Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கிலங்கை திருப்படை கோயில்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கிலங்கை திருப்படை கோயில்கள்

 
 
 
24162_401454377852_401453287852_5017601_2469408_n.jpg
 

By- கெளரி புண்ணியமூர்த்தி , மைலம்பாவெளி, தன்னாமுனை மட்டக்களப்பு.

இலங்கையின் கிழக்குக் கரை யோரத்தில் முருக வழிபாடு மிகத் தொன்மைக் காலம் முதலாக நிலைபெற்று வந்துள்ளது. அப்பகுதியிற் காணப்பட்ட பிராமிச் சாசனங்கள் இதற்குச் சான்றாக அமைகின்றன.
மட்டக்களப்பு மான்மியமானது கிழக்கிலங்கை முருகனாலயங்கள் பற்றியும் அவற்றிற்கான மன்னர்களது திருப்பணிகள் மற்றும் மானியங்கள் பற்றியும் குறிப்பிடுகின்றது. அவ்வாலயங்களில் காணப்படும் சாசனங்கள் சற்றுப் பிந்திய காலத்திற்குரியனவாக காணப் படுகின்ற போதிலும், அக்கோயில்களிலே பின்பற்றப்படுகின்ற வழிபாட்டு முறைகள் பாரம்பரியமிக்கனவாகவும், கதிர்காமத்துடன் தொடர்புடையன வாகவும் அமைகின்றன. கிழக்கிலங்கையில் உள்ள பழமை வாய்ந்த முருகனாலயங்கள் 'திருப்படைக் கோயில்கள்' என அழைக்கப்படுகின்றன. கிழக்கிலங்கைத் திருப்படைக் கோயில்கள் என்று அடையாளங் காணப்படுபவை வடக்கே, வெருகல் முதல் தெற்கே குமண வரையான பிரதேசத்திலுள்ள ஐந்து தலங்களாகும். அக்கோயில்கள் மட்டக்களப்பிற்குரிய திருப்படைக் கோயில்காளகவே அடையாளப் படுத்தப்பட்டு வந்துள்ளன.

 எனினும் வெருகல் சித்திரவேலாயுதர் கோயில் திருகோணமலை மாவட்டத்திலும், திருக்கோயில் சித்திர வேலாயுதர் கோயில் அம்பாறை மாவட்டத்திலும் அடங்கியுள்ளன.
24162_401454377852_401453287852_5017601_2469408_n.jpg
திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி
 போரதீவு ஸ்ரீ சித்திரவேலாயுதர் கோயில், வெருகலம்பதி ஸ்ரீ சித்திர வேலாயுதர் கோயில், சித்தாண்டி சித்திரவேலாயுதர் கோயில், மண்டூர் ஸ்ரீ முருகன் கோயில் என்பனவே மட்டக்களப்பு தேசத்திற்குரிய திருப்படைக் கோயில்களாகும்.

 "மட்டக்களப்பில் பழமையும் பிரசித் தமும் உடையனவான முருகன் கோயில்களைத் திருப்படைக் கோயில்கள் என்று கூறுவர். பண்டைய அரசர்களின் மதிப்பும், மானியமும், சீர்வரிசைகளும் பெற்ற கோயில்களே திருப்படைக் கோயில்களாகும்" என வி. சி. கந்தையா தனது மட்டக்களப்புத் தமிழகம் எனும் நூலில் குறிப் பிடுகின்றார். இவர் கொக்கட்டிச்சோலை தான்தோன்aஸ்வரர் கோயிலையும் திருப்படைக் கோயில்களுள் ஒன்றாக கருதுகின்றமை அவதானத்திற்குரியது.

 கோயிலின் மூலஸ்தானத்தில் முருகனது படையாகிய வேல் பிரதிஷ்டை செய்யப்பட்ட கோயில்களே திருப்படைக் கோயில்களாகும். முருக வழிபாட்டின் தோற்றமாக வேல் வழிபாடு அமைந்திருந்தது. பழந்தமிழ் இலக்கியங்களான திருமுருகாற்றுப் படையிற் காணப்படும் 'வேல் கெழு தடக்கைச் சால் பெருஞ் செல்வ', 'செவ்வேற் சேஎய்' (திருமுருகாற்றுப்படை- 61) போன்ற குறிப்புகளும், பரிபாடலிற் காணப்படும் 'செருசேற்றானைச் செல்வ' (பரிபாடல் 18: 54) என்ற குறிப்பும் முருக வழிபாட்டில் வேல் பெறும் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகின்றது. வேல் மிகப் பழைய வழிபாட்டம் சமாகும். படைவீடு என்பது முருகனது ஆறு வீடுகளுடன் இணைத்துக் கூறப்பட்டாலும், இதில் வரும் படை (ஆயுதம்) முருக வணக்கத்தின் தோற் றமாக வேல் அமைந்ததை எடுத்துக் காட்டுகின்றது.
 
 
kovil-1.jpg
 
 
 
 

 பழந்தமிழ் இலக்கியங் களின் மூலம் முருகனின் அடையாளமாக (சின்னமாக) வேல் வணங்கப்பட்ட செய்தியை அறிய முடிகின்றது. எனவே முருகனது படையாகிய வேலினை மூலஸ்தானத்தில் கொண்டிருந்த கோயில்கள் 'படைக்கோயில்கள்' எனப்பட்டன. தெய்வீகத்தைக் குறிக்க பயன்படும் 'திரு' என்ற அடைமொழியை இணைத்துக்கொண்டு இக்கோயில்கள்

'திருப்படைக் கோயில்கள்' என்ற நாமத்தினைப் பெற்றுக்கொண்டன. திருப்படைக் கோயில்களின் தொன்மையை எடுத்துக்காட்டுவனவாக இவற்றின் பெயர்களிலே 'வேலாயுதம்' என்ற அடைமொழி சேர்க்கப்பட்டுள்ளமை கவனத்திற்குரியது. இக்கோயில்களில் வேலே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஆயினும் வெருகல் சித்திர வேலாயுதர் சுவாமி கோயிலில் இன்று மூலமூர்த்தியாக முருகனதும் அவரது தேவியரதும் திருவுருவங்கள் பிரதிஷ்டை செய் யப்பட்டுள்ளன. எனினும் இக்கோயிலின் பெயரில் இடம்பெறும் 'வேலாயுதர்' என்னும் அடைமொழி முன்பு முருகனது படையான வேலே அங்கு வழிபாட்டுப் பொருளாகக் காணப்பட்டது என்பதைத் தெளிவாக்குகின்றது. வேல் வைத்து வழிபடப்பட்ட இடமே இப்போது கதிர்காமசுவாமி கோயில் என்று வழங்கி வருகின்றது என்பது மரபு. இந்த விளக்கத்தின் அடிப்படையில் நோக்குகின்றபோது கொக்கட்டிச்சோலை தான்தோன்aஸ்வரர் கோயில் திருப்படைக் கோயில் என்ற வரையறைக்குள் அடங்க மாட்டாது. அது தேசத்துக் கோயிலாகும். ஏனெனில் அங்கு மூலவராக அருவத் திருமேனியான (சிலர் அருவுருவம் என்பர்) சிவலிங்கமே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. முற்காலங்களிலே மட்டக்களப்பு தேசத்தவர்களாற் தலை சிறந்தனவாகக் கொள்ளப்பட்டவை தேசத்துக் கோயில்களாகும். தேசத்திலுள்ள சைவர்கள் எல்லோரும் அத்தலங்களுக்கு யாத்திரை செல்வது வழக்கம். விழாக்காலங்களில் ஆலயங்களில் நடைபெற்ற வைபவங்களும் அவற்றிலே அனுசரிக்கப்பட்ட சம்பிரதாயங்களும் சமுதாயக் கட்டுக்கோப்புகளுக்கும் பந்தங்களுக்கும் அழுத்தம் கொடுக்கும் வகையில் அமைந்திருந்தன. தலயாத்திரைகளும் ஆலய வழமைகளும் மட்டக்களப்புப் பிராந்தியம் முழுவதிலும் வாழ்ந்த மக்களிடையே சமய வழிபாடுகள், சம்பிரதாயங்கள், இலக்கிய மரபுகள், சடங்குகள் முதலானவற்றில் ஒரு பொதுவான பாரம்பரியம் ஏற்படுவதற்கு ஏதுவா யிருந்தன. அதன் விளைவாகவே மத்திய காலத்தில் மட்டக்களப்பு தேசம் என்ற சிந்தனை உருவாகியது.

kovil-3.jpg முருக வழிபாட்டைப் பொறுத்த வரையில் தமிழகம் மற்றும் ஈழத்தின் ஏனைய இடங்கள் போலல்லாது கிழக்கில் சற்று வித்தியாசமான நடை முறைகள் பேணப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. புராதன காலம் முதலாக அப்பகுதிகளில் வேல் வழி பாடு நிலை பெற்று வந்துள்ளமைக்குத் திருப்படைக் கோயில்கள் சான்றாக அமைகின்றன. இக்கோயில்களில் வேடர் பூசை முறைகளும் பாரம் பரியங்களும் சேர்ந்து நடைபெறுவதும் முக்கிய அம்சமாகும். இத்துடன் கப்புகன் வழிபாட்டு முறையையும் அங்கு காணமுடிகின்றது. கப்புகன் என்பது சிங்களத்தில் கப்புறாளை எனக் கூறப்படுகின்றது. மட்டக்களப்பில் கப்புகன் வழிபாடானது மெளன வழிபாட்டைக் குறிக்கும். இதற்கு அறிகுறியாக கப்புகன்மார் வாய் திற வாத நிலையில் வாய்ச்சீலை கட்டிக் கொள்வதைக் காணலாம். கந்தழி வழிபாடு (உருவமற்ற தெய்வத்திற்கு பிராமணரல்லாத கப்புறாளையால் இயற்றப்படும் வழிபாடு) பண்டைய வேலன் வழிபாட்டை நம் மனக்கண் முன்பு நிறுத்துகிறது. வேலன் வழி வந்த பூசாரிகளே காலகதியில் சிங்கள மொழி மாற்றத்தால் கப்புறாளை என அழைக்கப்பட்டனர். இவ்வழிபாட்டு முறை மண்டூர் முருகன் ஆலயத்திலும் கதிர்காமத்திலும் இன்றும் தொடர்ந்து இருந்து வருகின்றது.
 
 
kovil-2.jpg வெருகல் சித்திரவேலாயுதர் சுவாமி கோயிலில் அமைந்துள்ள கதிர்காமசுவாமி கோயிலிலும் இம்முறையை அவதா னிக்க முடிகின்றது. மட்டக்களப்புத் திருப்படைக் கோயில்கள் கதிர்காமத்துடன் தொடர்புடையனவாகக் காணப்படு கின்றன. அவ்வாலயங்கள் கதிர்காமத்தை யொட்டி உபய கதிர்காமம், சின்னக் கதிர்காமம் என்று அழைக்கப்படும் மரபு இப்பகுதிகளில் உண்டு கதிர்காமத்தைப் பின்னணியாகக் கொண்டதோர் வழிபாட்டு முறையே மட்டக்களப்புத் திருப்படைக் கோயில்கள் அனைத்திலும் இழையோடுவதைக் காணமுடிகின்றது. எனவே இவற்றினை கதிர்காமத்தினை ஒத்த வரலாற்று மரபு சார்ந்த கோயில்கள். மட்டக்களப்புத் திருப்படைக் கோயில்களில் முதன்மைக் கோயிலாக திருக்கோயில் சித்திரவேலாயுதர் சுவாமி கோயில் காணப்படுகின்றது. அது மட்டக்களப்பிற்குத் தெற்கே நாற்பத்தாறு மைல் தொலைவில் அமைந்துள்ளது. திருக்கோவில் பண்டைக் காலத்தில் நாகர்முனை, உன்னரசுகிரி, கண்டபாணந்துறை முதலிய பெயர்களால் குறிப்பிடப்பட்டது. ஆதியான முருக வழிபாட்டின் அம்சமான வேல் வழிபாட்டைக் கொண்ட இவ்வாலயம் ஆதிக்குடிகளான வேடுவரின் வழிபாட்டிலேயே தொடங்கப்பட்டது. இவ்வாலயத்தின் தோற்றம் தொடர்பில் பல ஐதிகக் கதைகள் காணப்படுகின்றன. திருக்கோயில் புவனேகயபாகு என்னும் கலிங்க இளவரசனது காலத்திலும், அவனது மகன் மனுநேயகயபாகு காலத்திலும் இருமுறை சோழ நாட்டுச் சிற்பிகளாலே திருத்திய மைக்கப்பட்டமை பற்றி மட்டக்களப்பு மான்மியம் கூறுகின்றது. மாகனது திருப்பணி அவ்வாலயத்திற்கு இடம் பெற்றுள்ளமையையும் இந்நூல் கூறும். திருக்கோயில் சித்திரவேலாயுத சுவாமி கோயில் போர்த்துக்கேயரால் தகர்கப்பட்டமை பற்றி குவேரோஸ் தமது நூலிற் கூறியுள்ளார். அக்கோயிலில் மூன்று கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன. அதில் தம்பிலுவில் அம்மன் கோயிலிற் காணப்பட்ட கல்வெட்டானது 16 ஆம் நூற்றாண்டுக்குரியது என அடையாளங் காணப்படுகின்றது.
DSC05396.JPG சிவஞான சங்கரர் கோயிலிற்கு வோவில் என்ற இடத்தை யாரோ மானியமாக அளித்ததை அக்கல்வெட்டு பதிவு செய்துள்ளது. மற்றைய கல்வெட்டும் அதே நூற்றாண்டுக்குரிய தமிழ் எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. சிறிய தூணில் உள்ள மூன்றாவது கல்வெட்டு ஒரு எல்லைக் கல்லாக அடையாளங் காணப்படுகின்றது. இது 18 ஆம் நூற்றாண்டுக்குரியதாகும். கோயிற் போரதீவு சித்திரவேலாயுதர் கோயில் மட்டக்களப்பிற்குத் தெற்கே, வாவிக்கு மேற்குப் பகுதியில் 19 மைல் தூரத்தில் அமைந்துள்ளது. இவ்வாலய வரலாற்றைக் கூறும் வகையிலான புராதன கல்வெட்டோ செப்பேடுகளோ கிடைக்கவில்லை. எனினும் ஆலய மூலஸ்தான வாசலின் படிக்கல்லில், 'தென்னிந்திய காரைக்குடி நாகப்பச் செட்டி உபயம் பிராமணர் பராபரிப்பு' என பொறிக்கப்பட்டுள்ளமை பிற்காலத்தில் செட்டிகளின் திருப்ப ணியை இக்கோயில் பெற்றுள்ளமை யினைக் காட்டுகின்றது. மட்டக்களப்பு மான்மியம் காலசேனன் என்னும் மன்னன் பெரும் படை கொண்டு வந்து மண்டுநாகனை வென்று மண்டூர், கோயிற் போரதீவு எனும் இரு ஆலயங்களையும் இடித்தான் என்றும், பிற்காலத்தில் ஆட்சி செய்த மதிசுதன் தொண்டை நாட்டுச் சிற்பிகளை வரவழைத்து அவ்வாலயத்தைப் புனரமைத்தான் என்றும் கூறுகின்றது. மட்டக்களப்பிலிருந்து தென் மேற்கில் சுமார் 20 மைல் தூரத்தில் மண்டூர் முருகன் ஆலயம் அமைந்துள்ளது. மண்டுநாகன் என்னும் மன்னன் மண்டூர் முருகன் கோயிலைக் கட்டுவித்தான் என மட்டக்களப்பு மான்மியம் கூறுகின்றது. அங்கு மட்டக்களப்பு மான்மியம் கூறும் மாகோன் வகுத்த வன்னிமை, திருப்படைக் கோயில் ஒழுங்கின் படியே பூசை, நிர்வாக நடைமுறைகள் என்பன நடைபெறுகின்றன. ஆலயத்தின் உட்பிரகாரத்தில் வேடர் வணக்க முறைப்படி சிறிய குமாரத்தன் கோயில் அமைந்துள்ளது. இங்கு பூசை வேளையில் திரை மூடிப் பூசை நடைபெறும். துணியினால் வாய் மூடி, கப்புகனார் பூசை செய்வார். கதிர்காமம் போன்று வேடர் பூசையும் மரக்கறி, மான் இறைச்சி சேர்ந்த அவிபாகமும் குமாரத்தன் கோயிலில் வைக்கும் பூசையும் நடைபெறுகின்றது. சித்தாண்டி சித்திரவேலாயுதர் கோயில் மட்டக்களப்பு நகரிற்கு வடக்கே பதின்மூன்று மைல் தொலைவில் அமைந்துள்ளது. அக்கோயில் பழமையுஞ் சிறப்பும் கொண்டதெனினும் அதன் வரலாறு பற்றிய புராதனமான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. இங்கு வேடர்களுடன் தொடர்புடைய குமாரத்தன் கோயில் அமைந்துள்ளதுடன், வள்ளியம்மைக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதையும் பூசை நடைமுறையின்போது அவதானிக்க முடிகின்றது. கோயில் வழமைகளை ஆதாரமாகக் கொண்டு நோக்குமிடத்து, சித்தாண்டியில் ஆலய பரிபாலனத்தில் முதன்மை அதிகாரம் தேசத்து வன்னியருக்குரியதாகும். வண்ணக்கரே இங்கு நிர்வாகத்திற்குப் பொறுப்புடை யவராவார். அக்கோயிற் திருவிழாவில் 13 ஆம் நாள் நடைபெறும் மயிற்கட்டுத் திருவிழா சிறப்பானதாகும். வெருகலம்பதி ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி கோயில் மண்டூர் முருகன் கோயிலைப் போன்று 'சின்னக் கதிர்காமம்' என்று அழைக்கப்படுகின்றது. திருகோணமலைக்குத் தெற்கே 37 மைல் தூரத்திலும், மட்டக்களப்பு நகருக்கு வடக்கே 47 மைல் தூரத்திலும் இது அமைந்துள்ளது. மகாவலி கங்கையின் கிளை நதியான வெருகல் ஆற்றங்கரையில் இவ்வாலயம் உள்ளது. சித்திரவேலாயுதர் ஆலயத்தின் தென்புறம் கதிர்காமசுவாமி கோயில் உள்ளது. ஆதி காலத்தில் இப்பகுதிகளில் வாழ்ந்த வேடுவர்களால் இவ்விடத்தில் வழிபாடு நிகழ்த்தப்பட்டதாக மரபு வழிக் கதைகள் கூறுகின்றன. இருந்தபோதிலும் வெருகலம்பதி பற்றிய ஆதாரபூர்வமான தகவல்களை நாம் 17 ஆம் நூற்றாண்டு முதலே பெற்றுக் கொள்ள முடிகின்றது. 'வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுதர் காதல்' எனும் நூலும், கோயிலில் நடைபெற்ற திருப்பணி பற்றிய விடயங்களைக் கூறும் சாசனமொன்றும் வெருகலம்பதி பற்றிய ஆதாரபூர்வமான பழைய குறிப்புகளாகும். இச்சாசனம் 17 ஆம் நூற்றாண்டுக்குரியதென பேராசிரியர் சி. பத்மநாதன் கருதுகின்றார். ஆயினும் அதற்கு முன்னரே இங்கு கோயில் அமைக்கப்பட்டு திருகோண மலை, மட்டக்களப்பு தேசத்து மக்களால் வழிபடப்பட்டு வந்துள்ளது என்பதைக் கிடைக்கும் ஆதாரங்களிலிருந்து ஊகித்துக்கொள்ள முடிகின்றது.
 கெளரி புண்ணியமூர்த்தி
மைலம்பாவெளி,
தன்னாமுனை மட்டக்களப்பு.http://www.battinews.com/2012/02/blog-post_1220.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.