Jump to content

கிளப் ஹவுஸ்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

கிளப் ஹவுஸ்

spacer.png

ஸ்ரீராம் சர்மா 

லாக் டவுன் காலத்தின் புது வரவாக முளைத்திருக்கிறது ‘கிளப் ஹவுஸ்’.

ஃபேஸ்புக், வாட்ஸப், போன்றவைகளைத் தாண்டியதொரு புது வடிவமாக, 24 மணி நேரமும் ஓயாமல் இரைந்தபடி இருக்கும் அலசலாட்டமாக பற்றிப் பரவிக் கொண்டிருக்கின்றது ‘கிளப் ஹவுஸ்’ செயலி !

உலகம் நவீனப்படத் துவங்கும்போது அதனை ஓர் படைப்பாளன் தவிர்த்து விடக்கூடாது, அதன் சுகந்தங்கள் – சூழ்வினைகள் அனைத்தையும் அண்டி அனுபவித்து சொல்லியாக வேண்டும்.

அப்படித்தான் கிளப்ஹவுஸ் செயலியையும் அணுகிப் பார்த்தேன்.

‘கிளப் ஹவுஸ்’ என்னும் செயலியை நான் புரிந்து கொண்ட வகையில் இங்கே அலச விரும்புகிறேன். இது, சரியா, தவறா என்னும் தீர்ப்பாளியாக இந்த சமூகம்தான் இருந்தாக வேண்டும்.

எழுத்தாளனின் எல்லையில் நின்று அதன் தாக்கங்களை மட்டும் எடுத்துச் சொல்வது எனது கடமையாகிறது. கருத்தில் தவறிருந்தால் தடையின்றி எழுதிச் சொல்லலாம்.

விஷயத்துக்குள் போவோம் !

இந்த கிளப் ஹவுஸ் ஆன்லைன் வலைப்பின்னலை தன் உடல் நலம் குன்றிய குழந்தை ‘லிடியா’ வுக்காகத்தான் துவங்கியதாக தெரிவிக்கிறார் இதன் மூல மூளைக்காரர் ரோஹன் சேத்.

வழக்கம்போல, இதனை வர்த்தக ரீதியாக கொண்டு செலுத்தும் பால் டேவிசன் ஓர் அமேரிக்கர்தான் என்றாலும், கண்டுபிடித்த கில்லாடி அடிப்படையில் ஓர் இந்தியர் என்பதில் வழக்கம்போல் நாம் பெருமைப்பட்டுக் கொள்வோம்.

spacer.png

கிளப் ஹவுஸின் முகமாக ஜப்பானிய அரசியலாளர் - பெண் ஓவியர் ‘ட்ரூ கடகோ” முகத்தை ஏன் பயன்படுத்தினார்கள் என்பது மில்லியன் டாலர் கேள்வி. அது குறித்து வேறு ஓர் சந்தர்ப்பத்தில் பார்ப்போம்.

அதுபோக, 2020 ஆண்டில், பெருந்தொற்றுக் காலத்தில் உலகமே வீட்டுக்குள் முடங்கிவிட அவர்களைத் தேற்றும் விதமாக பயனுள்ள பொழுது போக்காக விரிவாக்கப்பட்டதாகத் தெரிகிறது கிளப் ஹவுஸ் !

ஆனால், லாக்டவுன் ஏறத்தாழ முடிவடையும் இந்த நேரம் பார்த்து சமீபத்தில்தான் நம் நாட்டில் வெகுவாக பிக்கப் ஆகியிருக்கின்றது.

spacer.png

கிளப் ஹவுஸ் !

அது ஒரு ஆப். (APP). அதை நமது அலைபேசிக்குள் டவுன்லோட் செய்து கொண்டு அதில் இருக்கும் பலவிதமான ரூம்களுக்குள் சென்று நம்மை இணைத்துக் கொண்டு கேட்கலாம். இணைந்து பேசலாம்.

வீடியோ வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. வெறும் ஆடியோதான். யார் யார் பேசலாம் என்பதை நிர்வகிக்க அந்தந்த ரூமில் சில ‘மாடரேடர்கள்’ இருப்பார்கள். அவர்களது விருப்பத்துக்கேற்ப ‘மைக்’ ஓப்பன் செய்யப்படும். இஷ்டத்துக்குப் பேசலாம் !

ஆரம்பத்தில், மசாலாவுக்குப் பேர்போன சினிமா பிரபலங்கள் உள்ளே ஓடோடி வந்தார்கள். வழக்கம்போல தேவுடுகாருகள் பங்கெடுக்கும் ரூமுக்கு மவுசு அதகளப்பட்டது. முன்னணியில் இருக்கும் சினிமா தயாரிப்பாளர்கள் பங்கெடுத்த நிகழ்வுகளில் இளைஞர்கள் கூட்டம் முண்டியது.

பங்கேற்றவர்கள் சினிமா வாய்ப்புகளை குறி வைத்து சுமாரான கேள்விகளை திரும்பத் திரும்பக் கேட்டபடியே இருந்தார்கள்.

மேற்படி தயாரிப்பாளர்களும், ‘உங்களை முதலில் முழுமையாக தேற்றிக் கொண்டு எங்களுக்குண்டான வழியில் வந்தால் உரிய வாய்ப்பு தரப்படும்…’ என்று ஓயாமல் பதில் அளித்துக் கொண்டிருந்தார்களே ஒழிய….

ஒரு நல்ல டைரக்டரையோ, நல்ல கதை சொல்லியையோ கண்டு விடவேண்டும் என்னும் ஆதங்கத் தேடலும் - கேள்விகளும் அவர்களிடம் இருந்து வெளிப்படவேயில்லை. ஆக, ஜஸ்ட் டைம் பாஸ் !

அடுத்து, தொழில் முனைவோர்கள் ரூம். அதிலும், தொழிலில் சாதித்தவர்கள் வந்து ஓயாமல் அலசினார்கள். ஆயினும், ‘இதோ, நான் பத்து காசு தருகிறேன். உங்களிடம் பத்து காசும் உழைப்பும் இருக்கிறதா...?’ என்று கேட்கவேயில்லை. ஆக, ஜஸ்ட் டைம் பாஸ் !

spacer.png

இளைஞர்கள் தங்களின் அடுத்தகட்ட படிப்பு குறித்து ஆர்வமாக ரூம்களை நாடினாலும் அதிலும், விவரமில்லாத பங்கேற்பாளர்கள் ஆளாளுக்கு குழப்புவதைக் கேட்கமுடிந்தது.

கூட்டிக்கழித்தால் அனைத்தும் குட்டிச்சுவற்றின் வெற்று அரட்டை போல்தான் இருந்தது.

எந்த ஒரு தொழில் நுட்பமும் அதனைப் பயன்படுத்தும் விதத்தில் தான் பலனளிக்கும்

ஒரு Closed Room அமைத்து அதில் விவரம் தெரிந்தவர்களை மட்டுமே அனுமதித்துக் கொண்டு உரையாடினால் எதிர்பார்க்கும் பலனை அடையலாம்.

ஓப்பன் க்ரூப்பில் வளவளப்பதால் என்ன பயன் ? கால விரயமும் – ஏமாற்றமும்தான் மிச்சம் ! அது எங்கு போய் முடியும் என்பதுதான் நமது அச்சம் !

ஃபேஸ்புக்கிலாவது தங்கள் கருத்தை சொல்ல ஒருவர் இரண்டு வரிகளையாவது கைவலிக்க டைப் செய்தாக வேண்டும். இதில் அந்த கஷ்டம் கூட இல்லை. ரூமுக்குள் புகுந்து மைக் கிடைத்தவுடன் ஓயாமல் பேசினால் போதும் என்பதால் கூட்டம் அலைமோதுகிறது.

கூடும் கூட்டம் பொறுப்பே இல்லாமல் பலதையும் பேசிக் கொண்டிருப்பதைக் காணக் காண கவலையே மேலிடுகின்றது.

18 + ரூம்கள் மலிந்து கிடக்கின்றன. அதில், விடிய விடிய சளசளப்புகள் நடக்கின்றன. அந்த ரூம்களில் நள்ளிரவு கடந்த நேரங்களிலும் இளம் பெண்கள் பங்கேற்றுக் காத்திருப்பது அதிர்சியளிக்கின்றது.

உலகில், இன்று நமது நாட்டில்தான் இளைய சமுதாயத்தினர் அதிகம் இருக்கின்றார்கள். நாட்டை மேம்படுத்தும் சக்தி மிக்க அவர்களை வீண் பேச்சுக்குள் இழுத்து சென்று அடைக்கும் சூழ்ச்சியாகவே இதனைக் கருதுகிறேன்.

இதைக் கண்காணிப்பதில், பெற்றோர்களின் பொறுப்பு அடங்கி நிற்கின்றது என்றாலும், அரசாங்கத்தின் பொறுப்பே அதிகம் என்பேன் !

ஃபேஸ்புக்கில் ஒருவன் ஒரு அப்பாவிப் பெண்ணைக் கடத்திவிட தூண்டில் போடுகிறான் என்றால் அதற்கான டாகுமெண்ட் அதில் இருக்கும். அதை வைத்து குற்றவாளியை ட்ரேஸ் செய்து விடலாம். ஆனால், இந்த கிளப் ஹவுஸ் செயலியில் அப்படியானதொரு வாய்ப்பே இல்லை.

யார் வேண்டுமானாலும், யாரை வேண்டுமானாலும் தப்பிதமாக உபயோகித்துக் கொள்ள முடியும் என்பதாகத்தான் இருக்கின்றது..

பாலியல் குற்றங்கள் மிக அதிகமாக நடக்க வாய்ப்புள்ளது.

ஒரு செயலியை உலகுக்குள் செலுத்தினால் அதற்குண்டான பொறுப்பை அந்த நிறுவனம் ஏற்றாக வேண்டும்.

உதாரணமாக, தவறான புகைப்படம் அல்லது வீடியோவை ஒருவர் ஃபேஸ் புக்குக்குள் செலுத்திவிட்டால் அதனைக் கண்டு சரிபார்த்து நீக்கும் பொறுப்பை அந்த நிறுவனம் ஏற்றுக் கொள்கிறது.

ஆனால் , அப்படி ஒரு பொறுப்பை கிளப் ஹவுஸ் செயலி ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை.

எங்கள் மக்கள் பயனுக்காக நீங்கள் கொடுக்கும் இந்த செயலியில் உங்களது பொறுப்புணர்ச்சி வெளிப்பட்டதாக தெரியவில்லை என்பதால் இந்த செயலியைத் தடை செய்கிறோம் என்று நிர்தாட்சண்யமாக சொல்லி விரட்டி விட்டது சீன அரசாங்கம் ! மேலும், சில நாடுகளும் இதனை மறுதலித்து விட்டன.

ஆனால், கலாச்சாரத்தை வலியுறுத்தும் நமது இந்திய அரசாங்கம் இன்னும் கேள்வி கேட்காமல் இருப்பது அதிர்ச்சியளிக்கின்றது. சொந்த மக்களின் வாழ்க்கை மனநலம் கெட்டுப் போக வழி வகுக்கும் இந்த செயலியை குறித்து கேள்வி கேட்காமல் அனுமதித்துக் கொண்டிருக்கும் இந்த அரசாங்கத்தை கேள்வி கேட்க வேண்டியது நமது கடமையாகின்றது.

போதாக்குறைக்கு, வைரமுத்து புகழ் சின்மயியும் கூட ஏதோ ஓர் ரூமுக்குள் சென்று அலப்பறை மேலிட கோர்ட்டுக்கு போகப் போகிறேன் என உரண்டை இழுத்துக் கொண்டதைக் காண முடிகின்றது.

இன்னும் என்னவெல்லாம் கண்றாவிகள் அரங்கேறி சீழ்படுமோ இந்த கிளப் ஹவுஸில் !?

சம்பந்தப்பட்ட Alpha Exploration Co நிறுவனம் தனது வியாபாரத்தில் விட்டேத்தித்தனமாக இருப்பது நமக்கு அதிர்ச்சி அளிக்கிறது என்றால்…

அதைவிட அதிர்ச்சி அளிக்கிறது, இந்திய இளைய சமூகத்தையும் அதன் கலை, கலாச்சாரத்தையும் காப்பாற்றியாக வேண்டிய இந்திய அரசாங்கத்தின் விட்டேத்தித்தனம்.

ஒருவேளை, கிளப் ஹவுஸில் ‘ஒன்றியம்’ என்ற பெயரில் ஒரு ரூமை துவங்கினால் விழித்துக் கொள்வார்களோ என்னமோ !

ஜெய் ஹிந்த் !

கட்டுரையாளர் குறிப்பு

வே.ஸ்ரீராம் சர்மா - எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டுக் கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். அதைத் திரைப்படமாக்கும் வேலையில் இருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார். திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன்.

 

https://minnambalam.com/politics/2021/06/30/22/club-house-application

 

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.