Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் குழந்தைகள் யார், அவர்கள் என்ன ஆனார்கள்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
  • மார்கரிட்டா ரோட்ரிக்ஸ்
  • பிபிசி நியூஸ் முண்டோ
மணி நேரங்களுக்கு முன்னர்
எடுவார்ட் மற்றும் ஹன்ஸ் ஆல்பெட் ஐன்ஸ்டீன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

எடுவார்ட் மற்றும் ஹன்ஸ் ஆல்பெட் ஐன்ஸ்டீன்

ஐன்ஸ்டைன் தனது மகனின் மனநல கோளாறுடன் ஈடுகொடுக்க சிரமப்பட்டார் என்று நான் நினைக்கிறேன், "என்று ஐன்ஸ்டைன் பேப்பர்ஸ் திட்டத்தின் ஆசிரியரும் துணை இயக்குநருமான ஃஜீவ் ரோசன்க்ரான்ஸ் கூறுகிறார்.

'டெட்' என்ற செல்லப்பெயர் கொண்ட எட்வர்ட், ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் இளைய குழந்தை.

சிறு பையனாக அவனது உடல் ஆரோக்கியம் குறித்து குடும்பத்தினர் மிகுந்த அக்கறை கொண்டிருந்தனர். அவனது மனநல பிரச்னைகள் அவன் பெரியவனாகும் வரை வெளியே தெரியவில்லை.

"அவரது வாழ்க்கை மிகவும் சோகமானது,"என்று ரோசன்க்ரான்ஸ் பிபிசியிடம் தெரிவித்தார்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் மற்றும் அவரது முதல் மனைவி, இயற்பியலாளர் மிலீவா மரையெஸ்க்கு மொத்தம் மூன்று குழந்தைகள் இருந்தனர். அவர்களின் மூத்த மகள் லீசெர்ல் என்ன ஆனார் என்பது யாருக்குமே தெரியாத மர்மம். அவர்களுடைய இரண்டாவது குழந்தையும் மூத்த மகனுமான ஹான்ஸ் ஆல்பர்ட் , தனது காலத்தில் ஒரு புகழ் பெற்ற விஞ்ஞானியாக ஆனார். இருப்பினும் அவரது தந்தையின் புகழை அவரால் எட்டிப்பிடிக்க முடியவில்லை.

"என் தந்தையை அசாதாரணமாக்கிய விஷயம் என்னவென்றால், ஒரு தவறான தீர்வை எட்டினாலும் கூட ,பிரச்னைக்கு சரியான தீர்வை கண்டுபிடிக்க தன்னை அர்ப்பணித்துக்கொள்ளும் உறுதியுடன் அவர் இருந்தார். அவர் எப்போதும் முயற்சிப்பார், மீண்டும், மீண்டும் முயற்சிப்பார்" என்று ஹான்ஸ் ஆல்பர்ட் கூறினார்.

"அவர் கைவிட்ட ஒரே பிரச்னை நான் தான். அவர் எனக்கு அறிவுரை வழங்க முயன்றார், ஆனால் நான் மிகவும் பிடிவாதமாக இருப்பதை விரைவில் உணர்ந்தார். தனது நேரம் தான் வீணாகும் என்று அவர் அறிந்தார்," என்று அவர் மேலும் கூறினார்.

முதல் குழந்தை லீசெர்ல்

மிலேவா மாரிக் மற்றும் ஐன்ஸ்டைன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

மிலேவா மாரிக் மற்றும் ஐன்ஸ்டைன்

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் மற்றும் மிலீவா மரையெஸ்க்கும் இடையே திருமணமாவதற்கு முன்பே 1902ஆம் ஆண்டு பிறந்த முதல் குழந்தை லீசெர்ல்.

"அவளுடைய இரண்டு வயதிற்குப் பிறகு அவளுக்கு என்ன ஆனது என்பது எங்களுக்குத் தெரியாது," என்று ரோசன்க்ரான்ஸ் கூறுகிறார். "அவர் வரலாற்றிலிருந்து மறைந்து விட்டார்."

ஐன்ஸ்டைன் பேப்பர்ஸ் திட்டத்தின் வளர்ச்சியில் ரோசன்க்ரான்ஸ் முக்கிய பங்கு வகித்துள்ளார். இது, நோபல் பரிசு வென்ற அந்த மாமேதையின் ஆயிரக்கணக்கான ஆவணங்களை சேகரித்து, மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது. கலிஃபோர்னியா இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியின் ஒரு முன்முயற்சியாகும் இது. அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகமும், ஜெருசலேம் ஹீப்ரு பல்கலைக்கழகமும் இதற்கு உதவி செய்தன.

இயற்பியலாளரின் கடிதங்களும் ஆவணங்களும் அவரை வேறுபட்ட, மனித நேயம் மிக்கவராக காண்பதற்கான விலைமதிப்பற்ற ஆதாரங்களாக மாறிவிட்டன.

இந்த கடிதங்களின் மூலம்தான் லீசெர்ல் இருந்ததை நாம் அறிகிறோம்.

"அவள் ஆரோக்கியமாக இருக்கிறாளா? அவள் சரியாக அழுகிறாளா? அவள் கண்கள் எப்படியிருக்கும்? நம்மில் யாரை அவள் மிகவும் ஒத்திருக்கிறாள்? அவளுக்கு யார் பால் கொடுக்கிறார்கள்? அவளுக்கு பசிக்கிறதா? அவளுக்கு தலையில் முடியே இல்லையா? அவளை எனக்கு தெரியவே தெரியாது, ஆனாலும் அவள் மீது மிகுந்த அன்பு கொண்டுவிட்டேன் - இப்படி ஐன்ஸ்டைன் சுவிட்சர்லாந்தில் இருந்து எழுதினார். அந்த நேரத்தில் இவ்விருவரும் அங்குதான் வசித்து வந்தனர். மிலீவா பிரசவத்திற்காக தனது தாய்நாடான செர்பியாவுக்குச்சென்றிருந்தார்.

ஆனால் குழந்தையைப் பெற்றெடுக்க சுவிட்சர்லாந்தை விட்டு அவர் ஏன் சென்றார்?

ஐன்ஸ்டன் தனது மகன் மற்றும் பேரனுடன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

ஐன்ஸ்டன் தனது மகன் மற்றும் பேரனுடன்

"மிலீவாவுடனான ஐன்ஸ்டைனின் உறவை அவரது தாயார் கடுமையாக எதிர்த்தார்" என்று சமீபத்தில் வெளியிடப்பட்ட 'ஐன்ஸ்டைன் ஆன் ஐன்ஸ்டைன்: சுயசரிதை மற்றும் அறிவியல் பிரதிபலிப்புகள்' புத்தகத்தின் இணை ஆசிரியரான ஹனெக் கட்ஃப்ரண்ட், பிபிசியிடம் கூறுகிறார்.

ஐன்ஸ்டைன் தனது எதிர்காலத்தை வீணாக்கிவிடுவார் என்று அவரது தாய் நினைத்ததாக கட்ஃப்ரண்ட் கூறுகிறார்.

"அவள் கர்ப்பமாகிவிட்டால் அது ஒரு பேரழிவாக இருக்கும் என்று கூட அவரை எச்சரித்தாள். அந்த நாட்களில், திருமணத்திற்கு முன் கர்ப்பமாவது ஒரு மாபெரும் அவதூறு."என்கிறார் அவர்.

'உன் மீது என் முழு ஈடுபாடு'

ஐன்ஸ்டன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

உண்மை என்னவென்றால் இருவரும் மிகவும் ஆழமாக காதலித்தார்கள் என்கிறார் கட்ஃப்ரண்ட். ஐஸ்டைனுக்கு 19 வயதும், மிலீவாவுக்கு 23 வயதும் இருந்தபோது இந்த உறவு தொடங்கியது என்று நம்பப்படுகிறது.

இரண்டு இயற்பியலாளர்களும், சூரிக் பாலிடெக்னிக் கழகத்தில் வகுப்பு தோழர்களாக இருந்தனர். அந்த நேரத்தில் மிலீவா ஒரே மாணவி. கணிதம் மற்றும் இயற்பியல் துறையில் ஒரு முழு திட்டத்தை முடித்த இரண்டாவது பெண் அவர்தான்.

ஐன்ஸ்டைனின் கடிதங்கள் மூலம் மிலீவா மீதான அவரது உணர்வுகளைப் பற்றியும், மிலீவாவை அவரது தாயார் நிராகரித்ததைப்பற்றியும் நாம் தெரிந்துகொள்ள முடிகிறது என்று 'ஐன்ஸ்டைன்: ஹிஸ் லைஃப் அண்ட் யுனிவர்ஸ்' இன் ஆசிரியரான வால்டர் ஐசக்சன் கூறுகிறார்.

இந்த கடிதங்களில் ஒன்று பின்வருமாறு கூறுகிறது: "நான் இறந்துவிட்டதைப் போல என் பெற்றோர் அழுகிறார்கள். உன் மீது நான் கொண்ட ஈடுபாட்டால், நான் அவமானத்தை ஏற்படுத்தியதாக மீண்டும் மீண்டும் புகார் கூறுகிறார்கள். நீ ஆரோக்கியமாக இல்லை என்று அவர்கள் நினைக்கிறார்கள்."

ஆனால் ஐன்ஸ்டைன் தனது இதயம் சொன்னதைக்கேட்டார். நான் ஒரு நல்ல கணவராக இருப்பேன் என்று உறுதியளித்து மிலீவா கர்ப்பமாக இருந்தபோது அவருக்கு கடிதம் எழுதினார். "லீசெர்லை நம்முடன் எப்படி வைத்திருப்பது என்பதுதான் நாம் தீர்க்க வேண்டிய ஒரே பிரச்சனை. நான் அவளை கைவிட விரும்பவில்லை."

சமூகத்தில் " முறைதவறிய குழந்தை" யை பெற்று வளர்ப்பது எவ்வளவு கடினம் என்பதை ஐன்ஸ்டைன் அறிந்திருந்தார். அதுவும் அரசு பணியில் சேர விரும்பும் அவரைப்போன்ற ஒருவருக்கு இது இன்னுமே கடினம்.

நீண்ட மெளனம்

ஐன்ஸ்டன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஐன்ஸ்டைன் லீசெர்லை ஒருபோதும் சந்தித்ததில்லை என்று தோன்றுகிறது. மிலீவா சுவிட்சர்லாந்திற்குத் திரும்ப வேண்டிய நேரம் வந்தபோது, செர்பியாவில் உள்ள தனது உறவினர்களுடன் அவளை விட்டுவிட்டார்.

மிலீவாவின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர் லீசெர்லை கவனித்துக் கொண்டிருக்கக்கூடும் என்று ஐசக்ஸன் ஒரு "தெளிவற்ற குறிப்பு" மூலம் சுட்டிக்காட்டுகிறார். ஆனால் அது உறுதிப்படுத்தப்படவில்லை.

"அவர்களின் மகளைப் பற்றி எங்களுக்குத் தெரிந்ததெல்லாம் அவர்களின் காதல் கடிதங்களில் எழுதப்பட்டவைதான்" என்று கட்ஃப்ரண்ட் குறுப்பிடுகிறார். "ஆனால், ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்குப்பிறகு, அவளைப்பற்றி எதுவுமே சொல்லப்படவில்லை."என்று அவர் மேலும் தெரிவிக்கிறார்.

" வரலாற்றாசிரியர்களும் பத்திரிகையாளர்களும் செர்பியாவுக்குச் சென்று லீசெர்லின் தடயங்களைக் கண்டுபிடிக்க முயன்றனர். ஆவணங்கள், பதிவுகள், காப்பகங்கள் மற்றும் களஞ்சியங்களில் தேடினார்கள். ஆனால் அவர்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை," என்று ரோசன்க்ரான்ஸ் மேலும் கூறுகிறார்.

"அவளைப் பற்றிய கடைசி குறிப்பு, அவளுக்கு இரண்டு வயதாக இருந்தபோது, நச்சு காய்ச்சல் ஏற்பட்டது என்று கூறுகிறது. அவள் உயிர் பிழைத்தாளா என்று எங்களுக்குத் தெரியாது," என்று அவர் தெரிவிக்கிறார்.

இந்த உண்மை பல ஊகங்களுக்கு வழிவகுத்தது: "அவள் தத்து கொடுக்கப்பட்டிருக்கலாம் அல்லது காலமாகியிருக்கலாம். உண்மை என்னவென்று தெரியாது," என்று ரோசன்க்ரான்ஸ் கூறுகிறார்.

1955 இல் காலமான ஐன்ஸ்டைன் தனது மகள் பற்றி யாரிடமும் சொல்லவில்லை என்று நம்பப்படுகிறது.

உண்மையில், மிலீவாவுடனான ஐன்ஸ்டைனின் கடிதப் பரிமாற்றத்தின் ஒரு பகுதியை, ஐன்ஸ்டைன் பேப்பர்ஸ் திட்டக் குழு 1986 ஆம் ஆண்டில் கண்டுபிடித்தபோதுதான் இப்படி ஒரு குழந்தை இருந்ததே தெரியவந்தது.

அவர்களின் சொந்த வீடு

ஐன்ஸ்டன் மற்றும் மிலேவா

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

ஐன்ஸ்டன் மற்றும் மிலேவா

1903 இல், ஐன்ஸ்டைன் பெர்னில் ஒரு நிலையான வேலையைப் பெற்றார். மிலீவா செர்பியாவிலிருந்து திரும்பி வந்தார். பிறகு இந்த ஜோடி திருமணம் செய்து கொண்டது.

அடுத்த ஆண்டு அவர்களின் இரண்டாவது குழந்தை பிறந்தது. அதுதான் ஹான்ஸ் ஆல்பர்ட். அவர்களது மூன்றாவது மற்றும் இறுதி குழந்தை, எட்வர்ட் என்று அழைக்கப்படும் மற்றொரு ஆண்குழந்தை. குடும்பம் மீண்டும் சூரிச்சிற்கு சென்ற பிறகு, 1910 இல் அவர் பிறந்தார்.

"என் அம்மா வீட்டில் வேலையாக இருக்கும்போது, என் தந்தை தனது வேலையை ஒதுக்கி வைத்துவிட்டு, மணிக்கணக்கில் எங்களை கவனித்துக்கொள்வார். அவர் எங்களுக்கு கதைகளைச் சொன்னதும், எங்களை அமைதியாக இருக்க வைக்கும் முயற்சியில் அடிக்கடி வயலின் வாசிப்பதும் எனக்கு நினைவிருக்கிறது," என்று ஹான்ஸ் ஆல்பர்ட் நினைவு கூர்ந்ததாக, ஐசக்ஸனின் தெரிவிக்கிறார்.

எட்வர்ட்: உடல் மற்றும் மன நோய்

எட்வர்டின் ஆரம்பகால குழந்தைப்பருவம் கடினமாக இருந்தது: அவரது உடல்நிலை மோசமாக இருந்தது, அவர் பெரும்பாலும் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார்.பல வாரங்கள் படுக்கையில் இருந்தார்.

1917 ஆம் ஆண்டில் ஒரு சந்தர்ப்பத்தில், எட்வார்டுக்கு நுரையீரல் வீக்கம் ஏற்பட்டபோது, ஐன்ஸ்டைன் ஒரு நண்பருக்கு எழுதினார், "என் இளைய பையனின் நிலை என்னை மிகவும் வருத்தப்படுத்துகிறது."

இருந்தபோதிலும், "அவர் ஒரு சிறந்த மாணவராக ஆனார், கலைகளில் சிறப்பு ஆர்வம் காட்டினார், கவிதை இயற்றினார் மற்றும் பியானோ வாசித்தார்" என்று ஐன்ஸ்டைன் என்சைக்ளோபீடியா (கலாப்ரைஸ், கென்னெஃபிக் மற்றும் ஷுல்மேன்) புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உண்மையில் எட்வர்ட், இசை மற்றும் தத்துவம் பற்றி தனது தந்தையுடன் ஆழ்ந்த கலந்துரையாடலில் ஈடுபடுவார். தனது மகன் "வாழ்க்கையின் முக்கியமான விஷயங்களைப் பற்றி தன் மூளையைத் குடைந்துகொள்கிறான்" என்பதை இது தனக்குக்காட்டியதாக ஐன்ஸ்டைன் குறிப்பிடுகிறார்.

அன்பின் முடிவு

ஐன்ஸ்டைன் மற்றும் இரண்டாம் மனைவி எல்சா

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

ஐன்ஸ்டைன் மற்றும் இரண்டாம் மனைவி எல்சா

இயற்பியலாளர் தனது விஞ்ஞானப் பணிகளில் தீவிரமானபோது மிலீவாவுடனான அவரது உறவு வியத்தகு முறையில் மோசமடைந்தது., அவர் தனது உறவினர் எல்சாவுடன் ஒரு காதல் விவகாரத்தைத் தொடங்கியது நிலைமையை மேலும் மோசமாக்கியது.

1914 ஆம் ஆண்டில் குடும்பம் பெர்லினில் வசித்து வந்தது. ஆனால் திருமணத்தில் கசப்பு, மற்றும் ஐன்ஸ்டீனின் வெறுப்பு மனப்பான்மை காரணமாக, மிலீவா குழந்தைகளுடன் சுவிட்சர்லாந்திற்கு சென்றுவிட்டார்.

அவர்கள் 1919 இல் விவாகரத்து செய்தனர். ஆனால் அவரது குழந்தைகளிடமிருந்து பிரிந்திருப்பது ஐன்ஸ்டைனுக்கு கடினமாக இருந்தது என்று கட்ஃப்ரண்ட் கூறுகிறார், எனவே அவர் இரண்டு சிறுவர்களுடனும் நெருங்கிய உறவைப் பேணுவதற்கு எல்லா முயற்சிகளையும் செய்தார்.

"அவர் மிகவும் அன்பான தந்தை" என்று ரோசன்க்ரான்ஸ் குறிப்பிடுகிறார்.

ஐன்ஸ்டன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

முதலாம் உலகப் போர் நடந்துகொண்டிருந்த நிலையில், இயன்றபோதெல்லாம் ஐன்ஸ்டைன் அவர்களை சென்று பார்த்தார். அவர்களை விடுமுறைகளுக்கு அழைத்துச் சென்றார். "அவர்கள் ஓரளவு வளர்ந்ததும் ஒன்றாக நேரம் செலவிட அவர்களை பெர்லினுக்கு அழைப்பார்."

" அவர்கள் இருவருடனும், குறிப்பாக இளைய மகனுடன் ஐன்ஸ்டைன் விரிவாக உரையாடினார். "எட்வர்டுடனான அவரது கருத்துப்பரிமாற்றங்கள், மிக அறிவுபூர்வமானவை என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்

"ஐன்ஸ்டைன் , எட்வர்ட் அனுப்பியதை மிகவும் ரசித்தார்," அவரின் எழுத்து வல்லமை மட்டுமல்லாமல், எண்ணத்தின் ஆழமும் ஐன்ஸ்டைனை கவர்ந்தது.

1930 ஆம் ஆண்டில், ஐன்ஸ்டைன் அவருக்கு எழுதினார், "வாழ்க்கை ஒரு சைக்கிள் ஓட்டுவதைப் போன்றது. சமநிலையைத் தக்க வைத்துக் கொள்ள, தொடர்ந்து பயணிக்க வேண்டும்."

மூத்த மகன் ஹான்ஸ் ஆல்பர்ட்டுடனான ஐன்ஸ்டைனின் உறவு அவ்வளவு ஆழமாக இல்லை. ஆல்பர்ட் மிகவும் எளிமையானவர் என்று ரோசன்க்ரான்ஸ் கூறுகிறார்.

"அவர் நடைமுறை நோக்கி, கண்டுபிடிப்புகளை நோக்கி, தொழில்நுட்பத்தை நோக்கி சாய்ந்தார்", மேலும் தனது தந்தையுடன் அவர் ஆடிய விளையாட்டுகளில் இது பிரதிபலித்தது.

பல ஆண்டுகளுக்குப் பிறகு, ஐன்ஸ்டைன் ஆல்பர்டுக்கு எழுதிய கடிதங்களில், தனது கோட்பாடு மற்றும் அதை நிரூபிக்க தான் எடுத்த முயற்சிகள் பற்றி மட்டுமல்லாமல் ஒரு வேலையை எப்படி தேடிக்கொள்வது என்பது பற்றிய ஆலோசனையும் வழங்கியுள்ளார்.

நோய் கண்டறிதல்

ஐன்ஸ்டைன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

ஐன்ஸ்டைன்

எட்வர்ட் ஐன்ஸ்டைன் ஒரு மனநல மருத்துவராக வேண்டும் என்று கனவு கண்டார் மற்றும் சிக்மண்ட் பிராய்டின் கோட்பாடுகளில் ஆர்வம் கொண்டிருந்தார்.

அவர் மருத்துவம் பயின்றுகொண்டிருந்தபோது 1932 ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு மனநல மருத்துவ மனையில் அவரை அனுமதிக்கவேண்டிவந்தது. 1933 ஆம் ஆண்டில், அவரது 22 வது வயதில், அவருக்கு ஸ்கிசோஃப்ர்னியா இருப்பது கண்டறியப்பட்டது.

"இது ஐன்ஸ்டைனை ஆழமாக காயப்படுத்தியது" என்று கட்ஃப்ரண்ட் கூறுகிறார்.

"என் மகன்களில் எட்வர்ட் தான் மிகவும் அறிவுஜீவி. என்னைப்போன்ற இயல்பு கொண்டவன் என்று நான் கருதினேன். அவன் இப்போது குணப்படுத்த முடியாத மனநோயால் பீடிக்கப்பட்டுள்ளான்," என்று ஐன்ஸ்டைனின் கடிதங்களில் ஒன்று கூறுகிறது.

1933 ஆம் ஆண்டில், ஜெர்மனியில் நாசிசத்தின் எழுச்சி அச்சுறுத்தலை எதிர்கொண்ட விஞ்ஞானி, நாட்டை விட்டு வெளியேறி அமெரிக்காவுக்கு செல்ல அழுத்தம் கொடுக்கப்பட்டார்.

" புறப்படுவதற்கு சற்று முன்பு ஐன்ஸ்டைன், எட்வர்டை பார்க்கச் சென்றார். அது அவர்களது கடைசி சந்திப்பாக இருந்தது. தந்தையும் மகனும் ஒருவரையொருவர் மீண்டும் ஒருபோதும் பார்க்கவில்லை,"என்று ஐன்ஸ்டீன் என்சைக்ளோபீடியா குறிப்பிடுகிறது.

ஒரு சோகமான முடிவு

ஐன்ஸ்டன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மிலீவா , எட்வர்டின் முக்கிய கவனிப்பாளராக இருந்தார். ஆனால் அவரது அறிகுறிகள் மோசமடைந்தபோது அல்லது அவர் தீவிரமாக நோய்வாய்ப்பட்டபோது, அவர் மனநல மருத்துவமனையில் இருக்க வேண்டியிருந்தது.

1948 இல் மிலீவாவின் மரணத்திற்குப் பிறகு, எட்வர்டை கவனித்துக்கொள்ள ஒரு சட்டப்பூர்வ பாதுகாவலர், ஐன்ஸ்டைனால் நியமிக்கப்பட்டார்.

"அந்த ஆண்டுகளில் [தந்தைக்கும் மகனுக்கும் இடையில்] எந்த கடித பறிமாற்றமும் இருந்ததாக எனக்குத்தெரியவில்லை," என்று ரோசன்க்ரான்ஸ் கூறுகிறார்.

எட்வர்டின் மனநல பிரச்சனைகள் காரணமாக அமெரிக்காவிற்கு குடிபெயர அவர் அனுமதிக்கப்படவில்லை என்று ஐசக்ஸன் தெரிவிக்கிறார்.

எட்வர்ட் தனது இறுதி ஆண்டுகளை ஒரு மனநல மருத்துவ மனையில் கழித்தார்.அங்கு அவர் 1965 இல் தனது 55 வது வயதில் ஸ்ட்ரோக் ஏற்பட்டு காலமானார்.

ஹான்ஸ் ஆல்பர்ட், ஒரு முன்னோடி

ஐன்ஸ்டன்

பட மூலாதாரம்,GOOGLE

ஐன்ஸ்டைனின் இரண்டாவது குழந்தையான ஹான்ஸ் ஆல்பர்ட், சூரிச்சில் உள்ள சுவிஸ் ஃபெடரல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியில், சிவில் இன்ஜினியரிங் படித்தார்.

"என் ஆல்பர்ட் திறன் மற்றும் ஒருமைப்பாடு கொண்ட மனிதராக மாறிவிட்டார்" என்று 1924 ல் ஐன்ஸ்டைன் பெருமையாக எழுதுகிறார்.

ஹான்ஸ் ஆல்பர்ட் 1926 இல் பட்டம் பெற்றார். 1936 க்குள் அவர் தொழில்நுட்ப அறிவியலில் டாக்டர் பட்டம் பெற்றார்.

1938 ஆம் ஆண்டில், தனது தந்தையின் ஆலோசனையின் பேரில், அவர் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார். அங்கு sediment transportation (படிமத்தின் பயணம்) குறித்து தனது படிப்பைத் தொடர்ந்தார்.

'ஹான்ஸ் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்: ஒரு முன்னோடி பொறியியலாளராக அவரது வாழ்க்கை ' என்ற புத்தகத்தில், ராபர்ட் எட்டெமா மற்றும் கொர்னேலியா முடெலும், "நதிகளின் சிக்கலான தன்மையை புரிந்துகொண்டு தீர்வுகாணும் அவரது தேடலைப் பற்றி" பேசுகிறார்கள்.

அவரது ஆய்வுகள், வண்டல்மண் எவ்வாறு கொண்டுசேர்க்கப்படுகிறது என்பதைப் பற்றிய நமது தற்போதைய புரிதலுக்கு அடித்தளமாக அமைந்தன. 1988 ஆம் ஆண்டில் அமெரிக்கன் சொசைட்டி ஆஃப் சிவில் இன்ஜினியர்ஸ் (ASCE) அவரது பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில், ஹான்ஸ் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் விருதை உருவாக்கியது.

சைமன் வின்செஸ்டர், 'தி எண்ட் ஆஃப் தி ரிவர்' என்ற தனது புத்தகத்தில், வலிமைமிக்க மிசிசிப்பி நதியைக் கட்டுக்குள் வைத்திருக்கும் "வலிமைமிக்க கட்டமைப்பை" உருவாக்குவதில் ஹான்ஸ் ஆல்பர்ட்டின் முக்கிய பங்கை எடுத்துக்காட்டுகிறார்.

ஐன்ஸ்டைன் மற்றும் அவரது மகன் ஹன்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

ஐன்ஸ்டைன் மற்றும் அவரது மகன் ஹன்ஸ்

ஹான்ஸ் ஆல்பர்ட் அமெரிக்காவில் முதலில் சவுத் கரோலினா வேளாண் பரிசோதனை நிலையத்தில் பணியாற்றினார். அதைத் தொடர்ந்து வேளாண் துறையில் பணியாற்றிய அவர் இறுதியாக கலிஃபோர்னியாவின் பெர்க்லி பல்கலைக்கழகத்தில் ஹைட்ராலிக் பொறியியலை கற்பித்தார்.

"அவர் மிகவும் திறமையான ஆராய்ச்சி விஞ்ஞானி. ஒரு சிறந்த செயல்பாட்டு பொறியாளர் மற்றும் ஒரு சிறந்த ஆசிரியர் என்ற அரிய கலவையை கொண்டிருந்தார்" என்று பல்கலைக்கழக வட்டாரங்கள் கூறுகின்றன.

பேராசிரியர் ஐன்ஸ்டைன் தனது பல பட்டதாரி மாணவர்களுக்காக சொற்பொழிவு ஆற்றினாலும் , வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் குறுகிய காலத்திற்கு கற்பித்தாலும், அல்லது உலகெங்கிலும் உள்ள நாடுகளுக்கு சிக்கலான வண்டல்மண் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கு ஆலோசனை வழங்கினாலும், அவர் தனது நேரத்துடன் மிகவும் தாராளமாக இருந்தார்."

1954 ஆம் ஆண்டு எழுதிய கடிதத்தில், ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் தனது மகனைப் புகழ்ந்து, "எனது சொந்த ஆளுமையின் முக்கிய அம்சங்களை அவன் பெற்றுள்ளான். தன்னால் முடிந்த அளவிற்கு தன்னை முழுவதுமாக அர்பணித்து,சொந்த இலக்குகளை எட்டும் திசையில் பயணிக்கிறான்," என்று கூறினார்.

கருத்து வேறுபாடுகள்

ஐன்ஸ்டைன் மற்றும் எல்சா

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

ஐன்ஸ்டைன் மற்றும் எல்சா

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், தன் குழந்தைகளுடன் கொண்டிருந்த உறவு, ஏற்ற இறக்கங்கள் கொண்டது. சில கடிதங்களில் அவர் பாசமாக இருந்தார். மற்றவற்றில் மேலோட்டமாக இருந்தார்.

"எந்தவொரு குடும்பத்தையும் போலவே, அவர்களுக்கும் கடினமான காலங்கள் இருந்தன, ஆனால் நல்ல காலங்களும் இருந்தன" என்று ரோசன்க்ரான்ஸ் கூறுகிறார். "அவர் ஹான்ஸ் ஆல்பர்ட்டுடன் சில நேரம் மோதல் போக்கை கொண்டிருந்தார்."

ஒரு இளைஞனாக ஹான்ஸ் ஆல்பர்ட் தனது தந்தையிடம் ,பொறியியல் படிக்க முடிவு செய்துள்ளதாக கூறியபோது இயற்பியலாளர் அது குறித்து மகிழ்ச்சியடையவில்லை.

பல ஆண்டுகளுக்குப் பிறகு, மேலும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. "முதலில், ஐன்ஸ்டைன் , ஹான்ஸ் ஆல்பர்ட் திருமணம் செய்ய விரும்பிய பெண்ணை ஏர்றுக்கொள்ளவில்லை"

இந்த விஷயத்தில் மிலீவா, ஆல்பர்ட்டை ஆதரித்தார். ஆனால் ஹான்ஸ் தன் பெற்றோர் கூறியதற்கு உடன்படாமல், 1927 ஆம் ஆண்டில் கலையிலக்கிய ஆர்வலரான ஃப்ரீடா நெக்டை மணந்தார்.

காலப்போக்கில், ஐன்ஸ்டைன் தனது மகனின் முடிவை ஏற்றுக்கொண்டார். மேலும் அவருக்கு மூன்று பேரக்குழந்தைகளை அளித்த ஃப்ரீடாவை குடும்பத்திற்கு வரவேற்றார்.

ஐன்ஸ்டைனும், மகனும் ஒருவருக்கொருவர் தொடர்பில் இருந்தபோதிலும், அவர்கள் தனித்தனி வாழ்க்கையை நடத்தினர். மேற்கு கடற்கரை பகுதியில் ஹான்ஸ் ஆல்பர்டும், கிழக்கு கடற்கரை பகுதியில் பிரின்ஸ்டனில் ஐன்ஸ்டைனும் வசித்தனர் என்று கட்ஃப்ரண்ட் தெரிவிக்கிறார்.

"கூடுதலாக, ஐன்ஸ்டைன் ஏற்கனவே தனது இரண்டாவது குடும்பத்தை [எல்சா மற்றும் அவரது முந்தைய திருமணத்திலிருந்து இரண்டு மகள்களுடன் உருவாக்கிக் கொண்டிருந்தார்," என்று அவர் தெரிவிக்கிறார்.

1958 இல் ஃப்ரீடாவின் மரணத்திற்குப் பிறகு, ஹான்ஸ் ஆல்பர்ட், உயிரி வேதியியலாளர் எலிசபெத் ரோபோஸை மணந்தார். 1973 ஆம் ஆண்டு தனது 69 வது வயதில் மாரடைப்பால் காலமாகும்வரை அவருடன் வாழ்ந்தார்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் மகன் என்ற சுமை

ஹூப்ர்யூ பல்கலைக்கழகம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

ஹூப்ர்யூ பல்கலைக்கழகம்

"எனது இரண்டு குழந்தைகளும் என் உள் வாழ்க்கையின் சிறந்த பகுதி. என் உடல் கடிகாரம் நின்றுவிட்டபிறகும் கூட என் புகழ்மிக்க பரம்பரை தொடரும்" என்று ஐன்ஸ்டைன் ஒருமுறை மிலீவாவிடம் கூறியதாக ஐசக்ஸன் தெரிவிக்கிறார்.

ஆனால் ஒரு பிரபலமான மேதையின் குழந்தையாக இருப்பது எளிதாக இருந்திருக்க முடியாது.

" இதுபோன்ற முக்கியமான தந்தை இருப்பது சிலநேரங்களில் கடினமாக இருக்கும். ஏனென்றால் நாம் முக்கியமில்லை என்ற உணர்வு ஏற்படும்," என்று எட்வர்ட் ஒரு முறை எழுதியுள்ளார்.

அவரது தந்தை 'தியரி ஆஃப் ரிலேட்டிவிட்டி' {சார்பு கோட்பாடு) வெளியிடுவதற்கு ஒரு வருடம் முன்பு பிறந்த ஹான்ஸ் ஆல்பர்டிடம் ஒரு முறை, அத்தகைய பிரபலமான விஞ்ஞானியின் மகனாக இருப்பது எப்படி இருக்கிறது என்று கேட்கப்பட்டது.

"சிறுவயதிலிருந்தே நான் கோபத்தை பார்த்து சிரிக்கக் கற்றுக் கொள்ளாமல் இருந்திருந்தால், வாழ்க்கையே வீணாகியிருக்கும்," என்று கூறிய அவர் தனது தந்தை "ஏன்அசாதாரணமானவர்" என்பதை விளக்கினார்.

ஐன்ஸ்டைனின் ஆவணங்களை தொகுத்துள்ள கட்ஃப்ரண்ட், "ஒரு அன்பான தந்தைக்கும் அவரது குழந்தைகளுக்கும் இடையில் அழகான மற்றும் மிகவும் சுவாரஸ்யமான கடிதப்போக்குவரத்தை காணலாம்" என்று கூறுகிறார்.

ஆண்டுகள் போகப்போக தனது குழந்தைகள் மீது மிலீவா கொண்ட "அதீத அன்பு" மற்றும் குழந்தைகளை அவர் சிறப்பாக வளர்த்த விதத்தையும், ஐன்ஸ்டைன் ஒப்புக்கொண்டார்.

" அவர் தன்னை ஒரு சிறந்த கணவராக நினைத்தார் என்று நான் கருதவில்லை. ஒரு நல்ல கணவனாக இருந்ததை விட ஒரு நல்ல தந்தையாக தான் இருந்ததாக அவர் உணர்ந்தார் என்று நான் நினைக்கிறேன்,"என்று ரோசன்க்ரான்ஸ் தனது சிந்தனையை வெளிப்படுத்துகிறார்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் குழந்தைகள் யார், அவர்கள் என்ன ஆனார்கள்? - BBC News தமிழ்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.