Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இணைவு – எழுச்சி – சர்ச்சை – முன்னெடுக்க வேண்டிய முயற்சிகள் – பி.மாணிக்கவாசகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

இணைவு – எழுச்சி – சர்ச்சை – முன்னெடுக்க வேண்டிய முயற்சிகள் – பி.மாணிக்கவாசகம்

 
6-1-696x522.jpg
 9 Views

தமிழ் மக்களின் போராட்டம் என்பது சாதாரண அரசியல் விளையாட்டல்ல. அது நீதிக்கும் நியாயத்துக்குமானது. அரசியல் உரிமைகள் சார்ந்தது. அடிப்படை உரிமைகளுக்கானது. அது அவர்களுடைய வாழ்வுக்கும் இருப்புக்குமானது.

தமிழ் மக்கள் சாதாரண மக்களல்ல. அவர்கள் வந்தேறு குடிகளுமல்ல. வாழ்வியல் வழியில், கலை, கலாசார, மத, பண்பாடு, அரசியல் ரீதியான வரலாற்று பாரம்பரியத்துடனான தாயகப் பிரதேசத்தைக் கொண்டவர்கள். ஆனால் பெருந்தேசியப் போக்கில் தனி இனத்துவ அரசியல் மமதையில் சிங்கள பௌத்த தேசியக் கொள்கையின் அடிப்படையில் அவர்கள் அடக்கி ஒடுக்கப்படுகின்றார்கள்.

அவர்களுடைய நிலங்கள் பறிக்கப்பட்டிருக்கின்றன. உரிமைகள் மறுக்கப்பட்டிருக்கின்றன. அரசியல், கல்வி, கலை,  கலாசாரப் பண்பாட்டு நிலைமைகளில் ஒடுக்கப்பட்டிருக்கின்றார்கள். ஓரங்கட்டப்பட்டிருக்கின்றார்கள். காலத்துக்குக் காலம் என்ற ரீதியில் அதிகாரப்பல பின்புலத்தில் அவர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டிருந்தன. கட்டவிழ்த்துவிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

ஒரே நாடு ஒரே மதம் ஒரே இனம் என்ற தனி இன, மதத்துவ மேலாண்மையின் கீழ் தமிழ் மக்கள் இன அழிப்புக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றார்கள். அவ்வப்போது இடம்பெற்ற தனிச்சிங்கள சட்ட நிறைவேற்றத்தின் பின்னரான வன்முறைகள், கறுப்பு ஜுலையின் அப்பட்டமான இன அழிப்பு வன்முறைகள், ஆயுதப் போராட்டத்தை அதீத பலம் கொண்டு அடக்கி அழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் ஊழிப் பேரவலம் என்று படுகொலை ரீதியான இன அழிப்பு நடவடிக்கைகளின் பட்டியல் நீளமானது.

கறுப்பு ஜுலையின்போது படுகொலைகளிலும் பார்க்க, நாட்டின் தென்பிரதேசம் எங்கும் பேரின தீவிரவாத வெறியர்கள் தமிழ் மக்களின்; பொருளாதாரத்தை இலக்கு வைத்து அடித்து நொறுக்கி எரித்து அழித்தார்கள்.

அரசியல் உரிமைக்கான மிதவாத அரசியல் போக்கின் வழியில் முன்னெடுக்கப்பட்ட சாத்வீகப் போராட்டங்கள் ஆயுத முனையில் அதிகார பலம் கொண்டு அடக்கி ஒடுக்கப்பட்டது. அந்தப் போராட்டம் இறைமையின் அடிப்படையிலான அதிகாரப் பகிர்வை அடிப்படையாகக் கொண்டிருந்தது. அந்தப் போராட்டங்கள் அடக்கி வன்முறைகள் மூலம் உயிரழிப்புச் செயற்பாடுகள் தலையெடுத்திருந்தன. இதற்கு எதிராகவே ஆயுதப் போராட்டம் கிளர்ந்தெழுந்தது. ஆயுதப் போராட்டத்தின் இலக்கு உரித்துக்களையும் உரிமைகளையும் கொண்ட தாயக மண்மீட்பையும் தமிழ் மக்களின் பாதுகாப்பையும் உறுதியான இலக்காகக் கொண்டிருந்தது.

ஆனால் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட 2009 ஆம் ஆண்டின் பின்னர் ஏறி மிதிக்கப்பட்ட சமூகமாக தமிழ் மக்கள் ஆகிப்போனார்கள். யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததன் மூலம் ஆயுதப் பிரயோகமும், குண்டுத் தாக்குதல்களின் இடியோசைகளும் நின்று போயினவே தவிர, தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தம் நிறுத்தப்படவில்லை. இராணுவ மயப்படுத்தப்பட்ட அடக்குமுறைகளும், ஆக்கிரமிப்புக்களும் முடிவுக்கு வரவில்லை. அவைகள் மறைகர நிலையில் ஆட்சியாளர்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றார்கள்.

வெல்ல முடியாததென்று கருதப்பட்ட யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த ராஜபக்ஷக்களின் அரசாங்கம் மட்டுமல்ல. ரணில் – மைத்திரி தலைமையிலான நல்லாட்சி அரசாங்கமும் இந்தக் கபட நாடகத்தையே ஆடியது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட 2015 இன்  பின் நிலைமைகளில் மாற்றங்கள் ஏற்பட்டது போலவும் அடக்குமுறைகள் இல்லாதது போலவுமான போலித் தோற்றம் மட்டுமே நல்லாட்சி அரசாங்கக் காலத்தில் வெளிப்பட்டிருந்தது. யுத்தத்தின் பின்னரான நிலைமைகளில் இணக்கவழியில் தீர்வு காணப்பட்டிருக்க வேண்டிய பிரச்சினைகள் எதற்குமே முடிவு காணப்படவில்லை.

நல்லாட்சி அரசாங்கம் கவிழ்ந்து 2019 இல் மீண்டும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய ராஜபக்ஷக்கள் முன்னரிலும் பார்க்க இன, மதவாத, இராணுவ மயப்படுத்தப்பட்ட ஆட்சியை கூடிய அதிகார பலத்துடன் நிறுவி இருக்கின்றார்கள். தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகளும் நில ஆக்கிரமிப்புச் செயற்பாடுகளும் அரசியல் ரீதியாக மட்டுமல்லாமல் மத, கலை, கலாசாரப் பண்பாட்டு ரீதியில் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. இதனால் உயிரிழப்புகளைக் கொண்ட வெளிப்படையான இன அழிப்பு நடவடிக்கைகள் பண்பாட்டுக் கோலத்திலான இன அழிப்பு நடவடிக்கையாகத் தொடர்கின்றது.

இந்த நிலையில் ஐநா மனித உரிமைகள் பேரவையின் பிரேரணைகளுக்கமைவாக நிலைமாறு கால நீதியின் வழியில் பொறுப்பு கூறுகின்ற கடப்பாட்டை ஜனாதிபதி கோத்தாபாய அரசு புறந்தள்ளித் தூக்கி எறிந்துள்ளது. சீனச்சார்பு வெளியுறவுக் கொள்கையையும், இராணுவமயம் சார்ந்த அதிகார மேலாண்மை ஆட்சியைத் தொடர்கின்றது.

தொலைநோக்கற்ற வெளியுறவுக் கொள்கைச் செயற்பாடுகளும், ஜனநாயக வழிமுறைகளைப் புறந்தள்ளி சர்வாதிகாரத்தை நோக்கிய ஆட்சி வழிமுறையையும் கொண்ட இலங்கையின் போக்கு சர்வதேசத்தை முகம் சுழிக்கச் செய்திருக்கின்றது. ஐநா மனித உரிமைப் பேரவையும் கடுப்பாக வேண்டிய நிலைமைக்கு ஆளாகியிருக்கின்றது.

இத்தகைய பின்புலத்தில்தான் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணி போராட்டத்தில் சிறுபான்மை தேசிய இனத்தின் எழுச்சி வெளிப்பட்டிருக்கின்றது. இந்த எழுச்சி இலங்கை அரசாங்கத்தை அதிர்ச்சி அடையச் செய்திருக்கின்றது. சர்வதேசத்தை வியப்போடு திரும்பிப் பார்க்கச் செய்திருக்கின்றது.

இந்த இன எழுச்சி அர்ப்பணிப்பு மிக்கது. இன உணர்வையும் நீதிக்கான வேட்கையையும் கொண்டது. அநீதிகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் எதிராகக் கிளர்ந்தெழுந்த சமூக ஆவேசம். அது தர்மாவேசத்தின் பாற்பட்டது. சிறு பொறியாகத் தொடங்கிய அந்த முயற்சி பேரெழுச்சியாக வியாபித்திருந்தது. இதுவே பொத்துவில் – பொலிகண்டி போராட்டப் பேரணியின் வெற்றிக்கான ஊற்று.

இந்த மக்கள் எழுச்சி உரிய முறையில் பேணப்பட வேண்டும். வளர்ச்சிப் போக்கில் முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும். ஐநா மனித உரிமைப் பேரவையின் 2021 மார்ச் மாத அமர்வில் இலங்கை விவகாரம் தீவிர கவனத்துக்கு உட்படுத்தப்படவுள்ளதாக சர்வதேச நிலைமைகள் வெளிப்படுத்தி இருக்கின்றன. கடுமையானதொரு நிலைப்பாட்டில் புதிய தீரு;மானம் ஒன்று கொண்டுவரப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் பரவலாகக் காணப்படுகின்றன.

இதற்கு இலங்கை தொடர்பில் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சல் பச்லட்டின் கடும் போக்கிலான அறிக்கையே தூண்டுகோலாக அமைந்துள்ளது. அந்த அறிக்கை பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ஓர் உத்வேகத்தையும் உற்சாகத்தையும் அளித்திருந்தது. அதேவேளை தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியத்லை வலியுறுத்தி அறிக்கையொன்றையும் அனுப்பி வைத்துள்ளன. இந்த அறிக்கைக்குப் பலம் சேர்க்கவும், ஜெனிவாவில் கனிந்துள்ள சாதகமான நிலைமைக்கு மேலும் வேகமூட்டும் வகையிலும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்டப் பேரணி அமைந்துள்ளது.

8.jpg

இந்த நிலையில் அந்தப் பேரணியின் மக்கள் எழுச்சி கட்சி அரசியல் போட்டியில் சிக்கித் தவிக்க நேரிட்டுவிடுமோ என்ற அச்சம் எழுந்திருக்கின்றது. இந்தப் பேரணியில் சாணக்கியனுடன் முன்னணியில் பங்கேற்றிருந்த சுமந்திரன் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை தொடர்பில் கொதித்தெழுந்துள்ள கஜேந்திரகுமார், சுமந்திரன் தமிழ் மக்களைக் கொச்சைப்படுத்திவிட்டார். தமிழினத்திற்கும் துரோகம் இழைத்துவிட்டார் என சாடியிருந்தார்.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தங்களுடைய செயற்பாடுகளில் சுமந்திரனைத் தொடர்ந்தும் கலந்துகொள்வதற்கு அனுமதிக்கப் போவதாக இருந்தால் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அவ்வாறான செயற்பாடுகளில் கலந்து கொள்ள முடியாத நிலைமை ஏற்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இதுவிடயத்தில் தமிழ் சிவில் சமூக சம்மேளனம் ஒரு விசாரணையை நடத்தி தாம் ஏற்றுக்கொள்ளக் கூடிய பதிலைத் தெரிவித்து இதற்கு முடிவு கட்ட வேண்டும் என்று கோரியிருக்கின்றார். சிவில் சமூக அமைப்பின் முக்கியஸ்தர்களாகிய தவத்திரு வேலன் சுவாமிகள் மற்றும் அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங் ஆகியோரிடம் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருக்கின்றது.

நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய சுமந்திரன் மற்றும் கஜேந்திரகுமார் ஆகிய இருவருக்கும் இடையிலான இந்தப் பிரச்சினை ஓர் அரசியல் சர்ச்சையாகத் தலையெடுத்திருக்கின்றது. இது விடயத்தில் வேலன் சுவாமிகளும் லியோ ஆம்ஸ்ரோங் அடிகளாரும் என்ன செய்யப் போகின்றார்கள் என்பது உடனடியாகத் தெரியவில்லை.

10.jpg

ஆனால், வடக்கு கிழக்கு சிவில் அமைப்புக்களின் ஒன்றிணைவில் பலதரப்பினரையும் உள்ளடக்கியதாக  இந்த எழுச்சி ஒரு பேரியக்கமாகக் கட்டியெழுப்பப்படவுள்ளதாக தவத்திரு வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார். அதேவேளை, மக்களின் இந்த எழுச்சியானது சில்லறை விடயங்களுக்காகப் பிரிந்துவிடக் கூடாது என்று கூறியிருக்கின்றார்.

சிவில் அமைப்புக்களின் முன்முயற்சியில் உருவாகிய இந்த மக்கள் எழுச்சி பேரணியில் வெற்றி பெறுவதற்கு அரசியல் தலைமை பெருந்துணை புரிந்திருக்கின்றது என்பதை மறுப்பதற்கில்லை. அதேவேளை, இந்த மக்கள் எழுச்சியும் அரசியல் கட்சிகள், அரசியல் தலைவர்கள், முக்கியஸ்தர்கள், பொது அமைப்புக்கள் மதத் தலைவர்கள், போராட்டக் குழுக்கள் (தன்னெழுச்சி பெற்று காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கோரியும் மண் மீட்புக்கும், அரசியல் கைதிகளின் விடுதலைக்குமாகப் போராடுபவர்கள்), பல்கலைக்கழக மாணவர்கள் என பலதரப்பட்டவர்களையும் ஒன்றிணைத்துள்ள இந்த எழுச்சி அரசியல் துறையினுள் கரைந்து போய்விடக் கூடாது.

சிவில் அமைப்புக்கள், மதத்தலைமைகள், பொது அமைப்புக்கள், போராட்ட குழுக்கள், அரசியல் சக்திகள், பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் என பலதரப்பட்ட பிரிவினரும் தங்கள் தங்கள் அர்ப்பணிப்போடும் உணர்வு ரீதியாகவும் கலந்து கொண்டமையினாலே தான் அந்தப் பேரணி எழுச்சி பெற்றது. போராட்டமும் வெற்றி பெற்றது இதனை மனங்கொள்ளுதல் அவசியம்.

இந்தப் பேரணியின் மூலம் ஏற்பட்டுள்ள ஒன்றிணைவும் ஐக்கியமும் கட்டிக்காக்கப்படுவது மிக மிக முக்கியம் அதுமட்டுமல்லாமல், இந்த எழுச்சியின் தூண்களாகத் திகழ்கின்ற அனைத்து சக்திகளையும் ஒன்றிணைத்து ஓர் உயர் நிலையில் வழிநடத்தவும் வெளித்தளத்தில் – இராஜதந்திர மட்டத்தில் விடயங்களைக் கையாளவும் தக்க ஓர் உயர் மட்டக் குழுவொன்று அமைக்கப்படுதல் அவசியம் என்ற தேவையையும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணியும் அதன் பின்னர் எழுந்துள்ள சர்ச்சைகளும் பலியுறுத்துவதாக அமைந்திருக்கின்றன.

WhatsApp-Image-2021-02-06-at-14.18.59-1-

போராட்டங்களுக்கான சக்திகளை ஒன்றிணைத்தல், செயற்படுதல், வழிநடத்தல் போன்ற முக்கிய அம்சங்களில் – காரியங்களில் பலதரப்பட்ட சக்திகளும் பங்கேற்றிருந்ததை இந்தப் பேரணியில் அவதானிக்க முடிகின்றது. அதேவேளை எந்தவொரு சக்தியும் ஒன்றையொன்று மேவியதாகவோ உயர்ந்து நின்று உரிமை கோரத்தக்கதாகவோ அமைந்திருக்கவில்லை என்பதையும் புரிந்து கொள்ள முடிகின்றது. ஏனெனில் இதில் பங்கேற்றிருந்த ஒவ்வொரு பிரிவினருக்கும் தங்கள் தங்கள் அளவில் எல்லைகள் இருக்கின்றன என்பதையும் அவற்றை மீறிச்செயற்பட முடியாது என்பதையும் இந்தப் பேரணியும் எழுச்சியும் துல்லியமாக எடுத்துக் காட்டியிருக்கின்றது.

எனவே செயல் வல்லமை கொண்டதொரு வழிநடத்தல் குழுவோ அல்லது கூட்டுத்தலைமைக் குழுவோ, அது எந்தப் பெயரிலாவது அமையலாம், அத்தகைய கட்டமைப்பொன்று உருவாக்கப்படுதல் அவசியம். அவசரமானதும்கூட.

 

https://www.ilakku.org/?p=42299

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.