'சோமாலிலாந்துக்கு தனி நாடு அங்கீகாரம்' - இஸ்ரேல் வியூகமும் இஸ்லாமிய நாடுகளின் எதிர்ப்பும்
பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,இந்தப் புகைப்படம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம், சோமாலியர்கள் சோமாலிலாந்து என்ற தனி நாட்டை உருவாக்கக் கோரிப் போராடியபோது எடுக்கப்பட்டது.
28 டிசம்பர் 2025, 07:51 GMT
புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர்
சோமாலியாவில் இருந்து பிரிந்த சோமாலிலாந்தை (Somaliland), தனி நாடாக அங்கீகரித்த முதல் நாடாக இஸ்ரேல் உருவெடுத்துள்ளது.
விவசாயம், சுகாதாரம் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் சோமாலிலாந்துடன் ஒத்துழைப்பை உடனடியாக விரிவுபடுத்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கையை ஒரு 'வரலாற்றுத் தருணம்' என்று சோமாலிலாந்து அதிபர் அப்துர்ரஹ்மான் முகமது அப்துல்லாஹி கூறியுள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட ஒரு காணொளியில், ஆபிரகாம் உடன்படிக்கையில் (Abraham Accords) இணைய சோமாலிலாந்து கொண்டுள்ள விருப்பம் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் தெரிவிக்கப் போவதாக நெதன்யாகு கூறினார்.
2020-ஆம் ஆண்டில், டொனால்ட் டிரம்பின் முதல் பதவிக்காலத்தின் போது கையெழுத்தான ஆபிரகாம் உடன்படிக்கையின் படி ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், சூடான் மற்றும் மொராக்கோ ஆகிய நாடுகள் இஸ்ரேலுடன் தூதரக உறவுகளை ஏற்படுத்தின. இதில் டிரம்ப் முக்கிய பங்கு வகித்தார்.
சோமாலிலாந்தும் ஆபிரகாம் உடன்படிக்கையில் இணையத் தயாராக இருப்பதாக அப்துல்லாஹி எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
எனினும், இந்தத் தகவல்கள் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் கேட்கப்பட்டபோது, சோமாலிலாந்தை அங்கீகரிக்கும் முடிவை தாம் பின்பற்றப் போவதில்லை என்றும், ஆனால் இந்த விவகாரத்தைப் பரிசீலிப்பதாகவும் அவர் கூறினார்.
நியூயார்க் போஸ்ட் (New York Post) டிரம்பிடம் சோமாலிலாந்தை அங்கீகரிப்பீர்களா என்று கேட்டபோது, முதலில் "இல்லை, இன்னும் இல்லை" என்று கூறினார். ஆனால், பின்னர் தனது பதிலை "இல்லை" என்று மாற்றிக்கொண்டார்.
'உண்மையில் சோமாலிலாந்து எங்குள்ளது என்று யாருக்காவது தெரியுமா?' என்றும் டிரம்ப் கேள்வி எழுப்பினார்.
சோமாலியாவிலிருந்து பிரிந்த அந்த நாட்டில் அமெரிக்க ராணுவத் தளம் அமையுமா என்று அவரிடம் கேட்கப்பட்டபோது, "அது ஒன்றும் பெரிய விஷயமல்ல" என்று அவர் பதிலளித்தார்.
"எல்லாம் கவனிக்கப்பட்டு வருகிறது. நாங்கள் இதை ஆராய்வோம். நான் பலவற்றை கவனித்து எப்போதும் சிறந்த முடிவுகளை எடுக்கிறேன், அவை சரியானதாகவே முடிகின்றன," என்று டிரம்ப் கூறினார்.
பட மூலாதாரம்,X/@netanyahu
படக்குறிப்பு,சோமாலிலாந்து அதிபருடன் காணொளி அழைப்பு மூலம் நெதன்யாகு உரையாடுகிறார்.
சோமாலிலாந்து உருவானது எப்போது?
சோமாலிலாந்து என்பது சோமாலியாவிலிருந்து பிரிந்து 1991 முதல் ஒரு தனி நாடாகச் செயல்பட்டு வரும் பிராந்தியமாகும்.
இஸ்ரேலின் இந்த அறிவிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க சோமாலியா, துருக்கி மற்றும் ஜிபூட்டி ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடன் எகிப்து வெளியுறவு அமைச்சர் தனித்தனியாக தொலைபேசி மூலம் உரையாடினார்.
எகிப்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், நான்கு நாடுகளும் சோமாலியாவின் ஒற்றுமை, இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான தங்களின் ஆதரவை உறுதிப்படுத்தியதோடு, ஸ்திரத்தன்மையைக் குலைக்கும் ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளுக்கு எதிராக எச்சரித்துள்ளன.
இறையாண்மை கொண்ட நாடுகளின் சில பகுதிகளைத் தனி நாடுகளாக அங்கீகரிப்பது சர்வதேசச் சட்டம் மற்றும் ஐநா சாசனத்தின் கீழ் ஒரு ஆபத்தான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் பல ஆண்டுகளாக மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்த முயற்சி செய்து வருகிறது. ஆனால் காஸா போர் மற்றும் இரானுக்கு எதிரான மோதல் உள்ளிட்ட சமீபத்திய போர்கள் அதன் முயற்சிகளுக்குத் தடையாக அமைந்துள்ளன.
சோமாலிலாந்து, ஏடன் வளைகுடாவில் ஒரு மூலோபாய முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. அது தனக்கென சொந்த நாணயம், பாஸ்போர்ட் மற்றும் காவல் படைகளைக் கொண்டுள்ளது.
1991-இல் முன்னாள் சர்வாதிகார ஜெனரல் சியாத் பாரேவுக்கு எதிரான சுதந்திரப் போராட்டத்திற்குப் பிறகு உருவான சோமாலிலாந்து, அன்றிலிருந்து பல தசாப்தங்களாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
சுமார் 60 லட்சம் பேர் வசிக்கும் இந்தச் சுய-பிரகடன குடியரசு, சமீபத்திய ஆண்டுகளில் சோமாலியா, எத்தியோப்பியா மற்றும் எகிப்து தொடர்பான பல பிராந்திய மோதல்களிலும் ஈடுபட்டுள்ளது.
நான்கு புறமும் நிலப்பரப்பால் சூழப்பட்ட எத்தியோப்பியா, சோமாலிலாந்துடன் கடந்த ஆண்டு ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டது. அதன்படி எத்தியோப்பியா துறைமுகம் மற்றும் ராணுவத் தளத்திற்காக சோமாலிலாந்தின் கடற்கரையின் ஒரு பகுதியை குத்தகைக்கு எடுக்க இருந்தது. இது சோமாலியாவை ஆத்திரமடையச் செய்தது.
பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,'உண்மையில் சோமாலிலாந்து எங்குள்ளது என்று யாருக்காவது தெரியுமா?' என்றும் டிரம்ப் கேள்வி எழுப்பினார்.
இஸ்ரேலின் இந்த முடிவு ஏன் முக்கியமானது?
இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் கிடியோன் சார் வெள்ளிக்கிழமை அப்துல்லாஹியுடன் இருதரப்பு உறவுகள் குறித்து தொலைபேசியில் உரையாடினார்.
இதற்கிடையில், சோமாலியாவின் வெளியுறவு அமைச்சகம் இஸ்ரேலின் நடவடிக்கையை கண்டித்துள்ளது. இது தனது இறையாண்மை மீதான "திட்டமிட்ட தாக்குதல்" என்றும், "இஸ்ரேலால் எடுக்கப்பட்ட சட்டவிரோத நடவடிக்கை" என்றும் அது கூறியுள்ளது.
சோமாலியா தவிர, இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC), துருக்கி, சௌதி அரேபியா, எகிப்து, உள்ளிட்ட பல நாடுகள் இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
இருப்பினும், சோமாலிலாந்து துருக்கியின் விமர்சனத்தை நிராகரித்துள்ளது.
"துருக்கியின் எதிர்ப்பு கள யதார்த்தத்தைப் பிரதிபலிக்கவில்லை. 34 ஆண்டுகளாக சோமாலியாவின் ஒரு பகுதியாக இல்லாத சோமாலிலாந்து குடியரசை இஸ்ரேல் அங்கீகரித்துள்ளது. சோமாலிலாந்து அதிபர் ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர், முக்கிய நகரங்களில் நடக்கும் கொண்டாட்டங்கள் மக்களின் விருப்பத்தைப் பிரதிபலிக்கின்றன. சோமாலிலாந்து மக்களுக்கு மதிப்பளிக்குமாறு துருக்கியை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்," என்று அது கூறியுள்ளது.
சோமாலிலாந்து பல ஆண்டுகளாகத் தூதரக அங்கீகாரத்தைப் பெற முயற்சி செய்து வருகிறது. கடந்த அக்டோபரில் அப்துல்லாஹி எத்தியோப்பியா சென்றது உள்பட, சமீபகாலமாக அதற்கான முயற்சிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
வெள்ளிக்கிழமை (டிசம்பர் 26) நிலவரப்படி சோமாலிலாந்து எந்த நாட்டிலிருந்தும் முழு அங்கீகாரத்தைப் பெறவில்லை என்றாலும், எத்தியோப்பியா, அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட பல நாடுகளுடன் தூதரகத் தொடர்புகளைப் பேணி வருகிறது மற்றும் அந்த நாடுகளின் அதிகாரிகளுடன் கூட்டங்களை நடத்தி வருகிறது.
முன்னணி அரபு ஊடகமான 'அல்-மானிட்டர்' (Al-Monitor) வெளியிட்ட அறிக்கையின்படி, இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்க ராணுவத்தின் ஆப்பிரிக்கப் படைப் பிரிவின் (US AFRICOM) தலைவர் ஜெனரல் டாக்வின் ஆண்டர்சன் சோமாலிலாந்துக்குச் சென்று அப்துல்லாஹியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
கடந்த பிப்ரவரி மாதம் துபாயில் நடந்த உச்சிமாநாட்டில் சோமாலிலாந்து அதிகாரிகள் பங்கேற்றதுடன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிகளுடன் சந்திப்புகளை நடத்தினர் என்று சோமாலிலாந்து வெளியுறவு அமைச்சகம் அப்போது அறிவித்திருந்தது.
சோமாலிலாந்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கு ராணுவத் தளம் இருப்பதாகத் தகவல்கள் உள்ளன. இருப்பினும், இதை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஒருபோதும் உறுதிப்படுத்தவில்லை.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் டிபி வேர்ல்ட் நிறுவனத்திற்கு சோமாலிலாந்தின் பெர்பெரா நகரில் ஒரு துறைமுகம் இருக்கிறது.
ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு தொடர்பு உள்ளதா?
இஸ்ரேல் திடீரென சோமாலிலாந்தை அங்கீகரித்ததற்குப் பின்னால் ஐக்கிய அரபு எமிரேட்ஸும் ஒரு காரணம் என கூறப்படுகிறது.
ஆப்பிரிக்க விவகாரங்கள் நிபுணரும் ஆய்வாளருமான கேமரூன் ஹட்சன் எக்ஸ் தளத்தில், "பொதுவாக ரகசியமாகச் சொல்லப்படுவதை பிபி (நெதன்யாகு) வெளிப்படையாகக் கூறியுள்ளார். சோமாலிலாந்து அங்கீகாரத்தை ஆபிரகாம் உடன்படிக்கையுடன் இணைப்பதன் மூலம், சமீபத்திய ஆண்டுகளில் ஆப்பிரிக்காவின் ஹார்ன் (சோமாலியா தீபகற்பம் என்றும் அழைக்கப்படுகிறது) பகுதியை மறுசீரமைப்பதில் முக்கிய பங்கு வகித்த நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸின் செல்வாக்கையும் ஆதரவையும் இஸ்ரேல் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது," என்று பதிவிட்டுள்ளார்.
2020-ஆம் ஆண்டில் இஸ்ரேலுடன் ஆபிரகாம் உடன்படிக்கையில் இணைந்த முதல் நாடுகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பஹ்ரைன் ஆகும்.
செங்கடல் மற்றும் பாப்-எல்-மண்டேப் (Bab-el-Mandeb) ஜலசந்திக்கு அருகில் இருப்பதால், 'ஆப்பிரிக்காவின் ஹார்ன்' பிராந்தியம் மூலோபாய ரீதியாக முக்கியமாகக் கருதப்படுகிறது.
சப்-சஹாரா (சஹாராவுக்கு தெற்கே உள்ள ஆப்பிரிக்க நாடுகள்) ஆப்பிரிக்க நாடுகளுடனான உறவை மேம்படுத்த இஸ்ரேல் முனைப்பு காட்டுகிறது. இது 2021-இல் ஆப்பிரிக்க ஒன்றியத்தில் (African Union) பார்வையாளர் அந்தஸ்தைப் பெற்றது. ஆனால் பல உறுப்பு நாடுகளின் எதிர்ப்பு காரணமாக 2023-இல் இந்த அந்தஸ்து இடைநீக்கம் செய்யப்பட்டது.
அரபு லீக்கில் உறுப்பினராக இருப்பதால், சோமாலியாவுக்கு இஸ்ரேலுடன் தூதரக உறவுகள் இல்லை.
ஆனால் துருக்கிக்கு சோமாலிலாந்தின் தலைநகரான ஹர்கீசாவில் ஒரு தூதரகம் உள்ளது.
இஸ்ரேலின் வியூகம்
பட மூலாதாரம்,X/@netanyahu
சோமாலிலாந்தை அங்கீகரிப்பதன் பின்னணியில் மூலோபாயக் காரணங்கள் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
கடந்த மாதம் தேசிய பாதுகாப்பு ஆய்வுகளுக்கான நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "ஹூத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான தனது எதிர்கால நடவடிக்கை உள்ளிட்ட பல மூலோபாய காரணங்களுக்காக செங்கடல் பிராந்தியத்தில் இஸ்ரேலுக்கு கூட்டாளிகள் தேவை" என்று கூறப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த கருத்து ஏமனில் உள்ள இரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் தொடர்பாகத் தெரிவிக்கப்பட்டது.
அதே அறிக்கையில், "அத்தகைய ஒத்துழைப்புக்கு சோமாலிலாந்து ஒரு சிறந்த நாடாகும், ஏனெனில் அது மோதல் மண்டலத்திற்கு அருகிலுள்ள ஒரு செயல்பாட்டுப் பகுதிக்கான அணுகலை இஸ்ரேலுக்கு வழங்கக்கூடும்" என்று கூறப்பட்டுள்ளது. இதற்குப் பின்னால் பொருளாதாரக் காரணங்களும் இருப்பதாக அந்த அறிக்கை கூறியது.
அதே நேரத்தில், சோமாலிலாந்துக்கு சர்வதேச அங்கீகாரம் இல்லாதது வெளிநாட்டுக் கடன்கள், உதவிகள் மற்றும் முதலீடுகளைப் பெறுவதற்குத் தடையாக உள்ளது. இதனால் அந்தப் பிராந்தியம் வறுமையில் சிக்கியுள்ளது.
"சோமாலிலாந்தை ஒரு இறையாண்மை கொண்ட நாடாக இஸ்ரேல் அங்கீகரித்திருப்பது ஒரு முக்கிய மூலோபாயப் பகுதிக்கு கதவைத் திறக்கிறது: பெர்பெரா துறைமுகத்திற்கு நேரடி அணுகல் கிடைப்பது, ஹூத்தி அச்சுறுத்தலுக்கு மத்தியில் செங்கடல் பாதுகாப்பை மேம்படுத்துவது மற்றும் இரான் செல்வாக்கை எதிர்கொள்வது," என்று புவிசார் அரசியல் எழுத்தாளர் வாலினா சக்ரோவா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
பெர்பெரா நகரில் பெரும் முதலீடு மற்றும் ராணுவ இருப்பைக் கொண்டுள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் டிரம்பின் நிர்வாகம் இதற்கு ஆதரவு அளிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று அவர் எழுதியுள்ளார்.
இஸ்லாமிய நாடுகள் எதிர்ப்பு
பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,2023இல் துருக்கிய அதிபராக எர்துவான் மீண்டும் தேர்வானதை சோமாலியா மக்கள் கொண்டாடியதை இந்தப் புகைப்படம் காட்டுகிறது.
இந்த அங்கீகாரம் துருக்கி, சௌதி அரேபியா, எகிப்து, ஓமன், ஜோர்டான் உள்ளிட்ட பல நாடுகளில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சோமாலிய முன்னாள் அதிபர் முகமது ஃபர்மாஜோ கூறுகையில், "சர்வதேசச் சட்டத்தின்படி, சோமாலியாவின் பிராந்திய ஒருமைப்பாட்டையும் இறையாண்மையையும் இஸ்ரேல் மதிக்க வேண்டும். சோமாலியாவின் எந்தப் பகுதியையும் தனிநாடாக அங்கீகரிப்பது இந்தச் சட்டத்தை முழுமையாக மீறுவதாகும். சோமாலிலாந்து சோமாலியாவின் ஒரு ஒருங்கிணைந்த பகுதி. இறையாண்மையைப் பாதுகாப்பதில் எங்கள் மக்கள் உறுதியுடன் இணைந்துள்ளனர்," என்றார்.
சோமாலியாவை உறுப்பினராக கொண்ட ஆப்பிரிக்க ஒன்றியம் சோமாலிலாந்துக்கான எந்தவொரு அங்கீகாரத்தையும் நிராகரித்துள்ளது.
"சோமாலியாவின் ஒற்றுமை, இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைக் குலைக்கும் எந்தவொரு முயற்சியும் கண்டம் முழுவதிலும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும் மற்றும் இது ஒரு ஆபத்தான முன்னுதாரணமாகும்," என்று அதன் தலைவர் மஹ்மூத் அலி யூசுப் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், துருக்கி நாடாளுமன்றத்தின் சர்வதேச விவகாரங்கள் குழுவின் துணைத் தலைவரும், துருக்கிய எம்.பி.யுமான சி கானி டோருன், சோமாலிலாந்துக்கான தனி நாடு அங்கீகாரம் துருக்கிக்கு விழுந்த பெரிய அடி என்று குறிப்பிட்டுள்ளார்.
அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "சோமாலிலாந்தை இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்திருப்பது கிழக்கு ஆப்பிரிக்காவிற்கு மட்டுமல்ல, துருக்கிக்கும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இஸ்ரேலின் நடவடிக்கைகள் செங்கடல், ஹார்ன் ஆஃப் ஆப்பிரிக்கா பிராந்தியம் மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவின் ஸ்திரத்தன்மையைக் குலைப்பதோடு மட்டுமல்லாமல், பல்வேறு மோதல்களையும் தூண்டும்," என்று பதிவிட்டுள்ளார்.
"துருக்கி 2011-ஆம் ஆண்டு முதல் சோமாலியாவில் முதலீடு செய்து வருகிறது," என்று டோருன் கூறியுள்ளார். "துருக்கி, சோமாலியாவின் வலுவான பொருளாதார மற்றும் ராணுவ கூட்டாளியாகும். நான் தூதராக இருந்த காலத்தில் 2013-இல் தொடங்கப்பட்ட சோமாலியா-சோமாலிலாந்து பேச்சுவார்த்தைகள் ஒருங்கிணைப்பை நோக்கிய நடவடிக்கைகளை வலுப்படுத்தின."
"இந்த முடிவு பிராந்திய சமநிலையை மாற்றும். துரதிர்ஷ்டவசமாக பிராந்தியத்தில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் செல்வாக்கை அதிகரிக்கும். மற்ற நாடுகள் இந்த முடிவை அங்கீகரிப்பதைத் தடுக்க பிராந்தியத்திலுள்ள பிற நாடுகளுடன் இணைந்து செயல்படக் கூடிய வகையிலான கொள்கையை துருக்கி அவசரமாகப் பின்பற்ற வேண்டும்," என்று அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையில், சௌதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், சோமாலியாவின் இறையாண்மைக்கு முழு ஆதரவு அளிப்பதாகவும், இஸ்ரேலின் நடவடிக்கையை சர்வதேசச் சட்டத்தை மீறும் செயல் என்று கண்டிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,1991 முதல் சோமாலிலாந்து ஒரு தனி பிரதேசமாக இருந்து வருகிறது,
இஸ்லாமிய நாடுகளின் அமைப்பான இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பும் (OIC), இஸ்ரேலின் இந்த அறிவிப்புக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
ஓஐசி வெளியிட்டுள்ள அறிக்கையில், "சோமாலிலாந்தை ஒரு தனி நாடாக அங்கீகரிப்பதை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம் மற்றும் நிராகரிக்கிறோம். இது சோமாலியாவின் இறையாண்மை, தேசிய ஒற்றுமை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மீறுகிறது. சோமாலியாவின் இறையாண்மையை நாங்கள் ஆதரிக்கிறோம்," என்று கூறப்பட்டுள்ளது.
வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலும் (GCC) தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. ஜிசிசி பொதுச் செயலாளர் ஜாசிம் முகமது அல்-புடாவி, இஸ்ரேலின் முடிவை சர்வதேசச் சட்டத்தை மீறும் செயல் என்று கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஜிசிசி பொதுச் செயலாளர் கூறுகையில், "இந்த அங்கீகாரம் ஆப்பிரிக்காவின் ஹார்ன் பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையைக் குலைக்கும் ஒரு ஆபத்தான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகிறது. இது பதற்றங்களையும் புதிய மோதல்களையும் தூண்டும். இது பிராந்தியத்தில் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பிராந்திய மற்றும் சர்வதேச முயற்சிகளுக்கு எதிரானது," என்றார்.
ஜிசிசியில் மொத்தம் ஆறு நாடுகள் உள்ளன - பஹ்ரைன், ஓமன், குவைத், கத்தார், சௌதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
https://www.bbc.com/tamil/articles/c62dpx882vno
By
ஏராளன் ·