Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திராவிடம்` என்றால் என்ன? :வி.இ.குகநாதன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்


 

திராவிடம்` என்றால் என்ன? :வி.இ.குகநாதன் 

                                            `spacer.png                                                            

‘திராவிடம்` என்ற சொல் குறிப்பது என்ன? இது பற்றிய பல்வேறு தவறான விளக்கங்கள் மக்களிடையே பரவிக் கொண்டிருக்கும் காலமிது. `திராவிடம்` என்பது ஒரு சமற்கிரதச் சொல், `திராவிடம்` என்பது தெலுங்கர்களைக் குறிப்பது, `திராவிடம்` என்பது தென்னிந்தியாவில் வாழும் பார்ப்பனர்களைக் குறிப்பது என்பன போன்ற பல்வேறு குழப்பங்கள் காணப்படுகின்றன. இச் சூழ்நிலையில் உண்மையில் `திராவிடம்` என்பது என்ன? அச்சொல் வரலாற்றுரீதியாக எவ்வாறு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது எனப் பார்ப்பதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.

                        `திராவிடம்` என்பது உண்மையில் தமிழினைக் குறிக்கும் ஒரு திசைச் சொல்லாகும். எளிமையாகச் சொன்னால் தமிழினை ஆங்கிலத்தில் `தமிழ்` என ஒலிக்க முடியாமல் `Tamil  ` என்கின்றோம் அல்லவா, அது போன்று தமிழ் குறித்த ஒரு திசைச் சொல்லே திராவிடமுமாகும்.  `தமிழ்`என்பது ஒரு இயல்புச் சொல் (Endonym ) , அது குறித்த ஒரு திசைச் சொல்லே  (Exonym  ) `திராவிடம்` என்பதுமாகும். இதோ பாவாணர் குறிப்பிடுகிறார்: “இக்கால மொழியியலும், அரசியலும் பற்றி தமிழும், அதனின்று திரிந்த திராவிடமும் வேறு பிரிந்து நிற்பினும் பழங்காலத்தில் ‘திராவிடம்’ என்றதெல்லாம் தமிழே. திராவிடம் என்று திரிந்தது தமிழ் என்னும் சொல்லே” [சான்று: ஒப்பியன் மொழி நூல், பக்கம் 15].

     திராவிடம் என்பதனை முழுமையாக அறிந்துகொள்ள நாம் அதற்கு எதிரான `ஆரியம்` என்ற சொல்லினையும் புரிந்து கொள்ள வேண்டிய தேவையுள்ளது. சிந்து வெளி நாகரிக வீழ்ச்சிக்குச் சற்றுப் பின்னரான காலப் பகுதியில் கைபர் கணவாயினூடாக கால்நடை மேய்ப்போராக நாவலந்தேயத்தினுள் (இன்றைய இந்தியப் பெரு நிலப் பரப்பு /துணைக் கண்டம்) வந்து சேர்ந்தவர்களே ஆரியர்கள் ஆவார்கள். ஆரியர் என்ற சொல் சமற்கிரத மற்றும் ஈரானிய மொழிகளின் அடிப்படையில் அமைந்த ஆர்ய       ( arya ) எனும் அடிச்சொல்லிலிருந்து மருவி வந்ததாகக் கருதப்படுகிறது { ஆர்ய என்ற சொல் அய்ரிய என்ற இரானிய மொழிச் சொல்லுடன் உறவுடைய சொல்லாகும்}.  ஆரியர் ( Arya ) என்ற சொல் ரிக் வேதத்தில் 36 தடவைகள் இடம்பெற்றுள்ளது. ரிக் வேதத்தில் `மதக் கருத்துகளைக் கடுமையாகக் கடைப்பிடிப்போர்/ உயர்ந்தோர்` என்ற பொருளில் `ஆரியர் ` என்ற சொல் பயன்படுத்தப்படுகின்றது.  ரிக் வேத காலத்தில் சைவ-வைணவ மதங்களோ/ இந்து என்ற சொல்லோ இல்லை. அப்போதிருந்தது எல்லாம் `பிராமணியம்` என்ற மதமே { இதனைச் சங்கரச்சாரியான சரசுவதி சுவாமிகள் முதல் சோ வரைக் கூறியுள்ளார்கள்}.  எனவே பிராமணியத்தினை உயர்வாகக் கடைப்பிடிப்பவர்களையே `ஆரியர்கள்` என ரிக் வேதம் கூறுகின்றது. நமது பழந் தமிழ் நூல்கள் `ஆரியர்` யார் என்பதனைத் தெளிவாகக் காட்டுகின்றன.

“ஆரியர் அலற தாக்கி பேர் இசை

தொன்று முதிர் வட_வரை வணங்கு வில் பொறித்து

வெம் சின வேந்தரை பிணித்தோன்

வஞ்சி அன்ன என் நலம் தந்து சென்மே

   மேலுள்ள அகநானூற்றுப் பாடலில் (396:16–19 ) ஆரியர்கள் அலறும்படி அவர்களைத் தாக்கி, இமயமலையின் மீது வளைவான வில்லினைப் பொறித்த செய்தி கூறப்படுகின்றது. இப் பாடலின் படி இமய மலைச் சாரலில் அப்போது ஆண்டவர்கள் ஆரியர் எனக் குறிப்பிடப்படுகின்றார்கள்.

மாரி அம்பின் மழை தோல் சோழர்                  

வில் ஈண்டு குறும்பின் வல்லத்து புற மிளை

ஆரியர் படையின் உடைக என்

நேர் இறை முன்கை வீங்கிய வளையே

  மேலுள்ள அகநானூற்றுப் பாடலில் (336: 20–23) சோழரது விற்படை செறிந்துகிடக்கும் அரணையுடைய வல்லம் என்ற ஊருக்கு வெளியேயுள்ள காவல்காட்டில் வந்தடைந்த ஆரியரின் படையைத் தோற்கடித்த செய்தி சொல்லப்படுகின்றது.  இன்னமும் பல சங்க காலப் பாடல்களில் வடக்கேயிருந்தவர்களை ஆரியர் எனக் குறிப்பிடப்படுவதுடன், தமிழருக்கும் ஆரியர்களுக்குமிடையே தீராத பகை காணப்பட்ட செய்திகளும் கூறப்படுகின்றன { நற்றிணை170, குறுந்தொகை 7, பதிற்றுப்பத்து 11, அகநானூறு 276, , அகநானூறு 398, ..}. ஆரியர் மரபணுக்களினடிப்படையில் அடையாளப்படுத்தப்படுவதனைப் பல்வேறு ஆய்வுகள் வேறு உறுதிப்படுத்துகின்றன.  இத்தகைய `ஆரியர்` அல்லாதோரைக் குறிக்கவும் `திராவிடர்` என்ற சொல் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

spacer.png

   அண்மைக் காலத்தில் `திராவிடம்` என்ற சொல்லினை ஒப்பியல் நோக்கில் முதன் முதலில் குறிப்பிட்டவர் கார்ல்டுவெல் (Robert Caldwell  ) அடிகள் ஆவார்.  அவரது காலத்தில் சங்க இலக்கியங்களோ/ தொல்காப்பியமோ கண்டுபிடிக்கப்பட்டிருக்காமையால், அவர் தவறாகத் `திராவிடம் என்ற சொல்லே தமிழாகத் திரிந்தது` எனக் கூறியிருந்தார்.  அதனைக்  கார்ல்டுவெல் அடிகளுக்குரிய மரியாதையுடன் மறுத்துத் தமிழிலிருந்தே `திராவிடம்` என்ற சொல் திரிந்தது என நிறுவியவர் பாவாணரே ஆவார்.  பாவாணர் `திரவிடத்தாய்` எனும் நூலில் எட்டாம் பக்கத்தில் பின்வருமாறு கூறியிருப்பார்.

தமிழம்>த்ரமிளம்>த்ரமிடம்>த்ராமிடம்>த்ராவிடம்

பவளம்” என்பது “ப்ரவளம்” என்று வட மொழியில் திரிந்தது போலவே தமிழம்(தமிழ்) என்னுஞ் சொல் த்ரமிளம், த்ரமிடம், த்ரவிடம் என்றாகி, பின் தமிழில் வந்துவழங்கும் போது மெய் முதலெழுத்தாக விதி இல்லாததால் திரவிடம் >> திராவிடம் என்று தமிழில் வழங்கும் என்றும், ஆகையால் தமிழினின்றே “திராவிடம்” எனுஞ் சொல் தோன்றிற்று

:சான்று- திராவிடத்தாய், பக்கம் 8.

   பாவாணர் இவ்வாறு அழுத்தம் திருத்தமாகக் கூறிய முதல் அறிஞர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை, ஆனால் அதற்கு முன்னரே சில கருத்துகள் தமிழும் திராவிடமும்  ஒன்றே எனக் காட்டும். 

    தமிழ் குறித்த திசைச் சொல்லே `திராவிடம்` என்றோம். தமிழ் குறித்த திரிபுச் சொல் முதன் முதலில் கிடைப்பது `அத்திக்கும்பா` கல்வெட்டில்                  (Hathigumpha inscription, “யானைக்குகை” கல்வெட்டு )ஆகும்.  அத்திக்கும்பா கல்வெட்டு என்பது ஒரிசாவில் புவனேசுவரம் அருகே உதயகிரியில், அன்றைய கலிங்கப் பேரரசர் காரவேலன் என்பவரால் பொ.ஆ.மு. இரண்டாம் நூற்றாண்டில் {BCE 2nd cent} பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஆகும்.  இக் கல்வெட்டின் 13 வது வரியில்  113 ஆண்டுகள் 1300 ஆண்டுகளாக முறியடிக்கப்படாமலிருந்த தமிழ் மூவேந்தர் கூட்டணியினை காரவேலன் முறியடித்த செய்தி கூறப்படுகின்றது. இங்கு தமிழர் கூட்டணியினைக் குறிக்கும் திரிபுச் சொல்லாக `த்மிர தேக சங்காத்தம் ` {Dramira } பயன்படுத்தப்படுகின்றது. அதே போல கிரேக்கக் குறிப்புகளில் சங்ககாலத் தமிழகம் `Damirica ` எனக் குறிக்கப்படுகின்றது. இவைதான் தமிழ் குறித்துக் கிடைக்கும் முதலாவது திரிபுச் சொற்களாகும்.  `தமிழ்` என்று சொல்ல முடியாத பிற மொழியிலாளர்கள் திராவிட, தம்மிரிக, திரமிள எனப் பல்வேறு சொற்களில் அழைத்திருந்தார்கள். அவற்றினை எல்லாம் பொதுமைப்படுத்திய ஒரு திசைச் சொல்லே `திராவிடம்` {Dravida } எனலாம்.

spacer.png
      பவுத்த நூலான  லலிதாவசுத்திர ` Lalitavistara` ( (translated into Chinese in 308 CE) தமிழ் எழுத்துகளை `திராவிட லிபி` ( Dravidalipi ) என அழைக்கின்றது.  இதுவே `திராவிடம்` என்ற சொல் தமிழினைக் குறிப்பதற்கான நேரடியான முதலாவது சான்றாகும்.  ஏறக்குறைய அதே காலப்பகுதியினைச் சார்ந்த  சமயவங்கா (“Samavayanga Sutta” )என்றொரு சமண நூலில் அக்காலத்தில் வழக்கில் இருந்த 18 மொழிகளின் பட்டியலில் சமசுக்கிருதம் குறிப்பிடப்படவில்லை.   அதில்  `தாமிலி` / `தமிழி` ( Damilli ) ஒரு எழுத்து வடிவமாகக் குறிப்பிடப்படுகின்றது. இதனாலேயே பிற்காலத்தில் கமில் சுவெலபில் ( Kamil Zvelebil ) என்ற அறிஞர் `தமிழ்` என்ற சொல்லைக் குறிக்கும் ஒத்த சொற்களாக `தமிழி `, `திராவிடம்` என்பவற்றைக் குறிப்பிடுகின்றார். மேலே குறிப்பிட்ட நூல்கள், கல்வெட்டு என்பன பிராகிரத மொழியிலேயே இடம் பெற்றிருந்தன. எனவே `திராவிடம்` என்பது சமற்கிரதச் சொல் அன்று என்பது தெளிவாகின்றது.

   காலத்தால் திராவிடத்துக்கான அடுத்த சான்றாக, சமண முனிவரான வச்சிரநந்தி அவர்கள் பொது ஆண்டு 470 இல் {CE470  } ஏற்படுத்தப்பட்ட `திராவிட சங்கம்` என்பதனைக் கூறலாம்.  வச்சிர நந்தி நிறுவிய சங்கத்திலும் தமிழ் சார்ந்த நூல்கள் இயற்றப்பட்டிருந்தன (இவை சங்க கால நூல்களன்று, அவற்றுக்குப் பின்னரானவை), இதனால் இந்த திராவிட சங்கத்தினை `தமிழ்ச் சங்கம்` என்றும் அழைப்பர் [சங்ககாலச் சங்கம் வேறு, இது வேறு]. எனவே வச்சிரநந்தி நிறுவிய சங்கமும் `தமிழ்ச்சங்கம்`, `திராவிட சங்கம்` என இரு பெயர்களிலும் அழைக்கப்பட்டமையிலிருந்து; தமிழ், திராவிடம் ஆகிய இரண்டும் ஒன்றே என்பது தெளிவாகின்றது.  இதற்குப் பின்னரான காலத்துக்கு வருவோம். குமாரிலபட்டர் (Kumārila Bhaṭṭa} என்பவர் 7ம் நூற்றாண்டில் எழுதிய `மீமாம்சா சுலோக வார்த்திகம்` என்ற நூலில் திராவிடம் என்ற சொல் தமிழைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றது. இங்கு பாவாணர் குறிப்பிடுவது நோக்கத்தக்கது. தெலுங்கு ஒழித்த ஏனைய மொழிகளையே (கன்னடம்,துளு,தமிழ் ஆகியவற்றினையே, மலையாளம் குமாரிலபட்டர் காலத்தில் பிரிந்து போகவில்லை)  குமாரிலபட்டர்  `திராவிடம்` எனக் குறிப்பிடுகின்றார் எனப் பாவாணர் கூறுகின்றார்.  இங்கு தெலுங்கு தமிழிலிருந்து பிரிந்து அதிக தூரம் சென்றமையாலேயே பாவாணர் தெலுங்கினைத் திராவிடத்துக்குள் உள்ளடக்கவில்லை. எனவேதான் திராவிடம் என்பது தெலுங்கினைக் குறிப்பது என்ற பொய்ப் பரப்புரை இங்கு அடிபட்டுப் போகின்றது. “தெலுங்கினையும் சேர்த்துக் குறிக்க ` ஆந்திர திரவிட பாஷை’  என்னும் இணைமொழிப் பெயரால் அழைத்தனர் வடநூலார்” எனவும் பாவாணர் திராவிடத்தாய் எனும் நூலின் 15வது பக்கத்தில் குறிப்பிடுகின்றார் {ஆந்திர= தெலுங்கு,  திராவிட= தமிழ்+கன்னடம்+துளு}. 
spacer.png

  அடுத்ததாக திருஞான சம்பந்தரினைத் `திராவிட சிசு` என ஆதிசங்கரர் அழைத்த நிகழ்வினைக் குறிப்பிடலாம். இதனைக் கொண்டே ,திராவிடர் என்பது தென்னிந்திய பிராமணரைக் குறிக்கும் எனச் சிலர் சொல்லுகின்றார்கள்; அது உண்மையில் தவறு. சம்பந்தர் தமிழில் பாடி இறைவனை வழிபட்டிருந்தமையாலும், உருவ வழிபாடு செய்தமையாலும்தான் ஆதிசங்கரர் அவரினைத் `திராவிட சிசு` என அழைத்திருந்தார். எனவே இங்கும் `திராவிட` என்ற சொல் தமிழ் குறித்தே பயன்படுத்தப்படுகின்றது.    தாயுமானவர் பாடல் ஒன்றினைப் பார்ப்போம்.

வடமொழியிலே

வல்லா னொருத்தன் வரவுந் திராவிடத்திலே

வந்ததா விவகரிப்பேன்;

வல்ல தமிழறிஞர் வரி னங்ஙனே வடமொழியின்

வசனங்கள் சிறிதுபுகல்வேன்

     மேலுள்ள பாடலிலும் தமிழ், திராவிடம் ஆகிய இரண்டும் ஒன்றே என்ற பொருளினைக் காணலாம். சிங்களத்தில் `திராவிட பாஷா` எனத் தமிழ் மொழியினை அழைப்பார்கள். எனவே `திராவிடர்` என்பது தமிழரையே ஆதி காலத்தில் முற்று முழுதாகக் குறித்தது.  இன்று தமிழர் உட்பட மலையாளிகள், தெலுங்கர், கன்னடர் போன்ற பிற திராவிட மொழியினர் எல்லோரையும் குறிப்பிட்டாலும்; இன்றும் சிறப்பாகத் தமிழரையும் குறிக்கும் { காலப்போக்கில் பிற மொழிகளும் தமிழிலிருந்து பிரிந்துவிட்டமையால் இன்று தெலுங்கும் திராவிடம் என்ற வகைக்குள் வந்துவிட்டது}.

spacer.png

   பின்னரான ஆங்கிலேயர் ஆட்சிக் காலப்பகுதியில் பார்ப்பனர்கள் பிறரினைச் `சூத்திரர்` என இழிவு செய்தமையால், அவர்களது ஆதிக்கத்தினை எதிர்க்க `பார்ப்பனரல்லாதோர்` என்ற சொல் முதலில் பயன்படுத்தப்பட்டது. பின்னர் `பார்ப்பனரல்லாதோர்` என்ற எதிர்மறைச் சொல்லுக்குப் பதிலாகத் `திராவிடர்` என்ற சொல் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த மாற்றத்தினை அயோத்திதாசப் பண்டிதர், பெரியார் போன்றோர் தொடக்கி வைத்திருந்தார்கள்.  இப்போது `திராவிடர்`என்பது தமிழர் உட்பட்ட தென்னிந்தியர் எனப் புவியியல்ரீதியிலும், மொழிக் குடும்பம் என்ற வகையிலும், சமூக நீதிச் சொல் என்றும் பல்வேறு வடிவங்களில் பயன்படுத்தப்பட்டாலும்; அதன் அடி வேர் தமிழேயாகும். மேலும் அச் சொல் மேலே குறிப்பிட்டவாறு ஒரு வரலாற்றுப் பெருமை மிக்க ஒரு திசைச் சொல்லேயாகும்.   முடிவாக, `திராவிடம்` என்பது `தமிழ்` என்பதன் ஒரு திசைச் சொல்லாகும். எனவே குறுகிய வாக்குப் பொறுக்கும் அரசியலுக்காகத் தமிழரை `டம்ளர்` எனக் கொச்சைப் படுத்துவதும், திராவிடம் என்பதனை `திருட்டுத் திராவிடம்` என்பதும் எமது கண்ணை நாமே குத்துகின்ற செயலினை ஒத்த செயலாகும்

 

https://inioru.com/what-is-dravidam/

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.