Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

21ஆம் நூற்றாண்டின் இனப்படுகொலை நாள் மே-18 – சூ.யோ. பற்றிமாகரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

21ஆம் நூற்றாண்டின் இனப்படுகொலை நாள் மே-18 – சூ.யோ. பற்றிமாகரன்

 
images-1.jpg
 79 Views

ஈழத்தமிழர்களால் மட்டுமல்ல உலகாலும் இனப் படுகொலை நாளாக நினைவேந்தல் செய்யப்பட வேண்டிய உலக இனப் படுகொலை நினைவு நாள்

மே – 18, 21ஆம் நூற்றாண்டின் இனப் படுகொலை நாள். கடந்த நூற்றாண்டில் ஹிட்லரின் நாஜிக் கூடாரங்களில் 6மில்லியன் யூதர்கள் இனப் படுகொலை செய்யப்பட்டு, அந்த நினைவாக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 27ஆம் திகதியை உலகம் இத்தகைய இனப் படுகொலை உலகில் நிகழக் கூடாது என்பதை வலியுறுத்தி ‘இனப் படுகொலை நாள்’ எனக் கொண்டாடி வருகிறது. இதேபோல 21ஆம் நூற்றாண்டில் சிறீலங்கா அரசாங்கத்தால் ஈழத் தமிழர்கள் வகை தொகையின்றி இனப் படுகொலை செய்யப்பட்ட உலக வரலாற்றை முன்னிறுத்தி, மே-18ஐ ‘இனப் படுகொலை நாளாக’ உலகம் கொண்டாட வேண்டும். இந்த மனிதக் கடமையை உலக மக்களுக்கு நினைவூட்டும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே -18 ஐ ஈழத் தமிழர்களும், உலகத் தமிழினமும், ‘இனப் படுகொலை நாள்’ ஆகக் கொண்டாடி வருகின்றனர்.

1915ஆம் ஆண்டு ஆர்மேனிய மக்கள் இனப் படுகொலை செய்யப்பட்டதை அவர்களுடைய 106 ஆண்டுகால உறுதியான போராட்டத்தின் விளைவாக இவ்வாண்டு தான் அமெரிக்க ஜனாதிபதி பெருமதிப்புக்குரிய ஜோ பைடன் அவர்கள் இனப் படுகொலை எனப் பகிரங்கமாக அறிவித்துள்ளார். ஆர்மேனிய மக்களின் முன் உதாரணமானது ஈழத் தமிழர்களுக்கு மே-18 ஐ இனப் படுகொலை நாளாக உறுதியாகத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ளது.

சிறீலங்காவில் யுத்தக் குற்றச் செயல்கள், மனிதாயத்திற்கு எதிரான குற்றங்கள், மனித உரிமை வன்முறைப்படுத்தல்கள் நடை பெற்றுள்ளதை சான்றாதாரங்கள் உடன் பதிவாக்கி, அவ்வாதரங்களின் அடிப்படையில் அனைத்துலக சட்டங்கள் முறைமைகளுக்கு ஏற்ப சிறீலங்காவை அனைத்துலக விசாரணைக்கு உட்படுத்த வேண்டிய முக்கிய தேவையை உணர்ந்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையகத்தை அதற்கான தகவல்களையும் தரவுகளையும் சான்றாதாரத்துடன் பெறுவதற்காக அலுவலகத்தை அமைப்பதற்கான ஆணையை இவ்வாண்டு அளித்து அதற்கான நிதியத்தையும் ஒதுக்கியுள்ளது.

இந்த முக்கியமான காலகட்டத்தில் முள்ளிவாய்க்காலில் 2009 மே 18 இல் சிறீலங்காவால் நிகழ்த்தப்பட்ட மனிதகுல வரலாற்றுக்கே தீராத களங்கத்தை ஏற்படுத்திய இனப் படுகொலைகளின் 12ஆவது ஆண்டு நினைவாக 18.05. 2021 அன்று ஈழத்திலும் உலகெங்கும் ‘இனப் படுகொலைநாள்’  தமிழர்களால் முன்னெடுக்கப்படுகிறது.

இந்நேரத்தில் யூதர்கள் இனப் படுகொலை செய்யப்பட்டதை உலகின் ‘இனப் படுகொலை நாளாக’ நினைவுகூரும் அமைப்பினர், 2022ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் நாளுக்கு ‘ஒருநாள் (One day)’ என்பதை மையக்கருவாக முன்வைத்துள்ளது.

19.04.1943இல் போலந்தின் வார்சோவில் போலந்தை ஆக்கிரமித்திருந்த ஹிட்லர் ‘ஒரு இனம் ஒருநாடு’ என்ற தத்துவத்துடன், 400000 யூதர்களை 1.3 சதுர மைல் பிரதேசத்துள் தடுத்து வைத்தான். இங்குதான் 92000 யூதர்கள் இனஅழிப்புக்கு உள்ளானதை உலக வரலாறு பதிவு செய்தது. இவ்வாறு ‘ஒருஇனம் ஒருநாடு’ என்ற கோட்பாடு உலகில் தோற்றுவிக்கப்பட்ட அந்தக் கொடிய நாளைத்தான் ‘ஒருநாள்’ என்பதன் மூலம் 2022ஆம் ஆண்டு சனவரி 27ஆம் திகதி உலகெங்கும் மீள் நினைவுபடுத்தி உலகில் ‘ஒருஇனம் ஒருநாடு’ என்ற தத்துவமே மனிதாயத்திற்கு எதிரான இனப் படுகொலைகளைச் செய்வதற்குரிய அரசியல் தத்துவம் என்ற எச்சரிப்பை உலக மக்களுக்கு அளிக்க இவ் அமைப்பினர் விரும்புகின்றனர். இந்த ‘ஒருஇனம் ஒருநாடு’ என்னும் இனப் படுகொலைகளுக்கு வேராக அமையும் தத்துவத்தையே இன்றைய சிறீலங்கா அரசாங்கமும் தனது அரசியல் கொள்கையாகவும் நிர்வாகமாகவும் முன்னெடுத்து வருவதால், இந்த ‘ஒருநாள்’ என்னும் இனப் படுகொலைச் சிந்தனைக்கான மையக்கருவுள் தன்னையும் அடக்கிக் கொள்கிறது.

சிறீலங்கா அரசாங்கம் இந்த ‘ஒருஇனம் ஒருநாடு’ தத்துவத்தை ‘அபே ரட்ட (எங்கள் நாடு) – அபே ஜாதிய (எங்கள் இனம்) – அபே ஆகமய (எங்கள் மதம்’) என்ற பௌத்த சிங்களப் பேரினவாதத் தத்துவமாக 1956முதல் இன்று வரை 65 ஆண்டுகளாக ஈழத் தமிழர்களுக்கு மேல் படைபலம் கொண்டு திணித்து 176,000இற்கு அதிகமான ஈழத் தமிழர்களை இன அழிப்புச் செய்துள்ளது.  இன்றும் ஈழத் தமிழின அழிப்பையே தனது அரசின் கொள்கையாகவும், நிர்வாகமாகவும் முன்னெடுக்கிறது. இதற்காகச் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற சட்டத்தின் ஆட்சியை மறுத்துச் செயற்படுகிறது. ஒரு சனநாயக ஆட்சிக்குரிய முன் நிபந்தனைகளாகக் கருதப்படும், நல்லாட்சி, மனித உரிமைகள், வளர்ச்சிகள் என்பவற்றை ஈழத் தமிழர்களுக்கு அனுமதிக்காது அவர்களை ஆள்வதற்கான தகுதியை இழந்துவிட்ட சட்டவிரோத அரசாகத் திகழ்கிறது.

இவற்றைச் சீரமைக்கத் தக்க அனைத்துலகச் சட்டங்களுக்கோ முறைமைகளுக்கோ, அவற்றைச் செயற்படுத்தும் அமைப்புக்களுக்கோ கட்டுப்படாது தன்னிச்சையாக நடக்கிறது. இதன்வழி எந்த நாடும் தன்னைப் பின்பற்றக்கூடிய அபாயத்தைத் தோற்றுவித்து உலகின் பாதுகாப்புக்கும் அமைதிக்கும் தனது அரசு முறைமையின், முன்மாதிரிகைகளால் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் சிறீலங்காவின் மேலான அனைத்துலக சட்டங்களும், முறைமைகளும் ஐக்கிய நாடுகள் சபையினால் முன்னெடுக்கப்பட வேண்டிய கட்டாயம் வலுவடைந்து வருகிறது. இந்த உலக அரசியல் மாற்றத்தில் ஈழத் தமிழர்களுக்கு நீதியை வழங்கக் கூடிய விதமாகப் பங்களிப்புச் செய்யுமாறு உலக நாடுகளை வலியுறுத்த வேண்டியவர்களாக உலகத் தமிழர்கள் உள்ளனர்.

மேலும், 12 யூலை 1955 இல் யூகோசிலேவிய பொஸ்னியாவில் இருந்து சுதந்திரம் பெற்றதை அடுத்து, பொஸ்னியாவின் சேர்பிக் நகரில் வாழ்ந்து கொண்டிருந்த பொஸ்னிய ஆண்களை அவர்களின் பெண்கள் குழந்தைகளில் இருந்து பிரித்துப் ‘பாதுகாப்புப் பிரதேசத்திற்கு’ செல்லுமாறு பணித்து அங்கு 8000 ஆண்களை இனப் படுகொலை செய்ததையும் இந்த ‘ஒரு நாள்’ என்பது குறிக்கிறது. அந்த வகையில் 22.05.1972இல் சிறீலங்காச் சிங்கள பௌத்த குடியரசு என்ற சிங்கள பௌத்த பேரினவாத ஆட்சிப் பிரகடனத்தை அடுத்து, அன்றைய ஈழத் தமிழர்களின் அரசியல் தலைவரான எஸ்.ஜே.வி. செல்வநாயகம் அவர்கள் ஈழத் தமிழர்களின் தன்னாட்சி உரிமைப் பிரகடனத்தைச் சிறீலங்காப் பாராளுமன்றத்தில் விடுத்துச் சிறீலங்காப் பாராளுமன்றத்தில் இருந்து விலகினதின் பழிவாங்கல் நடவடிக்கையாகவே சிறீலங்கா ஈழத் தமிழின அழிப்பை பொஸ்னியா போல் முன்னெடுத்து வருகிறது. மேலும், சிறீலங்காவும் முள்ளிவாய்க்காலில் 40000க்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்களை 18.05.2009 இல் பாதுகாப்புப் பிரதேசங்களுக்குச் செல்லுமாறு பணித்து இனப் படுகொலை செய்த வரலாற்றைக் கொண்டுள்ளது. இதனால் சிறீலங்காவும் பொஸ்னியா போல் இனப் படுகொலை அரசாக அனைத்துலக விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டிய நிலையில் உள்ளது.

17.04.1975இல் கம்போடியாவில் தொடங்கிய கிமோர் ரூச் ( Khmer Rouge) உடைய ஆட்சியில் ஐந்தாண்டுகளில் இரண்டு மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் இனப் படுகொலைக்கு உள்ளானார்கள். இந்த இனப் படுகொலைக்கான ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நாளையும், இந்த ‘ஒரு நாள்’ என்ற மையக்கரு சுட்டிக் காட்டுகின்றது. 22.05. 1972 இல் ஈழத் தமிழர்கள் சிறீலங்காவின் சிங்கள பௌத்த குடியரசு பிரகடனத்தால் நாடற்ற தேச இனமாக்கப்பட்டது முதல் இன்று வரை 49 ஆண்டுகளாக ஈழத் தமிழர்கள் இன அழிப்புக்குள்ளாகி வருகின்றனர். எனவே கிமோர் ரூச்சின் இனப் படுகொலை ஆட்சி போன்றதாகவே சிறீலங்கா ஆட்சியும் தொடர்கிறது.  ரூவென்டா இனப் படுகொலை குறித்த ஆய்வுகளில் 06.04.1994 முதலான 100 நாட்களை மக்களுக்கு அபாயகாரமான காலமாக இருந்ததாகக் குறிப்பிடுவது வழமை. ஆனால் ஈழத்தமிழ் மக்களுக்கோ, பிரித்தானியாவிடம் இருந்த ஈழத்தமிழ் மக்களின் இறைமையை, காலனித்துவ பிரித்தானிய அரசாங்கம், சிங்களவர்களின் இறைமையுடன் இணைத்து, சிங்களப் பெரும்பான்மை ஒற்றையாட்சிப் பாராளுமன்ற சனநாயக ஆட்சிக்குட்படுத்திய பொழுது, சிறுபான்மையின மத பாதுகாப்பாக உருவாக்கிய சோல்பரி அரசியலமைப்பின் 29(2)வது பிரிவை சிங்கள அரசாங்கம் வன்முறைப்படுத்தி, ஈழத் தமிழர்களின் இறைமையை ஆக்கிரமித்த 22.05.72 முதல் இன்று வரையான அரை நூற்றாண்டு காலமும் ‘இனப் படுகொலை அபாயகாலம்’ ஆகவே தொடர்கிறது.   இந்த வகையிலும் சிறீலங்கா தன்னை ‘ஒரு நாள்’  என்னும் இனப் படுகொலை மையக்கருத்துள் இனம்காட்டுகிறது.

இறுதியாக இந்த ‘ஒருநாள்’ என்னும் உலக இனப் படுகொலை எதிர்ப்பு மையக் கருத்தின் நோக்கு, இனப் படுகொலைக்கு உள்ளாகும் மக்களின் ‘விடுதலை’யில் தான் இனப் படுகொலையில் இருந்து விடுபடுவது தங்கியுள்ளது என்பதை வலியுறுத்துவதாக அமைகிறது. விடுதலை கிடைக்கும் அந்த ‘ஒருநாள்’ வரை இத்தகைய துன்புறும் மக்களின் வாழ்வு என்பது “ஒவ்வொருநாளும் துன்ப துயரங்களும் சித்திரைவதைகளும் உள்ளதாகவே தொடரும்” என்பது சில் ரச்மன்  என்னும் ‘கடைசி திரிபிலிங்க யூதன்’ என்னும் வரலாற்று நூலை எழுதிய ஆய்வாளரின் மனித அனுபவப் பிரகடனமாக உள்ளது.   “இனஅழிப்பை நேற்று நடந்தது என்றோ நாளை நடக்கக் கூடாதென்றோ சிந்திப்பதை விட, இன்றும் நடந்து கொண்டிருக்கிற இனஅழிப்புக்கு, எந்த சிறந்த முயற்சியால் எவ்வாறு ஒன்றுபட்டு அதனை முறியடிப்பது என்பதே முக்கியம்” என்னும் இனப் படுகொலையில் இருந்து தப்பிய இபி கினில் என்பவரின் கவிதா வரிகளையே இனப் படுகொலைக்கு எதிராகப் போராடும் உலகினர் பலமாக உச்சரிப்பது வழமை.

ஈழத் தமிழர்களும் இதனைக் கவனத்தில் எடுத்து நேற்று என்ன நடந்தது என்பதை சான்றாதாரத்துடன் வரலாறாக கட்டமைக்கத் தகவல்களையும், தரவுகளையும் வழங்கி உதவுவதுடன், இன்றும் தொடரும் இன அழிப்பு முயற்சிகளை எவ்வாறு எந்த முயற்சியால் முறியடிப்பது என்று ஒன்றுபட்டுச் சிந்தித்து செயலாற்றி, விடுதலை வாழ்வை அடையும் நாளை ஈழமக்கள் உருவாக்கி, இனியும் இனப் படுகொலைக்கு உள்ளாகாதவாறு வாழ உதவ வேண்டும். இனப் படுகொலையின் பின்னான சூழலில் இனப் படுகொலைக்கான நீதி என்பது பாதிப்புற்ற மக்களின் விடுதலையில் தான் தங்கியுள்ளதே தவிர பிறர் அவர்களுக்கு உதவுவார்கள் என்று பிறரில் தங்கி வாழும் சிந்தனைகளை வளர்ப்பதில் பயனில்லை.

ஈழத்தமிழ் மக்களே தங்களுக்கான விடுதலை முயற்சியில் உறுதியின் உறைவிடமாகத் தங்களை நிலைப்படுத்தும் பொழுதுதான் விடுதலை வழியாக இனப் படுகொலை அச்சம் முடிவுக்கு வரும். எலி விய்சல் என்னும் இனப் படுகொலை எதிர்ப்புக் கவிஞர் தனது ‘இரவு’ என்னும் இனப் படுகொலை குறித்த கவிதையில் இத்தகைய துன்ப இரவுகளில் வாழ்ந்த மக்கள் “எல்லோரும் ஒருநாள் விடுதலையின் நாளைக் காண்பர்” என்னும் நம்பிக்கை மொழியை மனதிருத்துகின்றார். அந்த ‘ஒருநாளுக்காக’ ஈழ மக்களும் ஒற்றுமையுடன், ஒன்றிணைந்த செயற்பாடுள்ள இனமாக இனப் படுகொலைக்கு எதிரான உலக மக்களுடன் இணைந்து உழைத்திட உறுதி பூணும் நாளாகவும், உலக இனப் படுகொலை நாளாக மே18 ஐ நிலைநிறுத்தும் பணியினைச் செய்தல் தங்கள் கடமை என்பதை நினைந்து செயற்பட உறுதி எடுக்கும் நாளாகவும்,  ஒவ்வொரு ஆண்டும் மே18 ஐ அமைத்துக் கொள்வார்களாக

 

https://www.ilakku.org/?p=49297

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.