, தற்போதைய நிலைமை காட்டுகிறது. அரசாங்கத் தலைவர்கள், பயங்கரவாதிகளுடன் ரிஷாட் தொடர்பு வைத்திருந்ததாகக் கடந்த வருடம் பிரசாரம் செய்தனர்; அவருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டனர். ரிஷாட்டும் ஹிஸ்புல்லாவும் அசாத்சாலியும் பதவி விலக வேண்டும் என்று, ரத்தன தேரர் உண்ணாவிரதம் இருந்தார். அதையடுத்து சகல முஸ்லிம் அமைச்சர்களும் பதவி விலகியமை தெரிந்ததே. ஆனால், ரிஷாட்டை இந்த அரசாங்கமாவது, கைது செய்யவில்லை.  

பொதுத் தேர்தலுக்கு முன்னர் தான், ரியாஸ் கைது செய்யப்பட்டார். தேர்தலுக்காகவே அந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கூறுகிறார். இப்போது, ரியாஸூக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியாமல் பொலிஸார், அவரை விடுதலை செய்துள்ளனர். அரசாங்கத்தின் தலைவர்கள் சுமத்திய குற்றச்சாட்டுகளை நிரூபிக்குமாறு, இப்போது ஆளும் கட்சியினரே கூறுகின்றனர்
 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ரிஷாட்டும்-அரசாங்கமும்/91-256483

ரிஷாட்டின் சகோதரரரை மீண்டும் கைது செய்து விசாரணை நடத்த வேண்டும்: ஆளும் கட்சி உறுப்பினர்கள் 100 பேர் ஜனாதிபதி, பிரதமருக்கு மகஜர்

Rishard.jpgரிஷாட் பதியூதீனின் சகோதரர் விடுதலை செய்யப்பட்டமை தொடர்பில் முழுமையான விசாரணை மேற்கொண்டு மீண்டும் கைது செய்து சட்டத்தை நடைமுறைப்படுத்த ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை
விடுத்துள்ளார்கள்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் சகோதரரான ரியாஜ் பதியூதீன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் விடுதலை செய்யப்பட்டமைக்கு எதிராக ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் 100 பேரினால் கையெழுத்திடப்பட்ட கடிதம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் இன்று அலரி மாளிகையில் வைத்து கையளிக்கப்பட்டது.

slpp-mps-riyaj-bathiudeen-1-300x234.jpg

2019 ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலை மேற்கொண்ட பயங்கரவாதிகளுக்கு உதவியாக செயற்பட்ட சந்தேகத்தின் பேரில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் சகோதரரான ரியாஜ் பதியூதீன் கடந்த ஏப்ரல் 14ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டார். அவரது கைது தொடர்பில் வலுவான சாட்சிகள் காணப்பட்ட போதிலும் செப்டம்பர் மாதம் 30ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படாது, எவ்வித சட்ட அனுமதியுமின்றி ரியாஜ் பதியூதீன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட இந்த தன்னிச்சையான செயற்பாடு தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொண்டு பயங்கரவாதத்திற்கு துணையாக செயற்பட்ட ரியாஜ் பதியூதீனை மீண்டும் கைது செய்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஆளும் கட்சியின் 100இற்கும் அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்ட குழுவினர் மேன்மைதங்கிய ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

https://thinakkural.lk/article/78432

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.